தொடர்கள்

நடுநிலை என்றொரு கோட்பாடு… நடப்பு நிலையில் அது படும்பாடு… (ஊடக உலகப் பயணம் – 9) – அ. குமரேசன்

ஊடக உலகப் பயணம் – 9

ஊடகவியலில் ஒரு முக்கியமான, ஆனால் மிக நுட்பமான ஒரு கோட்பாடுதான் “நடுநிலை”. ஆகப் பெரும்பாலான பத்திரிகைகளும் செய்தித் தொலைக்காட்சிகளும் இணையத்தள ஏடுகளும் தங்களைப் பற்றிய அறிமுகத்தில் நடுநிலை என்றே அடையாளப்படுத்துகின்றன. அரசியல் கட்சிகளும் குறிப்பிட்ட இலக்குகளோடு செயல்படும் அமைப்புகளும் நடத்துகிற ஊடகங்கள் அவ்வாறு சொல்லிக்கொள்வதில்லை. தொலைக்காட்சி விவாதங்களில், நெறியாளுநர் கூர்மையான கேள்வி ஒன்றை வைத்துவிட்டால், சமூக ஆர்வலர், வலதுசாரி சிந்தனையாளர் எனப் பற்பல முகம் காட்டுகிற, ஆனால் ஒரே கூடாரத்தைச் சேர்ந்தவர்கள், “அதெப்படி நீங்கள் நடுநிலையாக இல்லாமல் அவர்கள் தரப்புக்கு ஆதரவாகக் கேட்கலாம்,” என்று கோபப்படுவதுண்டு, சில நேரங்களில் எழுந்து போவதுமுண்டு.

9 நடுநிலை 1

பொதுமக்களிடையேயும் நடுநிலை குறித்த ஈர்ப்பு இருக்கிறது. தங்களுக்குப் பிடித்தமான ஒரு பத்திரிகையைப் பற்றிப் பேசும்போது, “அவர்களுடைய செய்திகள் எப்போதும் நடுநிலையாக இருக்கும்,” என்று சொல்வதைக் கேட்கலாம். ஏதாவது ஒரு செய்தியால் பாதிக்கப்படுகிறவர்கள், “ஊடகம் என்றால் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டாமா,” குமுறுவதைப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் மக்களிடையே பரவலாக விற்பனையாகும் ஒரு நாளேடு முகப்புப் பக்கத்தில் பெயருக்குக் கீழே “தேசிய நடுநிலை நாளேடு” என்ற வாசகத்தைப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்தது. ஒரு தொலைக்காட்சி நிறுவனம் தனது தற்போதைய விளம்பரம் ஒன்றை, “பிரச்சனைன்னு வந்துட்டா நாம இந்தப் பக்கம் நிற்கணுமா,  அந்தப் பக்கம் நிற்கணுமா, இல்லை நடுநிலையா நிற்கணுமா,“ என்று தொடங்கி, “மொத்தத்துல மக்கள் பக்கம் நிற்கணும்,” என்று முடிக்கிறது.

விவாதப் பொருள்

ஊடகங்களின் நடுநிலை விவாதத்துக்குரிய கருப்பொருளே. பொதுவாக, ஒரு குறிப்பிட்ட கொள்கை அல்லது கண்ணோட்டத்தின் சார்பு இல்லாமல், தகவல்களை உள்ளது உள்ளபடி வழங்குவது நடுநிலை என்று  கருதப்படுகிறது. ஒரு நடுநிலையான செய்தி நிறுவனம் எந்தவொரு அரசியல் கட்சி, அமைப்பு அல்லது தனி மனிதரின் செல்வாக்கிற்கும் உட்படாததாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. நேர்மையாகவும் சார்பற்ற தன்மையுடனும் செய்திகளை வழங்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்கங்கள் சார்ந்த ஏடுகளின் வாசகர்கள் கூட “பொதுவான” “நடுநிலையான”  செய்திகளுக்காக வணிக அடிப்படையிலான பத்திரிகைகளை நாடுகிறார்கள். அப்படியானால்  அவர்கள் இயக்க ஊடகங்களைத் தொடர்வது ஏன்? குறிப்பிட்ட நிகழ்வுகள் தொடர்பாக இயக்கத்தின் பார்வை என்னவென்றும், பிரச்சினைகளில் இயக்கத்தின் நிலைப்பாடு என்னவென்றும் தெரிந்துகொள்வதற்காகவே அவ்வாறு தொடர்கிறார்கள். அவர்களுக்குச் செய்திகளும் தேவை, கண்ணோட்டங்களும் தேவை.

9 நடுநிலை 2

உண்மையாகவே ஊடகங்கள் நடுநிலையோடு செயல்படுகின்றனவா? அந்த நடுநிலைக்கான அளவுகோல் என்ன? முக்கியமான மூன்றாவது கேள்வி – நடுநிலையாக இருக்கத்தான் வேண்டுமா?

அரசியலை எடுத்துக்கொண்டால், எல்லாக் கட்சிகளின் செய்திகளையும்  கொடுப்பது ஒருவகையான நடுநிலை. இதை விரிவுபடுத்தினால்.  அனைத்து மதங்கள் சார்ந்த செய்திகளையும் வெளியிடுவது, அனைத்துப் பிரிவு மக்களின் செய்திகளையும் வெளியிடுவது ஆகியவையும் நடுநிலைதான். இரு தரப்பினர் தொடர்பான ஒரு நிகழ்வைப் பற்றிய செய்தியில் அந்த இர தரப்பினர் கூறுகிற நியாயங்களையும் வெளியிடுவது நடுநிலைதான்.

வாசகரிடம் தள்ளுவது நடுநிலையா?

பெரும்பாலான ஊடகங்கள் இதில், அனைத்துத் தரப்பினரிடமும் சென்றால்தான் வணிகத்தில் தாக்குப் பிடிக்க முடியும் என்பதால், நடுநிலையைக் கடைப்பிடிக்கவே செய்கின்றன. அந்தக் கட்சியின் தலைவர் பேச்சை வெளியிட்டது போலவே இந்தக் கட்சியின் தலைவர் பேச்சையும் வெளியிட்டிருக்கிறோம் பாருங்கள் என்று காட்டுவார்கள். அதில் உண்மையும் இருக்கும்.

இந்த வகையான நடுநிலை எந்த அளவுக்குப் போகும் என்றால், ஒரு கோவில் விழாவில் வழிபடுவது தொடர்பாக இரு பிரிவு மக்களிடையே மோதல் ஏற்படுகிறது என்றால், அந்தப் பிரிவினர் என்ன சொல்கிறார்கள் என்றும் இந்தப் பிரிவினர் என்ன சொல்கிறார்கள் என்றும் சம அளவில் வெளியிடுவார்கள். எந்தப் பிரிவினர் கூறுவதில் நியாயம் இருக்கிறது என்று முடிவுக்கு வருவதை வாசகர்களிடம் விட்டுவிடுவார்கள்! இதை நடுநிலை என்று சொல்ல முடியுமா?

சில ஊடகங்கள் ஒரு தரப்பு நியாயத்தை மட்டுமே அல்லது ஒரு தரப்பு நியாயத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செய்தி வெளியிடும். கட்சி சார்ந்த ஊடகங்கள் மட்டுமில்லாமல், கட்சி சார்பற்றதாகவும் நடுநிலை என்றும் தங்களை அறிவித்துக்கொண்டுள்ள ஊடகங்களும் அப்படி ஒரு பக்கச் சார்போடு செய்திகளை வெளியிடுவதுண்டு. 

9 நடுநிலை 3

பக்கச் சார்பற்ற தன்மையோடு செயல்படுவது, தகவல்களின் உண்மைத் தன்மையை சரிபார்த்து உறுதிப்படுத்திக்கொண்டு வெளியிடுவது, வெளிப்படைத் தன்மையோடு முழுமையான விவரங்களைப் பகிர்வது, குறிப்பிட்ட  ஒரு பிரச்சினையில் பலதரப்பினரின் பின்னணிகளையும் கருத்துக்களையும் அளிப்பதன் மூலம் வாசகர்கள் தெளிவான முடிவுக்கு வர உதவுவது – இவையெல்லாம் நடுநிலைக்கான அளவுகோல்கள் என்ற பொதுவான வழிகாட்டல்கள் இருக்கின்றன. ஊடகத் துறைக்கான அறக் கோட்பாடுகளைப் பின்பற்றுவது, அதில் தனி மனித உரிமையைக் காப்பது, வன்முறை தூண்டப்பட்டுவிடாமல் தவிர்ப்பது போன்றவையும் நடுநிலைக் கோட்பாடுகளில் இணைகின்றன.

ஆமாம், ஆனால்…

“ஊடகங்கள் உண்மையிலேயே நடுநிலையோடு செயல்படுகின்றனவா என்று கேட்டால், கோட்பாட்டளவில் ஆம் என்று சொல்லலாம். ஆனால் நடைமுறையில் அது சவாலானது.” –இவ்வாறு, இளம் இதழியர்களாளர்களுடனான ஒரு கலந்துரையாடலில் மூத்தவர்கள்   கூறியது நினைவுக்கு வருகிறது. “ஊடகங்கள் சுதந்திரத்தையும் நடுநிலைத்துவத்தையும் குறிக்கோள்களாகக் கொண்டிருக்கின்றன. ஆனால், உரிமையாளர்களின் நிலைப்பபாடுகள், விளம்பரம் தருகிறவர்களின் எதிர்பார்ப்புகள், அரசியல் சார்பு நிலைகள், சமூகப் பாகுபாடுகள் போன்றவை  சுதந்திரம், நடுநிலை என்ற குறிக்கோள்களைப் பாதிக்கின்றன,” என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.

“இதற்கு உதாரணமாக ஒரே நிகழ்வை வெவ்வேறு சேனல்கள் மாறுபட்ட கோணங்களில் வெளிப்படுத்துவதைக் கவனிக்கலாம். ஒரு செலக்டிவ் நியூட்ராலிட்டி (தேர்ந்தெடுக்கப்பட்ட நடுநிலைத்துவம்) கடைப்பிடிக்கப்படுகிறது. எந்தச் செய்திகளுக்கு முன்னுரிமை  தருகிறார்கள், எவற்றைத் தவிர்க்கிறார்கள் என்பதில் அவர்களின் நடுநிலைத்துவம் வெளிப்படும்,”  என்றும் நண்பர்கள் பகிர்ந்துகொண்டார்கள்.

நடுநிலைத்துவத்தின் உயிர்

உண்மையை அடிப்படையாகக் கொண்ட இதழியலில் நிகழ்வுகளை உரிய ஆதாரங்களுடன் வெளியிடுவது ஒரு நெறி. இங்கே சமநிலை என்பதை விட உண்மையே முன்னிறுத்தப்பட வேண்டும். இரு கட்சிகளையும் சமமாக முன்வைப்பதல்ல, உண்மையைத் துணிந்து சொல்வதில்தான் நடுநிலைத்துவத்தின் உயிர் இருக்கிறது.

இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நீதிமன்றத்திற்குள் செல்வோம். பணத்தைத் திருடிவிட்டதான புகாரில் ஒரு வழக்கு விசாரிக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். நீதிபதி என்ன செய்வார்? புகார் அளித்தவர், குற்றம் சாட்டப்பட்டவர் இருவருக்கும் சம வாய்ப்பளித்து, இருவர் சொல்வதையும் நடுவர் என்ற முறையில் நடுநிலையோடு கேட்பார். விசாரணை முடிவில்,  இருவரில் ஒருவர் சொல்வதுதான் உண்மையாக இருக்கும் என்பதால், அவருக்கு சாதகமான தீர்ப்பையே அளிப்பார். புகாரில் உண்மை இருக்குமானால் குற்றம் செய்தவருக்கும், உண்மையில்லை என்றால் பொய்யாகப் புகார் அளித்தவருக்கும் தண்டனையை அறிவிப்பார். அதுதான் அந்த வழக்கிற்கான நீதி. மாறாக, குற்றம் சாட்டியவருக்கும் இரண்டாண்டு சிறை, குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இரண்டாண்டு சிறை என்று இருவருக்கும் நடுநிலையாகத் தீர்ப்பளிப்பாரானால், அவருக்கு எத்தனை ஆண்டு என்று மக்கள் பேசுவார்கள் இல்லையா?

இது ஊடகவியலுக்கும் பொருந்தும். குறிப்பிட்ட ஒரு பிரச்சினை  தொடர்பாக இரு தரப்பினரிடமும் விசாரித்து உண்மைகளைச் சேகரிப்பதில் நடுநிலை இருக்க வேண்டும். செய்தியாகத் தொகுத்தளிக்கிறபோது, இரு தரப்பினரும் என்ன சொல்கிறார்கள் என்று நேர்மையாகப் பதிவு செய்ய வேண்டும். எந்தத் தரப்பில் நியாயம் இருக்கிறதோ, அல்லது எந்தத் தரப்பில் நியாயம் இருப்பதாக  ஊடகவியலாளர் கருதுகிறாரோ, அந்த நியாயத்தைத் தயக்கமின்றி உரைக்க வேண்டும். அதாவது, செய்தியில் நடுநிலை, கருத்தில் சொந்த நிலை.

நம்பகமான அளவுகோல்

ஆகவே, குறிப்பிட்ட ஊடகத்தில் நடுநிலைத்துவத்தின் உயிர் இருக்கிறதா என்று அறிவதற்கு வர்க்கம், வர்ணம், பாலினம் ஆகியவை தொடர்பான வெளிப்பாடுகளின் நிலை எப்படி இருக்கிறது என்று உள்வாங்குவதே நம்பகமான வழி. மாதிரிக்கு சில வெளிப்பாடுகளைப் பார்க்கலாம்.

இவ்வாண்டு ஜூலை மாதம் 9 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு, தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்திருந்தது. பெரிய நிறுவனங்களையும் சிறு நிறுவனங்களையும் சார்ந்த நிரந்தரத் தொழிலாளர்களும், ஒப்பந்தத் தொழிலாளர்களும், தினக்கூலித் தொழிலாளர்களுமாகக் கிட்டத்தட்ட 25 கோடிப்பேர் அதில் பங்கேற்றார்கள். பல நாளேடுகளில் அது ஒரு சிறிய செய்தியாக வந்தது. அதில் அத்தனை கோடிப் பேர் பங்கேற்றது மறைக்கப்பட்டிருந்தது. சில பத்திரிகைகளில் அப்படியொரு போராட்டம் நடந்ததே மறைக்கப்பட்டிருந்தது.

9 நடுநிலை 4

புதிதாகக் கட்சி தொடங்கிய நடிகர் விமானப் படிக்கட்டிலிருந்து தாவிக் குதித்து இறங்கியது, சாலைப் பயணத்தில் இரு பக்கமும் நின்றிருந்த மக்களைப் பார்த்துக் கையசைத்தது, மேடையில் வேகமாக ஏறியது, மைக் முன்பாக நின்று பேசுவது என ஒன்று விடாமல் காட்டியதுடன், திரும்பத் திரும்பவும் அதை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் அந்தப் போராட்டத்தையொட்டி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை மட்டும், ஒரு முறை மட்டும், காட்டிவிட்டு முடித்துக்கொண்டன. இது, எந்தச் செய்தி கவர்ச்சிகரமாக அதிகம் பேரைப் பார்க்க வைக்கும் என்ற மதிப்பீட்டிலிருந்து வந்ததாக எடுத்துக்கொள்ள முடியுமா? தொழிலாளர்கள் அணி திரள்வதற்கு எதிரான முதலாளிகளுடைய வர்க்கப் பார்வையிலிருந்தே வந்தது.

கணிசமான மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றிருக்கிற நடிகரின் அரசியல் செயல்பாடு என்ற முறையில் அவருடைய மாநாடு பற்றிய செய்திக்கு உரிய இடம் அளிக்கப்படுவதில் தவறில்லை. ஆனால், ஒரு சினிமாவுக்கு கதை பேசப்பட்டது,  பூஜை போடப்பட்டது, பல ஊர்களிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது, இசை சேர்க்கப்பட்டது, திரையரங்குகள் முடிவானது, வெளியீட்டுத் தேதி (இடையிடையே படப்பிடிப்புத் தளத்தில் பெரிய நடிகர் தரையிலேயே படுத்து ஓய்வெடுத்தது, உடன் நடிக்கும் பெண்ணுக்கு அறிவுரை கூறியது) என திரும்பத் திரும்பச் செய்திகள் வெளியிட்டு அந்தப் படத்தை “புரமோட்”   செய்வார்கள். அதே போன்ற வணிக வழிமுறை குறிப்பிட்ட நடிகரின் கட்சிச் செய்தியிலும் கடைப்பிடிக்கப்படுவது அந்தக் கட்சியை “புரமோட்” செய்கிற வேலையன்றி வேறென்ன?

ஆனால், உழைப்பாளி மக்களின் முக்கியமான, தங்களுடைய வேலைக்கே கூட ஆபத்து ஏற்படக்கூடும் என்ற நிலையிலும் துணிச்சலான போராட்டத்துக்கு ஏன் இதே முக்கியத்துவம் தரப்படவில்லை? இத்தனைக்கும், வழக்கமான தேவைகளைப் பின்னால் வைத்து, எதிர்காலத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னால் நிறுத்தி நடைபெற்ற போராட்டம் அது.

ஒரு பெரிய நிறுவனத்தில் தொழிலாளர்களின் பிடிவாதத்தால் பேச்சு வார்த்தை தோல்வி, வேலை நிறுத்தம் தொடங்கியது, இயந்திரங்கள் ஓடவில்லை, உற்பத்தி பாதிப்பு, பொருளாதார இழப்பு என்றுதான் செய்திகள் வெளியிடப்படும். கோரிக்கைகளை ஏற்க மறுத்த நிர்வாகத்தின் பிடிவாதத்தால் இதெல்லாம் ஏற்பட்டது என்ற உண்மை இருட்டடிக்கப்படும். தொழிலாளர்கள் தரப்பில் என்ன சொல்லப்படுகிறது என்று எழுதவோ, காட்டவோ மாட்டார்கள். இன்னமும் தொடர்கிற இந்தப் போக்கிற்குக் காரணம், மூலதனக்காரர்களின் வர்க்கப் பாசமே அல்லவா? எங்கே போனது நடுநிலை?

இதில் ஊடக நெறியை உயர்த்திப் பிடிக்கிற ஊடகங்கள் இருக்கவே செய்கின்றன. எண்ணிக்கையில் அவை குறைவு.

வர்க்க வேறுபாடு சார்ந்த கண்ணோட்டம், முதலாளித்துவம் கால் பரப்பியுள்ள எல்லா நாடுகளுக்கும் பொதுவானது. இந்திய சமுதாயத்திற்கே உரிய வர்ணப் பிரிவினை, உலகளாவிய, பாலினப் பாகுபாடு ஆகிய கண்ணாடிகள் வழியாக ஊடகங்களை அடுத்துக் காணலாம்.

தொடரும்

முதல் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-1/
இரண்டாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-2/
மூன்றாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-3/
நான்காவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-4/
ஐந்தாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-5/
ஆறாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-6/
ஏழாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-7
எட்டாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-8