தொடர்கள்

பத்திரிகைச் சுதந்திரம்: ‘எல்லைகள் இல்லா செய்தியாளர்கள்’ காட்டும் நிலவரச் சித்திரம்… (ஊடக உலகப் பயணம் – 20)… அ. குமரேசன்

Udaga ulaga payanam

செய்திகளோடு செய்தியாக இந்தச் செய்தியையும் பார்த்தபோது மற்றுமொரு செய்தியெனக் கடந்துவிட முடியவில்லை. இந்த மார்ச் 28 அன்று லெபனான் நாட்டின் ஜெஸின் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு கார் மீது இஸ்ரேல் வான்படை நடத்திய தாக்குதலில் அதில் பயணித்த அலி ஷோயிப், பாத்திமா ஃப்தூனி, முகம்மது ஃப்தூனி ஆகிய மூவரும் பலியானார்கள். அந்த மூவரும் ஊடகவியலாளர்கள். ‘அல்-மனார்’ என்ற தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளர் அலி ஷோயப். பாத்திமா ஃப்தூனி மற்றோர் ஊடகமான ‘அல்-மயாதீன்’ செய்தியாளர். முகம்மது ஃப்தூனி அதன் ஒளிப்பதிவாளர், அத்துடன் பாத்திமாவின் சகோதரர்.

அவர்கள் தாக்கப்பட்டதை ஒப்புக்கொண்ட இஸ்ரேல் அரசு, அவர்களில் குறிப்பாக அலி ஷோயப்தான் தனது இலக்கு என்றும், அவர் செய்தியாளர் என்ற போர்வையில் ‘ஹிஸ்புல்லா’ அமைப்பின் உளவுப் பிரிவில் செயல்பட்டவர் என்றும் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், (அமெரிக்க வழியில்) இதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் இதுவரை தாக்கல் செய்யவில்லை. ‘தீவிரவாதிகள்’ என்று முத்திரை குத்தி அவர்களைக் கொலை செய்யும் அபாயகரமான போக்கை இஸ்ரேல் கடைப்பிடிப்பதாக பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழு (சிபிஜே) கவலை தெரிவித்துள்ளது. சண்டைக் களங்களில் செய்தியாளர் என்று அடையாளப்படுத்தும் ‘பிரஸ்’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட மேலங்கி அணிந்திருந்தாலும் இந்தப் போக்கு தொடர்கிறது என்றும் சிபிஜே கூறியுள்ளது.

தற்போது ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் அரசுகள் நடத்திவரும் போரில் பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். துல்லியமான எண்ணிக்கை இனிமேல்தான் தெரியவர வேண்டும்.

20 3 ஊடகவியலாளர் கார் மிது இஸ்ரேல் தாக்குதல்

முன்னதாக, பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் அரசு கட்டவிழ்த்துவிட்ட தாக்குதல்களில் 2023 அக்டோபர் முதல் 2026 மார்ச் வரையில் 260-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும் ஊடகப் பணியாளர்களும் கொல்லப்பட்டுவிட்டனர். அனைத்து நாட்டு ஊடகவியலாளர் கூட்டமைப்பு (ஐஎஃப்ஜே) இதனைத் தெரிவித்துள்ளது. இவர்களில், சண்டை நடக்கிறபோது இரு தரப்புத் துப்பாக்கிச் சூட்டுக்கு இடையே மாட்டிக்கொண்டதால் உயிரிழந்தவர்கள் குறைவானவர்கள்தான். செய்தியாளர்கள் என்று தெரிந்தே கொல்லப்பட்டவர்கள்தான் அதிகம். குடிமக்கள் சாவு உள்ளிட்ட உண்மை நிலவரங்களையும், பச்சிளம் குழந்தைகளின் பட்டினிக் கொடுமைகளையும், மருத்துவமும் தடுக்கப்பட்டதன் துயரங்களையும் உலகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறார்கள் என்ற ஆத்திரத்தில் கொல்லப்பட்டார்கள், தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள்.

20 2 உலக நிலவரம்

உலக வரைபடத்து நாடுகளிடையே நடைபெறும் போர்களாகட்டும், உள்நாட்டு அரசியல் மோதல்களாகட்டும் உள்ளூர் சமூகக் கேடுகளாகட்டும் எதைப் பற்றியும் தெரிந்துகொள்வது மக்கள் உரிமை. அவற்றைத் தேடித் திரட்டிச் செய்திகளாகத் தெரியப்படுத்துவது ஊடகங்களின் கடமை. தெரிந்துகொண்டதைத் தெரியப்படுத்துவதுடன் அதை எந்தக் கண்ணோட்டத்தில் சொல்வதென்பதும் ஊடகச் சுதந்திரத்தோடு இணைந்ததுதான். ஊடகங்களின் அந்தக் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்குத்தான் அமெரிக்க–இஸ்ரேல் போர்க் கூட்டணி, இவ்வாறு படுகொலைகள் மூலம், விலங்கு மாட்ட முயல்கிறது.

எல்லைகள் கடந்த உண்மைகள்

20 1 ஆர்எஸ்எஃப்

‘எல்லைகள் இல்லா செய்தியாளர்கள்‘ (ஆர்எஸ்எஃப்) என்ற உலகளாவிய அமைப்பு ஒன்று இருக்கிறது. அரசு சாரா இந்தப் பன்னாட்டு அமைப்பு 1985இல் பிரான்ஸ் நாட்டின் மாண்ட்பெல்லியர் நகரில் தொடங்கப்பட்டது. ஏற்கெனவே தொடங்கப்பட்டு இயங்கிவரும் ‘எல்லைகள் இல்லா மருத்துவர்கள்’ என்ற அமைப்பின் தாக்கத்தில் இது உருவாக்கப்பட்டது.

உலகெங்கிலும் செய்தியாளர்கள் அச்சமின்றிச் செய்தி சேகரிப்பதற்கான உரிமையை நிலைநாட்டப் போராடுகிற ஆர்எஸ்எஃப், ஆண்டுதோறும் 180 நாடுகளில் நிலவும் ஊடகச் சுதந்திர நிலவரம் பற்றி ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது. அதில் அந்த நாடுகளின் தரவரிசைப் பட்டியல் முக்கியமானதாகும். உலகளவிலான முன்னணி ஊடகங்களும் ஊடகவியலாளர் சங்கங்களும் அந்த அறிக்கையை நம்பகமான அளவுகோலாகக் கருதுகின்றன.

போர்க்களச் செய்தியாளர்களுக்குக் குண்டு துளைக்காத ஆடைகள், தலைக் கவசங்கள், காப்பீடு உள்ளிட்ட உதவிகளை இந்த அமைப்பு வழங்குகிறது. கடமை சார்ந்த பணிகளுக்காகச் : செய்தியாளர்கள் தாக்கப்படும்போது சட்ட அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அனைத்து நாட்டளவில் அழுத்தம் கொடுக்கிறது. பாரிஸ் நகரில் தலைமையகம் அமைத்துள்ள இந்த அமைப்புக்கு ஐக்கிய நாடுகள் சபையிலும், ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்திலும் (யுனெஸ்கோ) ஆலோசகர் நிலை அளிக்கப்பட்டிருக்கிறது.

1) அரசாங்கம் ஊடகங்களைக் கட்டுப்படுத்துகிறதா?
2) ஊடகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சட்டங்கள் உள்ளனவா?
3) விளம்பரங்களுக்காக அல்லது கார்ப்பரேட் ஆதிக்கத்தால் செய்திகளை மாற்றக் கட்டாயப்படுத்தப்படுகிறதா?
4) மதம் அல்லது சமூகப் பிரிவுகளின் அழுத்தம் இருக்கிறதா?
5) செய்தியாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இன்றிப் பணியாற்ற முடிகிறதா?
–ஒரு நாட்டில் ஊடகச் சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பதைத் தீர்மானிக்க இந்த ஐந்து முக்கியக் காரணிகளை ஆய்வுக்கு உட்படுத்துகிறார்கள்.

அதன்படி 2025 உலக ஊடகச் சுதந்திரக் குறியீடு குறித்து ஆர்எஸ்எஃப் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கியக் கூறுகள் வருமாறு: உலக அளவில் பத்திரிகைச் சுதந்திரம் மிக மோசமான நிலைக்கு இறங்கியுள்ளது. உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் இதழியல் சூழல் கடினமானதாக, அல்லது மிகக் கவலைக்கிடமாக இருக்கிறது.

பொருளாதார நெருக்கடி

இன்று பத்திரிகை சுதந்திரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது பொருளாதாரச் சிக்கலே. நிதி நெருக்கடியால் உலகின் மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் செய்தி நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன அல்லது புலம் பெயர்ந்துள்ளன. உள்ளூர் இதழியல் நலிவடைந்து வருவதால், அமெரிக்காவும் உள்ளிட்ட பல நாடுகளில் “செய்திப் பாலைவனங்கள்” உருவாகி வருகின்றன. ஆர்எஸ்எஃப் பட்டியலின்படி அமெரிக்கா இருப்பது 57ஆவது இடத்தில். பொது ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தப்பட்டுவிட்டதால், ஏற்கெனவே கொஞ்சம் முன்னால் இருந்த அந்த நாடு இப்போது பின்னுக்குப் போயிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 42 நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரம் முற்றிலுமாக நசுக்கப்பட்டுள்ளது.

அரசுகள் மட்டுமல்லாமல் உலக அளவில் எலான் மஸ்க் நடத்தும் ‘எக்ஸ்’ தகவல் பரிமாற்றத் தளம், இந்தியாவில் அதானி குழுமம் உள்ளிட்ட பெருங் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஊடகச் சுதந்திரத்தை ஒடுக்குகின்றன என்று ஆர்எஸ்எஃப் தெரிவிக்கிறது. மிகக் கடுமையாக உள்ள நாடுகளின் வரிசையில் சீனா, ரஷ்யா, வியட்நாம், கியூபா, வடகொரியா அரசுகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பத்திரிகையாளர் போர்வையில் உளவு வேலைகளில் இறங்கித் தகவல்களைக் கடத்துகிறவர்கள் இருக்கிறார்கள், ஆகவே கடும் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்ற காரணங்களை அந்த அரசுகள் தருகின்றன. அந்த நிலையில், முதலாளித்துவ அமைப்பு தருகிற கண்ணாடியை அணிந்துகொண்டு சுதந்திரத்தைப் பார்க்க முடியாதுதான். செய்திகளையும் கருத்துகளையும் சுதந்திரமாக வெளிப்படுத்தியதற்காக அவர்கள் கட்டுப்படுத்தப்படவில்லை என்ற விளக்கத்தைப் புறக்கணிப்பதற்கில்லைதான். இருந்த போதிலும் இது கவனத்திற்கும் கவலைக்கும் உரிய தகவல்தான்.

தொடர்ந்து முதலிடம்

20 7 நார்வே முதலிடம்

ஊடகச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியிருப்பதில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது நார்வே என்கிறது ஆர்எஸ்எஃப். அந்நாட்டின் அரசமைப்பு சாசன 100வது சட்ட உரை பேச்சுரிமையையும் பத்திரிகைச் சுதந்திரத்தையும் அடிப்படை உரிமைகளாகக் காக்கிறது. அரசாங்கம் நினைத்தாலும் ஒரு செய்தியைத் தடுக்க முடியாது. ஊடகங்களுக்கு அரசு நிதியுதவி வழங்குகிறது, ஆனால் செய்திகளிலும் கருத்து வெளிப்பாடுகளிலும் தலையிடாது.

சிறிய ஊடகங்களும் வட்டாரப் பத்திரிகைகளும் கார்ப்பரேட் நிறுவனங்களைச் சாராமல் இருக்க இது உதவுகிறது. இதனால் “செய்திப் பாலைவனங்கள்” உருவாவது தடுக்கப்படுகிறது. முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது – பெரிய நிறுவனங்களோ அரசியல் கட்சிகளோ ஊடகங்களை வாங்கி வளைத்துப் போடுவதைத் தடுக்கும் வலுவான சட்டங்கள் உள்ளன. பலதரப்பட்ட கருத்துகள் வெளிவருவதை இது உறுதி செய்கிறது.

அப்படியானால், தவறான அல்லது பொய்யான செய்திகள் வெளியாகுமானால் கூட நடவடிக்கை எடுக்க மாட்டார்களா? அதற்கு, ஊடக அமைப்புகளே தங்களுக்குள் ஒரு ‘ஊடகப் புகார் ஆணையம்’ என்ற ஏற்பாட்டை அமைத்துள்ளன. தவறான செய்தி வந்தால் இந்த ஆணையம் விசாரிக்கும். முக்கியத்துவத்துடன் திருத்தம் வெளியிடவும், தவறுக்கு மன்னிப்புக் கோரவும் வலியுறுத்தும்.

ஆளுமையுடன் ஒரு பந்தாட்டம்

நம் ஊர்ச் செய்தியாளர்களுக்கு வியப்பையும், கொஞ்சம் பொறாமையையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு தகவல் – நார்வே அரசியல்வாதிகள் விமர்சனங்களை ஜனநாயகத்தின் பிரிக்க முடியாத அங்கமாகப் பார்க்கப் பழகியிருக்கிறார்கள். ஒரு செய்தியாளர் சிக்கலான கேள்வியைக் கேட்பாரானால் அவர் மீது ஏதாவது வழக்குப் போடுவது அல்லது வேறு வழிகளில் தண்டிப்பதற்கு மாறாக, அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க அங்குள்ள தலைவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு சுவையான அனுபவம் இங்கே பகிரத்தக்கது. பெரிய ஆளுமை ஒருவரின் (யார் என்பது வேண்டாமே) செய்தியாளர் சந்திப்புக்குச் சென்றிருந்தேன். எதிர்ப் பந்துகளை இலகுவாகக் கையாள்கிற விளையாட்டர் போல அவர் பதிலளித்துக்கொண்டிருந்தார், அப்போது நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன் (என்ன கேள்வி என்பதும் வேண்டாமே). அது அவருக்கு இக்கட்டானதாக இருந்திருக்கும் போல, கோபம் கலந்த குரலில் “இது மாதிரிக் கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்,” என்று கூறினார். சக செய்தியாளர்கள் எனது எதிர்வினை என்ன என்பது போலப் பார்த்தார்கள். நான், “சார், என் கேள்விக்கு நீங்கள் பதில் சொன்னால் அது எங்களுக்கு நியூஸ். பதிலளிக்க மறுத்தால் அது டபுள் நியூஸ்,” என்றேன். புரிந்துகொண்டவராக அவர் வாய்விட்டுச் சிரித்தார். “உங்களோட வம்பாப் போச்சு” என்றவர், சுற்றிவளைத்து ஏதோ பதிலைச் சொன்னார்.

ஆனால், அரசியல்வாதிகள் உள்பட அப்படிப்பட்ட ஆளுமைகளுக்குத் திணறலான கேள்விகள் கேட்கிற ஊடகவியலாளர்கள் நேரடியாகவோ, தலைமறைவாகவோ தாக்குதலுக்கு உள்ளான கதைகள் இங்கே நிறைய உண்டு. தாக்குவதற்கென்றே அங்கீகாரம் பெற்ற அதிகார அமைப்புகளிடமிருந்தும், அங்கீகரிக்கப்படாததைப் பற்றிக் கவலைப்படாமல் அடி உதையில் இறங்கும் விசுவாசிகளிடமிருந்தும் அந்தத் தாக்குதல்கள் வரும். இதில் சுயநல அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆன்மீகப் பேரொளிகள் என எல்லாத் தரப்பினரும் இருக்கிறார்கள் – இந்தியா முழுக்க.

இந்தியாவின் ஏற்றம்

20 8 இந்தியா

மேலே பார்த்தோமே அந்த ஆர்எஸ்எஃப், அவர்கள் ஊடகச் சுதந்திரத்தின் தரநிலைப் பட்டியலில் இந்தியாவை எங்கே வைத்திருக்கிறார்கள் தெரியுமா? 151ஆவது இடத்தில்! இதில் நம் நாடு முன்னேறவில்லையே என்று ஏக்கம் கொள்ளத் தேவையில்லை, ஏனென்றால் 2024ஆம் ஆண்டில் இதை விடப் பின்னால், 159ஆவது இடத்தில் இருந்தது. இப்போது 8 படிகள் மேலே ஏறியிருக்கிறது. நமக்குப் பின்னால் பாகிஸ்தான் (158), ஆப்கானிஸ்தான் (175) உள்பட 29 நாடுகள் இருக்கின்றன என்று பெருமைப்பட்டுக்கொள்வதா அல்லது நேபாளம் (90), மாலத்தீவு (104), இலங்கை (139), பங்களாதேஷ் (149) உள்ளிட்ட 150 நாடுகளுக்குப் பின்னால் நாம் இருக்கிறோம் என்று கவலைப்படுவதா?

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைப் பத்திரிகையாளர்கள் மீது ஏவுவது, நீதிமன்ற இழுத்தடிப்புத் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குவது, அரசாங்க விளம்பரங்களை நிறுத்துவது, தடை விதிப்பது என, வெளிப்பாட்டுச் சுதந்திரம் பல்வேறு வடிவங்களில் முடக்கப்படுவதை ஆர்எஸ்எஃப் சுட்டிக்காட்டுகிறது. 159ஆவது இடத்தில் இருந்து 151க்கு ஏறியிருப்பது ஒரு முன்னேற்றம் என்று பார்க்கலாமா? இல்லை, அது ஒரு போலித் தோற்றம் என்கிறது ஆர்எஸ்எஃப். தரவரிசை உயர்ந்திருந்தாலும், ஒட்டுமொத்த மதிப்பெண் அடிப்படையில் மிகக் கீழேதான் உள்ளது (32.96). மேலும், மற்ற சில நாடுகளின் தரநிலை சரிந்ததால் இந்தியாவின் இடம் மேலே சென்றிருப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. முன்னரே பார்த்தது போல, அரசியல் செல்வாக்கு மிக்க நிறுவனங்கள் ஊடகங்களை வாங்குவதும், ஊடக உரிமை சிலரது கைகளில் குவிந்திருப்பதும், காலனித்துவக் காலத்துச் சட்டங்கள் பயன்படுத்தப்படுவதும், தேசத்துரோக வழக்குகளால் ஊடகடவியலாளர்கள் ஒடுக்கப்படுவதும் சுதந்திரமான செய்தியியலுக்குத் தடையாக இருக்கின்றன என்று அந்த அறிக்கை விமர்சிக்கிறது.

இந்தியாவுக்குள் மாநிலங்களின் நிலைமை என்ன? முழுமையான சுதந்திரத்தை உறுதிப்படுத்த ஊடகவியலாளர்கள் அளிக்கும் பரிந்துரை என்ன? அதில் ஊடகங்களின் பொறுப்பு என்ன? யூடியூப் தளங்கள் உள்ளிட்ட இணைய ஊடகங்களின் தாக்கம் என்ன? டிஜிட்டல் யுகத்தின் சவால்கள் என்ன? –இவற்றைப் பற்றிய பகிர்வோடு இந்தப் பயணத்தை நிறைவுக்குக் கொண்டு வருவோம்.

தொடரும்

(அடுத்த கட்டுரையுடன் தொடர் நிறைவடையும்)

கட்டுரை 1: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-1/
கட்டுரை 2: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-2/
கட்டுரை 3: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-3/
கட்டுரை 4: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-4/
கட்டுரை 5: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-5/
கட்டுரை 6: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-6/
கட்டுரை 7: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-7
கட்டுரை 8: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-8
கட்டுரை 9: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-9/
கட்டுரை 10: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-10/
கட்டுரை 11: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-11/
கட்டுரை 12: https://maattru.in/2025/09/udaga-ulaga-payanam-12/
கட்டுரை 13: https://maattru.in/2025/09/udaga-ulaga-payanam-13/
கட்டுரை 14: https://maattru.in/2025/10/udaga-ulaga-payanam-14/
கட்டுரை 15: https://maattru.in/2025/11/udaga-ulaga-payanam-15/
கட்டுரை 16: https://maattru.in/2025/11/udaga-ulaga-payanam-16/
கட்டுரை 17: https://maattru.in/2025/12/udaga-ulaga-payanam-17/
கட்டுரை 18: https://maattru.in/2026/01/udaga-ulaga-payanam-18/
கட்டுரை 19: https://maattru.in/2026/03/udaga-ulaga-payanam-19/