சமூக நீதிசமூகம்

நுழைவுத் தேர்வுகள் நீதியை வழங்குகின்றனவா? – திலீப் சவான்

உச்சநீ

உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பயில்வதற்கான நுழைவுத் தேர்வுகளைத் தேசிய அளவில் மையப்படுத்துவது, நீதியையும் சமத்துவத்தையும் உறுதி செய்யும் நடவடிக்கையாக இல்லை. சமூகத்தில் ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தினருக்கே மீண்டும் ஆதரவாக இருக்கும் நுழைவுத் தேர்வுகள் குறித்துச் சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. சமூகரீதியாகப் பின்தங்கிய பின்னணியிலிருந்து வரும் மாணவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க, நீட் தேர்வையும் அதன் கட்டமைப்பையும் முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டும்.

இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கான, கடும் போட்டி நிறைந்த தேர்வான நீட்டிற்கு எதிராகப் பரவலாக நிலவும் அதிருப்தி, இந்தியக் கல்வி முறை முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்பதை உணர்த்துகிறது. சமீபத்தில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) சார்பில் தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திய தேசிய தகுதித் தேர்வு (NET) கூட, தேர்வு நேர்மையாக நடைபெறவில்லை என்று ரத்து செய்யப்பட்டது. கேள்வித்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற பெரும் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் மீண்டும் மீண்டும் எழுப்பப்படுவதால், பல தேர்வுகளின் நேர்மை கேள்விக்குள்ளாகியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிர வீட்டுவசதி மற்றும் பகுதி வளர்ச்சி ஆணையத்தின் (MHADA) ஆட்சேர்ப்புக்கான கேள்வித்தாள் கசிந்தது. மத்தியப் பிரதேசத்தின் தொழில்முறைத் தேர்வு வாரிய ஊழல் (வியாபம் ஊழல்), மாணவர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், இடைத்தரகர்கள் எனப் பலரையும் உள்ளடக்கிய ஒரு பெரும் ஊழலாகும். இது இந்தியாவின் கல்வி மற்றும் ஆட்சேர்ப்பு முறைகளின் தோல்வியை வெளிப்படுத்தியுள்ளது. வியாபம் தேர்வில் முறைகேடுகள் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக நடந்து வந்துள்ளன. இதில் இரண்டு மர்ம மரணங்களும் நிகழ்ந்துள்ளன. மிகவும் மோசமாக, வியாபம் ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவரும், குறிப்பிடத்தக்க கல்வித் தகுதிகள் இல்லாதவருமான பிரதீப் குமார் ஜோஷி என்பவரே, தற்போது தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைவராக உள்ளார் (National Herald 2024).

நுழைவுத் தேர்வுகளின் தேவை

இந்தியாவில் நுழைவுத் தேர்வுகளின் வரலாறு நீண்டதல்ல. 2005-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பும், அதைத் தொடர்ந்து 2015-இல் வெளியான மற்றொரு தீர்ப்பும், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு வழிவகுத்தன. இதற்காகத் தேசிய தேர்வு முகமை நிறுவப்பட்டது. மேலும், தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020, மாநிலப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள், பிற ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில்முறைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளும் தேசிய அளவில் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இந்தியாவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளுக்குக் குறிப்பிடத்தக்க “சட்டபூர்வத் தன்மையும்” பொதுமக்களின் “நம்பிக்கையும்” உள்ளன. இந்தத் தேர்வுகளில் ரகசியம் காக்கப்படுவதால், “நியாயமான” முறையில் மட்டுமே சேர்க்கைகள் நடக்கின்றன என்று பரவலான நம்பிக்கை உள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் ஒரே மாதிரியான தேர்வை எதிர்கொள்வதால், இதுவே நேர்மையான முறை என்றும், இதற்கு மாற்று இல்லை என்றும் கருதப்படுகிறது. இருப்பினும், உன்னிப்பாக ஆய்வு செய்தால், இந்த நுழைவுத் தேர்வுகள் அனைத்துமே சந்தேகத்திற்குரியவையே என்பது விளங்கும்.

பயிற்சி மையங்களும் வர்க்கப் பிரிவினைகளும்

பொதுத் தேர்வுகளின் நேர்மையைப் பராமரிப்பதில் உள்ள சவால்கள் இந்தியாவிற்கு மட்டுமே உரியவை அல்ல. நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது உலகளாவிய அனுபவமாக உள்ளது. இதன் விளைவாக, நுழைவுத் தேர்வுகளுக்கு எதிராக ஒரு பொதுக் கருத்து உருவாகி வருகிறது. சீனாவின் கல்வித் துறையில், “காக்கோ” (Gaokao) என்று அழைக்கப்படும் தேர்வு முறை உள்ளது. இது நான்கு நாட்கள், ஒன்பது மணி நேரம் வரை நீடிக்கும் ஒரு நுழைவுத் தேர்வு. அதிக எண்ணிக்கையிலான கேள்விகளைக் கொண்ட இத்தேர்வு, உலகின் கடினமான மற்றும் பெரும் அழுத்தம் தரும் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தகைய தேர்வுகள் “பிரஷர் குக்கர்” என்று அழைக்கப்படுகின்றன. இந்தத் தேர்வு முறைக்காகச் சுமார் ₹11,30,500 கோடி வருவாய் ஈட்டும் வகையில் பயிற்சி நிறுவனத் துறை சீனாவில் உருவாகியுள்ளது. இந்தியாவில் இது போன்ற பயிற்சி நிறுவனத் துறையின் வருவாய் சுமார் ₹58,000 கோடியாக உள்ளது.

தென் கொரியாவில், நுழைவுத் தேர்வுகள் மாணவர்களின் தற்கொலை விகிதத்தை மிகவும் அதிகரித்துள்ளன. தமிழ்நாடு, நீட் (NEET) போன்ற தேசிய அளவிலான தேர்வுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது. இத்தேர்வுகள், கிராமப்புறங்களில் இருந்தும் பின்தங்கிய சமூக-பொருளாதாரப் பின்னணியில் இருந்தும் வரும் மாணவர்களுக்குக் கேடு விளைவிக்கின்றன; மொழித் தடைகளை மேலும் மோசமாக்குகின்றன; மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரித்து, தற்கொலைகளுக்கும் வழிவகுக்கின்றன. அதே நேரத்தில், “இத்தகைய தேர்வுகள் சமூக-பொருளாதார ரீதியாக வளர்ந்த வர்க்கத்தினருக்கே பயனளிக்கின்றன” என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மேலும், மாநிலப் பாடத்திட்டங்களுக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (CBSE) பாடத்திட்டங்களுக்கும் இடையிலான வேறுபாடுகள், நீட் தேர்வினால் மேலும் அதிகரிக்கப்படுகின்றன.

நுழைவுத் தேர்வுகளுடன் தொடர்புடைய பிரச்சனைகளில் ஒன்று, தனியார் பயிற்சி நிறுவனத் துறையின் வளர்ச்சி ஆகும். பொது நுழைவுத் தேர்வுகள் ஒரு பயிற்சித் துறையை உருவாக்குகின்றன. இவை 6-ஆம் வகுப்பு முதலே அதிக செலவு மிக்க பயிற்சி வகுப்புகளை உருவாக்கிவிடுகின்றன. இது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது என்பது போதுமான அளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது (The Hindu 2022). இந்தியா போன்ற ஒரு நாட்டில், ஒரு தனியார் “பயிற்சி நிறுவனத் துறை” நுழைவுத் தேர்வுகளுடன் பிரிக்க முடியாமல் இணைந்துள்ளது. 1990-களின் தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ந்து, இந்தியாவில் ஒரு பெரிய, ஒழுங்கமைக்கப்பட்ட பயிற்சி நிறுவனத் துறை வளர்ந்துள்ளது. இந்தப் பயிற்சி நிறுவனத் துறை, நுழைவுத் தேர்வு நடத்தும் கொள்கையை ஆதரிப்பதோடு, அதிலிருந்தே வளர்ந்து, அதை ஊக்குவித்தும் வருகிறது. உலகில் அதிக அளவில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி பெறும் மாணவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர். நீட் மற்றும் ஜேஇஇ (JEE) போன்ற தேர்வுகளுக்கான பயிற்சி மையமாக உருவெடுத்துள்ள நான்டெட் போன்ற நகரங்களில், ஒரு மாணவர் இத்தகைய தேர்வுகளுக்கான பயிற்சிக்குச் சராசரியாக சுமார் 5 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது.

பாரம்பரியமாகச் சமூகத்தில் உள்ள உயர் வர்க்கத்தினரே, இந்தப் பயிற்சித் துறை மூலமாகத் தங்கள் ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்டி வருகின்றனர். சமூகத்தில் நெடுங்காலமாக இருக்கும் மேல்தட்டு வர்க்கம், அரசியல் தலைவர்கள் மற்றும் வணிக சமூகத்தினரின் கூட்டணி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, இந்தப் பயிற்சித் துறையை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த தொழில் பல்வேறு சட்ட சீர்திருத்தங்களால் ஆதரிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகிறது. ஒரு இணையவழிப் பயிற்சி நிறுவனத் துறைகூட உருவாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்றின்போது பைஜூஸ் (BYJU’S) என்ற இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், உலகளவில் மிகப்பெரிய கல்வித் தொழில்நுட்ப நிறுவனமாக வளர்ந்தது. மேலும், நிதி ஆயோக், பைஜூஸ் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் இணைந்தது.

நுழைவுத் தேர்வுகளின் “தரம்” மற்றும் “வெளிப்படைத்தன்மை” ஆகியவை, “கடுமையான”, “தேசிய” அளவிலான சோதனைகள் மூலம் மட்டுமே உறுதி செய்யப்பட முடியும் என்ற அனுமானத்தின் காரணமாக, நுழைவுத் தேர்வுகள் சட்டபூர்வமான தன்மையைப் பெற்றுள்ளன. உண்மையில், இந்தியா போன்ற மிக மோசமான சமத்துவமற்ற சமூகத்தில், நுழைவுத் தேர்வுகள் ஏக்கமுள்ள தகுதியான மாணவர்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த கதவாக மாறுகின்றன. மாணவர்களின் எண்ணிக்கை கடினமான நுழைவுத் தேர்வுகளின் நேரடி விகிதாசாரமாகும். மேலும் மேலும் மாணவர்களைத் தகுதியற்றவர்களாக்கும் நோக்கில், தேர்வின் கடினத்தன்மை வேண்டுமென்றே அதிகரிக்கப்படுகிறது. மேலும், சில நேரங்களில் பாடப்புத்தகத்திற்கு வெளியிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதன் விளைவாக, ஒரு நுழைவுத் தேர்வில் தோல்வியடையும் பெரும்பான்மையான மாணவர்கள், அவமான உணர்விற்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் உள்ளாகின்றனர். இந்தியாவில் இளம் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அரிதான நிகழ்வல்ல. இந்தியாவின் பயிற்சி நிறுவனங்களின் தலைநகரம் என்ற பெயரைப் பெற்ற கோட்டா போன்ற நகரங்களில், தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறும் மாணவர்கள், நுழைவுத் தேர்வை எதிர்கொள்வதற்கு முன்பாகவே தற்கொலை செய்துகொள்கின்றனர். கோட்டாவில் பயிற்சி நிறுவன வணிகத்தின் மூலமாக கிடைக்கும் ஆண்டு வருவாய் சுமார் 5,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய நுழைவுத் தேர்வு முறை, பணக்காரர்கள் மற்றும் உயர்-நடுத்தர வர்க்கத்தினருக்கே சாதகமாக உள்ளது. ஹாங்காங்கில், இத்தகைய அதிகபடிநிலை கொண்ட பள்ளித் தேர்வுகளுக்கு எதிராகக் கிட்டத்தட்ட 40,000 பெற்றோர்கள் ஒரு முகநூல் (Facebook) மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். இத்தகைய அதீத கடினமான தேர்வுகள் கல்வியின் தரத்தை உறுதி செய்வதில்லை; மாறாக, பெரும்பான்மையான மாணவர்களைக் கல்வியிலிருந்து விலக்கி வைப்பதையே உறுதி செய்கின்றன.

நுழைவுத் தேர்வுகள் உயர் வர்க்கத்தினருக்கு மட்டும் சாதகமாக இருப்பது உலகளாவிய நிகழ்வாகும். 1923 முதல் அமெரிக்காவில் (US) கல்லூரிச் சேர்க்கைக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் கணினிமயமாக்கப்பட்ட தேர்வான ஸ்காலஸ்டிக் ஆப்டிடியூட் தேர்வில் (SAT), பணக்கார மாணவர்கள் தங்களின் குறைந்த வருமானம் உள்ள நண்பர்களை விட அதிக மதிப்பெண்கள் பெறுவது கண்டறியப்பட்டது (Hess 2019). இந்தத் தேர்வும் ஊழல், முறைகேடுகளில் இருந்து தப்பவில்லை. 2019-இல், முதன்மையான அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் சேர்க்கையில் நடந்த மோசடி குறித்து ஒரு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.

நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வில், நீட் தேர்வு முறையின் காரணமாகத் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஏழை எளிய, தமிழ்வழிக் கல்வி மற்றும் கிராமப்புறப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களின் சேர்க்கை குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்பது கண்டறியப்பட்டது (Government of Tamil Nadu 2021: 26).

கூட்டாட்சி அமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது

இத்தகைய ஒற்றைமய (centralised) தேர்வு முறைகள், இந்தியக் கூட்டாட்சி அமைப்பில் பதற்றத்தை உருவாக்கியுள்ளன. மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நீட் தேர்வுக்கு எதிராகப் பேசினார். “தேசிய அளவிலான தேர்வு, குஜராத் மாணவர்களின் நலனுக்கு எதிராக இருக்கும். இத்தகைய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு மாநில அரசுடன் கலந்தாலோசனை செய்ய வேண்டும். ஆனால் அது பின்பற்றப்படவில்லை,” எனப் பேசினார் (DNA 2011). தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராகப் பரவலான எதிர்ப்பு இருந்தபோதிலும், அதற்கு மாறாக, தமிழ்நாடு பாஜக பிரிவு, தேசியத் தலைமைக்குக் கட்டுப்பட்டு நீட் தேர்வு முறையை ஆதரித்துள்ளது. நீட் எதிர்ப்பின் விளைவாகத் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், எம்பிபிஎஸ் (MBBS), பல் மருத்துவம் (BDS) மற்றும் ஆயுஷ் (AYUSH) உள்ளிட்ட தொழில்முறைப் படிப்புகளுக்கான சேர்க்கைக்குப் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும், நீட் தேர்வு கிராமப்புற, தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு நியாயமான வாய்ப்புகளை மறுக்கிறது என்றும் குறிப்பிட்டது (Mukherjee 2024).

நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது, மாநில மற்றும் சிபிஎஸ்இ வாரியங்கள் நடத்தும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளைப் பொருத்தமற்றதாக ஆக்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டமோ, உயர்நிலைக் கல்விக்கான பொதுவான பாடத்திட்டமோ இல்லாததால், ஒருமுகப்படுத்தப்பட்ட தேர்வு சமமான முடிவுகளைத் தராது. பயிற்சி நிறுவனங்களுக்கும் சில கல்லூரிகளுக்கும் இடையேயான இணைப்பு, மாநில நிதியுதவி பெறும் கல்லூரிகளை வெறும் எலும்புக்கூடுகளாக மாற்றியுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வயது மாணவி எஸ். அனிதா, கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டும் இந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். உச்ச நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து, மனமுடைந்த அனிதா 2017-இல் தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வின் தீவிரம் அவரது உயிரைக் காவு வாங்கியது. 12-ஆம் வகுப்புத் தேர்வில் அவர் 1,200-க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அதே நேரத்தில் நீட் தேர்வில் 720-க்கு 86 (12.33%) மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். இயற்பியல் மற்றும் கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்திருந்தாலும், இந்த நீட் தேர்வினால் அவர் உயிர் பறிபோனது.

அனிதா ஒரு கிராமப்புற மாணவி. பொருளாதார ரீதியாக, அவர் ஒரு தினக்கூலித் தொழிலாளியின் மகள். சமூக ரீதியாக, அவர் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர். அனிதா சிறு பிள்ளையாக இருந்தபோதே அவரது தாய் இறந்துவிட்டார். அவரது வீட்டில் கழிப்பறை கூட இல்லை. அவர் ஒரு தமிழ்வழிப் பள்ளியில் படித்து, எந்தவொரு பயிற்சிப் பள்ளியின் உதவியும் இல்லாமல், 12-ஆம் வகுப்புத் தேர்வுகளில் தனது திறமையை நிரூபித்திருந்தார். இருப்பினும், அவர் நீட் தேர்வில் தோல்வியடைந்தார். நீட் தேர்வால் அனிதாவின் திறனை அளவிட முடியவில்லை. அவரது மரணத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு இயக்கம் வலுப்பெற்றது.

இந்தச் சூழலில், ஒன்றிய அரசு தேசியக் கல்விக் கொள்கை 2020-இல் “ஒரே நாடு, ஒரே தேர்வு” என்ற திட்டத்தைக் கொண்டு வந்து, நுழைவுத் தேர்வுகளை மேலும் கடுமையாக்கியது.

தேசிய தேர்வு முகமை என்பது உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கான சேர்க்கைகள் மற்றும் உதவித்தொகைகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கான ஒரு முதன்மை, நிபுணத்துவம் வாய்ந்த, தன்னாட்சி பெற்ற தேர்வு நிறுவனமாகச் செயல்படும் எனத் தேசியக் கல்விக் கொள்கை 2020 தெளிவாகக் கூறுகிறது (MHRD 2020).

பல தேர்வு வினாக்களின் (MCQ) போதாமை

அமெரிக்கா, சீனா அல்லது இந்தியா போன்ற நாடுகளில் நுழைவுத் தேர்வுகள் பல கேள்விகள் (MCQs) மற்றும் பதில்களை அடிப்படையாகக் கொண்டவை. இது ஒரு குறைபாடாகும். இது அகநிலை அல்லது மனப் பகுப்பாய்வுத் திறன்களை மதிப்பிடுவதற்கு எந்த வாய்ப்பையும் வழங்குவதில்லை. இத்தகைய இயந்திரத்தனமான தேர்வுகள், வெறும் மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்கின்றன மற்றும் நேரடி உற்பத்தித் தொழிலில் ஈடுபடாத உயர் வர்க்கத்தினரின் குழந்தைகளுக்குப் பயனளிக்கின்றன என்பதைச் சொல்லத் தேவையில்லை. இத்தகைய பல கேள்விகள் தேர்வு வடிவம், உண்மையான அறிவைக் காட்டிலும், வரையறுக்கப்பட்ட விளக்கங்கள் அல்லது ஒரே சரியான தீர்வு கொண்ட பகுப்பாய்வுப் பயிற்சிகளை மட்டுமே உள்ளடக்கியது என்று வாதிடப்பட்டுள்ளது (Chaudhuri 2022).

காஞ்சா அய்லய்யா (2007), இந்தியாவின் தாழ்த்தப்பட்ட சாதியினர் வாழ்க்கையைப் பாதுகாப்பாக நடத்தத் தேவையான உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும், உயர் சாதியினர் உற்பத்தி அல்லாத தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார். உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் வர்க்கங்களிலிருந்து வரும் மாணவர்கள், கோட்பாட்டுக் கல்வி அறிவை உண்மையான நடைமுறையுடன் இணைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மனப்பாடம் செய்வதை அடிப்படையாகக் கொண்ட நுழைவுத் தேர்வுகள், இந்தியாவில் உள்ள ஐஐடி போன்ற நிறுவனங்களில் மாணவர்களின் தரம் மற்றும் அந்த நிறுவனங்களின் தரம் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளன என்று கூறப்படுகிறது. இத்தகைய தேர்வுகளில், மாணவர்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில்லை; மாறாக, சரியான பதிலை யூகிக்கின்றனர் (Kumar 2018). இந்தியாவில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் எந்தவொரு ஆய்வகப் பரிசோதனைகளையும் முறையாகச் செய்யாத மாணவர்கள், இத்தகைய இயந்திரத்தனமான நுழைவுத் தேர்வுகள் மூலம் சேர்க்கைக்கு தகுதியானவர்களாக மாறுகிறார்கள்.  

நெட் மற்றும் நீட் தேர்வுகள் அதிக அளவில் ஒற்றைத்தன்மை கொண்டவையாக மாற்றப்படுவது, பரவலான ஊழலுக்கான வாய்ப்பை உருவாக்குகிறது என்பதை ஏற்கெனவே நிரூபித்துள்ளன. இந்த நுழைவுத் தேர்வுகள் உயர் வர்க்கத்தினரின் நலனுக்குப் பெரும் வாய்ப்பை உருவாக்குவதால், அவை அவசரமாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். இதற்காக, மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளின் நம்பிக்கையைப் பெற்று, இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையை மதிக்க வேண்டும். மேலும், நுழைவுத் தேர்வுகளை விசாரிக்க, ஏ.கே. ராஜன் குழுவின் அடிப்படையில் ஒரு ஆணையத்தை அமைக்க வேண்டும்.

இக்கட்டுரை, மே 10 அன்று வெளியான Economic and Political Weekly இதழில் திலீப் சவான் என்பவர் “Do Entrance Examinations Deliver Justice?” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

தமிழாக்கம்: சேது சிவன்