வரலாறு

பாட்டாளி வர்க்கத்தின் பகலவன்: கார்ல் மார்க்ஸ் – ஒரு சிறிய அறிமுகம்

உச்சநீ (2)

பாட்டாளி வர்க்கத்தின் பகலவன்: “கார்ல் மார்க்ஸ் – ஒரு சிறிய அறிமுகம்”

– க சிவசங்கர்

“உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்! உங்களுக்கு இழக்க எதுவும் இல்லை – உங்கள் சங்கிலிகளைத் தவிர. ஆனால், அடைவதற்கோ ஒரு பொண்ணுலகம் காத்துக்கொண்டிருக்கிறது!”


கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையின் இறுதி வரிகள் இவை. அதுவரை இருந்த தத்துவஞானிகள் அனைவரும் மொழி, இனம், தேசியம் என்று ஏதோ ஒரு வரையறைக்குள் இருந்து பேசி, எழுதி வந்த நிலையில் முதன் முறையாக இவ்வுலகையே எல்லையாகக் கொண்டு உலகத் தொழிலாளர்கள் அனைவரையும் ஒன்றிணையச் சொன்னார் மார்க்ஸ். அதேநேரம், அவர் வெறும் கனவு காண்பவராக, ஆசைப்படுபவராக மட்டும் இல்லை. உலகத் தொழிலாளர்கள் இப்பொண்ணுலகை அடையும் வழிமுறைகளையும் சமூகஅறிவியல் சார்ந்து விளக்கி நிறுவினார். இப்பூவுலகு இன்று அடைந்திருக்கும் அத்தனை வளர்ச்சிக்கும் அடிப்படை உழைப்பு மட்டுமே. அவ்வாறு திரட்டப்பட்ட உழைப்பே மூலதனம் ஆனது. அம்மூலதனமே இன்று உலகை ஆள்கிறது. எனவே, மூலதனத்தை உருவாக்கிய உழைக்கும் வர்க்கத்திற்கே அதனை ஆளும் உரிமை உண்டு என்று மார்க்ஸ் வலியுறுத்தினார்.

மனிதன் தன் வாழ்க்கைத் தேவைகளுக்காகக் கூட்டாக உழைக்கிறான். அந்த உழைப்பின் பயன்களை அனைவரும் சமமாகப் பகிரும் வரை சமூகப் பேதங்கள் இல்லை. ஆனால் பகிர்ந்ததை விட மீதமான உபரி உருவாகும்போது, அதைக் கைப்பற்றும் போட்டியால் மூலதனம் தோன்றுகிறது; வர்க்கங்கள் உருவாகின்றன. வரலாற்றின் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் மார்க்ஸ், மூலதனத்தைப் பற்றி இவ்வாறு விளக்குகிறார்:


“மூலதனம் என்பது கடந்த கால உழைப்பின் ஒரு இறுகிய வடிவம். அது ஒரு இரத்தக் காட்டேரியைப் போல நிகழ்கால உயிருள்ள உழைப்பை உறிஞ்சி வாழ்கிறது. அது எவ்வளவு அதிகமாக உழைப்பை உறிஞ்சுகிறதோ, அவ்வளவு அதிகமாக செழித்து வளர்கிறது”

இவ்வாறு உருவாகும் மூலதனத்தை சமூகத்தின் வலிமைமிக்க ஒரு பிரிவினர் கைப்பற்றி, தொடர்ந்து உழைப்பிலிருந்து விடுபடுகின்றனர். மேலும், உற்பத்திக்கு அத்தியாவசியமான உற்பத்தி சாதனங்களை (நிலம், உழைப்புக் கருவிகள்) அவர்கள் தங்கள் வலிமையால் கைப்பற்றுகின்றனர். இதன் விளைவாக, உற்பத்தி சாதனங்களை ஏகபோகமாகக் கொண்ட வர்க்கமும், உழைப்பு சக்தியைத் தவிர வேறெதையும் சொந்தமில்லாத வர்க்கமும் உருவாகின்றன.

காலப்போக்கில், உற்பத்தி சக்திகள் தொடர்ந்து வளர்ச்சியடைகின்றன. ஆனால், அந்த வளர்ச்சிக்கு ஏற்ப சமூகத்தின் உற்பத்தி உறவுகள் மாறாமல் இருக்கும்போது, இரண்டிற்கும் இடையே ஒரு முரண்பாடு உருவாகிறது. இவ்வாறு இந்த பழைய உற்பத்தி உறவுகளானது உற்பத்தி சக்திகளின்  தொடர்ச்சியான வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்துகின்றன. ஒரு கட்டத்தில் இந்த முரண்பாடே உற்பத்தி உறவுகளில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தி, ஒரு சமூக அமைப்பிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றத்தைத் தூண்டுகிறது. இவ்வாறு அடிமை உடமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம் என்று ஒவ்வொரு சமூகமாக உருமாறி இன்று முதலாளித்துவ தனியுடமை சமூக அமைப்பு நிலவி வருகிறது. முதலாளித்துவ சமூக அமைப்பின் வளர்ச்சியில் அடுத்தகட்டமாக சோசலிச பொதுவுடமை சமூக அமைப்பையும், அதனைத் தொடர்ந்து வர்க்கமற்ற கம்யூனிச சமூக அமைப்பையும் நோக்கி இந்த சமூகம் பயணிக்கும் என்று சமூக அறிவியல் ஆய்வுமுறையைக் கொண்டு நிறுவினார் மார்க்ஸ். இதுவே வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்று அழைக்கப்படுகிறது.

இயக்கம் இன்றி இம்மண்ணில் எதுவும் இல்லை. நெருப்புக் கோளமாகத் தொடங்கி, குளிர்ந்து, நீரில் முதல் ஒருசெல் உயிரினம் தோன்றி, படிப்படியான பரிணாம வளர்ச்சியின் வழியாக மனிதன் உருவானான். இந்த இயக்கமே அனைத்து மாற்றங்களுக்கும் அடிப்படை என்று மார்க்ஸ் விளக்கினார். இந்தக் கோட்பாட்டை வளப்படுத்தியதில் ஏங்கெல்ஸின் பங்களிப்பும், சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடும் முக்கியமானவை.

அதேபோல், கருத்து முதலில் தோன்றி பொருளை உருவாக்கவில்லை; மாறாக, பொருளியல் நிலைகளிலிருந்தே கருத்துகள் உருவாகின்றன. மனிதனின் சமூக வாழ்க்கை முறையே அவனது சிந்தனைகளை வடிவமைக்கிறது. இதுவே பொருள்முதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு, “இயக்கவியல் பொருள்முதல்வாதம்” என்ற அடிப்படையில் மார்க்சியம் உருவானது.

“ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர கம்யூனிஸ்ட்களுக்குத் தனிப்பட்ட நலன்கள் எதுவும் இல்லை” என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் எழுதிய மார்க்ஸ், தமது சொந்த வாழ்விலும் தனிப்பட்ட நலன்கள் என்று எதனைப் பற்றியும் யோசிக்காமல் தன் வாழ்நாள் முழுவதையும் இவ்வுலகின் உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்காக மட்டுமே அற்பணித்தார். அதன் விளைவு தன்னுடைய குடும்பத்தின் குறைந்தபட்ச பொருளாதாரத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியவில்லை. 

மார்க்ஸின் வாழ்க்கையில் இரண்டு அருமையான உறவுகள் இடம்பெற்றன. ஒருவர் அவரது மனைவி ஜென்னி. செல்வந்தரான அரசியல் குடும்பத்தில் பிறந்த ஜென்னி, ஒரு எளிய வழக்கறிஞரின் மகனான தன்னைவிட நான்கு வயது இளைய கார்ல் மார்க்ஸைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அன்று முதல் தன் இறுதி நாள் வரை, மார்க்ஸுடன் வறுமையில் கூடி வாழ்ந்தார் அந்த மகத்தான காதலி.

உலகத் தொழிலாளர்களின் விடுதலைக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த மார்க்ஸை, வறுமை என்ற கொடிய நோய் அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. மருத்துவ சிகிச்சைக்கான பணம் இல்லாமல் தன் குழந்தையை இழந்தார். அக்குழந்தையின் ஈமச்சடங்குக்காகத் தன் மேலங்கியை விற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இத்தகைய கடினமான வாழ்க்கையை ஏற்றுக்கொள்வது எந்தப் பெண்ணுக்குமே கடினம்தான். ஆனால் ஜென்னி மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு வாழ்ந்தார்! 

தன் காதல் மனைவியான ஜென்னியைப் பற்றி மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
“ஒரு பெண்ணின் உண்மையான அன்பில் காதல் கொள்வது, ஒரு மனிதனை மீண்டும் மனிதனாக்குகிறது. ஜென்னி போன்ற ஒரு பெண் இல்லையெனில் நானும் ஒரு சாமானிய மனிதனைப் போன்றே வாழ்ந்து, மறைந்து போயிருப்பேன்.”

மற்றொருவர் அவரது உயிர்த் தோழனும், சக மார்க்சிய அறிஞருமான பிரெட்ரிக் ஏங்கெல்ஸ். மார்க்ஸ் பிறந்த ரைன்லாந்து மாகாணத்திலேயே ஏங்கெல்ஸும் பிறந்தார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் ஒரு பெரிய நூல் உற்பத்தித் தொழிற்சாலை முதலாளிக்கு மகனாகப் பிறந்தவர் ஏங்கெல்ஸ். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகாலம் மார்க்சின் உற்ற நண்பராக விளங்கிய இவர், தனித்துவமான கோட்பாட்டுப் பங்களிப்புகளுடன் மார்க்சியத்தை வளப்படுத்தியவர். மார்க்ஸ் லண்டனுக்குக் குடிபெயர்ந்த முதல் பத்து ஆண்டுகளில், ஏங்கெல்சின் அவ்வப்போதைய உதவிகள் இருந்தும், வறுமை மார்க்சின் வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்தது.

இந்நிலையில் ஏங்கெல்ஸ் தனது துணைவியார் மேரி இறந்த அதே ஆண்டில், தனது துக்கத்தையும் வணிகப் பிரச்சினைகளையும் பொருட்படுத்தாமல், ஒரே தவனையாக 350 பவுண்டுகளை மார்க்சுக்கு அனுப்பினார். இதன் மூலம் மார்க்சின் பொருளாதார நெருக்கடி ஓரளவு தணிந்தது. அடுத்த ஆண்டு ஏங்கெல்சின் வணிக நிலைமை மேம்பட்டதால், மார்க்சுக்கான அவரது நிதி உதவி அதிகரித்தது. இதன் விளைவாக, மார்க்சுக்கு ஆண்டுதோறும் நிலையான வருமானம் கிடைக்க ஏங்கெல்ஸ் ஏற்பாடு செய்தார். மார்க்சின் இறுதி பத்து வருட வாழ்க்கை அதிக பொருட் தட்டுப்பாடு இன்றி நடைபெற்றதற்கும், அதன் வழியாக அவர் இவ்வுலகின் பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சிக்கு வழிவகுத்த மூலதனம் நூலை எழுதுவதில் தன் கவனம் முழுவதையும் ஆழ்ந்து செலுத்துவதற்கும் ஏங்கெல்சின் இந்த உதவியே முக்கிய காரணமாக அமைந்தது.

1867 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி மார்க்சின் மாபெரும் படைப்பான “மூலதனம்” நூலின் முதல் தொகுதியின் அச்சுப் பிரதி தயாரானது. அன்று இரவு இரண்டு மணியளவில் தனது நண்பர் ஏங்கெல்சுக்கு மார்க்ஸ் இவ்வாறு எழுதினார்:
“இறுதியாக இந்த முதல் தொகுதி முடிந்துவிட்டது. இதற்கு நீ மட்டுமே காரணம். என் நன்றியை ஏற்றுக்கொள். உன் தியாகங்கள் இல்லையென்றால் இந்த நூலின் மூன்று தொகுதிகளையும் நான் எழுதியிருக்க முடியாது. நன்றியுடன் உன்னை ஆழத் தழுவுகிறேன். எனது அரிய, உண்மையான நண்பனே… உன்னை வாழ்த்துகிறேன்!”

மார்க்சின் வாழ்க்கையில் ஜென்னி மற்றும் ஏங்கெல்ஸ் ஆகியோர் இல்லாதிருந்தால், வறுமை என்ற கொடியவனிடம் அவர் தன் வாழ்வை இழந்திருப்பார்.

பிரஷ்யா (தற்போதைய ஜெர்மனி) நாட்டில் 1818 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி பிறந்த மார்க்ஸ், ஆட்சியாளர்களுக்கு எதிரான தனது கூர்மையான எழுத்துக்களால் தொடர்ந்து நாடு கடத்தப்பட்டுக் கொண்டிருந்தார். ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இடம்பெயர்ந்த அவர், இறுதியில் தனது நண்பர் ஏங்கெல்சின் ஆலோசனையின்படி லண்டனில் குடியேறினார். பெரும்பாலான நேரத்தை லண்டன் பொது நூலகத்தில் கழித்து, முதலாளித்துவத்தின் இயல்புகளை ஆய்வு செய்தார். இதன் விளைவாக உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் பைபிள் என்று அழைக்கப்படும் “மூலதனம்” நூல் உருவானது.

முதலாளித்துவத்தின் இயக்க விதிகள், அதன் தன்மைகள் மற்றும் சுரண்டல் முறைகளை விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்ட நூல் மூலதனம். முந்தைய சமூகங்களில் வெளிப்படையாக இருந்த சுரண்டல், முதலாளித்துவத்தில் மறைமுகமாக மாறியதை மார்க்ஸ் விளக்கினார். பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்யும் ஒரு தொழிலாளி, முதல் ஆறு மணி நேரத்திற்கான கூலியை மட்டுமே பெறுகிறார் என்பதையும், மீதமுள்ள ஆறு மணி நேர உழைப்பு முதலாளியின் லாபத்திற்காகப் போய்விடுகிறது என்பதையும் ஆதாரங்களுடன் விளக்கினார். இதுவே “உபரி மதிப்பு” என்ற மார்க்சின் மிக முக்கிய கண்டுபிடிப்பாக அமைந்தது. “வேலை நாள்” என்ற அத்தியாயத்தில் அவர் குறிப்பிடுகிறார்:
“வேலை நாளுக்கு சட்டபூர்வமான வரம்பு முதல் தேவை. இது இல்லாமல் தொழிலாளர் வர்க்கத்தின் முன்னேற்றம் மற்றும் விடுதலைக்கான எந்த முயற்சியும் முழுமையடையாது. வேலை நாளின் சட்டபூர்வ வரம்பு எட்டு மணி நேரமாக இருக்க வேண்டும்.”

இன்று உலகத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை நாள், குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம், ஊதியத்துடன் கூடிய விடுப்பு, மகப்பேறு விடுப்பு போன்ற உரிமைகளுக்கு அடிப்படையாக அமைந்தது ரஷ்யப் புரட்சி. இதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது மார்க்சின் கோட்பாடுகளே. இதைத் தொடர்ந்து சீனா, கியூபா, வியட்நாம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் தொழிலாளர் வர்க்கப் புரட்சிகளுக்கு மார்க்சியம் தூண்டுகோலாக இருந்தது.

“இதுவரை பல தத்துவஞானிகள் உலகத்தை விளக்கியிருக்கிறார்கள். ஆனால் இப்போது நமது பணி உலகத்தை மாற்றுவதே” என்று கூறி, உலகத் தொழிலாளர் வர்க்க விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட மாமேதை பேராசான் கார்ல் மார்க்ஸ். அவர் சிந்திப்பதை நிறுத்தி இவ்வுலகை விட்டு மறைந்து 142 ஆண்டுகள் கடந்த பின்னரும், இன்றும் உலகம் அவரது பெயரை உச்சரித்தவண்ணமே உள்ளது. ஆம், மார்க்ஸ் என்பது வெறும் பெயர் அல்ல. அது என்றென்றும் எரிந்து கொண்டிருக்கும் ஒரு செந்தனல். அது பாட்டாளிகளின் வாழ்வை துளிர்த்து ஒளிரச் செய்யும். உழைப்பைச் சுரண்டி வயிறு வளர்க்கும் பேர்வழிகளை சுட்டுப் பொசுக்கும்.

– க. சிவசங்கர்