உலக ஊடகப் பயணத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தையும் வேகத்தையும் நிகழ்த்திய இரண்டு பொருள்கள் – கி.பி. 105ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட காகிதம், 1450ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டஅச்சு இயந்திரம் ஆகியவைதான்.
3000 ஆண்டுகளுக்கு முன்பே அக்கால எகிப்திய மக்கள் பாப்பிரஸ் என்ற தாவரத் தண்டுப் பகுதியைக் கரைத்து உலர வைத்து கனத்த துணி போலத் தயாரித்துப் பயன்படுத்தி வந்தனர். காகிதத்தின் அந்த முன்னோடிக்கு அந்தத் தாவரத்தின் பெயரிலிருந்தே “பேப்பர்” என்ற பெயர் பிற்காலத்தில் தோன்றியது. காலப்போக்கில் பல பொருள்களைக் கரைத்துப் பரப்பி உலர வைத்து, அதன் மீது எழுதுகிற உத்தியும், எழுத்துகள் செதுக்கப்பட்ட கட்டைகளை மையில் நனைத்துப் பதிக்கிற நுட்பமும் உருவாகின. அவை ஆங்காங்கே புழக்கத்திற்கும் வந்திருந்தன. தடிமனான அந்தப் பட்டையைக் கனத்த அட்டை என்றுதான் குறிப்பிட வேண்டும்.
இங்கே நமது மூதாதையர்களும் கூட மூங்கிலிலும் மரத் தண்டுகளிலும் இருக்கும் “தாள்” என்ற சன்னமான வலையை எடுத்து இதற்காகப் பயன்படுத்தினார்கள் போலும். ஆகவேதான் எழுதும் பொருளுக்குத் “தாள்” என்ற பெயரும் கிடைத்ததோ?.
முன்பிருந்ததை விடவும் வசதியான எழுத்துப் பதிவுக்கு அது உதவியிருக்கும் என்றாலும் நடைமுறையில் பல இடையூறுகளும் (தூக்கிச் செல்வது, அடுக்கி வைப்பது போன்றவற்றில்) இருந்தன. தயாரிப்புச் செலவும் கூடுதலாக இருந்தது. அப்படியெல்லாம் ஒரு பொருள் தொடர்ந்து சவாலாக இருக்க மனிதர்களின் ஆராய்ச்சி மனம் விட்டுவிடுமா என்ன?
மரக்கூழ் காகிதம்

1,900 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் அரண்மனை அதிகாரியாகப் பணியாற்றி வந்த சாய் லுன் காகிதத் தயாரிப்பை எளிதாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். மலிவாகக் கிடைத்த மல்பெரி மரப்பட்டைகள், கிழிந்த துணிகள், அறுந்த மீன் வலைகள், சணல் கயிறுகள் ஆகிய பொருள்களைத் தண்ணீரில் போட்டு ஊற வைத்தார். ஊறியவற்றை அரைத்துக் கூழாக்கினார். கூழை மெல்லிய வலை போலப் பரப்பி உலர வைத்தார். உலர்ந்த பின் அது “ஜ்ஸ்ஜி” என மாறியிருந்தது. ஜ்ஸ்ஜி என்றால் “காகிதம்” அல்லது “தாள்”.
முன்பு எழுத்துகளைப் பதிப்பதற்குப் பயன்பட்ட பட்டுத் துணி, மூங்கில் பட்டைத் தாள்களை விட இந்தக் காகிதத்திற்கான தயாரிப்புச் செலவு பல மடங்கு குறைந்தது, பயன்பாடோ பல மடங்கு அதிகரித்தது. பதிவு செய்து, கோர்த்துத் தொகுக்கப்பட்ட ஆவணங்களை நெடுங்காலத்திற்குப் பேண முடிந்தது. அரச ஆவணங்கள், வரலாற்றுக் குறிப்புகள், இலக்கியப் பதிவுகள் உள்ளிட்ட செயல்களையும், அவற்றின் பரவலையும் எளிதாக மேற்கொள்ள முடிந்தது. சீனாவின் கல்விக் களத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் புதிய மாற்றங்களுக்கு அது பெருந்துணையாக அமைந்தது.
பல ஆண்டுக் காலமாக காகிதத் தயாரிப்பு நுட்பத்தை சீனர்கள் ரகசியமாகவே வைத்திருந்தார்கள். மற்ற நாட்டவர்கள் இறக்குமதி செய்து பயன்படுத்தினார்கள். கி.பி. 8ஆம் நூற்றாண்டு வாக்கில் அரபு வட்டாரம் உள்ளிட்ட கீழை உலகத்திற்குக் காகிதத் தயாரிப்பு முறை பரவியது. பின்னர் அங்கிருந்து ஐரோப்பா உள்ளிட்ட மேலை உலகிற்குச் சென்றது.
சவாலிலிருந்து சாதனை
காகிதம் வந்துவிட்டாலும், ஒரு காகிதத்தில் எழுதியதைப் பல காகிதங்களுக்குக் கையால் மறுபடி எழுதியே படியெடுக்க வேண்டியிருந்தது. இதனால், அந்த முறையில் தயாரிக்கப்படும் புத்தகத்திற்கான செலவும் விலை மதிப்பும் வசதிக்காரர்களுக்கே வாய்ப்பானதாக இருந்தன. மேலும் திரும்பத் திரும்ப படியெடுக்கிறபோது பிழைகளும் ஏற்படுமல்லவா?
காகிதத்தின் பயன்பாடு பெருகப் பெருக, அதில் எழுத்துகளைப் பதிவிடும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் ஆராய்ச்சிகளும் முனைப்பைப் பெற்றன. 15ஆம் நுற்றாண்டில் அந்த முயற்சிகளின் தொடர்ச்சி ஒரு புரட்சிகரமான கட்டத்தை அடைந்தது.

ஜெர்மனி நாட்டின் மெய்ன்ஸ் நகரத்தைச் சேர்ந்த பொற்கொல்லரான ஜோஹான்ஸ் கூட்டன்பர்க், தங்க நகைகளை வடிவமைப்பதில் அன்றிருந்த தொழில்நுட்பங்களைக் கையாண்டு வந்தார். ஒரு தொழில் முனைவோராகப் புத்தக வெளியீடுகளிலும் ஆர்வம் கொண்டிருந்த அவர், கட்டுப்படியான செலவில் அதைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதற்கு உலோக வார்ப்பு உள்ளிட்ட அவருடைய தொழில்முறைப் பயிற்சி உதவிகரமாக அமைந்தது. எண்ணெய் அடிப்படையிலான மையை உருவாக்கினார். எழுத்துருக்களை வரிசையாகக் கோர்த்து, படரும் மையில் ஒற்றியெடுத்து,அசைந்து நகர்ந்து பதிக்கும் தொழில்நுட்பத்திற்கான பரிசோதனைகளைப் பல ஆண்டுகளாக ரகசியமான முறையில் மேற்கொண்டார்.

முயற்சி திருவினையாக, 1450ஆம் ஆண்டுவாக்கில் நகரும் எழுத்துரு அச்சு இயந்திரம் உருவானது. அதிலேயே முழுமையாக அச்சிடப்பட்ட முதல் பெரிய புத்தகமாக அவருடைய “கூட்டன்பர்க் பைபிள்” வெளியானது. அது அப்போது 180 படிகள் அச்சிடப்பட்டதாம்.
முதல் புத்தகம்
மலிவான விலையில் புத்தகங்கள் கிடைக்கத் தொடங்கின. வாசிப்பு வளர்ந்தது. பைபிள் பல மொழிகளில் வெளியானது. அரசியல், அறிவியல், சமூகவியல் நூல்களும் அச்சிடப்பட்டு பரவின. வணிக ஏற்பாடுகளுடனேயே அறிவு பொதுச்சொத்தாகச் சென்றடையும் வாய்ப்புகளும் விரிவடைந்தன. மக்களை மாறவிடாமல் பிடித்து வைத்திருந்த மதங்களில் சில சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன. புத்தகம் அறிவுலகப் புரட்சி விதையாக, சமூகக் கலகங்கள் முளைத்தன.
இந்தத் தொடர் பயணத்தில் மையமானதொரு புதிய நுழைவாயிலாக அச்சு ஊடகம் உருவானது. நிகழ்வுகளைச் செய்தியாகவும், சிந்தனைகளைக் கட்டுரைகளாகவும் வெளியிடும் நாளேடுகள், வார ஏடுகள், இதர பருவ ஏடுகள் கடைகளுக்கும் கைகளுக்கும் வந்தன. மின்னியல் சார்ந்த புதிய ஊடகங்கள் தலை உயர்த்தும் வரையில் பத்திரிகைகளாகிய அச்சு ஊடகங்கள்தான் தனியாட்சியாகக் கோலோச்சிக்கொண்டிருந்தன.
புத்தகமும் நூலும்
இந்த இடத்தில் சற்றே “பிரேக்” விட்டு, சொந்தக் கருத்தொன்றைப் பகிர்ந்துகொள்கிறேன். இதுதானே எனக்கும் வாய்ப்பு!
அச்சுக் கலை பரிணமித்ததைத் தொடர்ந்து இலக்கியப் புத்தகங்கள் பூத்தன என்றும், அறிவியல் நூல்கள் அணி வகுத்தன என்றும் குறிப்பிட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். புத்தகம், நூல் இரண்டும் ஒன்றுதானா, இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறதா? இது குறித்த எனது கருத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்திருக்கிறேன். அது இலக்கணப்படியான, தமிழறிஞர்கள் அங்கீரித்திருக்கிற, ஆராய்ச்சிப்பூர்வமான கருத்தல்ல. முற்றிலும் எனது எண்ணத்தில் உதித்த சிந்தனையே.
“நூலைப்படி” என்று பாவேந்தர் சொல்லிச் சென்றிருக்கிறார். தமிழில் நூல் எழுதுவோர் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை குறித்து பவணந்தி முனிவர் “நன்னூல்” வழங்கி 700 ஆண்டுகள் ஆகின்றன. தகவல்களின் தொகுப்பாக, அறிவு சார் ஆக்கமாக, சிந்தனைகளின் படைப்பாக உருவெடுப்பது நூல் என்கிறார் அவர்.
புத்தகம் என்ற சொல்லின் பிறப்பு பற்றி மாறுபட்ட கருத்துகள் உலாவுகின்றன. சமஸ்கிருத மொழியின் “புஸ்தக்” என்ற சொல்தான் தமிழ் மரபுப்படி “அம்” சேர்ந்து “புத்தகம்” என மாறியதென்று ஒரு சாரார் கூறுகிறார்கள். இல்லை, “பொத்தகம்” என்ற மூலத் தமிழ்ச்சொல்தான் “புத்தகம்” என மருவியது என்ற கருத்து பரவலாக இருக்கிறது.

“பொத்து” என்றால் துளை அல்லது துளையிடுதல் என்று பொருள். இப்போதும் பொத்தல் என்ற சொல்லை ஓட்டை என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். காகிதத்தைத் தயாரித்தலும், அதில் அச்சிடுதலும், அச்சிட்ட காகிதங்களைப் பிணைத்தலும் உருவாகியிராத முற்காலத்தில், பனை ஓலைகளில் எழுத்தாணியால் எழுதுவார்கள். அவ்வாறு எழுதப்பட்ட ஓலைகளில் பொத்து ஏற்படுத்தி (துளையிட்டு) நாறுகளிலோ கயிறுகளிலோ கோர்த்து வைப்பார்கள். அப்படிக் கோர்க்கப்பட்ட சுவடிகளைப் “பொத்தகம்” என்று குறிப்பிட்டார்கள். அதுதான் “புத்தகம்” என்றானது என்ற கருத்து பொதுவாக ஏற்கப்பட்டிருக்கிறது.
நான் கூறி வருகிற சொந்தக் கருத்து என்னவென்றால், நூல் என்பது அறிவார்ந்த தகவல்களையும், கண்டறிந்த உண்மைகளையும், பின்பற்றுவதற்கான அறிவுரைகளையும் கோர்த்துத் தருவது. பூக்களைக் கோர்க்கும் நூல் போல. புத்தகம் என்பது புதிய புனைவுத் திறனோடும் சித்தரிப்பின் அழகியலோடும் இணைந்த தொகுப்பு. புத்தகம் என்ற சொல்லிலேயே புத்தாக்கம் என்ற பொருள் பொதிந்திருக்கிறது பாருங்கள்! எவ்வளவு இனிய கற்பனைகளோடு விளையாட அனுமதிக்கிறது தமிழ்!
முன்னோடிப் பத்திரிகை
“பிரேக்” விட்ட இடத்திற்குத் திரும்புவோம். அச்சு ஊடகப் பயணத்தில் முதல் காலடி எடுத்து வைத்தது, ஜெர்மனி நாட்டின் “ரிலேஷன் அல்லேர் ஃபூர்னெமென் அன் ஜெடென்க்வுர்டீஜின் ஹிஸ்டோரியன்” (அருமையான நினைவுகூரத்தக்க வரலாறுகளின் தொகுப்பு) என்ற பத்திரிகை என்று கூறப்படுகிறது. 1605ஆம் ஆண்டில், ஜெர்மன் மொழியில், அன்றைய ஜெர்மனிக் ராயல் நகரத்திலிருந்து (இன்று ஸ்ட்ராஸ்பர்க்) வாரந்தோறும் வந்த அந்த ஏடுதான் ஒரு தொடர்ச்சியான கால இடைவெளியில் வந்த முழுமையான முதல் அச்சிதழ் என்று ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது.

எழுத்துகள் செப்பமாக அச்சிடப்பட்டிருந்ததால் வியப்படைந்த மக்களை அந்தப் புதிய ஊடகம் ஈர்த்தது. அதில் அப்போதே அரசியல், வர்த்தகம், போர், பல மேற்கத்திய நகரங்களில் நடந்த நிகழ்வுகள் ஆகிய செய்திகள் இடம்பெற்றன. புத்தகப் பதிப்புத் துறையிலும் ஈடுபட்டிருந்தவரான யோஹான் காரலஸ் (1575–1634) அந்தப் பத்திரிகையின் ஆசிரியர், வெளியீட்டாளர்.
1631ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் “லா கெஜட்” என்ற செய்தியேடு வெளிவரத் தொடங்கியது. 1665இல் இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்ட் நகரிலிருந்து “தி ஆக்ஸ்ஃபோர்ட் கெஜட்” செய்தியேடு வெளியானது. அப்போது அந்த நாட்டில் ஏராளமானோரை பலிகொண்ட கொள்ளை நோய் பரவிய பின்னணியில் அரசாங்கத் தலைமையகம் லண்டன் நகரிலிருந்து ஆக்ஸ்ஃபோர்டுக்கு மாற்றப்பட்டது. அப்போது அரசாங்கத் தகவல்களை அறிவிப்பதற்காக அந்தப் பத்திரிகை தொடங்கப்பட்டது.

பெருந்தொற்று மட்டுப்பட்ட பிறகு 1966இல் மறுபடி லண்டனுக்கே அரசாங்க அலுவலகமும் மாறப்பட, பத்திரிகையின் பெயரும் “தி லண்டன் கெஜட்” என்று மாற்றப்பட்டது. அரசின் அதிகாரப்பூர்வ ஏடாக அது இன்றைக்கும் வந்துகொண்டிருக்கிறது. “கெஜட்” என்றாலே “அரசிதழ்” என்ற நடைமுறை இதிலிருந்தே உருவானது. இங்கிலாந்தின் ஆட்சியில் இருந்த மற்ற நாடுகளிலும் அதிகாரப்பூர்வ அரசிதழை கெஜட் என்று குறிப்பிடுவது நடைமுறைக்கு வந்தது.
அரசாங்கத்தைத் தொடர்ந்து தனிப்பட்ட முயற்சியிலும் பத்திரிகைகள் வரத் தொடங்கின. அப்படி வந்த ஒரு பத்திரிகைதான் “டொமெஸ்டிக் இன்டலிஜென்ஸ்: ஆர் நியூஸ் போத் ஃபிரம் சிட்டி அன் கன்ட்ரி” (உள்நாட்டு உளவு: அல்லது நகரம் மற்றும் கிராமம் இரண்டிலிருந்தும் செய்திகள்). பெஞ்ஜமின் ஹாரிஸ் என்ற சுதந்திரச் சிந்தனையாளர் நடத்திய அந்தப் பத்திரிகையைக் கொஞ்சம் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். பிற்காலத்தில், கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டமும் அந்த இதழிலிருந்தே புறப்பட்டது. அதைப் பற்றிப் பேசுகிறபோது இதையும் பார்ப்போம்.
(தொடரும்)
முதல் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-1/
இரண்டாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-2/