வரலாறு

எதற்காகப் போராடுகிறார்கள் ஹட்ஸா பழங்குடிகள்? – தீபா ஜெயபாலன்

புள்ளி

ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையோர நாடான தான்ஸானியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஏயாசி ஏரியைச் சுற்றி, சுமார் 10,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வாழ்ந்து வரும் மக்கள்தான் ஹட்ஸா பழங்குடியினர். இவர்களின் மொத்த மக்கள்தொகை 1,300-க்கும் குறைவு என்பது ஒரு கவலைக்குரிய புள்ளிவிவரமாகும். இன்று உலகத்தில் மீதமுள்ள மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உண்மையான வேட்டையாடி வாழும் வாழ்க்கை முறையைத் தொடரும் பழங்குடியினருள் இவர்களும் ஒருவராவர். உலக மக்கள்தொகையில் 0.001%-க்கும் குறைவானவர்களே இந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் வாழ்க்கை முறையும் பண்பாடும் யுகங்கள் கடந்தும் மாற்றமின்றி இருந்து வருவது மிகக் குறிப்பிடத்தக்கது. அவர்களைப் பற்றிய ஒரு பார்வைதான் உங்கள் முன்…

வரலாறு

ஹட்ஸா மக்கள் சுமார் 40,000 ஆண்டுகளுக்கும் மேலாக தான்ஸானியாவின் ஏயாசிப் பகுதியைப் புகலிடமாகக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் மொழி, வாழ்க்கை முறை மற்றும் உட்கட்டமைப்புகள் பண்டைய ஆதி மனிதர்களை ஒத்திருக்கின்றன. நவீன மரபணு ஆய்வுகளின்படி, ஹட்ஸா மக்கள் பூமியில் உள்ள பழமையான மரபணு பரம்பரைகளில் ஒன்றைக் கொண்டுள்ளனர். இவர்களின் டி.என்.ஏ (DNA) சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இவர்களிடம் எழுதப்பட்ட வரலாறு இல்லாததால், பெரும்பாலான தகவல்கள் வாய்மொழி மூலமாகவும், தொல்லியல் ஆய்வுகள் மூலமும் தெரியவருகின்றன.

ஹட்ஸா மொழி: உலகின் தனித்துவமான ஓசை

மொழியின் பெயரே இவர்களின் பெருமை என்கிறார்கள். இம்மக்கள் பேசும் மொழியையே இங்கு ஹட்ஸா மொழி என்று அழைக்கப்படுகிறது. இது உலகில் மிக அரிதாகக் காணப்படும் ஒரு தனித்துவமான மொழியாகும்.

Letters

அப்படி என்ன முக்கிய சிறப்பம்சங்கள் இருக்கிறது என்ற கேள்வி எழும். அதற்கான பதில், அனைத்துப் பிற மொழிகளுடனும் தொடர்பில்லாததும், மற்ற எந்த ஆப்பிரிக்க மொழிகளுடனும், உலக மொழிகளுடனும் தொடர்பில்லாத ஒரு தனித்துவமான மொழியாக உள்ளதுதான். இதனை “Isolate Language” (தனிமொழி) என்று மொழியியல் வல்லுநர்கள் வரையறுக்கின்றனர்.

இதனை “க்ளிக்” (Click) சத்தங்கள் கொண்ட மொழி என்றும் சொல்கிறார்கள். அதாவது ஹட்ஸா மொழியில் 4 விதமான “க்ளிக் சத்தங்கள்” பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக:

  • ! (Alveolar Click): நாக்கின் நுனியை மேலண்ணத்தில் தட்டி எடுக்கும் சத்தம்.
  • ʘ (Bilabial Click): உதடுகளைக் குவித்து ஒலி எழுப்பும் சத்தம்.
  • ǁ (Lateral Click): நாக்கின் பக்கவாட்டில் ஒலி எழுப்பும் சத்தம்.
  • ǀ (Dental Click): பற்களுக்கு இடையில் நாக்கை வைத்துத் தட்டும் சத்தம்.

குறிப்பாக, உதடுகளைக் குவித்து ஒலி எழுப்பும் ʘ (Bilabial Click) சத்தம் உலகில் உள்ள மொழிகளில் மிகவும் அரிதான ஒன்றாகும்; இது ஒரு சில மொழிகளில் மட்டுமே காணப்படுகிறது. இந்த சத்தங்கள் வார்த்தைகளின் அர்த்தத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இது மனித மொழிகளின் ஆரம்ப நிலையைக் குறிக்கும் மிகப் பழமையான கூறாகக் கருதப்படுகிறது.

இதுமட்டுமா? மூச்சும், மெளனமும் ஒரு “வார்த்தை” ஆகப் பின்னிப் பிணைந்துள்ளது. இவர்கள் பேசும் போது, சில கருத்துக்கள் முழுமையான மௌனம் அல்லது சுவாசத்தின் ஓசை மூலம் மட்டுமே தெரிவிக்கப்படுகின்றன. இது மிகவும் அரிய மொழியியல் நிகழ்வுகளில் ஒன்றாகும்.

பொதுவாக ஹட்ஸா மொழியில் அறிஞர்களால் பதிவுசெய்யப்பட்ட சொற்கள் 1,000–1,500 மட்டுமே. ஆனால் இவர்கள் உண்மை வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்கள் அதற்கு மேலாக இருக்கலாம்.

எழுத்து முறைகள் இல்லாத ஹட்ஸா மொழி தற்போது அழிய வாய்ப்புள்ள பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் மொழி (Endangered Language) எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் (UNESCO) ‘அழிய வாய்ப்புள்ள மொழிகளின் பட்டியலில்’ (Atlas of the World’s Languages in Danger) இது கடுமையாக அழிய வாய்ப்புள்ள மொழியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சுமார் 1,200–1,300 பேர் மட்டுமே ஹட்ஸா மொழியைப் பேசுகிறார்கள். அதிலும், முழுமையான தாய்மொழிப் பேச்சாளர்கள் 400–500 பேர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வியல் முறைகள்

இம்மக்கள் உணவுக்காக வேட்டையாடுவதையும், இயற்கையில் கிடைக்கும் பழங்கள், வேர்கள், தேன் போன்றவற்றைச் சேகரிப்பதையும் வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டுள்ளனர். சராசரியாக, ஹட்ஸா மக்கள் உணவு தேடுவதற்காக ஒரு நாளைக்கு 4 முதல் 6 மணி நேரம் மட்டுமே செலவிடுகின்றனர். இது நவீன சமூகத்தின் வேலை நேரத்தோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவு. இயற்கையோடு இணைந்த வாழ்க்கை எனலாமே!!

உணவு தேடும் முறை

ஆண்கள் தினமும் வனங்களில் சென்று நரி, சிறிய காட்டு இறால், பன்றிகள், மூங்கில்களிலிருக்கும் விலங்குகள் போன்றவற்றை வேட்டையாடுகிறார்கள். இவர்களின் வேட்டை வெற்றி விகிதம் சுமார் 3-5% மட்டுமே; இருப்பினும், விடாமுயற்சியுடன் தினமும் வேட்டையாடுகின்றனர். இவர்கள் உபயோகிக்கும் அம்பும் வில்லும், சில நேரங்களில் மரம் வைத்துத் தயாரிக்கப்படும் ஈட்டி போன்ற ஆயுதங்களாகவும் இருக்கின்றன. சில அம்புகளின் முனைகளில் விஷம் தடவப்பட்டிருக்கும். இந்த விஷம் ‘அடினியம்’ (Adenium) செடியின் பாலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. எந்த ஒரு விலங்கையும் வீணாக்காமல் பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள். எடுத்துக்காட்டாக, எலும்பு, தோல், இறைச்சி, கொழுப்பு அனைத்தும் முக்கியமான பயன்பாடுகளாக இருப்பது உணவை வீண் செய்யாத பண்பாட்டைக் காட்டுகிறது.

Vettaiyadu

பெண்கள் மற்றும் குழந்தைகள் பழங்கள், வேர்கள், இலைகள், தேன், பூச்சிகள், பூச்சி முட்டைகள் (நிறைய புரதம் கொண்டவை) போன்றவற்றைச் சேகரிக்கின்றனர். ஒரு ஆய்வின்படி, இவர்களின் உணவில் சுமார் 30% இறைச்சி, 30% தேன், மற்றும் மீதமுள்ள 40% கிழங்குகள், பெர்ரி பழங்கள் மற்றும் பாவோபாப் பழங்களால் ஆனது. இவர்கள் தங்கள் உணவுகளை நிலப்பரப்பு, பருவநிலை, நிலத்தின் தன்மை, மழைக்காலக் கணிப்பு இவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதில் வல்லவர்கள். உதாரணமாகத் தேன் தேடும் தொழிலைக் கூறலாம்.

தேன் தேடல் ஹட்ஸா மக்களிடம் ஒரு சிறப்புத் தொழிலாகவே பார்க்கப்படுகிறது. இவர்கள் “ஹனிகைட்” (Honeyguide) எனும் பறவை காட்டும் வழியில் சென்று தேனைக் கண்டுபிடிக்கிறார்கள். இதுவே இவர்களின் அபூர்வத் திறமையாகப் பார்க்கப்படுகிறது. மனிதர்களுக்கும் ஒரு காட்டுப் பறவைக்கும் இடையே நிரூபிக்கப்பட்ட மிகச் சில பரஸ்பர simbotic உறவுகளில் இதுவும் ஒன்றாகும். ஹட்ஸா மக்கள் பறவைக்கு தேன் மெழுகை உணவாகக் கொடுப்பதன் மூலம் இந்த உறவைப் பேணுகின்றனர். வைக்கோல் அல்லது சிறிய புகை உண்டாக்கும் பொருட்களைக் கொண்டு மரத்தில் இருக்கும் தேனீக் கூட்டத்தை விரட்டி, தேனை எடுக்கிறார்கள். தேனை உணவாக மட்டுமல்லாமல், மருந்தாகவும், குழந்தைகளுக்கு ஆற்றல் ஊட்டியாகவும் பயன்படுத்துகிறார்கள்.

பொருளாதாரமும் கைத்தொழிலும்

பொருள் பரிமாற்றமும் பணமில்லாப் பொருளாதாரமுமே இவர்களின் அடையாளம். இம்மக்கள் பணம் அல்லது வர்த்தகத்தின் மீது நம்பிக்கை வைக்காதவர்கள். இவர்களின் பொருளாதாரம் ‘உடனடி நுகர்வுப் பகிர்வு’ (Immediate-return sharing) எனப்படும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அதாவது, வேட்டையாடப்பட்ட உணவு அல்லது சேகரிக்கப்பட்ட பொருள் உடனடியாகக் குழுவில் உள்ள அனைவருக்கும் பகிரப்படும். சொத்து சேமிப்பு என்ற கருத்தே இவர்களிடம் இல்லை. ஆனால் பிற பழங்குடியினருடன் பொருள் பரிமாற்றம் (Barter system) நடத்துகிறார்கள்: வேட்டையாடிய இறைச்சியை மாற்றாகக் கொடுத்து, சிலர் கத்தி, அரிசி, பாத்திரங்கள், உலோகப் பொருட்கள் போன்றவற்றைப் பெறுகிறார்கள்.

கைத்தொழில் என்று தனித்துவம் இல்லை. ஆனால், சில பொருட்கள் மட்டும் இம்மக்களால் உருவாக்கப்படுகின்றன. சிறிய வாசல் பூட்டு, விற்கள் (Bows), அம்புகள் (Arrows) போன்றவற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் இது ஒரு பெரிய கைத்தொழில் வகை இல்லை என்றாலும், தாங்கள் பயன்படுத்திக்கொள்வதற்கான அளவிற்கு மட்டுமே உருவாக்குகிறார்கள்.

ஹட்ஸா பழங்குடியினரின் குடும்பம் என்பது நமது பாரம்பரிய குடும்ப வரையறையைப் போன்ற அமைப்பைக் கொண்டதல்ல. இங்கு குடும்பம் என்பது இரத்த உறவுகள் மட்டுமல்ல, பரஸ்பர நம்பிக்கையையும், கூட்டாக வாழும் ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டது.

குடும்பம் மற்றும் திருமண உறவுகள்

Family
  • அண்மித்த குடும்பம் (Nuclear family): ஒரு கணவன், மனைவி மற்றும் அவர்களின் பிள்ளைகள் அடங்கிய அமைப்பாகும். ஆனால் இது மிகவும் தளர்வானது. ஒருவரின் உறவுகள் மட்டுமல்லாமல், வேட்டையாடச் செல்வோர், உணவுப் பகிர்வில் பங்குபெறுவோர் போன்றோரும் “குடும்பத்தினர்” எனக் கருதப்படுவர்.
  • தனித்துவமிக்க திருமண முறை:
    இச்சமூகத்தில் திருமணம் என்பது தனிநபர்களின் விருப்பப்படி அமைகிறது. நிச்சயதார்த்தம், வரதட்சணை அல்லது மணக்கொடை போன்ற சடங்குகள் இல்லை. இருவரும் ஒரே குடிலில் வாழத் தொடங்கினால், அது திருமணம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
  • நெகிழ்வான உறவுகள் (Flexible bonds):
    கணவன்-மனைவி இடையே நம்பிக்கையின்மை ஏற்பட்டால், அவர்கள் சகஜமாகப் பிரிந்து விடலாம். இது சமூகத்தில் எந்தவிதமான களங்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. அவர்களது பிள்ளைகள் தாயுடன் வாழ்வது வழக்கமாகும்.
  • குழந்தைகளுக்குக் கூட்டுப் பொறுப்பு: குழந்தைகளின் வளர்ச்சி என்பது அனைவரின் பொறுப்பாகவே கருதப்படுகிறது. அயலவர்கள் கூட குழந்தைகளைக் கவனித்து, வழிகாட்டுவார்கள். இதனால் குழந்தைகள் மிகுந்த சமூகப் பாதுகாப்புடனும் சுதந்திரத்துடனும் வளர்கிறார்கள்.

வீடு அமைக்கும் முறை

இம்மக்களின் வீடுகள் இயற்கையின் ஓர் அங்கமாகவே தோன்றும். இவர்கள் குடில்கள் என்றழைக்கப்படும் சிறிய, எளிய வடிவங்களை வீடுகளாகக் கொண்டு வாழ்கின்றனர். மரக் கிளைகள், இலைகள், புற்கள் ஆகியவற்றைக் கொண்டு குடில் அமைக்கப்படுகிறது. பிசின், கம்பி போன்ற தொழில்நுட்பம் இங்கு இல்லை. மேலும், இவர்கள் குடில்கள் நிரந்தரமானவை அல்ல.

ஒரு இடத்தில் மூன்று வாரம் அல்லது ஒரு மாதம் வரை தங்கிப் பிறகு வேறு இடத்திற்குப் புலம்பெயர்வது வழக்கம். இந்த இடப்பெயர்வு, ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் தீர்ந்துவிடாமல் பாதுகாக்கும் ஒரு சூழலியல் உத்தியாகும். எனவே குடில்கள் எளிதில் அமைக்கவும் அகற்றவும் வசதியாக இருக்கும். இத்தகைய குடில்கள் அமைக்கப்படும் இடம் என்பது சுற்றியுள்ள காடுகளில் உணவு கிடைக்கும் இடத்தைப் பொறுத்தே அமையும். கிழங்குகள், பழங்கள், வேட்டையாடும் விலங்குகள் போன்றவை முக்கிய ஊட்டச்சத்து ஆதாரங்களாக உள்ளன.

ஒரு குடில் சுமார் 4 முதல் 6 பேர் வரை தங்கக்கூடிய அளவில் இருக்கும். பொதுவாக வட்ட வடிவில் இந்தக் குடில்கள் அமைக்கப்படுகின்றன. வீட்டுக்குள் விதிகள் இல்லை. ஒரு குடிலின் உள்ளே தனிமனித இடம் என்கிற கருத்து இல்லை. எல்லோருமே சமமாகவே இருக்கின்றனர். வீடு என்பது உறவுகளின் அமைதி மற்றும் பங்கிடும் இடமாக மட்டுமே கருதப்படுகிறது. ஒரு குடிலுக்கு அருகில் மற்ற குடில்கள் அமைந்திருப்பது வழக்கம். இந்தக் குழுவை “குடும்ப மரத்தின் இலைகள்” (leaves of family tree) என ஒப்பிட்டுப் பேசலாம்.

ஆடை மற்றும் அழகு மரபுகள்

இவர்கள் விலங்குகளின் தோல் அல்லது மரப்பட்டைகளை ஆடையாகப் பயன்படுத்துகிறார்கள். சமீப காலங்களில், அண்டை சமூகங்களுடனான பண்டமாற்று மூலம் கிடைத்த துணிகளையும் அணிகின்றனர். வண்ணமயமான கழுத்தணிகள், கண்ணாடி மணிகள் போன்றவை அழகுக்கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

சமூக அமைப்பு

இம்மக்களின் சமூக அமைப்பு, நவீன உலகின் பல சிக்கல்களைத் தவிர்த்துச் செல்வதுபோல் பார்ப்பவர்களுக்குத் தோன்றும். இங்கு பணம் இல்லை, அதிகாரமோ, நில உரிமையோ இல்லை. இது ஒரு முழுமையான சமத்துவ சமூகம் (Egalitarian Society) என மானுடவியலாளர்களால் கூறப்படுகிறது. ஆனால் ஒருவருக்கொருவர் மேல் மரியாதை, அக்கறை, பங்குபகிர்வு ஆகியவை மிகுந்துள்ளன. இந்த சமூக அமைப்பின் இயற்கை வழிமுறை நம்மை யோசிக்க வைக்கும். மனித உறவுகளில் கட்டாயங்கள் இல்லாமல் சுதந்திரமாக வாழும் இந்தப் பழங்குடி மக்கள் நவீன வாழ்க்கையின் அடிப்படைகளையே கேள்விக்குள்ளாக்குகின்றனர்.

Image

ஒவ்வொரு குழுவும் காடுகளில் தங்கும் இடத்தை அடிக்கடி மாற்றுகின்றது. குறிப்பாக, ஒரு பகுதி மிகவும் வறண்ட நிலமாக மாறினால், புதிய இடமொன்றைத் தேடி இடமாற்றம் செய்வார்கள். இது ஹட்ஸாக்களின் சமூக அசைவுத்தன்மையைக் காட்டுகிறது. நிலத்தில் உரிமை எனது, உனது என்று கிடையாது; அனைவரும் இயற்கையைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுதந்திரம் அதிகம். யாரும் மற்றவரைக் கட்டாயப்படுத்த முடியாது. ஒருவர் குழுவை விட்டு வேறொரு குழுவிற்குச் செல்வதற்கும் முழு சுதந்திரம் உண்டு. திருமணம், பிளவு, குழு மாறுதல் இவை எல்லாம் தனிநபரின் விருப்பத்திற்கே உட்பட்டவை. மிகக் குறைந்த அளவிலான சமூக ஒழுங்குகள் மட்டுமே உள்ளன. ஒருவிதப் புற அழுத்தமோ, தலைமைத்துவ முறைமையோ இங்கு இல்லை. பரம்பரைத் தலைவர்கள் கிடையாது. ஆனால் வயதானவர்கள் மற்றும் அனுபவமிக்கவர்கள் சில நேரங்களில் குழுவிற்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள். முடிவுகள் எடுப்பது என்பது ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே நிகழ்கிறது, பெரும்பான்மையின் அடிப்படையில் அல்ல.

ஒரு குழுவில் பிரச்சனை ஏற்பட்டால், அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசுவார்கள். ஒரு நபர் மீதான குற்றச்சாட்டு இருந்தாலும், அதனை வெளிப்படையான விவாதங்கள் மூலம் தீர்ப்பார்கள்; பெரும்பாலும் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்படும். கடுமையான தண்டனைகள் அரிது; சமூகத்திலிருந்து தற்காலிகமாக விலக்கி வைப்பது ஒரு பெரிய தண்டனையாகக் கருதப்படுகிறது.

கல்வியின் நிலை

இன்றுவரை, பெரும்பாலான ஹட்ஸா குழந்தைகள் படிப்பைத் தொடங்காதவர்களாகவே உள்ளனர். அரசு மற்றும் சில தனியார் அமைப்புகள் இம்மக்களுக்குப் பள்ளிக்கூடங்களை அமைத்தாலும், குழந்தைகள் அவற்றுக்குச் செல்ல விரும்புவதில்லை. அரசுப் புள்ளிவிவரங்களின்படி, 50%க்கும் குறைவான ஹட்ஸா குழந்தைகளே ஆரம்பப் பள்ளியில் சேர்கின்றனர், அவர்களிலும் பெரும்பாலானோர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். இதற்குக் காரணங்கள் பல: கல்வியின் முக்கியத்துவத்தை இவர்களது சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை. அங்கீகரிக்கப்படாத மொழி மற்றும் உள்ளூர் மரபுகளைப் பள்ளிக்கூடங்கள் மதிப்பதில்லை. பள்ளி கட்டிடங்கள் ஹட்ஸா மக்களின் குடியிருப்புகளிலிருந்து மிகவும் தொலைவில் உள்ளன.

மேலும், ஒரு ஹட்ஸா பையன் 7 வயதிற்கு வந்தவுடன் வேட்டையாட அழைத்துச் செல்லப்படுகிறான். ஒரு பெண் குழந்தை கிழங்குகள் தேடவும் வீட்டுப் பொறுப்புகளைப் பகிரவும் கற்றுக்கொள்கிறாள். எனவே கல்விக்கான நேரமே கிடைப்பதில்லை.

பல குழந்தைகள் பள்ளிக்குச் சென்றாலும், பாடங்களின் மொழி (ஸ்வாஹிலி, ஆங்கிலம்) அவர்களுக்குப் புரிவதில்லை. இவர்கள் பேசும் மொழி “ஹட்ஸா” ஒரு தனி மொழியாகையால், அது எந்தப் பள்ளியிலும் கற்பிக்கப்படுவதில்லை.

எதிர்கொள்கின்ற சவால்கள்:

  1. மரபு மற்றும் கல்வி இடையே மோதல்: பள்ளியில் கற்றறிவது, ஹட்ஸா வாழ்க்கை முறைக்கு முற்றிலும் மாறானது. பள்ளிக்குச் சென்ற பின் பிள்ளைகள் காடு, வேட்டை ஆகியவற்றைக் கைவிடத் தூண்டப்படுகிறார்கள். இது தாய்த்தொடர்பு அறுவடை செய்யும் வகையில் செயல்படுகிறது.
  2. பொருளாதார நிலைமை: ஹட்ஸா மக்கள் பணத்தைப் பயன்படுத்தவில்லை. எனவே பள்ளிக்கூடத் தேவையான புத்தகங்கள், பள்ளி உடைகள் போன்றவற்றிற்குச் செலவு செய்வதும் அவர்களுக்குச் சாத்தியமல்ல.
  3. சுற்றுச்சூழல் இடமாற்றம்: வழக்கமான வாழ்விடங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்குக் கல்விக்காகச் செல்லும் ஹட்ஸா பிள்ளைகள், அங்கே பரிச்சயம் இல்லாத சூழலில் மன அழுத்தத்துடன் வாழ்கிறார்கள்.

அரசாங்கத்திற்கும் ஹட்ஸா மக்களுக்கும் இடையேயான போராட்டங்கள்

தான்சானிய அரசாங்கம், நாட்டின் பசுமை நிலங்களைச் சுற்றுலா மற்றும் வேளாண்மைக்குப் பயன்படுத்தும் நோக்கத்துடன் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான பகுதியாக “யாய்டா பள்ளத்தாக்கு” (Yaeda Valley) எனப்படும் ஹட்ஸா மக்களின் பாரம்பரிய வாழ்விடமும் அமைந்துள்ளது. இதனால் நில உரிமை யாருடையது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இம்மக்களுக்குக் காடுகள், புல்வெளிகள் ஆகியவை சுவாசம் போன்றவை. அவை இவர்களின் உணவுக்கிடங்குகள். ஆனால் இந்த நிலங்கள் சட்டப்படி அரசின் சொத்து எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால், கடந்த 50 ஆண்டுகளில் ஹட்ஸா மக்கள் தங்களின் பாரம்பரிய நிலப்பரப்பில் 90%-க்கும் அதிகமான பகுதியை விவசாய விரிவாக்கம், கால்நடை மேய்ச்சல் மற்றும் சுற்றுலா நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் இழந்துள்ளனர்.

அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனமோ இந்த நிலங்களில் வேளாண்மை, வனவளத் திட்டங்கள் நடத்தலாம் என்கிறது. ஆனால் விதிமுறைகள் மீறப்பட்டால், ஹட்ஸா மக்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதுவே போராட்டத்தின் முக்கியமான காரணி.

தனியார் முதலீட்டாளர்களின் தாக்கம்:

சில அரபு நாடுகளிலிருந்து வந்த வேட்டையாடும் சுற்றுலா நிறுவனங்கள், ஹட்ஸா மக்களின் பகுதிகளை வேட்டையாடும் சுற்றுலாத் தலங்களாக மாற்ற முயன்றன. குறிப்பாக, 2007-ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த ஒரு நிறுவனம், ஹட்ஸா நிலத்தை வேட்டையாடும் சுற்றுலாவுக்காகப் பயன்படுத்த அரசிடம் அனுமதி பெற்றது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக இம்மக்களை அப்பகுதியில் வாழ அனுமதிக்காமல், அரசு வெளியேற்ற முயற்சி செய்தது. இதனால் இவர்கள் காலங்காலமாக வாழும் இடத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படும் (“forceful eviction”) அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மக்கள் எதிர்ப்பு:

இதை எதிர்த்து, ஹட்ஸா மக்கள் சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடம் புகார் செய்தனர். சில தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நில உரிமைப் பாதுகாப்புக்காக வழக்குகளையும் தர்ணாக்களையும் நடத்தினர். இந்த எதிர்ப்பின் விளைவாக, அந்த சுற்றுலா ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இது ஹட்ஸா மக்களின் போராட்டத்திற்குக் கிடைத்த ஒரு முக்கிய வெற்றியாகும். இதனால் சில திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

சட்டங்களும் வலைவீச்சும்:

தான்சானிய சட்டங்களில் பழங்குடி மக்களுக்கான சிறப்பு உரிமைகள் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஐ.நா.வின் பூர்வகுடி மக்களின் உரிமைகளுக்கான பிரகடனம் (UN Declaration on the Rights of Indigenous Peoples, 2007), பூர்வகுடி மக்களுக்கு அவர்களின் பாரம்பரிய நிலங்கள், பிரதேசங்கள் மற்றும் வளங்கள் மீது உரிமை உண்டு என்று தெளிவாகக் கூறுகிறது. இந்த சர்வதேச சட்டத்திற்கும், தான்சானியாவின் உள்நாட்டு நடைமுறைக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. ஆனால் இந்தக் கருத்துக்கள் பல இடங்களில் நடைமுறையில் கவனிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“வள வளர்ச்சி என்ற பெயரில் பாரம்பரிய சமூகங்களை அழிக்கக்கூடாது. வளர்ச்சி என்றால் மனிதர்களின் சமத்துவமான முன்னேற்றம். அது கட்டடங்களால் மட்டுமல்ல” என்று பல சமூகப் போராளிகள் கூறினாலும், அது அரைக்கூவலாகவே அரசின் காதில் விழுகிறது.

ஹட்ஸா மக்கள் கல்வியை ஏற்க முடியாதவர்கள் அல்ல. ஆனால் அந்தக் கல்வி, அவர்கள் வாழ்வியலை மதிக்க வேண்டியது அவசியம். மரபும் கல்வியும் இணைவதே, ஹட்ஸா குழந்தைகளுக்கு ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் பாலமாக இருக்கும். இம்மக்களின் நிலங்களுக்குச் சட்ட உரிமை வழங்க வேண்டும். 2011-ஆம் ஆண்டு, சில தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன், ஹட்ஸா சமூகம் முதன்முறையாகத் தங்களின் சில பாரம்பரிய நிலங்களுக்குச் சட்டப்பூர்வமான நில உரிமைகளைப் (customary land titles) பெற்றது. இது ஒரு முன்னோடி நிகழ்வாகும். இதனால் பசுமைச் சுற்றுலாத் திட்டங்களில் அவர்களே வழிகாட்டிகளாக ஈடுபட வழிவகுக்கும்.

மரபு மற்றும் நவீன வளர்ச்சி இணைந்தது போல ஒரு திட்டமிடல் வேண்டும். அதே போல் ஹட்ஸா மக்களுடன் ஆலோசனை இல்லாமல் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படக் கூடாது. பாரம்பரிய வாழ்வுரிமை என்பது வளர்ச்சியின் எதிரியாக இருக்கக் கூடாது. ஏனென்றால், இம்மக்கள் தங்களது இயற்கை வாழ்வியலோடு தொடர விரும்புகிறார்கள். அரசாங்கம் அவர்களை அழிக்காமல், அவர்களோடு இணைந்து வளர வேண்டிய நேரம் இது.

– தீபா ஜெயபாலன்