“ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ எவையெல்லாம் தேவையில்லையோ அவைதான் திருமணத்தைத் தீர்மானிக்கின்றன” – பிரபஞ்சன்
இந்தியாவில் நிகழக்கூடிய திருமணங்கள், சம்பந்தப்பட்ட நபர்களின் விருப்பங்களை விட சாதி, பணம், குடும்பம், ஜாதகம் போன்றவைதான் தீர்மானிக்கின்றன. இயல்பாக வரும் காதல் சமூகத்தால் கொச்சைப்படுத்தப்பட்டு எதிர்ப்புகளுக்கு உள்ளாகும் அதே சமயத்தில், கட்டாயத் திருமணங்கள் புகழப்படுகின்றன. எதிர்ப்புகள் எழுந்த போதிலும் காதலின் மகத்துவத்தை உணர்ந்து, சாதி மறுத்து, மதம் மறுத்துத் திருமணம் செய்யக்கூடியவர்கள் இருக்கவே செய்கின்றனர். ஆனால் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும், வன்முறைகளும் சொல்லில் அடங்காதவை.
சாதிமத மறுப்புத் திருமணங்களின் தரவுகள்:
அரசியலமைப்புச் சட்டக்கூறுகள் 21 மற்றும் 19 ஆகியன சுதந்திரமான வாழ்க்கை தேர்வுக்கான உரிமையையும் தனிநபர் சுதந்திரத்தையும் வலியுறுத்துகின்றன. ஆனால் இந்தியாவின் மத நூல்களோ அகமண முறையையே பாதுகாத்து வருகின்றன. இந்தியாவில் நிகழக்கூடிய சாதி மறுப்புத் திருமணங்களின் எண்ணிக்கை சொற்பமே. ‘இந்தியா டுடே’ இதழில் வெளியான லோக்நிதி-சி.எஸ்.டி.எஸ் ஆய்வின்படி, 21 மாநிலங்களில் சுமார் 9,188 நபர்களிடம் ஆய்வு மேற்கொண்டதில், சுமார் 6.1 சதவீத மக்கள் மட்டுமே வெவ்வேறு மத நம்பிக்கை மற்றும் கலாச்சாரங்களைப் பின்பற்றும் இருவர் திருமணம் செய்துகொள்வதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களில் 5.6 சதவீத மக்கள் சாதி மறுப்புத் திருமணங்களை ஆதரிப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. படிப்பறிவு அதிகமுள்ள சண்டிகரில் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு அதிகளவில் ஆதரவு இருந்தாலும், 90 சதவீத மக்கள் மத மறுப்புத் திருமணங்களுக்கு எதிர்ப்பையே தெரிவித்துள்ளனர். இந்தியாவிலேயே கேரளாவில்தான் வெவ்வேறு நம்பிக்கை மற்றும் கலாச்சாரப் பின்னணியுடையவர்கள் திருமணம் செய்துகொள்வதை அதிக மக்கள் ஆதரிப்பதாக ஆய்வு கூறுகிறது. சுமார் 94% கேரள மக்கள் சாதிமத மறுப்புத் திருமணங்களை ஆதரிப்பது அம்மாநில மக்களின் பகுத்தறிவைப் பறைசாற்றுகிறது. “ஆணும் பெண்ணும் சாதி மதங்கள் கடந்து திருமணம் செய்துகொள்ளலாமா?” என்ற கேள்விக்குப் பதிலளித்த மாநிலங்களில் தமிழ்நாடு 5-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
காதல் திருமண எதிர்ப்பும் ஆணவப் படுகொலையும்:
இந்தியச் சமூகத்தில் காதல் திருமணங்களை எதிர்ப்பதற்கு முக்கியக் காரணம் பெண்ணின் கருப்பை மீதான ஆதிக்கமே. ஒரு பெண், தன் சமூகத்திலேயே திருமணம் செய்யும்போது தன்னுடைய சாதியைச் சேர்ந்த ஆணின் குழந்தையைத் தன் கருவில் சுமக்கிறாள். இதன் மூலம் தலைமுறை தலைமுறையாகச் சாதியக் கட்டமைப்பு பாதுகாக்கப்படுகிறது. அதுவே வேற்றுச் சாதியில் திருமணம் செய்யும்போது அடுத்த தலைமுறையில் சாதியக் கட்டமைப்பு தகர்கிறது. தங்களின் சாதியை அடுத்த தலைமுறையிலும் பாதுகாக்கவே சாதிச் சங்கங்களும், நிலவுடைமைக் குடும்பங்களும் காதல் திருமணங்களை எதிர்க்கின்றன. சாதி மறுத்துத் திருமணம் செய்பவர்களைக் குடும்பமும் சமூகமும் கொல்லக்கூடத் தயங்குவதில்லை. தமிழகத்தில் மட்டும் 2017 முதல் 2024 வரையிலான ஆண்டுகளில் சுமார் 59 பேர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதை ‘எவிடன்ஸ்’ தன்னார்வ அமைப்பு தெரிவிக்கிறது.
இமையம் எழுதிய, “பெத்தவன்” சிறுகதையில் தன் மகள் காதலித்ததை ஏற்றுக்கொள்ள முடியாத தந்தை, தன் மகளையே சாகடிக்க முயற்சிப்பார். ஆனால் ஆசை மகளைச் சாகடிக்க இயலாத தந்தை, தன் மகளைக் காதலித்தவனுடன் அனுப்பி வைத்துவிட்டு, ஊர் மக்களுக்குப் பயந்து தானே விஷம் குடித்து இறந்துவிடுவார். சாதியச் சமூகத்தைப் பொறுத்தவரை காதல் திருமணம் செய்த பிள்ளைகளை ஒன்று கொலை செய்ய வேண்டும், இல்லையென்றால் பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற நிலை உள்ளது. இவ்வாறான தற்கொலைகள் ஏராளமாகத் தமிழகத்தில் நிகழ்கின்றன. நெருங்கிய வட்டத்தில் இப்படியான இழப்பு எனக்கும் சமீபத்தில்தான் நேர்ந்தது. “வாழ்வதற்குத்தானே இவ்வாழ்க்கை, சாவதற்கு இல்லையே!” சாதி கௌரவத்திற்காகத் தற்கொலை செய்வதும் ஆணவக் கொலையாகவே கருதப்பட வேண்டும். இப்படியான தற்கொலைகளைத் தடுப்பதும் அரசின் கடமை.
காதல் தம்பதிகள் மீது ஏவப்படும் வன்முறைகள்
காதலித்த காரணத்திற்காகவே பல வன்முறைகளுக்கு இளம் தலைமுறையினர் பலியாகின்றனர். தன் வீட்டுப் பெண்ணோ, ஆணோ காதலிப்பதை அறிந்தவுடன் அக்குடும்பம் அவர்களை வீட்டிலேயே சிறை வைக்கிறது. காதலித்த ஆணை/பெண்ணை மற்றும் அவர்களின் குடும்பத்தைக் கொலை செய்வதாக மிரட்டுவது, பெற்றோர் தான் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுவது போன்ற வழக்கங்களைச் சாதியக் குடும்பங்கள் தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வருகின்றன. பிள்ளைகள் தம் காதலைக் கைவிட ஆபாச வார்த்தைகளால் திட்டுவது, அடிப்பது, தனிமைப்படுத்துவது, வீட்டிற்குள்ளேயே வன்முறையை ஏவுவது என குடும்ப உறவுகளே அவர்களைச் சித்திரவதை செய்கின்றன. இவையெல்லாம் சமாளித்துத் திருமணம் செய்யும் காதல் தம்பதிகள் பொய் வழக்கு, ஆட்கடத்தல் வழக்கு, உறவுகளிலிருந்து தனித்துவிடப்படுதல் ஆகியவற்றால் எந்நேரமும் பரிதவிக்கும் அவலநிலைக்கு ஆளாகின்றனர்.
சுமார் ஓராண்டிற்கு முன்பு, குடும்பத்தின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நண்பர் ஒருவரின் திருமணத்தைப் பதிவு செய்தோம். பெண் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர், ஆண் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர். காதல் விவகாரம் தெரிந்தவுடன் பெண் வீட்டார் காவல்துறையில் பெண்ணைக் காணவில்லை என்று புகாரளித்தனர். திருமணம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதை அறிந்ததும் பெண்ணின் தந்தை காலில் விழுகிறார். அந்தப் பெண் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்பதை தற்போது நினைத்தாலும் உடல் நடுக்கமடைகிறது. மற்றுமொரு சம்பவம், விருதுநகரைச் சேர்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் மாற்றுச் சமூகத்தில் திருமணம் செய்துகொண்டார். அந்த கணவனின் பெற்றோர் சாதிப் பெயரைச் சொல்லி அப்பெண்ணை வசைபாடியும், வரதட்சணைக் கொடுமை செய்ததாலும் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்ட தகவலை அப்பகுதி மாதர் சங்கத்தினர் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் பெண் வீட்டார் கொடுத்த தகவலின்படி, அவர் வீட்டில் இதுவரை கணவர் உணவருந்தியதே இல்லை என்ற தகவல் கூடுதல் வருத்தத்தை ஏற்படுத்தியது. காதலிக்கும்போது இல்லாத சாதிய மனப்பான்மை, திருமணத்திற்குப் பின் எப்படி மேலோங்கியிருக்கும் என்ற கேள்விக்கு விடை தேடிக்கொண்டிருக்கிறேன். சாதியானது காதலை, காதலர்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்குவதை எப்படிப் பொறுத்துக்கொள்வது?
சமூக பொருளாதார சவால்கள்
காதல் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு அச்சுறுத்தல் மற்றும் தனிமைப்படுத்துதலுக்கு மத்தியில் பொருளாதாரச் சிக்கல் கூடுதல் அழுத்தத்தைத் தருகிறது. படித்து முடித்தவுடனேயே காதல் திருமணம் செய்துகொள்பவர்கள் வறுமையில்தான் இல்லற வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். தன் பெற்றோர் மற்றும் குடும்பத்தின் மீதான பதற்றத்திலும் பயத்திலும் வீட்டை விட்டு வெளியேறும் காதலர்கள் பலர், கல்விச் சான்றிதழ்களை வீட்டிலேயே தவற விடுவதால் நிரந்தரமான வேலை இல்லாமல் அவதியுறுகின்றனர். தம்பதிகளுக்குத் தங்குவதற்குச் சுகாதாரமான வீடு மற்றும் ஆரோக்கியமான உணவுகூடக் கிடைப்பதில்லை. சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசு, “டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு சாதி மறுப்புத் திருமண உதவித் திட்டத்தின்” கீழ் உதவித்தொகை வழங்கினாலும், விண்ணப்பிக்கும் முறை அவ்வளவு எளிதானதாக இல்லை. சாதி மறுப்புச் சான்றிதழ் விண்ணப்பிக்கவே அலைக்கழிக்கப்படுகிறார்கள். நானுமே இதே போன்ற சவால்களை எதிர்கொண்டிருக்கிறேன்.
அதேபோல் வீட்டை எதிர்த்துக் காதல் திருமணம் செய்த தம்பதிகளுக்குக் குடும்ப அட்டை (Ration Card) விண்ணப்பிப்பதும் அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. குடும்ப அட்டை விண்ணப்பிக்க வேண்டுமென்றால், ஏற்கனவே உள்ள பெற்றோரின் அட்டையிலிருந்து பெயரை நீக்க வேண்டும். அதற்கான கடவுச்சொல் (OTP) பெற்றோரின் அலைபேசிக்குத்தான் செல்லும். திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர் எப்படிப் பெயர் நீக்கத்திற்கு உதவுவர்? ஒருவேளை ஆணவக் கொலைக்கான அச்சுறுத்தல் இருக்கும் தம்பதியினரால் எப்படிப் பெற்றோருடன் பேச முடியும்? இதனால் பல சாதி மறுப்புத் தம்பதியினர் பல வருடங்களாகக் குடும்ப அட்டையே வாங்காமல் இருக்கின்றனர். ஏற்கனவே பொருளாதாரச் சிக்கல் இருப்பவர்களுக்குக் குடும்ப அட்டை இல்லாதது கூடுதல் சுமையே.
சாதிமறுப்புத் திருமணத்தை வலுப்படுத்துவதற்கான சிறப்புச் சட்டம்
ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் வேண்டும் என்று பல வருடங்களாகத் தலித் விடுதலை அமைப்புகளும், இடதுசாரி அமைப்புகளும் போராடி வருகின்றனர். 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, சக்தி வாஹினி தொடர்ந்த வழக்கில் ஆணவக் கொலைகளைத் தடுக்க, குற்றத்தில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க மாநில அரசுகளே சட்ட வழிமுறைகளைக் கொண்டு வர வலியுறுத்தியது. பல தீர்ப்புகள் ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்திற்கு ஆதரவாக இருந்தாலும், இன்னும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் சட்டத்தை இயற்றவில்லை. சிலர் ஏற்கனவே உள்ள எஸ்சி/எஸ்டி (SC/ST) சட்டங்களே போதுமானவை என்கிறார்கள். ஆனால் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகப் பெண்ணும் தலித் ஆணும் காதலித்து, அந்தப் பெண் தன் வீட்டாரால் கொல்லப்படும் பட்சத்தில், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிய முடியாது. மேலும், கீழ் நீதிமன்றங்களில் குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனைகள் மேல்முறையீட்டின்போது நீர்த்துப்போகின்றன. இதுபோன்ற காரணங்களால்தான் தனிச் சட்டம் அவசியம்.
சட்டத்தில் உள்ளடக்க வேண்டியவை
தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டத்தை வரையறுக்க, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையிலான ஆணையத்தை அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆணையத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ‘எவிடன்ஸ்’ கதிர் அவர்களும் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். ஆணையம் அந்தப் பரிந்துரைகளைப் பரிசீலனை செய்து விரைந்து செயல்படுவது காலத்தின் இன்றியமையாத தேவை.
சட்டத்தில் உள்ளடக்க வேண்டிய அம்சங்கள்:
1. சாதி/மத மறுப்புத் திருமணம் செய்துகொள்பவர்களின் உயிர், உடைமை மற்றும் வாழ்வாதாரத்திற்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
2. காதலர்களின் பெற்றோர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.
3. சாதி மறுப்புத் தம்பதிகளுக்கான அரசின் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும்.
4. ஆணவப் படுகொலையில் ஈடுபடும் சாதிச் சங்கங்கள் மற்றும் குடும்பங்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
5. அரசின் முயற்சியால் சாதிச் சங்கங்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
6. பாதிக்கப்பட்ட தம்பதியினருக்கு நிவாரணம் மற்றும் நீதி பெற்றுத் தர வேண்டும்.
7. ஆணவப் படுகொலை வழக்குகளில் சாட்சி கூறுபவரின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
8. சாதி மறுப்புத் தம்பதிகளைப் பாதுகாக்க; காவல்துறை, சமூக நலத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை, மருத்துவத்துறை மற்றும் சட்ட உதவி மையம் உள்ளடக்கிய மாவட்ட மற்றும் மாநில ஒருங்கிணைப்பு நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
9. சாதி மறுப்புத் தம்பதிகளுக்குக் குடும்ப அட்டை உட்படக் குடிமக்களின் உரிமைகளான அனைத்து ஆவணங்களையும் அவர்கள் விண்ணப்பித்துப் பெற்றிட அரசு வழிவகை செய்ய வேண்டும்.
மனிதராகப் பிறந்த அனைவருக்கும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்வதற்கு உரிமை உள்ளது. மனிதரின் மகிழ்வான வாழ்க்கை மட்டுமே பிரதானம். அதற்கு எதிராக இருக்கும் சாதியையும் சமயத்தையும் வேரறுக்கக் களமாடுவோம்.
-கு.சௌமியா







