மற்றவை

சங்கம் எல்லாம் எதற்கு பிரோ – 7

புள்ளி

சங்கத்தின் தோற்றம் மற்றும் பின்னணி

நீண்ட விவாதங்களின் தொடர்ச்சியாகவும், கடந்த 7 ஆண்டுகளில் ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையிலும், சங்கத்தை நோக்கிச் செல்வதே சரியான வழி என்ற கருத்தோட்டம் எங்களிடையே உருவானது. இதற்குப் புறநிலையில் ஏற்பட்ட மாற்றங்களே முக்கியக் காரணமாக அமைந்தன. 

2017-ஆம் ஆண்டு அமெரிக்கத் தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிசான் (Verizon), இந்தியாவில் இருந்த தனது துணை நிறுவனத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான பணியாளர்களை ஒரே நாளில் பணிநீக்கம் செய்தது. அன்று காலை வேலைக்கு வந்தவர்களை ஒரு அறைக்குள் அழைத்து, “உங்களுக்கு வேலை இல்லை, உடனே வீட்டிற்குச் செல்லலாம்” என்று கூறி, பாதுகாப்புப் பணியாளர்களைக் (Bouncers) கொண்டு அலுவலக வாயில் வரை அழைத்துச் சென்று வெளியேற்றினர். இது போன்ற நடைமுறையை ஐடி துறையில் இயல்பானதாக மாற்றும் காலமாக இருந்தது.

வெரிசான் பணிநீக்கமும் ஒருங்கிணைப்பும்

இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் எம்மைத் தொடர்பு கொண்டனர். அதற்கு முக்கியக் காரணம், அந்த நிறுவனத்தில் பணியாற்றிய சில சங்க ஆதரவுத் தோழர்கள் அவர்களை முறையாக ஒருங்கிணைத்திருந்ததே ஆகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக உடனடியாக அறிக்கை வெளியிடப்பட்டது. பின்னர், அனைவரையும் ஒன்றிணைத்துத் தொழிலாளர் துறையிடம் கோரிக்கை மனுவை ஒப்படைத்தோம். இந்த இயக்கம் இந்தியா முழுவதும் பரவலாகப் பேசப்பட்டது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கான போராட்டங்கள் மற்றும் சட்டப் போராட்ட ஆலோசனைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே, சங்கத்தைப் பதிவு செய்வதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன.

பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் அவசியம்

வெரிசானில் ஏற்பட்ட அனுபவம் எங்களுக்கு ஒரு முக்கியமான பாடமாக அமைந்தது. அப்போது “Knowledge Professionals Forum” (KPF) என்ற அமைப்பின் மூலம் எங்களால் 2K படிவத்தைத் (Form 2K) தாக்கல் செய்ய முடியவில்லை. காரணம், நாங்கள் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கமாக இருக்கவில்லை; மேலும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ ஆதாரமும் எங்களிடம் இல்லை. இதனால் பெரிய சிக்கல்கள் உருவாயின. இந்த அனுபவங்கள், குறிப்பாக வெளிப்புறச் சூழ்நிலைகள், ஒரு பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கத்தின் அவசியத்தை எங்களுக்குத் தெளிவாக உணர்த்தின.

சிஐடியு (CITU) வழங்கிய வழிகாட்டுதல்

ஒரு சங்கத்தை உருவாக்குவது எளிதாகத் தோன்றலாம். ஒரு பிரச்சனை ஏற்பட்டவுடன் சிலரை ஒன்றிணைத்துச் சங்கம் அமைத்துவிட முடியும். ஆனால், “சங்கம் என்றால் என்ன? அது எதற்காக? அது என்ன செய்யும்?” என்ற அடிப்படைப் புரிதல் இல்லாத ஒரு துறையில், எங்களைப் போன்றவர்களுக்கு சிஐடியு (CITU) வழங்கிய வழிகாட்டல் மிகப்பெரிய அனுபவமாக இருந்தது.

சங்கப் பதிவு தொடர்பாக, முதலில் நிறுவனம் சார்ந்த சங்கத்தைத் தொடங்க முடியாது என்ற புரிதல் எங்களுக்குக் கிடைத்தது. ஏனெனில், எங்களிடம் ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த பெரிய அளவிலான உறுப்பினர்கள் இல்லை. எனவே, ஒரு மாநில அல்லது துறை அடிப்படையிலான சங்கமாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலைச் சிஐடியு வழங்கியது.

சங்கப் பதிவு நடைமுறைகள்

சங்கப் பதிவு நடைமுறைப்படி, குறைந்தபட்சம் 100 உறுப்பினர்களுடன் ஒரு பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். அந்தக் கூட்டத்தில் சங்கத்தைத் தொடங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். சங்கத்தின் துணை விதிகள் (By-laws) ஒப்புதல் பெற வேண்டும். அதன் பின்னரே பதிவு செய்ய முடியும். பதிவு செய்யும்போது, குறைந்தது 7 பேர் அந்தத் துறையில் வேலை செய்கிறார்கள் என்பதற்கான ஆதாரமாக, அவர்களின் நிறுவன அடையாள அட்டைகளைத் தொழிலாளர் துறை அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதுவே நடைமுறைச் சட்டம். சங்கம் குறித்த தத்துவ ரீதியான மற்றும் செயல்பாட்டுப் புரிதல் எங்களிடம் இருந்தாலும், நடைமுறை ரீதியான நுணுக்கமான வழிகாட்டுதல்களை—அதுவும் ஜனநாயக முறையில்—எங்களுக்கு வழங்கியது சிஐடியு தான். சங்கத்தின் பெயரைத் தேர்வு செய்தல், துணை விதிகளைத் தயாரித்தல், பொதுக்குழுவை நடத்துதல், அந்த 7 பேரைத் தேர்வு செய்தல், அவர்களின் ஆவணங்களைச் சமர்ப்பித்தல் போன்ற அனைத்திலும் சிஐடியு ஒரு வழிகாட்டியாகவும் உறுதியான துணையாகவும் இருந்து எங்களை முன்னின்று அழைத்துச் சென்றது.

துணை விதிகளின் (By-laws) முக்கியத்துவம்

சங்கத்தைத் தொடங்குவதற்கான முக்கியமான அடிப்படை ஆவணம் அதன் துணை விதிகள் (By-laws) ஆகும். ஒரு சங்கம் எந்த நோக்கத்திற்காக அமைக்கப்படுகிறது, அதன் கட்டமைப்பு என்ன, நிர்வாகம் எப்படி நடைபெறும், வரவு-செலவு கணக்குகள் எவ்வாறு பராமரிக்கப்படும் போன்ற அனைத்தையும் முறையாக ஆவணமாக உருவாக்க வேண்டும். இந்தத் துணை விதிகளைப் பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெற்ற பிறகே அரசிடம் சமர்ப்பிக்க முடியும். இதற்காகப் பல தொழிற்சங்கங்களின் துணை விதிகளை நாங்கள் ஆய்வு செய்தோம். ஆரம்பத்தில் நாங்கள் மிகவும் நீளமான மற்றும் கோட்பாட்டுத் தன்மை அதிகமான விதிகளை உருவாக்க முயன்றோம். ஆனால், இதில் சிஐடியுவின் அனுபவம் மிக முக்கியமானது. துணை விதிகள் என்பது ஒரு கொள்கை ஆவணம் மட்டுமல்ல, அது நடைமுறைக்கு உகந்ததாகவும் சட்ட விதிகளுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் தெளிவாக விளக்கினர். இந்த வழிகாட்டுதல் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இன்று திரும்பிப் பார்க்கையில், அந்த வழிகாட்டுதல்கள் அனைத்தும் எவ்வளவு நடைமுறைச் சாத்தியமானவை என்பதை உணர முடிகிறது.

பெயர் தேர்வும் ‘யுனைட்’ (UNITE) உருவாக்கமும்

சங்கத்தின் பெயரைத் தேர்வு செய்வது மிகப்பெரிய விவாதமாக இருந்தது. இதற்கு முன் “Knowledge Professionals Forum” என்ற பெயரில் நாங்கள் செயல்பட்டு வந்தோம். அதே பெயரைத் தொடரலாமா அல்லது புதிய பெயர் வைக்கலாமா என்ற கேள்வி எழுந்தது. “Knowledge Professionals” என்ற பெயர் ஒரு குறிப்பிட்ட பிரிவை மட்டுமே குறிக்கிறது என்றும், அது ஒரு வகையில் மேட்டுக்குடித்தன்மையைப் பிரதிபலிக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. அன்றைய காலகட்டத்தில் ஐடி துறையில் “சங்கம்” என்ற வார்த்தைக்கே ஒருவிதமான எதிர்ப்புப் புரிதல் இருந்தது. எனவே, நேரடியாக “சங்கம்” என்ற பெயருக்குப் பதிலாக, “Union of IT & ITES Employees” (UNITE) என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டது. இது ஒருபுறம் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் அர்த்தத்தையும், மறுபுறம் ஒரு தொழிற்சங்கமாக எங்களை அடையாளப்படுத்தவும் உதவியது.

நிதித் திரட்டலும் அணித் திரட்டலும்

நடைமுறைப் பணிகள் ஒருபுறம் இருந்தாலும், பொதுக்குழுவை நடத்துவதற்கு இரண்டு முக்கியத் தேவைகள் இருந்தன: 1. நிதி, 2. 100-க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்களைத் திரட்டுவது. KPF அமைப்பு 5 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தாலும், எங்களிடம் முறையான அமைப்போ, உறுப்பினர் சந்தா முறையோ அல்லது நிதி வலிமையோ இல்லை. ஒரு பிரச்சனை வரும்போது ஒன்றிணைவதும், தற்காலிகமாக நிதி திரட்டுவதுமாகவே இயக்கம் இருந்தது. இப்போது பொதுக்குழு நடத்துவதற்குக் கணிசமான நிதி தேவைப்பட்டது. தொழிலாளர் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாகப் பல தொழிற்சங்கங்கள் எங்களுக்கு நிதி உதவி வழங்கின. ஐடி தொழிலாளர்களை அணிதிரட்டுவதில் வெரிசான் நிறுவனத்தில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் ஒரு பகுதியினராக இருந்தனர். சிஐடியு மாநிலம் முழுவதும் உள்ள தங்கள் சங்க நிர்வாகிகளின் பிள்ளைகளை (ஐடி துறையில் பணிபுரிபவர்களை) இக்கூட்டத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டது. மேலும், இதர நண்பர்கள் மற்றும் கட்டற்ற மென்பொருள் (Free Software) செயல்பாட்டாளர்களும் இதில் பங்கேற்றனர்.

தொடக்க விழா மற்றும் நிர்வாகக் குழுத் தேர்வு

பெயரும் துணை விதிகளும் தயாரான பின், 2018 ஜனவரி 7-ஆம் தேதி சென்னை கண்ணகி நகரில் உள்ள YMCA அரங்கில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தத் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் நீதிபதியும் நீண்ட தொழிற்சங்க அனுபவம் கொண்டவருமான ஹரி பரந்தாமன், எல்.ஐ.சி ஊழியர் சங்கச் செயலாளர் சுவாமிநாதன், வங்கி ஊழியர் சங்கச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் பல சகோதர அமைப்புகளின் தோழர்கள் பங்கேற்று வாழ்த்தித் தங்கள் ஆதரவைத் தந்தனர். கூட்டத்தில் சங்கத்தின் அவசியம், தீர்மானங்கள், துணை விதிகள் ஒப்புதல் மற்றும் நிர்வாகிகள் தேர்வு ஆகியவை நடைபெற்றன. சங்கத்தின் பொதுச் செயலாளராகத் தோழர் வெல்கின், தலைவராகத் தோழர் பரணிதரன், பொருளாளராகத் தோழர் சுமேதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். எங்கள் இளம் பட்டாளத்திற்கு வழிகாட்டச் சிஐடியு சார்பில் மூன்று நிர்வாகிகள் பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களை ஜனநாயக முறைப்படி அமைப்பில் தேர்வு செய்து கொண்டோம். தோழர் கண்ணன் (தற்போது சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர்) கௌரவத் தலைவராகவும், தோழர் கோபி குமார் மற்றும் தோழர் சுகுமார் ஆகியோர் துறைத் தலைவர்களாகவும் முறையாகத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுடன் இணைந்து 9 பேர் கொண்ட நிர்வாகக் குழுவும் 10 பேர் கொண்ட செயற்குழுவும் அமைக்கப்பட்டது.

பதிவு விண்ணப்பமும் சவால்களும்

பொதுக்குழு முடிந்தபின், சங்க விதிகள், பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்ட கருத்துகளின் தொகுப்பு (Minutes of meeting – 100 பேரின் கையெழுத்துடன்), உறுப்பினர் பட்டியல், விண்ணப்பம் மற்றும் 7 பேரின் நிறுவன அடையாள அட்டைகளுடன் தொழிலாளர் துறையில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கத் தேவையான அனைத்துத் தயாரிப்புகளையும் செய்தோம். இந்த 7 பேர் யார் என்பதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், அவர்களைத் தேர்வு செய்வது மிகவும் நுணுக்கமான வேலையாக இருந்தது. தொழிலாளர் துறையிலிருந்து அந்தந்த நிறுவனங்களுக்குத் தகவல் பகிரப்பட்டால், ஊழியர்கள் பழிவாங்கப்படலாம் அல்லது வேலையை இழக்க நேரிடலாம் என்ற அச்சம் இருந்தது. அந்த வகையில், பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்த்து நிற்கக்கூடிய உறுதிமிக்க 7 பேரைத் தேர்வு செய்யச் சிஐடியு உதவியது. அந்த 7 பேர்: பாரதி, பரணிதரன், சித்தராமன், அன்பரசன், சுவேதா, இளங்கோ மற்றும் வெல்கின். பதிவு செய்வதற்கான தேதியில், சென்னை குறளகம் அலுவலகத்தில் உள்ள பதிவாளர் முன் நேரடியாக இந்த 7 பேரும் சிஐடியு தோழர்களும் சென்று விண்ணப்பத்தைத் தந்து, ஆவணங்களையும் அடையாள அட்டைகளையும் சரிபார்த்துச் சமர்ப்பித்தனர்.

காத்திருப்பும் தொடரும் பயணமும்

சட்டப்படி 45 நாட்களுக்குள் சங்கப் பதிவு வழங்கப்பட வேண்டும். ஆனால், பல மாதங்களாகியும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. இது மாநில அளவிலான சங்கமாக இருந்ததால், பல மாவட்ட அலுவலகங்களுக்குச் சரிபார்ப்புக்காக கோப்புகள் அனுப்பப்பட்டதாகக் கூறித் தாமதப்படுத்தப்பட்டது. இதனால் சங்கப் பதிவுக்காக நாங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

– பரணிதரன்

பயணம் தொடரும்….