அரசியல்இந்தியா

இந்திய உயர்கல்வி புராணமயமாகிறதா? – திருநாவுக்கரசு தர்மலிங்கம்

உச்சநீ

யு.ஜி.சி. முன்மொழிவு பற்றிய ஒரு விமர்சனம்:

இந்திய உயர்கல்விக் கட்டமைப்பில் ஒரு முக்கியமான மாற்றத்திற்கான முன்மொழிவாக, இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) புதிய நான்கு ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்புத் திட்டத்தை முன்வைத்துள்ளது. இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, “இந்திய அறிவார்ந்த மரபுகளை” பாடத்திட்டத்தில் இணைப்பது எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்த முயற்சி அறிவியல் மனப்பான்மையையும் விமர்சன சிந்தனையையும் புறக்கணித்து, புராணக் கதைகள் மற்றும் மதம் சார்ந்த நம்பிக்கைகளை கல்வியின் மையத்திற்குள் இழுக்கும் அபாயத்தை இந்த முன்வைப்பு உருவாக்குகிறது. இது, கல்விச் சுதந்திரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்ட மதச்சார்பற்ற கல்வியியல் அணுகுமுறைகளுக்கும் எதிரானதாக இருக்கலாம் என்று ஆழமாக நம்பப்படுகிறது. இதன் அபாயம் என்னவென்றால், அறிவியல் மனப்பான்மை, விமர்சனச் சிந்தனை, கல்விச் சுதந்திரம் ஆகியவற்றை புறக்கணித்து, ஒருதலைப்பட்ச அரசியல்-மதச் சாய்வு கொண்ட கல்வி அமைப்பை உருவாக்குகிறது. புதிய நான்கு ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்புப் பாடத்திட்டத்தில், அரசியல் அறிவியல், சமூகவியல், வணிகவியல், வேதியியல் போன்ற துறைகளில் “புராண இலட்சியங்கள்” மற்றும் “இந்திய கலாச்சாரப் பெருமை” என்பவை முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இந்த முன்வைப்பு, கல்வி என்பது தரவுகள் மற்றும் பகுத்தறிவு அடிப்படையில் வளர வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கைக்கு எதிராகச் செல்லக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது. உதாரணமாக, வணிகவியல் பாடத்தில் “கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு” என்ற பிரிவின் கீழ் ராமராஜ்யம் என்ற புராணக் கோட்பாடு “நல்ல ஆட்சி”க்கான முன்மாதிரியாக கற்பிக்கப்படுகிறது. இது, இன்றைய பொருளாதாரச் சூழ்நிலைகளையும் தொழில்முறை மேலாண்மை முறைகளையும் புறக்கணிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

அரசியல் அறிவியல் துறையில், இந்திய சுதந்திர இயக்கம் பற்றிய புரிதலுக்காக வி.டி. சாவர்க்கரின் “இந்திய சுதந்திரப் போராட்டம்” என்ற புத்தகம் படிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒரு வரலாற்றியல் உண்மைகளைக் காட்டும் நூல் அல்ல, ஒரு கருத்தியல் நிலைப்பாட்டோடு எழுதப்பட்ட உரை. இது, மாணவர்களுக்கு சுதந்திரப் போராட்டம் பற்றிய முழுமையான, பலதரப்பட்ட பார்வைகளை வழங்காமல், ஒரு தரப்பு சுதந்திரப் போராட்டத்திற்குச் சம்பந்தமில்லாத வரலாற்றை மட்டுமே முன்னிறுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. அதேபோல், தீனதயாள் உபாத்யாயா போன்ற இந்துத்துவ சிந்தனையாளர்கள் “நவீன அரசியல் சிந்தனையின்” கீழ் சேர்க்கப்படுவார்கள் என முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, பல்வேறு அரசியல் நோக்குகளையும், மதச்சார்பற்ற அரசியலியல் பார்வைகளையும் பின்பற்றும் மாணவர்களின் சிந்தனையைப் பாழ்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும்.

புதிய பாடத்திட்டத்தில், வியாசர், மனு, கெளடில்யர், நாரதர் போன்ற பண்டைய இந்திய சிந்தனையாளர்கள் “நித்திய ஞானத்தின்” ஆதாரங்களாக அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் இலக்கியம், சட்டம், ஆட்சி மற்றும் ஆன்மிகத் துறைகளில் முக்கிய பங்காற்றியவர்களாக வடிவமைக்கப்படுவது ஒரு கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது. “வேத யுகத்தில் வேதியியல்” என்ற தலைப்பில், ஆயுர்வேத மரபுகள், குண்டலினி ஆற்றல், மற்றும் ‘அணு’ பற்றிய யோசனைகள் பண்டைய காலத்தில் இருந்தது என்று உதாரணமாக முன்வைக்கப்படுகிறது, நவீன அணுக்கோட்பாடு மற்றும் அணு நிறமாலைகள் (atomic spectra) போன்ற அறிவியல் கருத்துகளோடு தொடர்புபடுத்தப்படுகின்றன. இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், இவை அனைத்தும் பழமையான யோசனைகள், தரவுகள் மற்றும் பரிசோதனைகளால் உறுதி செய்யப்படாத கருத்துகள் ஆகும். இதை நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் தொடர்புடையவையெனச் சுட்டிக்காட்டுவது, மாணவர்களிடையே தவறான அறிவியல் புரிதலை உருவாக்கும். மேலும், “பாரதத்தின் கருத்து” என்ற சிறப்பு அத்தியாயம், வேத காலம் முதல் இன்றுவரை இந்திய அரசியல் மற்றும் தத்துவ சிந்தனைகளை ஆராயும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்நோக்கம் பொருள்முதல்வாதம் (materialism), சோதனையால் நிரூபிக்கக்கூடிய அறிவியல் வளர்ச்சி போன்ற நிலைத்த பார்வைகளை விட, ஆன்மீகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால், சமூக அறிவியல் படிக்கும் மாணவர்களுக்குத் தத்துவச் சிந்தனை என்பது பகுத்தறிவின் பயணமல்ல, ஒரு புனித மரபின் தொடர்ச்சியே என்ற எண்ணம் பதியக்கூடும்.

மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு சாதாரண சர்ச்சை போலத் தோன்றலாம். ஆனால், பிரச்சினை எங்கே உருவாகிறது என்றால் – யுஜிசி வழிகாட்டுதல்கள் இந்த மரபுகளை பாடத்திட்டத்தில் கொண்டு வருகிற விதத்தில்தான். அறிவியல்சார் ஆய்வு, ஆதாரங்கள், விமர்சனச் சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் அல்லாமல், ஒருதலைப்பட்சமாகவும், மதம் சார்ந்த புராணங்களின் அடிப்படையிலும் அதை முன்வைக்கிறது. கல்வியாளர்கள் பார்வையில் சொல்லப் போனால், கல்வியின் நோக்கம் மாணவர்களை விமர்சனச் சிந்தனையுடன் வளர்ப்பது. மேலும், அவர்களை “எது சரி? எது தவறு?” என்று சுயமாகக் கேள்வி கேட்கும் நிலைக்கு கொண்டு செல்வதே ஆகும். ஆனால், இன்றைய சூழலில் கல்வி அரசியல் அஜெண்டாவை நிறைவேற்றும் கருவியாக மாறுகிறது. அதாவது, “மாணவர்களைச் சிந்திக்க வைப்பதற்குப் பதிலாக, நம்ப வைப்பதே” (indoctrination) முக்கியமாகிறது.

புராணங்களையும் அறிவியலையும் கலப்பது – கவலைக்குரிய பிரச்சினை ஆகும், உதாரணமாக புராணக் கதைகளையும் அறிவியலையும் சங்கமிக்கச் செய்வது. — “குண்டலினி ஆற்றலை அணு நிறமாலையுடன் ஒப்பிடலாம்” என்ற கருத்தும், அல்லது “வேத நூல்களில் அணு பற்றிய சிந்தனை நவீன அணுக்கோட்பாட்டோடு ஒத்திருக்கிறது” என்ற வாதமும் இதற்குச் சான்றுகள். இந்த மாதிரியான வாதங்கள் விஞ்ஞானத்தின் அடிப்படைச் சிந்தனையைப் புறக்கணிக்கின்றன. ஏனென்றால், அறிவியல் என்பது சோதனை, ஆதாரம், மறுபடியும் நிரூபிக்கக்கூடிய தரவுகள் ஆகியவற்றின் மீதுதான் நிற்கிறது. ஆனால், புராணங்கள் என்பது மதச்சார்ந்த கற்பனைகளும், தத்துவார்த்தக் கருத்துக்களும் தான்; அவை அறிவியலின் சோதனைச் சூழலில் பரிசோதிக்கப்பட முடியாது.

அறிவியல் வளர்ச்சி எப்படிச் சாத்தியமானது?

  • ஒரு கருதுகோளை முன்வைப்பது (Hypothesis)
  • அதனைச் சோதிப்பது (Experiment)
  • தவறாக இருந்தால் மறுப்பது (Falsification)
  • சரியாக இருந்தால் ஆதாரங்களால் நிரூபிப்பது

இந்த வழிமுறைகளால் தான் நவீன அறிவியல் வளர்ந்தது. ஆனால் இதைத் தவிர்த்து, “பழைய வேதங்களில் எல்லாம் ஏற்கனவே இருந்தது” என்று சொல்வது, உண்மையில் அறிவியல் விசாரணையை அவமதிப்பதே ஆகும். கல்வியாளர்களின் பார்வையில் பார்க்கும்போது, இந்த கலப்புச் சிந்தனை அறிவியல் மனப்பான்மையை அடக்கி, மக்கள் விமர்சனச் சிந்தனையிலிருந்து விலகச் செய்யும் அரசியல் யுக்தி ஆகும். புராணங்களையும் இத்தகைய கருத்துக்களையும் “அறிவியல்” என்று சொன்னால், அது மதத்தையும் அரசியலையும் முன்னிறுத்தும்; இதனால் மாணவர்கள் அறிவியலை ஆதாரத்தோடு சிந்திக்கும் பழக்கத்தை இழந்து விடுவார்கள்.

ஆயுர்வேதமும் நவீன அறிவியலும் – ஏன் இந்தக் குழப்பம்?

உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தில் ஆயுர்வேதம் கடந்த காலத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தது என்று கூறப்படுகிறது. மூலிகை மருந்துகள், வாழ்க்கை முறைச் சிந்தனைகள், உணவுப் பழக்க வழக்கங்கள் போன்ற பல கருத்துகள் இன்றும் கூட ஒரு சில மக்களால் பின்பற்றப்படுகின்றன. ஆனால் பிரச்சினை என்னவென்றால், ஆயுர்வேதத்தை நவீன பகுப்பாய்வு வேதியியல் (modern analytical chemistry) அல்லது சோதனை அடிப்படையிலான மருத்துவம் போலவே கருதுவது. இது ஒரு ஆபத்தான குழப்பத்தை உருவாக்குகிறது. ஏனென்றால்?

  • ஆயுர்வேதம் அக்காலத்தில் கிடைத்த அனுபவங்களையும் நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டது.
  • நவீன அறிவியல் என்பது சோதனை, ஆதாரம், மறுபரிசோதனை, தவறாக இருந்தால் மறுப்பு போன்ற முறைகளால் இயங்குகிறது.
  • இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்துவிடுவது, நமது நாகரிகத்தின் பெருமையையும் அறிவையும் குழப்பமாக்குகிறது.

கல்வியாளர்களின் பார்வையில் பார்க்கும்போது, இந்தக் குழப்பம் சாதாரண கல்விசார் பிரச்சினை மட்டும் அல்ல. இது அரசியல் மற்றும் கலாச்சார ஆதிக்கத்தின் கருவி. மாணவர்கள் விமர்சனச் சிந்தனை வளர்த்தால், அவர்கள் சுதந்திரமாகக் கேள்வி கேட்பார்கள். ஆனால் “பழைய மரபுகளை அறிவியலே” என்று போதித்தால், மாணவர்கள் கேள்வி கேட்காமல் நம்பிக்கைகளில் அடிமையாவார்கள். எனவே, ஆயுர்வேதத்தின் பங்களிப்புகளை மதிக்க வேண்டும்; ஆனால் அதை நவீன அறிவியலோடு ஒப்பிடக் கூடாது. கல்வியின் நோக்கம் பழைய பெருமையைப் புகழ்வது மட்டும் அல்ல; மாறாக, புதிய அறிவை உருவாக்கும் திறனை வளர்ப்பதே அதன் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

அறிவியல் மனப்பான்மையும் யுஜிசி வழிகாட்டுதல்களும்

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 51(ஏ)(ஹெச்) என்ன சொல்கிறது? அது, ஒவ்வொரு குடிமகனும் “அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், விசாரணை உணர்வு மற்றும் சீர்திருத்த ஆவலை வளர்க்க வேண்டும்” என்று தெளிவாகக் கூறுகிறது. இது ஒரு சாதாரண ஆலோசனை அல்ல; அரசியலமைப்பு நமக்குக் கொடுத்துள்ள அடிப்படைக் கடமை ஆகும். ஆனால், யுஜிசி சமீபத்தில் வெளியிட்டுள்ள சில வழிகாட்டுதல்கள் இதற்கு நேர்மாறாக நடக்கின்றன. உதாரணமாக, அறிவியல் வகுப்புகளுக்குள் வணிகவியல் (commerce) அல்லது ஆன்மீகம் (spirituality) என்ற பெயரில் “ராம ராஜ்யம்” போன்ற புராணக் கொள்கைகளை பாடமாகச் சேர்க்க முயற்சி செய்யப்படுகிறது.

இன்றைய கல்விக் கொள்கைகளில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், சில அரசியல் சிந்தனையாளர்களுக்கும் மரபுகளுக்கும் மட்டும் விசேஷ முக்கியத்துவம் கொடுக்கப்படுவது தான். நவீன இந்தியாவை வடிவமைத்த தாராளவாத மற்றும் பன்மைத்துவக் குரல்களை எழுப்பிய ஜவஹர்லால் நேரு, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், பெரியார், டாக்டர் லோஹியா போன்ற சிந்தனையாளர்கள் சமத்துவம், மதச்சார்பின்மை, அறிவியல் மனப்பான்மை, ஜனநாயக பன்முகத்தன்மை ஆகிய அடிப்படைகளில் தங்கள் சிந்தனைகளை இந்திய மக்களின் மனதில் நிறுவினார்கள். இக்கருத்துகள் தான் இந்திய அரசியல் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தன. ஆனால், இவ்வகையான குரல்கள் இன்று பாடத்திட்டங்களில் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால் அதே நேரத்தில், இந்து தேசியவாத சித்தாந்தத்துக்கு சேவை செய்தவர்களாகக் கருதப்படும் வி.டி. சாவர்க்கர், தீன்தயாள் உபாத்யாயா போன்றோருக்குப் பாடத்திட்டத்தில் சிறப்பு இடம் வழங்கப்படுகிறது.

இதன் விளைவுகள்:

  • மாணவர்களின் மனதில் ஒருதலைப்பட்ச வரலாறு உருவாகிறது.
  • பன்முக அரசியல் சிந்தனைகளைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு குறைகிறது.
  • ஜனநாயகத்தின் வலிமை — அனைத்துக் கருத்துகளுக்கும் இடமளிப்பது ஆகும் — அது இங்கு பாதிக்கப்படுகிறது.

இந்த அணுகுமுறை கல்வி நிலையத்தை அறிவு வளர்க்கும் இடமாக மாற்றாமல், ஒரு குறிப்பிட்ட அரசியல் கருத்தியலைப் பரப்பும் இடமாக மாற்றுகிறது. உண்மையான கல்வி மாணவர்களை அனைத்து சிந்தனைகளையும் விமர்சன ரீதியில் புரிந்து கொள்ளும் திறன் உள்ளவர்களாக வளர்க்க வேண்டும். எனவே, பாடத்திட்டங்களில் அனைத்து அரசியல் சிந்தனைகளுக்கும் சமமான இடம் கொடுக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து, மற்றவர்களை ஓரங்கட்டுவது கல்வியின் தரத்தையும், இந்தியாவின் ஜனநாயக அடித்தளத்தையும் ஆபத்துக்குள்ளாக்குகிறது.

வரலாறு மற்றும் கல்வி புறக்கணிப்பின் அபாயம்

இன்றைய பாடத்திட்டங்களில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பெரும்பாலும் “சோஷலிஸ்ட்” என்ற ஒற்றை அடையாளத்தில் மட்டுமே அடையாளப்படுத்தப்படுகிறார், அவர் ஆற்றிய மற்ற பங்களிப்புகள் மறைக்கப்படுகின்றன. மேலும், இந்தியச் சமூக மாற்றத்துக்குப் பெரும் பங்களிப்பு செய்த பெரியார் போன்ற சீர்திருத்தவாதிகள், பகுத்தறிவு, மதச்சார்பற்ற கல்வி, அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை வலியுறுத்திய சர் ஹோமி பாபா, மேக்நாத் சஹா போன்ற முக்கிய விஞ்ஞானிகள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றனர். இது சாதாரண தவறல்ல. மாறாக, பாடத்திட்டங்கள் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட பெரும்பான்மைவாத கலாச்சாரக் கதையாடலுக்குள் மாணவர்களைத் தள்ள முயற்சிக்கின்றன என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. இது மிகப் பெரிய அபாயம் ஆகும். உண்மையான உயர்கல்வி என்பது மாணவர்களை பல்வேறு சிந்தனைகளுடனும், அறிவியல் அணுகுமுறையுடனும், விமர்சன விசாரணை ஆற்றலுடனும் வளர்க்கும் இடமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய அணுகுமுறை, அதை ஒரு ஒருதலைப்பட்ச கலாச்சாரப் பிரச்சார இயந்திரமாக மாற்ற முயற்சிக்கிறது. உதாரணமாக, “புராணக் கருத்துக்களைக் கொண்டு நவீன கொள்கைகளை மாற்ற முடியும்” அல்லது “நாகரிகப் பெருமிதத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய நாகரிகத்தை உருவாக்கலாம்” என்ற வாதங்கள் அறிவியலுக்கு விரோதமானவை. இது உண்மையில் முன்னேற்றத்தை நிறுத்தி, கடந்தகாலத்தை தெய்வீகப்படுத்தும் முயற்சி மட்டுமே என்று நம்மால் உணர முடிகிறது.

எச்சரிக்கை

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 51(ஏ)(ஹெச்) ஒவ்வொரு குடிமகனும் “அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், விசாரணை உணர்வு, சீர்திருத்த ஆவலை வளர்க்க வேண்டும்” என்று தெளிவாகக் கூறுகிறது. ஆனால் யு.ஜி.சி. வழிகாட்டுதல்கள் இதற்கு முற்றிலும் முரண்பட்டு நிற்கின்றன. உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது; அதில் முன்னேற வேண்டுமானால், மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மை, ஆதாரபூர்வ சிந்தனை, தொழில்நுட்பத் திறன் அவசியம். புராணங்களை அறிவியலாக்கும் முயற்சிகள் மாணவர்களைக் கட்டாயம் பின்னுக்குத் தள்ளும். கல்வி என்பது கட்டுக்கதைகளை மகிமைப்படுத்தும் கருவி அல்ல; அது அறிவை உருவாக்கி, முன்னேற்றத்தையும் ஜனநாயகத்தையும் வலுப்படுத்தும் தளம் ஆகும். ஆட்சியாளர்கள் இதை உணர வேண்டும்; இல்லையெனில், வரலாறு தானே அவர்களை மாற்றிவிடும்.

திருநாவுக்கரசு தர்மலிங்கம்,

மாநிலத்தலைவர்,

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.