இந்திய சினிமாசினிமா

சிரையா : தங்கக் கூண்டுமே சிறைதான் – கு.சௌமியா

புள்ளி (2)

90ஸ் கிட்ஸ் மற்றும் 2கே கிட்ஸ் என்று சொல்லப்படும் தலைமுறைகள் இன்றைய தொழில்நுட்பத்தின் அதிநவீன வளர்ச்சியுடன் தாங்களும் வளர்ந்தவர்கள். இக்காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் தூர்தர்ஷனில் ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியிலிருந்து, நெட்பிளிக்ஸில் கொரியன் மற்றும் சைனீஸ் சீரிஸ் வரை கண்டு களித்தவர்கள். இத்தலைமுறை இளைஞர்களின் மனங்கவரும் சீரிஸ்கள் கொரியன் மோகத்தையும், நுகர்வு கலாச்சாரத்தையும் விதைப்பதுடன், சில முற்போக்கு கருத்துகளையும் விதைக்கவே செய்கின்றன.

ஹீராமண்டி, அயலி வரிசையில் சமீபத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) ஓடிடி தளத்தில் வெளியான ”சிரையா“ தொடரும் பெண் விடுதலைக்கான சிந்தனையை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. இந்தியச் சமூகத்தில் தங்கக் கூண்டுகளில் சிக்கித் தவிக்கும் பெண்கிளிகள் ஏராளம். இக்கூண்டுகளில் உள்ள கிளிகளுக்கு உணவு வழங்கப்படும், ஆனால் எந்தவித உரிமையும் சுதந்திரமும் இல்லை. இருப்பதற்கு இடம், உறவு போன்ற காரணங்களினால் வேறு வழியின்றிப் பெண்கள், குறிப்பாக நடுத்தர வர்க்கப் பெண்கள் கலாச்சாரச் சாக்கடைக்குள் சிக்கித் தவிக்கின்றனர்.

திருமண உறவும் உடல் மீதான ஆதிக்கமும்

பெண் என்பவள் ஆணின் சொத்து என்று காலங்காலமாகக் கற்பிக்கப்படுகிறாள். வீட்டு வேலை, சமையல், குழந்தை பெறுதல் மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற கடமையுடன், ஆணின் காமத்திற்கும் தன் விருப்பமே இல்லையென்றாலும் இரையாவதையும் ‘கலாச்சாரம்’ என்கிறது சமூகம். ”சிரையா” தொடர், திருமணத்திற்குப் பிறகு பெண்ணின் உடல் மீது ஆணுக்கு இருக்கும் கட்டற்ற ஆதிக்கத்தைக் கடுமையாகச் சாடியுள்ளது. இத்தொடரில், பல எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் படித்த பெண் ஒருத்தி திருமண வாழ்க்கையில் நுழைகிறாள். ஆனால் முதல் நாள் இரவே கணவனின் கொடூரத்தை அனுபவிக்க நேரிடுகிறது.

படித்த பெண், அனைத்தும் தெரிந்தவள் என்பதால் தன் உடல் மீது தனக்கு இருக்கும் உரிமையைக் கோர முயல்கிறாள். ஆனால் அதை அவளது கணவனும், குடும்பமும், ஏன் சட்டமுமே ஏற்க மறுக்கிறது. கணவனாக இருந்தாலும், காதலனாக இருந்தாலும் பெண்ணின் விருப்பமில்லாமல் உடலுறவு மேற்கொண்டால் அது பாலியல் வன்முறையே ஆகும். இந்த உண்மையை ஒத்துக்கொள்ள யாரும் தயாராக இல்லை. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் தனக்குள்ளேயே புழுங்கிச் சாகிறாள், ஒருகட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்; ஆனாலும் அவளால் அக்கொடுமைகளிலிருந்து விடுபட முடியவில்லை.

அறியாமையும் ஆணாதிக்கப் புரிதலும்

இத்தொடரின் முக்கிய கதாபாத்திரமான, குடும்பத்திற்காக உயிரையே கொடுக்கத் துணியும் கமலேஷ், “திருமணத்திற்குப் பின் உடலையும் மனதையும் கடவுளுக்குத் (கணவனுக்கு) தானே ஒப்படைக்க வேண்டும், அப்படித் தானே மதமும் சாஸ்திரமும் சொல்கிறது?” என்ற கேள்வியைத் தன் அறியாமையிலிருந்து கேட்கிறாள். இத்தொடரில் வரும் கமலேஷைப் போன்றுதான் ஏராளமான பெண்கள் அறியாமையில் இருக்கிறார்கள். பெண் உரிமைக்கான போராட்டம் வீடுகளிலிருந்தே தொடங்குகிறது. அப்படியான போராட்டங்களில் பெண் இன்னொரு பெண்ணிடமே போராட வேண்டியுள்ளது.

மகள் தனக்குப் பிடித்த உடையை அணிவேன் என்று அப்பாவை விட அம்மாவிடம்தான் அதிக சண்டையிட வேண்டும்; பெரும்பாலான வீடுகளில் மாமியார்-மருமகள் சண்டைதான் அதிகம் போன்ற எதார்த்தங்களை வைத்து, “பெண்ணுக்குப் பெண் எதிரி” என்னும் வாதத்தை இத்தொடர் பொய்யாக்கியுள்ளது. ஆதிக்கமுடைய ஆண்களால் உருவாக்கப்பட்ட பழக்கவழக்கங்களைக் கடத்துபவர்கள் மட்டுமே பெண்கள் என்ற புரிதல் நமக்கு அவசியம் வேண்டும். கலாச்சாரப் போர்வையில் சிக்கித் தவிக்கும் அம்மா, மாமியார், சகோதரி போன்றவர்களுக்கும் புரிதலை ஏற்படுத்திப் பெண் விடுதலைப் போராட்டத்தில் அவர்களை இணைத்துப் போராடுவதே முழுமையான வெற்றி என்பதை இத்தொடரின் வாயிலாக உணரலாம்.

சமூக முரண்பாடுகளும் சட்டச் சிக்கல்களும்

”நாம் இங்கு புரட்சிகர போராளியாக விளங்குகிறோம். ஆனால் வீட்டில் மோசமான பிற்போக்கு ஆணாதிக்கக் கணவராக இருக்கிறோம்” என்னும் தோழர் பி.டி. ரணதிவேயின் வார்த்தைகளை இயக்குநர் அழகாகத் திரையில் காட்சிப்படுத்தியுள்ளார். சிரையா தொடரில், சிறுபான்மைச் சமூகத்திற்கு ஆதரவாகத் தான் பெற்ற விருதைத் திருப்பிக் கொடுத்த எழுத்தாளர், தன் வீட்டின் மருமகளுக்கு அநீதி நடக்கையில் வேடிக்கை பார்ப்பது மட்டுமல்லாமல், அந்த அநீதிக்குத் துணை போவது ஆணாதிக்கத்தின் உச்சம்.

இத்தொடரில் திருமண உறவில் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பூஜா, முறையான சட்டமில்லாததால் குற்றவாளிக்குத் தக்க தண்டனை பெற்றுத் தர முடியவில்லை. ஐந்தாவது தேசியக் குடும்ப நல ஆய்வு (NFHS-5, 2019-2021) இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. மூன்றில் ஒரு பெண் தன் கணவனால் உடல் ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக இவ்வாய்வு கூறுகிறது. மேலும் 4.6 சதவீதப் பெண்கள் பாலுறவில் புணர்தலுக்குத் (sexual intercourse) தன் கணவனால் கட்டாயப்படுத்தப்படுவதாகவும், 2.4 சதவீதத்தினர் பிற பாலியல் செயல்களில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுவதாகவும், 3.8 சதவீதப் பெண்கள் தங்கள் கணவர்களால் பாலியல் உறவில் ஈடுபடவில்லை என்றால் மிரட்டலுக்கு ஆளாக்கப்படுவதாகவும் ஆய்வு கூறுகிறது. இப்பெண்கள் இந்தியாவில் முறையான சட்டம் இல்லாததால் பாதிக்கப்பட்டாலும் அமைதியாகவே இருக்கின்றனர்.

நீதிமன்றத் தீர்ப்புகளும் தற்போதைய நிலையும்

அனைத்து மதங்களும் வேதங்களும் பெண்களுக்கு எதிராகவே உள்ளன; காரணம் அவை ஆண்களால் உருவாக்கப்பட்டவை என்ற மிகப்பெரிய அரசியலைச் சிரையா தொடர் இளைய தலைமுறையிடம் விதைத்திருப்பது சிறப்பானது. இந்தியாவில் கணவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்குச் சரியான சட்டங்கள் இல்லை. 2017-ல் ஹிருஷிகேஷ் சாஹூ (Hrishikesh Sahoo) வழக்கில் ஒரு பெண் தன் கணவனால் பாலியல் வன்முறைக்கு ஆளானதாக வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கில் கர்நாடக  நீதிமன்றம்  திருமண  உறவில்  பாலுறவு  குற்றமில்லை என்று  கூறியதுடன்   குற்றவாளிக்கு  எந்த  தண்டனையும்  வழங்கப்படவில்லை.

இந்தத் தீர்ப்பு இந்தியத் தண்டனைச் சட்டம் 375 பிரிவின் விதிவிலக்கு 2-ன் கீழ் (கணவன் தன் மனைவியுடன் உடலுறவு கொண்டால், மனைவி 18 வயதிற்கு கீழ் இல்லாத பட்சத்தில் அது குற்றமாகக் கருதப்படாது) ஒரு சவாலாக அமைந்தது. இத்தீர்ப்பிற்கு 2022-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. 2023-ம் ஆண்டு சந்திரசூட்டைத் தலைமை நீதிபதியாகக் கொண்ட அமர்வு, ‘Marital Rape’ (திருமண உறவில் பாலியல் வன்கொடுமை) என்பது பெண்ணின் உடல் உரிமை சார்ந்தது என்றும், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 14, 19, 21 வலியுறுத்தும் சமத்துவத்திற்கு எதிரானது என்றும் அவதானிப்புகளை வழங்கியது. ஆனால் இதற்கெனத் தனிச் சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை. தற்போதைய ஒன்றிய அரசும் ‘Marital Rape’-ஐக் குற்றமாக முழுமையாகக் கருதவில்லை.

ஜனநாயக நாடு என்று பெருமை கொள்ளும் இந்தியாவில், உடலுறவில் கூட ஆண்களின் சர்வாதிகாரம் நிலைத்திருப்பது பெண்களின் சாபக்கேடு. திருமண உறவின் பேரில் நிகழும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வலுவான சட்டம் இயற்றப்பட வேண்டிய கட்டாயத்தை இயக்குநர் சசாந்த் ஷா தன்னுடைய படைப்பின் வழியாக வலியுறுத்தியுள்ளார். 

“சிரையா“ – இக்காலக்கட்டத்திற்குத் தேவையான ஆகச்சிறந்த படைப்பு.

மேற்கோள்கள் மற்றும் தரவுகள் (References):

  1. National Family Health Survey (NFHS-5) 2019-21 Report: https://rchiips.org/nfhs/NFHS-5Reports/NFHS-5_INDIA_REPORT.pdf
  2. Karnataka High Court on Marital Rape (Hrishikesh Sahoo Case): https://indiankanoon.org/doc/171509375/
  3. Supreme Court Observations on Marital Rape (2023): https://www.scobserver.in/cases/marital-rape-immunity-constitutionality-of-exception-2-to-section-375-ipc-background/
  4. JioHotstar – Chiraiyya (Tamil Series): https://www.hotstar.com/

– கு.சௌமியா