“முதல் ஸ்டெதஸ்கோப் பெண்கள்” என்ற தலைப்பைப் பார்த்தவுடனேயே, இது முதல் பெண் மருத்துவர்களைப் பற்றிய நூலாக இருக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். எப்போதும் போலத் தோழர் சிந்தனின் எழுத்து நடை, ஒரு திரைப்படத்தின் திரைக்கதையைப் போல வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்கிறது. அதற்கேற்ப, இந்த நூலும் “அடுத்தது என்ன?” என்ற எதிர்பார்ப்புடன் வாசகர்களை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது.
“முதலில் சாதித்தவர் யார்?” என்ற கேள்வி மனிதர்களிடையே இயல்பாகவே எழும். அந்தத் தேடலை மருத்துவத் துறைக்குள் கொண்டு சென்று, உலகின் முதல் பெண் மருத்துவர்கள் யார், அவர்கள் எத்தகைய தடைகளைத் தாண்டி வெற்றி பெற்றார்கள் என்பதை இந்த நூல் சிறப்பாக அறிமுகப்படுத்துகிறது.
இந்தப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார் என்ற ஒரு கேள்வியும் என் மனதில் எழுந்தது. அந்தக் கேள்விக்கான விடையாக, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்திரிபாய் புலே அவர்களின் வரலாறும் போராட்டங்களும் என் நினைவிற்கு வந்தன. பெண் கல்விக்காக அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்பும் சமூக மாற்றத்திற்கான அவரது பங்களிப்பும், இந்த நூலை வாசிக்கும் தருணங்களில் மீண்டும் மீண்டும் என் மனதில் வந்து சென்றன.
ஏழு கட்டுரைகள் வாயிலாக உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஏழு முன்னோடி பெண் மருத்துவர்களின் போராட்டக் குணமிக்க வாழ்க்கையை ஆசிரியர் இதில் சித்தரிக்கிறார். பெண்கள் ஏன் படிக்க வேண்டும், குடும்பத்தை மட்டுமே கவனித்தால் போதாதா, சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கப்படும் சமூகச் சூழல் போன்ற பல தடைகளை மீறி அவர்கள் கல்வி கற்ற வரலாற்றை மிக அழகாக எடுத்துரைக்கிறார்.
எங்கள் கிராமம் சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் கடந்த பிறகும் ஒரு மருத்துவர் கூட அங்கு இல்லை என்பதையும், தற்போதுதான் ஒரு மாணவன் மருத்துவம் பயின்று வருகிறான் என்பதையும் நினைத்தபோது, இந்த நூல் எங்கள் கிராமத்தின் முதல் மருத்துவர் யார் என்ற தேடலையும் என்னுள் ஏற்படுத்தியது. அந்த வகையில், ஒரு துறையில் முதன்முதலாகத் தடம் பதித்தவர்களை அடையாளம் காண இந்த நூல் பெரிதும் உதவுகிறது.
இந்த நூலில் இடம்பெறும் முதல் பெண் மருத்துவர் ஜேம்ஸ் பேரியின் வாழ்க்கை மிகவும் வியப்பூட்டுகிறது. ஒரு பெண் ஆண் வேடமிட்டு கல்வி கற்று, ராணுவத்தில் பணியாற்றி, மருத்துவராக உயர்ந்தது கற்பனைக் கதை அல்ல; அது நிஜ வரலாறு. அப்பாவும் மகளும் பேசிக்கொள்ளும் உரையாடல் வடிவில் அந்த வரலாற்றை ஆசிரியர் சுவாரஸ்யமாகக் கூறுகிறார்.
அந்தக் காலத்தில் மருத்துவம் பயில்வது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது; பெண்களுக்கு அது இன்னும் சவாலானது. அத்தகைய சூழலில் ஜேம்ஸ் பேரி தன்னம்பிக்கையுடன் போராடி மருத்துவரானார். சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் தாயையும் குழந்தையையும் காப்பாற்றிய முன்னோடிகளில் ஒருவராக அவர் விளங்கியதை வாசிக்கும்போது, மருத்துவத் துறையின் மனிதநேயப் பணியை நம்மால் உணர முடிகிறது.
அதன் பின்னர் அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவரான எலிசபெத் பிளாக்வெல்லின் வாழ்க்கை அறிமுகமாகிறது. ரத்தத்தைப் பார்த்தாலே மயங்கி விழுந்தவர், தனது தோழியின் மரணத்தைத் தொடர்ந்து மருத்துவராக வேண்டும் என்று உறுதியாக முடிவு செய்தார். 150 ஆண்களுக்கு மத்தியில் ஒரே பெண்ணாக மருத்துவம் பயின்று, 1849ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவராகப் பட்டம் பெற்றார். பின்னர் பெண்களுக்கான மருத்துவக் கல்லூரியைத் தொடங்கி, நூற்றுக்கணக்கான பெண்கள் மருத்துவர்களாக உருவாக அவர் வழிவகுத்தார்.
இந்தியாவில் பெண்கள் மருத்துவம் பயில்வது இன்னும் கடுமையானதாக இருந்தது. பெண்ணாகப் பிறந்ததோடு சாதியும் ஒரு பெரிய தடையாக இருந்தது. அந்தச் சூழலில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான ஆனந்திபாய் ஜோஷியின் வாழ்க்கை மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது. குழந்தைத் திருமணம், குழந்தையின் மரணம், சமூக அவமதிப்புகள் ஆகியவற்றை எதிர்கொண்டு, பிறரைத் துயரத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் அவர் மருத்துவம் படித்தார். ஆனால், மருத்துவராகப் பணியைத் தொடங்கும் சில நாட்களுக்கு முன்பே அவர் உயிரிழந்தது மிகவும் வேதனையான நிகழ்வாகும்.
ஆனந்திபாய்க்கு முன்பே மருத்துவம் பயில முயன்ற அபலா போஸ் பற்றியும் இந்த நூல் குறிப்பிடுகிறது. உடல்நலக் குறைவால் அவரால் மருத்துவராக முடியாவிட்டாலும், பெண் கல்விக்காக நூற்றுக்கணக்கான பள்ளிகளைத் தொடங்கிப் பெரும் சமூகப் பணியை அவர் ஆற்றினார்.
இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்றிய முதல் பெண்மணியான காதம்பினி கங்குலி பற்றியும் ஆசிரியர் விரிவாக எழுதுகிறார். மருத்துவக் கல்லூரிகளில் பெண்களைச் சேர்க்கும் நடைமுறைக்கு அவர் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார். குழந்தைத் திருமணத்திற்கு எதிராகப் போராடி மருத்துவரான ருக்மாபாய் பற்றிய தகவல்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் பற்றிய பகுதியும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. 1912ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்று, அறுவைச் சிகிச்சை பாடத்தில் முழு மதிப்பெண் பெற்ற அவரது சாதனை நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. சமூகத் தடைகளைத் தாண்டி கல்வி கற்றுச் சாதித்த அவரது வாழ்க்கை பெண்களுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
ஒரு காலத்தில் நோய்கள் அனைத்தும் தீய சக்திகளின் செயலாகக் கருதப்பட்டன; ஆனால் மருத்துவ அறிவியல் மனிதனை அந்த மூடநம்பிக்கைகளிலிருந்து விடுவித்தது. இன்று நாம் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுகிறோம். அத்தகைய உன்னதமான மருத்துவத் துறையை உருவாக்கிய முன்னோடி மருத்துவர்களின் வரலாற்றை அறிந்து கொள்வது நம் ஒவ்வொருவருக்கும் அவசியமானது.
அந்த வகையில், உலகிலும் இந்தியாவிலும் மருத்துவத் துறையில் முதன்முதலாகத் தடம் பதித்த பெண்களின் போராட்டங்களையும் சாதனைகளையும் எளிய மொழியில் அறிமுகப்படுத்தும் ஒரு முக்கிய நூலாக “முதல் ஸ்டெதஸ்கோப் பெண்கள்” விளங்குகிறது. மருத்துவர்கள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாணவரும், ஒவ்வொரு வாசகரும், ஒவ்வொரு மனிதரும் வாசிக்க வேண்டிய ஒரு சிறந்த நூல் இது.
– அமுதன் தேவேந்திரன்








சிறப்பான அறிமுகம் வாழ்த்துகள்