அறிவியல் மக்களுக்கே! அறிவியல் சுயசார்புக்கே! அறிவியல் நாட்டின் வளர்ச்சிக்கே! என்ற முழக்கங்களோடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 46 ஆண்டுகளாகத் தமிழ்நாடு முழுவதும் கல்வி, ஆரோக்கியம், சுற்றுச்சூழல், அறிவியல் பிரச்சாரம், பாலின சமத்துவம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கப்பூர்வமான பல்வேறு செயல்பாடுகளைச் செய்து வருகிறது. 39 மாவட்டக் குழுக்கள், 300-க்கும் மேற்பட்ட கிளை அமைப்புகள், கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள் உள்ளிட்ட அறிவியல் மீது ஆர்வம் கொண்ட விவசாயிகள் முதல் விஞ்ஞானிகள் வரை சுமார் 30 ஆயிரம் உறுப்பினர்களுடன் இந்த அமைப்பு தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் 1990-களிலிருந்து நாடு முழுவதும் நடைபெற்று வந்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுகளைத் தமிழ்நாட்டில் கடந்த 35 ஆண்டுகளாகத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தி வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசின் உதவி இல்லாத சூழலிலும், ‘குழந்தைகள் அறிவியல் மாநாடு’ என்ற பெயரில் இதனைத் தொடர்ந்து நடத்தி குழந்தைகளை ஊக்குவித்து வருகிறோம்.
தமிழ்நாடு அரசுடன் அறிவொளி இயக்கம் முதல் இல்லம் தேடிக் கல்வி, வானவில் மன்றம் உள்ளிட்ட கல்வி சார்ந்த திட்டங்களில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து முக்கிய பங்காற்றி வருகிறது.
தேர்தல் நேரத்தில் மக்கள் அறிவியல் சாசன அறிக்கை ஏன்?
தேர்தல் அறிக்கை என்பது தேர்தலில் போட்டியிடும் பிரபலமான அரசியல் கட்சிகள் அதிகாரத்திற்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்பதைச் சொல்லும் ஓர் ஆவணம். ஓர் அரசியல் கட்சியாக இல்லாத, தேர்தலில் போட்டியிடாத அறிவியல் இயக்கம் ஏன் இவ்வாறு ஓர் அறிக்கையை வெளியிட வேண்டும் என்ற கேள்வி எழலாம். அறிவியல் இயக்கம் எந்த அரசியல் கட்சியையும் சாராத இயக்கம்; ஆனால், அறிவியல் இயக்கத்திற்கு என்று ஓர் அரசியல் பார்வை உண்டு. இந்தியா போன்ற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, ஒரு மதச்சார்பற்ற நாடாகத் தொடர்ந்து அதன் விழுமியங்களைப் பாதுகாத்திட வேண்டும் என்று அறிவியல் இயக்கம் விரும்புகிறது. எந்தவொரு நாடும் மாறிவரும் சமூக அமைப்பைப் புரிந்துகொண்டு, நவீன அறிவியல் மாற்றங்களை உள்வாங்கி, சுயசார்பு வளர்ச்சியை நோக்கித் திட்டமிடவில்லை என்றால் அது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கிவிடும். இந்தியாவில் ஏற்கனவே நிலவக்கூடிய சாதி-மத-இன அடிப்படையிலான பழமைவாதக் கருத்துகளை அகற்றி, ஏற்றத்தாழ்வு இல்லாத சமூக அமைப்பை உருவாக்க அறிவியல் இயக்கம் பாடுபடுகிறது. நம் இந்திய நாடும், அதில் ஒரு மாநிலமாகத் திகழும் தமிழ்நாடும் மக்களின் அடிப்படை உரிமைகளாகக் கல்வி மற்றும் ஆரோக்கியத்தைக் கருத வேண்டும்; அவை தரமாகவும் மக்களுக்குக் கட்டணமின்றியும் சமமாகக் கிடைக்க வேண்டும். மேலும், ஆரோக்கியமான மனித சமூகம் வாழச் சுற்றுச்சூழல் பாதிப்படையாத வகையில் இருப்பது அவசியம். இவற்றுடன் அறிவியல் மனப்பான்மை, பாலின சமத்துவம் உள்ளிட்ட ஐந்து தலைப்புகளின் கீழ் மக்கள் அறிவியல் சாசனத்தின் கோரிக்கைகள் அடங்கியுள்ளன.
வெவ்வேறு சூழ்நிலைகளில் ஆளும் அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை அறிவியல் இயக்கம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கட்சிப் பாகுபாடின்றி நடைபெறவிருக்கும் 17ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளையும் சந்தித்து, ‘மக்கள் அறிவியல் சாசனம்’ என்ற பெயரில் சில கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறோம். அதன் சாராம்சத்தைச் சுருக்கமாகத் தருகிறேன்.
1. கல்வி:
மத்திய அரசு அனைத்து மாநில உரிமைகளையும் பறித்து, பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மத்தியப் பட்டியலுக்கு மாற்றும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறது. உயர்கல்வி முதல் பள்ளிக்கல்வி வரை அனைத்தையும் ஒற்றை அதிகார வளையத்திற்குள் கொண்டுவர முயல்கிறது. இதை எதிர்க்கும் விதமாகத் தமிழ்நாட்டில் ‘மாநிலக் கல்விக் கொள்கை’ அமலாக்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கையை முன்வைக்கிறது. திமுக – அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இது இடம் பெறவில்லை. கடந்த திமுக ஆட்சியில் ஏற்கனவே இதற்கான முயற்சிகள் தொடங்கினாலும், முழு வடிவம் பெறாமல் தொடக்க நிலையிலேயே தேங்கி நிற்கிறது. மாநிலக் கல்விக் கொள்கையை அமலாக்க உறுதியான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழ்நாட்டில் உள்ள பிரத்யேகமான கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோருகிறோம்.
உதாரணமாக:
- பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 58,800 பள்ளிகள் இருப்பதாக மாநிலக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டுப் புள்ளிவிவரப்படி, 80% பள்ளிகளில் கணினிகள் இருந்தாலும் 18% பள்ளிகளில் தான் இணையதள வசதி உள்ளது. அதாவது கிட்டத்தட்ட 48 ஆயிரம் பள்ளிகளில் இணைய வசதியே இல்லை என்ற மோசமான நிலை நீடிக்கிறது. இந்த நிலை சரி செய்யப்பட வேண்டும்.
- மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் திட்டங்களான விக்சித் பாரத் உள்ளிட்டவற்றைத் தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது.
- மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கும் நிதியானது நிதிப் பங்கீடாக இருக்க வேண்டுமே தவிர, திட்டங்களின் அடிப்படையில் இருக்கக் கூடாது. ஒருவேளை மத்திய அரசு திட்டங்களை அமல்படுத்த மாநில அரசை நிர்பந்தித்தாலும் கூட, அதை ஏற்கக் கூடாது.
- மத்திய அரசு திணிக்கும் அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்து, +2 மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்விக்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
- சாதியப் பாகுபாடுகளைக் களைய நீதியரசர் சந்துருவின் ஆய்வறிக்கையை அமலாக்க வேண்டும்.
- பகுதி நேர ஆசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் ஆகியோரின் பணி நிரந்தரக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.
- அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மேம்படுத்தப்பட வேண்டும். சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
- அரசு மாதிரிப் பள்ளிகளில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் வாய்ப்புகளும் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் கிடைக்க வேண்டும்.
- தனியார் பள்ளி/கல்லூரிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளை தடுக்கப்பட வேண்டும். அரசு பொதுக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
- கார்ப்பரேட் தனியார் கல்விக்கான பயிற்சி மையங்களைத் தடை செய்ய வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கல்வி சார்ந்து முன்வைக்கப்பட்டுள்ளன.
2. ஆரோக்கியம்:
- அனைவருக்கும் சமமான இலவச சுகாதார வசதியை உறுதி செய்யும் வகையில் ‘ஆரோக்கிய நலவாழ்வு உரிமைச் சட்டம்’ அமலாக்கப்பட வேண்டும். சுகாதாரத்திற்கான கோரிக்கைகள் பெரும்பாலும் இந்தச் சட்ட வடிவத்திற்குள் வந்துவிடும். இதை வலியுறுத்திப் பல கூட்டு இயக்கங்களை அறிவியல் இயக்கம் நடத்தியுள்ளது. ஆனாலும், இது திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகளின் அறிக்கையில் இடம்பெறவில்லை.
- இன்றைய மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு கூடுதல் ஆரம்ப சுகாதார மையங்களை அமைப்பதோடு, அங்கு பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்கிறோம்.
- கிராமப்புறங்களில் துணை சுகாதார மையங்கள் சிறப்பாக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாலை நேரக் கிளினிக்குகளைக் கிராமப்புறங்களில் அரசே நடத்த வேண்டும்.
- கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகளை முறைப்படுத்த வேண்டும். மனிதர்களை நேரடியாக இப்பணியில் ஈடுபடுத்தக் கூடாது.
- தனியார் மருத்துவமனைகள் காப்பீட்டுத் தொகை போகக் கூடுதலாகப் பணம் வசூலிப்பதைத் தடை செய்ய வேண்டும்
உள்ளிட்ட ஆரோக்கியம் சார்ந்த கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்துள்ளோம்.
3. சுற்றுச்சூழல்:
- சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA-2020) சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பலவீனப்படுத்துகிறது. அது ரத்து செய்யப்பட வேண்டும்.
- கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகள் அடிக்கடி மீறப்படுகின்றன. அதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கை தேவை. கடலோர மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிப்படையாதவாறு திட்டங்கள் இருக்க வேண்டும்.
- பலவீனமான கழிவு மேலாண்மை நிலவுகிறது. திடக்கழிவு, மருத்துவக் கழிவுகள் மற்றும் மின்னணுக் கழிவுகள் ஆகியவை முறையாக மறுசுழற்சிக்கோ அல்லது சூழலியல் பாதிப்படையாதவாறோ அகற்றப்பட வேண்டும்.
4. அறிவியல் பிரச்சாரம்:
- மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் ‘மூடநம்பிக்கை ஒழிப்பு மற்றும் தடுப்புச் சட்டத்தை’ வலியுறுத்துகிறோம். சாதாரண உழைக்கும் மக்களை இந்தச் சுரண்டலிலிருந்து விடுவிக்க இச்சட்டம் பயன்படும். இந்தச் சட்ட வடிவம் குறித்தும் திமுக-அதிமுக தேர்தல் அறிக்கைகளில் இல்லை.
- அறிவியல் கள ஆய்வு மேற்கொண்டு மூடநம்பிக்கை குறித்த தகவல்களை அறிவியல் இயக்கம் சேகரித்துள்ளது. அந்த அனுபவத்திலிருந்தும் பல்வேறு சம்பவங்களை அறிந்த வகையிலும் இச்சட்டம் தமிழ்நாட்டிற்கு அவசியம் தேவையெனக் கருதுகிறோம்.
- வானவில் மன்றப் பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்; அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இது நீட்டிக்கப்பட வேண்டும். நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை இத்திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
- அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மதம் சார்ந்த பிரச்சாரச் சொற்பொழிவுகள் தடை செய்யப்பட வேண்டும். சட்டப்பிரிவு
- 51(A-h)-இல் கூறப்பட்டுள்ள அறிவியல் மனப்பான்மை சார்ந்த செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும்.
5. பெண்கள் நலன் மற்றும் பாலின சமத்துவம்:
- வேலைகளுக்குச் செல்லும் பெண்களின் நலன் காக்க, பகல் நேர மழலையர் காப்பகம் மற்றும் முதியோர் காப்பகங்களை அரசே சிறப்பாக நடத்த வேண்டும்.
- மாநில, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளூர் அமைப்புகளின் திட்டக் குழுக்களில் சுமார் 50% பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும்.
- பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் கல்வித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
- அனைத்து மாணவிகளுக்கும் எவ்விதக் கட்டணமுமின்றி உயர்கல்வியை உறுதி செய்ய வேண்டும்.
- ஆராய்ச்சிப் படிப்புகளில் பயிலும் பெண்களுக்குக் குடும்பப் பொறுப்புகள் இடையூறு ஏற்படாத வகையில் அவர்களைப் பாதுகாத்து, ஆய்வுப் பணிகளை முழுமையாக முடிக்க உதவ வேண்டும்.
- மாநில மகளிர் ஆணையத்தை அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட வேண்டும்.
மேலே குறிப்பிட்ட பல பரிந்துரைகள் தமிழ்நாடு முன்னேற்றம் அடைவதற்கும், சமூக அமைப்பு ஆக்கப்பூர்வமான வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்கும் அவசியம் எனக் கருதுகிறோம். எனவே, கட்சிப் பாகுபாடின்றி அனைத்துக் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கும் இந்த மக்கள் சாசன அறிக்கையை முன்வைக்கிறோம். நன்றி!
– மோசஸ் பிரபு







