அரசியல்இந்தியாபுத்தக அறிமுகம்

காஷ்மீர்: இந்தியத் துணைக்கண்டத்தின் பாலஸ்தீனம் – நவனீ

புள்ளி (1)

2020ஆம் ஆண்டு “பாலஸ்தீன ஆக்சன்” என்ற போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பில், லண்டனில் உள்ள இஸ்ரேலிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான எல்பிட் சிஸ்டம்ஸ் முன்பு, சியோனிஸ்ட்களின் பாலஸ்தீன இனப்படுகொலைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டது. அங்கு இருந்த சுவரில் எழுதப்பட்ட வாக்கியம், “எல்பிட் ஆயுதங்கள் பாலஸ்தீனர்களிடம் பரிசோதிக்கப்பட்டு, காஷ்மீரிகளிடம் பயன்படுத்தப்பட்டவை”. இஸ்ரேல் உலகின் பல நாடுகளுக்குக் கொலை ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது. அப்படியிருக்க, குறிப்பாக அந்தப் போராட்டத்தில் ஏன் காஷ்மீரையும் பாலஸ்தீனையும் குறிப்பிட வேண்டும்? அதற்கான தேவை, காரணம் என்ன? இந்தக் கேள்விகளைத்தான் ஆராய்கிறது ஆசாத் எஸ்ஸா என்னும் பத்திரிகையாளர் எழுதிய “Hostile Homelands: The New Alliance Between India and Israel” என்ற நூல். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நூல், இ.பா. சிந்தன் அவர்களால் சிறப்பாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஐந்து முக்கியத் தலைப்புகளை ஆய்வின் அடிப்படையில் இந்நூல் கொண்டுள்ளது. இந்தியப் பிரிவினையில் ஆரம்பித்து இரு நாட்டு அரசுகளின் உறவுகள், இராணுவ-வணிக ஒத்துழைப்பு, ஆளும் வர்க்கக் கருத்தியல் ஒற்றுமை மற்றும் இன்றைக்கு பாலஸ்தீனிலும் காஷ்மீரிலும் இரு நாட்டு அரசுகளும் ஏவிவரும் ஒடுக்குமுறைகள் எனப் பல கோணங்களில் பகுப்பாய்வு செய்யும் இந்நூல், அரசு ஒடுக்குமுறைகள் குறித்துப் புரிந்துகொள்வதற்கு ஒரு முக்கியமான ஆவணமாகும். 

இஸ்ரேல்-இந்தியா-பாலஸ்தீனம்: முரண்பாடான உறவு

இந்தியாவும் பாலஸ்தீனமும் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஒரே நேரத்தில் போராடிய இரு தேசங்கள். ஏறக்குறைய ஒரே நேரத்தில் விடுதலையும் அடைந்தன. அதே நேரம், இரண்டு தேசங்களாகவும் பிரிக்கப்பட்டன. ஆனால், பிரிவினைக்குப் பின்னரான காரணங்களில் பாரிய வேறுபாடு உண்டு. இந்தியப் பிரிவினை என்பது அரசியல் முரண்களின் அடிப்படையில் நிகழ்ந்தது. ஆனால் பாலஸ்தீனமோ, திட்டமிட்ட ஆக்கிரமிப்பினூடே ஏகாதிபத்திய நலனுக்காக வலுக்கட்டாயமாக இஸ்ரேல் என்ற தனி நாடாகப் பிரிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஒரே ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வின் காரணமாக, இந்தியா என்றும் பாலஸ்தீனத்துடன் சகோதரத்துவத்தைப் பேணி வந்துள்ளது. ஆக்கிரமிப்பு இஸ்ரேல் உருவாக்கத்தின்போது பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவே இந்திய அரசியல் பெருந்தலைமைகள் பேசிவந்துள்ளனர்; இந்திய வலதுசாரிக் கும்பலான இந்துத்துவாவினரைத் தவிர.

இந்தியா தனி இறையாண்மை கொண்ட நாடாகச் செயல்படத் தொடங்கியதிலிருந்து அதன் வெளியுறவுக் கொள்கையில் பாலஸ்தீனத்திற்கு ஒரு தனி முக்கியத்துவம் இருந்துவந்தது. வல்லாதிக்க எதிர்ப்பு, அணிசேரா நாடுகள் உருவாக்கத்தில் பங்களிப்பு என இந்திய வெளியுறவுக் கொள்கை சிறந்து விளங்கிய காலம் அது. 1948இல் இஸ்ரேல் என்ற தனி நாடு லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை அகதிகளாக்கி உருவாக்கப்பட்டபோது, இந்தியா அந்தத் தேசத்தை அங்கீகரிக்கவில்லை. முக்கியமாக, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு சியோனிசம் குறித்திருந்த கருத்துகள் இதில் முக்கியப் பங்கு வகித்தன. சியோனிசத்தை அவர் போலித் தேசிய, வன்முறைக் கருத்தியலாகக் கருதினார். ஆனால், 1950இல் இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்தது. இந்த அங்கீகாரத்திற்குக் காரணமான இந்தியாவின் பிராந்திய, வர்த்தக நலன்கள், சர்வதேச அழுத்தங்கள் குறித்து மிக விரிவாக வரலாற்றுப் பதிவுகளோடு ஆசாத் விவரிக்கிறார். இருந்தாலும், வெளிப்படையாக இஸ்ரேலுடனான அரசுறவை இந்தியா தவிர்த்தே வந்தது. அதேநேரம், பாலஸ்தீனப் போராட்டத்திற்குத் தனது தார்மீக ஆதரவை மறுக்கவில்லை. யாசர் அராஃபத்தின் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்த முதல் அரபு அல்லாத தேசம் இந்தியாதான். ஆனால் காலப்போக்கில் சர்வதேசச் சூழலும் உலக அரசியல் ஒழுங்கும் மாறத் தொடங்கின. இந்தியாவும் இஸ்ரேலும் ஒரு மையப் புள்ளியில் இணையத் தொடங்கின. அது, ஒடுக்குமுறையின் அடையாளமாக இந்திய வரைபடத்தில் உச்சத்தில் உள்ள காஷ்மீர். மறுபுறம், கருத்தியல் அடிப்படையில் இந்திய வலதுசாரி இந்துத்துவக் கும்பல் இஸ்ரேலுடன் மிக நெருக்கமான நட்பினைத் தொடர அதீத ஆர்வத்துடன் இருந்தது.

இந்தியா-இஸ்ரேல்: இராணுவ, ஆயுத நிறுவனங்களின் கூட்டு 

பாலஸ்தீன ஆதரவின் காரணமாக வெளிப்படையான அரசுறவை இஸ்ரேலுடன் இந்தியா தவிர்த்தே வந்தாலும், மறைமுகமாக ஆயுதப் பரிமாற்றங்கள் நடந்தே வந்தன. காலப்போக்கில் இது வெளிப்படையாகவே நடந்தேறியது. ஆயுதத் தளவாடங்கள், கண்காணிப்புக் கருவிகள் எனப் பலதரப்பட்ட கொள்முதல்களை இந்தியா வாங்கிக் குவித்தது. 1992இல்தான் இந்தியா முழுமையான அரசுறவை இஸ்ரேலுடன் பேணப்போவதாக அறிவித்தது. இதற்குக் காரணகர்த்தாவாக, இந்தியாவைச் சந்தைப் பொருளாதாரத்திற்குத் திறந்துவிட முனைப்புடன் செயல்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இருந்தார். அதற்குப் பின்னரான இஸ்ரேலுடனான உறவுகள் வேகமெடுக்கத் தொடங்கின. முக்கியமாக, வாஜ்பாய் தலைமையில் “தேசிய ஜனநாயகக் கூட்டணி” ஆட்சியில் அமர்ந்த பின்னர், நேரடியாக இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணங்கள் மேற்கொள்ளும் அளவுக்கு அதிதீவிரமாக நட்புறவை மேம்படுத்தினர். அதற்கு முன்னர் எந்த அமைச்சரும் நேரடியாக இஸ்ரேல் சென்றதில்லை. முதலில் சென்றவர், NDA-வின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அத்வானி. இந்த அரசுத் தொடர்புகளையும் ஆயுத வர்த்தகங்களையும், பாலஸ்தீனம் மற்றும் காஷ்மீரில் இருநாட்டு அரசுகளும் செய்யும் ஒடுக்குமுறைகளையும் ஒரு நேர்க்கோட்டில் வைத்து நூலாசிரியர் விவரிக்கிறார்.

தனது மதச்சார்பின்மையின் பெருமையை உலக நாடுகளுக்குக் காட்டவும், காஷ்மீரின் தனித்துவமான புவியியல் அமைப்பின் காரணமாகவும், இந்தியாவிற்கு காஷ்மீரின் இணைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அதனாலேயே என்ன விலை கொடுத்தாவது காஷ்மீரை இணைத்துக்கொள்ள, பல்வேறு சிறப்புச் சலுகைகளை அரசியலமைப்புச் சட்டத்தின் வழியே உறுதிசெய்தது. அதே நேரம், காஷ்மீர் பகுதிகளில் இராணுவப் படைகளின் குவிப்பையும் பாதுகாப்புக் காரணங்களைச் சொல்லி அதிகரித்தது. உலகிலேயே அதிகமாக இராணுவம் குவிக்கப்பட்ட பகுதியாக காஷ்மீர் மாறியது. இவ்வாறாக ஆரம்பித்த அடக்குமுறைகளின் தொடக்கத்தை, காஷ்மீர் வரலாற்றை நேரடிக் கள ஆய்வின் மூலம் ஆசாத் பதிவு செய்துள்ளார்.

1990களுக்குப் பிறகு தாராளமயக் கொள்கைகளை இந்தியா ஏற்றுக்கொண்டு, தனது சந்தையை உலக நாடுகளுக்குத் திறந்துவிட்ட பின்னர் இஸ்ரேலுடனான ராணுவத் தொடர்புகள் வேகமெடுத்தன. இந்தியா இஸ்ரேலின் மிகப்பெரிய ஆயுத வாடிக்கையாளராக மாறும் அளவுக்கு இரு நாட்டு உறவுகள், குறிப்பாக இந்திய வலதுசாரிகள் காலத்தில், முன்னேறின. இஸ்ரேல் தனது ஒட்டுமொத்த ஆயுத ஏற்றுமதியில் 15% அளவுக்கு இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்தது. இடையில் வந்த காங்கிரஸ் அரசாங்கமும் அதில் பெரிய மாற்றங்களைச் செய்யவில்லை. 2014இல் மோடியின் அரசாங்கம் அமைந்த பின்னர் எல்லாம் வெளிப்படையாகவே நடந்தேறின. இஸ்ரேலுக்குப் பயணம் செய்த முதல் இந்தியப் பிரதமர் என்ற வரலாற்றுப் பதிவையும் மோடி தனதாக்கிக்கொண்டார். நெதன்யாகு, மோடி ஆகிய இருவரும் பாசிசம், அடக்குமுறை, இஸ்லாமிய வெறுப்பு போன்ற புள்ளிகளில் ஒத்துப்போவதால் இது இயற்கைக் கூட்டணியாக மாறிப்போனது. வெறும் ஆயுத வர்த்தகம் தாண்டி விவசாயம், உள்நாட்டுப் பாதுகாப்பு, கூட்டு ராணுவப் பயிற்சிகள், வர்த்தகம் எனப் பல தளங்களில் இந்த உறவுகள் மேம்படத் தொடங்கின.

இஸ்ரேல், பாலஸ்தீன ஆக்கிரமிப்புப் படிப்பினைகள் வழியே உருவாக்கிய ஆயுதங்களைத்தான் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இவை காஷ்மீரிலும் அரசு ஒடுக்குமுறைகளிலும் உபயோகப்படுத்தப்படுகின்றன. மேலும், “Homeland and Public Security agreement” மூலம் இஸ்ரேலிய போலீஸ் முறைகள் இந்தியக் காவலர்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன. தூத்துக்குடியில் போராட்டத்தை ஒடுக்க முன்னெடுக்கப்பட்ட வழிமுறை இந்தப் பயிற்சியை ஒத்தது என்ற தகவல்கள் உண்டு. “பெகாசஸ்” போன்ற இஸ்ரேலிய உற்பத்தி மென்பொருளைக் கொண்டுதான் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்களை அவர்களது தொலைத்தொடர்பு சாதனங்கள் வழியே மோடி அரசு வேவு பார்த்தது. மொத்தத்தில், இஸ்ரேலிடம் கற்றுக்கொண்டதைக் காஷ்மீர், வடகிழக்குப் பிராந்தியங்களிலும் தனது அரசியல் எதிரிகளிடமும் இன்றைய அரசு செயல்படுத்திக்கொண்டுள்ளது.

இந்துத்துவம்-சியோனிசம்: சகோதரக் கருத்தியல்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது தேசியவாதிகளுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஜனநாயகம் போன்ற அரசியல் கருத்தியல்கள் கிடைத்தன. அதேசமயம், மதவாதத்தை முன்னிறுத்திய பார்ப்பனத் தலைமையிலான வலதுசாரிகளுக்குத் தெளிவான அரசியல் கருத்தியலும் செயல்திட்டங்களும் இல்லாமல் இருந்தன. ஆனால், அவர்களுக்கான பாதையை ஐரோப்பாவிலிருந்து ஹிட்லரும் முசோலினியும் காட்டினர். தங்களது களச் செயல்பாடுகளுக்கான திட்டங்களை நாசி-பாசிஸ்ட்டுகளிடமிருந்துதான் அவர்கள் கற்றுக்கொண்டனர். முசோலினியின் பலில்லா போன்ற கட்டமைப்புகளை ஆர்.எஸ்.எஸ். தனது வழியில் ஷாகாக்களில் கற்பித்தது. மேலும், யூதர்களுக்கு எதிரான இனக்கொடுமைகளை ஆதரிக்கும் அளவுக்கு சாவர்க்கர் போன்ற இந்துத்துவவாதிகள் பேசினர். “ஜெர்மானியர்களும் யூதர்களும் ஒரே தேசத்தவராக ஆகிட முடியாது” என்று கூட்டத்தில் பேசியதை இந்நூல் பதிவு செய்துள்ளது. ஆனால், அதே யூதர்களுடன் பின்னாட்களில் கருத்தியல் உறவை இந்துத்துவவாதிகள் முன்னெடுத்தனர். ಅದಕ್ಕೆ ஒரே காரணம், “இஸ்லாமிய வெறுப்பு அரசியல்”.

யூதர்களுக்கு எதிரான நாசிசத்தின் கொடூர அடக்குமுறைகளை, அங்கிருந்த கிறிஸ்தவ நிறுவனங்களும் வரவேற்றன அல்லது கண்டும் காணாமல் இருந்தன. பின்னாட்களில் அதே கிறிஸ்தவ மதத்தைத் தனது இனவாதக் கருத்திற்குத் துணையாக அழைத்தது சியோனிசம். “கிறிஸ்தவமும் யூதமும் அரசியலாக இணைந்து இஸ்லாத்தை மத்திய கிழக்கில் எதிர்க்கும் புள்ளிதான் சியோனிசம்” என்ற சியோனிசத்தின் தந்தை தியோடர் ஹெர்சலின் வாதத்தை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஆக, தன்னை ஒடுக்கியவனிடமே தனது ஒடுக்குமுறையை நடைமுறைப்படுத்த உதவி கேட்கும் சியோனிசமும், ஒடுக்கிய நாஜிகளுடனும், ஒடுக்குதலுக்கு உள்ளான யூதர்களிடமும் ஒரே நேரத்தில் உறவாடிய இந்துத்துவாவினரும் ஒரே கருத்தியலின் அடிப்படையில் ஒன்று சேர்கின்றனர்.

தாய்நாடு, புண்ணியபூமி என்ற கருத்தாக்கங்களில் இவ்விரு ஒடுக்குமுறையாளர்களும் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒத்த கருத்துடையவர்கள் என்பதை அந்த இயக்கத் தலைவர்களின் கருத்துகள் வழியே ஆசாத் எடுத்துரைத்துள்ளார். “நமது நம்பிக்கையைக் கொண்டே நமக்கான தேசத்தை நாம் அங்கீகரித்துக்கொள்வோம்” என்ற தியோடர் ஹெர்சலின் மேற்கோள், பாலஸ்தீன ஆக்கிரமிப்பிற்கு எந்த எல்லைக்கும் செல்ல சியோனிஸ்ட்டுகள் தயார் என்பதையே காட்டுகிறது. சர்வதேசச் சட்டங்கள் எதையும் நாங்கள் மதிக்க மாட்டோம் என்ற சியோனிசத் திமிர் அது. இனம், இனத்தூய்மை என்பதில் இவ்விருவரின் கருத்தும் ஒன்றே. ஆனால், யூதர்களைப் போல் ஒரு தனித்த இன, மத அடையாளம் என்பது இந்து மதத்திற்கு இல்லை. இந்துத்துவவாதிகள் முன்னெடுக்கும் அரசியல், பார்ப்பன உயர்சாதிகளின் நலனே என்கிற பரவலான கருத்து அவர்களுக்கு ஒரு சிக்கலை உருவாக்குகிறது. ஆகவேதான், இந்துத்துவவாதிகளைப் பொறுத்தவரை இந்து அடையாளம் என்பது முஸ்லிம்களை எதிர்நிலையில் வைத்து உருவாக்கப்பட்டது. சியோனிசத்தின் அடிப்படையும் அதுவே.

அமெரிக்கவாழ் இந்தியர்களும் இஸ்ரேலியர்களும்

“இஸ்ரேல் இந்த அளவுக்கு ஒரு வெறிபிடித்த நாடாக இருக்கிறதென்றால், அதற்கு அமெரிக்க யூதர்கள் ஒரு முக்கிய காரணம்” என்று அமெரிக்க அரசியல் செயற்பாட்டாளர் நார்மன் ஃபின்கெல்ஸ்டைன் கூறிய கூற்று இன்றுவரை மதிப்புடையதாகவே உள்ளது. இஸ்ரேலின் அத்தனை கொடுமைகளுக்கும் அமெரிக்காவின் அனைத்துவிதமான உதவிகளைப் பெற்றுத்தருவதில் அமெரிக்கவாழ் யூதர்களின் லாபி கற்பனைக்கு அப்பாற்பட்டது. இதை அமெரிக்காவின் இந்து மதவாதிகள் கவனித்து வந்தனர். அவர்களைப் பின்பற்றி, கடல் கடந்து இந்துத்துவ இயக்கங்களை வளர்ப்பது குறித்துச் சிந்தித்துச் செயலாற்றினர். யூதர்களின் ADL, AJC போன்ற அமைப்புகளைப் பின்பற்றி, அமெரிக்க இந்து ஃபவுண்டேஷன், VHP-இன் அமெரிக்கப் பிரிவு, ஓவர்சீஸ் பிரண்ட்ஸ் ஆஃப் பாரதிய ஜனதா கட்சி போன்ற பல அமைப்புகளை வளர்த்தெடுத்தனர். யூத அமைப்புகள் எப்படி இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது செலுத்தும் ஒடுக்குமுறைகளுக்கு அமெரிக்காவின் ஆதரவையும் நிதியையும் பெறுவதற்கு வேலை செய்கின்றனவோ, அதேபோல் இந்திய வலதுசாரி அரசின் காஷ்மீர் ஒடுக்குமுறைக்கும் மற்ற மக்கள் விரோத ஒடுக்குமுறைகளுக்கும் அமெரிக்க அரசின் ஆதரவைப் பெறுவதற்கோ அல்லது அவற்றை மறைப்பதற்கான வேலையையோ செய்து வருவதை இந்நூல் பல்வேறு ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறது. 

அமெரிக்காவின் இந்த இந்துத்துவ அமைப்புகள், இங்குள்ள மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு முட்டுக்கொடுக்கும் வேலைகளையும், அவர்களின் செயல்பாடுகள், தேர்தல் செலவுகளுக்கு மிகப்பெரிய நிதி ஆதாரமாகவும் விளங்குவதையும் ஆசாத் பல உதாரணங்களோடு விளக்குகிறார். எதிர்கருத்தை முடக்குவதில் அமெரிக்காவில் வாழும் சியோனிஸ்ட்களும் இந்துத்துவாவினரும் ஒரு குண்டர் படையைப்போல நடந்துகொள்கின்றனர் என்கிறார் நூலாசிரியர். மிரட்டல்கள், கும்பல் தாக்குதல்கள், பணியிடங்களுக்குச் சென்று பிரச்சினை உருவாக்குதல், இணையத்தில் அடையாளங்களை வெளியிட்டு மிரட்டுதல் போன்ற அனைத்து அடாவடிகளையும் இந்த அமைப்புகள் செய்து வருகின்றன. மேலும், யூத அமைப்புகளுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராகக் கருத்தரங்குகள், அரசியல் வகுப்புகள் எனப் பல நிகழ்வுகள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காஷ்மீர்-பாலஸ்தீனம்: ஆக்கிரமிப்பின் அடையாளங்கள்

இந்தியா தன்னை மதச்சார்பற்ற, ஜனநாயக நாடாகக் காட்டிக்கொண்டாலும், காஷ்மீர்ப் பிரச்சினையைப் பொறுத்தவரை அரசுகள் ஒருவித அராஜகத் தன்மையுடன்தான் நடந்து வந்துள்ளன. குறிப்பாக, வலதுசாரி பாஜக அரசாங்கங்கள் சர்வாதிகாரத் தன்மையுடன் காஷ்மீர்ப் பிரச்சினையை அணுகின. அதன் உச்சம்தான், இந்துத்துவவாதிகளின் நீண்டநாள் கோரிக்கையான காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான 370ஆவது விதியை அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து நீக்கியது. இதன் மூலம், காஷ்மீர் பாலஸ்தீனம் போல ஆக்கிரமிப்பிற்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீரின் மீதான நடவடிக்கைகள் பெரும்பாலும் இஸ்ரேல் பாலஸ்தீனில் நடைமுறைப்படுத்தியவை என்பதை நூலின் கடைசி அத்தியாயம் விவரிக்கிறது. இந்திய அரசின் கொடுமைகளுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் இந்திய இராணுவத்தைக் கற்களைக் கொண்டு எதிர்கொண்டனர். இது, பாலஸ்தீனர்கள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக மேற்கொண்ட “இன்டிஃபாதாவை” ஒத்தது. ஒடுக்குமுறைக்குள்ளான மக்களுக்கும் ஒடுக்கும் அரசுகளுக்கிடையேயுள்ள ஒற்றுமைகளுக்கும் உள்ள தொடர்பை நூல் விரிவாக விளக்குகிறது.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு வெறும் எல்லை விஸ்தரிப்பு மட்டுமல்ல. அதன் பின் மிகப்பெரிய வர்த்தக நலன்கள் உள்ளன. இஸ்ரேலின் ஆயுத உற்பத்தி தனியார்வசமான பின்னர், பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதல்கள் ஆயுதங்களைப் பரிசோதிக்கும் சோதனைக் களங்களாக மாறின. அதை விளம்பரமாக வைத்தே இஸ்ரேல் தனது ஆயுத விற்பனையைச் செய்து வருகிறது. அதை ஒட்டியே காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கான காரணத்தையும் காண வேண்டும் என நூலாசிரியர் சில நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறார். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர், பல ஏக்கர் கணக்கான நிலங்கள் இராணுவத்தால் கையகப்படுத்தப்படுகின்றன. இது பின்னாளில் அரசினால் பெருமுதலாளிகள் வசம் ஒப்படைக்கப்படும். இது வெறும் யூகம் மட்டுமல்ல. இப்போதே, ஐக்கிய அரபு அமீரகத்தின் பல நிறுவனங்கள் காஷ்மீரில் தங்களது முதலீட்டை ஆரம்பிக்க முனைப்பு காட்டுவதை ஆதாரத்துடன் ஆசாத் குறிப்பிடுகிறார். வணிகம், சுற்றுலா, வளர்ச்சி என்ற பெயர்களில் காஷ்மீரின் பூர்வகுடிகளைச் சிறுபான்மையாக்கும் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் சித்திரத்தை நூலை வாசிக்கும்போது உணர முடிகிறது. இது யூதர்களைப் பாலஸ்தீனில் குடியேற்றி ஆக்கிரமித்த நிகழ்விற்கு ஒப்பானது. பாலஸ்தீனத்தில் உயர் இராணுவப் பாதுகாப்புடன் கூடிய யூதக் குடியிருப்புகள் மாதிரி காஷ்மீரிலும் அமைக்க வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசும் அளவுக்கு இந்துத்துவவாதிகள் வந்துவிட்டனர்.

இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம்

2014-க்குப் பின்னர் மோடி அரசாங்கம் வெறும் வலதுசாரி அரசாங்கமாக மட்டும் இல்லாமல், நிர்வாகத்திலும் சமூகத்திலும் இந்துத்துவக் கருத்தியலைத் திணிப்பதில் மூர்க்கமாகச் செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், எதிர் அரசியல் கருத்துடையோர் மீதான “அர்பன் நக்சல்” முத்திரை குத்தித் தாக்குதல்கள், தேர்தலையே கேலிக்கூத்தாக்கும் நடவடிக்கைகள் எனத் தொடர்ச்சியாக ஜனநாயக விரோதச் செயல்களையே செய்து வருகிறது. CAA போன்ற கொடூரச் சட்டங்கள் வழியே இந்தியச் சிறுபான்மையினரின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. காலங்காலமாக இம்மண்ணில் வாழ்ந்து வந்த மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக ஒதுக்கித்தள்ள முற்படும் பாசிச நடவடிக்கைகளே இது போன்ற சட்டங்கள். இவையெல்லாம் இந்துத்துவவாதிகளின் இயற்கைக் கூட்டாளியான சியோனிஸ்டுகளின் கொள்கைகளோடு ஒத்துப்போவதால், அரசாங்கக் கொள்கைகளிலும் இது எதிரொலிக்கிறது.

சியோனிசம் ஒரு தேசிய, இனவாதத் தத்துவம் என்பது போன்ற தோற்றத்தைச் சியோனிஸ்ட்கள் பரவலாக்கியுள்ளனர். பாசிசத்தில் மிகவும் பாதிப்புக்குள்ளான ஒரு சமூகம், இன்று அதையே ஆயுதமாகக் கைக்கொண்டுள்ளது. ஐரோப்பாவிலிருந்து அவர்கள் வலிகளையும் துயரங்களையும் மட்டுமல்ல, பாசிசச் சிந்தனைகளையும் சேர்த்தே கொண்டு வந்துள்ளனர். பின்னால் நடந்தவற்றைக் கொண்டு காணும்போது இப்படித்தான் கூறவேண்டியுள்ளது. யூத மதகுருவிடம் தோராவைச் சுருக்கமாகக் கூற முடியுமா என்ற கேள்விக்கு அவர், “ஒருவர் நமக்குச் செய்த கொடுமைகளை அடுத்தவருக்குச் செய்யாமல் இருப்பது” எனப் பதிலளித்தாராம். இன்றைய நிலைமையில் நாசிசம், பாசிசம் என்ற வார்த்தைகளுக்குப் பதில் இத்தகைய கருத்தியல்களைக் குறிக்க சியோனிசம், பார்ப்பனியம் என்றுகூடக் குறிப்பிடலாம் என்றளவிற்கு இவர்களின் செயல்பாடுகள் உள்ளன.

யூதர்களைப் போல ஒற்றை அடையாளம் இந்துத்துவவாதிகளின் அரசியலுக்கோ, இந்து மதத்திற்கோ கிடையாது. இந்துக்களின் நலன், இந்துக்களுக்காக, இந்துக்களைத் தாக்குகிறார்கள் போன்ற கூச்சல்கள் எல்லாம் பார்ப்பன-பனியா சாதிகளின் ஆதிக்க நலன்களே என்று மீண்டும் மீண்டும் உரக்கப் பேசவேண்டிய கடமை ஜனநாயக, முற்போக்குச் சக்திகளுக்கு உள்ளது.

அதேபோல, ஆட்சியாளர்களும் பெருமுதலாளிகளும் தேச, மத, இன எல்லைகளைக் கடந்து மக்களை ஒடுக்கிவைக்கக் கைகோத்து நிற்கும்போது, மக்களுக்காக இயங்கும் இயக்கங்களும் சர்வதேச ஒற்றுமையை ஏற்படுத்தி, ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பதே இந்நூல் எழுதப்பட்டதற்கான காரணம் என்பதை வாசித்தலில் உணர முடிகிறது. 

– நவனீ