சென்னையின் உழைக்கும் மக்கள் வாழும் இடங்களில் புளியந்தோப்பு ஒரு முக்கியமான பகுதி ஆகும். தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்களிடத்தில் புளியந்தோப்பு என்றால் ‘ரவுடியிசம் நிறைந்த பகுதி’ என்ற பொதுப்புத்தி உருவாகியுள்ளது. தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாட நாட்களில் வன்முறைகளும் வன்புணர்வுகளும் நிகழவே செய்கின்றன. இருப்பினும், வடசென்னையின் புளியந்தோப்பு, வியாசர்பாடி, இராயபுரம் போன்று தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு ரவுடிசம் என்ற முத்திரை இல்லை. அப்படியிருக்க, பெருவாரியான உழைக்கும் மக்கள் வாழும் வடசென்னையின் இந்தப் பகுதிகளுக்கு மட்டுமே ஏன் இப்படியான அவப்பெயர்? அவற்றில், புளியந்தோப்பை எடுத்துக்கொண்டு, வரலாற்று ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஆராய்ந்து பார்த்தால் உண்மை புலப்படும். அந்த உண்மைகளைத் தேடுவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
மில் எதிர்ப்புப் போராட்டம்
சுதந்திரத்திற்கு முன் வடசென்னையில் பக்கிங்காம் கர்னாடிக் மில்லை பிரிட்டிஷார் நிறுவினர். சென்னைவாழ் படித்த வர்க்கத்தினர் மில்லில் வேலை செய்தபோதிலும், உடலுழைப்பைச் செலுத்துவதற்காகக் கிராமங்களிலிருந்து மக்கள் வடசென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். இக்கூலித் தொழிலாளர்களால் புளியந்தோப்பும், அதன் சுற்றுவட்டாரக் குடிசைப் பகுதிகளும் உருவாக்கப்பட்டன. இந்திய சமூகத்தில் வேரூன்றிய சாதியம், மில்லுக்குள்ளும் தீண்டாமையைக் கடைப்பிடிக்கச் செய்தது. மில் தொழிலாளர்கள் சாதியாலும் அவர்களின் குடும்பப் பின்னணியாலும் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டனர். தொழில்நுட்பங்களை (இயந்திரங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை கையாளும் நபர்களாக) இயக்குபவர்களாகப் பிரிட்டன் குடிமக்கள் இருந்தனர். அடுத்தபடியாக அலுவலகப் பணியாளர்களாக ஆதிக்க சாதியினர் இருந்தனர். கூலித் தொழிலாளர்களாகக் கிராமங்களிலிருந்து அழைத்துவரப்பட்ட தலித் மக்கள் இருந்தனர். மூன்று பிரிவினருக்குமான உணவருந்தும் இடமும் தண்ணீர்ப் பானைகளும் தனித்தனியே வைக்கப்பட்டிருந்தன. தீண்டாமைக் கொடுமைகள் ஆலைக்குள் அரங்கேறிக்கொண்டிருந்த சூழ்நிலையில், 1921-ஆம் ஆண்டு மெட்ராஸ் தொழிற்சங்கம் கூலி உயர்வு மற்றும் சில பொருளாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராட்டத்திற்கான அறைகூவலை விடுத்தது. இப்போராட்டத்தில் ஏராளமான தலித் தொழிலாளர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். இப்போராட்டத்தை முறியடிக்க மில் நிர்வாகம் பிற சாதித் தொழிலாளர்களைப் போராட்டத்தில் ஈடுபடவிடாமல் தடுத்தது மட்டுமல்லாமல், சாதிய நஞ்சையும் தொழிலாளர்களின் மனதில் ஆழமாக விதைத்தது. பிரித்தாளும் கொள்கையை நிர்வாகம் கையாண்டதால் புளியந்தோப்பில் கலவரம் வெடித்தது. ஏராளமான ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகள் ஆதிக்க சாதித் தொழிலாளர்களால் சூறையாடப்பட்டன. இக்கலவரம் போராட்டமாக உருவெடுக்காமல் தவிர்க்கவும், தொழிலாளர்கள் ஒற்றுமையடையக் கூடாதென்ற பதற்றத்திலும் இருந்த அரசு, இராணுவப் பட்டாளத்தைக் கொண்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. இக்கலவரத்திற்குப் பிறகே புளியந்தோப்பைப் பற்றிய தவறான பொதுப்புத்தி உருவாக்கப்பட்டு பரவலானது. கலவரத்தில் ஈடுபட்டது என்னவோ சென்னையின் மற்ற பகுதிகளில் வாழ்ந்தவர்கள்தான்; ஆனால், எந்தத் தவறும் செய்யாத புளியந்தோப்பில் வாழ்ந்த, வாழ்கின்ற மக்களே அப்பழியைச் சுமக்கின்றனர்.
ஆடுதொட்டியும் வாழ்வாதாரமும்
புளியந்தோப்பின் மற்றுமொரு சிறப்பம்சம் ஆடுதொட்டி. சுமார் 120 வருடங்களுக்கு முன்பே பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்ட இந்த ஆடுதொட்டியின் மொத்தப் பரப்பளவு 9.8 ஏக்கர். ஆட்டிறைச்சி மட்டுமல்லாமல் மாட்டிறைச்சியும் அங்கு கிடைக்கும். ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படும் ஆயிரக்கணக்கான ஆடுகள் இறைச்சியாகத் தமிழகமெங்கும் விநியோகிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆட்டை வெட்டுவதற்கு, சுத்தப்படுத்துவதற்கு, தோல், கால், தலை எனப் பிரித்து விநியோகிப்பதற்கு, இறைச்சியை எடை போடுவதற்கு என அனைத்திற்கும் தனித்தனி வேலையாட்கள் செயல்பட்டு வருகிறார்கள். புளியந்தோப்பைச் சுற்றியுள்ள பெரும்பாலான இளைஞர்களின் வாழ்வாதாரம் ஆடுதொட்டியை நம்பியே உள்ளது.
ஆடுதொட்டியில் கல்லூரி மாணவர்களும் தங்களின் கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதற்காகப் பகுதிநேரமாக வேலை செய்கின்றனர். வடசென்னை மக்களின் காலை உணவிலேயே ஆடுதொட்டியின் இறைச்சி இடம்பிடித்துவிடும். இச்சிறப்பு வாய்ந்த ஆடுதொட்டியில் இருவேறு சங்கங்கள் இயங்குகின்றன. ஆட்டிறைச்சிக் கணக்காளர் சங்கமும், சென்னை மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கமும் செயல்பட்டு வருகின்றன. காலையிலேயே இறைசிக்காக ஆடு, மாடு வெட்டும் தொழிலுக்குக் கத்திகளை எடுத்துக்கொண்டு மக்க புறப்படுவர். இது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தவறாகப் புரியலாம். ஆனால் உண்மை வேறு.
உண்மையில் புளியந்தோப்பின் முகம் என்ன?
பொதுப்புத்திக்கு அப்பாற்பட்டது புளியந்தோப்பு. அறிவுஜீவிகளும் வழக்கறிஞர்களும் நிறைந்திருக்கும் பகுதி. மதச்சார்பின்மைக்கும் உழைப்பிற்கும் ஆகச்சிறந்த உதாரணம். வரலாற்றுப் பெருமைமிக்க மனிதர்கள் வாழ்ந்த நிலம்.
மதச்சார்பின்மை
இந்து, இசுலாம், கிறித்தவம் ஆகிய மூன்று மதங்களைப் பின்பற்றக்கூடியவர்கள் எந்தவித முரண்பாடும் இன்றிச் சகோதர சகோதரிகளாக வாழ்ந்து வருகின்றனர். கோவில்களும், மசூதிகளும், தேவாலயங்களும் எந்தவித சலசலப்பும் இல்லாமல் இயங்குவதே இதற்கு சாட்சி. மழைவெள்ளத்தின் போது தேவாலயமும் மசூதியுமே மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்குகின்றன. புளியந்தோப்புத் தெருக்களில் பால்முனீஸ்வரர், அங்காளம்மன் போன்ற நாட்டார் தெய்வக் கோவில்கள் நிறைந்துள்ளன. பெண் சிறுதெய்வங்களின் கோவில்களைப் பராமரிப்பவர்களாக மட்டுமல்லாமல், பூசை செய்பவர்களாகப் பெண்களும் திருநங்கைகளும் இருப்பது புளியந்தோப்பின் கூடுதல் சிறப்பு. கோவில்களில் பூசாரிகளாக ஆண்கள் செயல்பட்டே பார்த்திருக்கிறோம். ஆனால், வடசென்னையின் புளியந்தோப்பின் நாட்டார் தெய்வக் கோவில்களில் ஆணாதிக்கம் தகர்த்தெறியப்படுகின்றது.
அருள்ஜோதி இல்லம்
புளியந்தோப்பில் தனிப்பெருங்கருணைக்கு அடையாளமான வள்ளலாரின் கருத்தியலைத் தாங்கிய ‘அருள்ஜோதி இல்லம்’ செயல்படுகிறது. வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவரின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட சித்த மருத்துவர் ஆறுமுகசாமி, தன் வீட்டையே அருள்ஜோதி இல்லமாக மாற்றிவிட்டார். வாரந்தோறும் அருள்ஜோதி இல்லத்தில் சித்தரின் குடும்பமும் சுற்றத்தாரும் திருஅருட்பா அகவல் வாசிக்கின்றனர். தைப்பூசத்தன்று வள்ளலாரின் அணையா அடுப்பை நினைவுகூரும் வகையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. சித்தர் மறைந்தபின் அவரின் பேரப்பிள்ளைகள் இன்றுவரை வள்ளலாரின் கருத்தியலையும், ஐயா ஆறுமுகசாமியின் கனவையும் பாதுகாத்து வருகின்றனர்.
அறிவுஜீவிகளின் வாழ்விடம்
சென்னையின் முதல் தொழிற்சங்கமான மெட்ராஸ் லேபர் யூனியனின் பொதுச்செயலாளராகவும், துணை மேயராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்ட பக்கிரிசாமி வாழ்ந்த இடம் புளியந்தோப்பு. 90களின் ஆரம்ப காலகட்டத்தில் ஏராளமான தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுத்தவர். அவர் வாழ்ந்த வீடு இன்றும் புளியந்தோப்பில் உள்ளது. மருத்துவர் மணிகண்டனும் புளியந்தோப்பில்தான் வாழ்ந்து வந்துள்ளார். மணிகண்டன் வெளிநாட்டிற்குச் சென்று எம்.எஸ் பட்டம் பெற்றவர். பல தீவிரமான நோய்களுக்கும் மருத்துவம் பார்ப்பதில் தேர்ச்சி பெற்றவர். கரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் இறந்தார். இப்போதும் அவர் தயாரித்த மருந்துகள் அவர் வீட்டில் பாதுகாக்கப்படுவதையும், அதனைச் சிலர் வாங்கிச் செல்வதையும் காண முடியும்.
சமீபத்தில் புளியந்தோப்பில் உலா வந்தபோது ஏராளமான வழக்கறிஞர்களின் பெயர்ப் பலகைகளைக் காண முடிந்தது. ஏன் மணிகண்டனைத் தவிர வேறு மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப முன்னோடிகளின் பெயர்ப் பலகைகளைக் காண முடியவில்லை என்று ஆழமாகச் சிந்தித்தபோது, வியாபாரிகள் சங்க மூத்தவரின் பதில் என் சிந்தையை எட்டியது. மருத்துவம், தொழில்நுட்பம் சார்ந்த கல்விக்கான செலவு அதிகம்; அச்செலவைப் புளியந்தோப்பு மக்களால் சமாளிப்பது கடினம். ஆனால், சட்டக் கல்வியைக் குறைந்த செலவில் படித்துவிடலாம். அப்படியே அரிதாக யாரேனும் மருத்துவரானாலும், தொழிலுக்கு ஏற்ற வருமானம் கிடைக்காததால் வாழ்விடத்தை மாற்றிக்கொள்கின்றனர். மருத்துவர் மணிகண்டன் போன்ற சிலர் மட்டுமே விதிவிலக்காக உள்ளனர். இப்பதில் அப்பகுதியின் சமூகப் பொருளாதார நிலைகளை நமக்கு உணர்த்தும்.
பொம்மக் கொட்டகை
அப்பகுதி மக்களால் ‘பொம்மக் கொட்டகை’ என்றழைக்கப்படும் வீடு, சிற்பி தீனதயாளனின் தாத்தா எஸ்.பி. பிள்ளை வாழ்ந்த வீடாகும். வெண்கலச் சிலைகள் வார்க்கப்படும் முக்கிய இடமாகப் பொம்மக் கொட்டகை விளங்கியது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சென்னையின் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள வெண்கலச் சிலைகள் எஸ்.பி. பிள்ளை அவர்களால் வடிவமைக்கப்பட்டவையே. பொம்மக் கொட்டகைக்குக் கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா போன்ற பெருந்தலைவர்கள் வந்து சென்றுள்ளார்கள் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நகரத்தின் முக்கிய இடங்களில் நிறுவப்பட்ட சிலைகளின் மூலம் வரலாற்றையும் எடுத்துரைக்கிறது புளியந்தோப்பு.
நவீன தீண்டாமை
தமிழகத்தின் பல இடங்களில் கலவரங்கள் நிகழவே செய்கின்றன. கொலையும் வன்புணர்வும் சென்னையின் பிற பகுதிகளிலும் கூட அரங்கேறவே செய்கின்றன. ஆனால், வடச்சென்னை பகுதிகளுக்குத்தான் இப்படியொரு முத்திரை. உழைப்பின், அறிவின் அடையாளமான புளியந்தோப்பின் மீது, ஏன் ரவுடிசம் நிறைந்த இடம் என்ற பொய்யான மிகைப்படுத்தப்பட்ட கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது? ஆழமாக யோசித்தால் அதற்குள் சாதியம் அடங்கியுள்ளதை உணர முடியும். பொய்யான கட்டமைப்பை உருவாக்கி, அம்மக்களின் அடிப்படை உரிமைகள்கூட மறுப்பதற்குப் பெயர்தான் நவீன தீண்டாமை. குற்றம் நிறைந்த பகுதியென்று பிரச்சாரம் செய்யப்படும் புளியந்தோப்பில், மற்ற பகுதிகளிலைப் போல் அல்லாமல், கூண்டு ஏதுமின்றி அரசியல் சாசனத்தின் தந்தை அம்பேத்கர் கம்பீரமாக எழுந்து நிற்கிறார். மெத்தப் படித்த, வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியில்தான் சட்டமேதையைப் பாதுகாக்கக் கூண்டு தேவைப்படுகிறது; இது ஒன்றே இந்தப் பொதுப்புத்தியைத் தகர்க்கப் போதுமானது.
சுகாதாரமற்ற சுற்றுச்சூழல், பராமரிப்பற்ற சாலைகளுக்கு மத்தியில் அம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். புளியந்தோப்பில் வாழ்கிறார்கள் என்ற காரணத்தினாலேயே திருமணம் தள்ளிப்போவதும், வங்கிக் கடன் பெற முடியாமல் போவதும் அம்மக்கள் சந்திக்கும் முக்கியப் பிரச்சினைகள் ஆகும். தேவைக்கேற்றவாறு கல்வியும் வேலைவாய்ப்புகளும் மறுக்கப்பட்டு நித்தம் அல்லல்படும் புளியந்தோப்பு மக்களை, தேவையற்ற அவப்பெயரையும் சுமக்க வைக்கிறது இச்சமூகம். எவ்வளவு பெரிய அநீதியை ஒரு சமூகமாக நாம் செய்து வருகிறோம்! கட்டமைக்கப்பட்ட பிம்பங்களுக்கு அப்பாற்பட்டது புளியந்தோப்பு மக்களின் வாழ்க்கை.
– கு.சௌமியா







