தொடர்கள்

சங்கம் எல்லாம் எதுக்கு ப்ரோ – (பகுதி – 6) – பரணிதரன்

சங்கம் எல்லாம் எதுக்கு ப்ரோ - 6

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி. துறை), நாட்டின் வளர்ச்சி குறியீடாகப் பெருமையுடன் பேசப்படும் ஒரு பெரும் அடித்தளத் துறையாகும். அப்படிப்பட்ட துறையில் சுமார் 35–40% பெண்கள் பணியாற்றுவது ஒரு சாதனையாகச் சொல்லப்பட்டாலும், கடந்த கட்டுரையில் குறிப்பிட்டது போல, இத்தகைய பெரும் பங்கேற்பு உள்ள இடத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பும் சம ஊதியமும் இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டும்.

முந்தைய காலங்களில் பெண்கள் பரவலாகப் பணியாற்றிய எல்.ஐ.சி, வங்கிகள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் கூட, சம வேலைக்கு சம ஊதியம், வேலை நேர பாதுகாப்பு போன்ற உரிமைகள் தொழிற்சங்கங்களின் வழியே வெற்றிகரமாக உறுதி செய்யப்பட்டிருந்தன. ஆனால், நவீன ஐ.டி. துறையில் பல கவர்ச்சிகரமான ‘பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கக் கொள்கைகள்’ (fancy Diversity & Inclusive policies) இருந்தபோதும், நிஜ வாழ்க்கையில் பெண்கள் பணியிடங்களில் பாதுகாப்பற்ற நிலையிலும், சம வேலைக்கு சம ஊதியம் இல்லாத நிலையிலும் இருப்பதை காண முடிகிறது.

ஐ.டி. துறையின் கவர்ச்சிகரமான (glamorous) முகத்திற்குப் பின்னால், கொடூரமான அமைப்பு ரீதியான அநீதிகள் ஒளிந்திருக்கின்றன. 2016-ல், மகேந்திரா சிட்டியில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சுவாதி, காலையில் பணிக்குச் செல்லும்போது ரயில் நிலையத்தில் கொல்லப்பட்டார். டி.சி.எஸ். (TCS) நிறுவனத்தில் பணியாற்றிய உமா மகேஸ்வரி, தனியாகப் பணி முடிந்து வீடு திரும்பும்போது தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். 2017-ல், புனே இன்ஃபோசிஸ் கிளையில் பணியாற்றிய ரசீலா ராஜு, தனது அலுவலகத்திலேயே கொலை செய்யப்பட்டார். இவை அனைத்தும் ஊடக வெளிச்சத்திற்கு வந்த சில செய்திகளே; வெளிவராத இது போன்ற செய்திகள் நூற்றுக்கும் மேல் உண்டு.

இதே 2016-ஆம் ஆண்டில், வட மாநிலத்திலிருந்து புதிதாகத் திருமணம் முடித்து, தனது ஐ.டி. கணவருடன் சென்னைக்கு வந்த ஒரு இளம் பெண், வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு எதிராக அந்தப் பெண்ணின் சகோதரர், சட்ட ரீதியான போராட்டத்தை நீண்டகாலமாக நடத்தினார். மொழி தெரியாத மாநிலத்தில் தனக்கு உதவ முன்வர வேண்டும் என்று கோரி அந்த இளைஞர் எங்களிடம் ஆதரவு நாடினார். இந்த விஷயத்திற்காக, ‘நாலெட்ஜ் புரொஃபஷனல்ஸ் ஃபாரம்’ (Knowledge Professionals Forum) சார்பாக நாங்களும் நீண்டகாலப் போராட்டம் நடத்தினோம். மெழுகுவர்த்தி ஏந்திக் கண்டனக் குரல் எழுப்பியதோடு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரருக்கு உற்றதுணையாக இருந்தோம்; மேலும், மொழிப் பிரச்சினை காரணமாக அவருக்குத் தேவையான அனைத்து ஆவண உதவிகளையும் செய்தோம்.

சுவாதி, ரசீலா ராஜு உள்ளிட்ட பெண்களின் கொலைகள் பொதுமக்கள் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தினாலும், இவை தனிப்பட்ட நிகழ்வுகளாக மட்டுமே கருதப்படுகின்றன. உண்மையில், இது ஒரு தவறான வேலை அமைப்பின் எதிரொலியாகவே பார்க்கப்பட வேண்டும். ஒரு பெண் காலையிலோ அல்லது இரவிலோ பணிக்குச் சென்றபோது தாக்கப்பட்டு கொல்லப்படுகிறாள் என்ற செய்தி, ஒரே நாளில் மறக்கப்படுகிறது. ஆனால், இரவில் பணிக்குச் சென்ற அந்தப் பெண்ணுக்குச் சட்டப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்ட போக்குவரத்து வசதி ஏன் வழங்கப்படவில்லை என்ற கேள்வி நம்மில் எழ வேண்டும். அலுவலகத்தினுள் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏன் செயல்படவில்லை? காவல்துறை, சிப்காட் (SIPCOT) நிர்வாகம் போன்றவை ஏன் போதுமான பாதுகாப்பு வழங்காமல் மௌனம் சாதிக்கின்றன? என்பது போன்ற அடிப்படைக் கேள்விகள் கேட்கப்படுவதில்லை.

பணியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை நிறுவனம், அரசு, மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகியவை செயல்படுத்த வேண்டும். ஆனால், பல ஆண்டுகளாக சிப்காட் பகுதிகளில் கூட இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. அரசு மற்றும் நிறுவனங்கள் பாதுகாப்பு அளிப்பதைத் தவிர்ப்பதோடு, ஊடகங்களும் இதைத் தனிநபர் பிரச்சினையாகவோ, ‘காதல் கொலை’ அல்லது ‘ஆணின் சீர்கேட்டால் நிகழ்ந்தது’ என்றோ சுருக்கிப் பார்க்கின்றன. இது, சமூக அநீதியை மறைப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த உத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பிரச்சினைகளைப் பிரித்து அணுகுவது, ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் நன்மைக்கும், பரவலாக உழைக்கும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கும் வழிவகுக்கும்.

சுவாதி கொலையைத் தொடர்ந்து, ஹாசினி என்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவமும் இந்தியா முழுவதும் ஒரு மிகப்பெரிய பேசுபொருளானது. இந்தக் காலகட்டத்தில் ‘நாலெட்ஜ் புரொஃபஷனல்ஸ் ஃபாரம்’ (Knowledge Professionals Forum) உடன் இணைந்து பணியாற்ற சில பெண் தொழிலாளர்களும் முன்வந்தனர். இவர்களுடன் கலந்தாலோசித்ததன் பேரில், KPF-இன் கீழ் ‘இளம் பெண்கள் மன்றம்’ (Young Women Forum) என்ற பெயரில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும் எதிராகத் தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டோம். இந்த நிலையில், 2017 ஜனவரி மாதம் போரூர் டி.எல்.எஃப் (DLF) வளாகத்தின் முன்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகச் சமூகத்தில் நிகழும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தோம். இதற்காக சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாகச் செய்திகளை வெளியிட்டோம். மனிதச் சங்கிலிப் போராட்டத்தன்று நாங்கள் சுமார் பத்துப் பேர் சென்றிருந்தோம். ஆனால், நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளையும், நாங்கள் ஏந்தியிருந்த பதாகைகளையும் பார்த்து, அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த தாய்மார்கள் மற்றும் ஐ.டி. ஊழியர்கள் பலர் எங்களுடன் கைகோத்து நின்றனர். எந்தவொரு பெரிய பின்புலமும் இல்லாமல் ஒரு பிரச்சினையை மையப்படுத்தி, அதை மக்களிடம் களத்தில் கொண்டு சென்றால் தொழிலாளர்களும் ஆதரவளிக்கக் காத்திருக்கின்றனர் என்பதே எங்களுக்கு ஒரு புதிய அனுபவமாக அமைந்தது.

இதே போன்றதொரு அனுபவம் 2017-ல் இன்ஃபோசிஸ் ஊழியர் ரசீலா ராஜுவின் கொலையை ஒட்டி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும் கிடைத்தது. ரசீலா ராஜுவின் மரணச் செய்தி வந்த அடுத்த நாளே, KPF சார்பாகச் சென்னை ஓ.எம்.ஆர் (OMR) பகுதியில் உள்ள காரப்பாக்கம் டிங்கி பூங்காவில் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் நாங்கள் ஐந்து பேர் மட்டுமே இருந்தாலும், அந்தப் பூங்காவில் இருந்த ஐ.டி. ஊழியர்களையும் பொதுமக்களையும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைத்தோம். அவர்களும் எந்தவொரு பெரிய எதிர்ப்புமின்றி, KPF சார்பில் நடத்தப்பட்ட மெழுகுவர்த்தி ஏந்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதோடு, நாங்கள் ஆற்றிய கண்டன உரையையும் கேட்டனர். இவ்வாறு 2016-17 ஆம் ஆண்டு காலகட்டத்தில் KPF-இல் நாங்கள் மிகவும் வலுவாக இயங்கிக்கொண்டிருந்தோம். அந்தக் காலகட்டத்தில் செய்தித்தாள்களும் செய்தி நிறுவனங்களும் எங்களது செயல்பாடுகளைப் பிரத்யேகமாகக் கவனத்தில் கொண்டன. இத்தகைய சூழலில், இயக்கத்திற்குள் ஒரு மிகப்பெரிய கேள்வி எழுந்தது: நாம் ஒரு தொழிற்சங்கமாக மாற வேண்டுமா அல்லது ஒரு பதிவு செய்யப்பட்ட தன்னார்வ (volunteer) அமைப்பாகத் தொடர வேண்டுமா?

KPF அதுவரை ஒரு தன்னார்வ அமைப்பாகவே இருந்தது. தன்னார்வலர்கள் வருவார்கள், இயக்கத்தில் பணியாற்றுவார்கள், பின்பு ஒரு காலகட்டத்திற்குப் பிறகு சென்றுவிடுவார்கள். அது போன்ற ஒரு அமைப்பு வடிவத்தில்தான் அன்று நாங்கள் இயங்கிக்கொண்டிருந்தோம். நாங்கள் பரவலாக அறியப்படத் தொடங்கிய பிறகு, சம்பளத் தாமதம், கடுமையான இலக்கு அழுத்தம் (Target Pressure), பணி நிரந்தரமின்மை, முறையற்ற பணிநீக்கங்கள் போன்ற பல தொழில் தகராறுகள் எங்களிடம் வந்தன. இதுபோன்ற ஊழியர் பிரச்சினைகளைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள, பதிவு செய்யப்பட்ட ஒரு தொழிற்சங்கம் தேவைப்பட்டது. அரசு அதிகாரிகள், வட்டாரத் தொழிலாளர் நலத் துறைகள் போன்ற இடங்களில் வழக்காடுவதற்கும், தொழிலாளர் மன்றத்தில் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் பதிவு செய்யப்பட்ட சங்கம் என்ற வடிவம் தேவைப்பட்டது. அதுவரை தன்னார்வ அமைப்பாக இருந்ததற்கு, ஏற்பட்ட இந்த வளர்ச்சி ஒரு புதிய வடிவத்தையும் தேவையையும் உருவாக்கியது. இருப்பினும், அமைப்புக்குள் இருவேறு கருத்துகள் நிலவின; ‘கட்டற்ற மென்பொருள் இயக்கத்தைச்’ (Free Software Movement) சேர்ந்தவர்கள் இது ஒரு தன்னார்வ அமைப்பாகவே தொடர வேண்டும் என்றனர், மற்றொரு தரப்பினரோ தொழிற்சங்கமாக உருவெடுக்க வேண்டும் என்ற கோணத்தில் செயல்பட்டு வந்தோம்.

அந்த நேரத்தில், சி.ஐ.டி.யு (CITU – Centre of Indian Trade Unions) அகில இந்திய அளவில் ஐ.டி. துறையில் செயல்பட்டுக்கொண்டிருந்த அமைப்புகளின் கூட்டத்தை டெல்லியில் கூட்டியது. அதில், ஐ.டி. துறையில் தொழிற்சங்கம் அமைப்பதற்கான தற்போதைய சூழல்கள் குறித்தும், தொழிற்சங்கம் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் KPF தனது அனைத்து அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டு, “ஐ.டி. துறைக்கென ஒரு பிரத்யேகமான தொழிலாளர் சங்கம் உருவாக வேண்டும்” என்ற முடிவை ஆதரித்துக் கலந்துகொண்டது. டெல்லி, மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம், சென்னை எனப் பல நகரங்களைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் குழுக்களும் இதே முடிவுக்கு வந்திருந்தன.

2016-ல் ஒரு விவாதப் பொருளாக இருந்த தொழிற்சங்கம் அமைப்பதற்கான கருத்தாக்கம், 2017-ல் ‘நாலெட்ஜ் புரொஃபஷனல்ஸ் ஃபாரம்’ ஒரு முழுமையான தொழிற்சங்க அமைப்பை உருவாக்கும் பணியை முழுவீச்சில் தொடங்குவதற்கு வழிவகுத்தது.

பயணம் தொடரும்…

– தோழர் பரணிதரன் (தலைவர் UNITE)

முதல் பகுதி: https://maattru.in/2024/12/sangam-eathuku-bro-1/
இரண்டாவது பகுதி: https://maattru.in/2025/01/sangam-eathuku-bro-2/
மூன்றாவது பகுதி: https://maattru.in/2025/01/sangam-eathuku-bro-3/
நான்காவது பகுதி: https://maattru.in/2025/04/sangam-eathuku-bro-4/
ஐந்தாவது பகுதி: https://maattru.in/2025/06/sangam-eathuku-bro-5/