
உலக அளவிலும் இந்தியாவிலும் ஊடகச் சுதந்திரம் எந்த நிலையில் இருக்கிறது என்று ஓரளவுக்குப் பார்த்தோம். இந்தியாவுக்குள் மாநிலங்களின் நிலைமை, முழுச் சுதந்திரத்திற்காக ஊடகவியலாளர்கள் முன்வைக்கும் வழிமுறைகள், அதை அடைவதில் நிறுவனங்களின் பொறுப்பு, இன்று வெகு எளிதானவையாகிவிட்ட காணொளித் தளங்கள் உள்ளிட்ட இணையவழி ஊடகங்களின் தாக்கம், மின்னியல் யுகம் விடுக்கும் சவால்கள் ஆகியவற்றுக்குள் ஒரு சிற்றுலா சென்று வருவோம்.
அத்துடன், ஊடகச் சுதந்திரத்திற்கான குரல்கள் ஒலிக்கிறபோதே, ஊடகளிடமிருந்து சுதந்திரம் என்ற முழக்கமும் எழுகிறது. அதையும் காதில் வாங்கிக்கொள்வோம்.
மாநிலக் காட்சிகள்
இந்தியாவில் தேசிய அளவிலான ஊடகங்களைக் காட்டிலும், மாநிலங்களில் இயங்கும் ஊடகங்கள் நேரடியாக மக்களின் அன்றாடப் பிரச்சினைகளோடும், மாநில உரிமைகளோடும் பிணைக்கப்பட்டுள்ளன. எல்லைகள் இல்லா செய்தியாளர்கள் (எஇசெ–ஆர்எஸ்எஃப்) அமைப்பின் அறிக்கைப்படி ஊடகச் சுதந்திரம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது.
மிகவும் கவலைக்குரிய ஒன்றாகக் கருதப்படுவது ஜம்மு–காஷ்மீர். 2019இல் அதன் சிறப்பு நிலை நீக்கப்பட்ட பிறகு உள்ளூர்ச் செய்தியாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) உள்ளிட்டவை இங்கு அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக அறிக்கை கூறுகிறது.
இடதுசாரித் தீவிரவாதம் முனைப்புடன் இருந்து வந்துள்ள சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் செய்தியாளர்கள் ஒருபுறம் அரசாங்கக் காவல்படையினரின் கெடுபிடிகளுக்கும், மறுபுறம் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கும் கெடுபிடிகளுக்கும் அடிக்கடி இலக்காகின்றனர்.
மணிப்பூர் மாநிலத்தில் இணைய வலை சேவைகளுக்கு விதிக்கப்படும் தடைகளும், செய்தியாளர்கள் தாக்கப்படுவதும் அதை ஒரு “தகவல் கருந்துளை” என மாற்றியிருப்பதாக எஇசெ சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழகமும் கேரளமும்
வட மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் ஊடகவியலாளர்கள் விமர்சனச் சுதந்திரத்தைக் குறிப்பிடத்தக்க அளவுக்குச் சிறப்பாகவே அனுபவிக்கிறார்கள். ஆயினும் அவ்வப்போது சில சவால்களையும் எதிர்கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களோடு செய்திகளை வெளியிடுவோர், யூடியூபர் எனப்படும் காணொளித் தளத்தினர் மீது அவதூறு வழக்குகள் பாய்ந்தது விமர்சனத்திற்குள்ளானது. மணல் கொள்ளை, ஊராட்சி ஊழல் போன்றவற்றை அம்பலப்படுத்தும் கிராமப்புற செய்தியாளர்கள் மிரட்டப்படுவதுண்டு.
மலையாள சகாவுகள்
நாட்டிலேயே பத்திரிகை சுதந்திரத்தில் கேரளம் முன்னிலையில் இருக்கிறது. சில சூழல்களில் அங்கேயும் சில பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. என்றாலும் கூட, கேரளத்தின் கல்வி முன்னேற்றமும் முற்போக்கு இயக்கங்களின் வளர்ச்சியும் சார்ந்த அடித்தளத்தில் கருத்துச் சுதந்திரச் சுடர் அங்கே ஒளிவீசுகிறது.
சட்டப் பேரவையிலும் தலைமைச் செயலகத்திலும் செய்தியாளர்கள் தகவல் சேகரிப்பதற்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைக் கூர்ந்து கவனித்து வருவதாக எஇசெ தெரிவித்துள்ளது. அதேவேளையில் கேரளத்தில் வலுவான பத்திரிகையாளர் சங்க அமைப்புகள் இருப்பதால், செய்தியாளர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும்போது உடனடிப் போராட்டங்கள் பாகுபாடின்றி நடக்கின்றன. சட்ட உதவிகளும் கிடைக்கின்றன.
கட்சி ஊடகங்கள்
இது தொடர்பான ஒரு கருத்து மோதல் நினைவுகூரத்தக்கது. ஒரு தொலைக்காட்சி விவாதம் முடிந்த பிறகு, தேநீர் வழங்கலோடு நடந்த உரையாடல் அது. அதில் பங்கேற்ற ஊடகவியலாளர் ஒருவர், கருத்துச் சுதந்திரத்திற்கு அரசியல் அழுத்தம் ஒரு முக்கியமான தடையாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். “ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் சொந்தமான பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் அதிகம் இருப்பதால், அவற்றின் செய்தியாளர்கள் கெடுபிடிகளுக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்குப் பணிச்சுமை ஏற்றப்படுகிறது. மறைமுக அழுத்தங்களும் ஏற்படுகின்றன. அவர்களால் நடுநிலையாகச் செயல்பட முடிவதில்லை,” என்றார்.
எனது கருத்தைக் கேட்டார், அப்போதும் நெறியாளராகச் செயல்பட்ட நண்பர். “நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிற பத்திரிகையிலிருந்துதான் வருகிறேன், அது எல்லோருக்கும் தெரியும். இயக்கத்தின் இலக்கோடும் பாதையோடும் கொள்கைப்பூர்வமாகவும், சொந்த ஆய்வின் அடிப்படையிலும் நான் முழுமையாக ஒத்துப்போய்ச் பணியாற்றுகிறேன். எனக்கு எந்தவிதமான கெடுபிடியும் அழுத்தமும் இல்லையே…” என்று கூறினேன்.
பொது ஊடகங்கள் இருக்கிறபோது அரசியல் கட்சிகளுக்குச் சொந்தமாகப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் தேவைதானா என்ற கேள்வியை முன்னவர் எழுப்பினார். “பொது ஊடகங்கள் என்று சொல்லிக்கொண்டாலும், எல்லாக் கட்சிகளின் செய்திகளையும் நடுநிலையோடெல்லாம் வெளியிடுவதில்லை. குறிப்பாக இடதுசாரிக் கட்சிகளின் அறிவிப்புகளையோ, கம்யூனிஸ்ட் தலைவர்களின் பேச்சுகளையோ, மக்களுக்கான போராட்டங்களையோ எந்த அளவுக்குச் செய்தியாக்குகிறார்கள்? ஆகவே, கட்சி உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இயக்க நிலைப்பாடுகளை முழுமையாகச் சொல்வதற்குச் சொந்த ஊடகங்கள் தேவைதான். ஏன், உங்களுடைய பத்திரிகையிலேயே கூட இந்த இந்தக் கட்சிக்கு இவ்வளவு இவ்வளவு இடம் கொடுத்தால் போதும் என்ற முடிவோடுதானே செய்திகளை வெளியிடுகிறீர்கள்? அது உங்கள் உரிமைதான், அதை நான் மறுக்கவில்லை,” என்று கூறினேன்.
இந்தக் கட்டுரையைத் தட்டச்சிக்கொண்டிருக்கிற நேரத்தில், 2026 சட்டமன்றத் தேர்தல் களச் செய்திகளில் கம்யூனிஸ்ட் தலைவர்களின் பரப்புரைகளும், தலித் இயக்கங்களின் குரல்களும் எத்தனை சதவீதம் இடம்பெறுகின்றன என்று ஒரு கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற எண்ணம் ஏற்படத்தான் செய்கிறது.
முடக்குவதற்கு முடுக்கப்படும் சட்டங்கள்

இந்தியாவில் ஒன்றிய அரசாங்கத்தாலும் மாநில அரசாங்கங்களாலும் விமர்சனச் சுதந்திரத்தை முடக்கப் பின்வரும் சட்டங்கள் முடுக்கிவிடப்படுகின்றன:
தண்டனைச் சட்டம் பிரிவு 153ஏ: வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்குதல். மதம், இனம், மொழி அடிப்படையில் மோதலைத் தூண்டியதாகக் கூறி செய்தியாளர்கள் மீது, இப்போது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) என்று மாற்றப்பட்டுள்ள இந்தச் சட்டம் அடிக்கடி பாய விடப்படுகிறது.
பிரிவு 505: பொதுமக்களிடையே அச்சத்தை அல்லது வதந்தியைப் பரப்புதல். அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் செய்திகளை ‘வதந்தி’ என வகைப்படுத்தி இவ்வழக்கு தொடரப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66A: இந்தப் பிரிவு உச்சநீதிமன்றத்தால் நீக்கப்பட்டுவிட்டது. இருந்தபோதிலும் இன்னும் சில மாநிலங்களில் காவல்துறையினர் இதைப் பயன்படுத்துவதாகப் புகார்கள் உள்ளன.
குண்டர் சட்டம்: தமிழ்நாட்டில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் கூறி, விசாரணையின்றி ஓராண்டு வரை சிறையில் அடைக்க இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. நீதிமன்றமே இதை விமர்சித்துள்ளது.
பாதுகாப்புக் கவலைகள்
இவையன்றி, இந்தியாவில் செய்தியாளர்களின் பாதுகாப்பு குறித்த முக்கியமான கவலைகளையும் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
துன்புறுத்தும் சட்டக் கைகள்: செய்தியாளர்கள் மீது தேசத்துரோகம் மற்றும் அவதூறு வழக்குகள் தொடரப்படுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் செய்தியாளர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்.
டிஜிட்டல் கண்காணிப்பு: ‘பெகாசஸ்’ போன்ற உளவு மென்பொருட்கள் மூலம் செய்தியாளர்களின் கைப்பேசிகள் கண்காணிக்கப்படுவது அவர்களின் ரகசியத்தன்மைக்கும் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இணையவழி (சைபர்) துன்புறுத்தல்: குறிப்பாகச் செய்தியாளர்களாக உள்ள பெண்கள் சமூக வலைத்தளங்களில் மிக மோசமான பாலியல் வக்கிரத்துடன் மிரட்டல்களுக்கும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அவதூறுகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இது அவர்கள் தங்களைத் தாங்களே தணிக்கை செய்துகொள்ளத் தூண்டுகிறது.
உயிருக்கு ஆபத்து: புலனாய்வுச் செய்தியாளர்கள், குறிப்பாக மணல் மாஃபியா அல்லது உள்ளூர் ஊழல்களை வெளிக்கொண்டு வருபவர்கள், மர்மமான முறையில் தாக்கப்படுவது அல்லது கொல்லப்படுவது தொடர்கிறது.
ஊடக உடைமை: கட்சிகள் சொந்த ஊடகங்களை நடத்துவது நடுநிலைக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று ஒருவர் பேசியதைக் கவனித்தோம் அல்லவா? ஆனால் இந்தியா முழுதும் பரவியிருக்கும் பெரிய செய்தி நிறுவனங்களில் பெரும்பாலானவை ஒரு சில பெருந்தலைகளின் (அம்பானி, அதானி போன்றவர்கள்) கைகளில் இருப்பது, செய்திகளின் நடுநிலைமையைப் பாதிப்பதாக எஇசெ அறிக்கையைத் தொகுத்தவர்கள் விமர்சிக்கிறார்கள். இதைச் சிறு கும்பலின் கட்டுப்பாட்டு வலை (ஒலிகார்ச்சிக் கன்ட்ரோல்) என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சுதந்திரத்தைச் சுதந்திரமாக உறுதிப்படுத்த
ஆசிரியரின் அதிகாரம்: விளம்பரத் துறையிடமிருந்து ஆசிரியர் துறை (எடிட்டோரியல்) முழுமையாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஊடக அக்கறையாளர்கள் கூறுகிறார்கள். வணிகம் சார்ந்த விளம்பரத் துறையின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, செய்திகளின் தரத்தையும் நேர்மையையும் முடிவு செய்யும் அதிகாரம் ஆசிரியருக்கே இருக்க வேண்டும் என்கிறார்கள். அதாவது, விளம்பர வருவாயைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட அரசாங்கத் துறையின் அல்லது தனியார் நிறுவனத்தின் குறிப்பிட்ட முறைகேடு தொடர்பான செய்தியை வெளியிட வேண்டாம் என்று ஆசிரியர் குழுவை விளம்பரத் துறையினர் கட்டாயப்படுத்தக் கூடாது. (அப்படி நடக்கிறது என்பது தெரியவருகிறதல்லவா?)
முழுமையான ஊடகச் சுதந்திரத்தை உறுதி செய்ய இதழியல் ஆர்எஸ்எஃப் அமைப்பும் வல்லுநர்களும் பின்வரும் சில முக்கிய வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறார்கள்:
நிதிச் சுதந்திரம்: அரசாங்கத்தையோ அதிகார வர்க்கத்தையோ சார்ந்திருக்காமல், ஊடகங்கள் சுயமாக இயங்குவதற்கான நிதி ஆதாரங்களை உறுதி செய்ய வேண்டும்.
பாதுகாப்புத் திட்டங்கள்: செய்தியாளர்களைப் பாதுகாக்க நாடுகளின் அரசுகள் தேசிய அளவிலான பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
சட்டச் சீர்திருத்தங்கள்: மாற்றுக்கருத்துகளை ஒடுக்கப் பயன்படுத்தப்படும் தவறான சட்டங்களைத் திருத்த வேண்டும்.
ஏஐ நெறிமுறைகள்: போலிச் செய்திகளைத் தவிர்க்க, இதழியலில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
ஊடகங்களின் சமூகப் பொறுப்பு
உன்னதமான ஊடகச் சுதந்திரம் பூட்டில்லாதுதான், ஆனால் பொறுப்பில்லாதது அல்ல. “ஊடகச் சுதந்திரம் பற்றிப் பேசுகிறீர்களே, ஊடகங்களிடமிருந்து சுதந்திரம் பற்றியும் பேச மாட்டீர்களா,” என்று முகநூல் பதிவுக்கான பின்னூட்டத்தில் அன்பர் ஒருவர் கேட்டிருந்தது நினைவுக்கு வருகிறது.
பரபரப்புக்காகச் செய்திகளைத் திரிப்பதைத் தவிர்த்து, உண்மையின் பக்கம் நிற்கிற அறம் சார் இதழியலை உயர்த்திப் பிடித்தல்; விளிம்புநிலையில் நிறுத்தப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தல்; வெறும் அதிகார மையங்களின் செய்தித் தொடர்புச் சாதனமாக இல்லாமல், சமூக நியாயங்களை உரக்கச் சொல்லும் கருவியாக இயங்குதல்; கார்ப்பரேட் யுகத்தின் தூதர்களாகிவிடாமல் பொதுநீதித் தொண்டர்களாக உழைத்தல் – இவையாவும் உளச்சான்றோடு கடைப்பிடிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஊடகச் சுதந்திரம் முழுமையடையும்.
இணைய ஊடகங்களின் தாக்கம்
வழமையான ஊடக நிறுவனங்கள் (அச்சு/தொலைக்காட்சி) சொல்லத் தயங்கும் செய்திகளையும் கருத்துகளையும் விமர்சனங்களையும் இன்று இணைய ஊடகங்கள் துணிச்சலாக முன்வைக்கின்றன. அதன் நேர்மறைத் தாக்கமாக, எளிய மனிதர்களும் ஊடகவியலாளராக (சிட்டிசன் ஜர்னலிஸ்ட்) மாற முடிகிறது. காட்சிகளைத் தெளிவாகப் ஒளிப்பதிவு செய்ய உதவும் கூர்மையான கேமராவுடனான நவீன கைப்பேசிகளின் வருகை இதை சாத்தியமாக்கியிருக்கிறது. அது கையில் இருந்தால் சாக்கடை உடைப்பு, சாதி ஆணவம், லஞ்சப் பரிமாற்றம், வஞ்சக ஒப்பந்தம் என எந்த அநீதியின் மீதும் வெளிச்சம் பாய்ச்சி உலகத்திற்குக் காட்ட முடியும் என்ற நிலை உருவெடுத்திருக்கிறது.
எதிர்மறைத் தாக்கம் இல்லாமல் போய்விடவில்லை. சரிபார்க்கப்படாத செய்திகள் காட்டுத் தீயாகப் பரவுவதும், உணர்ச்சிவசப்படும் தலைப்புகள் மூலம் தவறான புரிதல்களை உருவாக்குவதும் பெரிய சிக்கலாக முன்னுக்கு வந்துள்ளன. உண்மையையே அசர வைக்கும் போலிப் படங்கள் தீய உள்நோக்கத்துடன் வைரல் வண்டியில் ஏற்றப்படுகின்றன, குறிவைக்கப்படுகிறவர்களுக்குக் கடும் பாதிப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.
முள்ளை எடுக்கும் முள் போல, மின்னியல் (டிஜிட்டல்) தொழில்நுட்பத்தால் புனையப்படும் போலிக் காட்சிகளைக் கண்டறிவதற்கும் அதே தொழில்நுட்பம் கைகொடுக்கிறது.
மின்னியல் யுகத்தின் சவால்கள்
வாசகர்களுக்கு அவர்கள் விரும்புவதை மட்டுமே கொடுக்கும் தொழில்நுட்ப முறை, மாற்றுக் கருத்துக்களுக்கான கதவுகளை மூடிவிடுகிறது. அத்துடன், அவர்கள் எதை விரும்ப வேண்டும் என்றும் நுட்பமான முறைகளில் மூளைக் கறையாக ஏற்றப்படுகிறது.
டிஜிட்டல் தளங்களில் தரம் வாய்ந்த ஊடகவியலை முன்னெடுக்கத் தேவையான நிதி ஆதாரம் பெரிய சவாலாக உள்ளது. இதனால் “பெய்டு நியூஸ்” எனப்படும் விலைக்கு வாங்கிய செய்திகள் என்ற கலாச்சாரம் முன்னிலும் வேகமாக, பரவலாக ஊடுருவுகிறது. நொடிக்கு நூறு செய்திகள் வந்து கொட்டும் நிலையில், எது உண்மை, எது முக்கியம் என்று பகுத்தறியும் திறனை வாசகர்களுக்கு உருவாக்குவது கூட ஊடக நெறிப்படி இயங்குவோருக்கு ஒரு சவால்தான்.
இந்தத் தொடரின் தொடக்கத்தில் பேசியது போல, தகவல் தொடர்பால் வளர்ந்தது சமுதாய நாகரிகம். இன்றும் அதையே தொடரும் வரலாறாகத் தக்க வைப்பதற்கான உலகத்தின் ஊடகப் பயணம் வெற்றி பெறும், வெற்றி பெற்றாக வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் புதுப்புது தொழில்நுட்பங்களுக்கு ஊடகம் மாறலாம். அதிகார பீடங்களுக்கு முன் பணியாமல் உண்மையைப் பேசுகிற அடிப்படை அறம் மாறாது. மாறக்கூடாது.

“பத்திரிகைச் சுதந்திரம் இல்லாத ஒரு மக்கள் கூட்டம் தனது மன அற மாண்புகளை இழக்கிறது. ஒரு மனிதருக்கு சுவாசிக்கக் காற்று எவ்வளவு முக்கியமோ, அதேபோல் ஒரு சமூகத்திற்குப் பத்திரிகைச் சுதந்திரம் முக்கியம்” என்றார் ஒரு பத்திரிகையாளருமான கார்ல் மார்க்ஸ். அந்தச் சுதந்திரத்திற்கு எங்கிருந்து விலங்கு மாட்டப்படும் என்றும் அவரே எச்சரிக்கவும் செய்தார்: “பத்திரிகை ஒரு தொழிலாக மாறும்போது, அது உண்மையைப் பேசுவதை விட லாபத்திற்காகவே இயங்கும். அப்போது அது உண்மையான சுதந்திரத்தை இழந்துவிடும்.”
பத்திரிகை என்று அவர் தன் காலத்து அடையாளத்திலிருந்து சொன்னதற்கு நாம் இன்று ஊடகம் என்று விரிவாகப் பொருள்கொள்ளலாம். ஊடக உலகப் பயணத்தில் விரிந்த மனதோடு இணையலாம். உண்மைச் சுதந்திரத்தை நிலைநாட்டி ஊடக நெறியையும் பொதுவுடைமையாக்கலாம்.
–நிறைவு




