தொடர்கள்வரலாறு

மேற்கு ஆப்பிரிக்க ஹௌசா பழங்குடியினரின் வாழ்வும் போராட்டமும் – பகுதி – 9

புள்ளி

மேற்கு ஆப்பிரிக்காவில் பெரிதும் காணப்படும் முக்கிய பழங்குடி சமூகமாக விளங்கும் ஹௌசா (Hausa) மக்கள், நைஜீரியா மற்றும் நைஜரில் பெருமளவில் வசிக்கின்றனர். இவர்கள், பல நூற்றாண்டுகளாகவே சாகசங்களும், வர்த்தகங்களும் நிறைந்த பண்பாட்டு வாழ்வை நடத்தி வருகின்றனர். உலகில் சுமார் 80 மில்லியன் மக்கள் ஹௌசா மொழியைப் பேசுகிறார்கள், இவர்களில் பெரும்பாலானோர் நைஜீரியாவின் வடக்கு மற்றும் நைஜரின் தெற்குப் பகுதிகளில் வாழ்கின்றனர்.

காற்றின் குரலில் கதைகள் பூக்கும்,
கானலின் நடுவே ராகம் வாழும்.
சோலையின் நிழலில் சிந்தைகள் மெளனமாகும்
சிவப்புத் துணியில் கனவுகள் சிலிர்க்கும்..
மேற்கு திசை நெய்த ஆப்பிரிக்க வாசலில்
இஸ்லாம் இசையின் இமைக்குள் வாழும்,
அழகு கொண்ட பழங்குடியாம்! இது
அழியாத அடையாளம் கொண்ட பூர்வகுடியாம்!
இவர்கள்தான் ஹௌசா மக்கள்..

வரலாற்றுப் பின்னணி:

இம்மக்களின் வரலாறு, கி.மு. 1000-ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலங்களில் தொடங்குகிறது. இவர்களின் சமூக அமைப்புகள் பல்வேறு நகர ராஜ்யங்களாக (Hausa city-states) விளங்கி வந்தன. அவற்றில் கானோ (Kano), கடூனா (Kaduna), சுகோட்டோ (Sokoto), காட்சினா (Katsina) ஆகியவை முக்கியமான ஹௌசா நகரங்களாக இருந்தன. இந்த நகர ராஜ்யங்கள் 9-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை தன்னாட்சி பெற்ற அமைப்புகளாகச் செயல்பட்டன.

இவர்கள் இஸ்லாமியத்தை 11-ஆம் நூற்றாண்டில் ஏற்றுக் கொண்டனர். அதன் பிறகு 19-ஆம் நூற்றாண்டில், உசுமான் டான் ஃபொடியோ (Usman dan Fodio) என்ற மதப்பணியாளர் மூலம், சுகோட்டோ கலிஃபேட் எனும் இஸ்லாமிய அரசமைப்பு உருவாக்கப்பட்டது. இது 1804 இல் தொடங்கி, மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு பெரிய பகுதியை உள்ளடக்கி, 1903 இல் பிரிட்டிஷ் காலனியாதிக்கம் வரும் வரை நீடித்தது.

மொழி மற்றும் இலக்கியம்:

இம்மக்கள் பேசும் மொழி, ஹௌசா மொழி எனப்படுகிறது. இது ஆப்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இது மேற்கு ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய மற்றும் முக்கியமான மொழிகளில் ஒன்றாகும். நைஜீரியா, நைஜர், கானா, பெனின், புர்கினா ஃபாசோ, மற்றும் சாட் ஆகிய நாடுகளில், சுமார் 80 மில்லியன் மக்கள் ஹௌசா மொழியைத் தங்கள் முதல் மொழியாகவும், சுமார் 50 மில்லியன் மக்கள் இரண்டாம் மொழியாகவும் பேசுகிறார்கள்.

இந்த மொழி, வெறும் பழங்குடி தொடர்பானதல்ல; பொதுவான தொடர்பாடல் மொழி (lingua franca) ஆக பல பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக வணிகம் மற்றும் அரசியலில்.

ஹௌசா மொழி இரண்டு வித எழுத்துமுறைகளைப் பயன்படுத்துகிறது:

  • அஜமி (Ajami) – அரபு எழுத்துரு பாணியில் எழுதப்படும் ஹௌசா.
  • லத்தீன் (Latin) – ஆங்கில எழுத்துரு பாணியில் எழுதப்படும் ஹௌசா.

அஜமி முறையில், பெரும்பாலும் மதம் மற்றும் மரபு சார்ந்த எழுத்துகள் எழுதப்பட்டன. ஆனால், தற்போதைய கல்வி மற்றும் ஊடகத் துறைகளில் லத்தீன் எழுத்து முறையே பொதுவாகப் பயன்படுகிறது.

இலக்கியம் என்பது ஹௌசா மக்களின் பண்பாட்டின் ஒரு முக்கியமான அங்கமாகும். இவர்கள் பாரம்பரியமாக கதைகள், பழமொழிகள், கவிதைகள், பாடல்கள், நாடகங்கள் என அனைத்தையும் எழுத்துக்களில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். இவர்கள் படைத்த இலக்கியங்கள் பெரும்பாலும் வாய்மொழி வழியாக பரம்பரையாக சொல்லப்பட்டவை. இது இவர்களது வரலாற்றையும், அறிவுத் தொட்டிலையும், வாழ்க்கைப் பழக்க வழக்கங்களையும் பாதுகாத்து வர ஒரு சிறந்த வழியாகும்.

இன்றைய காலகட்டத்தில் ஹௌசா மொழியில் பத்திரிகைகள், புத்தகங்கள், திரைப்படங்கள், ரேடியோ, மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெளியாகின்றன. குறிப்பாக, ஹௌசா திரைப்படத் துறை – “கானிவூட்” (Kannywood) என அழைக்கப்படும் இந்தத் துறை, நைஜீரியாவில் மிகவும் பிரபலம் பெற்ற ஒன்றாக வளர்ந்துள்ளது. இது பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிற்குப் பிறகு உலகிலேயே மூன்றாவது பெரிய திரைப்படத் துறையாகக் கருதப்படுகிறது. மொத்தத்தில், ஹௌசா மொழியும் இலக்கியமும் அவர்களின் கலாசாரத்தின் அடையாளமாகவும், சமூக ஒற்றுமையின் கருவியாகவும் விளங்குகிறது.

வாழ்வுமுறை மற்றும் கலாசாரம்:

இம்மக்கள், தங்கள் மரபு மற்றும் மதத்தையும் உயிர்போல நேசிக்கும் பழங்குடி சமூகமாக அறியப்படுகிறார்கள். இவர்கள் வாழ்க்கை முறை, இஸ்லாமிய மதத்தையும், பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் ஒருங்கிணைத்ததற்காக தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது.

வசிப்பிடம் மற்றும் வீட்டமைப்பு:

பெரும்பாலான ஹௌசா மக்கள் பட்டணங்களிலும், சிறிய கிராமங்களிலும் வாழ்கிறார்கள். கிராமங்களில் வீடுகள் பலமுறை களிமண் கட்டிடங்கள் அல்லது வட்ட வடிவ சுவர் மற்றும் கூம்பு வடிவ வைக்கோல் கூரைகள் கொண்டவை. வீடுகள் சுத்தமாகவும், ஒழுங்காகவும் பராமரிக்கப்படுகின்றன.

உணவியல்:

  • துவோ (Tuwo) – மாவு பந்தி போன்ற உணவு, மக்காச்சோளம் அல்லது கம்பு மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
  • சூப் (Soup) – இஸ்லாமிய உணவுகளோடு கூடிய உணவு வகைகள், பெரும்பாலும் காய்கறிகள், இறைச்சி மற்றும் மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்படுகின்றன.
  • மைஸா (Maisa), கோஸாய் (Kosai), மற்றும் அகாரி (Akara) போன்ற சிற்றுண்டிகள் தினசரி உணவில் இடம் பெறுகின்றன. நைஜீரியாவில், ஹௌசா மக்களின் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்கள் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கு பங்களிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆடை மற்றும் உடைமை:

ஆண்கள் பொதுவாக “பப்பன் ரிகா” (Babban Riga) எனப்படும் நீளமான குர்த்தாக்களும், குல்லா (cap) அணியும் பழக்கத்துடன் காணப்படுகிறார்கள். பெண்கள் பாவாடை போன்ற “ஜம்பா”, தலை சுற்றும் துணி (head tie) மற்றும் அழகான நகைகள் அணிவது வழக்கம்.

தொழில்கள் மற்றும் வாழ்வாதாரம்:

இவர்கள் முக்கியமாக விவசாயம், கால்நடை வளர்ப்பு, மற்றும் வணிகம் ஆகியவற்றை தொழில்களாக கொண்டுள்ளனர். மக்காச்சோளம், கம்பு, நிலக்கடலை, நெல் போன்ற பயிர்களையும் மாடு, ஆடு, கோழி போன்ற விலங்குகளையும் வளர்க்கின்றனர். இம்மக்கள் இளம் பருவத்திலிருந்தே வணிகம் மற்றும் கைவினைப் பணிகளில் திறமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். பெண்களும் வீட்டிலிருந்தே சிறிய வணிகங்களை (சமையல், நெய், துணி வேலை) செய்து குடும்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். நைஜீரியாவின் மொத்த விவசாய உற்பத்தியில் ஹௌசா விவசாயிகள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றனர்.

மதம் மற்றும் மரபுகள்:

இஸ்லாம் இம்மக்களின் முக்கிய மதமாக இருக்கிறது. அவர்கள் தினமும் ஐந்து முறை தொழுகிறார்கள், புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்கிறார்கள். மசூதிகள் சமூக வாழ்வில் முக்கிய இடம் பெறுகின்றன. அத்துடன், இம்மக்கள் சில மரபுக் கடைப்பிடிப்புகளையும் பின்பற்றுகின்றனர். அவை திருமணங்கள், பிறப்பு, இறப்பு போன்ற நிகழ்வுகளில் இசை, நடனம் மற்றும் பாரம்பரிய சடங்குகளை நடத்துவதுதான். மேற்கு ஆப்பிரிக்காவில் இஸ்லாமிய ஷரியத் சட்டம் ஹௌசா சமூகத்தில் வலுவாகப் பின்பற்றப்படுகிறது, குறிப்பாக குடும்பச் சட்டம் மற்றும் சிவில் விவகாரங்களில்.

பண்டிகைகள் மற்றும் விழாக்கள்:

ஈத்-அல்-பித்ர் (Eid-al-Fitr) மற்றும் ஈத்-அல்-அதா (Eid-al-Adha) எனும் இஸ்லாமிய பண்டிகைகள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. திருமண விழாக்கள், குடும்ப ஒன்று கூடிய நிகழ்வுகள், மற்றும் குழந்தைகளின் பெயரிடும் விழாக்கள் ஆகியவை சமூக உறவுகளை வலுப்படுத்துகின்றன.

கலை மற்றும் இசை:

இம்மக்களின் கலாச்சாரம் இசை, பாடல், கவிதை, மற்றும் நாடகம் போன்றவையில் மிகவும் செழிப்பாக உள்ளது. இவர்கள் “கோகே” (Goge) எனும் பாரம்பரிய ஒற்றை சர வாத்தியக் கருவியை இசைக்கின்றனர். விழாக்களில், மகிழ்ச்சியான நடனங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். இம்மக்கள் பணிவுடனும் மரியாதையுடனும் பழகுகிறார்கள். பெரியவர்கள், மதத் தலைவர்கள், மற்றும் குடும்பத் தலைவர்களிடம் மரியாதை காட்டுவது முக்கியமானது. பெண்கள் பொதுவாக அறிமுகம் இல்லாத ஆண்களுக்கு நேரடியாக பேசுவதில்லை, இது அவர்கள் மரபுக் கோட்பாடுகளில் ஒன்று.

சமூக அமைப்பு:

ஹௌசா பழங்குடியினரின் சமூக அமைப்பு, மதம், மரபு, மற்றும் குடும்ப கட்டமைப்புகள் அடிப்படையில் உருவாகி உள்ளது. இவர்கள் சமூகத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நிலை, ஒரு பொறுப்பு, மற்றும் ஒரு மரியாதை உள்ளதாகக் கருதப்படுகிறது. இஸ்லாமிய நம்பிக்கைகள், பாரம்பரிய அரசியல் அமைப்புகள், மற்றும் குடும்பப் பாசங்கள் இந்த அமைப்பின் மூல தூண்களாக உள்ளன.

குடும்ப அமைப்பு:

இச்சமுதாயத்தில் குடும்பம் என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். பெரும்பாலும் விரிவான குடும்ப அமைப்புகள் காணப்படும். தந்தை, தாய், குழந்தைகள் மட்டுமல்லாமல், மாமா, சித்தப்பா, பாட்டி, மற்றும் பிற உறவினர்களும் ஒரே குடும்பமாக வாழ்பது வழக்கம். ஆண்கள் குடும்பத் தலைவர்கள் ஆக இருப்பார்கள். பெண்கள் வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு மற்றும் சில சமயங்களில் சிறு வணிகங்களில் ஈடுபடுகிறார்கள். பல குடும்பங்கள் சேர்ந்து ஒரு குலத்தை உருவாக்கும்.

வம்ச மற்றும் குல அமைப்பு:

இவர்கள் சமூகத்தில் மக்கள் வம்சவரிசையின் அடிப்படையில் அடையாளம் காணப்படுகிறார்கள். பொதுவாக, தந்தை வழி மரபு (patrilineal system) பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு குலத்திற்கும் தனி பெயரும், மரபும், சமூக கடமையும் இருக்கும். உதாரணமாக, ஒரு குலம் அரசியல் அதிகாரம் வகிக்கலாம். மற்றொரு குலம் சமையல் அல்லது கைத்தொழில் போன்ற வேலையை செய்யும். இசைக்கலைஞர்கள், கதை சொல்லிகள் போன்ற சமூக சேவையாளர்களுக்கும் தனி இடம் உண்டு.

அரசியல் அமைப்பு:

இஸ்லாமிய கலாச்சாரத்தின் தாக்கத்தால், ஹௌசா சமூகத்தில் “எமீர்” (Emir) எனப்படும் அரசர் அல்லது தலைவர்களால் ஆட்சி நடத்தப்பட்டது. எமீர் ஒரு நகரத்திற்கோ அல்லது பகுதிக்கோ தலைவர். அவருக்குக் கீழே வசீர் (Waziri), மகஜ்ஜி (Magaji) போன்ற அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் சட்டம், வரி, பாதுகாப்பு மற்றும் சமூக ஒழுக்கம் போன்றவற்றை மேற்பார்வை செய்கிறார்கள். நைஜீரியாவில், எமீர்கள் இன்னும் பாரம்பரிய நீதி மற்றும் சமூக விவகாரங்களில் கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ளனர், குறிப்பாக வட மாநிலங்களில்.

இன்றைய காலத்தில், இந்த மரபு அமைப்புகள் நவீன அரசியல் அமைப்புகளுடன் இணைந்துள்ளன, ஆனால் பல பகுதிகளில் இன்னும் மரபு அதிகாரிகள் செல்வாக்குடன் உள்ளனர்.

சமூக நிலைகள்:

ஹௌசா பழங்குடி சமூக அடுக்கமைப்பு கொண்டது.

  • அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் (எமீர்கள், உலமாக்கள்)
  • வணிகர்கள் மற்றும் விவசாயிகள்
  • கைவினைஞர்கள் (தச்சர், நெசவாளர், செப்பாளர்)
  • கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள்
  • பணிவாழ்க்கை மக்கள் (முன்னாள் அடிமைகள் அல்லது சேவைச் சாதியினர்)

இவர்கள் எல்லோரும் ஒன்றாகவே வாழ்ந்தாலும், ஒரு வகையான மரபியல் அடிப்படையிலான சமூக வேறுபாடுகள் இன்னும் காணப்படுகின்றன. நமது நாட்டில் உள்ள “வருணாசிரம முறை” போன்று, ஹௌசா சமூகத்திலும் பாரம்பரிய படிநிலைகள் உள்ளன.

மதம் மற்றும் ஒழுங்கு:

இஸ்லாம் ஹௌசா சமூகத்தில் ஒழுக்கமே அடித்தளம் ஆக இருக்கிறது. தொழுகை, நோன்பு, பக்தி, மற்றும் சிந்தனை ஆகியவை நாளும் கடைபிடிக்கப்படுகின்றன. சமூக ஒழுக்கம், மத வழிமுறைகள் மூலம் கட்டுப்படுகிறது. பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் பங்கு மற்றும் உரிமைகளை மதிக்க பயிற்சியடைகிறார்கள்.

திருமண மற்றும் குடும்ப வாழ்வு:

இப்பழங்குடியினர், திருமணத்தை ஒரு முக்கியமான மத சடங்காகவும், சமூக உறவாகவும் மதிக்கிறார்கள். இது வெறும் இரு மனிதர்களுக்கிடையேயான உறவாக மட்டுமல்லாமல், இரு குடும்பங்கள், சில சமயங்களில் இரு குலங்களுக்கிடையேயான ஒப்பந்தம் எனவும் பார்க்கப்படுகிறது.

திருமணம் நடைபெறுவதற்கு முன், மாப்பிள்ளை தரப்பினர் குடும்பத்தின் அனுமதி பெற்று, பெண்மணி பக்கம் ஒரு உத்தியோகபூர்வ மணமுரைப்புப் பேச்சு (proposal) அனுப்புவார்கள். அதில் முக்கியமான அம்சங்களாக குடும்ப வரலாறு, மத ஒழுக்கம், சமுதாய நிலை ஆகியவை இடம்பெறும்.

திருமண நிகழ்வுகள்:

திருமண நிகழ்வுகள் பெரும்பாலும் மத அடிப்படையில் (இஸ்லாமிய விதிகள்) நடைபெறும்.

  • காயன் ஸான்சே (Kayan Zance) – மணமகளுக்கு வழங்கப்படும் பரிசுகள்.
  • சடாகி (Sadaki) – மாப்பிள்ளை தரப்பால் கொடுக்கப்படும் மணக்கொடை அல்லது நிகாஹ் பரிசு.
  • நிகாஹ் விழா – இஸ்லாமிய திருமண ஒப்பந்தம், ஒரு மத அறிஞரால் நடத்தப்படும்.
  • விருந்தோம்பல் விழா – குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சிறப்பு உணவுகள் வழங்கப்படும்.

திருமணத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதால், சில விழாக்கள் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரை நீடிக்கக்கூடும்.

திருமண வாழ்வு:

இஸ்லாமிய சட்டப்படி, ஹௌசா ஆண்கள் ஒரே நேரத்தில் அதிகபட்சம் நான்கு மனைவிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், அந்த நால்வருக்கும் சமமாக உணவு, இருப்பிடம், கவனம், மற்றும் உரிமைகளை வழங்கவேண்டும் என்பது முக்கிய நிபந்தனை. பொதுவாக, மனைவிகள் அனைவரும் ஒரே வீட்டில் அல்லாமல், தனித்தனி வீடுகளில் வசிக்க, கணவன் அவர்களுக்கான நேரத்தை பகிர்ந்துகொள்கிறான்.

பெண்களின் நிலை மற்றும் பங்கு:

பெண்கள், குடும்பத்தில் முக்கியமான பாத்திரம் வகிக்கிறார்கள். இவர்கள் வீடு, சமையல், குழந்தை பராமரிப்பு, மற்றும் சில சமயங்களில் சிறிய வணிகங்களில் ஈடுபடுகிறார்கள். சில பெண்கள் இன்றைய கல்விச் சூழலில் மருத்துவர்கள், அரசுத் துறை பணியாளர்கள் ஆகவும் பணியாற்றுகிறார்கள்.

பெண்களின் வாழ்க்கை கட்டுப்பாடானதாக இருந்தாலும் அவர்களுக்கு மதமும் சமூகமும் ஒரு மரியாதையை வழங்குகிறது. அது விவாகரத்து மற்றும் மறுமண உரிமையாகும். இஸ்லாமியச் சட்டத்தின்படி, விவாகரத்து சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. விவாகரத்துக்குப் பிறகு, பெண்களுக்கு ‘இத்தா’ (Iddah) எனும் ஒரு காலப்பகுதி (சில மாதங்கள்) கடைபிடிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து மறுமணம் செய்துகொள்ளும் உரிமை உள்ளது. நைஜீரியாவில், ஷரியத் சட்டம் பெண்களுக்கு விவாகரத்து மற்றும் சொத்துரிமைக்கான சில பாதுகாப்புகளை வழங்குகிறது, இருப்பினும் பாலின சமத்துவம் குறித்த உலகளாவிய விவாதங்கள் தொடர்கின்றன.

பணவியல் மற்றும் பொருளாதாரம்:

ஹௌசா மக்கள் நெடுங்காலமாக விவசாயம், வணிகம் மற்றும் கைத்தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்கள். இவர்கள் சமூக வாழ்க்கையில் பணவியல் மற்றும் பொருளாதார செயல்பாடுகள் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன. உப்பு, தங்கம், நூல் மற்றும் துணிகள், மூலிகைகள், கால்நடை போன்றவற்றை வியாபாரம் செய்கிறார்கள். பண்டைய காலத்தில் இவர்கள் வணிகர்களாக செயல்பட்டதற்கான பல ஆதாரங்கள் உள்ளன. வரலாற்று ரீதியாக, ஹௌசா மக்கள் சகாரா வர்த்தகப் பாதைகளின் முக்கிய பகுதியாக இருந்தனர், மேற்கு ஆப்பிரிக்காவிற்கும் மத்திய தரைக்கடல் உலகிற்கும் இடையே வணிகத்தை எளிதாக்கினர்.

இச்சமூகத்தில் பலர் தையல், கட்டுமானம், செப்புப்பணிகள், நெசவு, நகைக்கலை போன்ற கைத்தொழில் பணிகளில் ஈடுபடுகிறார்கள். உதாரணமாக, பெண்கள் சிறு கடைகளில் தையல் வணிகம் செய்கின்றனர். “இண்டிகோ” போன்ற இயற்கை நிறப்பயன்பாட்டு பொருள்கள், பாத்திரங்கள், மற்றும் அலங்காரப் பொருட்கள் என இவை அனைத்தும் உள்ளூர் சந்தைகளிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

இன்றைய காலத்தில், ஹௌசா மக்கள் நகரப் பகுதிகளுக்கு வேலைக்காக இடம்பெயர்கின்றனர். இவர்கள் பலர், கடை உதவியாளர்கள், ஓட்டுநர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், போலீசார் மற்றும் தொழிற்துறையில் கூலித் தொழிலாளர்களாக பணிபுரிகிறார்கள். இவர்கள் கல்வியைப் பெற தொடங்கியதனால், தற்போது சிலர் மருத்துவம், வணிக மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி மற்றும் சமகால வாழ்க்கை:

முன்னேற்றத்தின் வாசல் கல்வி தான் என்பதையும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கல்வி தேவை என்பதையும் ஹௌசா மக்கள் இன்று உறுதியோடு உணர்ந்துள்ளனர்.

பண்டைய காலங்களில், இச்சமூகத்தில் கல்வி என்பது முதலில் இஸ்லாமிய மதக்கல்வியிலிருந்து துவங்கியது. மதம் சார்ந்த பள்ளிகள் (மதரஸாக்கள்) மூலம், பிள்ளைகள் குர்ஆன், அரபு எழுத்து, இஸ்லாமிய சட்டம் போன்றவற்றைக் கற்றுக்கொண்டனர். இதுவரை இந்த மரபு தொடர்கிறது. ஆனாலும், சமகால அரசாங்க கல்வி முறையில் ஹௌசா மக்கள் அதிகமாகப் பங்கேற்க ஆரம்பித்துள்ளனர். இன்றைய காலத்தில் மக்கள் கல்வியில் மூன்றுபட்ட நிலைகளை அடைந்து வருகின்றனர்:

  • தொடக்கக் கல்வி – கிராமப்புறத்தில் குழந்தைகள் ஆரம்பப்பள்ளிகளில் சேர்கின்றனர்.
  • மேல்நிலைக் கல்வி – நகரம் மற்றும் சிற்றூர்களில் உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள்.
  • அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி – ஹௌசா இளைஞர்கள் இப்போது மருத்துவம், பொறியியல், கணினி அறிவியல், வணிக நிர்வாகம் போன்ற துறைகளில் பயிலத் துவங்கியுள்ளனர்.

முன்னர் பெண்கள் கல்வியில் பின்தங்கியிருந்த போதிலும், இப்போது பெண்களும் பள்ளி, கல்லூரியில் கல்வி பெற்று வருகின்றனர். அரசு மற்றும் சமூக அமைப்புகள், பெண்கள் கல்வியை ஊக்குவிக்க பல திட்டங்களை செயல்படுத்துகின்றன. யுனிசெஃப் அறிக்கையின்படி, நைஜீரியாவில் வடக்கு மாநிலங்களில் பெண் கல்வி விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது, ஆனால் இன்னும் தேசிய சராசரியை விட குறைவாகவே உள்ளது. பெண்கள் ஆசிரியர்கள், செவிலியர்கள், எழுத்தாளர்கள் ஆகிய பணிகளில் அதிகமாக செயல்படுகின்றனர் என்பது மகிழ்வான ஒன்று.

அரசு சட்டங்கள் மற்றும் சட்டச் சிக்கல்கள்:

ஷரியத் சட்டம் (Sharia Law) Vs தேசிய சட்டம் (Secular Law): இம்மக்கள் பெரும்பாலும் இஸ்லாமிய மரபுகளை கடைப்பிடிக்கிறார்கள். அவர்களது சமூகத்தில் ஷரியத் சட்டம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நைஜீரியாவில் சில வட மாநிலங்களில் (குறிப்பாக கானோ, சுகோட்டோ, கடூனா) ஷரியத் சட்டம் மிகவும் கடுமையாக நடைமுறையில் உள்ளது.

ஆனால் நைஜீரியாவின் அரசியல் அமைப்பு மதத்தின் அடிப்படையில் அல்லாத தேசிய சட்டத்தைக் கடைப்பிடிக்கிறது. இதனால், பரம்பரைச் சடங்குகள், மத மாற்றங்கள், பெண்களின் உரிமைகள், மற்றும் தண்டனை முறைகள் போன்றவையில் மோசமான மோதல்கள் ஏற்படுகின்றன. நைஜீரிய அரசியலமைப்புச் சட்டத்தின் 4(5) மற்றும் 277(1) பிரிவுகள், ஷரியத் நீதிமன்றங்களுக்கு குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகளில் சில அதிகார வரம்புகளை வழங்குகின்றன, ஆனால் இது தேசிய சட்டங்களுடன் முரண்படும்போது சர்ச்சைக்கு வழிவகுக்கிறது.

ஹௌசா பெண்களின் சட்ட உரிமைகள்:

ஷரியத் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு அளிக்கப்படும் உரிமைகள், தேசிய சட்டத்தில் உள்ள சமத்துவ உரிமைகள் உடன் முரணாக இருக்கின்றன. இதனால், பெண்கள் கல்வி, திருமண வயது, தலைமை உரிமை, மற்றும் வழிகாட்டி நிலை தொடர்பாக, சமூகத்திலும் நீதிமன்றத்திலும் இரட்டைத் தர நிபந்தனைகள் உள்ளது. ஐ.நா.வின் மனித உரிமைகள் குழு, நைஜீரியாவில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளைக் களைவதற்கு ஷரியத் சட்டங்களில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

நில உரிமை சட்டங்கள் (Land Use Act of 1978):

நைஜீரியாவில் நிலங்களை பற்றிய முக்கிய சட்டம், Land Use Act, 1978 ஆகும். இந்த சட்டத்தின் படி, அனைத்து நிலங்களும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் ஹௌசா மக்கள், பாரம்பரிய வழியாக நிலங்களை மூதாதையர் உரிமையாக கருதுகிறார்கள்.

இதில் அரசின் தலையீடு மற்றும் நில அளவைகள், முற்றிலும் முரணாக இருந்ததால், பல இடங்களில் வசதிகள் பறிமுதல், மாறுபட்ட நில ஆவணங்கள், மற்றும் வசதி இல்லாத கிராம மக்கள் மீது வழக்குகள் உள்ளிட்ட பிரச்சனைகள் வந்தன.

கல்வி மற்றும் குழந்தை உரிமை சட்டங்கள்:

இச்சமூகத்தில் பாரம்பரிய கல்வி முறையான அல்மஜிரி (Almajiri) முறை பிரபலமானது. இதில் சிறுவர்கள் மதக் கல்விக்காக வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறார்கள். அரசு இதை சேர்க்கை இல்லா கல்வி என்றும், சிறுவர் உரிமை மீறல் என்றும் பார்வையிட்டு, பல முறை தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தது.

Child Rights Act (2003) மற்றும் Universal Basic Education Act (2004) போன்ற சட்டங்கள் இந்த முறைமையை முறையாக எதிர்த்தன. யுனிசெஃப் அறிக்கையின்படி, நைஜீரியாவில் சுமார் 10 மில்லியன் அல்மஜிரி குழந்தைகள் உள்ளனர், இவர்களில் பலர் முறையான கல்வி மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் உள்ளனர்.

இதனால், மத அடிப்படையில் கல்வியை வலியுறுத்தும் ஹௌசா சமூகத்துக்கும், சட்டத்தை முன்னிறுத்தும் அரசுக்கும் இடையே கருத்து மோதல் உருவானது.

தீவிரவாத தடுப்பு சட்டங்கள் மற்றும் ஹௌசா மக்கள் மீதான தாக்கம்:

Anti-Terrorism Act (2011) மற்றும் Security Operations Act ஆகியவை, போகோ ஹராம் மற்றும் பிற தீவிரவாத அணிகளை கட்டுப்படுத்த அரசால் இயற்றப்பட்டது.

ஆனால், தீவிரவாத குழுக்கள் ஹௌசா மக்களின் பகுதிகளில் தங்கியிருப்பதால், பொதுமக்கள் மீது கூடுதலான பாதுகாப்பு சோதனைகள், காவல்துறை வேட்டைகள், மற்றும் தவறான கைது நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன. பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இந்தச் சட்டங்களை தீவிரமாக விமர்சித்து, ஹௌசா மக்களின் உரிமைகளை காப்பாற்றக் கோரியுள்ளனர். ஆப்பிரிக்கா ரிப்போர்ட்ஸ் படி, போகோ ஹராம் மற்றும் ஐ.எஸ்.டபிள்யூ.ஏ.பி (ISWAP) போன்ற குழுக்களால் நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் 30,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர், இது ஹௌசா சமூகத்தையும் கடுமையாக பாதித்துள்ளது.

சமீப காலங்களில், சில மாநிலங்கள் பாரம்பரிய சட்டத்தையும் (Customary Law), தேசிய சட்டத்தையும் இணைக்கும் வகையில் மாநில சட்ட மாற்றங்கள் மேற்கொண்டுள்ளன. அரசு மற்றும் மதத் தலைவர்கள் இடையே சந்திப்புகள், மரபணுக்குழுக்கள் அமைத்தல், மற்றும் புதிய சட்டங்களில் ஆலோசனை அடிப்படையில் சேர்க்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சட்ட மோதல்களை தவிர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஹௌசா சமூகத்தின் வேர்கள் வரலாற்றின் அடிப்படையில் மட்டுமல்ல! மாறாக அவர்கள் மொழி, கலாசாரம், உடை, உணவு, கைவினை மற்றும் மத மரபுகளில் பதியப்பட்டிருக்கின்றன. அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கூறிலும் மரபு ஓர் ஆழமான பங்காற்றி வருகிறது.

இன்றைய உலகம் கல்வி, தொழில், தொழில்நுட்பம், பெண்கள் முன்னேற்றம் போன்ற புதிய பாதைகளில் பயணிக்கிறது. ஹௌசா மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இதை புரிந்துகொண்டு மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். பலர் மருத்துவம், பொறியியல், நிர்வாகம், சட்டம் போன்ற துறைகளில் மேம்படுகிறார்கள்.

அதே சமயம் இஸ்லாமிய மரபுகள் இவர்கள் வாழ்க்கையின் பக்கங்களில் பதிந்துள்ளதை நினைவில் கொள்ளவேண்டும். ஆனால் அதே நேரத்தில் மதவாதத்தின் பெயரில் ஏற்படும் அடக்குமுறைகள், குறிப்பாக பெண்களுக்கு எதிரான சமூக விதிகள், தற்போது கேள்விக்குள்ளாகின்றன. இதில் உள்ள உண்மையான தீர்வு சமநிலை மற்றும் அறிவுசார் விழிப்புணர்வு தேவை என்பதையும் மனதில் நிறுத்த வேண்டும்.

இம்மக்கள் பாரம்பரியத்தை விட்டு விலகாமலும், புதிய நுட்பங்களை ஏற்றுக்கொள்கின்ற ஒரு இணைப்பு வாழ்க்கை நோக்கி செல்ல வேண்டும். சமூக நலன், கல்வி வளர்ச்சி, பெண்கள் உரிமை, வேலைவாய்ப்பு, இவை முக்கிய நோக்கங்களாக இருக்க வேண்டும். அரசாங்கம், கல்வி அமைப்புகள் மற்றும் சமூக சேவை அமைப்புகள் சேர்ந்து நீதி சார்ந்த முன்னேற்றம் ஏற்படுத்தும் போதுதான் ஹௌசா சமூகத்தின் எதிர்காலம் முடிவற்ற ஒளியுடன் ஜொலிக்கும்.

-தீபா ஜெயபாலன்

3 Comments

  • ‘மண்ணுக்கே மற்ற மார்க்சியம்’ ,மார்க்சியமே அல்ல, திரிபுவாதம் என்கிறார் பாரதிநாதன் அவரது ‘மண்ணுக்கேற்ற மார்க்சியம் ஒரு திரிபுவாதம்’ என்கிற நூலில். ‘மண்ணுக்கேற்ற மார்க்சியம் ‘ எழுதிய அருணனை கேலி செய்கிறார்.

  • ‘மண்ணுக்கே மார்க்சியம்’ , மார்க்சியமே அல்ல, திரிபுவாதம் என்கிறார் பாரதிநாதன் அவரது ‘மண்ணுக்கேற்ற மார்க்சியம் ஒரு திரிபுவாதம்’ என்கிற நூலில். ‘மண்ணுக்கேற்ற மார்க்சியம் ‘ எழுதிய அருணனை கேலி செய்கிறார்.

Comments are closed.