ஊடகம் என்று, செய்திகளையும் சிந்தனைகளையும் கற்பனைகளையும் பல்வேறு வடிவங்களில் மக்களிடம் கொண்டு சேர்க்கிற வண்டியைக் குறிப்பிடுகிறோம். அச்சிதழ், திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, கணினி, கைப்பேசி என அந்த வண்டிகள் ஓடுகின்றன. பெரிய நிறுவனங்கள் நடத்தும் அச்சு மற்றும் மின்னியல் ஊடகங்கள், நண்பர்கள் சேர்ந்து நடத்தும் இணையத்தள வாசிப்பு மற்றும் காணொளி ஊடகங்கள் என்று வகைவகையான வண்டிகள் சாலையிலும் கடலிலும் ஆகாயத்திலும் பறக்கின்றன.
இன்று, உலகம் முழுக்கப் பெரிய நிறுவனங்கள் அச்சிதழ்கள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்களை நடத்துகின்றன. சிறிய அளவில் நண்பர்கள் இணைந்து விளையாட்டுப் போல் தொடங்கிய சமூக ஊடக முயற்சிகள் உலகம் முழுக்க நேயர்களைப் பெற்றிருக்கின்றன. எத்தகைய ஊடக வடிவமானாலும், அதற்கு அடிப்படையான செயல்பாடாக இருப்பது இதழியல். ஆங்கிலத்தில் ஜர்னலிசம். ஊடகப் பயணத்தில் இணைந்து வருவதே இதழியல் வரலாறு.

“விரிந்த பொருளில் சொல்வதானால் முதல் செய்தியேடு அச்சிடப்பட்டபோதே இதழியல் பிறந்துவிட்டது. ஆயினும், இதழியலின் மையக்கூறு அச்சிடுதல் அல். அதுவொரு தற்செயல் நிகழ்வாகும், அல்லது நாம் பொதுவாகச் சொல்கிற நாகரிகம் என்பதன் கிளையாகும். மக்களிடையே சுற்றுக்கு வருவதுதான் இதழியலின் அடிப்படைக் கருத்து,” என்கிறார் பேராசிரியர் பீ.என். அஹூஜா.
இதழியல் குறித்துப் பல புத்தகங்களை எழுதியவரான அவர், தில்லியில் உள்ள இந்திய வெகுமக்கள் தொடர்பியல் கல்வியகம் (ஐஐஎம்சி) உள்ளிட்ட பல ஊடகக் கல்வி நிறுவனங்களில் பயிற்சியளித்தவர், மக்கள் தொடர்பு பற்றிய பல புத்தகங்களை வழங்கியவர். ஊடக உலகம் தொடர்பான ஒரு செவ்வியல் படைப்பு என்று வரவேற்கப்பட்ட ‘தி தியரி அன் பிராக்டிஸ் ஆஃப் ஜர்னலிசம்’ (இதழியல் கோட்பாடும் செயல்முறையும்) என்ற புத்தகத்தில் (1979) மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.
குடுகுடுப்பைக்காரர்கள்
அச்சு இயந்திரம் வருவதற்கு முன்பே, செய்திகளை மக்களிடையே சுற்றுக்கு விடுகிற ஒரு வகையான இதழியல் சேவை இருந்தது என்கிறார் அவர். “ஆட்டோலைக்கஸ் ஒரு சில்லறை வியாபாரி. அற்பமான, கண்டுகொள்ளப்படாத விசயங்களை எடுத்துச் செல்பவர். அநேகமாக, நம் கற்பனை அனுமதிக்குமானால், அவருக்குள் ஒரு இதழியலாளரின் கூறுகள் இருந்திருக்கக்கூடும்,” என்று, “இதழியல் வரலாறு” பற்றிய அத்தியாயத்தில் “இதழியல் – பழசும் புதுசும்” என்ற பகுதியில் குறிப்பிடுகிறார்.

ஆட்டோலைக்கஸ் என்பது வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய “தி வின்டர்ஸ் டேல்” (குளிர்காலக் கதை) என்ற நாடகத்தில் வருகிற கலகலப்பான கதாபாத்திரம். அற்பமான பொருள்களை பொருள்களைக் கவர்ந்துகொள்வது போலவே, கண்டுகொள்ளப்படாத தகவல்களையும் எடுத்துக்கொண்டு ஊருக்குள் பார்க்கிறவர்களிடமெல்லாம் கண்ணும் மூக்கும் வைத்துச் சொல்கிறவர்.

நமது கிராமங்களில் முன்பு குடுகுடுப்பைக்காரர்கள், ஊர் ஊராகச் சுற்றுகிறவர்கள் என்பதால், பல நடப்புகளைத் தெரிந்து வைத்திருப்பார்கள். தம் தொழிலைக் கவனித்துக்கொண்டே ஊராரிடம் அந்தச் செய்திகளை சுவையாகப் புனைவு கலந்து சொல்வார்கள். அவர்களுக்குள்ளேயும் இதழியலாளர் கூறுகள் இருந்தன போலும்! அஹூஜாவுக்குத் தெரிந்திருந்தால் அவர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருப்பார்.
மன்னர்களின் அறிவிப்புகளையும், ஊர்ப்பெரிய மனிதர்கள் கூறுவதையும் தமுக்கடித்துப் பரப்பியவர்கள் இருந்தார்கள். அவர்கள் தங்களின் சொந்தக் கற்பனையைக் கலந்து அந்தச் செய்திகளைப் பரப்பியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் நம் ஊரின் ஆட்டோலைக்கஸ்களும், அவர்களது ஊரின் குடுகுடுப்பைக்காரர்களும் இதழியல் கூறுகளோடு சுற்றி வந்திருக்கிறார்கள். அதாவது, தகவலை வெறும் தகவலாக மட்டும் சொல்லாமல், “என்ன நடந்தது தெரியுமா” என்று சுவைபட விவரித்திருப்பார்கள். அதற்காகக் கற்பனையான குட்டிக் கதைகளையும், பொருத்தமான உவமைகளையும் பயன்படுத்தியிருப்பார்கள்.
நவீனப் பத்திரிகைகளின் பணியை அப்படியே இந்தக் கதாபாத்திரங்களோடு ஒப்பிட முடியாது என்றாலும், ஒரு தொடர்ச்சி இருப்பதை மறுக்கவும் இயலாது. ஊடகங்களில் கற்பனையாகச் செய்திகளை உருவாக்குகிறார்கள் என்று இதைப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. சொல்கிற செய்தியைச் சுவைபட, கதை சொல்வது போல வாசகர்களுக்கு விவரிக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். அப்படி விவரிப்பதால்தான் எல்லாத் திசையிலும் செய்திகள் சிறகடித்துச் சுற்றுகின்றன.
ஊடக நிறுவனங்களில் ஒரு நிகழ்வைச் செய்தியாக்கும் பணிமுறையை “ஸ்டோரி மேக்கிங்” என்றே – அதாவது “கதை செய்தல்” என்றே – குறிப்பிடுகிறார்கள். நவீன குடுகுடுப்பைக்காரர் அல்லது ஆட்டோலைக்கஸ் பணிதானே இது?
இப்படி மக்களிடையே செய்திகளுக்கு ஏற்படும் சுழற்சிதான் “சர்க்குலேஷன்” எனப்படுவது. ஆனால், நடைமுறையில், “சர்க்குலேஷன்” என்ற சொல், பத்திரிகை எத்தனை படிகள் விற்பனையாகிறது என்ற பொருளில் கையாளப்படுகிறது. எத்தனை படிகள் விற்பனையாகிறது என்ற செயல்பாடு தொடர்கிறபோது, செய்தி அத்தனை பேரிடம் சென்றடைகிறது என்ற பயன்பாடு அடங்கியிருப்பதும் உண்மைதான்.
கட்டுரை மணக்கும் காஃபி
காலையில் காஃபி பருகிக்கொண்டே “பேப்பர்” படிக்கிற பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்படியானால் அடுத்ததாக வரும் வரலாற்றுத் தகவல் உங்களுக்குப் பிடிக்கும். 18ம் நூற்றாண்டில் இதழியல் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கதொரு முன்னேற்றம் ஏற்பட்டது. அந்தக் காலக் கட்டத்தில் லண்டன் உள்ளிட்ட இங்கிலாந்து நகரங்களில் “காஃபி ஹவுஸ்” எனப்படும் விடுதிகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. அந்த முக்கியத்துவத்துக்குக் காரணம் சுவையான காஃபி அனுபவம் மட்டுமல்ல, அங்கே முன்னணி இலக்கியவாதிகள் தொடர்ச்சியாக வந்தனர். தனித்தனிக் குழுக்களாக வருவதும், காஃபி உறிஞ்சியபடி இலக்கிய விவகாரங்களை அலசினர். அந்த அலசலில் அரசியல், சமூகம், தனிமனித வாழ்க்கை எல்லாமே அடிபடும்தானே?

முனைப்புடன் செயல்பட்ட கதைஞர்களும் கவிஞர்களும் கட்டுரையாளர்களும், மக்கள் இயக்கங்களுக்காகத் துண்டறிக்கைகள் தயாரிப்போரும் காஃபி இல்லங்களில் கூடுவார்கள். விவாதிப்பார்கள். அந்த விவாதங்களின் விளைச்சல்கள் அவர்களது எழுத்துகளில் பதியமாகும். குறிப்பாகக் கட்டுரை வடிவ வெளிப்பாடுகள் பூத்துக் குலுங்கத் தொடங்கின. கட்டுரை இலக்கியம் என்றே ஒரு கிளை முளைத்து நீண்டது.
இந்த வளர்ச்சிப் போக்குடன் இதழியல் இணைந்தது. செய்திகளைச் சுவைபட எழுதுவது, கட்டுரைகளில் சமகால நடப்புகள் பற்றிப் பேசுவது என பத்திரிகைக் களம் புத்தாக்கம் பெற்றது. குறிப்பிட்ட ஒரு நிகழ்வு பற்றி ஒருவர் பல கோணங்களிலும் விசாரித்து, சொந்தக் கண்ணோட்டம் கலந்து எழுதுவது “செய்திக் கட்டுரை” என்றே வகைப்படுத்தப்படுகிறது.
“இதழியல் கட்டுரை வடிவத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டாக வேண்டியிருக்கிறது, ஏனெனில் அது இலக்கியமும் சமகால வெளிப்பாடுகளும் தமது விருப்பப்படியும் சுவைபடவும் கையாளுகிற பல்வேறு வகைப்பாடுகளோடு உறவாட வேண்டியுள்ளது,” என்கிறார் பேராசிரியர் அஹூஜா.
டீக்கடை பேப்பர்
காஃபி ஹவுஸ் தாக்கம் பற்றிப் படிக்கிறபோது, நம் ஊரில் “டீக்கடை அரசியல்” என்று அடிக்கடி விமர்சிக்கப்படுவது நினைவுக்கு வருகிறது. ஏதோ டீக்கடைகளில் கூடி, அரசியல் பற்றி விவாதிக்கிறவர்கள் ஞானமற்றவர்கள் என்ற கண்ணோட்டத்துடன் அந்த மேட்டுத்தனமான விமர்சனம் வைக்கப்படும்.

உண்மையில், டீக்கடைகளில் பேப்பர் படித்துக்கொண்டே அரசியல் பேசுகிறவர்கள்தான், சுவரெழுத்து முதல் வாக்குச்சாவடி வரையில் ஈடுபடுகிறவர்களாக இருக்கிறார்கள். தேர்தல்களில் முக்கியமான மாறுதல்களை நிகழ்த்துகிறார்கள். பத்திரிகைச் செய்திகளுக்குக் காரணமாகிறார்கள். பெரிய உணவகங்களைப் போல பெரும்பாலான டீக்கடைகளில், “இங்கே அரசியல் பேசாதீர்கள்” என்ற அநாகரிக அறிவிப்பு அட்டை தொங்கவிடப்படுவதில்லை! அவ்வகையில் எளியோர்தம் டீக்கடைகள் என்றுமே நவீனமானவை!
புதியவற்றின் சவால்
நவீன தொழில்நுட்பங்களின் வருகையை மக்களின் கவனத்திற்குப் பத்திரிகைகள் கொண்டுவந்திருக்கின்றன. ஒரு புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படும்போதெல்லாம் செய்தியேடுகள் அதை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. வல்லுநர்கள் தங்களது கண்டுபிடிப்புகள் பத்திரிகைகளில் செய்தியாக வருவதை விரும்பித் தகவல்களை அளிப்பார்கள்.

நான்கு நூற்றாண்டு வரலாறு கொண்ட செய்திப் பத்திரிகை உலகம், இன்று நவீன தொழில்நுட்பங்களின் சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. எல்லாத் தொழில்களிலும், ஏன் கலைப் படைப்பாக்கங்களில் கூட, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட நவீனங்கள் தாக்கம் ஏற்படுத்துகின்றன. வெறும் தாக்கம் மட்டுமல்ல, தங்களுக்கான இடத்தையே நிறுவிக்கொண்டுள்ளன. பத்திரிகை மட்டும் விலகியிருக்க முடியுமா என்ன?
உலகம் முழுதும் 100 பேருக்குக் குறைந்தது 10 பத்திரிகைப் படிகள் என்ற விகிதத்தில் சுழற்சி இருந்தது, அமெரிக்காவில் அந்தக் குறைந்த விகிதம் 8 படிகளாகவும், ஆசியாவில் 4 படிகளாகவும், ஆப்பிரிக்காவில் 1 என்ற அளவிலும் இருந்ததாக யுனெஸ்கோ தெரிவித்திருக்கிறது. இது, 50 ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம். இன்று அது பல மடங்கு குறைந்திருக்கும் என ஊகிக்கலாம்.
குறிப்பாக தற்போதைய நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து “டிஜிட்டல்” நுட்பங்கள் ஒரு புரட்சி போல வேகம் எடுத்தபோது, பெரும்பாலான மேற்கத்திய நாடுகளிலும் சில வளர்ந்த ஆசிய நாடுகளிலும் அச்சுப் பத்திரிகைகளின் சுழற்சி விகிதம் கடுமையாகக் குறைந்துள்ளது. வருவாய் இழப்பு, ஆட்குறைப்பு, பல இதழ்கள் நிறுத்தம் எனப் பெரும் நெருக்கடிகளைப் பத்திரிகை உலகம் சந்தித்துள்ளது. பல முன்னணி ஏடுகள் அச்சிடப்படும் எண்ணிக்கை ஆண்டுதோறும் 5% முதல் 15% வரை குறைந்து வருகிறது.
மேற்கத்திய நாடுகளின் போக்கிற்கு மாறாக, இந்தியா உள்பட ஆசியாவிலும், மையக் கிழக்கு நாடுகளிலும் அச்சிதழ்களின் சுழற்சி குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து வந்தது, அல்லது ஒப்பீட்டளவில் நிலையாக இருந்தது. 2006 –2016 காலகட்டத்தில் இந்தியாவில் நாளிதழ் சுழற்சி 3 கோடியே 91 லட்சம் படிகளிலிருந்து 6 கோடியே 80 லட்சமாக (சுமார் 60%) உயர்ந்தது என்று 2017ல் வந்த ஒரு அறிக்கை குறிப்பிடுகிறது. கல்வியறிவு வளர்ச்சியும், இணையப் பயன்பாடு குறைவாகவே இருந்த ஊரகப் பகுதிகளில் அச்சு ஊடகத்தின் தேவையும் இதற்குக் காரணம் என்று கருதப்பட்டது.
இருப்பினும், அண்மைக் காலமாக இந்தியாவிலும் டிஜிட்டல்மயமாக்கல் அதிகரித்துள்ள நிலையில், இந்த வளர்ச்சி விகிதம் வெகுவாகக் குறைந்திருக்கலாம். பல முன்னணி ஊடக நிறுவனங்கள் தங்களுடைய அச்சுப் பதிப்பை நிறுத்திக்கொண்டு மின்னிதழ் வடிவத்திற்கு மாறிவிட்டன. சில நிறுவனங்கள், அச்சிதழ் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டு இரண்டு வடிவங்களிலும் செயல்படுகின்றன. ஆப்பிரிக்க, மையக் கிழக்கு மண்டலங்களில் சில நாடுகளில் ஓரளவு வளர்ச்சி காணப்பட்டாலும், உலகளாவிய சரிவின் தாக்கம் இருக்கவே செய்கிறது.
டிஜிட்டல் செல்வாக்கு:
புதிய கைப்பேசிகளும் கைக்கணினிகளும் மடிக்கணினிகளும் இணையவழி செய்தித் தளங்களைப் படிக்கத் தருகின்றன. பெரும்பாலான மக்கள் இப்போதெல்லாம் நொடிக்கு நொடி மாறும் செய்திகளை இணையத் தளங்களிலேயே பார்க்க விரும்புகிறார்கள். தனியாக விலைகொடுத்து வாங்கவோ, புதிய செய்திக்காக மறுநாள் காலை வரையில் காத்திருக்கவோ வேண்டியதில்லை என்று மக்கள் கருதுவதைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.
விரிவான செய்திகள், துணுக்குச் செய்திகள், காட்சி வழி செய்திகள், செவியில் கேட்பதற்கு வசதியாக வாசிக்கப்படும் செய்திகள் என்று டிஜிட்டல் பதிப்புகள் களமாடுகின்றன. செய்திகள் மட்டுமல்லாமல், ஆழ்ந்து விவாதிக்கும் கட்டுரைகள், கதைகள், கவிதைகளும் அவற்றில் வரிசை கட்டுகின்றன.
இந்த மாற்றத்திற்குத் தங்களை உட்படுத்திக்கொள்ளாத அச்சிதழ் நிறுவனங்கள் தள்ளாடுகின்றன, போராடுகின்றன. அடர்ந்த இலக்கிய விவாதங்களுக்காகப் படிக்கிற வாசகர்களைக் கொண்ட சில மாத ஏடுகள், சில ஆயிரம் படிகள் என்ற அளவோடு தாக்குப்பிடித்து வருகின்றன. இந்நிலையில், தற்கால நிலவரப்படி 100 பேருக்கு எத்தனை இதழ்கள் என்ற புதிய கணக்கெடுப்பை இனிமேல்தான் யுனெஸ்கோ மேற்கொள்ள வேண்டும்.
முந்தைய கட்டுரையில் பார்த்தது போல, “இன்னுமா ஆண்டிராய்டு போன் வாங்கவில்லை” என்று கேட்கிற இன்றைய காலமும் பழையதாகிவிடும், “இன்னுமா ஆண்டியராய்டு போன் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்,” என்று வினவுகிற புதிய காலம் வந்துவிடும். எது வந்தாலும், என்ன வடிவில் வந்தாலும் ஊடகச் செயல்பாடும் அதன் இதழியல் பயன்பாடும் தொடரும். அதன் அடிப்படையாக இருப்பது மனிதர்களின் தொடர்பாடல் பண்பல்லவா!
ஆற்றில் இறங்குகையில் காலை நனைத்துத் தழுவுவது ஒரே தண்ணீர் அல்ல, அது ஓடிக்கொண்டே இருப்பது. ஆனால் நீரோட்டம் என்ற ஆற்றின் செயல் மாறாமல் இருக்கும். வொர்ட்ஸ்வொர்த் வழங்கிய ஒரு கவிதையின் தாக்கத்தில் ஊற்றெடுத்தது இந்த உவமை. அப்படித்தான் புதிய புதிய மாற்றங்களோடு ஊடகப் பயணம் தொடரும்.
தொழில் நுட்ப நடைமுறைகளுக்கு ஈடுகொடுத்து நிற்கலாம். கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ஒடுக்குமுறைகளை எதிர்கொள்வதுதான் உண்மையான சவால். அதனை ஊடக உலகம் எதிர்கொண்ட அத்தியாயங்களைப் புரட்டுவதற்கு முன், இந்தியாவில் பத்திரிகைப் பயணப் பக்கங்களைக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.
– தொடரும்
முதல் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-1/
இரண்டாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-2/
மூன்றாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-3/
குடுகுடுப்பைக்காரன் முதல் டிஜிட்டல் உலகம் முறை விரிவான தகவல்கள் ஊடகம் வளர்ந்த வரலாறு குறித்து மிக அருமையான கட்டுரை.
பேரன்பு வாழ்த்துக்கள். நன்றிகள்.
நிறைய தகவல்கள் நிறைந்த கட்டுரை ஐயா.. அடுத்தடுத்து கட்டுரைகள் காண்பதற்கு ஏதுவாக கீழே link இருப்பது விடுபட்டாலும் வாசிக்க உதவியாக இருக்கிறது.. உண்மையில் குடுகுடுப்பு காரர்களை இந்த ஒரு பார்வையில் பார்க்கவைத்தது எனக்கு முதன் முறை ஐயா… டீ கடைகளால் அரசியலில் மாற்றம்.. நிறைய மாற்றங்கள் என்று ஒரு இனிதான காலை துவக்கம் அய்யா 🌹🌹❤️