தொடர்கள்

விளம்பர வருமானம் மட்டும்தான் வர்க்கச் சார்பைத் தீர்மானிக்கிறதா?… (ஊடக உலகப் பயணம் – 12)… அ. குமரேசன்

Udaga ulaga payanam 12

“ஊடக நடுநிலை” பற்றிய கேள்வியை எல்லாத் தரப்புச் செய்திகளையும் தருகிறார்களா இல்லையா என்ற கட்சி அரசியல் கோணத்தில் அல்லாமல் வர்க்கம், மதம், சாதி, பாலினம் போன்ற சமூக அடுக்குகளின் அடிப்படையில் ஆராய்வதிலேயே சரியான பதில் கிடைக்கும். சரியாகச் சொல்வதென்றால் இந்த அடுக்குகளில் இருப்பதுதான் உண்மையான அரசியல். வர்க்க நிலைப்பாடு குறித்து ஏற்கெனவே பார்த்தோம். நடுநிலை என்று சொல்லிக்கொண்டு கார்ப்பரேட் முதலாளிகளின் பக்கம் சாய்ந்திருப்பதையும் கண்டோம்.

இந்தச் சாய்வு நிலைக்குக் காரணம் என்ன? அந்த ஊடகக் குழுமங்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் விளம்பர வருமானங்கள் வருகின்றன. பாரம்பரிய ஊடகக் குழுமங்களின் வருவாயில் 40% முதல் 60% சதவீதம் வரையில் விளம்பரங்கள் மூலம் வருவதே. குறிப்பிட்ட ஊடகம் அச்சுப் பத்திரிகையா, தொலைக்காட்சியா, இணையத்தளமா என்பதைப் பொறுத்தும், சந்தை நிலைமையைப் பொறுத்தும் இந்த விளம்பர வருவாய்ப் பங்கு மாறுபடலாம்.

12 advt 1

இவற்றில் அரசாங்க விளம்பரங்களுக்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறது. இந்தியாவில் ஒன்றிய அரசாங்கமும் மாநில அரசாங்கங்களும் தங்களுடைய திட்டங்கள், சாதனைகள், விழிப்புணர்வுப் பரப்புரைகள் ஆகியவற்றை ஊடக விளம்பரங்கள் மூலமே மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றன. ஒன்றிய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகமும், அதன் கீழ் செயல்படும் மத்திய தகவல் தொடர்பு அமைப்பும் விளம்பரங்களை வெளியிடுகின்றன.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஒன்றிய அரசு விளம்பரங்களுக்காக 3,500 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளது. இது ஊடகங்களின் ஒட்டுமொத்த விளம்பர வருமானத்தில் 10% முதல் 15% வரை இருக்கக் கூடும். இதே போல மாநில அரசாங்கங்களும் செய்தி விளம்பரத் துறைகள் மூலம் விளம்பரங்களை வெளியிடுகின்றன.

விளம்பர வருவாயின் பங்கு

இந்திய ஊடகங்களின் மொத்த விளம்பர வருவாயில் பெரும் பங்கு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அள்ளிக் கொடுப்பதுதான். விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் (எஃப்எம்சிஜி) தயாரிப்பு, வங்கிகள், வாகனத் தயாரிப்பு, மென்பொருள் உள்ளிட்ட தொழில் நுட்பப் பொருள்கள், தொலைத்தொடர்பு, மனை வணிகம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஊடக விளம்பரங்களில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளன. இந்தியாவில் மொத்த விளம்பர வருமானத்தில் 70% முதல் 80% வரை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து வருகிறது. சிறிய நிறுவனங்களிடமிருந்து வருவது 5% முதல் 10% வரை இருக்கும்.

“விளம்பர வருமானம் ஊடகங்களின் இதயத் துடிப்பு போன்றது. குறிப்பிட்ட ஊடகத்திற்கு அந்தத் துடிப்பு பலவீனம் அடைவதோ, நின்று போவதோ அதன் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக ஆகிவிடுகிறது,” என்கிறார் ஊடகத்துறை நண்பர்.

இது உண்மைதான். இந்த இதயத் துடிப்புக்குச் சிக்கல் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற கவனத்துடன் செய்திகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுவதும் உண்மைதான். ஆனால், ஊடகக் குழுமங்கள் விளம்பர வருமானத்திற்காக மட்டுமே கார்ப்பரேட் ஆதரவாளர்களாகச் செயல்படுகின்றன என்று புரிந்துகொள்வது, ஒற்றை அறையை மட்டும் பார்த்துவிட்டு முழுக் கட்டடத்தையும் முடிவு செய்வது போலாகிவிடும்.

முழுக் கட்டடம்

கட்டடத்தில் பார்க்க வேண்டிய விரிவான பகுதி – பெரிய ஊடகக் குழுமங்களே கார்ப்பரேட்டுகள்தான். ஊடகக் குழுமங்கள் முதலாளித்துவக் கட்டமைப்பின் பிரிக்க முடியாதவொரு அங்கம். பொதுவான ஊடக அறம் பற்றிப் பேசுகிறவர்களில் மிகச் சிலர்தான் இந்த உண்மையையும் சேர்த்துச் சொல்கிறார்கள்.

12 advt 2

பெரிய தனியார் ஊடக நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. நேரடியாகக் கார்ப்பரேட் நிறுவனங்களாக இயங்குகிற குழுமங்களும் இருக்கின்றன, வேறு துறைகளில் கால் பரப்பியிருக்கும் நிறுவனங்களால் இயக்கப்படும் ஊடகப் பிரிவுகளும் இருக்கின்றன.

எஸ்ஸெல் குரூப் நிறுவனம் நடத்துகிற ஜீ என்டர்டெயின்மென்ட் என்டர்பிரைசஸ், சன் குரூப் நடத்தும் சன் டிவி நெட்வொர்க், ரிலையன்ஸ் நிறுவனம் நடத்துகிற நெட்வொர்க் 18, அதானி குரூப் வாங்கியிருக்கும் . என்டீடிவி ஆகியவை பட்டியலிடப்பட்ட கார்ப்பரேட் குழுமங்கள். பென்னட் கோலமன் அன் கோ லிட்., நடத்துகிற டைம்ஸ் குரூப், லிவிங் மீடியா நடத்தும் இந்தியா டுடே குரூப், சர்க்கார் குடும்பம் நடத்தும் ஏபீபி குரூப். கஸ்தூரி அன் சன்ஸ் நிறுவனத்தின் தி ஹிண்டு குரூப், கோயங்கா குடும்பத்தின் இந்தியன் எக்ஸ்பிரஸ், பாலசுப்பிரமணியன் ஆதித்தன்–பீம்சிங் தளிக்குவேலி ராஜசிங்கம் கூட்டாளிகளின் தந்தி குரூப் ஆகியவை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான். இவற்றில் இந்தியா டுடே நிறுவனம்தான் டிவி டுடே குழுமத்தை நடத்துகிறது. நெட்வொர்க் 18 நிறுவனம் நியூஸ் 18 குழுமத்தை நடத்துகிறது.எஸ்.ஆர்.எம். குழுமத்தின் புதிய தலைமுறை, விவி குரூப் நடத்தும் நியூஸ் 7 உள்பட வேறு பல ஊடகக் குழுமங்களும் கார்ப்பரேட்டுகளாக வளர்ந்திருக்கின்றன.

‘நீயா நானா’ விவாதத்தில்

இவ்வாறாக இந்தியாவின் முக்கிய ஊடக நிறுவனங்களில் 80%–90% வரை கார்ப்பரேட் உரிமம் கொண்டவையே. இவை பெரிய வணிகக் குழுமங்களின் கீழ் இயங்குவதால், விளம்பர வருமானம், தொழில்நுட்ப முதலீடு, விநியோகம் ஆகியவற்றில் முன்னிலை வகிக்கின்றன. இவற்றில் முற்றிலும் ஊடகமாகவே தொடங்கப்பட்ட நிறுவனங்களும் இருக்கின்றன, வேறு தொழில்களில் எடுக்கும் பெருத்த லாபத்துடன் ஊடகங்களைத் தொடங்கிய நிறுவனங்களும் இருக்கின்றன.

12 advt 3

ஆகவே, சொந்த வர்க்க நலன் சார்ந்துதான் பெரும்பாலான ஊடகப் பெருநிறுவனங்களின் செய்தித் தேர்வுகளும் வெளிப்பாடுகளும் இருக்கும். இதையொட்டி, முன்பு விஜய் டிவி நடத்திய ஒரு “நீயா நானா” விவாதத்தில் பங்கேற்றது நினைவுக்கு வருகிறது. நேரடி ஒளிபரப்பு அல்லாத அந்த அந்த நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

அரசியல் கட்சிகள் எந்த அளவுக்கு மக்களிடையே தங்கள் கொள்கைகளைக் கொண்டுசென்றிருக்கின்றன என்ற கேள்வியை முன்வைத்தார் நெறியாளர் கோபிநாத். எனக்கு முன் பேசியவர், கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றி மக்களுக்குத் தெரியவில்லை, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தால் முன்னேற முடியாது என்று நினைக்கிறார்கள் என்ற கருத்தைக் கூறினார். அதற்கு என்ன காரணம் என்று நெறியாளர் கேட்டபோது, மக்களுக்கு அதில் ஆர்வமில்லை, கமயூனிஸ்ட்டுகளும் போதுமான முயற்சிகள் எடுக்கவில்லை என்ற பொருளில் அவர் விளக்கமளித்தார்.

அப்போது நான் எழுந்து, “என்னுடைய ஒரு கருத்தைக் கூற விரும்புகிறேன். வேண்டுமானால் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறபோது எடிட் செய்துகொள்ளுங்கள்,” என்று சொன்னேன். என்னிடம் ஒலிவாங்கியைக் கொடுத்தார் கோபிநாத். “கம்யூனிஸ்ட்டுகள் வழக்கமான நடைமுறைகளிலிருந்து மாறுபட்டு சரியான அணுகுமுறைகளையும் கூடுதல் முயற்சிகளையும் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில், இந்த நிலைமைக்கு நீங்களும் ஒரு முக்கியமான காரணம்,” என்றேன்.

“நீங்கள்” என்று நான் குறிப்பிட்டது தன்னை அல்ல என்று புரிந்துகொண்ட அவர், “இதில் ஊடகங்களை எப்படிப் பொறுப்பாக்குகிறீர்கள்? இடதுசாரி இயக்கச் செய்திகளையும் கம்யூனிஸ்ட்டுகளின் தியாகங்களையும் ஊடகங்கள் வெளியிடத்தானே செய்கின்றன,” என்று கேட்டார்.

“அதையெல்லாம் வெளியிடுவது உண்மைதான். இப்படியொரு போராட்டம் நடந்தது என்று செய்தி வரும். கம்யூனிஸ்ட் தலைவர்கள் எப்படி எளிமையாக வாழ்கிறார்கள் என்று காட்டப்படும். சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தும் வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள், பஸ்சில் பயணம் செய்கிறார்கள், சாதாரண டூவீலர் ஓட்டுகிறார்கள் தெருவோர டீக் கடையில் நின்று டீ வாங்கிக் பருகுகிறார்கள், என்றெல்லாம் சித்தரிக்கப்படும். அதெல்லாம் உண்மை. ஆனால், அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று சொல்லும் ஊடகங்கள், ஒருபோதும் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று சித்தரித்ததில்லை. மக்கள் பிரச்சினைகளுக்கான காரணம் என்ன, தீர்வு என்ன என்று கம்யூனிஸ்ட்டுகள் சொல்வதைக் கொண்டுசெல்வதில்லை. மக்களுக்குக் கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் போவதோடு, இயக்கத்தில் இணைந்தால் இதே போல் பிழைக்கத் தெரியாதவர்களாகத்தான் வாழவேண்டியிருக்கும் என்ற எண்ணமும் ஏற்படுகிறது,” என்றேன்.

முன்னுக்கு வந்த கோரிக்கை

அந்த விவாதம் ஒளிபரப்பப்பட்டபோது, இந்தக் கருத்து அப்படியே இடம் பெற்றது. கிடைக்கும் இடைவெளிகளில் உழைப்பாளி வர்க்கத்தினரின் பேராட்டச் செய்திகளும் ஓரளவு இடம்பெறுவதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று உழைக்கும் மக்கள் பெருமளவுக்கு ஊடகச் சந்தாதாரர்களாக இருக்கிறார்கள். இரண்டாவது, ஆசிரியர் குழுக்களில் உள்ளவர்களுக்கு இருக்கக்கூடிய, தொழிலாளர் தரப்பு நியாயங்களையும் வெளியிட வேண்டும் என்ற ஊடக அறம்.

இத்தகைய பின்னணியில், சில ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகச் சுதந்திரத்தை ஆதரிப்போர் ஆகியோர் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்தனர்: வேறு தொழில்துறைகளில் ஈடுபட்டிருக்கும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊடகத் துறையில் நுழைய அனுமதிக்கக்கூடாது என்பதே அந்தக் கோரிக்கை. ஊடக உள்ளடக்கத்தில் வணிக உரிமையின் தலையீட்டால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும், பாகுபாடின்றி செய்தி வழங்கலை உறுதிப்படுத்தவும், பத்திரிகையாளர்கள் கெடுபிடியின்றி சுதந்திரமாகப் புலனாய்வுச் செய்திகளைத் திரட்டி வெளியிடவும், மக்கள் நலன்களுக்கு எதிரான தகவல்களை வடிகட்டவும் இந்தக் கட்டுப்பாடு தேவை என்று வாதிட்டனர்.

இந்தக் கோரிக்கையை இந்தியப் பத்திரிகை மன்றம், இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் விவாதித்தன. நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது ஆயினும் அப்படிப்பட்ட சட்டம் எதுவும் கொண்டுவரப்படவில்லை. குறிப்பிட்ட பெரு நிறுவனத்தினர் அந்தச் சட்டம் வருவதைத் தடுத்துவிடுவார்கள் என்பதையும், அவர்களுக்கு எதிரான ஒரு சட்டம் கொண்டுவர ஆட்சியாளர்கள் துணிய மாட்டார்கள் என்பதையும் விளக்க வேண்டியதில்லை.

சிவப்பு ஏடுகள்

12 advt 4 lenin

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தீக்கதிர், தேசாபிமானி, கணசக்தி, பிரஜாசக்தி, லோக்லஹர், பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஆகிய ஏடுகளை நடத்துகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜனசக்தி, நியூ ஏஜ் உள்ளிட்ட பத்திரிகைகளை நடத்துகிறது. சிபிஐ (எம்எல்–விடுதலை) கட்சியின் லிபரேஷன், சிபிஐ(எம்எல்–ரெட் ஸ்டார்) நடத்தும் ரெட் ஸ்டார், சகாவு, சிபிஐ(எம்எல்–நியூ டெமாக்ரசி) கட்சியின் புதிய ஜனநாயகம் உள்ளிட்ட பத்திரிகைகள் வருகின்றன. இந்தப் பத்திரிகைகள் தங்களுக்கு நடுநிலை ஒப்பனையெல்லாம்போட்டுக்கொள்வதில்லை. உழைப்பாளி வர்க்கத்தின் ஊடகம் என்று உரத்த அறிவிப்போடுதான் செய்திகளையும் கருத்துகளையும் வெளியிடுகின்றன.

கார்ல் மார்க்ஸ் ஒரு பத்திரிகையாளராகவும் பங்களித்திருக்கிறார். ஊடகச் சுதந்திரம் தொடர்பான விவாதத்தின்போது அவர் இவ்வாறு எழுதினார்: “ஒரு எழுத்தாளர் உயிர்வாழ்வதற்கும் எழுதுவதற்கும் இயலும் வகையில் பணம் ஈட்ட வேண்டும். ஆனால் எந்தக் காரணம் கொண்டும் பணம் பண்ணும் நோக்கத்திற்காக உயிர்வாழவோ எழுதவோ கூடாது.”

12 advt 4 marx

அதே போல, ‘இஸ்கரா’ (தீப்பொறி) என்ற ஏட்டைத் தொடங்கி சிறந்த பத்திரிகையாளராகவும் செயல்பட்ட லெனின் இதழியல் பற்றிக் கூறியிருப்பதும் நினைவில் ஏந்த வேண்டிய கருத்து. “ஒரு செய்தித்தாள் என்பது கூட்டுப் பரப்புரையாளர், கூட்டுக் கிளர்ச்சியாளர் மட்டுமல்ல, அது ஒரு கூட்டு ஒருங்கிணைப்பாளரும் கூட. இந்த வகையில், அதனைக் கட்டுமானத்தில் இருக்கும் கட்டடத்தைச் சுற்றியுள்ள சாரக்கட்டுடன் ஒப்பிடலாம். அந்த சாரக்கட்டு, கட்டடத்தின் வரையறைகளைக் குறிக்கிறது; கட்டுமானப் பணியாளர்களுக்கு இடையேயான தொடர்பை எளிதாக்குகிறது; அவர்கள் தங்களின் வேலையைப் பகிர்ந்து கொள்ளவும், தங்களின் ஒருங்கிணைந்த உழைப்பால் விளைந்த பொதுவான முடிவுகளைக் காணவும் வழிசெய்கிறது.”

கம்யூனிஸ்ட் இயக்கங்களின் ஊடகங்கள் இந்தப் புரிதலோடு இயங்கிக்கொண்டிருக்கின்றன. இதே கொள்கையோடு வர்க்கக் களத்தில் மட்டுமல்லாமல், மதம், சாதி, பாலினம் உள்ளிட்ட பிற களங்களிலும் செயல்படுகின்றன.

தொடரும்

முதல் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-1/
இரண்டாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-2/
மூன்றாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-3/
நான்காவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-4/
ஐந்தாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-5/
ஆறாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-6/
ஏழாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-7
எட்டாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-8
ஒன்பதாவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-9/
பத்தாவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-10/
பதினொராவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-11/