அரசியல்

தேய்ந்து போகிறது இந்திய வெளியுறவுக் கொள்கை – களப்பிரன்

”இந்தியா விடுதலை பெற்ற பின்புதான் தனது சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை உருவாக்கியது” என்று நம்மில் பலர் நினைக்கக்கூடும். ஆனால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு வயது 101. சுதந்திரத்திற்கு முன்பே 1925-இல் காங்கிரஸ் கட்சி தனது விடுதலைப் போராட்ட செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகக் கட்சியின் சார்பாக வெளியுறவுத் துறை ஒன்றை உருவாக்கியது. அத்துறை வெளிநாட்டுத் தொடர்புகளை ஏற்படுத்தி, இந்திய விடுதலைக்கான தங்களின் குரலைச் சர்வதேச அரங்கில் வைக்கும் செயலைச் செய்தது.

அதுமட்டுமல்லாமல் சர்வதேச விவகாரங்களில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை இத்துறையின் வழிகாட்டுதலில் சொல்லி வந்தது. அப்போதே அத்துறைக்குப் பொறுப்பு வகித்தவர் ஜவஹர்லால் நேரு. அதன் பின்பு 1927-இல் பெல்ஜியம் நாட்டின் பிரஸல்சில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட நாடுகளின் காலனித்துவ ஒடுக்குமுறை மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சர்வதேச மாநாட்டில் நேரு இந்தியாவின் சார்பாகக் காங்கிரசால் அனுப்பி வைக்கப்பட்டார். அந்த அளவிற்கு அத்துறை அப்போதே வளர்ந்திருந்தது.

அப்போதிருந்த வெளியுறவுத் துறையின் கொள்கை காலனித்துவ எதிர்ப்பு, ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் ஒற்றுமை, உலக அமைதி ஆகியவையே ஆகும். இக்கொள்கையை அடித்தளமாகக் கொண்டே இந்திய விடுதலைக்குப் பின் பஞ்சசீலக் கொள்கை, அணிசேரா நாடுகள் என்று சிறுகச் சிறுக வளர்ந்து இன்று உலகின் சிறந்த வெளியுறவுக் கொள்கையைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது.

இந்திய விடுதலைக்கு முன்பாகவே ஆசிய உறவுக்கான மாநாடு ஒன்றை 1947 மார்ச் மாதத்தில் ஜவஹர்லால் நேரு டெல்லியில் கூட்டினார். விடுதலை பெறாத இந்தியாவின் அழைப்பின் பேரில் இம்மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொண்டன. இம்மாநாட்டின் நோக்கம் ஆசிய நாடுகளின் விடுதலை மற்றும் சர்வதேச அளவில் ஆசியாவின் முக்கியத்துவத்திற்காக நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1948 டிசம்பர் மாதம் இந்தோனேசியாவை மறுகாலனியாக்கம் செய்யத் துடித்த டச்சு அரசாங்கத்தை எதிர்த்து இந்தோனேசியாவில் இந்தியாவின் முயற்சியால் ஆசிய மாநாடு மீண்டும் கூட்டப்பட்டது.

1954-இல் மீண்டும் காலனி ஆதிக்க நீக்கத்தை வலியுறுத்தி இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆசிய மாநாட்டை முன்னெடுத்தது இந்தியா. அதே 1954-இல் சீனாவோடு சேர்ந்து 1.ஒவ்வொரு நாட்டின் எல்லையையும் இறையாண்மையையும் பரஸ்பரம் மதித்தல், 2.பரஸ்பரம் ஆக்கிரமிப்பின்மை, 3.பரஸ்பரம் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமலிருத்தல், 4.பரஸ்பர நலனுக்காகச் சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல், 5.அமைதியாகச் சேர்ந்திருத்தல் என்ற பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கியது.

1955-இல் உலக அமைதி மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய உச்சி மாநாட்டில் இந்தப் பஞ்சசீலக் கொள்கையோடு கூடுதலாக 1. அடிப்படை மனித உரிமைகள் மற்றும் ஐநா சாசனத்தின் மீதான மரியாதை, 2. சமத்துவம் 3. தற்காப்பு உரிமை, 4.கூட்டுப்பாதுகாப்பு ஒப்பந்தங்களைத் தவறாகப் பயன்படுத்தாமை 5.நிதி மற்றும் சர்வதேச கடமைகளை மதித்தல் என்ற ஐந்து கொள்கைகளும் சேர்த்து 10 கொள்கைகளாகப் பாண்டுங் பிரகடனம் வெளியிடப்பட்டது.

இதற்கு இடையில் 1953-லேயே அணிசேரா நாடுகள் எனும் கொள்கையை இந்தியா சார்பாக ஐநா மன்றத்தில் பேசினார் வி.கே. கிருஷ்ண மேனன். அதற்கு அடித்தளம் அமைக்கும் மாநாடாகப் பாண்டுங் மாநாடு அமைந்தது. அதனைத் தொடர்ந்து 1961-இல் யூகோஸ்லாவியாவின் தலைநகராக இருந்த பெல்கிரேடில் அணிசேரா இயக்கம் முழுமையாக அமைக்கப்பட்டது.

பாண்டுங் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு அப்போதிருந்த உலகின் வல்லரசு நாடுகளிடமிருந்து விலகி, ஒவ்வொரு நாட்டின் சுயேச்சையான செயல்பாட்டை, அதன் இறையாண்மையைப் பாதுகாக்கும் பணியை இந்த அணிசேரா இயக்கம் செய்தது. இந்தியா, இந்தோனேசியா, எகிப்து, யூகோஸ்லாவியா, கானா ஆகிய ஐந்து நாடுகளால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சிகள் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எரிச்சலடையச் செய்தது. இதன் காரணமாகவே இலங்கை பண்டாரநாயக்கவின் கொலை, இந்தோனேசிய சுகர்னோவின் ஆட்சிக் கலைப்பு, பத்து லட்சம் கம்யூனிஸ்டுகள் படுகொலை, இந்தியாவில் நேரு மீதான கொலை முயற்சி எல்லாம் நடந்ததாக அமெரிக்க உளவு நிறுவனங்களின் செய்தி கூறுகிறது.

இத்தனை அச்சுறுத்தல்களைத் தாண்டித்தான் அணிசேரா நாடுகளின் இயக்கம் இந்திய வெளியுறவுத்துறையின் வலுவான தலையீட்டால் அன்று உருவாக்கப்பட்டது. இதையெல்லாம் செய்கின்ற போது இந்தியா பெரிய பொருளாதார நாடு அல்ல. இந்தியாவில் இராணுவ வலிமை கூடக் கிடையாது. ஆனாலும் நேரு போன்ற தலைவர்களின் அனுபவம் மிக்க, உறுதி மிக்கச் செயல்பாடு இதைச் சாத்தியமாக்கியது.

1979-இல் பிடல் காஸ்ட்ரோ இந்த இயக்கத்தை இன்னும் செழுமைப்படுத்தினார். இன்று உலகின் 121 நாடுகளோடு மூன்றில் இரண்டு பங்கு கொண்ட உலகின் மிகப்பெரிய கூட்டமைப்பாக இது வளர்ந்துள்ளது. இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிநாதமே காலனிய மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தல், இன ஒதுக்குதலை எதிர்த்தல், இன வெறியை எதிர்த்தல், வல்லரசு நாடுகளுடன் அணி சேராமை, ஆப்பிரிக்க ஆசிய ஒற்றுமை, மற்ற நாடுகளை ஆக்கிரமிக்காமல் இருப்பது, மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது, ஒரு நாடு இன்னொரு நாட்டின் நில எல்லையை மதித்தல், இறையாண்மையை மதித்தல், உலக அமைதி, நாடுகளுக்குள் போரின்றி பேச்சுவார்த்தையைச் சமநீதியுடன் நடத்துதலைப் பாதுகாத்தல் ஆகும்.

இந்தக் கொள்கையே அணிசேரா நாடுகளின் கொள்கையானது. இது இந்தியாவின் அரசியல் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அன்று நேரு தலைமையிலான அரசு வகுத்துக் கொடுத்த வலுவான வெளியுறவுக் கொள்கையே இந்தியாவை பல நேரங்களில் உலக அரங்கில் உயர்த்திப் பிடித்துள்ளது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் இந்திய வெளியுறவுக் கொள்கையின் செயல்பாடுகள் கவலை தரும் வகையில் இருக்கின்றன. இது ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தை, அதன் இறையாண்மையைப் பாதித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் மோதலின் போது மேற்கண்ட வெளியுறவுக் கொள்கை பலவும் பலவீனமாக இருந்தது. நம் நாட்டு விவகாரங்களில் அந்நிய நாட்டுத் தலையீடு இருக்கக்கூடாது என்ற நமது 75 ஆண்டுகால வெளியுறவுக் கொள்கையில் பாகிஸ்தான் இந்தியா போர் நிறுத்த அறிவிப்பை ட்ரம்ப் அறிவித்து அதன் வீழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

அதன் பின் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கக்கூடாது என்று ட்ரம்ப் சொல்ல, இந்தியா சரி என்று வாங்காமல் தனது ”இறையாண்மை” எனும் வெளியுறவுக் கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டது. தற்போது ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என்று ட்ரம்ப் சொன்னவுடன் மீண்டும் எண்ணெய் வாங்கத் தொடங்கி மேலும் உயரப் பறக்கவிட்டுள்ளது.

இந்தியா மீது எத்தனை மடங்கு வரி உயர்த்தப்பட்டாலும், சிறிய நாடுகள் கூட எதிர்வினை செய்தன. ஆனால் ”தற்காப்பு” எனும் நமது வெளியுறவுக் கொள்கையை அப்போது தேடிக்கொண்டிருந்தார் நம் பிரதமர். சட்டவிரோதக் குடியேறிகள் என்று சொல்லிப் பல நாட்டினர் விலங்கிட்டு நாடுகடத்தப்பட்ட போது, சின்னச் சின்ன நாடுகள் கூடக் கொந்தளித்தன. ஆனால் இந்தியாவின் விஸ்வகுரு ”மனித உரிமைகளை” வலியுறுத்தும் தமது வெளியுறவுக் கொள்கையின் மேல் மௌன குருவாக அமர்ந்திருந்தார்.

ஈரான் போரில் அதன் உயர் தலைவர் கொல்லப்பட்டபோதும், அங்கு 165 குழந்தைகளை இஸ்ரேலிய இராணுவம் குண்டு வீசிக் கொலை செய்த போதும் இந்தியா அதைக் கண்டிக்காவிட்டாலும் அதற்கு இரங்கல் கூடத் தெரிவிக்காமல் ”உலக அமைதி” எனும் வெளியுறவுக் கொள்கையை குத்திக் கிழித்தது. இஸ்ரேலின் தொடர் அத்துமீறல்களைக் கண்டிக்காவிட்டாலும், இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துக்களைக் கூறி ”ஆக்கிரமிப்பிற்கு எதிரான” தமது வெளியுறவுக் கொள்கைக்குக் கொள்ளி வைக்கிறது.

இந்தியாவிற்கு விருந்தினராக வந்த ஈரான் கப்பற்படை வீரர்களை இந்தியக் கடல் எல்லையிலேயே அமெரிக்காவால் குண்டுபோட்டுக் கொலை செய்யப்பட்ட போதும், ”நம் நாட்டிற்குள்ளான அத்துமீறலைக் கண்டிக்காமல்” மௌனமாக இருந்து நமது வெளியுறவுக் கொள்கையை மண்ணைக் கவ்வ வைத்தது. ”நாடுகளுக்குள் போரின்றி பேச்சுவார்த்தை மூலமாக அமைதியை நிலைநாட்ட வேண்டும்” என்கிற நமது வெளியுறவுக் கொள்கையை அமல்படுத்தக் கிடைத்த வாய்ப்பையும் இப்படியான தொடர் செயல்பாடுகளால் பாகிஸ்தானிடம் இழந்துள்ளது இந்தியா.

இப்படியான வெளியுறவுக் கொள்கையின் தொடர் விளைவைப் பல இடங்களில் பார்க்கிறோம். இந்தியாவின் சந்தைகளில், பணவீக்கத்தில், விலையேறியுள்ள சிலிண்டரில், எண்ணெயில், டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் வீழ்ச்சியில், ஜிடிபியில் உலகின் 4-ஆம் இடத்திலிருந்து தற்போது 6-ஆம் இடத்திற்கு இந்தியா சரிந்துள்ளதில், ஏற்றுமதி வீழ்ச்சியில், அண்டை நாடுகளுடனான சீர்குலைந்த உறவில் என்று பல இடங்களில் நமது வெளியுறவுக் கொள்கையின் வீழ்ச்சியின் விளைவைப் பார்க்கிறோம்.

BRICS எனும் கூட்டமைப்பில் ‘I’ என்று இந்தியாவிற்கு இருந்த இடத்தை ஈரானுக்குக் கொடுத்துவிடலாம் என்கிற பேச்சுவார்த்தைகள் சர்வதேச அரங்கில் ஒலிப்பது நமது காதுகளில் கேட்கிறது. இது போன்ற வெளியுறவுத் துறை வீழ்ச்சி குறித்து எந்த உரையாடல்களும் இங்கு நடைபெறுவதில்லை. ஆனால் SIR/NRC/CAA போன்றவற்றின் மூலமாக அந்நியர்களை வெளியேற்றுகிறேன் என்று சிறுபான்மையினரை குறிவைக்கும் கொடூரத்தின் மூலம் “இனவாத கொள்கைக்கு எதிரான” நமது வெளியுறவுக் கொள்கையும் சிதைக்கப்படுகிறது.

இவைகள் எல்லாம் பேசு பொருளாகிவிடக் கூடாது என்றுதான் அன்றாடம் தேசியவாத போதை இங்கு கோப்பை கோப்பையாகக் கொடுக்கப்படுகிறது. ரூ.500, ரூ1000 ஒரே நாளில் செல்லாது என்று அறிவித்த தவறான பொருளாதாரச் செயல்பாடுகளை நியாயப்படுத்தும் ”துரந்தர்” போன்ற திரைப்படங்களை காட்டி இங்கு மயக்கத்திலேயே வைத்திருக்கிறார்கள். கேரளா ஸ்டோரி, காஷ்மீர் பைல்ஸ் என்று வன்மத்தை மட்டும் கக்கும் டிஜிட்டலில் சைட் டிஷ்கள் சூடாகக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு இந்தோனேசியா சென்ற போது 1955-இல் அணிசேரா நாடுகளுக்கு அடித்தளமிட்ட பாண்டுங் நகருக்குச் சென்றிருந்தேன். அங்குதான் நேருவும், சுகர்னோவும் கைகோர்த்துப் பஞ்சசீலக் கொள்கையை உள்ளடக்கிய ”பாண்டுங் பிரகடனத்தை” வெளியிட்டு மூன்றாம் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்கள்.

அந்நாட்டு மக்கள் அம்மாநாடு நடைபெற்ற அத்தெருவிற்கு ”ஆசிய ஆப்பிரிக்கத் தெரு” என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். உணர்ச்சிப் பெருக்கில் அந்தத் தெருவில் நின்றுகொண்டு நான், அண்ணாந்து நேருவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அருகில் பள்ளத்திலிருந்து நமது பிரதமர் மோடியின் குரல் வலிமையற்று கேட்டது.

– களப்பிரன்

Leave a Reply