‘திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா 2026’ என்கிற பெயரில் ஒன்றிய அரசு ஒரு புதிய சட்டத்திருத்ததைக் கொண்டுவந்திருக்கிறது. இச்சட்டம் ஒருவரின் பாலினத்தை அவரே சுயமாக அடையாளப்படுத்திக் கொள்ளும் உரிமையைப் பறிக்கிறது. மேலும் இது திருநம்பிகள் மற்றும் இருநிலை சாராத (non-binary) மனிதர்களை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறது. அதேபோல, திருநர் மக்கள், அவர்களாகவே தேர்ந்தெடுத்து அமைத்துக்கொண்ட குடும்பங்களையும் குற்றவாளிகளாக இச்சட்டம் பார்க்கிறது. திருநர் சமூகத்தை அடக்கியாளும் அதிகாரத்தை மருத்துவக் குழுக்களுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் இச்சட்டத் திருத்தம் வழங்குகிறது. ‘பாதுகாப்பு’ என்கிற பெயரில் அரசியலமைப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று சமூக ஆர்வலர்களும், சட்ட வல்லுநர்களும் பல்வேறு எதிர்க்கட்சியினரும் கூறுகின்றனர்.
2014-ஆம் ஆண்டு தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) மற்றும் இந்திய ஒன்றிய அரசுக்கு இடையிலான வழக்கில், ஒருவரின் பாலினத்தை அவரே சுய-அடையாளம் செய்துகொள்ளும் உரிமையை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அப்போது, அத்தீர்ப்பு திருநர்களின் உரிமைகளுக்கான ஒரு திருப்புமுனையாக இந்தியாவில் கொண்டாடப்பட்டது. ஆனால், இப்போது திருநர்களுக்கான சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தம் அந்த முன்னேற்றத்தைத் தலைகீழாக மாற்றக்கூடும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மருத்துவப் பரிசோதனைகள் செய்துதான் பாலினத்தை நிரூபிக்கவேண்டும் என்கிற விதியைக் கொண்டுவந்துள்ளது இச்சட்டத் திருத்தம். அத்துடன், யார் திருநராக இருக்கலாம், யார் இருக்கக் கூடாது என்பதையும் தீர்மானிக்கும் அதிகாரங்களை இச்சட்டம் கொண்டிருக்கிறது.
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் மார்ச் 13 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்திய திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா 2026, ஏற்கனவே அமலில் இருக்கிற 2019-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டத்தில் புதிய மாற்றங்களைப் பரிந்துரைக்கிறது. இந்தத் திருத்தம் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் உறுதிப்படுத்தப்பட்ட பாலின சுயநிர்ணயக் கொள்கையை பலவீனப்படுத்துகிறது என்று சமூக ஆர்வலர்களும் சட்ட வல்லுநர்களும் வாதிடுகின்றனர். இது திருநம்பிகள், இருநிலை சாராத நபர்கள் மற்றும் அந்தப் பிரிவுகளையெல்லாம் தாண்டிய பல்வேறு வகையான மனிதர்களையும் முற்றிலுமாகப் புறக்கணிக்கிறது. மேலும் திருநர் மக்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசு மற்றும் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் வைக்கிறது. சமூக அமைப்புகள், சட்ட வல்லுநர்கள், சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு மற்றும் நாடு முழுவதும் உள்ள பாலின உரிமை கூட்டமைப்புகள் என பல தரப்பிலிருந்தும் இதற்கு உடனடியாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர்கள் அனைவரும் இந்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கோருகின்றனர்.
உண்மையில் இந்த மசோதா என்ன சொல்கிறது?
2019-ஆம் ஆண்டு முதன்முதலாக உருவாக்கப்பட்ட சட்டத்தின்படி, ‘திருநர்’ என்கிற வார்த்தை விரிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. திருநம்பிகள், திருநங்கைகள், இடைப்பாலினத்தவர், இருநிலை சாராத நபர்கள் மற்றும் கின்னார், ஹிஜ்ரா, அரவாணி, ஜோக்தா போன்ற சமூக-கலாச்சார அடையாளங்களைக் கொண்டவர்கள் என அனைவரும் அதில் உள்ளடக்கப்பட்டனர். முக்கியமாக, பிரிவு 4(2), ஒருவரின் பாலின அடையாளத்தைச் சுயமாகத் தீர்மானிக்கும் உரிமையை உறுதி செய்தது.
2026 மசோதா இவை அனைத்தையும் ஒரே அடியில் தகர்த்தெறிந்திருக்கிறது.
கின்னார், ஹிஜ்ரா, அரவாணி மற்றும் ஜோக்தா போன்ற குறிப்பிட்ட சமூக-கலாச்சார அடையாளங்களைக் கொண்டவர்கள் அல்லது குறிப்பிட்ட இடைப்பாலின மாறுபாடுகள் கொண்டவர்களுக்கு மட்டுமே புதிய வரையறை அங்கீகாரத்தை வழங்குகிறது. திருநம்பிகள் (trans men), திருநங்கைகள் (trans women) மற்றும் இருநிலை சாராத நபர்கள் (genderqueer) ஆகியோர் இந்த வரையறையிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளனர். “வெவ்வேறு பாலியல் விருப்பங்கள் மற்றும் சுய பாலின அடையாளங்களைக் கொண்ட நபர்களை இந்தச் சட்டம் உள்ளடக்காது, எப்போதும் உள்ளடக்கியிருக்கவும் இல்லை” என்று இது கூறுகிறது.
மேலும், பிரிவு 4(2)-ல் இருந்த பாலின அடையாளத்தைச் சுயமாகத் தீர்மானிக்கும் உரிமை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
சமூக-கலாச்சார அடையாளம் இல்லாதவர்கள் அங்கீகாரம் பெறுவதற்கான ஒரே வழி, ஏற்கனவே அறுவை சிகிச்சை மற்றும் ஹார்மோன் சிகிச்சைகள் போன்ற மருத்துவ நடைமுறைகளை மேற்கொண்டிருப்பது மட்டுமே. மேலும், இந்த மசோதாவின் நோக்கங்களும் காரணங்களும் எதுவாக இருக்கின்றன என்பது தெளிவாகவே தெரிகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இந்தச் சட்டத்தின் நோக்கம் “பல்வேறு பாலின அடையாளங்கள் அல்லது பாலின மாற்றத் தன்மை கொண்ட அனைவரையும் பாதுகாப்பது அல்ல” என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
“தொடக்கம் முதலே, பார்ப்பனிய மேலாதிக்க மற்றும் ஆணாதிக்கப் பார்வையிலேயே எங்களை அவர்கள் பார்த்து வந்திருக்கிறார்கள்” என்று திருநர் மக்களுக்கான இட ஒதுக்கீடு உரிமைகளுக்காகப் போராடிவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி திருநர் ஆர்வலர் கிரேஸ் பானு கூறுகிறார். “2016-ல், திருநர் என்றால் ஓரளவு ஆண், ஆனால் ஓரளவு பெண் அல்ல என்று அவர்கள் சொன்னார்கள். இப்போது அதே கருத்துடன் மீண்டும் வந்துள்ளனர். நாங்கள் திருநர்கள் என்று சொன்னோம். ஆனால் இப்போது அவர்கள் எங்களை ஹிஜ்ரா, அரவாணி என்று மட்டுமே அழைக்கிறார்கள் – அதிலும் அவர்கள் சரியான பெயர்களைக் கூடப் பயன்படுத்தவில்லை. அந்தச் சமூகத்தினர் கைவிட்ட பெயரான ‘அரவாணி’ ஏன் பட்டியலில் உள்ளது? தமிழ்நாட்டில், அரசுப் பதிவுகளில் கூட ‘திருநங்கை’ என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் ஏன் திருநங்கை மற்றும் திருநம்பி என்ற பெயர்களை முழுமையாகத் தவிர்த்துவிட்டார்கள்?” என்று கேள்வி எழுப்புகிறார் கிரேஸ் பானு.
இதற்கான பதில் ஒரு சித்தாந்தத்துடன் தொடர்புடையுது என்றும் அவர் குறிப்பிடுகிறார். “இது ஒரு முழுமையான இந்துத்துவ மசோதா. இது அவர்களின் சித்தாந்தத்தை எங்கள் ஒப்புதல் இல்லாமல் எங்கள் மீது திணிக்கிறது. ஹிஜ்ரா மற்றும் கின்னார் அவர்களுடைய இந்துத்துவ நூல்களில் இடம்பெறுகின்றன. எனவே அவை பட்டியலில் உள்ளன. எங்களின் அடையாளங்கள் அவர்களின் கற்பனைக்கு ஒத்துப்போகவில்லை, எனவே நாங்கள் அழிக்கப்படுகிறோம்” என்று விளக்குகிறார் கிரேஸ் பானு.
‘நாங்கள் எங்கே சேருவோம்?’: திருநம்பிகள், இருநிலை சாராதவர்கள் மற்றும் பிறப்பால் பெண்களாக அடையாளப்படுத்தப்பட்டவர்களின் புறக்கணிப்பு
இச்சட்டத்திருத்தம் செய்திருக்கும் மறுவரையறையினால், உடனடியாகப் பாதிக்கப்படுபவர்கள் திருநம்பிகள் மற்றும் பிறப்பால் பெண்ணாக அடையாளம் காணப்பட்டுப் பின் பாலின மாற்றமடைந்தவர்கள் ஆவர். மணிப்பூரில் உள்ள ‘நுபாமன்பா’ (Nupamanba) என்ற கலாச்சார அடையாளத்தைத் தவிர, இந்தியாவில் வேறு எங்கும் திருநம்பிகளுக்கு என்று தனி சமூக-கலாச்சாரம் இல்லை என்று சென்னையைச் சேர்ந்த திருநம்பி ஃப்ரெட் ரோஜர்ஸ் கூறுகிறார். நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள், இந்த மசோதாவின் கற்பனையில் கூட இல்லை.
“அப்படியானால் நாங்கள் எங்கே சேருவோம்? இந்த மசோதா எங்களை முழுமையாகத் துடைத்தெறிகிறது” என்று அவர் கூறுகிறார். “2019 சட்டம் திருநம்பிகள், திருநங்கைகள் மற்றும் இருநிலை சாராதவர்களைத் தெளிவாக உள்ளடக்கியிருந்தது. இந்த மசோதா அந்த மூன்றையும் நீக்கிவிட்டது.”
கல்வித் துறையில் பணிபுரியும் ராட்ஸ் (Radzz) என்பவர், இந்த வரையறையின் மருத்துவமயமாக்கலில் உள்ள ஆபத்தைச் சுட்டிக்காட்டுகிறார். “இது பிழைத்திருப்பதற்காக எங்களை ஏதோ ஒரு குறிப்பிட்ட பாலின வரையறைக்குள் அடங்கும்படி கட்டாயப்படுத்துகிறது. எங்களுக்கு விருப்பமில்லாத சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய அழுத்தத்தை இது உருவாக்குகிறது. மேலும் இந்த சிகிச்சைகளில் பலவும், தீவிரமான மனநல பாதிப்புகளை உண்டாக்கக் கூடியவை.” குறிப்பாகத் திருநம்பிகளுக்கு, இந்தியாவில் உடல் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை என்பது அதிக ஆபத்து நிறைந்தது மற்றும் பலருக்கும் எட்டாதது. “திருநம்பிகள் குறித்து இந்தச் சட்டத்தில் எதுவுமே இல்லை. ஒன்றுமே இல்லை.”
இந்த மசோதா, அனைத்தையும் அனைவரையும் பின்னோக்கிச் இழுத்துச்செல்லும் தன்மையைக் கொண்டுள்ளது. சுயமாக அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் “ஒருபோதும் சட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை” என்ற நிபந்தனை, தற்போதுள்ள அடையாள அட்டைகளை ஆபத்தில் தள்ளுகிறது. கோதி (kothi) சமூகத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணரான டாக்டர் கார்கி இதைச் சுட்டிக்காட்டினார். “இந்தச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு வழங்கப்பட்ட எந்தவொரு அடையாள அட்டையும் இனிமேல் பறிக்கப்படலாம். நீதிமன்றப் போராட்டத்தின் மூலம் அடையாள அட்டை பெற்றவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் போராட வேண்டியிருக்கும். ஏற்கனவே எங்களிடம் உள்ளதை இழக்கும் அபாயமும் உள்ளது.”
மேலும், “சுய விருப்பத்திற்கு அப்பாற்பட்ட உயிரியல் காரணங்கள்” கொண்டவர்களுக்கு மட்டுமே சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற இந்தத் திருத்தத்தின் அமைப்பு, பாலின அடையாளத்தைச் சுயநிர்ணயம் செய்வதைச் செல்லாததாக்கும் அபாயம் இருப்பதாகச் சமூக உறுப்பினர்கள் வாதிடுகின்றனர்.
நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நிரூபிக்க ஐந்து நிலைகள்: புதிய அதிகாரத்துவச் சிக்கல்
2019 சட்டத்தின் கீழ், ஒரு திருநர், சுய-அஃபிடவிட் மற்றும் ஆதார் அட்டை மூலம் அடையாளச் சான்றிதழைப் பெற முடியும். ஆனால் 2026 மசோதாவின் கீழ், அந்த செயல்முறை ஐந்து நிலைகளைக் கொண்ட ஒரு கடினமான சோதனையாக மாற்றப்பட்டுள்ளது என்று திருநர் வழக்கறிஞரும் சட்ட ஆய்வாளருமான கண்மணி ரே விளக்குகிறார். முதலில், விண்ணப்பதாரர் ஏற்கனவே ஒரு மருத்துவ முறையை மேற்கொண்டிருக்க வேண்டும். பிறகு ஒரு மருத்துவக் குழுவின் முன் ஆஜராக வேண்டும். அவர்களின் பரிந்துரை மாவட்ட ஆட்சியருக்குச் செல்லும். மாவட்ட ஆட்சியர் திருப்தி அடையவில்லை என்றால், அவர் பெயர் குறிப்பிடப்படாத ‘மருத்துவ நிபுணர்களுக்கு’ அந்த விண்ணப்பத்தை அனுப்பலாம். அதன் பின்னரே மாவட்ட ஆட்சியர் அந்தச் சான்றிதழை வழங்குவார் அல்லது மறுப்பார்.
“மருத்துவக் குழு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் திருப்தி அடையவில்லை என்றால் மற்றொரு மருத்துவ நிபுணர், மீண்டும் மாவட்ட ஆட்சியர். இவை அனைத்திற்கும் மேலாக, நீங்கள் முதலில் ஒரு மருத்துவ முறையை மேற்கொண்டிருக்க வேண்டும். ஒரு திருநர் சான்றிதழைப் பெற ஐந்து நிலைகளைத் தாண்ட வேண்டும்” என்கிறார் கண்மணி. “அதிகாரத்தைத் திருநர்களின் கைகளில் கொடுப்பதே முன்னர் நோக்கமாக இருந்தது. இப்போது நீங்கள் அதைப் பறித்து நிறுவனங்களிடம் கொடுக்கிறீர்கள்”
இந்த மருத்துவக் குழு எவ்வாறு அமையும் என்பது வரையறுக்கப்படவில்லை – இது ஒரு தலைமை மருத்துவ அதிகாரியால் வழிநடத்தப்படும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. இதில் உள்ள நடைமுறைச் சிக்கலை கண்மணி சுட்டிக்காட்டுகிறார்: “ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவமனையிலும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இல்லை. இந்த நாட்டில் எத்தனை அரசு மருத்துவமனைகளில் ஹார்மோன் நிபுணர்கள் (Endocrinologists) உள்ளனர்? தெருவில் வாழும் ஏழைத் திருநர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்லவே பணம் இல்லை. இதில் பலமுறை பல அலுவலங்களுக்கு அவர்கள் எப்படிச் செல்ல முடியும்?”
ஃப்ரெட் இதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறார்: தன் குடும்பத்திடம் இன்னும் வெளிப்படையாகப் பேசாத ஒரு திருநம்பி, தன் பாலினத்திற்கு ஏற்ப உடை அணிய முடியாமல் போகலாம். அப்படிப்பட்டவருக்கு ஒரு மனநல மருத்துவர் தோற்றத்தை மட்டுமே வைத்துச் சான்றிதழ் வழங்க மறுக்கலாம். “இதன் காரணமாக, அவருக்குச் சுகாதாரச் சேவைகளும், அரசியலமைப்பின் 14, 15, 19 மற்றும் 21 ஆகிய பிரிவுகளின் பாதுகாப்பும் மறுக்கப்படலாம். எங்களைப் பற்றி எதுவுமே தெரியாத மருத்துவ நிபுணர்களிடம் நாங்கள் யார் என்பதை நிரூபிக்கும் கூடுதல் சுமையை இந்த மசோதா எங்கள் மீது சுமத்துகிறது” என்கிறார் ஃப்ரெட்.
மருத்துவத் துறையிலேயே பணியாற்றும் கார்கி, இதில் உள்ள பாரபட்சத்தை உறுதிப்படுத்துகிறார்: “எந்த மருத்துவரும் ஒரு கோதி நபருக்குச் சான்றிதழ் வழங்க மாட்டார்கள். குறிப்பாக நாங்கள் பெரும்பாலும் ஆண்களைப் போலவே தோற்றமளிப்பதால். தோற்றத்தை வைத்தே அவர்கள் தீர்ப்பளிக்கிறார்கள். அவர்களின் அளவுகோல்களுக்குள் நீங்கள் வரவில்லை என்றால், உங்களுக்குச் சான்றிதழ் கிடைக்காது”
இதனுடன் புதிய மருத்துவக் கண்காணிப்பு முறையும் இணைக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட பிரிவு 7, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களின் விவரங்களை மருத்துவ நிறுவனங்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு திருநர் அடையாள ஆவணத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் பழைய வாய்ப்பு நீக்கப்பட்டுள்ளது. இனி பாலின மாற்றம் செய்பவர்கள் அனைவரும் ஆண் அல்லது பெண் என்ற அடையாளத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். “எனது தனிப்பட்ட மருத்துவ விவரங்கள் மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்கப்படும்” என்கிறார் கண்மணி. “அவர்கள் மருத்துவ ரகசியத்தையும் தனியுரிமை உரிமையையும் மீறும் ஒரு கண்காணிப்பு அமைப்பை உருவாக்குகிறார்கள்”
பராமரிப்பை குற்றமாக்குதல்: தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்கள் மீதான தாக்குதல்
பிரிவு 18, “கட்டாயப்படுத்தப்பட்ட திருநங்கை அடையாளம்” என்று அழைக்கப்படும் செயலுக்குக் கடுமையான குற்றவியல் தண்டனைகளை அறிமுகப்படுத்துகிறது. ஒரு குழந்தையைக் கடத்தி, அவர்களைத் திருநர் அடையாளத்தை ஏற்கக் கட்டாயப்படுத்தும் நோக்கில் உடல் ரீதியான தீங்கு விளைவித்தால், கட்டாய ஆயுள் தண்டனை வழங்கப்படும். எந்தவொரு நபரையும் திருநராகக் காட்டிக் கொள்ளவும், பிச்சை எடுக்கவும் அல்லது அடிமைப்படுத்தவும் கட்டாயப்படுத்தினால் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்; இது ஒரு குழந்தையாக இருந்தால், பத்து முதல் பதினான்கு ஆண்டுகள் வரை தண்டனை உண்டு.
உண்மையான கடத்தல் செயல்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதைச் திருநர் சமூக உறுப்பினர்கள் வரவேற்கின்றனர். ஆனால் இந்தச் சட்டத்தின் வரைவு, தங்குமிடங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் ‘கரானா’ (gharana) முறையை – அதாவது பிறந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் பாலின மாறுபாடு கொண்ட மக்களைத் தாங்கிப் பிடிக்கும் பல நூற்றாண்டுகள் பழமையான குடும்ப அமைப்பை – குறிவைக்கும் வகையில் மிக விரிவாக இருப்பதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.
“இந்த மசோதா ஹிஜ்ரா, அரவாணி, கின்னார் மற்றும் ஜோக்தா சமூகங்களுக்கு உரிமை வழங்குவதாகக் கூறுகிறது. மறுபுறம், அவர்களை ஆதரிக்கும் அமைப்புகளையே குற்றமாக்குகிறது” என்கிறார் ஃப்ரெட். “ஒரு 14 அல்லது 15 வயது சிறுவன் குடும்ப வன்முறையிலிருந்து தப்பி ஒருவரிடம் தஞ்சம் புகுந்தால், அவரைத் தஞ்சம் கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம். நீங்கள் அவர்களைப் பாதுகாக்க விரும்புவதாகச் சொல்கிறீர்கள். ஆனால் அவர்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பையே குற்றமாக்குகிறீர்கள்”
குழந்தைகளை வளர்த்துப் பாதுகாத்ததற்காகவும், நல்சா (NALSA) தீர்ப்புக்காகப் போராடியதற்காகவும் அறியப்படும் கௌரி சாவந்த் என்ற ஹிஜ்ரா ஆர்வலரின் வழக்கை ராட்ஸ் நினைவுபூர்வமாகக் குறிப்பிடுகிறார். “அவரைப் போன்ற ஒருவர் இன்று குழந்தைகளை வளர்த்தால், யாராவது ஒரு பெற்றோர் வந்து அவர் குழந்தையைத் துஷ்பிரயோகம் செய்ததாகவோ அல்லது கட்டாயப்படுத்தியதாகவோ புகார் அளிக்கலாம். இது குழந்தைகளைத் திருநர்கள் கடத்துகிறார்கள் என்ற பழைய தவறான எண்ணங்களை மீண்டும் உருவாக்குகிறது. மேலும் வன்முறை மிகுந்த வீடுகளில் இருந்து தப்பிக்கும் திருநர்களுக்குத் தகுந்த குடும்பங்கள் கிடைப்பதைத் தடுக்கிறது.”
கண்மணி மேலும் கூறுகையில், இதன் தாக்கம் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்கிறார்: “தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஏற்கனவே சிறுவர்களைத் தஞ்சம் கொடுக்கப் பயந்து திருப்பி அனுப்புகின்றன. இந்தச் சட்டம் நிலைமையை இன்னும் மோசமாக்கும். ஏற்கனவே கடத்தல் மற்றும் சுரண்டலைத் தடுக்க சட்டங்கள் உள்ளன. இந்தத் திருத்தம் தேவை என்பதற்கு எந்தத் தரவுகளும் இல்லை. இதை யார் கேட்டார்கள், என்ன ஆதாரத்தின் அடிப்படையில் இதைக் கொண்டு வருகிறார்கள் என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும்.”
இடைப்பாலினச் சமூகம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுதல்
இந்த மசோதாவில் இடைப்பாலின (intersex) மக்கள் நடத்தப்படும் விதம் குறித்த கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இடைப்பாலின மக்கள் திருநர் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவது மட்டுமல்லாமல், அவர்களின் இருப்பு திருநர்களின் அடையாளத்தைச் செல்லாததாக்க ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இடைப்பாலின உரிமைகள் கூட்டமைப்பின் ஆர்வலர் மோமோ (Momo) கூறுகையில்: “இந்த மசோதா பாலியல் பண்புகளையும் (sex characteristics) பாலின அடையாளத்தையும் (gender identity) ஒன்றாகக் குழப்புகிறது. இவை இரண்டும் வெவ்வேறு யதார்த்தங்கள். இடைப்பாலின மக்கள் உடல் ரீதியான உயிரியல் மாறுபாடுகளால் இருக்கிறார்கள். திருநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பாலினத்திலிருந்து வேறுபட்ட பாலின அடையாளத்தைக் கொண்டுள்ளனர். இவை இரண்டும் வேறு வேறானவை. இவற்றை ஒன்றாகக் குழப்புவது இடைப்பாலின மக்கள் சந்திக்கும் தனித்துவமான பிரச்சனைகளை மறைத்துவிடுகிறது.”
“சுய விருப்பத்திற்கு அப்பாற்பட்ட உயிரியல் காரணங்கள்” கொண்டவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு என்பது திருநர்களின் அடையாளத்தைப் புறக்கணிக்கப் பயன்படுத்தப்படுகிறது. “இந்த மொழி, இடைப்பாலின மக்களின் இருப்பைக் கொண்டு திருநர்களின் அடையாளத்தைச் செல்லாததாக்க முயல்கிறது. இது இரண்டு சமூகங்களையும் ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்துகிறது. ஏற்கனவே எங்கள் பக்கங்களுக்கு இணைய வழியில் மிரட்டல்களும் தாக்குதல்களும் வருகின்றன” என்கிறார் மோமோ. “திருநர்களுக்கு எதிரான எந்தவொரு சட்டமும் இடைப்பாலின மக்களுக்கும் எதிரானதுதான்..”
யாரும் கேட்காத ஒரு சட்டம்
கண்மணி ரே அரசியலமைப்புச் சிக்கலை மிகத் தெளிவாகக் கூறுகிறார்: “உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, அதற்கு எதிராக ஒரு மசோதாவைக் கொண்டுவர முடியுமா? அவர்களால் முடியும். ஆனால் அது அடிப்படை உரிமை மீறலுக்காக உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ சவாலுக்கு உட்படுத்தப்படும். நால்சா வழக்கில் பாலின சுயநிர்ணயம் என்பது அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நாங்கள் இதை நாடாளுமன்றத்திலும், பின்னர் நீதிமன்றத்திலும் எதிர்த்துப் போராடுவோம்”
கேரளாவின் ‘சம்யுக்த சமர சமிதி’ இந்த மசோதாவை “உச்ச நீதிமன்றத்தின் நால்சா தீர்ப்பிற்கு எதிரானது” என்று கூறியுள்ளது. அக்கை பத்மஷாலி உட்படப் பல ஆர்வலர்கள் கையெழுத்திட்டுள்ள கர்நாடக மாநில பாலின சிறுபான்மையினர் கூட்டமைப்பு, இதை “பல ஆண்டுகளாகப் போராடித் திருநர்கள் பெற்ற உரிமைகளைப் பறிக்கும் ஒரு அதிர்ச்சிகரமான முயற்சி” என்று குறிப்பிட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் புதிய அதிகாரங்கள் “சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு சமமானது” என்று சிபிஐ(எம்) அரசியல் தலைமை கூறியுள்ளது. “பாஜக அரசு, இந்துத்துவப் பார்வையின் அடிப்படையில், ஒரு பார்ப்பனியப் பாலின மற்றும் சமூக ஒழுங்கைத் திணிக்க முயல்கிறது. இந்த மசோதா ஒரு பிற்போக்குத்தனமான மனுவாதிப் பார்வையைப் பிரதிபலிக்கிறது,” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
“இந்தச் சமூகத்தில் யாரும் இதை கேட்கவில்லை. அரசு இதை வெளிப்படுத்த வேண்டும். 2019-க்குப் பிறகு திருநங்கைகள் தொடர்பான கடத்தல் அதிகரித்துள்ளதாக எந்தத் தரவு கூறுகிறது? அத்தகைய தரவு எதுவும் என்னிடம் இல்லை” என்று கண்மணி கேள்வி எழுப்புகிறார்.
“ஒரு மசோதா அல்லது கொள்கை என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும். மக்களைக் கொல்வதற்காக இருக்கக் கூடாது. அவர்கள் கல்வி உரிமைகள் பற்றிப் பேசுவதில்லை. வேலைவாய்ப்பு உரிமைகள் பற்றிப் பேசுவதில்லை. திருநர் குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது என்பது பற்றிப் பேசுவதில்லை. அவர்களுடைய குறிக்கோளை அமல்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். அந்தக் குறிக்கோளுமே கூடத் தவறாகத்தான் இருக்கிறது” என்று கிரேஸ் பானு மிக எளிமையாகக் கூறுகிறார்.
ஃப்ரெட் இந்த மசோதாவின் அடிப்படைத் தோல்வியைச் சுட்டிக்காட்டுகிறார்: “திருநர்கள் மற்றும் பாலின மாறுபாடு கொண்ட சமூகங்கள் குறித்த மிகக் குறைந்த புரிதலையே இது காட்டுகிறது. நலிந்த மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய ஒரு அமைச்சகத்திலேயே புரிதலே இவ்வளவு மோசமாக இருந்தால், சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்? தங்களைவிட சிறுபான்மைச் சமூகத்தினருக்கு அதிகம் தெரிந்திருக்காது என்று அமைச்சகம் நினைத்திருக்கிறதோ என்னவோ. இது ஒரு பொதுவான ‘மீட்பர்’ மனப்பான்மை என்பதைத் தாண்டி வேறேதும் இல்லை. சமூக நீதிக்கான பார்வை இங்கே முற்றிலும் தொலைந்துவிட்டது. இது அனைத்தையும் அழிவுக்குக் கொண்டுசெல்லும் நடவடிக்கை தவிர வேறொன்றுமில்லை”
“திருநராக அடையாளம் காணப்படுவதற்கு ஒரு முறையான ‘நல்ல’ வழி இருக்கிறது என்று கூறுகிறது இச்சட்டத் திருத்தம்” என்கிறார் எழுத்தாளர் நாதிகா. “நீங்கள் ஒன்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஹிஜ்ரா போன்ற நபராக இருக்க வேண்டும், இல்லையென்றால் நீங்கள் திருநரே கிடையாது என்கிறத் இச்சட்டத் திருத்தம்”
இந்த மசோதா திருநர் சமூகத்தின் பன்முகத்தன்மையைக் குலைக்கிறது என்று நாதிகா வாதிடுகிறார். “முன்பு சமூகத்திற்குள் வர்க்கம், சாதி, பிராந்தியம் எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும், நாம் அனைவரும் ஒரு பெரிய சமூகத்தின் பகுதி என்ற உணர்வு இருந்தது. இப்போது எந்த அடையாளம் ஏற்கத்தக்கது என்பதை அரசே தீர்மானிக்கிறது”
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு போன்றவற்றுக்காகத் திருநர்கள் போராடி வரும் வேளையில், இந்த மசோதா அந்த இயக்கத்தைப் பின்னோக்கித் தள்ளும் அபாயம் இருப்பதாகவும் நாதிகா கூறுகிறார்.
“எங்களைப் பின்னோக்கி இழுக்கும் எதையும் நாங்கள் ஏற்க மாட்டோம்” என்கிறார் நாதிகா. “நாங்கள் அதை எதிர்த்துப் போராடுவோம்”
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்டு, இப்போது ஜனாதிபதியால் ஒப்புதலும் கொடுக்கப்பட்டு அமலாகியும்விட்டது இச்சட்டத் திருத்தம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் அங்கீகரித்த சுய உரிமைக் கொள்கையைத் தலைகீழாக மாற்றும் இந்தச் சட்டத் திருத்தம் திரும்பப் பெறவேண்டும் என்று கூறி சமூக ஆர்வலர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

– அசீஃபா ஃபாத்திமா
நன்றி – The News Minute