அலைப்பேசியில் “மீண்டும் சந்திப்போம்” என்றொரு வாட்சப் குழு. அதில் நானும் இணைக்கப்பட்டிருந்தேன். பல்வேறு விதமான நல விசாரிப்புகளும் பேச்சுகளும் ஓடிக்கொண்டிருந்தன. அது பள்ளிப் படிப்பை முடித்த நண்பர்கள் அனைவரும் மீண்டும் சந்திப்பதற்காக உருவாக்கப்பட்ட குழு. “யாரும் வராமல் இருந்துவிடக் கூடாது” என்ற அன்புக் கட்டளைகள் பறந்தன. அந்த மகிழ்வான நாளும் வந்தது. நண்பர்கள் அனைவரும் நலம் விசாரிப்பு, கண்ணீர், மகிழ்ச்சி, ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டத்தில் திளைத்திருந்தார்கள். அப்போது தோழிகளாகிய ஆறு பேர் ஒன்றாக அமர்ந்து சொந்தக் கதை, சோகக் கதை, புறணி எனப் பேசிக்கொண்டிருந்தோம். ஆம், பெண்கள் என்றாலே அதைத்தானே பேசுவோம்? அப்படித்தானே சமூகம் நம்மைச் சித்தரித்துள்ளது!
அப்பொழுது தூரத்தில் நின்ற பள்ளி நண்பனைப் பார்த்து ஒரு தோழி சொன்னாள்: “அவன் இப்போது பக்கத்து ஊரில் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளான். அவனுடைய பேச்சுக்கு ஊரே கட்டுப்படுகிறது. தொடர்ந்து அரசியல் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறான். ஒருநாள் பெரிய அரசியல்வாதியாகி விடுவான்.
“நாமளும் இப்படி அரசியல்ல இருந்தா… எவ்வளவு கெத்தா இருக்கும். எல்லாரும் நம்மள மதிப்பாங்க.
ஆனா! நமக்கு தான் அரசியல்னாவே என்னன்னு தெரியாதே! ஒருவேளை அப்படி போயிட்டா நம்மள வேற மாதிரி பொம்பளைன்னு வாய் கூசாம சொல்லுவாங்க”
என, தன் மனதில் தோன்றியதை சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் கூறியதில் “நமக்கு தான் அரசியல்னாவே என்னனு தெரியாதே” என்ற வார்த்தை ஏதோ செய்தது.
“அப்படியா! அப்ப நமக்கு தெரிஞ்ச அரசியல் என்னனு இப்ப பேசுவோம். எல்லோரும் அரசியல் பத்தி சொல்லுங்க என்றவுடன் இப்ப இது தேவையா? ரொம்ப நாள் கழிச்சு பேசுறோம்… இந்த வீணா போன பேச்சு தேவையா?” என்றாள் வேறொருத்தி. “தேவைதான், ஒரு ஐந்து நிமிடம் இதற்காக ஒதுக்குவோம். நான் கேட்பதற்கு மட்டும் தெரிந்த பதிலைச் சொல்லுங்கள்” என்றேன். “அரசியல் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்ற ஒற்றைக் கேள்விதான் அது. அந்த ஒற்றைக் கேள்விக்குத் தோழிகளின் பதில்கள்:
வினோதினி – இளங்கலை மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்தவள்: “எனக்கு என்ன தெரியும்! ஒன்னும் தெரியல…”
சும்மா சொல்லு ஒண்ணுமே தெரியாமல் எப்படி இருக்கும்? ஏதாவது சொல்” என்று மீண்டும் கேட்ட பொழுது,
அரசியல்ல எல்லாரும் மோசமான ஆளுங்க தான். முன்ன இருந்த தலைவர்கள் காமராசர், பெரியார் மாதிரியா இப்ப இருக்காங்க? தன்னால எந்த அளவுக்கு சம்பாதிக்க முடியுமோ அதை சம்பாதிக்க தானே அரசியலுக்கு வராங்க… இதுதான் எனக்கு தெரிஞ்ச அரசியல்” என்றாள்.
திலகவதி – முதுகலை மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்தவளின் பதில்,
“என்னத்த சொல்ல
எனக்கு ஓட்டு போடுறதே பிடிக்காது. அதுலயும் யார் பணம் தராங்களோ அவங்களுக்கு ஓட்டு போடவே மாட்டேன். எங்க ஊர்ல ஒரு அம்மா இருந்தது. அது பள்ளிக்கூடம் பக்கமே போனது கிடையாது. அவங்க புருஷன் அரசியல்வாதியா இருந்தாரு. அடுத்த தேர்தலில் அவரால நிற்க முடியல. ஏன்னா, அது பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி (லேடீஸ் கோட்டா). அதனால அவருடைய பொண்டாட்டிய நிக்க வச்சு ஜெயிச்சிட்டாரு. ஆனா, அந்த அம்மா பேருக்கு தான். அவர் சொல்றது தான் எல்லாமே… மத்தபடி அந்த அம்மாக்கு எதுவுமே தெரியாது” என்றாள் தோழி.
“சரி, அதற்கு என்ன தீர்வு?” என்று கேட்ட பொழுது, “ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்குத் தேர்வு இருக்கும் பொழுது, ஆசிரியர்களுக்குத் தகுதித்தேர்வு, நியமனத்தேர்வு என்று இருக்கும் பொழுது, அனைத்து அரசுப் பதவிகளுக்கும் தேர்வுகள் இருக்கும் பொழுது, ஒரு நாட்டை ஆளுகின்றவர்களுக்கும் அவர்களுடன் இணைந்து செயல்படுபவர்களுக்கும் ஏன் தேர்வு வைக்கக் கூடாது?” என்றாள்.
பஞ்சாப் மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இளம் அரசியல்வாதியான ராகவ் சதா அவர்கள் கூட சில தினங்களுக்கு முன்பு இதே கேள்வியைத் தான் நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். “அரசியல்வாதிகளுக்கு ஏன் தேர்வுகள் இல்லை? அரசியல் என்பது ஒரு சேவையா அல்லது ஒரு வேலையா? அது உண்மையில் ஒரு சேவை என்றால் அதற்குச் சம்பளமும் ஓய்வூதியமும் ஏன் வழங்கப்பட வேண்டும்? அதே நேரத்தில் அதை ஒரு வேலை எனக் கருதினால் அதற்கான தகுதிகளும் தேர்வுகளும் ஏன் இல்லை?” என்றார்.
தகுதிகளும் தேர்வுகளும் இருக்கலாம். ஆனால், அது மட்டுமே நல்ல அரசுக்குத் தீர்வாகிவிடாது. “தேர்வு வைத்து அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டால் நல்ல அரசு அமைந்துவிடும்” என்பது, கோடாரியில் வெட்ட வேண்டிய மரத்தை நகத்தால் கீறி வெட்டிவிடலாம் என்று நினைப்பதைப் போல் உள்ளது. படித்தவர்கள் யாரும் எந்த ஊழலையும் செய்யவில்லையா? இப்பொழுதெல்லாம் கல்வியறிவை, யாருக்கும் தெரியாமல் எப்படித் தவறு செய்யலாம் என்பதில்தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். தேர்வெழுதி முதல் தரத்தில் தேர்வான, உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகள் எந்த அளவிற்கு மக்களுக்கு நன்மையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்? நினைக்கும் போதே “இல்லை” என்ற பதில் மனதில் தோன்றுகிறது அல்லவா!
இந்த உலகம் இயங்கப் பிரதானமே உழைப்பவர்கள் தான். ஒருவேளை அரசியல் என்பது முதலாளி வர்க்கத்திற்காக இல்லாமல், உழைக்கும் வர்க்கத்திற்காக மாறி, அவர்களை முதன்மையாகப் பார்க்கும் அரசு அமையுமாயின் நல்ல மாற்றம் வரலாம்.
அடுத்து விஜயலட்சுமி – பிஎச்டி (Ph.D) முடித்தவளின் பதில்: “எனக்கு ஒன்றும் தெரியாது… புடிச்சவங்களுக்கு ஓட்டு போடுவேன்” என்றாள். “பிடித்தவர்கள் என்று எதை வைத்துச் சொல்கிறாய்?” என்று கேட்ட போது,
யார் ஓரளவுக்காவது மக்களுக்கு நல்லது செய்றாங்கன்னு பார்ப்பேன். தேர்தல் நேரத்துல அரசியல் கட்சி வெளியிடும் அறிக்கையைப் பார்ப்பேன் அதுல எது எனக்கு தேவையானதா இருக்கோ அத வச்சு தான் ஓட்டு போடுவேன்” என்றாள்.
இன்னும் இருவர் பதில் சொல்லவே விரும்பவில்லை. அதற்குள் அழைப்பு வர, கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றுவிட்டோம்.
ஆனாலும் அந்தப் பேச்சின் தாக்கம் கண்ணுக்குள் விழுந்த சிறு கல்லைப் போல் உறுத்திக்கொண்டே இருந்தது. அந்த உறுத்தலைச் சரிசெய்வதற்குள் கூடுதலாக ஒரு கல் மீண்டும் கண்ணிற்குள் விழுந்துவிட்டது. மூடநம்பிக்கை ஒழிப்பைப் பற்றியும், சாதியப் பாகுபாடுகளை வேரறுக்க வேண்டும் என்றும் பேசக்கூடிய அன்பர் ஒருவரின் வீட்டிற்கு நானும் என் கணவரும் செல்ல நேர்ந்தது. நல்ல வரவேற்போடு என்னை வீட்டின் உள்ளே சென்று அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும்படி அன்புக் கட்டளையிட்டார். அப்போது மேலும் இரு ஆண்கள் வர, வாசலில் அமர்ந்தபடி நால்வரும் காரசாரமாக அரசியலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். “நாமும் அவர்களது உரையாடலில் கலந்துகொள்வோமா?” என அந்த அம்மாவிடம் கேட்ட பொழுது, “வேண்டாம்! வேண்டாம்! அங்கே ஆண்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதைக் கேட்டு நாம் என்ன செய்யப் போகிறோம்? மேலும் நாம் அங்கே செல்வதை என் கணவர் உட்பட அங்கு அமர்ந்திருக்கும் யாரும் விரும்ப மாட்டார்கள்” என்றார். “அப்படியா!” என்று வெளியே சென்று அவர்களின் பேச்சைக் கேட்க முற்பட்ட பொழுது, “நீங்க ஏம்மா இங்க நிக்கிறீங்க? உள்ள போய் அம்மா கூடப் பேசுங்க” என்று ஒரு குரல் ஒலித்தது.
“பெண்களுக்கு அரசியல் தேவையற்றது எனப் பெண்களையும் நம்ப வைத்ததுதான் ஆண்களின் வெற்றி.”
பெண்ணிற்கான அடையாளங்களை நம் சமூகம் பலவாறாக, பல சூழ்ச்சிகளாக வகுத்து வைத்துள்ளது. ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும், இதைத்தான் செய்ய வேண்டும் என ஆன்மீகம், பண்பாடு, கலாச்சாரம், பொறுமை, சாந்தம் என பலவற்றோடு இணைத்து அப்படிப்பட்டவர்கள் தான் பெண் இல்லாவிடில், சமூகம் அவர்களுக்குப் பல பெயர்களைச் சூட்டி, அவர்களை ஒடுக்கப்பட்டவர்களாக மாற்றிவிடுகிறது.
“சரி, இதெல்லாம் தெரிந்ததுதானே! பலமுறை கேட்டுவிட்டோம்” என்று நினைத்தாலும், பெண்ணுக்கு இன்னும் பல வரைமுறைகள் உள்ளன. ஒரு பெண் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்று குடும்பம் தொடங்கி சமூகம் வரை சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. அதைப்பல பெண்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். அப்படி என்ன பேச்சில் கட்டுப்பாடு என்றால், அதற்கு ஒரு குடும்ப நிகழ்வையே உதாரணமாகக் கூறலாம். ஆண்கள் செய்திகள் பார்ப்பவராகவும், பெண்கள் ராசிபலன், ஆன்மீகப் பாடல்கள், நாடகத் தொடர்கள் பார்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள். செய்திகளில் வரும் உலக நடப்புகளையும் அரசியலையும் ஆண்கள் மட்டும்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா? அதேசமயம் பெண்களும் அரசியலைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டாமல் மாறியதற்கு இந்தச் சமூகமும் ஒரு காரணம்தான்.
பெரும்பாலும் பெண்கள் அரசியல் பேசினால்,
“உனக்கு என்ன அரசியலைப் பற்றித் தெரியும்?”
“அரசியல் தெரிந்து நீ என்ன பண்ணப் போற?”
“பொம்பளைன்னா பொம்பளை மாதிரி இரு…
““ஆம்பளைங்க பேசுற இடத்துல உனக்கென்ன வேலை?”
“போ… போய் சமைக்கிற வேலையைப் பாரு…”
என்ற வார்த்தைகள் பல வீடுகளில் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?
ஒரு ஆண் பெண்ணைப் பார்த்துச் சர்வ சாதாரணமாக “நீ அரசியல் தெரிந்து என்ன செய்யப் போகிறாய்?” என்று எப்படி கேட்க முடிகிறது? பெண்களும் எப்படி அவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதும் புரியவில்லை.
வரலாற்று ரீதியாக எடுத்துக்கொண்டாலும் பெண்களின் அரசியல் பங்கேற்பு குறைவாகத்தான் உள்ளது. பெண்களுக்கான அரசியல் என்பது வெறும் வாக்களிக்கும் உரிமையுடன் முடிந்துவிடுவதா? அரசியலைப் பேசுவது, அரசியலில் ஈடுபடுவது, அதிகாரத்தில் அமர்வது என்பதன் நீட்சிதானே அரசியல்!
அரசியலில் பெண்கள் யாருமே இல்லையா என்றால், இருக்கிறார்கள். இந்தியாவின் முதல் பெண் ஆளுநராக இருந்த சரோஜினி நாயுடு, பத்மஜா நாயுடு, மாநில முதல்வர்களாக இருந்த மாயாவதி – உத்திரபிரதேசம், ஜெயலலிதா – தமிழகம், மம்தா பானர்ஜி – மேற்கு வங்கம் என்போரை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதுவரை எத்தனை பெண் குடியரசுத் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்? பிரதீபா பாட்டீல் மற்றும் திரௌபதி முர்முவைத் தவிர! இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்திக்குப் பிறகு இதுவரை ஏன் எந்தப் பெண்ணும் வர முடியவில்லை?
அது சரி! ஒரு நிமிடம் கண்ணை மூடி ‘அரசியல்வாதி’ என்று நினைத்துப் பாருங்கள். வேட்டி, சட்டை அணிந்த ஆண்கள் தோன்றுகிறார்களா? இல்லை சேலை அணிந்த பெண்கள் தோன்றுகிறார்களா? அரசியல் என்பது ஆணுக்கா, பெண்ணுக்கா அல்லது குறிப்பிட்ட நபருக்கா? இந்தக் கேள்வியே அபத்தமாகத் தோன்றுகிறது அல்லவா! ஒரு சமூகத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியதுதானே அரசியல்? அப்படியிருக்க அரசியல் பெண்களுக்குத் தேவையில்லாத ஒன்று என ஒதுக்கப்படுவதும், தேவையில்லை எனப் பெண்களே ஒதுங்கி நிற்பதும் எனக்குத் தோன்றிய கற்பனை அல்ல; உலகில் நிலவும் உண்மை!
பெண்கள் அரசியலைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால்
அரசியல் அமைப்புச் சட்டம், இந்தியாவில் உள்ள மாநிலங்கள், தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள், தமிழகத்தின் சட்டமன்றத் தொகுதிகள், இந்தியாவில் உள்ள மொத்த நாடாளுமன்றத் தொகுதிகள், அதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள், அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள் என இவற்றைத் தெரிந்துகொள்வது மட்டும்தான் அரசியலா?
முதலில் குடும்பத்தில் உள்ள மறைமுகமான அரசியலைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு ஆண் பெண்ணை அடக்குவதும், எங்குப் போக வேண்டும், எதைச் செய்ய வேண்டும், யாருடன் பழக வேண்டும் எனக் கட்டளையிடும் அதிகாரமும் அரசியல் தான். ஒரு குடும்பத்தில் ஒருவர் சொல்வதை மற்ற அனைவரும் கேட்டு நடக்க வேண்டும் என்ற தலைமைப் பண்பும் ஒருவித அரசியல் தான். தன் கணவனுக்கு அடங்கிச் செல்லும் பெண், வயது முதிர்ந்த பிறகு வீட்டிற்கு வரும் மருமகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நினைப்பது, தங்களுக்குப் பிறந்த பிள்ளைகளிடமே வேறுபாடு காட்டும் பெற்றோர்களின் செயல்கள் என எவ்வளவோ உள்ளன. இப்படித் தன்னைச் சுற்றி நிகழும் மறைமுக அரசியலைக் களைந்து, நாட்டின் அரசியலுக்குப் பெண்கள் சர்வ சாதாரணமாக நகரும் காலம் வர வேண்டும்.
ஒரு பெண் அரசியல் விழிப்புணர்வற்றவளாக அல்லது ஆணாதிக்க சமூகத்தில் பொது அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டவளாக இருக்கிறாள் என்றால், அந்தச் சூழலை முதலில் உடைத்தெறிவது அவசியம்.
அந்தச் சூழல் அவரது குடும்ப அமைப்பாக இருக்கலாம், அவர் வாழும் கிராமமாக இருக்கலாம் அல்லது அவர் பணிபுரியும் இடமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வது அவசியம். இவ்வாறு தனிப்பட்ட எதிர்ப்பு என்னும் ஆரம்பப் புள்ளியிலிருந்து தொடங்கி, குழு அடையாளம் என்னும் பொது அடையாளம் நோக்கி நகர்வது இன்றைய தேவை. அந்த அடையாளம் பெண்ணியம் சார்ந்ததாகவோ, மொழி அல்லது இனம் சார்ந்ததாகவோ இருக்கலாம். ஆனால் அது விடுதலைக்கான பொது அடையாளமாக — ஒன்றிணைக்கும் அடையாளமாக — இருக்க வேண்டும்.
“அமைப்பாய்த் திரள்வோம்” என்ற நூலில் தோழர் தொல். திருமாவளவன் கூறியதை நினைவுகூர்வது இங்கு பொருத்தமானது:
“சிதறிக்கிடப்போரால் எந்த ஒரு பொது நீரோட்டத்திலும் கலந்து இயங்கிட இயலாது. இதனால் தனிமைப்படுத்தப்பட்டு விலகி நிற்கும் நிலையே உருவாகும். தனித் தேவைகளும் தனி அடையாளங்களும் ஒரு குழுவின் தனித்துவத்தையும் ஆளுமையையும் இழந்திட அனுமதிப்பதில்லை. அத்தகு தனித்துவமும் ஆளுமையும் பொதுத் தேவைகள் மற்றும் பொது அடையாளங்களுக்காகப் பொது நீரோட்டத்துடன் இணையும்போது, அக்குழு மேலும் பன்மடங்கு வலிமை பெறும்.” இந்த உண்மையை ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்து உள்வாங்கிக்கொள்வதே மாற்றத்தின் முதல் படி.
– தீபா ராஜ்மோகன்




