தொடர்கள்

சமநிலைப் பாசாங்கை மீறி சாதனை செய்த செய்திகள்… (ஊடக உலகப் பயணம் – 10)… அ. குமரேசன்

ஊடக உலக பயணம் 10

ஊடகங்களின் நடுநிலையை மதிப்பிடுவதற்கு  அவர்கள் எல்லாக் கட்சிகளின் செய்திகளையும் தருகிறார்களா,  பிரச்சினைகளில் அனைத்துத் தரப்பினரின் வாதங்களையும் வெளியிடுகிறார்களா என்று பார்த்தால் போதாது. அது முக்கியமானதுதான் என்றாலும் அது மட்டுமே அளவுகோல் அல்ல.  எந்தப் பக்கம் நியாயம் இருப்பதாக எண்ணுகிறார்களோ அதைத் தெளிவாகச் சொல்வதில் நடுநிலை முழுமையடையும்.

சில முன்னணிப் பத்திரிகைகளில், ஒரு புதிய சர்ச்சை கிளம்புகிறபோது, இரு தரப்பிலும் சமமான எண்ணிக்கையில் கருத்துக் கேட்டு வெளியிடுவார்கள். எடுத்துக்காட்டாக, திரையுலகத் தகராறு ஒன்று வருகிறதென்றால், இந்தப் பக்கம் ஐந்து பேர், அந்தப் பக்கம் ஐந்து பேர் கருத்துகளைத் தொகுத்து ஒரு “சமத்துவம்” பேணியிருப்பார்கள். உண்மையிலேயே எந்தத் தரப்பில் நியாயம் இருக்கிறதென்று வாசகர்களுக்குப் போய்ச் சேராது.

ஊருக்குள் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுமானால், காவல்துறையினர் இரண்டு பிரிவுகளிலிருந்தும் பத்துப் பத்து பேரைக் கைது செய்வார்கள். அதைப் போன்றதுதான் இதுவும்! ஊருக்குள் மோதல் தற்காலிகமாக அடங்கினாலும், பிரச்சினை தீர்வின்றித் தொடரும். ஊடகங்களின் இப்படிப்பட்ட நடுநிலையால் உண்மையையும் நியாயத்தையும் மக்கள் தெரிந்துகொள்ள முடியாமல் போகும்.

நடுநிலையின் முழுநிலை

இரு தரப்பு வாதங்களையும் சமப்படுத்தாமலே, தீவிரமாகப் புலனாய்வு செய்து, எந்தப் பக்கம் நியாயம் இருக்கிறதோ அதை வலுவாகச் சொல்வதில்தான் நடுநிலை முழுநிலையை அடைகிறது. ஒரு  குற்றம் நடக்கிறபோது, நேர்மையான புலனாய்வாளர் முனைப்போடு இறங்கி விசாரிப்பார்,  குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் நிறுத்துவார். பாதிக்கப்பட்டவர் தரப்பில் யாரையும் கைது செய்ய மாட்டார். அவர் நடுநிலை தவறிவிட்டதாக விமர்சிக்க இயலாது.

இரண்டு பக்கமும் சொல்வது என்பது ஒரு தவறான, எளிமைப் படுத்தப்பட்ட புரிதலே. நடுநிலை தொடர்பான விவாதம் ஒன்றில் பீபீசி நிறுவனத்தின் முன்னாள் ஆசிரியரும் தலைமை இயக்குநருமான மார்க் தாம்ஸன் கூறியது கவனிக்கத் தக்கது: “பாகுபாடின்மை என்பது ஒவ்வொரு கருத்துக்கும் சம நேரம் வழங்குவதல்ல.  ஆதாரங்களை எடைபோடுவதும், கடும் கேள்விகளைக் கேட்பதும், உண்மை எங்கே இருக்கிறது என்று தெளிவாகக் கூறுவதுமேயாகும்.”

2010இல் நடந்த ஒரு கருத்தரங்கில் “செய்திகள், நடப்பு நிகழ்வுகளின் எதிர்காலம்: பீபீசி, ஃபாக்ஸ்  அல்லது மூன்றாவது வழி?,” என்ற தலைப்பில், நடுநிலை தொடர்பாகப் பேசிய அவர், பிரிட்டனின் பீபீசி, அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் ஆகிய இரண்டு பெரும் நிறுவனங்களின் வழிமுறைகளை ஒப்பிட்டு இவ்வாறு கூறினார். மூன்றாவது வழியாக அவர் எதைக் குறிப்பிட்டார் எனத் தெரியவில்லை. ஆனால் இன்று இணைய வழி சமூக ஊடகங்களின் தாக்கம் வெளிப்படை. 

போலிநிலை  

இரண்டு தரப்பினருக்கும் ஒரே அளவிலான காலம் ஒதுக்கி, நிகரான எண்ணிக்கையில் கருத்துகளை வெளியிடுவது  போலியான சமநிலை என்று ஊடக அக்கறையாளர்கள் கூறுகிறார்கள். இதற்கு சாட்சியமாக ஒரு செய்தியைப் பார்க்கலாம்:

10 போலிச் சமநிலை 1

1970களில், புகைத்தல், மூக்குப்பொடி போடுதல் உள்ளிட்ட புகையிலைப் பழக்கங்கள் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கின்றன என்ற, உறுதிப்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்தன.   புகையிலைப் பொருள்களுக்கான உலகச் சந்தை தாதாக்களான நிறுவனங்கள், “இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை,” என்று வாதிட்டன. ஏற்படக்கூடிய பாதிப்பு மிகக் குறைவுதான் என்றும், சில உணவுகள், பயிற்சிகளால் அதைக் கட்டுப்படுத்தலாம் என்றும் சுற்றுக்கு விடப்பட்டன (நம் ஊரிலும், புகைக்கிறவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிட்டால், மூச்சுப் பயிற்சி செய்தால் நுரையீரல் பாதிக்கப்படாது என்று பரப்பப்பட்டது!).

10 போலிச் சமநிலை 2

அன்றைய பல ஊடகங்கள் புகையிலை நிறுவனங்களுக்குச் சாதகமான வாதங்களையும் வெளியிட்டு  “சமநிலை” காத்தன. மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய அத்தகைய செய்தி நடுநிலையாகிவிடாது. அது போலிச் சமநிலையே.

புதிய சொல்லாடல்! 

இதோ மற்றொரு சாட்சி: அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை “மெக் கார்தி காலம்” என்பார்கள். நாடாளுமன்ற மேலவை (செனட்) உறுப்பினராக 1947 முதல் பத்தாண்டுகள் இருந்தவர் ஜோசப் மெக் கார்தி. பொதுவுடைமைக் கோட்பாட்டை வெறுத்தவரான அவர், அதை ஒரு இயக்கமாகவே நடத்தினார்.’

Joseph mccarthy
Sen. Joseph McCarthy (R-Wisc.) talks at a news conference in Washington, Feb. 11, 1948, when he discussed public housing legislation. He predicted that Congress will set up a long range housing program this session. (AP Photo/Herbert K. White)

சோவியத் யூனியனின் சோசலிச மாற்றங்களைக் கண்டு அரண்டு போனவர்கள் அமெரிக்காவிலும் செங்கொடி உயர்ந்துவிடுமோ என்று அஞ்சியவர்களாக, கம்யூனிச பீதியைப் பரப்பினர். ஊழல்களை எதிர்ப்பவர்கள், மனித உரிமைக்காக வாதாடுகிறவர்கள், பாகுபாடுகளைக் கண்டிக்கிறவர்கள் ஆகியோரையும் கம்யூனிஸ்ட்டுகள் என்று முத்திரை குத்தி, விசாரணை நடத்தினார்கள். அந்தக் கொடுமையான விசாரணைகளில் அரசாங்க  அலுவலர்கள், தொழிலாளர் சங்கத்தினர், எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் உள்ளிட்டோர் வேட்டையாடப்பட்டார்கள். பலர் வேலைகளை இழந்தார்கள், சமூகப் புறக்கணிப்புகளுக்கு உள்ளானார்கள். அந்த வேட்டைகளுக்கு மெக் கார்தி தலைமை தாங்கினார்.

பல பத்திரிகைகள் அவர் சொன்னதையும், விசாரணைகளில் அவர் அறிவித்த தீர்ப்புகளையும் முன்னிலைப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுடைய விளக்கங்களையும் தொட்டுக்கொண்டன. அப்போது, ‘சிபீஎஸ்’ ஊடக நிறுவனத்தின் எட்வர்ட் மரோ, முனைந்து பல ஆவணங்களைத்   தேடியெடுத்தார், குற்றச்சாட்டுகள் புழுகு மூட்டையென வெளிச்சப்படுத்தினார். நடுநிலையைப் போர்த்திக்கொள்ளாமல் உண்மையின் பக்கம் நிற்பதே உண்மையான நடுநிலை என்று நிறுவினார்.

மக்களை வெகுவாகக் கவனிக்க வைத்த “ஸீ இட் நௌ” என்ற அவரது நிகழ்ச்சித் தொடரால், மெக் கார்தியின் செல்வாக்கு வீழ்ந்தது. அவருடைய மட்டுமீறிய குற்றச்சாட்டுகளுக்கும் விசாரணைகளுக்கும் நாடாளுமன்றம் கண்டனம் தெரிவித்தது. போலியான தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளைப் பரப்பி எதிரிகளைத் தாக்குகிற கேவலமான உத்தியைக் குறிப்பிடுவதற்கு “மெக் கார்தியிசம்” என்ற சொல்லாடலே உருவாகிவிட்டது!

இதழியல் சுதந்திரம்

பிரிட்டனிலிருந்து அச்சு ஊடகமாகவும் மின்னிதழாகவும் வெளியாவது ‘தி கார்டியன்’. சுரண்டல்கள், பாகுபாடுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான செய்திகளைத் தேடுவோருக்குத் துணையாகிற அந்த ஏடு, சுதந்திரமான, தாராளவாத, மைய–இடது சார்புள்ள ஊடகம் என்ற அடையாளத்தைப் பெற்றுள்ளது. எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கும் சொந்தமில்லாத, வாசகர்களின் நன்கொடைகளைப் பெருமளவுக்குச் சார்ந்திருக்கிற அந்த ஊடகம், ஸ்காட் ட்ரஸ்ட் என்ற அறக்கட்டளை அமைப்பின் பொறுப்பில் 1821 முதல் வந்துகொண்டிருக்கிறது. 

10 போலிச் சமநிலை = கார்டியன்
BATH, UNITED KINGDOM – NOVEMBER 08: Copies of the print edition of The Guardian newspaper are displayed in a newspaper stand on November 8, 2024 in Bath, England. Following the US election the left leaning Guardian has announced it will no longer post any content on the US online social media and social networking site ‘X’ (formerly known as Twitter). Elon Musk who describes himself as “free speech absolutist” publicly endorsed Donald Trump and has recently been accused of allowing his social media platform to spread misinformation. (Photo by Anna Barclay/Getty Images)

இந்த நிதிச் சுதந்திரத்தின் காரணமாக, தனது இதழியல் சுதந்திரத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள இந்த ஏட்டின் ஆசிரியர் குழுவினரும் செய்தியாளர்களும் இதர ஊழியர்களும் ஊடக நெறியோடு, அரசுக்கும் மற்ற அதிகார அமைப்புகளுக்கும் சவாலாக அமையும் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறார்கள். இந்தியாவில் ‘ஃபவுண்டேஷன் ஃபார் இன்டிபெண்டன்ட் ஜர்னலிசம்‘ என்ற அமைப்பின் பொறுப்பில் கடந்த பத்தாண்டுகளாக இணையத்தில் வருகிற ‘தி வயர்’ நினைவுக்கு வருகிறது.

அந்த கார்டியன் ஏடு தனது கொள்கையாக, “எமது நடுநிலையின் பொருள் சும்மா இருப்பதல்ல. ஒரே தரப்பிலிருந்துதான் வருகின்றன என்றாலும் கூட நாங்கள் பொய்களை அம்பலப்படுத்துவோம்,” என அறிவித்திருக்கிறது.

அறிவியலுக்கு   எதிராக

போலியான சமநிலைக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு இருக்கிறது. அண்மைக் காலமாக, பருவநிலை மாற்றங்கள் குறித்த கவலைக்குரிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அறிவியலாளர்கள் தங்களது தீவிரமான உழைப்பால், அந்த  உண்மைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்துகிறார்கள். மிகப் பெரும்பாலான அறிவியலாளர்கள் (97 சதவீதத்தினர்) மனிதச் செயல்பாட்டால் பூமியில் வெப்பமாதல் அதிகரித்து வருவதைத் தெரிவிக்கிறார்கள். அத்தகைய செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும், வெப்பமாதலின் பாதக விளைவுகளிலிருந்து மக்களையும் பிற உயிரினங்களையும் காப்பதற்குத் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

ஆனால், 3 சதவீதத்தினர் இதற்கு எதிர்மறையான கருத்துகளையும் கூறுகின்றனர். பல ஊடகங்கள், நடுநிலை என்பதாக, அறிவியலாளர்களின் கருத்தையும் இவர்களது கருத்தையும் சமமாக வெளியிடுகின்றன. இதனால் பொதுமக்களிடையே இது இன்னமும் முடிவுக்கு வராத, திட்டவட்டமாகக் கண்டுபிடிக்கப்படாத நிலவரம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டு, புவி வெப்ப நிலைமைக்குக் காரணமாக இருக்கும் பெருநிறுவனங்களைக் கட்டுப்படுத்தாமல் அரசுகள் நழுவுகின்றன. அறிவியல் களச் செயல்பாட்டாளர்கள் இதனைக் கவலையோடு சுட்டிக்காட்டுகின்றனர்.

இது, இருக்கிற நிலைமையை சிலர் குறைத்துக் காட்டியதற்கும், ஊடகங்கள் அதற்கு உதவியதற்கும் ஒரு சான்று. இதில் சூழலியலோடு தொடர்புள்ள அரசியல் இருக்கிறது. அரசியலாகவே ஒரு நாட்டிற்கு எதிராக இன்னொரு நாட்டின் அரசு மீது பொய்யான செய்தியைக் கட்டமைத்த, அதற்குப் பெரும்பாலான ஊடகங்கள் ஒத்துழைத்த காட்சி ஒன்றும் இருக்கிறது:

2003ஆம் ஆண்டில், சதாம் உசேன் தலைமையிலான  இராக் அரசு பற்றிய அவதூறுகளை பிரிட்டிஷ் அரசு  பரப்பியது. 45 நிமிடங்களில் ரசாயன ஆயுதம் பயன்படுத்தும் திறனை இராக் பெற்றிருக்கிறது என்று கூறியது. பல ஊடக நிறுவனங்கள் அதை விசுவாசமாக வெளியிட்டு வந்தபோது, பீபீசி செய்தியாளர் ஆண்ட்டூ கில்லிகன் அந்தக் குற்றச்சாட்டிற்கு ஆதாரமில்லை என்று வெளிப்படுத்தினார். மற்ற ஊடக நிறுவனங்கள் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அப்படியே கூறி, இராக் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது என்று ஒரு வரியையும் சேர்த்துக்கொண்டு “நடுநிலைச் செய்தி” வெளியிட்டன. ஆண்ட்டூ கில்லிகன் அந்த பிரிட்டிஷ் அரசின் மிகைப்படுத்தப்பட்ட வெளிப்பாடு அது என்று தனது தொடர்ச்சியான செய்திகளில் நிறுவினார்.

கூட்டுப் புலனாய்வு

இவ்வாறு சொந்த முயற்சிகளால் உண்மைச் செய்திக்குப் பங்களித்து வரும் தனிப்பட்ட இதழியலாளர்கள் மட்டுமல்லாமல், பல நாடுகளின் ஊடகவியலாளர்கள் கூட்டாக ஒத்துழைத்து உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்த உண்மைகளும் உண்டு. புலனாய்வு இதழியலில் ஒரு  மகுடமாக, உலகம் முழுக்க திட்டமிட்ட முறையில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட “பனாமா ஆவணங்கள்” செய்தி மறக்க முடியாதது.

10 போலிச் சமநிலை பனாமா ஆவணங்கள்

பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் ஃபொன்சேகா என்ற சட்ட நிறுவனத்தின் ஒரு கோடியே 15 லட்சம் ரகசிய ஆவணங்கள் ‘சுடெட்ஷெ ஸெய்துங்’ என்ற ஜெர்மன் நாளிதழுக்கு, யாரென்றே  தெரியாத  ஒருவரிமிருந்து, கிடைத்தன. அவற்றைப் புரட்டிப் பார்த்த செய்தியாளர்களின் கண்கள் விரிந்தன. பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள், கார்ப்பரேட் தொழிலதிபர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பெரும்புள்ளிகளின் ரகசிய முதலீடுகள் பற்றிய தகவல்கள் கண்களை விரிய வைக்காதா என்ன? அந்தப் பெரும்புள்ளிகள் வரிச்சலுகை உள்ள நாடுகளில் ரகசிய நிறுவனங்களை ஏற்படுத்தி, அவற்றின் மூலம் தங்களுடைய பல்லாயிரம் கோடி பணத்தை முதலீடு செய்திருந்ததை ஆவணங்கள் காட்டின. வரி ஏய்ப்பு, பண மோசடி, பல்வேறு நாடுகளின் நிதிச் சட்டங்களை மீறுதல் ஆகிய வழிமுறைகளில் குவிக்கப்பட்ட பணம் அது.

அவ்வளவு எண்ணிக்கையிலான ஆவணங்களைத் தனிப்பட்ட முறையில் கையாளுவது சாத்தியமில்லை. உலக அளவிலான புலனாய்வுகளும் தேவைப்பட்டன. ஆகவே அந்த நாளேடு நாடுகளிடை புலனாய்வு இதழியலாளர்கள் கூட்டமைப்பு (ஐசிஐஜே) வசம் அவற்றை ஒப்படைத்தது.  அவர்கள் 80 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகங்களின் 370 செய்தியாளர்களை ஒருங்கிணைத்தது. அந்த ஆவணங்களின் தரவுகளிலிருந்து தெரிய வந்தவர்களின் பெயர்கள், தொகை, முதலீட்டு முறை, நிதிப் பட்டுவாடா ஆகிய விவரங்களை, அந்த நாடுகளில் ஒத்துழைக்க முன்வந்தவர்களின் உதவியோடு சரிபார்த்தனர். உண்மைகளை உறுதிப்படுத்திக்கொண்டு, ஒரே நாளில், ஒரே நேரத்தில் வெளியிடுவதென்று முடிவு செய்தனர். அதன்படி 2016 ஏப்ரல் 3 அன்று அந்த ஆவணங்கள் பற்றிய செய்திகள் வெளியாகின.

அரசியலிலும் பங்குச் சந்தையிலும் பூகம்பத்தை ஏற்படுத்திய அந்தச் செய்தி பல நாடுகளில் அரசியல் தலைவர்களைப் பதற வைத்தது. பெரிய மனிதர்களை வெளிநாடுகளுக்குத்  தப்பி ஓட வைத்தது. அரசுத் தரப்பு விளக்கங்களை ஏற்க மறுத்து வெளியிடப்பட்ட தொடர்ச்சியான செய்திகளின் விளைவாக, ஐஸ்லாந்து பிரதமர் பதவி விலகினார் செய்தார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல நாடுகளில் விசாரணைகள் தொடங்கப்பட்டன. இந்தியாவிலும் பெருந்தொழிலதிபர் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி,  டி.எல்.எஃப் நிறுவன உரிமையாளர் கே.பி. சிங், தொழிலதிபர் விஜய் மல்லையா, சில திரை நட்சத்திரங்கள் என செயலாக்கத் துறையினரின் விசாரணை தொடங்கியது. அந்த விசாரணை எப்போது முடியும், என்ன நடவடிக்கை எடுக்கப்படும் – தெரியவில்லை.

ஊடக நெறி சார்ந்த இத்தகைய செயல்பாடு குறித்து “தி எலிமென்ட்ஸ் ஆஃப் ஜர்னலிசம்: வாட் நியூஸ்பீப்பிள் ஷுட் நோ அன் தி பப்ளிக் ஷுட் எக்ஸ்‘பெக்ட்” (இதழியலின் கூறுகள்: செய்தியாளர்கள் அறியவும்  பொதுமக்கள் எதிர்பார்க்கவும் வேண்டியது என்ன) என்ற புத்தகம் எளிமையான, ஆனால் அருமையான சொற்களில் இவ்வாறு கூறுகிறது: 

“இதழியலின் முதல் விசுவாசம் உண்மைக்குத்தான். அதன் சாறாக இருப்பது சரிபார்க்கும் ஒழுக்க முறைதான்.” இந்தப் புத்தகத்தை எழுதியவர்கள் பில் கோவாச், டாம் ரோசன்ஸ்டீல் இருவரும் அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள்,  ஊடக விமர்சகர்கள் ஆவர்.

தொடரும்

முதல் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-1/
இரண்டாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-2/
மூன்றாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-3/
நான்காவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-4/
ஐந்தாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-5/
ஆறாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-6/
ஏழாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-7
எட்டாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-8
ஒன்பதாவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-9/