வரலாறு படைக்க சரியான வரலாற்றை அறிந்து கொள்வோம்!
இவ்வுலகில் நாம் காணும் ஒவ்வொரு மாற்றத்திற்கும் அடிப்படை உழைப்பே ஆகும். உழைப்பின்றி இங்கு ஓர் அணுவும் அசைந்ததில்லை. இன்றைய நவீன உலகத்தின் அத்தனைச் செல்வங்களும் உழைப்பாளர்களால் உருவானவை. இவ்வுலகிலிருந்து ஒட்டுமொத்த உழைப்பையும் கழித்துவிட்டால் மிஞ்சுவது வெறும் கல்லும் மண்ணும் மட்டுமே. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உழைப்பையும், உழைப்பாளர்களையும் நினைவுகூரும் நாளே உழைப்பாளர் தினமாகும். உழைப்பாளர் தினம் என்பது பிற பண்டிகைகள் அல்லது திருவிழாக்களைப் போலக் கேளிக்கைகளுக்கான நாள் அல்ல. மாறாக, விலைமதிப்பற்ற மனித உயிர்களைப் பலி கொடுத்து, ஒரு தொழிலாளியாக இன்று நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு உரிமைகளுக்கும், சலுகைகளுக்கும் வித்திட்ட எழுச்சிமிக்கத் தியாகத் திருநாள் அது. அந்த வகையில் உழைப்பாளர் தினத்தின் முக்கியத்துவத்தையும், அது கடந்து வந்த வரலாற்றுப் பாதையையும் அறிந்து கொள்வது ஒவ்வொரு தொழிலாளியின் கடமையுமாகும்.
நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்திற்கு
18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உற்பத்தி சக்திகள் அதிவேகமாக வளர்ச்சி பெறத் தொடங்கின. கைக்கருவிகள் மற்றும் சிறு பட்டறைகள் மறைந்து நீராவி இயந்திரங்கள் வரத் தொடங்கின. மானுடச் சமூக அமைப்பு நிலப்பிரபுத்துவ சிறுவீத உற்பத்தி முறையிலிருந்து முதலாளித்துவப் பெருவீத உற்பத்தி முறையை நோக்கி நகரத் தொடங்கியது. அதுவரை தனக்கெனச் சில உழைப்புக் கருவிகளை வைத்துக்கொண்டு சிறிய அளவில் உற்பத்தியில் ஈடுபட்டு வந்த கைவினைஞர்களால், புதிதாக வந்த திறன் மிகுந்த உற்பத்திக் கருவிகளோடு போட்டியிட முடியாமல் போனது. அதேபோலப் பெரும்பாலான நிலப்பிரபுக்கள் தங்களது நிலத்தை விற்றுவிட்டு ஆலை சார்ந்த உற்பத்தி முறைக்கு மாறியதால், நிலப்பிரபுவின் கட்டுப்பாட்டில் அவருக்குச் சொந்தமான நிலத்தில் அடிமையாக வேலை செய்து வந்த பண்ணையடிமைகள், தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுக் கொள்ளும் பொருட்டுப் புதுவித உற்பத்தி முறைக்குத் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தங்களுக்கு என்று இருந்த பின்தங்கிய உற்பத்திக் கருவிகள் அனைத்தும் பயனற்றுப் போய், உழைப்புச் சாதன உடைமை எதுவும் இன்றி, உழைப்புச் சக்தி ஒன்றை மட்டுமே உடைமையாகக் கொண்டவர்களாக அவர்கள் மாறினர். அதாவது அதுவரை உழைப்பாளிகளாக இருந்தவர்கள் “பாட்டாளிகள்” என்ற புதிய அவதாரத்தை எடுத்தனர். பண்ணையார்களின் நிலத்திலிருந்து விடுபட்டுத் தொழிற்சாலை என்ற நான்கு சுவர்களுக்குள் தஞ்சமடைந்தனர்.
பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சி
பழைய நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் பண்ணையடிமைகளாக இருந்தவர்கள், அந்தந்த நிலப்பிரபுக்களின் கட்டுப்பாட்டைத் தாண்டி ஒன்றுகூடும் வாய்ப்பு இல்லாமல் இருந்தனர். அதுவே புதிய முதலாளித்துவ உற்பத்தி முறையில் நகரங்களுக்கு வந்து ஆலை முதலாளிகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும், பழைய பண்ணையடிமைகளைப் போல அல்லாமல் சுதந்திரத் தொழிலாளர்களாக மாறினார்கள். அந்த வகையில் அதுவரை தனித்தனியாகவோ அல்லது சிறு சிறு குழுக்களாகவோ நிலங்களில் வேலை செய்து வந்தவர்கள், ஒரே தொழிற்சாலையில், ஒரே இடத்தில் வேலை செய்யும் பொருட்டு ஒன்றிணையும் வாய்ப்பினைப் பெற்றனர். அதேநேரம் அடிமை என்ற நிலையிலிருந்து சுதந்திரத் தொழிலாளர் என்ற முன்னேறிய நிலைக்கு இவர்கள் வந்தபோதும் காலநேர வரம்பற்ற பணி, அற்பக் கூலி, கடினமான உடல் உழைப்பு, பாதுகாப்பற்ற பணிச்சூழல் என்று பல இன்னல்களுக்கு ஆளாகவே செய்தனர். எனினும் இதற்கு முன்னர் இருந்த பண்ணையடிமை நிலையைப் போல அல்லாமல், வேலை நேரம் போக மீதி நேரம் ஆலைக்கு வெளியே சுதந்திர மனிதர்களாக வலம் வர வாய்ப்பு இருந்ததால், அந்த நேரத்தில் ஒன்றுகூடித் தங்களின் பிரச்சினைகள் குறித்துப் பேச அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதோடு முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் வந்த பிறகு இயந்திரங்களை இயக்குதல், உற்பத்திக் கணக்குகளைக் கையாளுதல் போன்ற தேவைகளுக்காகப் பாட்டாளிகளுக்கு அடிப்படைக் கல்வியும் அளிக்கப்பட்டது. சக பாட்டாளிகளோடு ஒன்று சேர்ந்தது, அடிப்படைக் கல்வியைப் பெற்றது போன்றவற்றால் பாட்டாளி வர்க்கம் தன் நிலையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியது.
மார்க்சியமும் தொழிலாளர் உரிமையும்
இந்த நேரத்தில் 19-ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் அறிவுத்தளத்தில் பாட்டாளிகளின் நலன் சார்ந்த குரல்களும், உரிமைகள் சார்ந்த தத்துவங்களும் வெளிவரத் தொடங்கின. குறிப்பாக “கம்யூனிஸ்ட் லீக்” என்ற அமைப்பின் மூலம் பாட்டாளிகளின் பிரச்சினைகள் மற்றும் உரிமைகள் குறித்த ஆவணங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. அவற்றின் முத்தாய்ப்பாக அமைந்தது 1848-ஆம் ஆண்டு வெளியான “கம்யூனிஸ்ட் அறிக்கை”. இதனைத் தயாரித்து வெளியிட்டவர்களே பிற்காலத்தில் ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர்களாக மாறிய தோழர்கள் காரல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் ஏங்கல்ஸ். இந்தக் கம்யூனிஸ்ட் அறிக்கை பாட்டாளிகளின் மத்தியில் காட்டுத்தீ போலப் பற்றிக்கொண்டது. ஏறக்குறைய ஐரோப்பியக் கண்டத்தின் அனைத்து நாடுகளுக்கும் அனைத்து மொழிகளிலும் மாற்றப்பட்டு அந்தத் தீ பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து “முதலாம் கம்யூனிஸ்ட் அகிலம்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் சார்பில் பாட்டாளிகளின் வேலை நேரம் குறித்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் பாட்டாளிகளின் வேலை நேரம் என்பது 8 மணி நேரமாக இருக்க வேண்டும் என்று வரையறுத்தது. அகிலத்தின் சார்பில் அந்தத் தீர்மானத்தை வெளியிட்டவர் தோழர் காரல் மார்க்ஸ். இந்தத் தீர்மானம் பாட்டாளிகளின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சுரண்டலுக்கு எதிரான கோட்பாடு
அதோடு நின்றுவிடவில்லை மார்க்ஸ். முதலாளித்துவத்தின் பண்புகளை விஞ்ஞான சோசலிசம் என்னும் தத்துவத்தின் துணைகொண்டு தனது “மூலதனம்” நூலின் வழியே ஆராய்ந்தார். 10 மணி நேரம் வேலை செய்யும் ஒரு தொழிலாளி முதல் 5 மணி நேரம் மட்டுமே தனக்காக உழைக்கிறான் என்றும், மீதி 5 மணி நேரம் தன்னுடைய முதலாளியின் சட்டைப்பைகள் நிரம்பி வழியவே உழைக்கிறான் என்றும், எனவே பெயரளவில் அவன் சுதந்திர உழைப்பாளியாகத் தெரிந்தாலும் நிஜத்தில் அவன் தன்னுடைய முதலாளியால் அதிதீவிரமாகச் சுரண்டப்படுகிறான் என்றும் முதலாளித்துவத்தின் நெற்றிப்பொட்டில் அடித்தார் மார்க்ஸ். மேலும் ஒரு பாட்டாளிக்கு வழங்கப்படும் கூலி என்பது ஒருபோதும் அவனது உழைப்பிற்கு இணையான ஒன்றல்ல; அது அவனது உழைப்புச் சக்திக்கு இணையான, அதாவது அவன் உயிர் பிழைத்து மீண்டும் மீண்டும் வந்து உழைக்கத் தேவையான அற்பக் கூலி மட்டுமே என்று உணர வைத்தார் மார்க்ஸ். அதுநாள் வரையில் “தான் சுரண்டப்படுகிறோம்” என்ற உணர்வே இல்லாமல் இருந்த பாட்டாளி வர்க்கத்திடம் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது மார்க்ஸின் கோட்பாடு. இந்த வகையில் மே தின வரலாறு என்பது மார்க்ஸை விடுத்துத் தனித்துப் பார்க்க முடியாத ஒன்று என்பது பேருண்மை.
8 மணி நேரப் போராட்டமும் மே தின வரலாறும்
“வேலை நாளுக்குச் சட்டப்பூர்வமான அளவு முதலாவது தேவையாகும். இது இல்லாமல் தொழிலாளி வர்க்க முன்னேற்றம் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் முழுமையாக இருக்காது. வேலை நாளுக்கான சட்டப்பூர்வ அளவு எட்டு மணி நேரமாக இருக்க வேண்டும்” – இது மாமேதை காரல் மார்க்ஸ் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் தனது “மூலதனம்” என்ற நூலில் கூறியது.
அதன் பிறகு 8 மணி நேர வேலைக்கான போராட்டம் பெரும் எழுச்சியோடு நடைபெறத் தொடங்கியது. “8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம்” என்ற முழக்கத்தோடு பாட்டாளி வர்க்கம் போராடி வந்த நிலையில், 1884-ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடைபெற்ற அமெரிக்கத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் மாநாட்டில், மே 1-ஆம் தேதி முதல் 8 மணி நேர வேலை என்பதைச் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தைச் செயல்படுத்தக்கோரி 1886 மே 1-ஆம் தேதி அன்று அமெரிக்காவில் மிகப்பெரிய வேலை நிறுத்தம் நடைபெற்றது. மே 3-ஆம் தேதி ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காவலர்களால் கலவரம் தூண்டப்பட்டது. அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, போராடிய தொழிலாளர்கள் இரத்தச் சகதியில் மூழ்கடிக்கப்பட்டும், முன்னணிப் போராளிகள் தூக்கிலிடப்பட்டும் கொல்லப்பட்டதன் நினைவாகவே, ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நாள் உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் வர்க்கத்தால் உழைப்பாளர் தினமாக எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் உழைப்பாளர் தினம்
இந்தியாவில் 1923-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி முதன்முதலில் தோழர் சிங்காரவேலர் அவர்களால் மெட்ராஸ் மாகாணத்தில் மே தினக் கொடி ஏற்றப்பட்டது. 1957-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட்கள் தலைமையில் அமைந்த கேரள அரசு மூலம் முதன்முதலில் மே நாள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. இந்த நூறு ஆண்டுகளில் இந்தியத் தொழிலாளி வர்க்கம் பல்வேறு வீரம் செறிந்த போராட்டங்களின் மூலம் இந்திய அரசிடமிருந்து குறிப்பிடத்தக்க உரிமைகளைப் பெற்றுள்ளது. தொழிற்சங்கச் சட்டம்-1926 மற்றும் தொழிற்சாலைகள் சட்டம்-1948 போன்றவை இதில் முக்கியமானவையாகும்.
பொதுவாகவே சமூக அமைப்பின் ஒவ்வொரு காலகட்டத்திலும் புகுத்தப்படும் புதிய நவீனத் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப உற்பத்தித் திறன் வளர்ச்சி பெறுகிறது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பொருளை உற்பத்தி செய்ய ஆகும் நேரம் முன்னர் இருந்ததை விடக் குறைகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை முன்னர் இருந்ததை விட அதிகரிக்கிறது. எனவே ஒரு தொழிலாளி புதிய தொழில்நுட்பத்தின் வருகைக்கு முன்னர் வேலை செய்ததை விட தற்போது குறைவான நேரம் வேலை செய்தாலே போதுமானதாகிறது. எனவே அந்த குறிப்பிட்ட கட்டத்தில் தொழிலாளியின் வேலைநேரம் குறைக்கப்பட்டுப் புதிய தொழில்நுட்பத்தால் கிடைக்கும் பலனை அவனுக்கு வழங்க வேண்டியது அவசியமாகிறது. 150 ஆண்டுகளுக்கு முன்னர் 8 மணி நேரமாக இருந்த இந்த வேலை நேரம், உற்பத்தி சக்திகள் பல மடங்கு வளர்ச்சி பெற்று, தொழில்நுட்பங்கள் நவீனத் தன்மையை அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் அவசியம் குறைக்கப்பட வேண்டும். அவ்வாறு நடக்காத பட்சத்தில் தொழிலாளி வர்க்கம் வெகுண்டெழுந்து தன் உரிமையை நிலைநாட்டிக்கொள்ளும் என்பதே வரலாறு.
உலகளாவிய மாற்றங்களும் இந்தியச் சூழலும்
அதுபோன்ற எழுச்சிகள் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காகவே வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் அரசாங்கங்கள் தொடர்ந்து தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைத்து வருவதைக் காணலாம். இன்று பல வளர்ந்த நாடுகள் இதனைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஜப்பான், ஸ்பெயின் போன்ற நாடுகள் வாரம் 4 நாள் வேலை என்ற இலக்கை நோக்கி முன்னேறியுள்ளன. நார்வே, சுவீடன், சுவிட்சர்லாந்து, இத்தாலி, பின்லாந்து போன்ற நாடுகள் 6 மணி நேர வேலை என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
உற்பத்தித் துறை வேகமாக வளர்ந்து வருகின்ற நமது நாட்டிலும் இந்த வேலை நேரக் குறைப்பு என்பது நடைபெற வேண்டும். ஆனால் இங்கு ஆட்சியில் இருப்பவர்கள் இதற்கு எதிர் திசையில் பயணிக்கின்றனர். இந்தியப் பாட்டாளி வர்க்கம் போராடிப் பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தையும் மாற்றிப் புதிய நான்கு சட்டத் தொகுப்புகளாக ஒன்றிய அரசு மாற்றியுள்ளது. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப்பேர உரிமை, வேலைநேர உரிமை, வேலைநிறுத்த உரிமை, பணிப்பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதிய உரிமை, விபத்து இழப்பீடு போன்ற தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமைகள் அனைத்தையும் பறித்திடுவதாக இது அமைந்துள்ளது.
தற்காலச் சவால்களும் தீர்வும்
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்தச் சட்டத் தொகுப்புகள் தொழிலாளர்களைச் சட்டப்படியாகவே நீண்ட நேர வேலைக்கு உட்படுத்தியும், குறைந்த ஊதியம் வழங்கியும் சுரண்டுவதற்கு முதலாளிகளுக்குச் சாதகமான வாய்ப்புகளை அளிக்கின்றன. இதன் விளைவுகள் நாடு முழுவதும் பல பகுதிகளில் வெளிப்பட்டுள்ளன. மிகச் சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் நோய்டா, பரிதாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் தொழிலாளர்கள் மாதாந்திர குறைந்தபட்ச ஊதிய உயர்வு, வேலை நேர அளவு குறைப்பு, மிகைநேரப் பணிக்கு (Overtime) இரட்டை ஊதியம், சட்டப்படியான போனஸ் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திச் சக்திமிக்கப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒன்றிய அரசு ஒருதலைப்பட்சமாக அறிவித்த நான்கு தொழிலாளர் சட்டங்களே இத்தகைய தொழிலாளர் போராட்டங்களுக்கும் அதிருப்திக்கும் முக்கிய காரணம் என்றும், இந்த புதிய சட்டங்கள் தினமும் 13 மணி நேர வேலைக்குச் சட்டப்பூர்வ அனுமதி அளிப்பதன் மூலம் தொழிலாளர்களைச் சுரண்டுகின்றன என்றும், தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்துகின்றன என்றும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
எனவே வேலைக்கேற்ற ஊதியமில்லாமல், அடுத்த நாள் வேலைக்கு உத்தரவாதமில்லாமல் கொத்தடிமைகளைப் போலத் தொழிலாளர்கள் சுரண்டப்பட்டும், தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற 8 மணி நேர வேலை, தொழிற்சங்கம் அமைத்தல் உள்ளிட்ட உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டும் வருகிற இந்த நவதாராளமய காலகட்டத்தில், இன்னும் உத்வேகத்துடனும் எழுச்சியுடனும் நம் உரிமைக்கானப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு இந்த முதலாளித்துவச் சமூக அமைப்பில் நம் ஒன்றுபட்ட வலிமையான போராட்டங்களின் மூலம் சில உடனடி உரிமைகளைப் பெற்றிடப் போராடும் அதே நேரத்தில், இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்குமான நிரந்தரத் தீர்வு என்பது தற்போது நிகழும் முதலாளித்துவச் சமூக அமைப்பின் ஒட்டுமொத்த வீழ்ச்சியில் தான் அடங்கியுள்ளது என்பதையும் பாட்டாளி வர்க்கம் உணர வேண்டும். அந்த வகையில் சிலர் வாழப் பலர் வாடும் தனியுடைமைக் கொடுமை நீங்கி, எல்லோரும் எல்லாமும் பெற்றிடும் பொதுவுடைமைச் சமூகம் அமைய ஒன்றிணைவோம் என இந்த உழைப்பாளர் தினத்தில் உறுதி ஏற்போம்.
“உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்! நாம் இழப்பதற்கு ஏதுமில்லை, கைவிலங்குகளைத் தவிர. ஆனால் அடைவதற்கோ நமக்கே நமக்கான ஒரு பொன்னுலகம் காத்துக்கொண்டிருக்கிறது” – காரல் மார்க்ஸ்.
கட்டுரையாளர்: க.சிவசங்கர்




