மற்றவை

வான்விடு தூதென வந்த வானொலியும் தொலைக்காட்சியும்… (ஊடக உலகப் பயணம் – 7)… அ. குமரேசன்

udaga ulaga payanam

வானொலியைக் கண்டுபிடித்தது யார் என்று கேட்டால் மார்கோனி என்று பள்ளிப் பாட நினைவோடு சொல்லிவிடுவோம். இத்தாலி நாட்டு அறிவியலாளரான குக்லீல்மோ மார்கோனி 1895ஆம் ஆண்டில் முதல் முறையாக வனொலி அலைகளை கம்பித் தொடர்பின்றி வெற்றிகரமாக அனுப்பினார். 1901இல் இங்கிலாந்திலிருந்து கனடாவுக்கு வானொலி அலைகளைக் கடல் கடந்து அனுப்பினார். 1906இல் ரெஜினால்டு ஃபெஸ்ஸன்டென் ஆராய்ச்சியில் மனிதக் குரல் வானொலி மூலம் ஒலிபரப்பானது.

7 1 marconi and radio

1920இல் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில், வெஸ்டிங்ஹவுஸ் எலெக்ட்ரிக் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் வணிக அடிப்படையிலான வானொலி சேவையைத் தொடங்கியது.

7 2 nbc

தேர்தல் முடிவுகள் உள்பட பல செய்திகள் ஒலிபரப்பப்பட்டன. 1922இல் பிரிட்டனில் பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கம்பெனி தொடங்கப்பட்டது. 1927இல் அது பொதுப் பங்குகளுடன் பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (பீபீசி) என மாறியது.

அதே ஆண்டில் ஊடகச் சந்தையில் பெரும் வானொலி வலையமைப்பு நிறுவனமான நேஷனல் பிராட்காஸ்ட்டிங் கார்ப்பரேஷன் வானொலிச் சந்தையில் நுழைந்தது. 1942இல், போர் நிலவரங்களைத் தெரியப்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்க அரசின் நிறுவனமாக வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா (விஓஏ) தொடங்கப்பட்டது. பிற்காலத்தில் என்பீசி, விஓஏ இரண்டுமே தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமங்களையும் பெற்றன. இன்று சமூக நிறுவனங்களையும் நடத்துகின்றன.

7 3 bbc

ஒலியும் ஒளியும்

ஒலியை மட்டுமல்லாமல் ஒளியையும் பரப்ப முடியும் என்ற கண்டுபிடிப்பைத் தொடர்ந்து 1927இல் அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர் பிலோ ஃபார்ஸ்வொர்த் மின்னணுத் தொலைக்காட்சி அமைப்பை உருவாக்கினார். மூன்றாவது ஆண்டில் பீபீசி நிறுவனம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சிறிய அளவிலான பகுதி நேர தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கியது. 1939இல் என்பீசி நிறுவனமும் தொலைக்காட்சி சேவையை அறிமுகப்படுத்தியது. கறுப்பு வெள்ளை வண்ணத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தொலைக்காட்சி 1954இல் பல வண்ணம் பூசிக்கொண்டது.

7 4 air

இந்தியாவுக்கு வானொலி சேவை, பீபீசி ஒலிபரப்பு தொடங்கிய அடுத்த ஆண்டிலேயே 1923இல் வந்துவிட்டது. பாம்பே ரேடியோ கிளப் என்ற குழு அதைத் தொடங்கியது. 1927இல் இந்தியன் பிராட்காஸ்டிங் கம்பெனி (ஐபீசி) நிறுவப்பட்டது. 1930இல் அது கலைக்கப்பட்டுவிட்டது. பின்னர் இந்தியன் ஸ்டேட் பிராட்காஸ்டிங் சர்வீஸ் என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்ட நிறுவனம் பிரிட்டிஷ் அரசாங்கச் செய்திகளை ஒலிபரப்பத் தொடங்கியது. 1936இல் அது ஆல் இந்தியா ரேடியோ (ஏஐஆர் –அகில இந்திய வானொலி) என்று பெயர் மாற்றம் பெற்றது. நாட்டின் விடுதலைக்குப் பிறகும் அது அரசு நிறுவனமாக இப்போதும் இயங்கி வருகிறது. (ஐபீசி கலைக்கப்பட்டுவிட்டாலும், அது பேசத் தொடங்கிய அந்த ஜூலை 23 இப்போதும் தேசிய ஒலிபரப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.)

1957இல் பாடல்கள், நாடகங்கள் என மனமகிழ் ஒலிபரப்புகளுடன் அரசு சேவையாகவே விவித் பாரதி தொடங்கப்பட்டது. செய்திகளுக்காகவும் அரசாங்க விளம்பரங்களுக்காகவும் ஏஐஆர், பலவகைப் பாட்டுகளுக்காகவும் சுவையூட்டு நிகழ்ச்சிகளுக்காகவும் விவித் பாரதி ஆகிய இரண்டையும் வானொலிப் பெட்டி வாங்கி வைத்திருந்த மக்கள் கேட்டுவந்தார்கள்.

செயலிகள் வருகை

2000–2020 ஆண்டுகளுக்கிடையே ஒலிபரப்புத் தொழில்நுட்பம் சார்ந்தவையாக சமூக வானொலிகள், ஏஐஆர் 24 மணி நேர செய்திகள், முதலில் ஏஐஆர் சேவைகளாகவும் பின்னர் முழு நாள் தனியார் வணிகமாகவும் பண்பலை வானொலிகள், அலெக்ஸா, கைப்பேசி ஒலிபரப்புச் செயலிகள் என வந்துவிட்டன.

7 5 dd

1959ஆம் ஆண்டில் இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு அரசு நிறுவனமான தூர்தர்ஷன் மூலம் தொடங்கியது. 1982ல் இந்தியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி விழாவையொட்டி பலவண்ணத் தொலைக்காட்சி அறிமுகமானது. 1990களில் செயற்கைக் கோள் சேவைகள் வளர்ச்சியைத் தொடர்ந்து, தனியார் நிறுவனங்களுக்கு ஒளிபரப்பு உரிமம் அளிக்கப்பட்டது. அவற்றுடன் இணைந்தவையாக வீடுகளுக்கு நேரடியாக இணைப்புத் தரும் கேபிள் டிவி தொழில் எங்கும் பரவியது.

7 6 dish

1992 தனியார் துறையில் முதல் தனியார் அலைவரிசையாக ஜீ டிவி இந்தி மொழியில் ஒளிபரப்புகளைத் தொடங்கியது. அதற்கு அடுத்த ஆண்டில் தமிழ்நாட்டில் சன் டிவி தொடங்கப்பட்டது. 2000ஆவது ஆண்டில் அந்தக் குழுமம் 24 மணி நேர செய்தி ஒளிபரப்புக்காக சன் நியூஸ் அலைவரிசையைத் தொடங்கியது. 2008இல் ராஜ் நியூஸ், 2011இல் ‘புதிய தலைமுறை’ வந்தன. தொடர்ந்து கலைஞர் செய்திகள், பாலிமர் நியூஸ், மாலை முரசு என பல செய்தித் தொலைக்காட்சிகள் வந்திருக்கின்றன. பின்னர் எதிர்கொண்ட சவால்களில் பல நிறுவனங்கள் தாக்குப் பிடிக்காமல் போயிருக்கின்றன.

விசுவாசக் கட்டாயம்

இதற்கிடையே 1997இல் பிரசார் பாரதி என்ற நிறுவனத்தை இந்திய அரசு உருவாக்கியது. அதன் நிர்வாகத்தில் ஏஐஆர், தூர்தர்ஷன் இரண்டும் கொண்டுவரப்பட்டன. இன்னொரு புறம், அரசு நிறுவனங்களான இந்த இரண்டும் ஆளுங்கட்சிகளுக்கு விசுவாசமான அமைப்புகளாகச் செயல்படும் கட்டாயத்திற்கு உள்ளாகியிருந்தன. எதிர்க்கட்சிகள் தொடர்பான செய்திகள் போனால் போகட்டும் என்பது போல கொஞ்சம் தொட்டுக்கொள்ளப்பட்டன. தொழிலாளர்கள், விவசாய மக்களின் போராட்டங்களை எந்த அளவுக்குத் தொட்டிருப்பார்கள் என்று விளக்க வேண்டியதில்லை.

பண்பாட்டுத் தளத்தில் கூட, இந்தியாவின் கலைப் பாரம்பரியம் என்று மேட்டுக்குடியினரின் சங்கீதம், நாட்டியம் ஆகியவ,ற்றை மட்டுமே முன்னிலைப்படுத்துகிற கைங்கரியமும் நடந்தது. அதற்குக் காரணம் அந்த நிறுவனங்களின் தயாரிப்பு அதிகாரிகளாக இருந்தவர்களின் தனிப்பட்ட பின்னணி மட்டுமல்ல, இந்தியாவில் ஊறிப்போன சமூக ஏற்றத்தாழ்வுக் கண்ணோட்டமும்தான். இதில் ஓரளவுக்கு மாற்றம் ஏற்பட்டதன் பின்னணியில் நெடிய கருத்துப் போராட்டங்கள் இருக்கின்றன.

தேவை ஊடக மன்றம்

திரைப்படங்களைத் தணிக்கை செய்ய தனி வாரியம் இருக்கிறது. பத்திரிகைகளுக்கு வரக்கூடிய – அதே போல் பத்திரிகைகளால் வரக்கூடிய – சிக்கல்களில் தலையிடுவதற்கு இந்திய பத்திரிகை மன்றம் (பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா) இருக்கிறது. ஆனால், பத்திரிகைகளைக் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பின்னால் தள்ளிய தொலைக்காட்சிகளுக்கு அப்படிப்பட்ட மையமான மன்ற அமைப்பு எதுவும் கிடையாது. இந்திய பத்திரிகைகள் மன்றம் என்ற பெயரை இந்திய ஊடக மன்றம் என்று மாற்ற வேண்டுமெனப் பலரும் கோரியுள்ளனர். ஆனால் அந்தக் கோரிக்கையை ஒன்றிய ஆட்சிகள் காதில் போட்டுக்கொண்டதும் கிடையாது.

வானொலிகள் மட்டும் இருந்தபோது அவை அச்சு ஊடகங்களுக்குச் சிக்கல் ஏற்படுத்தவில்லை. வானொலியில் குறிப்பிட்ட நேரங்களில், குறிப்பிட்ட கால அளவுக்கு மட்டுமே ஒலிபரப்பப்பட்ட செய்திகளைக் கேட்ட மக்கள், விரிவாகத் தெரிந்துகொள்வதற்குப் பத்திரிகைகளை நாடினார்கள். அந்த வகையில் பத்திரிகை விற்பனைக்கு வானொலிகள் துணையாக இருந்தன என்று சொல்லலாம்.

7 7 android

ஆனால் தொலைக்காட்சிகளின் செய்தி ஒளிபரப்புகளிலும் நேரலைக் காட்சிகளிலும் நடப்பதை நேரடியாகப் பார்க்க முடிகிறது. அந்தச் செய்திகளின் பின்னணிகளையும் புரிந்துகொள்வதற்கு மக்கள் பத்திரிகைகளை வாங்குகிறார்கள் என்றாலும், ஒப்பீட்டளவில் அது வெகுவாகக் குறைந்தது என்றே சொல்ல வேண்டும்.

சவால்களின் தாக்குதல்

2020களில் ஆண்டிராய்டு தொழில்நுட்பத்துடன் கூடிய கைப்பேசிகள் கையடக்கக் கணினிகள், தொலைக்காட்சித் திரைகள், அவற்றில் மேலடுக்கு திரையீடு எனப்படும் ‘ஓடிடி‘ தளங்கள் என வந்த பிறகு, அது மேலும் பல மடங்கு சரிவடைந்தது. பல பத்திரிகை நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. இணையத் தளத்தில் பதிப்புகளைக் கொண்டுசென்ற நிறுவனங்கள் தாக்குப் பிடித்து நிற்கின்றன. சில நிறுவனங்கள் அச்சகங்களை மூடிவிட்டு இணைய வழி ஏடுகளாக மாறிவிட்டன. இப்படிப்பட்ட மாற்றங்கள் பல உழைக்கும் பத்திரிகையாளர்களை வேலையிழந்தவர்களாகச் சாலையில் நிறுத்தியிருக்கின்றன.

அச்சிடப்பட்ட பத்திரிகைகளைப் பிரித்துப் படிப்பது போலவே மின்–நாளேடுகளின் (இ–பேப்பர்) பக்கங்களை நகர்த்தி நகர்த்தி, வேண்டிய செய்தியை விரிவுபடுத்திப் படிக்க முடிகிறது. இணையவழி ஏடுகள் அரசியல், சமூக விவாதங்களையும் வலுவாக நடத்தக்கூடியவையாக களத்திற்கு வந்துவிட்டன. கீற்று, அறம், மாற்று, திண்ணை, அரசியல் பிழை, இந்து தமிழ் திசை, தமிழ் இந்து, தீக்கதிர் எண்மப் பதிப்பு, புதிய மாதவி, பொன்மலர், சத்தியம் ஆன்லைன், சத்தியம், காலச்சுவடு உள்ளிட்ட இணைய ஏடுகள் பரவலான வாசகர்களைச் சென்றடைகின்றன. ஊடகச் சந்தையில் மின்னியல் பதிப்புகளின் பங்கு 32 சதவீதம் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.

இந்தப் போட்டி நிலவரத்தின் கடுமை காரணமாக, விழித்துக்கொண்ட பல முன்னணிப் பத்திரிகைகள் உள்ளூர் செய்திகளுக்கு முன்பிருந்ததை விடக் கூடுதலாக முக்கியத்துவம் தருவது, முக்கிய நிகழ்வுகளின் அனைத்துக் கோணங்களையும் புலனாய்வு செய்து வெளியிடுவது, அரசியல் தலைவர்களிடம் கூர்மையான கேள்விகளை முன்வைத்துப் பதில்களைப் பெற்று வாசகர்களுக்குத் தருவது, தங்களுடைய இணையப் பதிப்புகளில் குரல்வழி ஒலிபரப்பு, பரபரப்பான செய்திகளின் காணொளிகளை இணைப்பது என்று புதிய முனைப்புகளை மேற்கொண்டுள்ளன.

வாய்ப்புக் கதவுகள்

இத்தகைய முனைப்புகளின் ஆக்கப்பூர்வமான விளைவாக, ஊடகக் கனவும், புலனாய்வுத் துடிப்பும், தொழில்நுட்பத் திறனும் கொண்ட, உண்மைகளை சுவைபட எடுத்துரைக்கத் தெரிந்த புதிய இதழியலாளர்களுக்கான வாய்ப்புக் கதவுகள் விரியத் திறந்திருக்கின்றன.

இந்திய தலைமைப் பத்திரிகைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட வெளியீடுகளின் எண்ணிக்கை 2014-15இல் 1 லட்சத்து 5 ஆயிரமாக இருந்தது. 2024-25இல் 1 லட்சத்து.55 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தனியார் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை 2014-15இல் 821, அது 2024-25இல் 908 ஆக அதிகரித்துள்ளது.

தூர்தர்ஷன் சேவை வழியாக 92 தனியார் ஒளிபரப்புகளும், 50 தூர்தர்ஷன் ஒளிபரப்புகளும் பல்வேறு மொழிகளில் நடைபெறுகின்றன. நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினரின் கேள்விக்கு இந்த ஜூலை 23இல் அளித்த பதிலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடரின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல, இன்றைய நவீனத் தொழில்நுட்பங்கள் நாளைய பழமைகளாக மாறும். ஊடகக் கருவிகளின் வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கும். அடிப்படையான தொடர்பாடல், ஊடகச் செயல்பாடு இரண்டும் தொடரும். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகள் அதை முன்னறிவிக்கின்றன.

ஊடகங்களின் நடுநிலை பற்றிய விவாதங்களும், ஊடகச் சுதந்திரத்திற்கு நெருக்கடி பற்றிய குற்றச்சாட்டுகளும் அடிக்கடி முன்னுக்கு வருகின்றன. அவற்றை என்னவென்று அடுத்து விசாரிபோம்.

தொடரும்

முதல் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-1/
இரண்டாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-2/
மூன்றாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-3/
நான்காவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-4/
ஐந்தாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-5/
ஆறாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-6/