சமூகம்பெண்ணியம்

மாலை போட்ட குடும்பங்களில் வாழும் பெண்களின் குரலைக் கேட்டிருக்கிறீர்களா?

Maalai

ரொம்ப நாளாக ஒரு சந்தேகம். ஒரு செயலைத் தொடர்ந்து 21 நாட்கள் செய்தால் அது பழக்கமாகிவிடும் என்கிறார்களே! ஆனால் 48 நாட்கள் அமைதி, பக்தி, போதைப் பொருட்களுக்குத் தடை என்று இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு அவை ஏன் தொடர் பழக்கமாக மாறுவதில்லை எனத் தேடியபோதுதான் தெரிந்தது, இப்போது அது 21 நாட்கள் இல்லையாம், 66 நாட்கள் என்று! லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (UCL) நடத்திய ஆய்வின்படி, ஒரு செயல் தானாகவே நடக்கும் பழக்கமாக மாறச் சராசரியாக 2 மாதங்கள் (66 நாட்கள்) ஆகுமாம்.  

தமிழ் மாதங்களில் சிறப்பான மாதமாகக் கார்த்திகையும் கருதப்படுகிறது.  இருளே போ! ஒளியே வா!” என்பதைப் போல வாழ்வை வளமாக்கும் தீப வழிபாடுகள், கோவில் வழிபாடுகள், விரதங்கள், திருமணங்கள் அரங்கேறும் மாதமாகக் கார்த்திகை மாதம் அமைந்துள்ளது. 

சரி, அறிவியல் ரீதியாக ஏதும் உள்ளதா என்று பார்த்தால், இது குளிர்காலத்தின் தொடக்கம்; பகல் நேரங்கள் குறைந்து இரவு நேரம் அதிகமாகும் தன்மை மற்றும் இயற்கையின் மாற்றங்களால் கருமையான மேகங்களைக் கொண்டு, அதிகளவு மழை பெய்யும் கார்காலமாகவும் உள்ளது. அதுமட்டுமா! தமிழகத்தின் தேசிய மலரான காந்தள் மலர்கள் கார்த்திகை மாதத்தில்தான் பூக்கும். அதனால்தான் செங்காந்தள் பூவிற்கு “கார்த்திகைப்பூ” என்ற பெயரும் உள்ளது. ஆனால் இதையெல்லாம் விட ஒரு சிறப்பு என்னவென்றால், கார்த்திகை பிறந்தால் ஆண்களில் பலர் புனிதமாகிவிடுவார்கள். காரணம், சபரிமலை ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதமிருந்து வழிபாடு செய்வதால்! 

ஆண்கள் மாலையணிய எந்தவித முன்னேற்பாடுகளையும் அவர்களே செய்து கொள்ள வேண்டியதில்லை, அவசியமுமில்லை. அன்றைய பொழுது அதிகாலை குளித்துவிட்டு மாலை அணிந்து கொள்ள வேண்டியதுதான் அவர்களுடைய முக்கியப் பணி.

ஆனால் கணவன் மாலையணியப் போகிறார் என்றால், வீட்டில் இருக்கும் பெண்கள் படும் பாடு இருக்கே… பத்து நாட்களுக்கு முன்பிருந்தே பெண்கள் தயாராகத் தொடங்க வேண்டும். மற்ற எந்தத் தெய்வத்திற்கும் இல்லாத அளவு ஐயப்பனுக்குக் கூடுதல் சுத்தம் தேவைப்படுகிறது. அதனால் வீட்டை ஒட்டடை அடித்து, சமையல் அறையில் உள்ள அனைத்துப் பாத்திரத்தையும் கழுவி, அதுநாள் வரை பயன்படுத்திய போர்வை, தலையணை உறை, ஆடைகள் என அனைத்தையும் துவைத்து, சாமி அறைப் பொருட்கள் அனைத்தையும் கழுவிச் சுத்தம் செய்திட வேண்டும். இவ்வளவையும் பெண்கள் செய்து முடித்திட, ஆண்கள் காலை எழுந்து மாலை அணிந்துவிட்டு வருவார்கள். அவர்கள் வருவதற்குள் சர்க்கரைப் பொங்கல் செய்து பூஜை அறையை அலங்கரித்து வைக்க வேண்டும். பிறகு கணவர் வந்து வழிபாடு செய்து தனது விரதத்தைத் தொடங்க ஆரம்பிப்பார்.

சில குடும்பங்களில் பெண்கள் விருப்பப்பட்டு இத்தகைய வழிபாட்டு வேலைகளைச் செய்வார்கள். சில குடும்பங்களில் பெண்களுக்கு விருப்பம் இருக்கிறதா, இல்லையா என்று ஆண்கள் கேட்பதில்லை.

“நான் இந்த வருசம் மாலை போடப் போறேன், வீட்டச் சுத்தம் செஞ்சுடு…” என்று உத்தரவிடுவார்கள். உடனே கணவனின் அதிகாரக் குரலுக்குக் கட்டுப்பட்டு, தன்னால் முடியாவிட்டாலும், கடவுளைப் பகைத்துக் கொள்ள விரும்பாமலும் வேறு வழி இல்லாமலும் ஏற்றுக்கொள்ளும் பெண்கள் அதிகம். இதில் சில சலுகைகளும் பெண்களுக்கு உண்டு. அந்த நாட்களில் ஆண்களின் குணாதிசயம் மிகவும் மென்மையாக மாறிவிடும். மது, புகைப்பழக்கம் உள்ளவர்கள் அந்தப் பழக்கத்திற்கு விடுப்பு கொடுப்பார்கள். பெண்ணாசை கொண்டவர்கள் உத்தமனாக மாறிவிடுவார்கள். கெட்ட வார்த்தை பேசுபவராக இருந்தால் அத்தகைய பேச்சுகளை விடுத்து, “சாமி சரணம், சாமி சரணம்” என்று உச்சரித்துக் கொண்டிருப்பார்கள். சிலர் அதற்கும் ஒரு படி மேல் சென்று, குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் எனப் பார்க்கும் அனைவரையும் “சாமி”, “வாங்க சாமி”, “போங்க சாமி” என்று மிகவும் மரியாதையாக அழைத்துக் கொண்டிருப்பார்கள். மிக மிக மோசமான ஆண்களைக் கணவராக வாய்க்கப் பெற்ற பெண்களுக்கு அந்த மாதம் பொன்னான மாதமாகவும் அமைந்துவிடுகிறது. காரணம் மது, புகை, மோசமான வார்த்தைகள், அடி உதையிலிருந்து தப்பித்துவிடலாம். மேலும் பெரும்பாலான பெண்களுக்குப் பிள்ளைகள் பிறந்து, வயது அதிகரிக்கத் தொடங்கும்போது ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதாலும், வேலைப்பளு, குடும்பச் சூழல் போன்றவை தரும் மன இறுக்கத்தாலும் தாம்பத்தியத்தில் பெரும்பாலும் விருப்பம் இருப்பதில்லை. ஆனாலும் கணவன் வேறொரு பெண்ணை நாடிவிடக்கூடாது என்பதற்காகவும், அது ஒரு மனைவியின் கடமை என்ற எண்ணத்தாலும் கணவனுக்கு இணங்கிச் செல்வார்கள். அப்படி “கடமையே” என்றிருக்கும் தாம்பத்தியத்திற்கும் விடுதலை என்பது பல பெண்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தந்துவிடுகிறது.

ஒரு ஆண் மாலை அணிவதால் பெண்களுக்கு எந்த மாதிரியான இன்னல்கள், உழைப்புச் சுரண்டல்கள் நடக்கின்றன? சமூகம் பெண்களுக்கு எப்படியெல்லாம் மனரீதியான துன்புறுத்தலைத் தருகிறது? என்பதை அவசியம் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

எனது கணவருக்கு மாலை அணியும் வழக்கம் உள்ளது. தொடர்ந்து 29 வருடங்களாக அதனைப் பின்பற்றி வருகிறார். சிறு வயதில் அவரது அப்பாவுடன் சென்று வந்ததால், அப்பாவின் மறைவிற்குப் பிறகு அவரது நினைவாகத் தொடர்ந்து வருகிறார். எனக்குப் பெரிய அளவில் இறைபக்தி கிடையாது. இருந்தாலும் மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்கிறேன் என்பதால், எனக்கு அதில் விருப்பம் உள்ளதோ இல்லையோ, இணையரின் விருப்பத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

“வீட்டைச் சுத்தம் செய்துதான் ஆக வேண்டும் என்றோ, தினமும் இருவேளை குளிக்க வேண்டும், நீயும் விரதம் இருக்க வேண்டுமென்றோ! கணவர் கூறியது கிடையாது. “உனக்கு விருப்பம் இருந்தால் செய்”, அவ்வளவுதான். ஆனால் “விருப்பப்படி நடக்கும் சுதந்திரம் கூடப் பல பெண்களுக்குக் கிடைப்பதில்லை” என்பதில் வருத்தமே!

நான் மாலை அணியாததால் என்னுடைய தோழிகள் மற்றும் அண்டை வீட்டார்கள் என்னிடம் சில கேள்விகளைக் கேட்டு, கோபத்தின் உச்சாணியில் என்னை அமர்த்தி அழகு பார்த்தார்கள். எனது அண்டை வீட்டில் உள்ள 50 வயது மதிக்கத்தக்க அம்மா ஒருவர், 

“என்னம்மா மதிய நேரத்துல சாம்பிராணி போட்டு காக்காவுக்குச் சாப்பாடு வைக்கிறதே இல்லையா? காக்காவ கூப்பிடற மாதிரியே தெரியலையே…” என்றார். 

“என் புருஷன் பார்க்குற வேலைக்குக் காலையிலேயே மதிய சாப்பாட்டையும் சேர்த்துச் சமைச்சுக் கொடுத்துடுவேன்… 

மதியம் சமைக்கிற வேலை இல்ல…” என்றேன். 

“உன் வீட்டுக்காரர் இல்லனா என்ன? நீ சமைச்சுச் சாம்பிராணி போட்டு, காக்காவுக்கு வைக்கணும்” என்று கூறினார். அந்த அம்மா கூறிய அறிவுரையின்படி கணவர் சாப்பிடுவதை விடக் காக்கா சாப்பிடுவதுதான் முக்கியம் என்பதையும், யாருமில்லாத கடையில் டீ ஆத்துவது எப்படி என்பதையும் புரிந்துகொண்டு அங்கிருந்து நழுவிவிட்டேன்.

சரி, அவர்தான் வயதான பெண்மணி, அவர் வளர்ந்த காலம் மற்றும் சூழல் அவரை அப்படிப் பேச வைக்கிறது என்று பார்த்தால், என்னோடு சிறுவயதிலிருந்து ஒன்றாகப் படித்து விளையாடிய பட்டதாரி தோழி, தற்செயலாக வெள்ளிக்கிழமை அன்று தொலைபேசியில் என்னை அழைத்தாள். பேசிக்கொண்டிருக்கும்போதே “என்ன சமையல்?” என்றாள். நானும் “பொரித்த குழம்பு” என்றேன். “இதில் இஞ்சி பூண்டு சேர்க்க வேண்டுமே?” என்றாள். நானோ “ஆமாம்” என்றேன். “இன்றைக்கு வெள்ளிக்கிழமை, சாம்பார் தான் வைக்க வேண்டும். அதிலும் உன் கணவர் மாலை அணிந்திருக்கிறார்” என்று படபடத்தாள். “நான் பொரித்த குழம்புனு தான் சொன்னேன், அசைவ குழம்பு எதையும் சொல்லலையே!” என்றேன். அதற்கு என் தோழி கொடுத்த விளக்கம்: “இஞ்சி பூண்டெல்லாம் கறிக்குழம்பு பிரியாணில போடுறதுனால வெள்ளிக்கிழமை அதெல்லாம் சேர்க்கக்கூடாது” என்றாள். ஓஹோ… இஞ்சி, பூண்டு பிரியாணியில் சேர்க்குறதால அதையும் அசைவமாக மாத்திட்டீங்களா? வெள்ளிக்கிழமை சாம்பார் தான் வைக்கணும்னு எந்தக் கடவுள் உங்களுக்கு உத்தரவு போட்டது? நீ பள்ளிக்கூடத்துல காய்கறிப் பிரிவுல இஞ்சி பூண்டப் படிச்சியா? இல்ல விலங்கு, பறவைகளப் படிச்சியா? என்றதும், “நானாவா சொல்றேன், காலங்காலமா சொல்றாங்க” என்றாள். 

இன்னும் எத்தனை நாட்கள் தான் நம் மக்கள் காலங்காலமாகச் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அறிவியல் மனப்பான்மையோடு சிந்தித்து ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்கத் தொடங்குவார்களோ தெரியவில்லை.

ஒரு நாள் கன்னி பூஜை நிகழ்விற்காகச் சென்றிருந்தேன். அந்நிகழ்வில் கலந்து கொள்வது அதுதான் முதல் முறை. ஆண்கள் பஜனைக்கான அனைத்தையும் செய்து கொண்டிருக்க, அவர்களின் மனைவிமார்களோ இருபது, முப்பது நபர்களுக்கான உணவைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். வழிபாடு முடிந்ததும் மாலை அணிந்த ஆண்கள் அனைவரையும் ஒரே வரிசையில் நிற்க வைத்து, ஒவ்வொருவரின் காலிலும் பெண்கள் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். “கடவுளக் கும்புடுறது கூடப் பரவால்ல… ஏன் இவங்க கால்ல விழறீங்க?” என்று அருகில் இருந்த பெண்ணிடம் கேட்டேன். 

“ஐய்யையோ… அப்படிச் சொல்லாதீங்க… மாலப் போட்டா அவங்களும் கடவுள்தான்” என்றார் அந்தப் பெண்.

இறுதியாக நான் மட்டுமே மிஞ்சி இருக்க, என்னையும் காலில் விழச் சொன்னார்கள். நானும் விழப் போகிறேன் என்பதால் என்னை விடச் சிறியவரான சாமிக்கு ஒரே புன்முறுவல்.

பெரும்பாலும் யாருடைய காலிலும் விழும் பழக்கம் எனக்கு இல்லை என்பதை என் கணவர் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த, யாரும் அதற்கு மேல் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை.

எனக்குத் தெரிந்து கார்த்திகைக்கு முந்தைய மாதம் வரை மது, புகை, பெண்களோடு தவறான பழக்கத்தில் உள்ளவர்களும் அந்த வரிசையில் கடவுளாக நின்று கொண்டிருந்தார்கள். மாலை அணிந்த ஒரு கல்லூரி மாணவனோ ஓரமாக நின்று புகையை ஊதிக் கொண்டிருந்தான். 

உண்மையாகவே அவர்களுக்கு உறுத்தலாக இல்லையா? இல்லை, தெரிந்தே பெண்கள் ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்கிறார்களா?

மேலும், பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று தோன்றும் அளவிற்கு மேலும் ஒரு காட்சியைக் கண்டேன். கடையில் பொருட்கள் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தேன். எனக்கு முன்பாக இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். 

அதில் ஒரு பெண் கேட்கிறார், 

“என்ன உன் புருஷன் மாலை போட்டுருக்காரு போல?

ஆமாக்கா…

கடைல எல்லாரையும் தொட்டுட்டு நிக்கிற…

போய் குளிக்கணுமா?”

ஆமாக்கா… வேற என்ன பண்றது! காலையிலேயே அவருக்கு முன்னாடி எழுந்திருச்சு, குளிச்சிட்டு தான் அடுப்படிக்கு போனேன்! இன்னைக்கு கடைக்கு வர வேற யாரும் வீட்ல இல்ல… போய் மறுபடியும் குளிச்சிட்டு தான் சாமிக்குச் சமைக்கணும்” (இங்கு சாமி எனக் குறிப்பிடப்படுவது மாலை அணிந்த அந்தப் பெண்மணியின் கணவர்) என்று பேசிக் கொண்டிருந்த பெண்களை நினைத்து கோபமும், பரிதாபமும் ஒரு சேர வந்தது. வேறு ஆட்களைத் தொட்டுவிட்டதால் குளித்த சுத்தமும் புனிதமும் போய்விடுமா? இதே பெண்கள் தான், தொடர்ந்து தலைக்குக் குளித்து, காதில் சீழ் பிடித்து மருத்துவரைப் பார்ப்பார்கள். “உங்கள எந்தக் கடவுள்மா தினமும் தலைக்குக் குளிக்கச் சொன்னுச்சு? இப்படியே பண்ணீங்கன்னா அடுத்து ஆபரேஷன் தான்” என்றால் போதும் அடங்கிவிடுவார்கள்.

அப்படி என்ன அறிவுரைகளைத் தான் சமூகம் மாலை அணியும் வீட்டில் உள்ள பெண்களுக்குச் சொல்கிறது?

  • வீட்டில் உள்ள அனைத்தையும் துடைத்துக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும்.
  • தினமும் இருவேளை இல்லாவிட்டாலும் ஒரு வேளையாவது தலைக்குக் குளிக்க வேண்டும்.
  • காலை எழுந்தவுடன் குளித்த பிறகுதான் மற்ற வேலைகளைத் தொடங்க வேண்டும்.
  • ஏற்கனவே பயன்படுத்திய பாத்திரங்களில் சமைக்கக் கூடாது.
  • அந்த மாதத்திற்கென தனிப் பாத்திரம் பயன்படுத்த வேண்டும்; அதுவும் அசைவம் சமைக்காத பாத்திரமாக இருக்க வேண்டும்.
  • யாரும் பயன்படுத்தாத தட்டில் மட்டுமே மாலை அணிந்தவருக்கு உணவு கொடுக்க வேண்டும்; காரணம் எச்சில் பாத்திரம் கூடாதாம்.
  • மூன்று வேளையும் புதிதாகச் சமைத்த, சூடான உணவையே கொடுக்க வேண்டும்.
  • மாதவிடாய் வந்துவிட்டால் தாய் வீட்டிலோ அல்லது வேண்டப்பட்டவர்கள் வீட்டிலோ தங்கிக் கொள்ள வேண்டும்; இல்லை என்றால் மாலை அணிந்தவர் வேறு எங்கேயாவதோ, தங்கிக் கொள்ள வேண்டும்.
  • கணவனின் அருகில் அமரக்கூடாது; தொட்டுப் பேசக்கூடாது; கடவுளுக்கு இணையாகக் கணவனை நினைக்க வேண்டும். இன்னும் கூடுதலாகக் கணவனைப் போலவே பாயில் படுக்காமலும், செருப்பு அணியாமலும் சில பெண்கள் விரதம் இருக்கிறார்கள்.

என்னடா, மாலை அணிவது ஒரு குத்தமா என இந்தக்கட்டுரையைப் படிக்கும் யாரேனும் நினைத்தால், அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான். 

மாலை அணிந்த பிறகு பெண்களைப் பார்த்து “மாதவிடாயா? ஓடிவிடு… அருகில் அமராதே! ஓடிவிடு…” என்று சொல்லும் ஆண்கள், சமைக்கும்போது, துணி துவைக்கும்போது, வழிபாட்டுப் பொருட்களைச் சுத்தம் செய்யும்போது, “நீ ஒரு பெண் தானே! ஓடிவிடு…” என்று ஏன் சொல்வதில்லை? ஒரு குடும்பம் திருமண பந்தத்தின் மூலமாகப் பெண்களின் உழைப்பைச் சுரண்டியும் அடிமைப்படுத்தியும் வருகிறது. இவற்றையெல்லாம் ஆண்களே மறந்தாலும் கூட, சில பெண்கள் முட்டுக் கொடுத்து வளர்த்து, ஒரு புதிய பரிணாமத்திற்கு எடுத்துச் செல்வது வேதனையிலும் வேதனை!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதிலிருந்து 50 வயது வரையிலான பெண்கள் நுழையக்கூடாது என்ற தடையை, பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு 2006 ஆம் ஆண்டு பெண் வழக்கறிஞர்கள் மனுத் தாக்கல் செய்தனர். அதற்கு 2018 செப்டம்பர் மாதம் “அனைத்து வயது பெண்களும் கோயிலுக்குள் நுழையலாம்” என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அது தவறான தீர்ப்பு என ஆண்களில் சிலர் நம்பும் அளவிற்குப் பெண்களும் நம்புகிறார்கள் என்றால், சமூகமும் குடும்பமும் உருவாக்கிய கட்டமைப்புகள் அப்படியானது.

கடவுள் மற்றும் மத போதனை மூலமாக ஒரு பயத்தைப் பெண்களின் மனதில் விதைத்து, காலங்காலமாகப் பெண்கள் ஒடுக்கப்பட்டுத் தான் வருகிறார்கள். இந்த ஒடுக்குமுறையில் மறைந்து கிடப்பது பழமைவாத ஆணாதிக்கம் தான். பெண்கள் தங்களுடைய தலையில் பாரம்பரிய கதைகளைச் சுமந்து கொண்டிருக்கும் வரையில் உழைப்புச் சுரண்டலும், ஒடுக்குமுறைகளும், மறைமுக ஆணாதிக்கமும் இருந்து கொண்டே தான் இருக்கும்.

– தீபா ராஜ்மோகன்

2 Comments

  • ஆண்கள் தங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்ளக்கூட பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டல் அவசியமாகிறது என்பதை மிக அழகான எழுத்து நடையுடன் சொல்லிய கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்.

    கட்டுரை பரவலாக எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

  • “கடவுள் மற்றும் மத போதனை மூலமாக ஒரு பயத்தைப் பெண்களின் மனதில் விதைத்து, காலங்காலமாகப் பெண்கள் ஒடுக்கப்பட்டுத் தான் வருகிறார்கள்.”
    இந்த வரி, கட்டுரையை ஒரு தனிப்பட்ட அனுபவமாக இல்லாமல், சமூக கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கும் ஆவணமாக மாற்றுகிறது.

    மிகவும் முக்கியமாக, “பெண்களே இந்த ஒடுக்குமுறைக்கு முட்டுக் கொடுப்பது” குறித்து பேசத் துணிந்த தைரியத்திற்கு தனி பாராட்டு. இது பலருக்கு சங்கடமான கண்ணாடியாக இருக்கும்; ஆனால் அவசியமான ஒன்று.

    நன்றி. இப்படியான குரல்கள் இன்னும் அதிகம் கேட்கப்பட வேண்டும். சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள்.

Comments are closed.