அரசியல்தொடர்கள்

சங்கம் எல்லாம் எதுக்கு ப்ரோ – (பகுதி – 5) – பரணிதரன்

It

ஓஎம்ஆர்-இல் முதல் உண்ணாவிரதப் போராட்டம்

ஏற்கனவே முந்தைய பகுதியில் குறிப்பிட்டது போல, இது ஒரு ஐடி நிறுவனம் சம்பந்தமான பிரச்சினைக்காக ஓஎம்ஆர் சாலையில் நடந்த முதல் உண்ணாவிரதப் போராட்டம் ஆகும். அதில் பல கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் அந்த மாணவர்களுக்குத் தங்கள் ஆதரவையும், தங்களால் முடிந்த உதவிகளையும் செய்வதாகக் கூறினார்கள். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., தோழர் டி. கே. ரங்கராஜன் அவர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பிரச்சினையைத் தான் பாராளுமன்றத்தில் எழுப்புவதாகவும், அதற்கான தரவுகளைத் தன்னிடம் அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் மாணவர்களிடம் தகவல்களைச் சேகரித்து, தோழர் டி. கே. ரங்கராஜனிடம் அளிக்கப்பட்டது.

ஊடகங்களின் கவனமும் நிறுவனத்தின் பதிலும்

பின்னர், இந்தப் போராட்டத்தின் செய்திகள் இந்திய ஊடகங்களில் பரவலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. அடுத்த நாள், பரவலாக அனைத்து ஆங்கில, தமிழ் ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் இச்செய்தி முக்கிய இடம் பிடித்தது. எல் & டி இன்ஃபோடெக் (L&T Infotech) நிறுவனத்திற்கு இது மிகப் பெரிய சவாலை உருவாக்கியது. இதன் விளைவாக, எல் & டி இன்ஃபோடெக் நிறுவனம், “இந்த மாணவர்கள் ஊழியர்கள் அல்லர்; நாங்கள் நடத்திய தேர்வில் தோல்வியடைந்ததால் அவர்களை வேலையில் அமர்த்த முடியவில்லை” என்று விளக்கமளித்தது. இதைக் கண்டித்து, போரூரில் உள்ள எல் & டி இன்ஃபோடெக் நிறுவனத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 40 மாணவர்கள் முகமூடி அணிந்துகொண்டு பங்கேற்றனர். அங்கு வேலைக்குச் சென்றுகொண்டிருந்த ஊழியர்களிடம் பரவலாகத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் பிரச்சாரம் செய்தோம். தங்களுக்கு நடந்த அநீதிக்கு எதிராகப் போராடும் இந்த நிகழ்வு, அங்கு கடந்து சென்ற பலருக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

அடுத்தகட்ட நடவடிக்கை: சட்டப் போராட்டம்

பல முயற்சிகளுக்குப் பிறகு, இந்தப் போராட்டத்தை அடுத்தகட்டமாக வழக்காக எடுத்துச் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஓர் ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவின் முன்னெடுப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு (Writ Petition) தாக்கல் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான தரவுகளை அனைத்து மாணவர்களிடமும் பெறுவது என்றும், இந்த வழக்கை நடத்துவதற்கான செலவுகளுக்காக நிதி வசூல் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி மாணவர்களிடம் பேசி, விருப்பம் உள்ளவர்களிடம் வழக்குக்குத் தேவையான ஆவணங்களையும் நிதியையும் வசூல் செய்ய ஆரம்பித்தோம். இந்த வழக்கு ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் பரவலாகப் பேசப்பட்டதன் விளைவாக, சமூக ஊடகங்களில் நாங்கள் பரவலாக அறியப்பட்டோம்.

ஹெக்ஸ்வேர் (Hexware) நிறுவனத்திற்கு எதிரான புதிய முயற்சி

இதே காலத்தில், ஹெக்ஸ்வேர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு (Layoff/Retrenchment) நடப்பது எங்கள் கவனத்திற்கு வந்தது. இந்த வழக்கின் பணிகள் நடந்துகொண்டிருக்கும்போது, ஹெக்ஸ்வேர் நிறுவனத்திற்கு எதிராக ஓஎம்ஆர்-இன் பரவலான பகுதிகளில் அச்சிடப்பட்ட தட்டிகளைக் கட்டினோம். தட்டிகள் அமைப்பது பழைய முறையாக இருக்கலாம், ஆனால் ஐடி போன்ற நவீன துறையில் இது மிகவும் புதிய முயற்சியாகும். ஹெக்ஸ்வேர் நிறுவனம் சிறுசேரி சிப்காட்டுக்குள் அமைந்துள்ளது. அந்த நிறுவனத்தைச் சுற்றியுள்ள பேருந்து நிறுத்தங்கள், மின்சாரக் கம்பங்கள் மற்றும் பொது இடங்களில் பரவலாகத் தட்டிகளைக் கட்டினோம். தட்டியில் நாங்கள் குறிப்பிட்ட செய்தி: “Don’t Panic, Don’t Resign and Call US” என்று எங்கள் தொலைபேசி எண்களைக் கொடுத்திருந்தோம்.

ஒரு பத்திரிகை அறிக்கையையும் கொடுத்தோம், அது பரவலாகப் பல பத்திரிகைகளில் வந்தது. அதன் விளைவாக, பல ஊழியர்கள் எங்களுடன் தொடர்புகொண்டு பேசினர்.

ஊழியர்களின் அச்சமும் சட்ட உரிமைகளும்

தொடர்புகொண்ட ஊழியர்கள் அனைவரும் இரண்டு கேள்விகளைக் கேட்டனர். அதில் முதல் கேள்வி: தொழிற்சங்கத்தில் முறையிட்டால் எங்களுக்கு ஏதாவது பிரச்சினை வருமா? இரண்டாவது: இதை எடுத்துப் போராடினால் எங்களுக்கு மீண்டும் வேலை கிடைக்குமா? இந்தப் பரவலான கேள்வி, அனைத்து ஊழியர்களிடமும் தொடக்க காலம் முதல் இன்றுவரை உள்ளது. சங்கத்தில் சேர்ந்தால் ஏதாவது பிரச்சினை வருமா? நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டு அனுப்பினால், அதை எடுத்துப் பேசினால் பிரச்சினை வருமா? இந்தப் பயமே பெரும்பான்மையான ஊழியர்களை, தங்களுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கவிடாமல் விலகிச் செல்ல வைக்கிறது.

உண்மையில், தொழிற்சங்கத்தில் சேருவதோ, அணிதிரட்டுவதோ சட்டவிரோதம் அல்ல. அது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19(1)(c) வழங்கிய அடிப்படை உரிமை. அதேபோன்று, வேலை இடத்தில் பிரச்சினை என்றால் அதை எதிர்த்துக் குரல் கொடுப்பதோ புகார் அளிப்பதோ சட்டவிரோதம் அல்ல. அது சட்டத்தின் மூலமாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் உறுதிசெய்யப்பட்ட உரிமை. இந்தியத் தொழில் தகராறு சட்டம் இதை உறுதி செய்கிறது. இந்த உரிமைகள் பல வருடங்கள், பல போராட்டங்கள், பல தொழிலாளர்களின் இன்னுயிர்த் தியாகத்தால் பெறப்பட்டவை. அனைத்துத் தரப்பு ஊழியர்களும் தொழிலாளர்களும் இதைப் பயன்படுத்த முடியும். இதில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சினை, புரிதலின்மை மட்டுமே. நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்த உரிமையைத் தொழிலாளி பயன்படுத்தக் கூடாது என்றுதான் எண்ணுவார்கள். அது அவர்களின் வர்க்க நலனில் இருந்து வருவது. தொழிலாளர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

வழக்கின் முன்னேற்றமும் பின்னடைவும்

எல் & டி வழக்கை நடத்துவதற்காகச் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லதாவை அணுகினோம். அவரிடம் வழக்கின் ஆவணங்களையும், வழக்குக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் அளித்தோம். இதே வேளையில், தொழிலாளர் துறையில் நாங்கள் கொடுத்த மனுவை அந்தத் துறை நிராகரித்துவிட்டது என்கிற தகவல் எங்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த மாணவர்கள் நிறுவனத்தில் இன்னும் பணியில் சேரவில்லை என்பதால், தொழில் தகராறு சட்டத்தின்கீழ் வழக்குத் தொடர முடியாது என்று கூறிவிட்டது. எல் & டி நிறுவனத்திற்கான ரிட் மனுவுக்கான வேலைகளை எங்கள் வழக்கறிஞர் முன்னெடுத்துக்கொண்டிருக்கும் வேளையில், நாங்கள் தோழர் டி. கே. ரங்கராஜனுடன் இணைந்து இதை எப்படி நாடாளுமன்றத்திற்குக் கொண்டுசெல்வது என்று முயற்சிகளை எடுத்துக்கொண்டிருந்தோம்.

தமிழ்நாட்டை உலுக்கிய சுவாதி படுகொலை

இதே காலகட்டத்தில், ஜூன் 26, 2016 அன்று, தமிழ்நாட்டை உலுக்கிய இன்ஃபோசிஸ் ஊழியர் சுவாதி, வேலைக்குச் செல்லும் வழியில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு இளைஞனால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தமிழகம் முழுவதும் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வேலைக்குச் செல்லும் ஒரு இளம் பெண், ஒரு பொது இடத்தில் வைத்துக் கொல்லப்படுகிறார். அதைக் கண்டும் காணாமலும் பல மக்கள் கடந்து சென்றுள்ளனர். மேலும், சமூகங்களிலும் ஊடகங்களிலும், வெட்டிய நபரைவிட வெட்டப்பட்ட பெண்ணின் நடத்தை குறித்தும், “ஏன் அதிகாலையில் அவள் ரயில் நிலையத்திற்கு வர வேண்டும்?”, “அந்த இளைஞனின் காதலை ஏன் ஏற்கவில்லை?” என்றும், இப்படிக் கொலை செய்யப்பட்ட பெண்ணைப் பற்றியே பரவலான அவதூறுகள் பேசப்பட்டன. சமூக ஊடகங்கள் முழுவதும் பெண்ணின் நடத்தைக்கு எதிராகவே கருத்துகள் சொல்லப்பட்டன.

சுவாதிக்கு நீதி கேட்டு உடனடிப் போராட்டம்

இந்தத் தகவல் எங்களுக்கு வந்து சேரும்போது, நாங்கள் வழக்கு சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டிருந்தோம். உடனே ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து, அடுத்த நாள் மாலை, சுவாதி வெட்டப்பட்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், அதே நடைமேடையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு, உடனடியாக ஒரு சுவரொட்டியும் பத்திரிக்கை அறிக்கையும் வெளியிட்டோம்.

உண்மையில், சுவாதி பரனூர் அருகில் இருக்கிற மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். தன் அலுவலகத்திற்குச் செல்லும்போதுதான் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இது ஏதோ ஒரு நிகழ்வு என்று கடந்து செல்லக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். ஒரு பெண் தொழிலாளி மீது இந்தச் சமூகம் நிகழ்த்தும் அநீதிக்கு எதிரான குரலாக இது வலுவாக இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினோம்.

மக்கள் ஆதரவைப் பெற்ற அணுகுமுறை

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாங்கள் ரயில்வே மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. நாங்களே சமூக ஊடகங்களில் சுவரொட்டியை வெளியிட்டுப் பகிர்ந்தோம். அந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய நோக்கம், பாதிக்கப்பட்ட பெண்ணின் குணத்தில் வாழ்க்கைமுறையிலும் குறையிருப்பதாக அவதூறு பரப்புவதைத் தடுப்பதும், பாதுகாப்பான போக்குவரத்து வசதி செய்து தருமாறு அரசையும் நிறுவனங்களையும் கேட்பதும் ஆகும். இதற்காகச் சுவரொட்டிகளைத் தயாரித்துக்கொண்டு ரயில் நிலையம் சென்றோம்.

எங்களுக்கு முன்பாகவே அங்கு ஊடகங்கள் கூடியிருந்தன. நாங்கள் பகிர்ந்த சுவரொட்டியைச் சுவாதியின் உறவினர்கள் பகிர்ந்ததால், அவர்களும் பொதுமக்களும் பரவலாக ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தனர். நாங்கள் பகிர்ந்த சுவரொட்டியைப் பார்த்து, சுமார் 300 பேர் அளவுக்குத் தானாகவே ஆர்ப்பாட்டத்திற்குக் கூடினர். கூடியிருந்த செய்தியாளர்களிடம், KPF (Knowledge Professionals Forum) சார்பில் தோழர் சித்தராமன் கண்டனச் செய்தியையும், அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பேசினார். கூடியிருந்தவர்களுக்கு உடனுக்குடன் நாங்கள் மெழுகுவர்த்திகளை ஏற்பாடு செய்து, அனைவருக்கும் கொடுத்து ஏற்றினோம். பின்பு, அந்த நடைமேடை இருக்கையின் மேல் நின்று, வந்திருந்த பலரையும் கண்டன உரை நிகழ்த்தச் சொன்னோம். அவர்களும், முக்கியமாக அந்தப் பெண்ணின் நடத்தை பற்றிக் கேள்வி கேட்பதை வன்மையாகக் கண்டித்தார்கள். அதேபோன்று, வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பணியிடங்களிலும், பணிக்குச் செல்லும் வழியிலும் பாதுகாப்பு இல்லாததையும் வெளிக்கொண்டு வந்தோம். அதை அரசும் நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என்பதை வலுவாகக் கூறினோம்.

நாலெட்ஜ் ப்ரொஃபஷனல் ஃபோரம் சார்பாக சித்தராமன், பாரதி, வெல்கின், நான் மற்றும் சில கட்டற்ற மென்பொருள் (Free Software) செயற்பாட்டாளர்கள் உடன் பங்கேற்றனர்; மற்ற அனைவருமே பொதுமக்கள். ஒரு உடனடிப் பிரச்சினையை மிகவும் நுணுக்கமான பாலின மற்றும் வர்க்கப் பார்வையில் அணுகினால், மக்கள் ஆதரவு தானாகவே கிடைக்கும் என்பதை அந்த உடனடி ஆர்ப்பாட்டம் எங்களுக்கு உணர்த்தியது.

சுமார் 37% ஐடியில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏன் எந்தப் பாதுகாப்பும் இல்லை?

பயணம் தொடரும்…

– தோழர் பரணிதரன் (தலைவர் UNITE)

முதல் பகுதி: https://maattru.in/2024/12/sangam-eathuku-bro-1/
இரண்டாவது பகுதி: https://maattru.in/2025/01/sangam-eathuku-bro-2/
மூன்றாவது பகுதி: https://maattru.in/2025/01/sangam-eathuku-bro-3/
நான்காவது பகுதி: https://maattru.in/2025/04/sangam-eathuku-bro-4/