கால்பந்து உலகத் திருவிழா ஆரம்பித்துவிட்டது. ஆமாம், இந்தப் பூவுலகின் மிக அழகிய விளையாட்டு என்று அழைக்கப்படும் கால்பந்தின் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகள் தொடங்கிவிட்டன. இந்த முறை வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள அமெரிக்கா, கனடா, மெக்சிகோ என மூன்று நாடுகள் இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன. இதற்கு முன் 2002-இல் தென் கொரியாவும் ஜப்பானும் இணைந்து போட்டியை நடத்தின. முதல் முறையாக 48 நாடுகள் பங்கேற்கின்றன; 104 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அத்தோடு, இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட இருக்கிறது. அதேபோல, 5 புதிய விதிகளைப் போட்டியை நடத்தும் அமைப்பான ஃபிபா (FIFA) அமல்படுத்த உள்ளது. இந்தப் போட்டிகள் 40 வயது நிறையும் சில முன்னணி வீரர்களின் இறுதி உலகக் கோப்பையாக இருக்கப்போகின்றது. இந்த உலகக் கோப்பை போட்டி பற்றி விவாதிக்கப் பல விஷயங்கள் உள்ளன. எந்த அணி சிறந்த அணி, எந்த அணி கோப்பையை வெல்லப் போகிறது, சிறந்த வீரர் யார், ஃபிபாவின் புதிய விதிகள் எந்த அளவுக்கு ஆட்டங்களை மேம்படுத்தும் எனப் பல விஷயங்களைப் பற்றிப் பேசுவதற்கு உள்ளன. இந்தப் போட்டிகள் என்னைப் போன்ற தீவிர கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம். உலகம் முழுவதும் உள்ள பல ரசிகர்கள் இந்தப் போட்டியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இப்படிப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தபோதும், இதன் சில இருண்ட பக்கங்களையும் நாம் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குப் பிறகு கால்பந்துதான் அதிக ரசிகர்களைக் கொண்டது. அதுமட்டுமில்லாமல், கால்பந்து விளையாட்டு இனம், மதம், மொழி பேதங்களைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைக்கக்கூடிய வல்லமை கொண்டது. ஆனால், தற்போது நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கும்போது, கால்பந்து விளையாட்டும் வலதுசாரி தேசியவாதங்களுக்குத் துணைபோகக்கூடிய விளையாட்டாக மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. இது குறித்த பல செய்திகள் மிகக் கவலைக்குரியதாக உள்ளன.
இதற்கு மிக முக்கியக் காரணம், போட்டியை நடத்துகின்ற நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள வெள்ளை இனவெறி மேலாதிக்கமே ஆகும். அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினரை வெளியேற்றுவதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய இந்த நிர்வாகம், தற்போது இந்த உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு மிகப் பெரிய தடையையும் சிக்கல்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
ஐ.சி.இ (I.C.E) எனப்படும் இந்த அமைப்புதான், தற்போது நடைபெறக்கூடிய உலகக் கோப்பை கால்பந்தாட்ட இறுதிப் போட்டிகளுக்காக அமெரிக்காவிற்கு வரும் வீரர்களைச் சோதனை என்ற பெயரில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றது. இந்தப் போட்டியில் அரசியல் ரீதியாக முரண்படும் இரண்டு நாடுகள் முதன்முதலாகக் கலந்து கொள்ளப் போகின்றன; ஒரு நாடு போட்டியை நடத்தும் அமெரிக்கா, இன்னொன்று ஈரான். இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஈரானுக்குப் பாதுகாப்பைக் கூட அமெரிக்க அரசால் உறுதிப்படுத்த முடியவில்லை. மிகக் குறிப்பாக, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அணி வீரர்களையும், ஆப்பிரிக்கப் பூர்வீகத்தைக் கொண்ட வீரர்களையும் ஏதோ குற்றவாளிகளைப் போல மிகக் கடுமையான சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.
வீரர்கள் சந்தித்த இத்தகைய இன்னல்களைக் கவனித்தால், சுவிஸ் வீரர் எம்போலோவின் விசா பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டதால், நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் அவரால் தனது அணியுடன் இணைய முடிந்தது. ஈராக்கின் அய்மன் உசேன் கிட்டத்தட்ட 7 மணி நேர விசாரணைக்குப் பிறகுதான் உள்ளே அனுமதிக்கப்பட்டார். உஸ்பெகிஸ்தான் வீரர்கள் பயங்கரவாதிகள் போல நடத்தப்பட்டு, மோப்ப நாய்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். தென்னாப்பிரிக்காவின் ஒரு பகுதி வீரர்களுக்கு விசா கிடைப்பதில் காலதாமதம் ஆனதால், அவர்கள் அமெரிக்கா வருவதும் தாமதமானது. செனகல் நாட்டு வீரர்களை அவர்கள் அணிந்திருந்த காலணிகளைக் கழற்றச் சொல்லிச் சோதனை செய்துள்ளது.
அதேபோல, ஈரான் நாட்டு வீரர்கள் அமெரிக்க விசா எடுப்பதற்குத் துருக்கி தூதரகத்திற்கு சென்று பல நாட்களாகக் காத்திருந்துதான் விசா பெற்றனர். ஆனால், அதுவும் ஈரான் கலந்து கொள்ளும் போட்டிகள் நடக்கும்போது மட்டும் அமெரிக்காவுக்குள் வரலாம் என்ற நிபந்தனையோடு வழங்கப்பட்டது. அவர்களுக்கு அமெரிக்க மண்ணில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது; அவர்கள் தற்போது மெக்சிகோவில் தங்கிப் பயிற்சி எடுத்து வருகின்றனர். இதில் மிக முக்கியமான சம்பவம் என்னவெனில், கடந்தாண்டு நடந்த ஆப்பிரிக்கச் சாம்பியன்ஷிப்பில் சிறந்த நடுவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டவரும், சோமாலியாவிலிருந்து முதன்முதலாக உலகக் கோப்பையில் நடுவராகக் கலந்துகொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான ஓமர் ஆர்டன் என்பவரை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க முடியாது என்று திருப்பி அனுப்பிவிட்டது. அவரிடம் தூதரகக் கடவுச்சீட்டு இருந்தபோதும் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை.
இந்தச் சூழலில் ஒரு வினோதமான விஷயம் என்னவெனில், போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய அமெரிக்கத் தேசிய அணியிலேயே ஏழு புலம்பெயர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இருந்தபோதும் நிர்வாகம் மிகக் கடுமையாக நடந்து கொள்கிறது. இது பல நாட்டு வீரர்களுக்குப் பெருத்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. வீரர்களுக்கே இவ்வளவு கடுமையான சோதனைகள் என்றால், ரசிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? ரசிகர்களும் மிகக் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டே அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பல ரசிகர்களுக்கு விசா கிடைக்காததால், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளையும் தங்கும் அறைகளையும் ரத்து செய்து வருகின்றனர்; இதனால் அவர்களுக்குப் பண இழப்பும் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய கடுமையான கெடுபிடிகள் நிலவுவதால், நியூயார்க் மேயர் ஜோர்டான் மம்தானி, “எங்கள் நகரத்திற்குள் வரும் வெளிநாட்டு ரசிகர்களை எந்தச் சிரமத்திற்கும் உள்ளாக்க மாட்டோம்; அதற்குத் தடையாக உள்ள எதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று நேரடியாகவே இந்த ஐ.சி.இ (I.C.E) அமைப்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது ஒரு திருவிழாவாக இருக்க வேண்டிய காலம், ஆனால் அதை ட்ரம்ப் அரசு முற்றிலும் சிதைத்துக் கொண்டிருக்கிறது.
சரி, இதையெல்லாம் கேட்க வேண்டிய பொறுப்பும் கடமையும் கொண்ட போட்டியை நடத்தும் அமைப்பான ஃபிபா மற்றும் அதன் தலைவர் ஜானி இன்ஃபாண்டினோ என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி எழுவது நியாயமானதுதானே! இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். ஜனவரி மாதம் ட்ரம்ப் இரண்டாவது முறையாகக் குடியரசுத் தலைவராகப் பதவியேற்கும் நிகழ்வில், பல தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள், ட்ரம்பை ஆதரிக்கக்கூடிய முன்னாள் குடியரசுத் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். அப்படிப் பங்கேற்றவர்களில் ஃபிபா அமைப்பின் தலைவர் இன்ஃபாண்டினோவும் ஒருவர். அமெரிக்க மக்களுக்கு அவரை அடையாளம் தெரியாது; எனினும் அவர் பதவியேற்றதிலிருந்தே ட்ரம்ப்புடன் மிக நெருக்கமான உறவையே பேணி வருகிறார். இந்தப் போட்டிகளை ட்ரம்ப்புக்குச் சாதகமாகப் பயன்படுத்த எல்லா வகைகளிலும் அவர் உதவி செய்கிறார். இவரும் ஒரு வலதுசாரி சித்தாந்த ஆதரவாளர்தான். ஏனெனில், பரம எதிரிகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கால்பந்து நிர்வாகிகளை ஃபிபா மகாசபையில் கைகுலுக்க வற்புறுத்தினார். அதுமட்டுமல்லாமல், காசா தொடர்பாக ட்ரம்ப் உருவாக்கிய அமைதிக்குழுவில் இவரும் ஒரு உறுப்பினர்; எகிப்தில் நடந்த பேச்சுவார்த்தையின்போது இவரும் கலந்து கொண்டார். அதுமட்டுமில்லாமல், காசா நகர இடிபாடுகளில் 20 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய ஒரு கால்பந்து மைதானத்தைப் ஃபிபா அமைப்பு கட்டித்தரும் என்றும், அதற்காக 70 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஃபிபா வழங்கும் என்றும் வாக்குறுதி அளித்தார். இதிலிருந்து இவரது தத்துவார்த்தச் சாய்மானத்தை நாம் அறிந்து கொள்ளலாம். இன்னும் சொல்லப்போனால், ஃபிபாவின் ‘அமைதி விருது’ என்பதை ட்ரம்ப்புக்குக் கொடுப்பதற்காகவே இவர் உருவாக்கினார்.
இவையெல்லாம் ஒருபுறம் என்றாலும், ஃபிபா அமைப்பு இந்தப் போட்டிகளை நடத்துவதன் மூலம் 13 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்ட முடியும் என்று கருதி, இதை ஒரு பணம் கறக்கும் பசுவாக மட்டுமே பார்க்கிறது. இது எப்படி எனில், போட்டி நடக்கக்கூடிய மைதானங்களுக்கான டிக்கெட்டுகளின் விலை (Dynamic Pricing) விமான டிக்கெட்டுகள் போல உயர்த்தப்படுகின்றன. அதேபோல ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. தங்கும் இடங்களுக்கான கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆகவே, பல ரசிகர்கள் போட்டியை நேரில் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டனர்.
ஸ்போர்ட்ஸ் வாஷிங் (Sportswashing)
2018-இல் ரஷ்யா உலகக் கோப்பையை நடத்தியபோது இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. ரஷ்யாவில் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவதையும், சர்வாதிகாரத் தன்மையையும் மக்கள் மத்தியிலிருந்து திசைதிருப்பவே ரஷ்யா இந்தப் போட்டிகளை நடத்துகிறது என்ற பேச்சு அடிபட்டது. அதேபோல 2022-இல் கத்தார் உலகக் கோப்பையை நடத்தியபோது, சர்வதேச அரங்கில் விளம்பரத்திற்காக மட்டும் கத்தார் பல கோடிக்கணக்கான டாலர்களைச் செலவு செய்தது. அதற்கான காரணம், கத்தாரில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை மற்றும் அங்கிருந்த மோசமான பணிச் சூழலில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கே ஆகும். ஆனால், உலகம் முழுவதும் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்கிறோம் என்று பெருமை பேசும் அமெரிக்காவில், ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த இனவெறி மேலாதிக்கத்தை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தப் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் அமைப்புகளையும் சமூகச் செயல்பாட்டாளர்களையும் அரசு கடுமையாக ஒடுக்குகிறது அல்லது கொலை செய்கிறது. அமெரிக்காவில் ஏகபோக அதிகாரமே கோலோச்சுகிறது; அவற்றைப் பற்றிக் கேள்வி கேட்க முடியாத சூழல் உள்ளது. இதற்குக் காரணம் ட்ரம்ப்பின் வெள்ளை இன மேலாதிக்கமே. ஆனால், எந்த ஒரு மேற்கத்திய ஊடகமும் இதைத் தைரியமாகச் சொல்வதில்லை. அதே நேரத்தில் இதை ‘ஸ்போர்ட்ஸ் வாஷிங்’ என்றும் சொல்லத் துணிவதில்லை. ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் தொடுத்ததால் ஃபிபா அமைப்பு ரஷ்ய நாட்டு அணியைப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை. ஆனால், இனவெறியோடு இன அழிப்பைச் செய்து வருகின்ற இஸ்ரேல் நாட்டின் அணியை எப்போதும் போலக் கலந்துகொள்ளச் செய்துள்ளது. இது ஃபிபா என்ற அமைப்பின் ஒருமைப்பாட்டைத் தீவிரமாகக் கேள்விக்குள்ளாக்குகிறது.
இத்தனை அட்டூழியங்களும் ஒடுக்குமுறைகளும் நடந்தபோதும், இந்த 2026 உலகக் கோப்பைப் போட்டிகள் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளாகவில்லை. அங்கே இருக்கும் சமூகச் செயல்பாட்டாளர்கள் நிர்வாகத்தையும் ஃபிபா அமைப்பின் பேராசையையும் கடுமையாக எதிர்த்துக் களத்தில் போராடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களோடு போட்டி நடக்கின்ற நியூயார்க் நகர மேயர் ஜோர்டான் மம்தானியும் இணைந்து தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றை எந்தப் பத்திரிகைகளும் பிரசுரம் செய்யவில்லை என்பது வினோதமானது. இந்த எதிர்ப்பு இயக்கங்கள் மிகச் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இவை முக்கியமான நடவடிக்கையாக நாம் பார்க்கப்பட வேண்டிய தேவை உள்ளது.
– க.சரவணன்






