தொடர்கள்வரலாறு

கருத்துச் சுதந்திரம் அடிப்படையில் யாருடைய உரிமை?… (ஊடக உலகப் பயணம் –8)… அ. குமரேசன்

Freedom to Speech

ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் அல்லது ஊடகங்கள் தொடுக்கும் தாக்குதல்கள் தொடர்பான விவாதங்களில் இரண்டு பதங்கள் நிச்சயமாக  ஒலிக்கும். நடுநிலை, கருத்துச் சுதந்திரம் ஆகியவையே அவை.  ஊடகங்களின் மீது அதிகார பீடங்களோ தனி அமைப்புகளோ தாக்குதல் நடத்துவது அடிக்கடி நிகழும். குறிப்பிட்ட செய்தியை வெளியிட்டதற்காக, அதிலும் குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் வெளியிட்டதற்காகத் தாக்குதல் நடத்தப்படும்.

அச்சு ஊடகம் என்றால் விற்பனை தடை செய்யப்படும். அரசாங்க விளம்பரங்கள் நிறுத்தப்படும். ஒரு தொழில் நிறுவனம் என்ற முறையில் வணிகம் சார்ந்து நடந்திருக்கக்கூடிய, அத்தனை காலம் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருந்த, முறைகேடுகள் நோண்டியெடுத்து நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும். இந்த வகைப்பட்ட தாக்குதல்கள்  ஆட்சியாளர்களால், அதிகார வர்க்கத்தினரால் நடத்தப்படும்.

தொலைக்காட்சி ஒளிபரப்பை முடக்குவது, இணையத்தள ஏடுகளின் பதிவுகளை நீக்க அச்சுறுத்துவது, அவற்றின் செய்தியாளர் குழுக்களை அடிப்பது, குறிப்பிட்ட நிகழ்வை ஒளிப்பதிவு செய்ய விடாமல் தடுப்பது, மக்களுடன் பேச முடியாமல் விரட்டுவது… இன்ன பிற வடிவங்களில் தாக்குதல்கள் தொடுக்கப்படும்.

நடுநிலை

இரண்டு கார்ட்டூன்களுக்காக…

அண்மையில் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையின் எண்மப் பதிப்பில்  (டிஜிட்டல் இதழ்) பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப்  இருவரையும் சித்தரிக்கிற அரசியல் நையாண்டிச் சித்திரம் ஒன்று வெளியானது. ஒன்றிய அரசு அந்த எண்ம இதழ் பதிவேற்றத்துக்குத் தடை விதித்தது. மக்கள் அப்படியென்ன அந்தக் கார்ட்டூனில் இருக்கிறது என்று தேடத் தொடங்கினர், பலர் அதை சமூக ஊடகங்களில் பகிரவும் செய்தனர்.

ஒன்றிய அரசின் இந்த ஒடுக்குமுறையைக் கண்டித்தும், பத்திரிகையுடன் ஒடுமைப்பாட்டை வெளிப்படுத்தியும்  பல அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் கருத்துத் தெரிவித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில்  கண்டன முழக்க இயக்கம் ஒன்று நடைபெற்றது.  அதில் கலந்துகொண்ட பல மூத்த முன்னணி ஊடகவியலாளர்கள்  இந்திய ஜனநாயகத்திற்கே அச்சுறுத்தலாகக் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குகிற போக்கு அதிகரித்து வருவது பற்றிக்  கவலை தெரிவித்தார்கள்.  எனினும், விகடன் குழுமம் அந்த அரசியல் நையாண்டிச் சித்திரத்தை விலக்கிக்கொள்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து தடை விலக்கப்பட்டது.

விகடன் ஒருமைப்பாடு

இதற்கு முன்பாகவும், 1987ஆம் ஆண்டில், ‘ஆனந்த விகடன்’ அச்சிதழாக மட்டும் வந்துகொண்டிருந்த நாட்களில், ஓர் நகைச்சுவை அட்டைப் படத்திற்காக அதன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக ஆட்சி நடந்துகொண்டிருந்தது.

பத்திரிகை உலகம் அதிர்ச்சியோடு இருந்தபோது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (அப்போது இந்தப் பெயரில்தான் அந்தச் சங்கம் இருந்தது, பிறகுதான் கலைஞர்கள் என்ற சொல் சேர்க்கப்பட்டது) மாநிலம் முழுவதும் கண்டன இயக்கங்களை நடத்தியது. இயக்கங்கள் நடந்த இடங்களில் அதே அட்டைப் படத்தைப் பெரிதாக வரைந்து மக்கள் பார்வைக்கு வைத்திருந்தார்கள். விரைவிலேயே அந்த எதிர்ப்பில் பத்திரிகை உலகம்  இணைந்தது. விகடன் ஆசிரியருக்கு மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், இந்த எதிர்ப்பின் உறுதியால் மூன்றே நாட்களில் அவர் விடுவிக்கப்பட்டார்.

விகடன் ஒருமைப்பாடு 1

செய்தியும் கண்ணோட்டமும்

அரசியல் கட்சிகள், மதவாதக் குழுக்கள், சாதிச் சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட தனி அமைப்புகளைப் பொறுத்தவரையில் அவற்றைச் சார்ந்தவர்கள் தொலைபேசியில் அழைத்து இழிவாகப் பேசுவது, கொலை மிரட்டல் விடுப்பது, ஊடக அலுவலகத்திற்குள் புகுந்து ரகளை செய்வது என தாக்குதல்கள் நடைபெறும். செய்தியாளர்கள் தாக்கப்படும் செய்திகளும் அவ்வப்போது வருகின்றன.

இப்படிப்பட்ட தாக்குதல்களின்போது, செய்தி வெளிப்பாட்டு உரிமை பற்றி ஊடகவியலாளர்கள் தரப்பிலிருந்து குரல்கள் எழும். ஊடகங்கள் செய்திகளைத்   தங்களுடைய அரசியல் கலந்து  வெளியிடுகின்றன,  நடுநிலை என்ற ஊடக தர்மம் தொலைந்துவிட்டது என்று தாக்குவோர் தரப்பில் கூறப்படும். 

கருத்துச் சுதந்திரம்

ஒரு முறை சென்னையில் சட்டமன்ற வளாகத்தில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றைச் செய்தியாக்குவதற்காகச் சென்ற செய்தியாளர்களும் ஒளிப்பதிவாளர்களும் உதவியாளர்களும்  தடுத்து நிறுத்தப்பட்டார்கள். “நடந்தது என்ன என்பதை  நடுநிலையோடு சொல்லாமல் அதை விமர்சிக்கிறீர்கள்,  உங்கள் பார்வையில் திரித்துச் சொல்கிறீர்கள்,” என்று அதிகாரிகள் காரணம் கூறினார்கள். அப்போது முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா.

இதை எதிர்த்து கண்டன முழக்கப் போராட்டம் நடந்தது. “ஒரு நிகழ்வைச் செய்தியாக்குவது மட்டுமல்ல, அதை எந்தக் கண்ணோட்டத்தில் வெளியிடுவது என்பதும் ஊடக உரிமைதான்,” என்று நான் பேசினேன். ஊடகத்தினர் பலரும், பல்வேறு நாடுகளில் ஊடகங்கள் எவ்வாறு தங்களுடைய கண்ணோட்டங்களுடன் செய்திகளை வெளியிடும் சுதந்திரம் இருக்கிறது என்று எடுத்துக்காட்டினார்கள்.

அந்தக் கண்ணோட்டம் தவறு என்று அரசாங்கம் கருதுமானால் அதை மறுத்தும், உண்மையில் என்ன நடந்தது என்று விளக்கியும் அரசாங்கத்தால் அறிக்கை வெளியிட முடியும். அந்த மறுப்பை வெளியிடுகிற பொறுப்பும் ஊடகங்களுக்கு இருக்கிறது. அப்படி வெளியிடவில்லை என்றால் வழக்குத் தொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம்.

முடக்குவதன் எதிர்விளைவு!

ஆனால் அதிகார பீடத்திற்கு வருகிறவர்களைப் பொறுத்தவரையில் இப்படி சட்டப்படியான அணுகுமுறைகளைக் கையாள்வதில் விருப்பம் இருப்பதில்லை. தொடர்ந்து செய்திகளை முடக்குகிற உத்தியைத்தான் கையாளுவார்கள். அதன் விளைவாக என்ன நடக்கும் என்றால், ஆட்சியாளர்கள் அல்லது, குறிப்பிட்ட துறை அதிகாரிகள் இப்படி அத்துமீறி நடந்துகொள்கிறார்கள் என்பதும்  செய்தியாக வெளியாகும்!

கருத்துச் சுதந்திரம் ஒரு கோட்பாடு மட்டுமல்ல, அது ஒரு பண்பாடு. இப்படிச் சொல்கிறபோதே அது சமுதாயம் சார்ந்ததாகவும் ஆகிவிடுகிறது. இது தொடர்பாக,  ஊடக நண்பர்களுடன் அடிக்கடி பகிர்ந்துகொள்கிற ஒரு கருத்தை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்:

 “கருத்துச் சுதந்திரம் என்றால் தொடர்புடைய பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணைய ஊடகங்களுக்கானது மட்டுமல்ல. குறிபிட்ட அரசியல்/சமூக நிகழ்வு என்ன என்றும், அதை எந்த ஊடகம் எந்தக் கண்ணோட்டத்தில் வெளியிட்டுள்ளது என்றும் தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்கிறது.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் போலவே கருத்தை உள்வாங்கும் சுதந்திரமும் அடிப்படையானது. அந்தக் கருத்தை ஏற்பதோ மறுப்பதோ அவரவர் உரிமை. ஆனால், ஊடகங்களுக்கு விதிக்கப்படும் தடையின் மூலம் தங்களுடைய உரிமையும் மறுக்கப்படுகிறது என்ற புரிதலோடு இது மக்கள் உணர்வாகவும் மாற வேண்டும். அந்த உரிமையை மறுக்கும் அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.”

உள்நோக்கத்துடன் செய்தித் திரிப்பு

ஒரு பத்திரிகை வெளியிடும் செய்தி முழுக்க முழுக்க உண்மையாகத்தான் இருக்குமா? பொய்க் கலப்பே இருக்காதா? பொய்யான செய்திகளால் பாதிப்புகள் ஏற்படாதா?

எந்தக் கண்ணோட்டத்தில் வெளியிடுவது என்பதும் உரிமையே என்ற உரிமத்தைப் பயன்படுத்திக்கொண்டு தவறான, வேண்டுமென்றே திரிக்கப்பட்ட செய்திகளைப் பல பத்திரிகைகள் வெளியிடவே செய்கின்றன. தமிழகத்தில் பரவலாக விற்பனையாகும் ஒரு நாளேடு, குறிப்பாக இடதுசாரி தொழிலாளர் சங்கப் போராட்டங்களைச் சிறுமைப்படுத்தும் தலைப்புகளோடு செய்தி வெளியிடுவதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறது.

ஒரு குற்றச் செயல் தொடர்பான செய்தியை, அதைச் செய்தவர் இடதுசாரி இளைஞர் அமைப்பின் உறுப்பினர் என்ற குறிப்போடு அந்த நாளேடு வெளியிட்டிருந்தது. அந்த நபர் அந்தச் சங்கத்தின் உறுப்பினராக இருந்தது உண்மைதான், ஆனால், அந்தக் குறிப்பிட்ட குற்றச் செயலுக்கு இரண்டு ஆண்டுகள் முன்பாகவே அவர்,  இயக்கக் கொள்கைக்குப் புறம்பான நடவடிக்கைகள் காரணமாக,  சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அது தெரிந்திருந்தும் கூட, அந்த உண்மையை மறைத்துச் செய்தியை வெளியிட்டதன் நோக்கம், இடதுசாரி இயக்கம் பற்றிய தவறான எண்ணத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்துவதுதான் என்ற அரசியல்  புரிந்துகொள்ள முடியாததல்ல.

ஆக, ஊடகங்களின் மீதான தாக்குதல்கள் மட்டுமல்லாமல் ஊடகங்கள் தொடுக்கிற தாக்குதல்களும் பேசப்பட வேண்டியவைதான்.   பத்திரிகைகள் தங்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்தும், பத்திரிகைகள் நடத்தும் தாக்குதல்கள் குறித்தும் புகார் செய்வதற்கென்று ஏற்படுத்தப்பட்டதுதான் இந்திய பத்திரிகை மன்றம் (பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா).

‘தீக்கதிர்’ சந்தித்த தீ

இந்திய அரசியல் வரலாற்றின் வன்முறை அத்தியாயங்களில் ஒன்று முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் காந்தி ஒரு தற்கொலைப்படை மனித வெடிகுண்டால் கொல்லப்பட்ட நிகழ்வு. 1991 மே 21இல் தமிழகத்தின் திருப்பெரும்புதூரில் நடந்த அந்தக் கொலைத் தாக்குதலில் அவரோடு வேறு பலரும் உடல் சிதறி உயிரிழந்தார்கள். அந்தத் தகவல் பரவிய சிறிது நேரத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் வன்முறைகள் வெடித்தன.

தீக்கதிர்

மதுரையில், ‘தீக்கதிர்’ நாளேட்டின் மீது காழ்ப்பும் பகையும் கொண்டிருந்த ஒரு கும்பல், அந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அலுவலக வளாகத்திற்குள் புகுந்து கார், அச்சிடுவதற்கான செய்தித்தாள் உருளைகள் மீது தீ வைத்தது. தடுக்க முயன்ற மூத்த தலைவர், அலுவலகப் பொறுப்பாளர் ஆர். ராமராஜ் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு ஓடியது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சில நாட்கள் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார்.

இது குறித்து பத்திரிகை மன்றத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரை விசாரித்த மன்றம், இப்படிப்பட்ட சூழல்களில் பாதுகாப்பளிக்கும்  கடமையைக் காவல்துறை செய்யத் தவறிவிட்டது என்று கூறி, ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் தொகையை அரசு வழங்க ஆணையிட்டது. இவ்வாறு பல பத்திரிகை நிறுவனங்கள் மன்றத்தை நாடி சாதகமான முடிவுகளைப் பெற்றுள்ளன.

இதே போல, ஒரு பத்திரிகையில் உண்மை திரிக்கப்பட்டு வெளியான செய்தியால் பாதிக்கப்பட்டவர் மன்றத்தில் புகார் செய்தார். பத்திரிகை நிறுவனம் தன் செய்தியை நியாயப்படுத்தி, அது தன் கருத்துரிமை என்று வாதிட்டது. புகாரில் உண்மை இருப்பதை விசாரணையில் கண்டறிந்த மன்றம், நிறுவனத்தின் வாதத்தைத் தள்ளுபடி செய்ததுடன், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க ஆணையிட்டது. அதை விட முக்கியமாக, பத்திரிகையின் எந்தப் பக்கத்தில் என்ன அளவில் அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்ததோ, அதே பக்கத்தில், அதே அளவில் மறுப்புச் செய்தியையும் வருத்தத்தையும் வெளியிட வேண்டும் என்றும் ஆணையிட்டது.

ஊடக மன்றம் உருவாகுமா?

இதழியல் நெறியை மீறிய பல நிறுவனங்களுக்குப் பத்திரிகை மன்றம் இப்படிப்பட்ட ஆணைகளைப் பிறப்பித்த காட்சிகளும் உண்டு. இப்போதும் அச்சிடப்பட்டு வரும் பத்திரிகைகளுக்காக மட்டுமே இந்த மன்றம் இயங்கி வருகிறது. ஊடகங்களின் வடிவங்களும் வீச்சும் வெகுவாக மாறிவிட்ட நிலைமையில் இந்திய பத்திரிகை மன்றத்தை, அனைத்து வகை ஊடகங்களுக்குமான இந்திய ஊடக மன்றமாக (மீடியா கவுன்சில் ஆஃப் இந்தியா) மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. மன்றத்தின் தலைவராக இருந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ இந்த ஆலோசனையை முன்வைத்தார்.

ஆயினும் அன்று இருந்தவர்கள் முதல் இன்று இருப்பவர்கள் வரையில் ஒன்றிய ஆட்சியாளர்கள்   இதைச் செய்ய முன்வரவில்லை. ஏனென்றால் கார்ப்பரேட் தொலைக்காட்சி நிறுவனங்களும் இதர மின்னியல் ஊடகங்களும், தங்களை அப்படியொரு மன்ற அமைப்புக்கு உட்படுத்திக்கொள்ளத் தயாராக இல்லை.

அச்சிதழ், ஒளிபரப்பு, எண்ம ஊடகங்களை ஒரே மேற்பார்வை அமைப்பின் கீழ் கொண்டுவர ஏற்ற வகையில், ஊடக மன்றம்  ஒன்றை உருவாக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. அநதப் பரிந்துரை ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் மீது இன்னும் முடிவெடுக்கப்படாமல் இருக்கிறது.

இத்தகைய நிலைமையில், பாதிக்கப்படும் ஊடக நிறுவனங்களும் ஊடகச் செய்திகளால் பாதிக்கப்படுவோரும் நீதிமன்றங்களைத்தான் நாட வேண்டியுள்ளது. நீதிமன்ற விசாரணைகளில் நிறுவனங்களுக்கோ, பாதிக்கப்பட்டோருக்கோ சாதகமாகத் தீர்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. பத்திரிகை மன்றம் அளிக்கிற தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யவும் வழி இருக்கிறது.

சரி, உண்மையாகவே ஊடகங்கள் நடுநிலையோடு செயல்படுகின்றனவா? அந்த நடுநிலைக்கான அளவுகோல் என்ன? இந்த இரண்டையும் விட முக்கியமான மூன்றாவது கேள்வியும் இருக்கிறது நடுநிலையாக இருக்கத்தான் வேண்டுமா?

பேசுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் நிறையவே இருக்கின்றது.

–தொடரும்

முதல் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-1/
இரண்டாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-2/
மூன்றாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-3/
நான்காவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-4/
ஐந்தாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-5/
ஆறாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-6/
ஏழாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-7