தொடர்கள்வரலாறு

இந்திய இதழியல் பரிணாமத்துடன் இணைந்த விடுதலை லட்சியம்… (ஊடக உலகப் பயணம் – 5)… அ. குமரேசன்

Udaga ulaga payanam 5

இந்தியாவில் இதழியல் முன் வடிவங்கள் 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் அறிமுகமாகின. இயல்பாக அவை அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிச் சூழலில், அரசின் அறிவிப்புகளை வெளியிடுவதற்காகவும், வணிக நிறுவனங்களின் தேவைகளுக்காகவுமே துவங்கப்பட்டன. அவற்றில் வாசிப்பதற்குச் சுவையான, சித்தரிப்பும் நையாண்டியும் கலந்த கட்டுரைகளும் இடம்பெற்றன. ஆம், அந்த ஏடுகளின் வாசகர்கள் இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேயர்கள்தான்.

ஆரம்பத்திலேயே அடக்குமுறை

அவ்வகையில் 1780ஆம் ஆண்டில் கொல்கத்தாவிலிருந்து (அப்போது கல்கத்தா) வந்த ‘பெங்கால் கெஜட்’ இந்தியாவின் முதலாவது அச்சிதழ் என்ற அடையாளத்தைப் பெற்றது. அச்சகம் நடத்தி வந்த ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிகி என்ற ஐரிஷ்காரர் அந்த வார இதழைத் துவங்கினார். அந்த ஏடு அரசாங்கச் செய்திகளைத்தான் கொடுத்தது என்றாலும், அவ்வப்போது அரசாங்கத்தின் மீதும், கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் மீதும் விமர்சனங்களை வெளியிட்டது. இங்கே சில நில உரிமைகளை அதிகாரிகள் ஏதோ குத்தகை போல அனுபவித்து வருவதை விமர்சித்தது. வேண்டியவர்களுக்குச் சலுகைகள் போன்ற ஊழல்களையும் வெளிப்படுத்தியது.

Bengal gazette

ஒரு கோணத்தில் பிரிட்டிஷ்காரர்தான், பிரிட்டன் மன்னரின் ஆட்சியோடு இணைக்கப்பட்டிருந்த அயர்லாந்து பகுதியிலிருந்து வந்தவர்தான் என்றாலும், இப்படிப்பட்ட விமர்சனங்களை அரசு பொறுத்துக்கொள்ளவில்லை. அடிக்கடி அவர் மீது வழக்குகள் போப்பட்டன. இறுதியில், வருமான வரி மோசடிப் புகார்கள், அவதூறு வழக்குகள் என்று சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பத்திரிகை அத்தோடு முடிந்து போனது. ஓராண்டு சிறைவாசம் முடிந்து திரும்பியவர், பின்னர் வறுமைச் சிறையில் வாடியவரின் வாழ்க்கையும் இங்கேயே முடிந்துபோனது.

இதே போல, அதற்கடுத்த நூற்றாண்டில், 1821ஆம் ஆண்டில், கொல்கத்தாவிலிருந்தே, ‘ஜான் புல் இன் தி ஈஸ்ட்’ என்ற பத்திரிகை, சில ஆங்கிலேயர்களின் கூட்டு முயற்சியாக வரத் தொடங்கியது. ஜான்புல் என்பது இங்கிலாந்து மக்களிடையே, தவறுகளைத் தட்டிக் கேட்பவர் என்ற பொருளில் பரவலாகப் புழக்கத்தில் இருந்த ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தின் பெயர். “இங்கிலீஷ்மேன்” என்றும் குறிப்பிடப்பட்ட  அந்தப் பத்திரிகை, ஆட்சியின் கோளாறுகளைக் கிண்டல் நடையில் விமர்சித்த பின்னணியில் அவதூறு வழக்குகள் போடப்பட்டன, பத்திரிகை நின்றுபோனது. ஆம், இந்தியாவில் ஒரு நவீன இதழியலின் தொடக்கமே அரசாங்க அடக்குமுறைகளை எதிர்கொண்டது.

உரிமை கை மாறும் வரையில்

5 2 times of india

பிரிட்டிஷ் வணிகரும், பத்திரிகையாளருமான ராபர்ட் நைட் என்பவர் 1838இல்  ‘தி பாம்பே டைம்ஸ் அன் ஜர்னல் ஆஃப் காமர்ஸ்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். பெயரே உணர்த்துவது போல, அது தொழில்–வணிக நிறுவனங்களின் தேவைகளுக்காகவே செயல்பட்டது. 1861இல் அவர் தன் சகோதரர்களுடன் இணைந்து, அந்தப் பத்திரிகைக்கு ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ என்று பெயர் மாற்றம் செய்தார். பம்பாய் வணிக வட்டத்திற்குள் இருந்த பத்திரிகை நாடு முழுவதும் பரவியது. 1892ஆம் ஆண்டில், ஆங்கிலேயப் பத்திரிகையாளர் தாமஸ் ஜூவல் பென்னட், அவரது நண்பர் ஃபிராங்க் மோரிஸ் கோல்மன் இணைந்து பென்னட், கோல்மன் & கோ. லிமிடெட் நிறுவனத்தை ஏற்படுத்தினர். இந்த நிறுவனம்  ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகையின் உரிமையை வசப்படுத்தியது.

அவ்வப்போது தேசிய இயக்கச் செய்திகள் இடம்பெற்றாலும், மையமாக பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக, அதன் கொள்கைகளை நியாயப்படுத்திக்கொண்டிருந்தது அந்த நாளேடு. 1946இல், நாடு விடுதலையை நெருங்கிய கட்டத்தில், அந்த நிறுவனத்தை சிமென்ட், சர்க்கரை, வேதிப்பொருள் ஆலைகளின் உரிமையாளர் ராமகிருஷ்ண டால்மியா பெருந்தொகை கொடுத்து வாங்கினார். அதன் பிறகு பத்திரிகை விடுதலைப் போராட்ட உணர்வுகளைப் பிரதிபலிக்கத் தொடங்கியது. சில காலம் நிறுவனத்தை நிர்வகித்த, டால்மியாவின் மருமகன் சாஹூ சாந்தி பிரசாத் ஜெயின், பின்னர் அதன் முழு உரிமையாளரானார். இன்றும் ஜெயின் குழுமத்தின் உரிமையில் இருக்கிற அந்த நிறுவனத்தின் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நீண்ட வரலாற்றைக் கொண்டதாக வந்துகொண்டிருக்கிறது.

எழுச்சியின் தாக்கம்

இவற்றைப் போல, வேறு சில ஆங்கில ஏடுகள், ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்டன. அந்த ஏடுகள் இந்தியாவில் ஆங்கிலேயே அரசாங்கத்தைச் சுதந்திரமாக விமர்சித்தன என்றாலும், இந்தியா ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. பிற்காலத்தில், குறிப்பாக 1857ஆம் ஆண்டில் முதல் சுதந்திரப் போராக எழுந்த மகத்தான கிளர்ச்சியின் தாக்கத்தில் இந்திய விடுதலை இயக்கப் பயிர் முளைவிட்டு, வளர வளரத்தான், இந்தியர்களால், இந்திய விடுதலை லட்சியத்தை முன்வைத்த இந்திய ஏடுகள் மலர்ந்தன.

5 3 1857 revolt

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது இந்தியர்களால் தொடங்கப்பட்ட முதல் பத்திரிகைகள், பிரிட்டிஷாரால் தொடங்கப்பட்ட பெங்கால் கெசட் (1780) போன்ற பத்திரிகைகளுக்குப் பிறகு வந்தவை. இவை பெரும்பாலும் இந்திய சமூக, மத சீர்திருத்தங்கள் மற்றும் தேசியவாத உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்டன.

சமூக சீர்திருத்த நோக்கம்

இந்தியர்களால் தொடங்கப்பட்ட முதல் முக்கியமான பத்திரிகைகள் சிலவற்றைப் பார்ப்போம். 1821இல் ‘சம்பத் கௌமுதி’ என்ற பத்திரிகை வங்காள மொழியில் தொடங்கப்பட்டது. “அறிவின் ஒளி”  என்ற பொருளில் அந்தப் பத்திரிகையைத் தொடங்கியவர், ராஜா ராம் மோகன் ராய்‘. ஆம், கணவனின் சடலத்தோடு மனைவியையும் உயிரோடு வைத்து எரித்த ஸதி கொடுமையை ஒழிப்பதற்குச் சட்டம் கொண்டுவரச் செய்தவரான சமூகசீர்திருத்தவாதிதான். அந்தப் பத்திரிகையில் அத்தகைய கருத்துகள் வலுவாக எழுதப்பட்டன 1822ஆம் ஆண்டில் பாரசீக மொழியில் வந்த வார ஏடு மிரத்–உல்–அக்பர் (செய்திக் கண்ணாடி). அதைத் தொடங்கியவரும் ராஜா ராம் மோகன் ராய்தான்.

அதே ஆண்டில் ஃபார்டூன்ஜி முராஸ்பன் என்ற பார்சி அறிஞர் குஜராத்தி மொழியில் தொடங்கியது ‘பாம்பே சமாச்சார்’ (பம்பாய் செய்தி). இந்த ஏடு 200 ஆண்டுகளைக் கடந்து இப்போதும் ‘மும்பை சமாச்சார்’ என்ற பெயரில் வந்துகொண்டிருப்பது கவனிக்கத் தக்கது. 1826இல் இந்தி மொழியில் வந்தது ‘உதந்த் மார்தாண்ட்’ (செய்திச் சூரியன்). இந்தி மொழியின் முதல் செய்தியேடாகக் கருதப்படும் இதனைத் தொடங்கியவர் பண்டிட் ஜுகல் கிஷோர் சுக்லா.

5 4 bombay samachar

இவற்றைத் தொடர்ந்து ‘பம்பாய் தர்பன்’ (பம்பாய் கண்ணாடி – 1828 – மராத்தி, ஆங்கிலம் இரு மொழிகளிலும்),  பாரசீகத்தில் ஜம்ஷெட் என்ற மன்னன் உலக நடப்புகளைப் பார்ப்பதற்காகப் பயன்படுத்திய மாயக்குவளைக் கற்பனையையே தலைப்பாகச் சூட்டிக்கொண்ட ‘ஜாம் இ ஜம்ஷெட்’ (1831 –குஜராத்தி),  1858இல் வங்காளத்தில், பெண் கல்வி, விதவை மறுமணம் உள்ளிட்ட சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் பேசிய ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் முயற்சியில் வந்த ‘சோம் பிரகாஷ்’ (மதி ஒளி), பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியரும், தன்னாட்சி உரிமை நோக்கத்துடன் காங்கிரஸ் இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவருமான தாதாபாய் நௌரோஜி 1861இல் தொடங்கிய ‘ராஸ்ட் கோஃப்தார்’ (உண்மை சொல்லி – குஜராத்தி) ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை. 

பாதிரிகள் பங்கு

முன்னதாக தமிழில் திருநெல்வேலியிலிருந்து ‘தம்பிரான் வாணி’(1831) என்ற கிறிஸ்துவ மிஷனரி பத்திரிகை வந்தது. சமயப் பரப்புரையும், விவாதங்களும்தான் அதன் நோக்கம். 1840களில், திருச்சியிலிருந்து இந்து சமயம் சார்ந்த தத்துவப் பரப்பலுக்காகவும் கிறிஸதுவ மிஷனரிகள் முன்வைத்த கருத்துகளை விவாதிப்பதற்காகவும் ‘அகிலாண்ட சபை தீபிகை’ என்ற ஒரு பத்திரிகை வந்ததாகத் தெரிகிறது. 1850களில் ‘தென் நாடன்’ என்ற பத்திரிகை கிறிஸ்துவத் திருச்சபைச் சிந்தனைகளைப் பரப்புவதற்காகத் தொடங்கப்பட்டது. அதைத் தொடங்கியவர் ஜி.யு. போப் என்று அறியப்படும் ஜார்ஜ் யூக்ளோ போப் என்ற பாதிரியார். திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான அவர், அந்தப் பத்திரிகையில் தமிழ் வளர்ச்சி தொடர்பான கட்டுரைகளையும் வெளியிட்டார்.

இங்கே, ஞாபகப் பையில் வைத்துக்கொள்வதற்காக  ஒரு கூடுதல் தகவல் – கிறிஸ்துவ மிஷனரி பாதிரியார்களில் ஒரு பகுதியினர், சமய போதனைகளைச் செய்ததோடு, சமூக ஏற்றத்தாழ்வுகளைப் போக்கும் அக்கறையோடும் செயல்பட்டனர். அதில்  மதத்திற்கு ஈர்க்கிற நோக்கம் இருந்திருக்கும் என்றாலும், எல்லோருக்குமே சம மதிப்பளிக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவும் தங்களுடைய திருச்சபை  செல்வாக்குடன் வலியுறுத்தினர். இங்கே நிலவும் பாகுபாடுகளைப் பயன்படுத்திக்கொள்ள முயன்ற பிரிட்டிஷ் அதிகாரிகளைச் சாடினர். அதனால், அதிகாரிகளின் ஒத்துழையாமையைச் சந்தித்தவர்களும் இருந்தனர்.

திருச்சபைகளுக்கு உள்ளேயே சாதிப் படிநிலைப் பாகுபாடுகள் ஊடுருவி நிலைபெற்றதும், இன்று வரையில் அதற்கு எதிரான உள் போராட்டங்கள் நடைபெறுவதும் தனிக் கதை. மிஷனரிகள் நடத்திய ஏடுகளிலும் சமூகப் பாகுபாடுகள், அதிகாரிகளின் அணுகுமுறைகள் பற்றிய எழுத்துகள் வந்திருக்கும் என்று கருத இடமிருக்கிறது.

ஒரே இரவில் மொழிமாற்றம்

இந்தச் சூழலில் 1868ஆம் ஆண்டில் வங்காளத்திலிருந்து மற்றொரு  வங்காகாள மொழி ஏடு, ‘அமிர்தபஜார் பத்திரிகா’  வெளிவரத் தொடங்கியது. சிசிர் குமார் கோஷ் சகோதரர்கள், அன்றைய வங்காளத்தின் அமிர்தபஜார் என்ற தங்களுடைய கிராமத்திலேயே இதழைத் தொடங்கினார்கள், கிராமத்தின் பெயரையே இதழுக்குச் சூட்டினார்கள் (தற்போது அந்தக் கிராமம் வங்கதேசத்தில் இருக்கிறது.) துணிச்சலான தேசியவாதப் பத்திரிகையாக நடத்தி, இந்திய மக்களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தினார்கள்.

5 5 amirtha bazar patrika

இந்திய மக்களின் மொழிகளிலேயே பத்திரிகைகள் வரத் தொடங்கியது எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றது என்றால், இவர்களை இப்படியே சுதந்திரமாக எழுத விட்டுவிடக்கூடாது என்று பிரிட்டிஷ் அரசை யோசிக்க வைத்தது. 1878இல் “உள்ளூர்மொழி பத்திரிகைச் சட்டம்” (வெர்னாகுலர் பிரஸ் ஆக்ட்) என்ற, இந்திய மொழி ஏடுகளைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை அரசு கொண்டுவந்தது. ஆங்கிலம் அல்லாத வட்டார மொழிகளில் வந்த பத்திரிகைகளுக்கு மட்டுமே அந்தச் சட்டம் பொருந்தும்.

உள்நாட்டு மொழிகளில் பத்திரிகை நடத்துகிறவர்கள், அரசாங்க அனுமதியின்றி கட்டுரையோ செய்தியோ வெளியிடக்கூடாது, உரிய அதிகாரிகளிடம் உறுதிமொழி அளித்துக் கையெழுத்திட வேண்டும், உறுதிமொழியை மீறுகிற ஏடுகளுக்கு அதிகாரிகள் தடை அல்லது தண்டம் விதிக்கலாம்… இப்படியான விதிகளுடன் அந்தச் சட்டத்தை இந்தியாவுக்கான பிரிட்டிஷ்  அரசப் பிரதிநிதி (வைஸ்ராய்) லிட்டன் கொண்டுவந்தார்.

இந்திய மொழிகளில் வெளிவரத் தொடங்கியிருந்த ஏடுகள் அந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தன. அதிகாரிகளின் கத்தரிக்கோல் படாமல் கருத்துகளை வெளியிடுவது ஒரு போராட்டமாகவே இருந்தது. கருத்துரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாதென முடிவெடுத்த ‘அமிர்தபஜார் பத்திரிகா’ என்ன செய்தது தெரியுமா, இரவோடு இரவாக,   ஆங்கில ஏடாக மாறியது! நூறாண்டுகளைக் கடந்து வெளியாகிக்கொண்டிருந்த அந்த ஏடு, நிதி நெருக்கடியாலும் நிர்வாகச் சிக்கல்களாலும் 1986இல், வரலாற்றில் நினைவுகூரப்படும் பத்திரிகையான மாறிப்போனது.

தாகூர் கடிதம்

5 6 rabindranath tagore

முதலில் பார்த்த ராபர்ட் நைட், 1875இல் கொல்கத்தாவில், ஏற்கெனவே வந்துகொண்டிருந்த ‘தி ஃபிரெண்ட் ஆஃப் இந்தியா’, ‘இந்தியன் ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகைகளை வாங்கி ஒன்றாக இணைத்து ‘ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகையைத் தொடங்கினார். ஒரு பிரிட்டிஷ்காரரால் நடத்தப்பட்டபோதிலும், அரசுக்கு எதிரான போராட்டச் செய்திகளையும் நடுநிலையோடு வெளியிட்ட பெருமை அதற்கு உண்டு. 

ஜாலியன்வாலாபாக் படுகொலைகளைக் கடுமையாகக் கண்டித்து, கவி ரவீநதிரநாத் தாகூர் அரசுக்கு எழுதிய கடிதத்தை முழுமையாக வெளியிட்டது. அரசாங்கக் கெடுபிடிகளை மீறி, வங்காளப் பஞ்சம் பற்றிய மனதை உருக்கும் காட்சிகளையும் செய்திகளையும் வாசகர்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தது. 1960களில் தி ஸ்டேட்ஸ்மேன் லிட்., நிறுவனத்தின் உரிமை இந்தியர்கள் கைக்கு மாற, சட்ட வல்லுநரும், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியவருமான என்.ஏ. பால்கிவாலா பத்திரிகையின் தலைவராகப் பொறுப்பேற்றார். மாறுபடும் கருத்துகளையும் வெளியிட்டு இப்போதும் வந்துகொண்டிருக்கிறது இந்த நாளேடு.

சென்னையிலிருந்து

உள்ளூர்மொழி பத்திரிகைச் சட்டம் கொண்டுவரப்பட்ட அதே ஆண்டில், ஆங்கிலத்தில் தேசிய இயக்கச் சிந்தனைகளோடு  சென்னையில் (அப்போது மதராஸ்) தொடங்கப்பட்டது ‘தி ஹிண்டு’. சட்டக் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களுமான ஜி. சுப்பிரமணிய ஐயர், டி.ஏ. நடராஜ ஐயர், பி.வி. ரங்காச்சாரியார், பி.ஆர். ராமசாமி ஐயங்கார், எம். வீரராகவாச்சாரி ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து அதைத் தொடங்கினார்கள். பின்னர் அவர்களோடு எஸ். கஸ்தூரிரங்க ஐயங்கார் இணைந்தார் என்றாலும் அதனை உருவாக்கியவர்களில் ஒருவராகவே மதிக்கப்படுகிறார்.

இந்தியர்களால் தொடங்கப்பட்ட முதல் ஆங்கிலப் பத்திரிகை என்ற அடையாளத்துடன் தேசிய இயக்க நோக்கங்களை முன்வைத்து பிரிட்டிஷ் ஆட்சியின் நடவடிக்கைகளை எதிர்ப்பதில் உறுதியான நிலைப்பாடுகளை மேற்கொண்டு 1889இல் நாளேடாக மாறியது.. இன்றைய தொழில்நுட்பங்களையும் இணைத்துக்கொண்டுள்ள ‘தி ஹிண்டு’ அடுத்த மூன்றாண்டுகளில் ஒன்றரை நூற்றாண்டு வயதைக் கொண்டாடவிருக்கிறது.

5 7 the hindu

இந்தக் குழுவின் ஜி. சுப்பிரமணிய ஐயர், 1882இல் ‘சுதேசமித்திரன்’ வார இதழைத் தொடங்கினார். தமிழில் தேசிய அரசியல் விழிப்புணர்வைப் பரப்பும் தேவையை நிறைவேற்றும் வகையில் வந்த அது 1899இல் நாளேடாகியது. நூறாண்டை நெருங்கிக்கொண்டிருந்த நிலையில், 1970களில் நிதி நெருக்கடியாலும் புதிய அணுகுமுறைகளோடு தமிழ் ஏடுகளின் வருகையாலும் இடைக்காலமாகத் தடைப்பட்டு, சிலரது முயற்சியால் பயணத்தைத் தொடர்ந்து, 1985 வாக்கில் இறுதியாக முடித்துக்கொண்டது.

1880களில் லாகூர் நகரிலிருந்து சர்தார் தயாள் சிங் மஜிதியா தொடங்கிய ‘டிரிபியூன்’ வந்துகொண்டிருந்தது. 1903இல் அலஹாபாத் நகரில் டாக்டர் சச்சிதானந்த சின்ஹா ‘இந்தியன் பீப்பிள்’ என்ற பெயரில் தொடங்கிய பத்திரிகை, 1909இல் பண்டிட் மதன் மோகன் மாளவியா முயற்சியில் வெளியான ‘தி லீடர்’ பத்திரிகையோடு இணைந்தது 

இந்தியாவின்  இதழியல் பரிணாமத்தோடு இணைந்த, விடுதலைப் போராட்ட இயக்கத்தின் முன்னுரை எழுதப்பட்ட காலத்தில் தொடங்கப்பட்ட, வெவ்வேறு மொழிகளில் வந்த வேறு பல ஏடுகளும் இருக்கும். இங்கே நாம் நீண்ட அத்தியாயத்தின் ஒரு சிறு பகுதியையே பார்த்தோம். அடுத்த அமர்வில், தமிழ் மண்ணிலிருந்து பங்களிக்கப் புறப்பட்ட ஏடுகளைச் சந்திப்போம்.

– தொடரும்

முதல் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-1/
இரண்டாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-2/
மூன்றாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-3/
நான்காவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-4/