தொடர்கள்

பத்திரிகைச் சுதந்திர ஒடுக்கல் தொடங்கியது எப்போது? (ஊடக உலகப் பயணம் – 19)… அ. குமரேசன்

Udaga ulaga payanam

ஊடக உலகப் பயணத்தில் நடுநிலைப் பனிமூட்டக் காட்சிகளைக் கடந்து வந்தோம். அதை விமர்சிக்கிற வேளையில், அவரவர் நிலைப்பாட்டிலிருந்து கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தையும் உரிமையையும் காணாமல் கண்களை மூடிக்கொள்வதற்கில்லை. ஏனென்றால் கருத்துச் சுதந்திரம் ஊடகப் பயணத்திற்குரிய பாதையாகவும் இருக்கிறது. அந்தப் பாதையில் குறுக்கிட்ட சில தடைகளையும் அவை தகர்க்கப்பட்ட கதைகளையும் இப்போது பார்ப்போம்.

தமிழ் மண்ணில் ஒலித்த கருத்துச் சுதந்திரத்திற்கான முதல் குரலாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் நிச்சயமாக அது ஒரு முதன்மையான குரல். நெற்றிக் கண்ணையே திறந்தாலும் குற்றம் குற்றம்தான் என்று ஒலித்த குரல். அதற்காக ஒடுக்குமுறையையும் சந்தித்த குரல். ஆம், நம் நக்கீரன் குரல்தான்.

1,800 ஆண்டுகளுக்கு முன் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் இலக்கணத்தையும் வளர்த்த புலவர்கள் சங்கமாகக் கூடிச் செயல்பட்ட காலம். இன்றைய இலக்கிய மன்றங்களின் முன்னோடியான அந்தச் சங்கத்தில், படைப்பாளிகள் தங்களின் கவிதைகளாகிய செய்யுள்களை வாசிப்பார்கள். அவற்றின் மீது மற்ற புலவர்கள் தங்கள் கருத்துகளைக் கூறுவார்கள். எந்த அளவுக்கு அது சுதந்திரமாக இருந்தது என்றால், அந்தச் சங்கத்தின் புரவலர்களாக நிதி வழங்கிப் பராமரித்த அரசர்களே கூட, அவர்களுக்குப் பிடித்துப் போகிற பாடல்களையே மற்றவர்களும் ஏற்றுப் பாராட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது! அறிவுக்கு மரியாதை!

இறையனார் கவிதை

அந்த முந்நூறாண்டு சங்க காலத்தில் ஓர் ஆளுமைதான் புலவர் நக்கீரன். தன் மனதுக்கு நியாயமெனத் தோன்றும் கருத்தை அஞ்சாமல் வெளிப்படுத்தியவர். அவர் காலத்தின் மற்றொரு புலவரான இறையனார் எழுதிய ஒரு குறுந்தொகைப் பாடல் புகழ்பெற்றது. புகழுக்குக் காரணம் அதன் கவித்துவமான உவமைச் சித்தரிப்பு மட்டுமல்ல, அதன் கருத்தால் ஏற்பட்ட விவாதமும்தான். அந்த விவாதத்தைக் கிளப்பியவர் நக்கீரன்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயில்இயல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே

–இதுதான் அந்தப் பாடல். எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதா? ஆம் சிவபெருமானாக சிவாஜி கணேசன், புலவர் தருமியாக நாகேஷ், பாண்டிய மன்னனாக முத்துராமன் ஆகியோருடன், நக்கீரனாக ஏ.பி. நாகராஜன் நடித்து இயக்கிய ‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் கேட்ட செய்யுள்தான். இதன் பொழிப்புரை:

19 நக்கீரன்

“தேனை தேடித் திரிவதே வாழ்க்கையாகக் கொண்டு, அழகிய சிறகுகளுடன் பறக்கும் வண்டே! நான் கேட்பதற்காக எனக்குப் பிடித்தமானதைச் சொல்லாமல், நீ கண்ட உண்மை என்னவோ அதைச் சொல். மயிலின் சாயலையும், நெருக்கமாய் அமைந்த சீரான பற்களையும் பெற்றுள்ள என் தலைவியின் கூந்தலை விட நறுமணம் மிக்க மலர் ஒன்று இந்த உலகத்தில் இருக்கிறதா?”

வாக்குவாதம்

இதன் கவிதைச் செரிவை எல்லோரும் போலப் பாராட்டிய நக்கீரன், கருத்தை மறுத்தார். யாராக இருந்தாலும் கூந்தலின் நறுமணம் இயற்கையானதாக இருக்க முடியாது, வாசமிகு மலர்களை அணிவதாலும், மணம் கமழும் எண்ணெய் பூசுவதாலும் செயற்கையாக ஏற்பட்டதுதான் அது என்று வாதிட்டார். செய்யுளின் கருத்துடன் உடன்பட்டவர்கள் சுட்டெரிக்கும் சொற்களால் அவரை அர்ச்சனை செய்திருக்கக்கூடும்.

19 நக்கீரன்

பின்னர், பக்தி இலக்கியக் காலத்தின் நீட்சியாக, 16ஆம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவர் தனது ‘திருவிளையாடல் புராணம்’ நூலில் படைப்பாளிக்கு உரிய புனைவுச் சுதந்திரத்தைப் பயன்படுத்தியதில் அந்தக் கதை முழுமையான காவிய வடிவம் பெற்றது. புலவர் இறையனாரை சிவனாக அவதரிக்க வைத்து, தருமியை இறக்கிவிட்டார். மன்னனுக்கு இருந்திருந்தும் அந்தச் சந்தேகம் ஏற்பட, அதைத் தீர்ப்பதற்காக மற்ற புலவர்கள் பாடிய பாடல்களை அவன் ஏற்க மறுக்க, ஆயிரம் பொற்கிழி பரிசு என்ற அறிவிப்பால் துடித்த ஏழைப் புலவர் தருமிக்கு, இறையனார் நேரில் தோன்றி தன் கவிதையைக் கொடுக்க, அதை அவர் சபையில் வாசிக்க, அதில் மயங்கிய மன்னன் பரிசைக் கொடுக்க எழுந்தபோது நக்கீரன் குறுக்கிடுகிறார். அவைக்கு நேரில் வரும் இறையனாரின் கெத்துகளுக்குப் பணியாத நக்கீரன், “சாதாரணப் பெண்களுக்கு மட்டுமல்ல, மன்னனின் இணையர் பாண்டிமா தேவிக்கும், அன்றாடம் நான் வணங்கும் உமையவளுக்குமே கூட கூந்தல் மணம் இயற்கையாக இருக்க முடியாது,” என்று பகுத்தறிவோடு வாதிடுகிறார். இறையனாரின் சீற்றத்தைப் பார்த்து அஞ்சிடாமல், “நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று முழங்குகிறார்.

விமர்சன வெப்பத்தைத் தாங்க முடியாத இறைவன் நெற்றிக் கண்ணைத் திறப்பது, நக்கீரன் பொசுங்கிப் போவது, பின்னர் பாணடியனின் வேண்டுகோளை ஏற்று பொற்றாமரைக் குளத்திலிருந்து நக்கீரனை மீண்டுவரச் செய்வது, “நின் தமிழோடு விளையாடவே வந்தோம்,” என்பதாக சமாளித்து அருள் பாலித்துவிட்டு மறைவது… இன்றைக்கும் ரசிகர்களை ஈர்க்கிற திரைப்படக் காட்சி இது. (நக்கீரனாரை எரித்தது இறையனார் தோற்றுப் போனதன் அடையாளம்தானே?)

உலக அரங்கில்

உண்மையிலேயே நக்கீரன் எதிர் விமர்சனத் தாக்குதலுக்கு உள்ளானதையும், திருவிளையாடல் புராணக் கதையில் இப்படி மீட்கப்பட்டதையும் பற்றிய கருத்து மோதல்கள்… இன்றைக்கும் இவை தொடர்கின்றன. ஆனால், இயற்கை உண்மையைச் சொன்னதற்காக, அதிகார பீடத்தின் கருத்து என்பதால் அதை ஏற்று அடங்கிப் போக மறுத்ததற்காக ஒரு சிந்தனையாளர் வதைக்கப்பட்டார் என்ற செய்தி கிடைக்கிறது.

உலக அரங்கில் இதைப் போன்ற வேறு எடுத்துக்காட்டுகளும் உண்டு. கி.மு. 300ஆம் ஆண்டுக்கு முந்தைய கிரேக்கத்தில் அறிஞர் சாக்ரட்டீஸ், இளைஞர்களுக்கு எதையும் கேள்வி கேட்க ஊக்குவித்ததற்காக நஞ்சு கொடுத்துக் கொல்லப்பட்டார். கி.பி. 1633இன் இத்தாலியில் பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்ற, மத நூலுடன் முரண்படும் அறிவியல் உண்மையை நிறுவியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார் கலிலியோ. 1600இல், பேரண்டம் எல்லையற்றது, சூரியனைப் போல எண்ணற்ற நட்சத்திரங்கள் இருக்கின்றன என்ற உண்மையை உரக்கச் சொன்னதற்காக பொது இடத்தில் தூக்கில் போடப்பட்டார் ஜியோர்டானோ புருனோ

ஊடகம் என்றே அடையாளம் உருவான பிறகு, அதிலே செய்தியைச் செய்தியாக மட்டும் சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே, எதற்காக உன் கருத்தையும் சொல்கிறாய் என்றோ, அரசாங்கம் கொடுக்கிற அதிகாரப்பூர்வமான தகவல்கள் அல்லாத வேறு விவரங்களை ஏன் வெளியிடுகிறாய் என்றோ கேட்டு துன்புறுத்தப்பட்ட செய்திகளும் உண்டு. அந்தத் துன்புறுத்தல்கள் இப்போதும் தொடர்கின்றன.

உலகில் பத்திரிகைச் சுதந்திரம் முடக்கப்படுவது எப்போது தொடங்கியது தெரியுமா? உலகின் முதல் பத்திரிகைகள் வரத் தொடங்கியபோதே ஒடுக்குமுறையும் வந்துவிட்டது.

அரண்மனைக்கு இடைஞ்சலாக

19 பெஞ்ஜமின் ஹாரிஸ்

லண்டனில் ‘டொமஸ்டிக் இன்டலிஜென்ஸ்’ என்ற ஒரு பத்திரிகையை நடத்தி வந்தார் பெஞ்ஜமின் ஹாரிஸ். இயல்பாக அன்று அரண்மனைச் செய்திகள் மிகுதியாக வந்தன. அரசரின் அறிவிப்புகள், வெளிநாட்டு விருந்தினர்கள் வருகை, விழாக்கள் உள்ளிட்டவை செய்தியாகின. எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, 1680ஆம் ஆண்டு வாக்கில், இங்கிலாந்து அரசர் இரண்டாம் சார்லஸ் ஆட்சியில் மக்களின் எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும் செய்தியாக வெளியிடத் தொடங்கினார். கத்தோலிக்கத் திருச்சபைக்குள் நடப்பதாகக் கேள்விப்பட்ட முறைகேடுகளையும் செய்தியாக்கினார்.

அவருடைய நோக்கம், குடிமக்களின் தேவைகளில் அரசரின் நிர்வாகம் தலையிடச் செய்வதுதான். சிலரது அத்துமீறல்கள் குறித்துத் திருச்சபையின் கவனத்துக்குக் கொண்டுவருவதுதான். ஆனால், அவருடைய செயல் அதிகாரத்துக்கு விடப்படும் சவாலாகப் பார்க்கப்பட்டது. மதத்துக்குப் பகைமையான கருத்துகளைப் பரப்புகிறார் என்று எடுத்துக்கொள்ளப்பட்டது. அரசனின் நீதிமன்றத்தில் விசாரணை என்பதாக ஒன்று நடத்தப்பட்டது. சிறைவாசமும் பொது மக்கள் முன்னிலையில் மரச்சட்டத்தில் கட்டிவைத்து அவமானப்படுத்தலும் தண்டனையாக அறிவிக்கப்பட்டன. சார்லஸ் மறைவுக்குப் பிறகு, அவருடைய தம்பி இரண்டாம் ஜேம்ஸ் அரியனை ஏறினார். தீவிர மதப்பற்றாளரான அவர், கத்தோலிக்க சபைக்கு எதிராக புரட்டஸ்டன்ட் மதத்தைப் பரப்புகிற சதி முயற்சியாகச் சித்தரித்தார்.

500 பவுண்டு தண்டத் தொகை விதிக்கப்பட்டது. அன்றைய ஊடகப் பொருளாதாரத்தில் மிகப் பெரியதான அந்தத் தொகையைச் செலுத்தும் வரையில் சிறையில் அடைக்க நீதிமன்றம் ஆணையிட்டது. தண்டத் தொகை செலுத்த வழியில்லாத பெஞ்ஜமின் ஹாரிஸ் நண்பர்கள் உதவியாலி சிறையிருந்து தப்பித்து, குடும்பத்துடன் ரகசியப் பயணம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றார். அப்போது அந்த நாடு பிரிட்டனின் காலனியாதிக்கத்தில்தான் இருந்தது.

மாறிய இடத்தில் மாறாத ஈடுபாடு

அங்கே பாஸ்டன் நகரில் குடியேறி, ஒரு பதிப்பகத்தை நடத்திவந்த அவரால் தனது பத்திரிகையாளர் கைகளை நீண்ட நாட்கள் கட்டிப் போட முடியவில்லை. ‘பப்ளிக் அக்கரன்ஸ்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அமெரிக்காவில் பல பக்கங்கள் கொண்டதாக வெளிவந்த முதல் பத்திரிகை அதுதான்.

பத்திரிகை வரத் தொடங்கிய பின் அவரால் அடக்க ஒடுக்கமாக வம்பு தும்பில்லாத செய்திகளை மட்டும் வெளியிட்டுக்கொண்டிருக்க முடியவில்லை. பிரெஞ்சு மன்னரைப் பற்றியும், பிரட்டிஷ் ராணுவத்தில் பழங்குடியினர் சேர்க்கப்பட்டது பற்றியும், திருச்சபை வளாகத்திற்குள் பாலியல் அத்துமீறல்கள் நடந்தது பற்றியும் அந்தப் பத்திரிகையில் செய்திகள் வந்தன. நேரடியாக அதைக் கூறி முடக்காமல், உரிய முறையில் உரிமம் பெறாமல் பத்திரிகை நடத்துவதாகக் கூறி, தொடங்கப்பட்ட நான்கே நாட்களில் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட இதழ்கள் எரிக்கப்பட்டன.

நக்கீரன்களும் பெஞ்ஜமின்களும் சந்தித்துக்கொண்ட புள்ளியாகிய கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறையின் தடங்கள் இன்னும் விரிகின்றன. இது தொடர்பாக ‘எல்லைகள் இல்லா செய்தியாளர்கள்’ (ஆர்எஸ்எஃப்) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை உள்ளிட்ட விவரங்களை இனிமேல் காண்போம்.

தொடரும்

முதல் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-1/
இரண்டாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-2/
மூன்றாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-3/
நான்காவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-4/
ஐந்தாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-5/
ஆறாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-6/
ஏழாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-7
எட்டாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-8
ஒன்பதாவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-9/
பத்தாவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-10/
பதினொராவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-11/
பன்னிரண்டாவது கட்டுரை: https://maattru.in/2025/09/udaga-ulaga-payanam-12/
பதிமூன்றாவது கட்டுரை: https://maattru.in/2025/09/udaga-ulaga-payanam-13/
பதிநான்காவது கட்டுரை: https://maattru.in/2025/10/udaga-ulaga-payanam-14/
பதினைந்தாவது கட்டுரை: https://maattru.in/2025/11/udaga-ulaga-payanam-15/
பதினாறாவது கட்டுரை: https://maattru.in/2025/11/udaga-ulaga-payanam-16/
பதினேழாவது கட்டுரை: https://maattru.in/2025/12/udaga-ulaga-payanam-17/
பதினெட்டாவது கட்டுரை: https://maattru.in/2026/01/udaga-ulaga-payanam-18/