2023 ஆம் ஆண்டில் வெளியான செனிகல் நாட்டின் வொலோஃப் மொழித் திரைப்படம் இது. மேற்காப்பிரிக்க மக்களின் அவல வாழ்க்கையை, ஓர் ஆவணப்படத்திற்கு ஒப்பான துல்லியத்துடன் இத்திரைப்படம் பதிவு செய்கிறது.
படத்தைப் பார்த்து முடித்ததும், இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான, மிகச் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் இத்திரைப்படம் சேர்க்கப்பட வேண்டும் எனத் தோன்றியது. எத்தனையோ அறமற்ற மாஃபியா வன்முறையை விதந்தோதும் ஹாலிவுட் படங்களை அந்தப் பட்டியலில் வைத்திருக்கிறார்கள்; மட்டியோ காரோன் இயக்கிய இந்த மாஸ்டர் பீஸ் திரைப்படத்தை அந்தப் பட்டியலில் வைப்பதற்கு என்ன தடை இருக்க முடியும் எனத் தோன்றியது.
கதைக்களம்
மேற்காப்பிரிக்க நாடான செனிகலைச் சேர்ந்த இரண்டு பதின்ம வயதுச் சிறுவர்கள் செய்டூ மற்றும் மூசா. இருவரும் உறவினர்கள்; செனிகல் நாட்டின் தலைநகரான டாக்காரில் வசிப்பவர்கள். அது நாட்டின் தலைநகரானாலும், எந்த வசதியுமற்ற கிராமப்புறப் பகுதி போலத்தான் அவர்களின் வாழ்நிலம் காட்சி தருகிறது. ஆண்ட்ராய்டு ஃபோன்கள் வாயிலாக அவர்கள் ஐரோப்பாவைக் காண்கிறார்கள். உலகின் ஐரோப்பியப் பகுதி செல்வச் செழிப்புடன் தங்களுக்கு இனிய வாழ்க்கையை வழங்கக் காத்திருக்கிறது எனக் கருதுகிறார்கள்.
இசையும் கனவும்
தாங்கள் பெரிய பாப் இசைக் கலைஞர்கள் ஆக வேண்டும் என்பது இவர்களின் கனவு. இசை அவர்களுக்கு உயிராக இருக்கிறது. அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் ஊரில் உள்ள குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்குமே இசையும் நடனமும் அவ்வளவு பிடிக்கிறது.
ஊர்த் திருவிழாவுக்கான தயாரிப்புகள் பல நாட்களுக்கு முன்னரே வீடுகளில் தொடங்கிவிடுகின்றன.
அடர் வண்ணங்களில் விதவிதமான அழகிய தலைப்பாகைகளைத் தங்கள் அம்மாக்களுடன் இணைந்து சிறுமிகள் தயாரிக்கிறார்கள். சிறுமிகளின் சுருட்டை முடியை அம்மாக்கள் மிகுந்த சிரத்தையோடும் அன்போடும் நெளிநெளிவாகப் பின்னிக் கட்டுகிறார்கள். திருவிழா தினத்தன்று கண்கவரும் உடைகளை அணிந்து, சிறார்களும் பெரியவர்களுமாக — சிறுவர்கள் வாசிக்கும் இசைக்கு ஏற்ப — மின்னல்வேக நடனத்தை ஆடிக் கொண்டாடி மகிழ்கிறார்கள். செய்டூவின் அம்மாவும் அங்கு அழகாக நடனமாடுகிறார்.
தாய்மையின் கவலை
அன்று இரவு, ‘அம்மா, நீ ரொம்ப அழகா ஆடினம்மா’ என்று செய்டூ அவரிடம் சொல்கிறான்.
‘நிஜமாவா சொல்ற?’ என்று அம்மா மகனிடம் அழகிய வெட்கத்தோடு கேட்கிறார்.
‘ஆமாம்’ என்று மகன் கனிவோடு சொல்கிறான்.
அடுத்து, ‘அம்மா, நான் ஐரோப்பாவிற்குப் போகட்டா? நான் சம்பாதித்து உதவினால் தங்கைகளின் நிலை முன்னேறுமல்லவா?’ என்று தொடங்குகிறான்.
அவனுடைய வார்த்தைகள் அம்மாவுக்குத் தாங்க முடியாத வலியைத் தருகின்றன.
‘இப்படிப் பிழைக்கப் போகும் ஆட்களின் உடல்கள் பாலைவனத்திலும் கடலிலும் கிடக்கின்றன. உனக்குப் போகலாம் என்ற எண்ணம் எப்படி வந்தது?’ என்று அம்மா பயத்திலும் நடுக்கத்திலும் கோபப்படுகிறார்.
‘இதோ பார், நான் உனது தாய்… இதே இடத்தில் எங்களுடன் ஒன்றாக வாழ்ந்து, நாங்கள் சுவாசிக்கும் காற்றைத்தான் நீயும் சுவாசித்தாக வேண்டும்’ என்று கண்டிப்பாகச் சொல்கிறார்.
பயணத்தின் தொடக்கம்
மறுநாள் மூசாவிடம், ‘நாம் போக வேண்டாமே!’ எனச் செய்டூ சொல்ல, அவனோ, ‘நம்மிடம் வெள்ளையர்கள் வரிசையில் நின்று ஆட்டோகிராஃப் வாங்க வேண்டாமா?’ என்று அவர்கள் இருவரும் வளர்த்த கனவை வலுப்படுத்துகிறான்.
இருவரும் இரவோடு இரவாக, குடும்பத்தாருக்குத் தெரியாமல் ஊரை விட்டுப் புறப்படுகிறார்கள். கள்ளப் பாஸ்போர்ட், சொட்டுத் தண்ணீர் கிடைக்காத சகாரா பாலைவனத்தில் ஜீப்பில் ஆபத்தான பயணம், கால்நடையாகப் பல மைல் தூரம் எனத் திரைக்கதை சிறுவர்களுக்கு நிஜ உலகைக் காட்டுகிறது; பார்வையாளர்களுக்கும் தான். அம்மா எச்சரித்த கோரக் காட்சிகளை அந்தச் சிறுவர்கள் நிஜத்தில் காண்கிறார்கள்.
அரசியல் பின்னணி
மேற்காப்பிரிக்காவில் லிபியா உள்ளிட்ட பகுதிகளில் நிலவுகிற சட்டமற்ற நிலை, உள்நாட்டுப் போர்ப் பின்னணியில் மாஃபியாக்களின் கொள்ளை, புதிய அடிமை முறை, லஞ்சம் என ஆப்பிரிக்கக் கண்டத்தில் — ஏகாதிபத்தியம் தன் நலனுக்காக உருவாக்கி வைத்துள்ள — நரகத்தை இத்திரைப்படம் நம் மனதில் ஆழமாகப் பதிய வைக்கிறது.
ஐரோப்பாவுக்குள் நுழைந்துவிட்டால் மிகப்பெரிய இசைக் கலைஞர்கள் ஆகிவிட முடியும் என வெள்ளந்தியாகக் கனவு காணும் இந்த இரண்டு சிறுவர்கள் வாயிலாக, இன்றைய ஆப்பிரிக்காவின் உழைக்கும் மக்களின் வரலாற்றை வலுவாகப் பதிவு செய்யும் படமாக ‘Io Capitano’ திகழ்கிறது. பள்ளிக்குச் சென்றுவிட்டு, தச்சுவேலை, அவர்கள் ஊரில் கிடைக்கிற இன்ன பிற வேலைகளைச் செய்து தங்கள் பயணத்திற்கு காசு சேர்க்கிறார்கள் இரு சிறுவர்களும். செய்டூவின் தாயார் தனி ஆளாகத் தனது குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகிறார். செய்டூதான் அவருடைய குழந்தைகளில் பெரியவன். உழைப்பு, வறுமை — இதுதான் அந்த மக்கள் — அவர்கள் ஊர், நாடு, கண்டம்.
பாலைவனத்தில், கடலில் ஆபத்தான இடப்பெயர்வு பயணத்தில் சிக்குண்ட மக்கள் இவர்கள்.
இழப்பதற்கு ஒன்றும் இல்லாத மக்கள் இவர்கள்.
இவர்களுக்குள் தான் எவ்வளவு ஆழமான அன்பு! நேசம்!
ஆனால், இவர்களை சுரண்டிக் கொழுக்கும் சுரண்டல் முறைக்கோ மனித முகமே கிடையாது. மனித சமூகத்தின் இந்த வரலாற்று உண்மையை மிக ஆழமாகப் பதியவைக்கிறது Io Capitano. அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு மாஸ்டர் பீஸ்.
– நர்மதா தேவி







