சமூகம்மற்றவை

பாலியல் கொடுமையால் சிறுமியின் கண்ணீர் – நேற்று இன்று நாளை

உச்சநீ (3)

நாளேடுகளில் பத்தோடு பதினொன்றாக ‘போக்சோ’ வழக்கில் பெற்ற மகளையே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி வந்த ஒரு தகப்பன் கைது செய்யப்பட்ட செய்தி இடம்பெறுகிறது. நாள்தோறும் பெண்கள் மீது தொடுக்கப்படும் உடல் சார்ந்த கொடுமைகள் செய்திகளாக வருகின்றன. அதில் கவனம் ஈர்ப்பவை கொடூரமான பாலியல் துன்புறுத்தலோடு கொலையாகவும் முடியும் சம்பவங்களே ஆகும். வழக்கமாகிவிட்ட இக்குற்றங்கள் மலினப்பட்டு, “இதுவும் கடந்து போக வேண்டிய மற்றொரு செய்தி” எனச் சாதாரணமாக அடுத்த பக்கத்தைத் திருப்பிடும் மனநிலையில் தான் நாம் இருக்கிறோம்…

தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் “பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள்” என வந்து விழும் தலைப்புகளைப் பார்த்தாலே, சேனலை மாற்றி “பிக் பாஸ் என்னாச்சு? அதைப் போடு” என்று ரிமோட் பட்டன் தட்டப்படுகிறது.

அண்மையில் கண்ட செய்தியில் எனக்குப் பொட்டில் அடித்தாற்போலக் கவனத்தை ஈர்த்தது அந்த ஒரு வரி – “நான் வீட்டுக்குப் போகமாட்டேன், ஹாஸ்டல்ல இருந்துக்கறேன்… படிக்கணும்.”

கடந்த கால மௌனங்கள்: 1975 மற்றும் 1989

1975-ஆம் ஆண்டு.

தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் பதினான்கு வயதுச் சிறுமி மீனாட்சி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) வாழ்ந்து வந்தாள். அவள் மிகவும் புத்திசாலி; பள்ளிக்குச் செல்ல விரும்பினாள். ஆசிரியராக வேண்டும் என்பது அவளது கனவு. ஆனால், “வயதுக்கு வந்துவிட்டால் பள்ளியை மறந்துவிட வேண்டியதுதான் – கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள். பொட்டைப்புள்ள படிச்சது போதும். சோறாக்கத் தெரிஞ்சுக்க, குடும்பத்தை நடத்தக் கத்துக்க. அதான் முக்கியம்…” என்ற குரல்களே அவளுக்குக் கிடைத்தன. வேறு குடும்பத்தில் சம்பளமில்லாமல் வேலை செய்வதற்குத் தரப்பட்ட அந்தஸ்தும் இதுவே. வாழ்க்கைப்பட்ட குடும்பத்தில் கணவன் மில் வேலைக்குச் செல்ல, ஷிப்ட் முறைகளில் அவளது வாழ்க்கையும் ஓடியது.

நன்றாக இருந்த கண்ணை உறுத்திய தூசு போல, கணவனின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனின் பாலியல் அத்துமீறல்கள் அவளுக்கு அருவருப்பை அளித்தன. கணவனிடம் இது குறித்துப் புலம்பியபோது, அவன், மாமியார், மாமனார், நாத்தனார் என யாருமே அவளை நம்பவில்லை. “அவன் அப்படியில்லை, உன் புருசனை விட நல்லா சம்பாதிக்கறான். அதனாலதான் இப்படிப் பேசுற… நீதான் ஏதோ தப்பு பண்ணியிருக்க…” என்ற ஏச்சுகளால் அவளது உணர்வுகள் சாக்கடையில் வீசப்பட்டன.

1989-ஆம் ஆண்டு.

தலைநகரம். சினிமாக்களில் வாழும் மனிதர்கள். பச்சை ஓலையில் உட்கார்ந்திருந்த முனியம்மா, தனக்கு நேரப்போகும் எதுவும் தெரியாமல் ஆழ்ந்து தூங்கினாள். வழக்கமாகப் பன்னிரண்டு வயதுப் பெண் குழந்தை வீட்டு வேலை செய்து, பள்ளி சென்று வந்த பின் இரவில் அது நடக்கிறது. ஒரே ஒரு அறையில் வாசம் செய்யும் குடும்பம் அது. தூங்கும்போது தன் உடல் மீது பரவிய தகப்பனின் கைகள் தேடிய பாகங்களை உணர்ந்தவள் விக்கித்துப் போனாள். இந்தக் கொடுமையை அவளால் யாரிடமும் சொல்ல முடியவில்லை. அப்படிச் சொல்ல முயன்றபோது அவளுக்குச் சொல்லப்பட்டது: “இதை வேற யார்ட்டயும் சொல்லாதடி, குடும்பத்துக்குத்தான் அவமானம்… பெண் குழந்தை அமைதியா இருக்கணும்… பெரியவங்களை எதிர்க்கக் கூடாது…”

காணப்படாத கண்ணீரும் அதன் வடுக்களும்

அந்தக் காலத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பற்றிப் பள்ளிகளில் பேசப்படவில்லை. தொலைபேசி உதவி மையங்கள் இல்லை. சமூக ஊடகங்கள் இல்லை. குழந்தைகளைப் பாதுகாக்கும் சிறப்புச் சட்டங்களும் இல்லை. அதனால் மீனாட்சி அழுதாள். முனியம்மா அழுதாள். இருவரும் அமைதியாக அழுதார்கள். அவர்களுடைய கண்ணீரை யாரும் காணவில்லை; அவர்களுடைய பயத்தை யாரும் பொருட்படுத்தவில்லை.

ஆண்டுகள் கடந்தன. குற்றவாளிகள் சுதந்திரமாக வாழ்ந்தார்கள். பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் மனக்காயத்துடன் வாழ்ந்தார்கள். அவர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன என்றாலும், குழந்தைப் பருவத்தில் மனங்களில் விழுந்த வடுக்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அவர்களது கதைகள் காவல் நிலையத்தை அடையவில்லை; நீதிமன்றத்தை எட்டவில்லை. பத்திரிகைகளைச் சேரவில்லை; சமூகத்தின் காதுகளிலும் ஒலிக்கவில்லை. மீனாட்சி, முனியம்மா போன்றவர்கள் ஒரு சிலர் அல்ல. அந்தக் காலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் இப்படித்தான் மௌனமாகத் துன்பத்தைச் சுமந்தனர்.

விழிப்புணர்வின் ஒளி: 2025-ஆம் ஆண்டு

2025-ஆம் ஆண்டு. பன்னிரண்டு வயதுச் சிறுமி காவ்யா. அவளும் கொடுமையை எதிர்கொண்டாள். பெற்ற தந்தையே பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்தும் ஒரு கொடூரமான சூழல் அது. அம்மா வேலைக்குப் போனால்தான் குடும்பத்தில் தினமும் இரண்டு வேளை சோறு, காவ்யாவுக்கும் தம்பிக்கும் பள்ளிக்கூடம்.

தூக்கத்தில் அப்பனுடைய விரல்களின் அசைவுகள் அவளுக்கு என்னவோ சரியில்லை என்று உணர்த்தியது. பக்கத்து வீட்டுப் பத்மா அக்கா தினமும் டியூசன் எடுக்க, அங்கே படிக்க வந்த குழந்தைகள் பாலியல் அத்துமீறல் குறித்த பத்மாவின் பேச்சால் இக்கொடுமைகள் பற்றி அறிந்துகொண்டனர். காவ்யாவுக்கும் அது புரிந்தபோது அதிர்ச்சியடைந்தாள். அதிலிருந்து அவள் மீளச் சில நாட்கள் கடந்தன.

அவளுக்கு ஒருநாள் பயம் வந்தபோது, இதைப்பற்றி வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானாள். அவளைச் சுற்றியிருந்த சமூகமும் இப்போது கொஞ்சம் மாறியிருந்தது. ஒருநாள் பத்மா அக்காவிடம் அவள் தைரியமாக நடப்பவற்றை விளக்கினாள். இறுதியாகச் சொன்னாள்: “எனக்கு உதவி வேண்டும்.” 

அந்தச் சொற்கள் அவளது வாழ்க்கையை மாற்றின. பத்மா அக்கா அதைக் கேட்டுவிட்டு அமைதியாக இருக்கவில்லை. அவள் தன் நண்பனிடம் சொன்னாள். அவன் ஒரு சமூக ஆர்வலரிடம் சொன்னான். மாதர் உரிமை அமைப்புகள் களமிறங்கின. சில வழக்கறிஞர்கள் உதவினர். அதன் விளைவாகக் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

ஒரு சிறுமியின் குரலைச் சமூகம் கேட்டது. அவள் பாதுகாப்பாக மீட்கப்பட்டாள். சட்டம் செயல்படத் தொடங்கியது. காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டது. குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான ‘போக்சோ’ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. குழந்தை நலக் குழுவிற்குத் தகவல் அளிக்கப்பட்டது. உளவியல் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சமூக மாற்றமும் சட்டத்தின் வலிமையும்

அதிகாரிகள் அவளிடம் கேட்டனர்: “நீ எங்கேயம்மா தங்க விரும்புகிறாய்?”

அந்தச் சிறுமி தயங்காமல் பதிலளித்தாள்: “நான் ஹாஸ்டல்ல இருந்துக்கறேன். படிக்கணும்”

அந்த வார்த்தைகள் அங்கே இருந்த அனைவரையும் நெகிழ வைத்தன. ஏனெனில், அது ஒரு குழந்தையின் குரல் மட்டும் அல்ல. ஒரு தலைமுறையின் விழிப்புணர்வு எதிரொலி.

முந்தைய காலத்தில் பெண்கள் பேசவில்லை என்று கூறுவது தவறு. அவர்களுக்குப் பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, ஆனால் கேட்க யாரும் இல்லை. நம்ப யாரும் இல்லை. பாதுகாக்க யாரும் இல்லை.

இன்று நிலைமை குறிப்பிடத்தக்க அளவுக்கு மாறியுள்ளது. ஒரு குழந்தை பேசினால் ஆசிரியர் கேட்கிறார். சமூக ஆர்வலர் ஓடிவருகிறார். வழக்கறிஞர் சட்ட உதவி செய்கிறார். காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. நீதிமன்றம் குழந்தையின் உரிமையைப் பாதுகாக்கிறது. இது சமூகத்தின் வளர்ச்சி.

ஆனால் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. செய்ய வேண்டிய வேலைகளும் அதிகம். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) கடந்த 2014-2024 பத்தாண்டு காலத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பதைப் பதிவு செய்திருக்கிறது. அதிலும் 2022-ஆம் ஆண்டு குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்கள் 8.7% அதிகரித்து, மொத்தம் 1,62,000 புகார்கள் அறிக்கையில் பதிவாகின. கோவிட்-19 ஊரடங்கு காரணமாக இந்தப் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது இக்குற்றங்களை மறைக்காமல் புகாரளித்துத் தீர்வு தேடும் விழிப்புணர்வையும் காட்டுகிறது.

தென்னிந்தியாவைக் காட்டிலும் வட மாநிலங்களில் புகார்கள் பதிவாவது, அந்தந்த வட்டாரங்களின் அதிகார, சமூக மற்றும் சாதியப் பாகுபாடுகள் அல்லது அச்சுறுத்தல்கள் காரணமாக வெளிப்படையாகத் தெரிவதில்லை. காஷ்மீரின் ஒரு 8 வயதுச் சிறுமி, உத்தரப் பிரதேசத்தின் உன்னாவோ பகுதியில் ஒரு 16 வயதுச் சிறுமி போன்ற சில கடுமையான குற்றங்களைத் தவிர, பல சம்பவங்கள் வெளியே வருவதில்லை. இந்தியாவின் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த 1985-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா ஒப்பந்தச் சரத்துகள் நீண்ட தாமதத்திற்குப் பிறகே நடைமுறைப்படுத்தப்பட்டன. முதலில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைகளுக்கான சுகாதாரம், பாதுகாப்பான குடும்பம், உணவு, உடை, கல்வி, இருப்பிடம் மற்றும் பெற்றோர் பாதுகாப்பு ஆகியவற்றை ஒரு குடும்ப அமைப்பின் அடிப்படையாக ஐ.நா. வரையறுக்கிறது.

தமிழக அரசின் திட்டங்களும் எதிர்காலச் செயல்பாடுகளும்

இன்று தமிழ்நாட்டில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் தொட்டில் குழந்தைகள் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான திட்டங்கள், கிராமங்களில் தாய் சேய் நல விடுதிகள், அங்கன்வாடி என்ற பகல் நேரப் பள்ளிகள், மருத்துவ உதவிகள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டு, பெண்  குழந்தைகளுக்கான பாதுகாப்பில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

மேலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் ஐபிசி சட்டத்திலிருந்து புதிய வடிவாகக் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் முதல் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் (பாதுகாப்பு மற்றும் தண்டனை) சட்டம் – போக்சோ வரையிலான கடும் தண்டனை தரும் சட்டங்கள் 2012-இல் இருந்து அமலில் உள்ளன.  

இவற்றின் கீழ் பெறப்படும் புகார்கள் குறித்தும், அதன் மேல் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகள் மக்களுக்குப் பல வழிகளில் கொண்டு செல்லப்பட வேண்டும்.

திரையரங்குகளில் குறும்படங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசு மற்றும் காவல்துறையினர் நடத்தும் விழிப்புணர்வு உரைகள், பேரணிகள், குறும்படங்கள், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களின் வாயிலான பரப்புரைகள் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் அதிகமான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைச் செயல்படுத்த வேண்டும்.

இதோடு இன்னும் பல தன்னார்வ அமைப்புகள், மாதர் சங்கங்கள், பெண்கள் உரிமை அமைப்புகள், தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலக் குழுக்கள், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், வழக்கறிஞர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் இதில் அக்கறையுள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திற்கும், நகர்ப்புற குடியிருப்புகளுக்கும் சென்று குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மனிதச்சங்கிலி, விழிப்புணர்வு பேரணி, தெருமுனைப் பிரச்சாரம், பள்ளி மற்றும் கல்லூரி கருத்தரங்குகள், குறும்படத் திரையிடல், சட்ட விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் சுயபாதுகாப்புப் பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

மேலும், குழந்தைகளுக்கு “நல்ல தொடுதல் – கெட்ட தொடுதல்” (Good touch – Bad touch), இணையவழி பாலியல் சுரண்டலிலிருந்து பாதுகாப்பு, சட்ட உரிமைகள், புகார் அளிக்கும் நடைமுறை மற்றும் 1098 குழந்தைகள் உதவி எண் குறித்துத் தொடக்கப்பள்ளி நிலையிலிருந்தே கற்பிக்கப்பட வேண்டும். முக்கியமாக, பாலின சமத்துவம் கற்பிக்கப்பட வேண்டும்.

குழந்தைகள் உதவி எண்ணாகிய 1098 (சைல்டு ஹெல்ப்லைன்), ஒருங்கிணைந்த அவசரகால உதவி எண்ணாகிய 102, மகளிர் உதவி எண்ணாகிய 181, மகளிர் காவல்துறை உதவி எண் 1091 போன்றவை எங்கும், எவருக்கும் தெரிந்திருக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

மீனாட்சி நேற்று அழுதாள். முனியம்மா மௌனமாக அழுதாள். காவ்யா இன்று தைரியமாகப் பேசுகிறாள். நாளை எந்தக் குழந்தையும் அழக் கூடாது. ஒரு குழந்தை “எனக்கு உதவி வேண்டும்…” என்று கையை நீட்டும்போது, “உன் குரலை நாங்கள் கேட்கிறோம். உன்னை நாங்கள் நம்புகிறோம். உன்னை நாங்கள் பாதுகாப்போம்” என்று சமூகம் முழுவதும் ஒரே குரலில் சொல்லும் நாள்தான் உண்மையான நாகரிகத்தின் பிறப்பு நாள்.

– கோ. கீதாஞ்சலி ஸ்ருதி கமலா

Leave a Reply