“அப்பா! ஆப்பிரிக்கா வரைபடத்திற்கும் ஐரோப்பா வரைபடத்திற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. அது என்ன தெரியுமா?” என்று பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த போது எனது மகள் புதிர் ஒன்றை அவிழ்த்துவிட்டாள். இது..அது என எனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் நான் சொல்ல, அவள் ஒவ்வொன்றாக மறுத்து வந்தாள். “சரி! நீயே சொல்லு” என்றேன்.
“ஐரோப்பிய தேசங்களின் எல்லைக் கோடுகள் நிறைய வளைவு நெளிவுகளுடன் இருக்கும், ஆனால் ஆப்பிரிக்கத் தேசங்களின் எல்லைக் கோடுகளோ நேர்கோடுகளாக இருக்கும் (குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்கத் தேசங்கள்). இதை நீங்கள் கவனிச்சிருக்கீங்களா?” என்றாள்.
“அட ஆமாம்! ஏன் அப்படி?” என்று கேட்டேன். “அடிமை வர்த்தகத்திற்காக ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குள் பேசி தங்களுக்கான பங்குகளை இதுபோல் பிரித்துக்கொண்டனர். அப்படி உருவானதுதான் இத்தேசங்களின் எல்லைக் கோடுகள்” என்றாள்.
மகளுடனான இந்த உரையாடல், அதன் பிறகு எனது நினைவுகளை இந்திய எல்லைக்கோடுகள் குறித்த வரலாற்றின் பக்கம் அழைத்துச் சென்றது. குஷ்வந்தர் சிங்கின் பாகிஸ்தான் போகும் ரயில், சாதத் ஹசன் மண்ட்டோவின் புத்தகங்கள், எஸ். ராவின் எனது இந்தியா, தமிழ்ச்செல்வனின் இந்தியச் சுதந்திர வரலாற்றின் சிறு பதிப்புகள் என இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக் காலம் குறித்த எனது வாசிப்புகளை மனம் மீட்டெடுத்துக் கொண்டிருந்தது. சில நேரங்களில் வாசகரைப் புத்தகம் தேடி வந்தடையும் என்பார்கள். அப்படி என் மனம் எல்லைக்கோடுகள் குறித்து அவ்வப்போது நினைத்துக்கொண்டிருந்த போதுதான் சுசித்ரா விஜயன் அவர்கள் எழுதிய “நடுநிசி எல்லைகள்” புத்தகம் என் வசம் வந்தடைந்தது. தமிழில் ஞான. வித்யா மொழிபெயர்த்து, சீர்மை பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது. நானும், வித்யா அவர்களும் இலண்டனில் வசித்து வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. (சுசித்ரா அவர்கள் லண்டனில் பயின்று தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.)
லண்டனில் பவுசர் அவர்களின் ஒருங்கிணைப்பில் அவ்வப்போது புத்தகக் கண்காட்சி நடப்பது வழக்கம். புத்தக வெளியீடு, புத்தக அறிமுகங்கள், விமர்சனக் கூட்டம் என லண்டனில் உள்ள தமிழ் எழுத்தாளர்களின் ஒன்றுகூடலாகவும் இந்நிகழ்வுகள் அமைந்து வருகிறது. அப்படியான ஒரு நிகழ்வில், “நடுநிசி எல்லைகள்” புத்தக அறிமுக கூட்டம் நடந்தது. அதில் நான் உட்பட மூன்று நண்பர்கள் பேசினோம். வித்யா அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
சுமார் 350 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம், 13 ஊர்களை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கீழ்க்கண்ட ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எனது உரை ஐந்தாம் பாகமான இந்தியா – பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்திருந்தது. நிகழ்வில் பேசிய உரையின் எழுத்து வடிவமே இந்தக் கட்டுரை.
- ஆஃப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லை
- இந்திய – வங்கதேச எல்லை
- இந்திய – சீன எல்லை
- இந்தியா – மியான்மர் எல்லை
- இந்தியா – பாகிஸ்தான் எல்லை
இந்திய எல்லைக்கோடுகள் என்றதுமே – இராணுவ வீரர் தியாகம் நம் நினைவிற்கு வர வேண்டும் என்ற கட்டாயத்தைத் திரைப்படங்கள் நம்முள் ஏற்படுத்தி வைத்துள்ளன. எல்லைக்கு அப்பால் இருக்கும் மனிதர்களின் பிம்பத்தைக் கட்டமைப்பதே இவர்களது நோக்கம். ஆனால், எல்லைக்குள் வசிக்கும் இதே தேசத்து மனிதர்களின் நிலை என்ன என்ற கேள்வி நம்முள் எழாமல் வைத்திருப்பதில் அதிகாரம் எப்போதும் வெற்றியடைந்து கொண்டேயிருக்கிறது. திரைப்படங்கள் ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம், அன்றாடம் ஒரு சர்ச்சை, அதற்கான சூடான விவாதங்கள் என instant வாழ்வு முறைக்கு நம்மைப் பழக்கப்படுத்துவதில் அதிகாரத்திற்கு நெருக்கமான செய்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
உண்மையை அறிந்து கொள்வது என்பது குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. தொடர் வாசிப்பு மட்டுமே உண்மையை அறிந்துகொள்ளும் வழியாக அமைகிறது. அந்தத் தேடல், ஒரு வாசகரை எழுத்தாளராக மாற்றவும் செய்கிறது. இந்தப் புத்தகமும் அப்படிதான். “நடுநிசி எல்லைகள்” புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்த வித்யா அவர்களின் முதல் மொழிபெயர்ப்பு இது. ஆங்கிலத்தில் வாசித்த பிறகு, அவரே சுசித்ரா அவர்களைத் தொடர்பு கொண்டு முறையாக தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சுசித்ராவின் எழுத்து நடை ஒரு வாசகரைப் புத்தகத்தின் நோக்கத்திற்கு எவ்வளவு நெருக்கமாக அழைத்துச் செல்கிறதோ, அதே அளவு நெருக்கத்தைத் தமிழ் மொழிபெயர்ப்பில் தந்துள்ளார் வித்யா. கடந்த 20 ஆண்டுகளில் சாமானிய மனிதர்கள் தமிழ் இலக்கிய உலகிற்கு அளித்த பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதற்கான ஓர் உதாரணம் இந்த மொழிபெயர்ப்பு என்று கூறலாம்.
இந்தப் புத்தகத்தை அதன் முன்னுரை மற்றும் அறிமுக உரையுடன் தொடங்குவது அவசியம் என்று கருதுகிறேன். சில நேரங்களில், புத்தகத்தின் திறவுகோலாக அதன் முன்னுரை அமைந்துவிடும். அப்படியான ஒரு முன்னுரையை ரொமிலா தாப்பர் அவர்கள் வழங்கியுள்ளார். இது எல்லைகள் குறித்த ஓர் அடிப்படைப் புரிதலை நமக்குக் கட்டாயம் தரும்.
“எல்லைக்கோடுகள் இரண்டு விதமாக உருவாக்கப்படுகின்றன: ஒன்று: குறிப்பிட்ட பகுதியில் நிலவும் நகர்வுகளையும் நடமாட்டத்தையும் அவதானித்து அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்படுபவை; இவை முழுமையாகவும் துல்லியமாகவும் வரையப்படுவதில்லை. இரண்டு: அவசர கதியில் வரையப்படுபவை. ஆனால், உண்மையில் நீண்ட காலம் எடுத்துக்கொண்டு மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டிய காரியம் இது” என்கிறார் ரொமிலா தாப்பர். அதோடு, ஆறுகள்தாம் எல்லைக்கோடுகளின் மூதாதைகள் என்றும் அத்தகைய எல்லைகளின் இயல்பு என்பது வெறும் கோடுகளாக இல்லாமல், “யாருமற்ற காணியாக” பெரும் இடப்பரப்பாக இருப்பதுதான் என்றும் குறிப்பிடுகிறார். ஆனால், உலக நவீன எல்லைகள் என்பது தடைகளாகச் செயல்பட அவை கடும் கண்காணிப்பின் கீழ் இயங்கும் சோதனைச் சாவடிகளாக மட்டுமே இருக்கின்றன. கடந்த காலங்களில் அவை தற்செயலானவையாக இருந்தன. அதே போல் எல்லைகள் தற்காலிகமானவை, அவை ஒவ்வொரு நூற்றாண்டிலும் மாற்றமடைந்தே வந்துள்ளன என்று அவர் எல்லைகள் குறித்த ஒரு கழுகுப் பார்வையை வாசகர்களுக்குத் தருகிறார்.
இதே எல்லைக்கோடுகளுக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தான் பயணித்திருப்பதாகவும், அங்கு நட்பைத் தவிர அனைத்தும் சாத்தியப்படுகிறது என்று வருந்திக் கூறுகிறார். எல்லைகளின் பயன், பகைமையை வளர்த்தெடுப்பது இல்லாமல், அவை பரஸ்பர நன்மைக்கான ஆதாரமாக விளங்கக்கூடிய சாத்தியமுள்ளவை என்பதை அது உறுதிப்படுத்தக் கூடும். அதற்கு இதுபோன்ற புத்தகங்கள் கட்டாயம் உதவும் என்று தனது முன்னுரையை நம்பிக்கையுடன் நிறைவு செய்கிறார்.
ரொமிலா தாப்பரின் முன்னுரையைப் போன்றே, சுசித்ரா அவர்களின் அறிமுகவுரையும் மிகவும் முக்கியமானது. தனது பயணத்தின் தொடக்கப்புள்ளி, அது எடுத்துக்கொண்ட காலம், பயணத்திற்கு முன்பும்-பின்பும் எல்லைக்கோடுகள் குறித்த தனது புரிதல் எப்படியெல்லாம் மாறியது என்பதையெல்லாம் அவர் சிறு குறிப்புகளாகச் சொல்லிவிட்டுப் போனாலும் அறிமுகவுரை 35 பக்கங்களுக்குச் செல்கிறது.
சுசித்ரா அவர்கள், இந்தியாவின் எல்லைகள் ஊடாக சுமார் 9000 மைல் நீளப் பயணத்தை மேற்கொண்டு, பயணத்திற்காக மட்டும் எட்டு ஆண்டுகள் செலவு செய்துள்ளார். இப்படியொரு நீண்ட பயணத்தை, தான் சந்தித்த எண்ணற்ற மனிதர்களின் வாழ்வியலை எப்படி ஒரு புத்தகத்தில் தொகுத்துவிட இயலும்? என்று குறிப்பிடுவதோடு நின்றுவிடாமல் வாசகர் எப்படி இந்தப் புத்தகத்தை அணுகலாம் என்று கூறியிருப்பது புத்தகத்திற்கான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.
“வரைபடங்கள், சிலரின் கவிதைகள், பட்டியல்கள், உரைகள், புகைப்படங்கள் வழியாகச் சொல்லப்பட்ட; சமூக, அரசியல், தனிநபர் ஆவணங்களால் ஆன ஒரு வெட்டியொட்டப்பட்ட புத்தகமாக (scrapbook) நினைத்து வாசியுங்கள் என்பதுதான். இந்நூல் நான் உருவாக்கிய மறந்துவிட்ட பொருட்கள், கதைகளின் அருங்காட்சியகம்”
என்று சுருக்கமாகத் தனது புத்தகத்தின் நோக்கத்தை அறிமுக உரையின் ஒரு பகுதியில் குறிப்பிடுகிறார். அதன் மற்றொரு பகுதியில், இந்திய எல்லைக்கோட்டின் வரலாற்றை ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கி, பிரிவினை & சுதந்திர தேசத்தின் வளர்ச்சியைத் தொட்டு சமகாலத்தில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்கள் குறித்தும் அதன் மூலம் நடைபெற்ற சட்ட மாற்றங்கள் குறித்தும் அதனால் ஏற்படும் எல்லையில் வாழும் இந்திய குடிமக்களின் நிலை குறித்து ஒரு அறிமுகத்தை வழங்குகிறார்.
இவ்வளவு முக்கியமான முன்னுரையும், அறிமுக உரையும் வாசித்துவிட்டு இந்தப் புத்தகத்தைத் தொடங்குவது மிகவும் அவசியம் என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் அவை இந்தப் புத்தகத்திற்கான அடித்தளத்தை சரியாக அமைத்துத் தருகின்றன.
இந்தப் புத்தகம் எண்ணற்ற மனிதர்களின் வாழ்வியல் சூழலை ஆவணப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு வாழ்வு குறித்து அந்தச் சிறு குறிப்பை வாசிப்பதற்கே சற்று திடமான மனம் தேவையாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் நினைவு வரும்போதெல்லாம், எனக்கு மூதாட்டி சாரி பேகத்துடனான சுசித்ராவின் உரையாடல் முதலில் வந்து நிற்கிறது.
“இந்தியாவை தெரிஞ்சுக்க நாடு முழுவதும் சுத்த வேண்டியதில்லை. மோசமான ஒரு திருமணம்; கொலை செய்யக்கூட தயங்காத சொந்தக்காரங்க; பொறாமை பிடிச்ச அக்கம்-பக்கம் – இது போதும் இந்த நாட்டை புரிந்துகொள்ள…நம்ம நாடு முடியுற இடத்தில மட்டுமல்ல. எல்லா இடத்துலையும் எல்லைகள் இருக்கு. நீங்க இந்த நாட்டுல ஒரு பொண்ணாயிருந்தா, அந்த எல்லைகள் உங்களுக்குள்ளேயும் இருக்கு” என்ற அந்த மூதாட்டியின் வாக்கு உண்மையில் நம் மனதை ஏதோ செய்கிறது.
சாரி பேகத்திற்குச் சிறு நிலம் மட்டுமே உண்டு. இராணுவத் தேவைகளுக்காக அதில் பதுங்குக்குழி அமைத்தாகிவிட்டது. எல்லைப் பதட்டம் உருவாகும் போதெல்லாம், பதுங்குக்குழியில் இராணுவத்தினர் நிறைந்துவிடுவர். பதுங்குக்குழிக்கு நிலம் தர மறுத்த போது, முதன்முதலாக பேகத்தின் கணவர் கை நீட்ட, அதுவே பின்னர் அவரது வாழ்வாகிவிட்டது என்கிறார். கணவரின் கொடுமையில் இருபது வருடங்கள் கழிந்தது அவரது சொந்த விசயம் என்றால், அங்கு வரும் ராணுவத்தினரில் வெகு சிலரே மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வார்கள் என்கிறார்.
பேகத்தின் பிறப்பே – பிரிவினைக் கொடுமையின் சாட்சியாக இருக்கிறது. பேகத்தின் தந்தை – பிரிவினைக் காலத்தில் – “வேட்டைக் குழு” என்ற பெயரில் ஊரிலுள்ள இஸ்லாமியக் குடும்பங்களை விரட்டியடிக்கிறார். அப்போது 14 வயது இஸ்லாமிய சிறுமியைக் கடத்தி வந்து வற்புறுத்தி திருமணம் செய்கிறார். பிரிவினைக் கலவரத்திற்குப் பிறகான காலத்தில், தேசங்கள் இதுபோன்றோரை மீட்க வருகின்றன. அதில் பேகத்தின் தாயார் பாகிஸ்தான் திரும்புகிறார். ஆனால் பேகம் இந்தியத் தேசத்திலே தனது தந்தையிடம் இருக்கும்படி ஆகிறது. அந்த வாழ்வும் பேகம் 10 வயதாகும் போது தொலைகிறது. “வேட்டைக் குழு” ஆட்களைத் தேடி சிலர் பழி வாங்குகின்றனர். அதன் விளைவு பேகம் அவளது பாட்டியுடன் வாழும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். இஸ்லாமியப் பெண்ணுக்குப் பிறந்ததாலும், அவரது தந்தை கொல்லப்பட்டதாலும் அந்த ஊரின் மொத்த வெறுப்பும் பேகத்தின் மீது திரும்புகிறது. அந்த வெறுப்புடனேயே அவர் அங்கு வளர்ந்து தனது காலத்தைக் கழித்திருக்கிறார். அந்த அனுபவமே, அவரது சொற்களில் வெளி வந்துள்ளது. இந்தக் கட்டுரையை சுசித்ரா இவ்வாறு முடிக்கிறார்…
“பிரிவினையையும் எல்லையின் அபாயங்களையும் உயிர்பிழைத்துக் கடந்தவர், வேறுபட்ட வாழ்வை வாழ்பவர், முற்றிலும் மாறுபட்ட கதையைச் சொல்கிறார். அவர்கள் வாழ்வில் வன்முறை என்பது வேலியருகிலோ, பதுங்குகுழிகளிலோ இல்லை; அவர்களுடைய பிரபஞ்சத்தின் மையப்புள்ளியாக உள்ளது!”
ஆமாம்! வன்முறை என்பது அவர்களின் மையப்புள்ளியாகவே உள்ளது. அதை அவ்வளவு எளிதாக நம்மால் விளங்கிக்கொள்ள இயலாது. அதனால்தான் சமகாலத்தில் இராணுவத் தியாகங்கள் கொண்ட திரைப்படங்கள் மிகவும் சுலபமாக வெற்றியடைகின்றன. அவை எவ்வித கேள்விக்கும் உட்படுவதில்லை. கேள்வி எழுப்ப நினைத்த மறு நொடியே, தேசப்பற்றைச் சந்தேகித்துவிடுவார்கள். காஷ்மீர் Line of Control – LoC என்று அழைக்கப்படும் பகுதிகளுக்கு சுசித்ரா அனுமதி பெற்று பயணித்துள்ளார். அங்குள்ள மக்களின் வீடுகளில் எவரும் புகைப்படங்கள் வைத்திருப்பதில்லை என்கிறார். அதற்கு மாறாக, செய்தித்தாள்களில் வரும் புகைப்படங்களை ஆல்பமாக வைத்திருப்பார்கள் என்று குறிப்பிடுகிறார். ஏனென்றால், ஆல்பங்களின் உள்ள புகைப்படங்கள் இராணுவத்தின் கையில் சிக்கினால், புகைப்படத்தில் இருப்பவர்கள் போலி என்கவுன்டர்களில் பலியாகின்றனர் என்கிறார். இம்மக்களின் வாழ்வு என்பதும் நாம் பார்த்து கொண்டாடிய சமீபத்திய திரைப்படத்தின் கதைக்களமும் ஒரே நிலத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாலியான் வாலா பாக் குறித்து நமது பள்ளிக் காலத்தில் நாம் வாசித்திருப்போம். ஜாலியான் வாலா பாக் என்ற சொற்களை எழுதும் போதே உடல் ஏனோ நடுங்குகிறது. 1919 இல் ஆங்கிலேயர்களால் கட்டவிழ்க்கப்பட்ட இந்தப் படுகொலைகளுக்கு இன்று வரையிலும்கூட தார்மீக மன்னிப்பு கோரப்படவில்லை. ஜாலியான் வாலா பாக் பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அருகிலுள்ள பகுதி என்பதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 1919 ஆண்டு என்பதால், அதில் இறந்த உயிர்களின் தியாகம் என்பது இந்தியா-பாகிஸ்தான் எனும் எல்லைக்கு அப்பாற்பட்டது. இது குறித்து சுசித்ரா அவர்கள் மிகவும் விரிவாக எழுதியுள்ளார். அதற்கு காரணமாக, பாகிஸ்தானியத் தோழியான நடாஷா என்பவரின் ட்வீட் ஒன்று காரணமாக அமைந்தது. பிறகு தோழியுடனான உரையாடலை நமக்குத் தருகிறார்.
நடாஷாவின் எள்ளுத் தாத்தா – படுகொலைச் செய்யப்பட்டவர். அவருடனான உரையாடல் மிகவும் நுணுக்கமானது. தனது மூதாதையர் குறித்தும் – அவர்கள் புலம்பெயர்ந்த கதைகள் குறித்தும் – அதில் கை பொம்மையாக்கப்பட்ட பெண்களின் நிலை குறித்தும் – குடும்பத்தினுள் நடக்கும் பாலியல் வன்புணர்வு குறித்தும் எனப் பல அடுக்குகளாக மனதைப் பிசையும் வரலாறு அது.
சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியா – பாகிஸ்தான் இரண்டு தேசங்களின் பாதை குறித்து நடாஷாவின் பார்வை மிகவும் முக்கியமானது.
சுதந்திரம் பெற்ற பிறகு ஒன்பது ஆண்டுகள் கழித்து 1965ஆம் ஆண்டு தன் முதல் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தது பாகிஸ்தான். ஆனால் அவை பலமுறை ரத்து செய்யப்பட்டு 1973ஆம் ஆண்டுதான் முழுதாக அமல்படுத்தப்பட்டது என்றும் ஆனால் அதுவும் 1977-1985 காலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும் 1999-2002 ஆண்டுகளில் தடை செய்யப்பட்டது என்றும் கூறுகிறார்.
ஆனால் இந்தியத் தேசமோ சுதந்திரம் அடைந்த முதல் நாளிலிருந்தே சனநாயகத்தை நிறுவுவதை தன் அரசியல் போராட்டமாகக் கொண்டிருந்தது. இந்தியர்களுக்கு சனநாயகம் கிடைத்தது, ஆனால் தனக்கு கிடைக்கவில்லை என்கிறார்.
“சனநாயகத்தைப் பெறுவதே எங்களது போராட்டமாக இருந்துவருகிறது. ஆனால், இந்தியர்களுக்கும் அந்தப் போராட்டம் இல்லை” என்று அரசியலமைப்புச் சட்டம் குறித்தும் சிவில் சமூகம் குறித்தும் மிகவும் சிலாகித்துக் கூறியிருப்பார்.
நடாஷா அறிந்த இந்தியா இன்று இருக்கிறதா? என்ற கேள்வியைத்தான் சமகால அரசியல் சூழல் நமக்கு எழுப்புகிறது. கடந்த பத்தாண்டுகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது எத்தனை தாக்குதல்கள், குடியுரிமை சட்டத் திருத்தங்கள், மத ரீதியான கட்டுப்பாடுகள் எனச் சனநாயகம் என்பது இங்குத் தொடர்கிறதா என்ற கேள்விக்கும் அவ்வப்போது நம்மை நாமே கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு நாம் கட்டமைத்த இந்தியா என்பது ஒரு கற்பனை பிம்பமாக இந்தியர்களுக்கே மாறி வருகிறதா? என்ற கேள்வி நம் அனைவருக்குமே இருக்கும் சூழலில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.
ஏனென்றால், வெறுப்புகளின் காலம் இது. யாரையும் ஏதோ ஒரு அடையாளம் கொண்டு வெறுப்பைச் சுலபமாக நிறுவிட முடிகிறது. வெறுப்பு உள் நுழையும் போது, அது நம்மை அறியாமலேயே பாதுகாப்பிற்கான எல்லையை வகுத்துவிடுகிறது. சனநாயகமும் சுதந்திரமும் அந்த எல்லைகளின் சோதனைச் சாவடிகளில் அன்றாடம் சுட்டு வீழ்த்தப்படுகின்றன. சுட்டு வீழ்த்தியும் தீராத தோட்டாக்கள் மிஞ்சியிருக்கும் போது அவன் எல்லைக்குள் வந்து தனது கோரப் பசியைத் தீர்த்துக்கொள்கிறது.
இந்த எல்லைகளை உடைத்து நமக்கு மறுக்கப்பட்டதை மீட்டெடுத்து நம் பிள்ளைகளுக்கு வழங்கும் கடமை நமக்கு இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் சுசித்ரா. ஏனென்றால் நமக்காக இல்லையென்றாலும் இந்த வெறுப்பை நம் பிள்ளைகளுக்காகச் சுத்தி செய்ய நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்ற வரியோடு இந்த புத்தகம் நிறைவு பெறுகிறது.
இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்பது, அடுத்த தலைமுறைக்கு வெறுப்பை நீக்கி, அன்பை வழங்கும் எல்லைகளற்ற உலகை உருவாக்குவதற்கான ஒரு அடி எடுத்து வைப்பதே என்று நான் கருதுகிறேன். அந்த நோக்கத்தை நோக்கி நாம் சமூகமாக நகர்ந்திட, இந்தப் புத்தகம் பெரிய அளவில் வாசிக்கப்பட வேண்டும்.
சுசித்ராவின் துணிச்சலான பயணத்திற்கும், அதனை ஆவணப்படுத்தி புத்தகமாக வழங்கியதற்கும் முதலில் அவருக்கு அன்பும் நன்றியும். தமிழில் மிகவும் நேர்த்தியாக மொழிபெயர்த்த வித்யா அவர்களுக்கும், வெளியிட்ட சீர்மை பதிப்பகத்திற்கும் எனது வாழ்த்துகள்.
-பஞ்சுமிட்டாய் பிரபு







