முதலில் அவர்கள்
கம்யூனிஸ்டுகளைப் பிடிக்க வந்தார்கள்,
நான் எதுவும் பேசவில்லை;
ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட் அல்லன்.
பின்னர் அவர்கள்
தொழிற்சங்கவாதிகளைப் பிடிக்க வந்தார்கள்,
நான் எதுவும் பேசவில்லை;
ஏனென்றால் நான் தொழிற்சங்கவாதி அல்லன்.
பின்னர் அவர்கள்
யூதர்களைப் பிடிக்க வந்தார்கள்,
நான் எதுவும் பேசவில்லை;
ஏனென்றால் நான் யூதன் அல்லன்.
இறுதியாக அவர்கள் என்னைப் பிடிக்க வந்தார்கள்,
அப்பொழுது எனக்காகப் பேச எவருமே இல்லை
இது மார்ட்டின் நிமொல்லர் எழுதிய புகழ்பெற்ற கவிதை. இந்தக் கவிதை ஒரு குறிபிட்ட காலத்துக்கே உரிய நினைவல்ல, மாறாக ஒவ்வொரு காலத்திலும் அதிகாரத்தின் பெயரால் ஒடுக்கப்படும் குரல்களின் நிதர்சனமாகும். அதிகாரம் தனது இருப்பைத் தக்கவைக்க எப்போதுமே ஒரு ‘பயத்தை’ அல்லது ‘எதிரி’யைக் கட்டமைக்கிறது. அந்தச் சூழலில் எழும் மாற்றுச் சிந்தனைகளை மௌனமாக்குவதே அதிகார வர்க்கத்தின் முதல் வேலையாக இருக்கிறது.
2025 மே மாதம் பகல்ஹாம் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிர்வினையாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடத்தப்பட்டது. அதன் விளைவாக இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர்ச் சூழல் மூண்டது. நாடு முழுதும் ஒரு தீவிர தேசியவாத அலை வீசிக்கொண்டிருந்த அந்தப் பொழுதில், மனிதாபிமான அடிப்படையிலான போர் எதிர்ப்பு உணர்வுகளுக்குக் கூட ‘தேசவிரோத’ முத்திரை குத்தப்பட்டது. இந்தச் சூழலில் தான், SRMIST பேராசிரியர் லோரா சாந்தகுமார் தனது தனிப்பட்ட தளத்தில் பகிர்ந்த மனிதாபிமானக் கருத்துகளுக்காகப் பத்தாண்டுகள் உழைப்பிற்குப் பின்னும், திடீரெனப் பணிநீக்கம் செய்யப்பட்டார். இது ஒரு தனிநபருக்கு இழைக்கப்பட்ட அநீதி மட்டுமல்ல; ஒட்டுமொத்தக் கல்விச் சுதந்திரத்தின் மீதான அதிகாரத்தின் தாக்குதல் ஆகும். எங்கோ யாருக்கோ நடந்ததுதானே என்று கண்டும் காணாமலும் நம்முடைய வேலையைப் பார்த்துக்கொண்டு கடந்துவிட முடியாது. இப்படியாக தனிமனிதர்கள் பாதிக்கப்படுவதற்குப் பின்னால் ஒரு நீண்ட நெடிய அரசியலும், கொடூரமான வரலாறும் இருக்கிறது. அதனைப் அறிந்துகொண்டால்தான், பேராசிரியர் லோரா சாந்தகுமார் அவர்களுக்கு நேர்ந்த இந்த கொடுமையின் ஆழத்தையும் வீரியத்தையும் நம்மால் புரிந்துகொள்ளமுடியும்.
புனிதப்படுத்தப்படும் ராணுவமும், மௌனிக்கப்படும் உண்மைகளும்:
மானுடப் பரிணாம வளர்ச்சி, உளவியல், வரலாறு தற்கால நிகழ்வுகள் என எக்கோணத்தில் நோக்கினாலும், போர் என்பது ஒட்டுமொத்த மனிதகுலத் தொடர்ச்சிக்கும் எதிரானது. அடிப்படையில் மனித இனம் ஒன்றிணைந்து வாழ்தல், பரஸ்பர அன்பைப் பகிர்ந்து கொள்ளுதல், சமூக உறவுகளைப் பேணுதல் ஆகிய பண்புகளினாலேயே தன்னைத் தகவமைத்துக் கொண்டு இன்றுவரை தப்பிப் பிழைத்திருக்கிறது. ஆனால், இந்த இயல்பான மனிதத் தன்மைக்கு மாறாக, செல்வத்தையும் அதிகாரத்தையும் ஒரு சிலரிடம் குவிக்கும் நோக்கத்திற்காகப் பெரும்பான்மை மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பறிக்கும் இலக்கோடு செயல்படும் அதிகாரக் கட்டமைப்பின் இயந்திரங்களில் ஒன்றே ராணுவம். இத்தகைய செயற்கையான மனோபாவத்தை உருவாக்க, அது பயிற்சி என்ற பெயரில் சிறு வயது முதலே மனிதப்பரிவைச் சிதைத்து, அறம் சார்ந்த தயக்கங்களை உடைக்கிறது. ஒரு மனிதனைச் சக மனிதர்களோடு கூடி வாழும் இயல்பான மனநிலையிலிருந்து விலக்கி, அதிகாரத்திற்கு அடிபணியும் ஒரு கருவியாக அது மாற்றியமைக்கிறது.
அரசியல் அதிகாரம், பெருநிறுவனங்களின் லாபம், ராணுவப் படைபலம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கமைந்த கூட்டணியே, இன்று உலகம் முழுவதும் ஏகாதிபத்தியம் வளர்ந்து வருவதற்கான அடிப்படைக் கட்டமைப்பாகும். இதனைத் தக்கவைக்க ‘இனப்படுகொலைகளை இயல்பாக்குதல்’ (Genocide Normalisation) ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இங்கே அதிகாரத்திற்கு அடிபணிதல் என்பது ‘தேசபக்தி’ என்றும், அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புதல் என்பது ‘தேச விரோதம்’ என்றும் போதிக்கப்படுகிறது. காலம் நெடுகிலும் போர்க்களங்களில் அப்பாவி மனிதர்கள் மீது ராணுவம் நிகழ்த்தி வந்த மனித உரிமை மீறல்களையும், போர்க்குற்றங்களையும் நினைத்தாலே மனம் பதறுகிறது. நம் நாடு, நம் மக்கள் – இவர்களைப் பாதுகாக்க வேண்டிய உயரிய பணியில் ராணுவம் ஈடுபட்டிருப்பதாக நம்மை நம்ப வைத்திருக்கும் அதே வேளையில், அதே ராணுவம் தன் சொந்த மக்களுக்கு எதிராகவே நிகழ்த்திய கொடுமைகளையும் நாம் இங்கே நினைவு கூர வேண்டும். இந்திய நிலப்பரப்பில், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ந்துள்ள ராணுவ அத்துமீறல்கள் குறித்த செய்திகளின் மீது நாம் கடைப்பிடிக்கும் மௌனம், தேசப் பாதுகாப்பிற்காக நாம் கொடுக்கும் விலையா? அல்லது மனித மாண்புகளிலிருந்து நாம் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுவிட்டோம் என்பதைக் காட்டும் அளவுகோலா?
குனான் போஷ்போரா (Kunan Poshpora, 1991) போன்ற துயரங்கள் உட்பட, இதுவரை பெண்களின் மீது ராணுவம் நிகழ்த்திய 11,200-க்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் கூட்டு வன்புணர்வுக் குற்றங்களுக்கு, ‘ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்’ (AFSPA, 1958) ஒரு பாதுகாப்புக் கேடயமாக இருந்து வருகிறது. நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்களும் இத்தகைய ராணுவ அத்துமீறல்களுக்குப் பலிகடாக்களே. இதற்கு வரலாறே சாட்சியாக நிற்கிறது. தங்ஜம் மனோரமா (2004) வழக்கை அடுத்து, மணிப்பூர் தாய்மார்கள் ராணுவ முகாம் முன் திரண்டு ‘Indian Army Rape Us’ என்று முழக்கமிட்டு நிர்வாணமாக நின்று நடத்திய அந்தப் போராட்டம், அதிகார வர்க்கம் மூடி மறைத்த உண்மைகளை அதன் அப்பட்டமான கோர முகத்தோடு உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியது. AFSPA சட்டத்திற்கு எதிராக இரோம் ஷர்மிளா 2000 முதல் 2016 வரை பதினாறு ஆண்டுகள் நடத்திய நீண்ட உண்ணாவிரதப் போராட்டம், பாதுகாப்புப் படைகளால் நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள் பாலியல் வன்முறைகள் ஆகியவை, அதிகார வர்க்கத்தின் பொறுப்புக்கூறல் அற்றத் தன்மையையும் மக்கள் கொண்டுள்ள ஆறாத கோபத்தையும் உலகிற்கு நிரூபித்தன.
கடந்த கால மனித உரிமை மீறல்களும், கசப்பான வரலாற்றுச் சுவடுகளுமே லோரா சாந்தகுமார் போன்ற கல்வியாளர்களைக் கவலைகொள்ளச் செய்கின்றன. இத்தகைய அநீதிகளுக்கு எதிராகக் குரலெழுப்புவது தேசத்துரோகம் அல்ல; அது விழிப்புணர்வுள்ள குடிமக்களின் தார்மீகக் கடமை. லோராவின் கருத்துகள் தன்னிச்சையான வெறுப்புப் பிரச்சாரம் அல்ல, அவை மனித உரிமை மீதான ஆழமான அக்கறையிலிருந்து பிறந்தவை. வரலாற்றைச் சுட்டிக்காட்டுவது தேசத்தை இழிவுபடுத்த அல்ல, மாறாக அதே தவறுகள் மீண்டும் நிகழாமல் ஒரு மாண்புள்ள சமூகத்தைக் கட்டமைக்கவே ஆகும்.
பேராசிரியர் லோரா சாந்தகுமார் பணிநீக்கம்:
SRMIST பல்கலைக்கழகத்தில் பத்தாண்டுகளாகப் பணியாற்றிய பேராசிரியரான லோரா சாந்தகுமார் அவர்களின் பணிநீக்கம், கல்விச் சூழலில் நிலவும் சகிப்புத்தன்மையின்மைக்கு ஒரு சான்றாகும். மே 2025-ல் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றத்தின்போது (Operation Sindoor), தனது தனிப்பட்ட வாட்ஸ்அப் (WhatsApp) பக்கத்தில் போர் எதிர்ப்பு மற்றும் மனிதாபிமானக் கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். முற்றிலும் தனிப்பட்ட வெளிப்பாடாக இருந்த இந்தப் பதிவுகள், சில மாணவர்களால் ‘ஸ்கிரீன்ஷாட்’ எடுக்கப்பட்டு, வலதுசாரி சமூக வலைதளப் பக்கங்களில் திட்டமிட்டுக் கசியவிடப்பட்டன. இதன் விளைவாக, அவர் கடுமையான இணையவழித் தாக்குதல்கள், கொலை மிரட்டல்கள் மற்றும் “தேச விரோதி” என்ற அவதூறுகளுக்கு உள்ளாகி, பாதுகாப்பிற்காகச் சென்னையை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஒரு பேராசிரியரைப் பாதுகாக்க வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகம், மாறாக அவரைப் பணி இடைநீக்கம் (Suspension) செய்தது.
மேலும், அவர் மீது ஒருதலைப்பட்சமான உள்விசாரணையை நடத்தினார். அவருடைய தனிப்பட்ட எண்ணிலிருந்துதான் அவர் பதிவிட்டார் என்பதை விசாரணை அறிக்கை ஒப்புக்கொண்டது. இருப்பினும், “தன்னை ஒரு SRMIST பேராசிரியராக முன்னிறுத்தவில்லை என்பதை அவர் நிரூபிக்கத் தவறிவிட்டார்” என்ற விசித்திரமான தர்க்கத்தைக் கூறி அவரைப் பணிநீக்கம் செய்திருக்கின்றனர். நிர்வாகத்தின் இந்த அநீதியான நடவடிக்கையைக் கண்டித்தும், அவரை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரியும் (Reinstatement) ஜெயதி கோஷ், கல்பனா கண்ணபிரான், நிவேதிதா மேனன் போன்ற இந்தியாவின் முன்னணி அறிஞர்கள் மற்றும் ஐஐடி (IIT), ஐஐஎஸ்சி (IISc) பேராசிரியர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் மற்றும் குடிமக்கள் ஒன்றிணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கேள்வி முயல்: கல்விக்கூடங்களின் கடமை
“கேள்வி முயல்” என்றார் பாரதி; அந்த வகையில் கேள்விகள் முளைக்கும் களமாகத் திகழ வேண்டும் ஒரு கல்விக்கூடம். ஆனால் கடந்த காலங்களில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேலை பார்க்க அச்சில் வார்த்து எடுக்கப்படும் மாணவர்களை உருவாக்கும் ஆலைகளாகவே கல்விக்கூடங்கள் மாறிவிட்டன. கேள்விகள் கேட்பதையும், சுய சிந்தனையையும், புதுமைகளையும் ஒருபோதும் அவை அனுமதிப்பதில்லை. பாடத்திட்டத்தில் உள்ளதை மட்டும் கற்றுக்கொண்டு, கீழ்ப்படிதலுக்குப் பழக்கப்படுத்தப்படும் பயிற்சி மையங்களே அவை. ஏற்கனவே நிலைமை இப்படி இருக்க, தற்போதைய சூழல் இன்னும் மோசமடைந்துள்ளதை சர்வதேசத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் உயர்கல்விக் கூடங்களில் சுதந்திரம் அபாயகரமாகக் குறைந்திருப்பதை AFI (Academic Freedom Index – கல்விச் சுதந்திரக் குறியீடு) மூலம் அறிய முடிகிறது.
ஜனநாயகத்தை அளவீடு செய்யும் உலகளாவிய அமைப்பான V-Dem (Varieties of Democracy), இந்தியாவின் கல்விச் சூழலைக் கணக்கிட்டு, 179 நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 159-வது இடத்தையே வழங்கியுள்ளது. பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், பூடான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அண்டை நாடுகளின் மதிப்பீடுகள் இந்தியாவை விட மேன்மையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பூஜ்ஜியம் முதல் ஒன்று வரையான (0-1) அளவீட்டில், 1 என்பது முழுமையான கல்விச் சுதந்திரத்தைக் குறிக்கும். 2013-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் மதிப்பீடு 0.5 – 0.6 ஆக (உலக நாடுகளின் வரிசையில் முதல் 20 விழுக்காட்டிற்குள்) இருந்தது. ஆனால், தற்போது இந்தியாவின் மதிப்பீடு 0.38 ஆகக் குறைந்து கடைசி 20 விழுக்காடு நாடுகளுள் ஒன்றாகப் பின்தங்கியுள்ளது. ஆராய்ச்சிச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பல்கலைக்கழக சுயாட்சி, அடக்குமுறையிலிருந்து பாதுகாப்பு மற்றும் பணி நியமனம்/பதவி உயர்வில் அரசியல் தலையீடின்மை ஆகிய ஐந்து முக்கியக் கோட்பாடுகளின் (Concepts) அடிப்படையில் இந்த AFI மதிப்பீடு நிறுவப்படுகிறது. SAR (Scholars at Risk) என்ற சர்வதேச அமைப்பு, ஆண்டுதோறும் ‘Free to Think’ என்ற அறிக்கையின் மூலம் கல்விச் சுதந்திரத்தின் உலகளாவிய நிலையை ஆய்வு செய்கிறது. AFI என்பது கல்விச் சுதந்திரத்தை அளவிடும் ஒரு புள்ளிவிவரக் குறியீடு என்றால், SAR அறிக்கை என்பது கல்வியாளர்கள் எதிர்கொள்ளும் நேரடித் தாக்குதல்களை ஆவணப்படுத்தும் சாட்சியமாகும். குறிப்பாக, 2025-ஆம் ஆண்டு அறிக்கையில் (ஜூலை 2024 முதல் ஜூன் 2025 வரை), இந்தியாவில் மட்டும் கல்விச் சுதந்திரத்திற்கு எதிராக 38 நேரடிச் சம்பவங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் (SVU) மின் பொறியியல் துறைத் தலைவரும், தலித் உரிமைப் போராளியுமான பேராசிரியர் செங்கையா அவர்களின் ஆளுமையையும் கருத்துகளையும் சகித்துக்கொள்ள இயலாமல், அவர் மதத்தைப் பரப்புவதாகக் அவதூறு கூறி பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் அவர் மீது கொடூரத் தாக்குதலை நடத்தினர். டாட்டா சமூக அறிவியல் நிறுவனத்தில் (TISS), ஒரு மாணவர் தனது பட்டமளிப்பு விழாவில் ‘கெஃபியே’ (Keffiyeh) அணிந்ததற்காக அவரது சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டது. இதேபோல் மும்பை பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமியா மற்றும் உஸ்மானியா பல்கலைக்கழகம் போன்றவை முறையான அனுமதியின்றி விவாதங்கள் அல்லது போராட்டங்கள் நடத்தத் தடை விதித்துள்ளன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU), ஈரான், பாலஸ்தீனம் மற்றும் லெபனான் தூதர்கள் பங்கேற்கவிருந்த கருத்தரங்குகள் ரத்து செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் சிமா வைத்யா (Sima Baidya) பணிநீக்கம் செய்யப்பட்டார். தேசிய அறிவியல் விருதுக்கான (Rashtriya Vigyan Puraskar) இறுதிக்கட்டப் பட்டியலில் இருந்த மூன்று விஞ்ஞானிகள், அரசு கொள்கைகளை விமர்சித்த காரணத்திற்காகப் நீக்கப்பட்டனர்.
ராணுவ நடவடிக்கைகள் குறித்து தனிப்பட்ட சமூக ஊடகப் பக்கத்தில் (Instagram) பதிவிட்ட பொறியியல் மாணவி ஒருவரைப் பல்கலைக்கழகம் இடைநீக்கம் செய்ததுடன், காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். இதேபோல் அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் (Ali Khan Mahmudabad), தனது சமூக ஊடகப் பதிவுகளுக்காகத் தேசப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டார். இதுதவிர, UGC சீர்திருத்தங்கள் வாயிலாக கல்விப்புலம் சாராத, அரசியல் சார்புடைய நபர்களைப் பல்கலைக்கழக உயர் பதவிகளில் அமர்த்துவது, கல்வி நிறுவனங்களின் சுயாட்சியை முற்றிலுமாகச் சிதைக்கிறது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவும் இந்த அதிகாரப் போட்டி, பல்கலைக்கழக நிர்வாகத்தைச் செயலற்றதாக்குவதோடு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தையே கேள்விக்குரியாக்குகிறது.
இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் வேளையிலேயே, ஜம்முவில் புதிதாகச் செயல்படத் தொடங்கியுள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவக் கல்லூரி (Shri Mata Vaishno Devi Medical College) மூடப்பட வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தகுதி (Merit) அடிப்படையில் அக்கல்லூரியில் சேர்க்கை பெற்ற மாணவர்களுள் 85 விழுக்காட்டினர் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இந்துத்துவ அமைப்புகள் முன்னெடுத்த போராட்டங்களின் விளைவாக இந்த ஆணை வெளியாகியுள்ளது. இயற்கைச் சீற்றம், அசாதாரண அரசியல் சூழல் மற்றும் போர்ச் சூழல் எனத் தொடர் நெருக்கடிகளால் தவித்து, கல்வியிலும் மருத்துவ வசதியிலும் ஏற்கனவே மிகவும் பின்தங்கியிருக்கும் அந்த மாநில மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் இதன் மூலம் பறிக்கப்பட்டுள்ளன. பெரும் கனவுகளுடன் வந்த மாணவர்கள் இன்று ஏக்கத்துடன் வீடு திரும்பியிருக்கிறார்கள். இந்தியாவில் கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீது தொடர்ந்து தொடுக்கப்படும் இத்தகைய தாக்குதல்களின் ஒரு நேரடித் தொடர்ச்சியே பேராசிரியர் லோரா சாந்தகுமார் அவர்களின் பணிநீக்கமும் ஆகும்.
பாகுபாடு- மனிதர் மாண்புகளுக்கு எதிரானது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் சமத்துவம், சமூக நீதி, மதச்சார்பின்மை என்ற அடிப்படை மாண்புகள் மீது கட்டமைக்கபபட்டுள்ளது. பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், மரபுகள் சேர்ந்து உயிர்த்திருக்கும் ஒரு மழைக்காடு தான் இந்தியா. இது தழைத்திருக்கச் சாதியம் அற்ற, பாகுபாடற்ற கல்விச் சூழல் என்பது ஒரு அடிப்படைத் தேவை.
லோரா சாந்தகுமார் ஒரு தலித் கிறித்தவப் பின்னணியைக் கொண்டவர். SAR (State of Accountability Report) ஆவணப்படுத்தியுள்ள 38 சம்பவங்களைப் பகுத்து ஆராய்ந்ததில், ஒரு தெளிவான கட்டமைப்பு புலப்படுகிறது. அரசு, தலைவர்கள் மற்றும் அரசின் கொள்கைகளை விமர்சிப்பது என்ற கருப்பொருளைத் தாண்டி, இதில் இலக்கு வைக்கப்படுபவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்களும் தலித்களும் ஆவர்.
இடமும் பொழுதும் நிறுவனத்திற்கு; உயிர் மட்டும் ஆசிரியர்களுக்கு
இன்று கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் மிகச் சொற்பமான ஊதியத்திற்குப் பணியமர்த்தப்படுவதோடு, மிகக் கடுமையான பணிச்சுமைக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். எட்டு மணிநேர வேலை என்பது பெயரளவில்தான்; வீட்டிற்கு வந்த பிறகும் விடைத்தாள் திருத்துவது, அடுத்த நாள் பாடங்களுக்குத் தயாராவது, தகுதி மேம்பாட்டுப் பயிற்சிகள் என ஆசிரியர்களின் வேலைப்பளு முடிவில்லாமல் நீள்கிறது. அதற்கும் மேலாக, ஒரு விற்பனைப் பிரதிநிதியைப் போல (Sales Executive), மாணவர் சேர்க்கைக்கான இலக்குகளை (Target) எட்டச் சொல்லி நிர்வாகங்கள் ஆசிரியர்களைத் துரத்துகின்றன. ஆசிரியர்களின் தனிப்பட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கூட நிறுவனத்தின் விளம்பரங்களைத் தொடர்ந்து பகிரச் சொல்லி வற்புறுத்தும் அராஜகங்கள் அரங்கேறுகின்றன.
இன்னொருபுறம், ஒரு ஆசிரியர் தனது சொந்தக் கருத்துகளைத் தனது தனிப்பட்ட சமூக வலைதளப் பக்கத்தில் பகிரக் கூடாது என்று தடையுத்தரவு பிறப்பிப்பது எந்த மாதிரியான அதிகார மீறல்? நிறுவனத்திற்காக விளம்பரம் செய்ய ஆசிரியரின் சமூக வலைதளத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், அதே ஆசிரியர் தனது சொந்தக் கருத்தைச் சொல்லத் தடை விதிப்பது அறமற்ற முரணாகும். ஆக, ஒரு ஆசிரியர் பணிக்குச் சேர்ந்துவிட்டால், அவரது இடமும் பொழுதும் நிறுவனத்திற்கு; உயிர் மட்டும் ஆசிரியர்களுக்கு என்ற அடிமைத்தனமான நிலைதான் இன்று நிலவுகிறது. SRMIST போன்ற பல்கலைக்கழகங்கள் தங்களது ‘பிராண்ட்’ பிம்பத்தைப் (Brand Image) பாதுகாக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் துணிகின்றன. ஒரு ஆசிரியரின் தனிமனித சுதந்திரம், முறையான மற்றும் நடுநிலையான விசாரணை, மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமையான கருத்துரிமை ஆகிய எதைப் பற்றியும் கவலைகொள்ளாமல் நிர்வாகங்கள் செயல்படுவது, அவர்களுக்குக் கல்வி மீது இருக்கும் அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது. அதிகார வர்க்கத்திற்கும், வன்முறைக் கும்பல்களின் அச்சுறுத்தலுக்கும் அஞ்சி எடுக்கப்படும் இவ்வாறான அதிரடி நடவடிக்கைகள், ஒரு பல்கலைக்கழகத்தின் அடிப்படை அறத்திற்கே எதிரானவை.
சட்டப்பூர்வப் பாதுகாப்பு: ஜேனட் ஜெயபால் வழக்கு முன்னுதாரணம்:
டாக்டர் ஜேனட் ஜெயபால் எதிர் SRM பல்கலைக்கழகம் என்ற வழக்கில், உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அதன்படி, “கல்வி கற்பிப்பது ஒரு ‘பொதுப் பணி’ (Public Function). அரசாங்கத்தின் மானியம் அல்லது அங்கீகாரத்தைப் பெறும் எந்த ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகமும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 12 (Article 12)-இன் கீழ் ஒர் ‘அதிகார அமைப்பு’ (Authority) ஆகும். எனவே, இவற்றுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பிரிவு 226 (Article 226)-இன் கீழ் வழக்குத் தொடர முடியும்.” இந்தத் தீர்ப்பை லோரா சாந்தகுமார் விவகாரத்தில் பொருத்திப் பார்க்கும்போது, SRMIST போன்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தாங்கள் ஒரு தனியார் நிறுவனம் என்று கூறிக்கொண்டு பொறுப்புக்கூறலில் (Accountability) இருந்து விலக முடியாது; தங்கள் இஷ்டத்திற்குப் பணியிடை நீக்கமோ அல்லது பணிநீக்கமோ செய்ய இயலாது. இதன் அடிப்படையில், இந்தியக் குடிமக்களுள் ஒருவராக லோரா சாந்தகுமார் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான ‘கருத்துரிமை’ மற்றும் ‘சுதந்திரத்தை’ பல்கலைக்கழகம் பறிக்க முடியாது. மேலும், நிர்வாகத்தின் நடவடிக்கை ‘ஒருதலைப்பட்சமானது’ (Arbitrary) அல்லது ‘அநீதியானது’ (Unjust) என்றால், அவர் தனது பணிநீக்கத்தை எதிர்த்து நேரடியாக உயர் நீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்ய இந்தத் தீர்ப்பு வழிவகுக்கிறது.
“ஒரு சமூகத்தின் பாதுகாப்பின்மை என்பது ஆயுதங்களால் உருவாவதல்ல; ‘இது எனக்குப் பாதிப்பில்லை’ என்ற அலட்சியத்தால் விளைவது. மௌனம் என்பது வெறும் அமைதி அல்ல, அது அநீதிக்குத் தரும் ஒரு ‘வெற்றுப் பத்திரக்’ (Blank Check) கையெழுத்து. அதில் அதிகாரம் தனக்கு வேண்டிய விலையை எழுதிக்கொள்ளும்” என்று நேமி சந்திரா தனது ‘யாத் வஷேம்’ நூலில் குறிப்பிடுகிறார். லோரா சாந்தகுமார் போன்றவர்களின் மனிதாபிமானத்திற்கான குரல்கள் அதிகாரத்தால் அடக்கப்படுவதை, ஒரு சமூகமாக நாமும் மௌனமாக வேடிக்கை பார்ப்பது எத்தகைய அறவீழ்ச்சியை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று நாம் விலகி நின்று வேடிக்கை பார்க்கும் ஒவ்வோர் அநீதியும், வெறும் செய்திகள் அல்ல; அவை மெல்ல மெல்ல நம்மைச் சுற்றியுள்ள அறத்தின் வெளியை அரணற்றதாக மாற்றிக் கொண்டே இருக்கின்றன.
ஆதாரங்கள் (References):
- Martin Niemöller, “First they came…”, United States Holocaust Memorial Museum.
- Scholars at Risk (SAR), “Free to Think 2024/2025 Report”: https://www.scholarsatrisk.org/resources/free-to-think-2024/
- V-Dem Institute, “Academic Freedom Index (AFI) 2024 Update”: https://www.v-dem.net/our-work/research-programs/academic-freedom/
- Supreme Court of India, “Janet Jeyapaul vs SRM University & Ors”, Civil Appeal No. 14561 of 2015.
- National Human Rights Commission (NHRC) Reports on AFSPA and Kunan Poshpora Incident.








எத்தகைய சூழலில் இன றுள்ள இளைஞர் வளரும் தலைமுறையினர் உள்ளனர் என்பதும்
உணர வேண்டிய புரிந்து ஆற்றவேண்டிய கடமையும் வலுக்கட்டாயமாக உள்ளது.
எதிர் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் புரிவது முதற்கடன்.
அருமை தோழர்
தற்போதைய அரசியல் சூழலில் எவ்வாறு கல்வியாளர் மற்றும் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரியும் வண்ணம் உள்ளது இந்தக் கட்டுரை.
வாழ்த்துகள் 💐