சினிமாதமிழ் சினிமா

நூறு சாமி திரைப்படம் பேசும் அரசியல் – கு. சௌமியா

Nooru

பதினெட்டு வயது நிரம்பியவுடன் அவசர அவசரமாகத் திருமணத்திற்கு வரன் தேடும் குடும்பம்தான், இருபதுகளின் தொடக்கத்திலேயே கணவனை இழந்த பெண்கள் வாழ்நாள் முழுவதும் தனியாக வாழ வேண்டும் என்று நிர்பந்திக்கிறது. திருமண வாழ்க்கையின் சுவாரஸ்யத்தையும் மகிழ்ச்சியையும் தன் பெண் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டும் என்பது குடும்பங்களின் ஆசையாக இருப்பதில்லை. மாறாகத் திருமணமே பெண்களின் இறுதி லட்சியமாகவும், அதனை முடிப்பது மட்டுமே தன் கடமையாகவும் குடும்பங்கள் கருதுகின்றன. அதற்குப் பின் அவர்கள் வாழ்க்கை எக்கேடு கெட்டாலும் குடும்பங்களுக்குக் கவலை இல்லை. எந்த வயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டும், யாரோடு வாழ வேண்டும், திருமண வாழ்க்கை தோல்வியுற்றால் என்ன செய்ய வேண்டும் போன்ற முடிவுகளை எடுக்கும் உரிமை சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கே உள்ளது. ஆனால், ஆணாதிக்கச் சாதிய சமூகத்தில் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை. பெண்களின் திருமண உறவிலிருந்து அவர்களின் கருப்பை வரை ஆணாதிக்கச் சமூகத்தின் விருப்பங்களே அரங்கேற்றப்படுகின்றன. 

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவான “நூறு சாமி” திரைப்படம், ஆதிக்கம் மற்றும் சுரண்டல் நிறைந்த இச்சமூகத்தைச் சாட்டையைச் சுழற்றி அடித்துள்ளது. இப்படம் கள்ளக்குறிச்சியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. கணவனை இழந்த பெண் தன் குழந்தைகளைத் தனியாளாக வளர்க்கும்போது சிரமங்களையும், வளர்ந்த மகன்கள் தன் தாய்க்கு மறுமணம் செய்துவைக்க விரும்புவதையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். கணவனை இழந்த பெண்களுக்கான மறுமணத்தைச் சட்டம் அங்கீகரித்துவிட்டதே, பிறகென்ன பிரச்சனை என்று கேட்கலாம். சட்டம் மட்டும் அங்கீகரித்தால் போதுமா? சமூகம் அங்கீகரிக்க வேண்டாமா? என்ற கேள்வியிலிருந்துதான் நூறு சாமி படம் இயக்கப்பட்டிருக்கிறது. 

ஒரு பெண் தனியாக வாழ்வது, அதுவும் கணவனை இழந்த பின் தனியாக வாழ்வது எளிதானது அல்ல. பொருளாதார நெருக்கடியைக் கடந்து, பாலியல் வல்லுறவுக்கான அச்சுறுத்தல், புறக்கணிப்புகள், அவப்பெயர்கள் போன்ற ஏராளமான பிரச்சனைகளை நித்தம் எதிர்கொள்ள வேண்டும். பேச்சுத்துணைக்குக் கூட ஆளில்லாத தனிமை அப்பெண்ணையே விழுங்குவதைத் திரைப்படம் நுணுக்கமாகக் காட்சிப்படுத்தியுள்ளது. தனித்து வாழும் பெண்களைக் கண்ணியமாக நடத்தும் ஊர் எது! என்று இப்படத்தில் முன்வைக்கும் கேள்விக்கு இதுவரை என்னால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

அம்மா என்றாலேயே தியாகத்தின் மறு உருவம் என்று புகழ்ச்சி பாடாமல், தன் அம்மாவிற்கும் வாழ்க்கை உள்ளதை உணர்ந்து திருமணம் செய்துவைக்கத் துடிக்கும் பிள்ளைகள் எத்தனை பேரை நம் சமூகத்தில் காண முடியும்? ஆனால், இக்கதையில் வரும் செல்விக்கு அப்படியான மகன்கள் கிடைத்திருக்கிறார்கள். மறுமணம் செய்துகொள்ளச் செல்வி ஆசைப்பட்டபோது அனைவரும் புறக்கணிக்க, மகன்கள் தாங்களாக முன்வந்து கேட்கும்போது மறுக்கிறாள் அந்தத் தாய்; வயதுமாகிவிட்டது, ஆசையும் விட்டுப்போய்விட்டது என எண்ணுகிறாள்.

மறுமணம் செய்துகொள்ள ஊரை எதிர்த்துப் போராடுவதைவிட, ஒரு பெண் தனக்குள்ளேயே அதிகமாகப் போராட வேண்டியுள்ளது. தனக்கு இந்த வயதில் திருமணம் தேவையா? குழந்தைகளுக்குத் தாயான பின் மறுமணத்திற்கு ஆசைப்படுவது தவறில்லையா? நான் திருமணம் செய்துகொண்டால் என் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள்? என்று ஏராளமான கேள்விகளுக்கு அவள் பதில் கண்டுபிடித்தாக வேண்டும். இவ்வாறு ஒரு தாயின், கணவனை இழந்த பெண்ணின் உணர்வுநிலையைப் படத்தில் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் சசி.

வாழ வேண்டிய காலத்தில் கணவனை இழந்த செல்விக்கு ஆதரவாக இல்லாத குடும்பமும் சொந்தமும், தனக்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கையில் அநாகரிகமாகப் பேசுவதுடன், ஆணவக் கொலை செய்வதற்கே முயற்சிக்கிறது. சமூகத்தின் ஆணாதிக்கம் கொக்கரிக்க, செல்வியின் மகன்கள், ஆணாதிகத்தை  வேரறுக்கத் தன் தாயின் திருமணத்திற்கு அரணாக நிற்கின்றனர். ஒற்றைப் பெண்ணாக மகன்களை ஆகச்சிறந்த மனிதர்களாக வளர்த்த பெருமை செல்விக்கே சேரும்.

ஒரு பெண் தன்னுடைய உரிமைக்காகப் போராடுகையில், அவளுக்கே அறியாமல் அனைத்துப் பெண்களுக்குமான விடுதலைக்காகப் போராடுகிறார் என்னும் வரிகளுக்கு ஆகச்சிறந்த உதாரணம் செல்வி. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர்.

ஒரு பெண் தனியாக வாழ்வதும், திருமணம் செய்துகொள்வதும், கணவன் இழந்தால் மறுமணம் செய்துகொள்வதும் அப்பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். அவள் எப்படி வாழ்ந்தாலும் கண்ணியமாக நடத்துவதே சமூகத்தின் அறம். ”நூறு சாமி” திரைப்படத்தை அனைத்துத் தாய்களின் மகன்களும், மகள்களும் பார்க்க வேண்டும். 

– கு. சௌமியா