சினிமாதமிழ் சினிமா

டோரதி: பேரன்பெனும் கடலை நோக்கி

Dorothy

இத்தனை வருடத் தமிழ்சினிமாவில் நகைச்சுவை, வேறுபட்ட கதைக்களம், நடிப்பிற்குச் சவாலுள்ள கதாபாத்திரமென்கிற வடிவத்தில் கேலி கிண்டல்களுக்காகவும், பாலியல் இச்சையோடே சுற்றுபவர்களாகவும், வில்லத்தனமாகவும் காட்சிப்படுத்தி திருநர் வெறுப்பை, குறிப்பாக திருநங்கைகளின் இயல்பான பாலின உணர்வைக் குற்றப்படுத்தி, அவர்களின் மனங்களைக் குத்திக் கிழித்து உண்டாக்கிய ரணத்திற்கோர் பெருமருந்து “டோரதி”.

நூற்றாண்டை நெருங்கும் தமிழ்திரையுலகில் இயக்குனர் “இமயம்”, “சிகரம்”, “பிரம்மாண்டம்” போன்ற பெரிய பட்டங்களை வைத்துக்கொண்டு ஆகப்பெரும் படைப்பாளிகளாகப் போற்றப்படும் எண்ணற்ற பலரும் பேசத் துணியாத ஓர் இயல்பான கதையை மக்கள் முன் தைரியமாக வைத்ததற்காகவே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை எவ்வளவு கொண்டாடினாலும் தகும்.

“ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படத்தில் இயக்குனர் மிஸ்கின், “பேரன்பு”-ல் இயக்குனர் ராம், “தர்மதுரை”-யில் இயக்குனர் சீனுராமசாமி, “நட்சத்திரம் நகர்கிறது”-வில் இயக்குனர் பா.ரஞ்சித் போன்றோர் திருநங்கைகளைக் காட்சிப்படுத்திய விதம் திருநர் மீதான வெறுப்பின் தகிப்பைச் சிறிது தணிக்கும் குளிர்த்தென்றல் போன்றவையெனினும், 

“டோரதி” ஓர் நீண்ட நெடிய பயணத்தில் பார்க்க நேரிடும் மறக்கவியலாப் பேரருவியின் அழகு. அப்பேரருவி பிரவாகமெடுத்து பாலாதிக்க வெறியால் கொழுந்து விட்டெரியும் காட்டுமிராண்டி மனங்களின் தீயை என்றாவதோர் நாள் நிச்சயம் அணைத்திடும்.

திரைத்துறையின் அறம்

பெரும்பாலும் திரைப்படம் ஆரம்பிக்கும் முன்னர் “இத்திரைப்படத்தில் விலங்குகள், பறவைகள், குழந்தைகள் துன்புறுத்தப்படவில்லை” என்று ஒரு அறிவிப்பைப் போட்டுவிட்டு, பின்னர் திரைக் காட்சியின் வழியே பெண்களையும் திருநர் மற்றும் பால்பன்மையர் (Trans and Queer community) மக்களையும் இழிவுபடுத்தி, அவர்களின் பாலின அடையாளங்களைக் கெட்டவார்த்தைகளாகவும் கிண்டலுக்குரிய சொல்லாகவும் பொதுப்புத்தியில் இயல்பாக்கும் வேலையை லாவகமாகச் செய்து வேதனைக்குள்ளாக்கும் படைப்பாளிகளைப் பார்க்கையில், “பறவைகள், விலங்குகள் மேலிருக்கும் கரிசனம் கூட எங்க மேல இல்லையே” என்று கேட்கத் தோன்றும். இங்கு படம் ஆரம்பிக்குமுன்னே வரும் பார்வையாளர்களின் கவனத்திற்கான அந்த அறிவிப்பிலேயே படக்குழுவினர் மீதான மரியாதை கூடுகிறது.

படம் எதிர்மறையான விமர்சனங்களை எழுப்பி அது படைப்பிற்கே ஆபத்தாக மாறும் என்பதை அறியாதவர் அல்ல இயக்குனர். அப்படியிருந்தும் அந்த அறிவிப்பின் எந்த இடத்திலும் “இக்கதையின் வழியே நாங்கள் எதையும் யாரையும் ஊக்குவிக்கவில்லை, இது முழுக்க கற்பனை” என்று ஒப்புக்காகக்கூடக் குறிப்பிடாதபோதே படைப்பாளியின் அறத்தை அறிய முடிகிறது. 

அவ்வறம் படம் முழுக்க விரவிக்கிடக்கிறது. இப்படியான ஓர்படைப்பினைக் கொடுக்கக் காரணம் அவரிடமிருந்த அறம் தந்த நெஞ்சுரம். 

கலாச்சாரம், பண்பாடு முழுக்க ஆணாதிக்கச் சேற்றைக் குழைத்துக் கட்டப்பட்டுள்ள சமூக அநியாயங்களை அரசியலாகத் தூக்கிப்பி(டித்து)ழைப்போர்க்கு அறத்(டோர)தின் வாயிலாகக் கூற்றுவனாகியிருக்கிறார் இயக்குனர்.

காதலின் பரிமாணம்

கடும் நெடும் பயணத்தைத் தொடங்கி வைத்த நட்பு காதலில் முடிந்து போவதே படத்தின் கரு. 

அக்காதல் ஆண், பெண்ணுக்கு மட்டுமேயென்ற வரையறுக்கப்பட்ட எல்லையில் இருக்கும் வரை ‘போலிப்புனிதம்’ போற்றிச் சிலாகிக்கும் பொதுசமுதாயம், பாலினம் கடந்த காதலாய் உருமாறும் பொழுது பதறியடித்துக் கொண்டு, “இயற்கைக்கு எதிரானது, அருவருப்பானது, கலாச்சாரச் சீரழிவு, பாவம், கடவுள் மன்னிக்கமாட்டார்” என இத்யாதி இத்யாதிகளைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, வசவுகளை வாரி இறைத்து, ஆற்றாமையால் புழுங்கி, அறியாமைப் புழுதியிலே உழல்கிறது. 

துவக்கக் காட்சியில் இப்புழுதியில் சிக்குண்டிருக்கும் நாயகன் “கார்த்தி” அறிந்து, உணர்ந்து அப்புழுதியைக் கடந்து தெளிந்தபின், “சுப்பு”-வை கொன்று “டோரத்தி”யாக ஏற்குமிடம் அன்பின் வழியது உயர் நிலை.

“ஏம்டா பொம்பளைதான் அழனும்னு எழுதி வெச்சிருக்கா…? எங்கருந்து ஒட்டிக்கிட்டு வந்துச்சு இந்த ஆம்பளை புத்தி?” 

“உங்களை மாதிரி ஆம்பளை திமிரெடுத்தவங்களுக்குப் பொம்பளை மனசு புரியாது.” 

“உன் அப்பாவும் அண்ணன்களும் வெளிய இருக்கப் பொம்பளைகள அடக்குறாங்க, நீ உனக்குள்ள இருக்கப் பொம்பளைய அடக்குற, அவங்களுக்கும் உனக்கும் என்ன வித்யாசம்?”

“அது பொண்ணுண்ணே, அதுக்கு… தான் ஒரு பொண்ணுங்குற அங்கீகாரம் வேணும், அதுக்கூடக் கொடுக்க வக்கில்லைனா நாமல்லாம் என்ன ஆம்பளைங்க?” 

“நீங்க என்ன ஆளுக?” என்ற கேள்விக்கு “நான் ஆம்பளையாளு, எங்கம்மா பொம்பளையாளு” என்று வசனங்களாகப் பேசியும், சுப்பு பெண்ணுடையில் மீசையை மழிப்பது, கல்லிச்செடிகளுக்கு மத்தியில் அமர்ந்திருப்பது, இரண்டாம் பாதியில் சுப்புவிற்கும் கார்த்திக்கும் இடையேயான சில முக்கியமான தருணங்களை உயரமான இடத்தில் காட்சியமைத்தது எனப் பேசாமொழியாய் பல கவிதைகள் காட்சியினூடே பேசப்பட்டிருப்பது படத்தின் தனித்துவம்.

இசையும் அரசியலும்

கதாபாத்திரங்களின் பேசு மொழியும் ஒளிப்பதிவாளரின் காட்சி மொழியும் சமூகத்தில் தடித்துப்போயுள்ள பாலினப்பாகுபாடு, சாதி, மத-பிற்போக்குத்தனம், சாதிய-பாலாதிக்க ஆணவப்படுகொலை, திருநர் வெறுப்பென்ற அசிங்கங்களையெல்லாம் அம்பலப்படுத்தியுள்ளதைப் பார்க்கையில் இது வெறும் திருநங்கைகளைப் பற்றிய கதை மட்டுமல்ல என்று கூர்ந்து கவனிப்பவர்களுக்குப் புரியும்.

படத்தின் பெரும் பலம் இசை. 

இசைஞானியின் இசை.

நெடுநாளுக்குப் பிறகு, தன் ஆருயிர் தோழனை, பாலினமாற்ற நிலையிலிருக்கும் சுப்புவைப் பார்க்க கார்த்தி பேருந்து நிலையத்திற்குள் வருவான். “சுப்பு சுப்பு” என்று கத்தியழைக்கும் குரல் கார்த்தியினுடையது என்று அறிந்து, உறக்கத்திலிருந்து சுப்பு மீண்டெழும் நேரம் பின்னணியில் ஒலிக்கத் தொடங்குமோர் இசை உங்களை உருக்கத் தொடங்கும். ராஜாவின் ரசிகர்களுக்கு அது பரிட்சயமான பின்னணி இசை. 1500-க்கும் மேற்பட்ட படங்களில் எத்தனையோ மயக்கும் பின்னணியிசை இசைஞானி வழங்கியிருப்பினும், ஏன் குறிப்பாக 1988-ல் வெளிவந்த “வீடு” படத்தின் இசையை இக்காட்சியில் பயன்படுத்த வேண்டுமென்று யோசிக்கையில் இதயம் கனத்தது.

பாலின மாற்றத்தால் வீட்டை விட்டு விரட்டப்படும் திருநர்களுக்கு வீடென்பது சுவர்கள் சூழ்ந்த பாதுகாப்புக் கூடு மட்டுமல்ல, அதுவொரு பெரும் கனவு. வீடென்பது ஆண்களுக்கும் பெண்களுக்கு மட்டுமானதல்ல, எல்லோருக்குமானது.

“சுப்பு”வைப் போன்றோர்க்கு வீடென்பதே “கார்த்தி”-யாக இருக்கலாம், உலகமாகக்கூட இருக்கலாம்.

நிதர்சனமும் மாற்றமும்

கருப்பு வெள்ளை காலம் தொட்டு 4K Pixel தரமென முன்னேறிய தொழில்நுட்பத்திற்குத் தமிழ் சினிமா மாறிவிட்டபோதும், மாறாமலிருப்பது திருநர் மற்றும் பால்பன்மையர் மீதான வெறுப்பு ஒன்றே. அப்படி வெறுப்பை உமிழும் எண்ணற்ற இழிவு காட்சிகள், வசனங்கள், பாடல்களை என்னால் சுட்டிக்காண்பிக்க முடியும். ஆனால் “டோரதி”யில் கதையின் முக்கியத்துவமென்பது திருநங்கையைப் பற்றியதுதான் என்றாலும், வலிந்து திணிக்கப்பட்ட கேலி கிண்டல்களோ, முகம்சுளிக்கும் காட்சிகளோ இல்லாதிருப்பது பெரும் ஆறுதல். 

கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் “இழி சொற்களை” உபயோகிக்கும்போது கூடக் குறைவான ஒலிப்பதிவில் பயன்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.

விளிம்புநிலை மக்களின் வலிகளை, யதார்த்தத்தைப் பதிவு செய்கிறேன் என்கிற பெயரில் எல்லை மீறுவதற்கான எந்தச் சந்தர்ப்பத்தையும் எடுத்துக்கொள்ளாத இந்த பொறுப்புணர்வு பல படைப்பாளிகள் வளர்த்துக்கொள்ள வேண்டியவொன்று.

மேலும் சுப்பு டோரதியாகும் பாலினமாற்று நிலை, சக திருநங்கைகளுடனான பயணம், கார்த்தி அவளை உணர்ந்து ஏற்குமிடமெனச் சலிப்பூட்டாமல் திரைக்கதையை நகர்த்திய விதம் சிறப்பு.

சமூகத்தின் கண்ணாடி

கதை ஆலமரமென்றால் நடித்த உயிரூட்டிய திரைக்கலைஞர்கள் அதைத்தாங்கும் விழுதுகள். கவுரவத்திற்காகத் தன் குடும்பத்தினரையே கொன்று வீசும் “விசில் வீரய்யாக்கள்” நம் சமூகத்தில் ஏராளம்.

“அவளை அவளாகவே ஏற்கும்” சுப்புவின் அண்ணி, “டோரதி”, பள்ளிக்காலத் தோழி “தனம்”, கார்த்தியின் “அம்மா”, திருநங்கை தாயாக வரும் ஜீவா, சுப்புவின் மீதான காதலை கார்த்திக்குப் புரியவைத்திடும் “வடிவு” போன்றவர்களுக்குத் தேவதையின் சாயல். 

முன்னோட்டம், பாடல் வெளியீடு, படத்தின் முதற்பாதியென சுப்புவின் பாலினமாற்றம் பற்றி எந்தத் துப்பிற்கும் இடம் கொடுக்காது, பார்வையாளர்களை இரண்டாம் பாதியில் அமரவைத்ததே பல பாலாதிக்க வெறி நோயர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம்.

இந்த வைத்தியத்தின் எரிச்சல் தாங்க முடியாமல்தான் பலர் திருநர் மற்றும் குயர் வெறுப்புநோய் முற்றிச் சமூக வலைத்தளங்களில் கதறித் தீர்க்கிறார்கள். “ஆண்-பெண் காதல் தான் புனிதமானது” என்று கூவுகின்றவர்கள், கார்த்தியும் (ஆண்) அவன் காதலித்த தங்க மலரும் (பெண்) சேர முடியாமல் போனதற்கான காரணத்தைப் படத்தில் கண்டறிந்து, சமூக நிதர்சனத்தில் ஆராய்ந்து பார்த்தால் இவர்களின் போலிப்புனிதம் பல்லிளிப்பது தெரியும். 

குழந்தை பருவத்திலிருந்து முரட்டுத்தனமான ஆணாதிக்க வெறிபிடித்த தந்தை மற்றும் அண்ணன்களென முழுக்க முழுக்க எதிர்பாலீர்ப்பு ஆண்கள் சூழவே வளர்ந்த சுப்புவால் ஏன் ஓர் எதிர்பாலீர்ப்பு ஆணாக இருக்க முடியவில்லை..?

என்ற கேள்வியை நிஜத்தில் பொருத்திப்பார்த்து, கொஞ்சமேனும் நேரம் ஒதுக்கிச் சிந்தித்தால் போதும்.

மாறுபாலினம் மற்றும் தற்பாலீர்ப்பு போன்ற பால்பன்மை நிலையெல்லாம் இயல்பானது. எந்தவொரு புறக்காரணியின் தாக்கத்தாலும் எவர் ஒருவரின் கட்டாயத்தாலும் யாரும் அப்படி மாறுவதில்லை, மாற்றப்படுவதுமில்லை என்பதை உணரலாம்.

இருந்தும் முட்டாள்தனமாக கதறும் அறிவிலிகளுக்கு, “டோரதி”யின் வார்த்தையில் சொல்வதென்றால், “மனுஷ தன்மையைச் சோதிச்சுப் பாக்குற பரிட்சைதான் நான். ஆனா நீங்க பூராபயலும் பெயிலுதான்”.

பெயிலானாலும் வசவு ஓய்ந்ததாக இல்லை. வீழ்க வசவாளர்கள். எல்லாவற்றிலும் மேலாக “இருட்டறையில் முரட்டுக்குத்து”, “திரௌபதி”, “வில்லு”, “மன்மதன்”, “கந்தன்மலை”, “அரண்மனை” போன்ற திரைப்படங்களால் காக்கப்பட்ட உங்கள் கலாச்சாரம் “டோரதி”யால் அழிகிறதென்றால் அழியட்டும்.

குறையேதும் உண்டா?

படத்தில் குறைகளே இல்லையா என்றால் இருக்கிறது. 

“திருநங்கை என்பது ஓர் கதாபாத்திரம் அல்ல; அதுவோர் பாலின நிலை. அப்பாலினக் கதைகளில் வேறொரு பாலினத்தோரை வேடமிட்டு நடிக்கவைப்பது ஒரு திருநங்கை கலைஞரின் வாய்ப்பைப் பறிப்பதுபோலாகும். திரைத்துறையில் அத்திப்பூத்தாற்போல் வரும் இந்த வாய்ப்பையும் பிடுங்கி, ஆணிடமோ பெண்ணிடமோ கொடுப்பது சரியானது அல்ல” என்று எழுத்தாளரும் அரங்க நாடக கலைஞருமான “லிவிங் ஸ்மைல் வித்யா” கூறுவதில் உள்ள நியாயத்தை நானும் ஏற்பவள்.

ஆனால் முன் பாதியில் சுப்புவாகவும், பின் டோரதியாகவும் சனந்தைக் காட்டிலும் வேறுயாரும் நடிப்பின் வழியே நியாயம் சேர்த்திருக்க முடியுமா என்றால் அது கேள்விக்குறியே. 

மேலும் படத்தில் அத்தனை திருநங்கைகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது, “திருநங்கை ஜீவா”-வை ‘டொரோண்டோ’ திரைப்பட விழாவிற்கு அழைத்துச் சென்றிருப்பது, எல்லாவற்றிற்கும் மணிமகுடமாக இப்படியான ஒரு கதையைக் கொடுத்ததென எத்தனையோ நிறைகளுக்காக, மேலே ஆமோதித்த குறையை நான் திரும்பப் பெறுகிறேன்.

படத்தின் இறுதி 20 நிமிடங்கள்தான் காவியம். “டோரதி”யை (சுப்புவை) நினைத்தவாறே அமர்ந்திருக்கின்ற “கார்த்தி”-க்கும் “வடிவி”ற்குமான உரையாடல் அதிஅற்புதமான காட்சிப்படைப்பு. 

தன் தோழனை தோழியாக முழுமையாக ஏற்ற பின்னர், அவள் பிரிவின் ஆற்றாமையால் வருந்தும் கார்த்தியிடம், “இது லவ்டா தம்பி” என்று “வடிவு” அவன் காதலுற்றதைச் சுட்டிக்காட்டும் போது, கார்த்தியின் ஆண்மைய சிந்தனை ஏற்க மறுத்து, பின்னர் காதலை ஒப்புக்கொண்டு, பிறகு “ஏண்ணே தப்புல்லையாண்ணே” என்று தயங்குமிடத்தில் “வடிவு” தரும் தரமான பதிலோடு முடிகிறது. 

மலையில் பிறப்பெடுக்கும் நதி கடலை அடையக் கீழிறங்கி அதனை நோக்கிப் பயணிப்பதுபோல், திரையின் ஒரு முனையில் துவங்கி மறுமுனையில் முடிவதாய்க் காட்சியமைக்கப்பட்டிருக்கும்.

ஆம், டோரதியின் மீதான கார்த்தியின் நட்போ காதலோ, அது பேரன்பெனும் கடலை நோக்கிப் பயணிக்க இனி எத்தடையுமில்லை.

– எழுத்தாளர் கோ.இலக்ஷ்யா மன்னார்

1 Comment

  • டோரதி திரை விமர்சனம், படத்தைப் நாம் பலமுறை பார்த்த அனுபவத்தை தந்து விடுகிறது.

    பால் மாறும் மனிதர்களின் வாழ்வியல் வலியை என்னுள் கடத்தியது எழுத்து நடை.

    என் பார்வையின் கோணத்தை மாற்றியது இப் பதிவு!

    மிக்க நன்றி!

Leave a Reply