தொடர்கள்வரலாறு

குறியீடுகளிலிருந்து எழுத்துகளுக்கு ஒரு பரிணாமம்…(ஊடக உலகப் பயணம் – 2) – அ. குமரேசன்

குறியீடுகளிலிருந்து எழுத்துகளுக்கு ஒரு பரிணாமம்

இன்றைய உலகின் ஊடக வழிகளில் தகவல்கள் எவ்வளவு வேகமாகப் பரவுகின்றன, யார்யாரைச் சென்றடைகின்றன, என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்றெல்லாம் அறிவோம். நமது இந்தக் கட்டுரைச் சந்திப்பும் கூட  இணையத்தள ஊடகச் சாலையில்தானே நடக்கிறது!

பண்டைய உலகத்தில் தகவல் பரவல் எப்படி நடந்திருக்கும்? எழுத்து உருவாவதற்கு முன் வாய்மொழி, அதற்கும் முன்னதாக (சை)கைமொழி மூலம் தகவல்கள் பகிரப்பட்டன, பரப்பப்பட்டன.

ஆதித் தாத்திகளும் தாத்தன்களும் தாங்கள் கண்டதையும் கற்பனை செய்ததையும் இணைத்துத் தலைமுறை தலைமுறையாகக் கதைகள் சொன்னார்கள். அது ஒரு தொடக்கநிலை ஊடகம். கேட்போருக்கு மனமகிழ்வைத் தந்ததோடு, வாழ்வியல் வழிகாட்டியாகவும் அமைந்த, “கர்ண பரம்பரைக் கதைகள்” (கர்ண என்றால் காது) என்று இன்றளவும் சொல்லப்படுகிற அன்றைய அந்தச் செவிவழிக் கற்பனைகள்தான் பின்னர் பழைய கதைகளோடும், சமூக மரபுகளோடும், வரலாற்று நிகழ்வுகளோடும், போதனைகளால் மதங்கள் கட்டமைக்க முயன்ற வாழ்க்கை முறைகளோடும் பிணைந்தன.

உறவில் பிறந்த புனைவு

அவ்வாறு கலந்த உறவில் பிறந்த புனைவுகள்தான் புராணங்கள், காவியங்கள், காப்பியங்கள், பழமொழிகள், பாடல்கள்.  ஆம், சமூகம் சார்ந்த உண்மையான இவ்வுலக வாழ்வியல் நெறிகளைக் கடத்திய ஊடகங்கள்தான் காவியங்கள், காப்பியங்கள். மதம் சார்ந்த கற்பனையான மறுவுலக நம்பிக்கைகளைக் கடத்திய ஊடகங்கள்தான் புராணங்கள், இதிகாசங்கள். ஊடக உலகப் பயணத்தின் அடுத்த கட்டங்கள் இவை.

பயணம் 2 புராணம்

இந்தக் கதை மரபு சமுதாயத்தின் நினைவாற்றலைப் பேணி வலுப்படுத்தவும் வழி செய்தது. அத்துடன் இணைந்ததாக, மக்களின் கற்பனைத் திறனை வளர்த்து வளப்படுத்தவும் பங்களித்தது. கலையிலும் இலக்கியத்திலும் அவரவர் எண்ணங்களைக் கலந்து படைப்பாக்கம் தழைப்பதற்கு இந்த நினைவாற்றல், கற்பனைத் திறன் இரண்டுமே அடிப்படை என்று சொல்ல வேண்டியதில்லை. 

கதைகளையும் கருத்துகளையும் நினைவிலேயே வைத்திருந்து தலைமுறை தலைமுறையாகச் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா? மேலும், காலத்தின் ஓட்டத்தில் புதிய புதிய கற்பனைகள் இணையும் என்றால் மூலக் கதை என்ன ஆகும்? உண்மையில் நடந்தது என்னவோ அந்த  மூலத்தை மூலமாகவே வைத்திருப்பது எப்படி?

மனிதர்களின் இந்தத் தேடலில் உருவானதுதான் எழுத்துருவம். ஓவியக் கோடுகளும் புள்ளிகளும் சுருங்கிச் சுருங்கி மொழிகளின் எழுத்து வடிவங்கள் வந்தது பற்றி ஏற்கெனவே பார்த்தோம். இந்த வளர்ச்சிப் போக்கில் எழுத்தாளர் என்ற சொல்லே உருவாகிவிட்டது பாருங்கள். அந்தச் சொல் கட்டுரையாளர்கள், கவிஞர்கள், நாடகாசிரியர்கள் எல்லோரையுமே குறிக்கும் என்றாலும், எழுத்தாளர் என்றால் நமக்கு உடனே தோன்றுவது கதை எழுதுகிறவர்கள்தான். கதைக்கும் எழுத்துக்கும் அத்தனை நெருக்கம்!

சில பொருள்களைக் குறிப்பதற்கான அடையாளப் பதிவுகளாக மட்டுமே இருந்து வந்த குறியீடுகள், மெசபடோமியா (இன்றைய இராக், ஈரான், சிரியா, துருக்கி, குவைத் ஆகியவற்றின் பெரும்பகுதிகளைக் கொண்டிருந்தது) வட்டாரத்தில்,   சுமேரிய நாகரிகம் எனப்படும் காலக்கட்டத்தில், இன்றிலிருந்து 5,400–5,200 ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் முறையான எழுத்துருவாக வடிவமெடுத்தது என்று பொதுவாக ஆய்வாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

சுமேரிய எழுத்துரு

ஒலியெழுத்து அல்ல

களிமண் பலகைகளில் ஆப்பு போலப் பதிக்கப்பட்ட “கியூனிஃபார்ம்” என்ற அந்த அடையாளங்கள் அன்றைய அரசாங்கக் கணக்குகளையும் அலுவல் குறிப்புகளையும் கதைச் சித்தரிப்புகளையும் பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்டன. அந்தக் காலக்கட்டத்தின் கடைசி 50 ஆண்டுகளில் எகிப்து வட்டாரத்தில்  ஒரு எழுத்துமுறை வடிவெடுத்தது. அதை “ஹைரோகிளிஃப்” என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதற்கு 2,000 ஆண்டுகளுக்குப் பிறகு சீன வட்டாரத்தில் “சீன எழுத்துரு”, மேலுமொரு 1,000 ஆண்டுகள் கடந்து மைய அமெரிக்க வட்டாரத்தில் “மெசோ அமெரிக்க எழுத்துரு” ஆகியவை உருவாகின.

இவற்றை “எழுத்துரு” என்று ஒரு வசதிக்காகக் குறிப்பிட்டாலும் இவை மனிதர்கள் வாயிலிருந்து எழுப்பும் ஒலியைச் சித்தரித்த எழுத்துகள் அல்ல. அதே காலக்கட்டங்களிலும் அதற்கு முன்பாகவும் “புரோட்டோ” என்று குறிப்பிடப்படும் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன. எண்ணிக்கை, அடையாளச் சின்னம் ஆகியவற்றையே பெரும்பாலும் இவ்வகைக் குறியீடுகள் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.

9,000 ஆண்டுகளுக்கு முன்பே “ஜியாஹூ சின்னங்கள்” எனப்படும் குறியீடுகள் பதிக்கப்பட்ட ஆமை ஓடுகள் சீன வட்டாரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 8,000–7,000 ஆண்டுகள் வாக்கில் பயன்படுத்தப்பட்ட “வின்சா சின்னங்கள்” ஐரோப்பா வட்டாரத்தில் கிடைத்துள்ளன. 4,600–2,000 ஆண்டுகள் வாக்கில் சிந்துசமவெளி நாகரிகத்தில் “சிந்து சமவெளி எழுத்துரு” வடிவங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழின் மூல வடிவங்களுக்கு மூத்ததாகக் கருதப்படும் அந்தக் குறியீடுகளின் புதிரவிழ்த்து, அறிவியல்பூர்வமாக விளக்கம் அளிப்போருக்கு 1 மில்லியன் டாலர் (கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய்) பரிசளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது தெரிந்ததே.

பள்ளிவளாகத் தனி மொழி

குறியீடுகளால் தகவல் பரிமாறிக்கொண்டது பற்றிப் பார்க்கிறபோது  பள்ளிக்கூட வாழ்க்கையில் கடந்து வந்த, இப்போதும் கடக்கப்படுகிற காட்சியொன்று கண்ணில் படுகிறது. சேர்ந்து சுற்றும் சேக்காளிகள், ஆசிரியர்களும் மற்றவர்களும் கண்டுபிடிக்க முடியாத முறையில், இந்த எழுத்துக்குப் பதிலாக அந்த எழுத்து, இதற்குப் பதிலாக இன்னோர் எழுத்து, சில சொற்களுக்கு மாற்றாக சில உருவங்கள் என்று தங்களுக்கு மட்டுமே புரிகிற ஒரு எழுத்து மொழியையே படைத்துவிடுவார்கள்!

பயணம் 3 பள்ளி

கல்லூரி நாட்களில் நெருங்கிய நண்பர்கள் மூன்று பேர் கொண்ட குழு “ழொமி” ஒன்றை உருவாக்கியிருந்தோம். ஒரு சொல்லின் முதல் எழுத்தையும் இரண்டாவது எழுத்தையும் மாற்றி வைத்து, ஆனால் பழைய சொல்லின் ஒலிப்பிலேயே பேசுவோம். எடுத்துக்காட்டாக, “சிகரம்” என்ற சொல்லின் முதல், இரண்டாம் எழுத்துகளை மாற்றிப் போடுவோம். அப்போது அது “கசிரம்” என்று மாறுமா? அதை அப்படியே சொல்லாமல், “சிகரம்” என்ற சொல்லின் முதலிரண்டு எழுத்துகளின் ஒலியிலேயே பேசுவோம். அப்போது அது “கிசரம்” என்று மாறும். இரண்டாவது எழுத்தால் ஒற்றெழுத்து வந்தால் என்ன செய்வது, ஒரே எழுத்துள்ள சொல்லானால் எப்படி ஒலிப்பது என்ற இலக்கணமே வகுத்தோம்! சில நாள் பயிற்சியிலேயே வேகமாகப் பேசவும் புரிந்துகொள்ளவும் பழகிவிட்டோம். அதற்கு “மதிழ் ழொமி” என்று பெயர் சூட்டினோம்! தமிழ் மொழி எங்களின் விளையாட்டை ரசித்து மன்னிக்கும் என்ற நம்பிக்கைதான்!

அல்பாபெட்

முற்காலத்திய ஓவிய எழுத்து அல்லது உருவ எழுத்து முறைகளிலிருந்து மாறுபட்டதாக, ஒலியெழுப்புவதை அடிப்படையாகக் கொண்ட, ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வோர் ஒலியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற நவீன எழுத்துமுறையை அடுத்து வந்த முன்னோர்கள் உருவாக்கினார்கள். 4,000 ஆண்டுகளுக்கு முன் ‘அல்பாபெட்’ எனப்படும் ஒலிப்பு முறை எழுத்துகளை மையக் கிழக்கு வட்டாரங்களைச் சேர்ந்த, ‘செமிடிக் மொழி’ பேசிய மக்கள் முதலில் எழுதத் தொடங்கினார்கள்.  குறிப்பாக சினாய் குடா பகுதியில் வாழ்ந்தவர்கள் ‘புரோட்டோ–சினாய்’ என்ற அந்த எழுத்தை வடிவமைத்தார்கள். பெரும்பாலான நவீன எழுத்து முறைகளின் மூதாதையாக இது கருதப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக  3,050 ஆண்டுகளில் – கி.மு. 1050  – வாக்கில் அந்த மூதாதையிடமிருந்து, மெய்யெழுத்துகளுக்கான குறிகளை மட்டும் கொண்டிருந்த “ஃபீனீசிய எழுத்துமுறை” உருவானது. தகவல் தொடர்புச் செயலின் அடுத்த மைல் கல்லாகிய அந்த எழுத்துமுறை மையத் தரைக்கடல் வட்டாரத்தில் வணிகத் தொடர்பு மூலம் பரவியது. கடந்த 2,800 ஆண்டுகள் கட்டத்தில் அதனுடன் உயிரெழுத்துக்  குறிகளும் சேர்ந்தன. கிரேக்க மக்கள் அதைச் செய்தார்கள். உலகின் முதல் முழுமையான ஒலியெழுத்து முறை (உண்மை அல்பாபெட்) என அதனை இப்போதைக்கு ஆய்வுலகம் ஏற்றுள்ளது.

பின்னர் அதிலிருந்து,  2,700 ஆண்டுகளில் கிரேக்க வணிகத்துடன் இணைந்து இத்தாலி வட்டாரத்தில் “எட்ருஸ்கன் எழுத்துமுறை” உருவானது. அந்த முறை சுமார் 8 நூற்றாண்டுக் காலம் புழக்கத்தில் இருந்த நிலையில்,  அதிலேயிருந்து அதே காலக்கட்டத்தில் ஃபினீசிய, கிரேக்க, எட்ருஸ்கன் வடிவங்களின் கலவையில் “லத்தீன் எழுத்துமுறை” தோன்றியது. இன்று உலகளவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளுக்கான எழுத்துமுறையாக அது அமைந்தது.

பிராமியும் தமிழும்

இந்திய துணைக் கண்டத்தில் 2,300 ஆண்டுகள் காலக்கட்டத்தில் ‘பிராமி’ எழுத்துமுறையை மக்கள் உருவாக்கியிருந்தார்கள். அதற்கு முன் 3,000–2,500 ஆண்டுகள் வாக்கில் தமிழ் பேச்சு மொழியாகத் தோன்றி வளர்ந்திருந்தது. பிராமி எழுத்துமுறையிலிருந்து தென் பிராமி என்ற வடிவம் உருவாகியது. அதிலிருந்து எடுத்துக்கொண்டு தனக்கான எழுத்துமுறையை உருவாக்கிக்கொண்டது தமிழ். காலப் பயணத்தில், எழுதும் தேவைக்கேற்ற பல மாற்றங்களைச் செய்துகொண்டு இன்று நாம் வாசிக்கிற, எழுதுகிற எழுத்துகளின் வடிவங்களைத் தமிழ் செய்துகொண்டது.

கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிகளும் தென் பிராமி எழுத்துகளோடு, 1,600–1,400 ஆண்டுகள் வாக்கில் உருவாகியிருந்த கிரந்த எழுத்துமுறையோடு இணைந்த தங்களுக்கான எழுத்து வடிவங்களைத் தேர்வு செய்துகொண்டன. 

பழைய இந்தோ–ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாக உருவாகியிருந்த சமஸ்கிருதமும் தனக்கான எழுத்து வடிவங்களை பிராமி எழுத்துருவிலிருந்து இதே காலக்கட்டத்தில் எடுத்துக்கொண்டது. அதிலிருந்து தேவநாகரி எழுத்து வடிவம் உருவானது. இன்றைய இந்தி, சமஸ்கிருதம், நேபாளி, மராத்தி உள்ளிட்ட மொழிகளின் எழுத்துவடிவமாக தேவநாகரி எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இவையன்றி இந்தியாவில், குறிப்பாகப் பழங்குடிகளைச் சேர்ந்த மக்கள் பேசுகிற மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை. ஆகவே அவற்றுக்கான அச்செழுத்துகள், கணினித் தட்டச்சு எழுத்துகள் உள்ளிட்ட வாய்ப்புகளும் உருவாகவில்லை. அந்த மக்கள் வாழும் வட்டாரங்களில் முதன்மையாக உள்ள மொழியின் எழுத்துகளிலேயே அந்த மொழிகளும் எழுதப்படுகின்றன. இதே போன்று பல மொழிகள் உலகில் இருக்கின்றன.

தொடங்கிய உலகப் பயணத்தில், வரலாறெனும் வண்டியின் சன்னல் வழியாக மொழிகளின் ஒலிகள், அவற்றின் எழுத்துருக்கள் ஆகிய காட்சிகளை மிகச் சுருக்கமாகவே பார்த்தோம். இது ஊடக வளர்ச்சியின் பரிணாமங்களைப் புரிந்துகொள்வதற்கு உதவும். 

குதிரைகளும் புறாக்களும்

எழுத்து சார்ந்த ஊடகங்களான மடல்கள் பண்டைய இந்தியா, சீனா, ரோம், பாரசீகம் உள்ளிட்ட நாகரிகங்களில் மன்னர்களுக்கிடையே தூதுவர்கள் மூலம் பகிர்ந்துகொள்ளப்பட்டன. அரசாணைகள் பாறைகளிலும் தூண்களிலும் செதுக்கிப் பரப்பப்பட்டன. தூதுச் செய்திகளையோ, குடிமக்களுக்கான ஆணைகளையோ குதிரை ஓட்டிகள் வேகமாகக் கொண்டு சேர்த்தனர். புறாவிடு தூது பற்றியும் படித்திருக்கிறோம் அல்லவா?

பாறை ஓவியம்

சமய வழிபாட்டுத் தலங்களும், மடங்களும் ஆன்மீக நம்பிக்கைகளையும், மதத் தலைவர்களின் போதனைகளையும் சுவடிகளில் பதிவு செய்து வைத்தன. ஒரு வகையில் அன்றைய சூழலில் அறிவுப் பரவலுக்கான மையங்களாகவும் மடங்கள் இருந்தன. வைதீக மடங்கள், பௌத்த மடங்கள், சமணப் பள்ளிகள், இஸ்லாமிய மதரசாக்கள், கிறிஸ்துவத் திருச்சபைகள் ஆகிய இடங்களில் பரமாரிக்கப்பட்ட உரைத் தொகுப்புகள் வழிபாட்டு முறைகள் முதல் வாழ்க்கை நெறிகள் வரையிலான செய்திகளைப் பரப்பின.

ஏற்கெனவே பார்த்தபடி, கடல் வழி வணிகத் தொடர்புகளால் எழுத்துமுறைகள் வளர்ந்ததோடு, அனைத்துக் கண்டங்களுக்கும் தகவல்கள் விரிவாகச் சென்றன. தொழில்முனைவோருக்கான அறிவுரைகள் முதல் கப்பல் பராமரிப்பு நுட்பங்கள் வரையிலான பதிவுகளாக அவை இருந்தன. அவற்றோடு, ஒரு வட்டாரம் சார்ந்த பண்பாட்டுச் சிறப்புகளின் வேர்கள் வெவ்வேறு வட்டாரங்களுக்கு நீண்டன.

இவ்வாறாக மொழிகள், நம்பிக்கைகள், வாழ்வியல் முறைகள், அறிவியல் புரிதல்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவை பரிமாறப்பட்டன. வணிகக் களத்தில் பட்டுப் பாதை, மசாலா வழிகள் போன்ற பயணத் தடங்கள் இப்படித்தான் பதிவாகின. இத்தகைய வணிக ஏற்பாடுகளோடு அரசியல் தொடர்புகளும் ஆதிக்கங்களும் கூட கண்டம் தாவின.

விதூஷகன் விவேக்

வெறும் தகவல் குறிப்புகளாகப் பகிர்ந்திருக்க முடியாதல்லவா? மக்கள் அவற்றில் ஆர்வம் காட்டியிருக்க மாட்டார்கள்தானே? ஆகவே மக்களை ஈர்க்கும் வகையில் சொல்லும் பணியை,  மனிதர்களின் வாழ்க்கை மரபோடு கலந்த கலைகளும் இலக்கியங்களும் நிறைவேற்றின. தெருக்கூத்து, வீதி நடனம், வீரச் செயல்கள் பற்றிய கதைப் பாடல்கள், இயற்கையான வாழ்க்கை நடப்புகளைச் சித்தரித்த நாட்டுப் புறக் கலைகள், எல்லாமே கடவுளின் சித்தப்படிதான் நடக்கின்றன எனக் கூறும் புராணங்களின் நாடக வடிவங்கள்… இப்படியாகக் கலை இலக்கிய ஊடகங்கள் பங்களித்தன.

பயணம் 2 கூத்து

பண்டைய கிரேக்க நாடகங்கள் நகைச்சுவையோடு அரசியல் நிலைமைகளைப் பகடி செய்வதிலும், சமூகத்தைக் கூண்டில் நிறுத்துவதிலும் தனித்துவம் பெற்றிருந்தன. ரோம், சீனம், இந்திய, ஐரோப்பிய நாகரிகங்களோடு இணைந்த நாடகங்கள் அரசர்களின் பெருமைகளையும் புராண நம்பிக்கைகளையும் சொல்லும் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்தபோதிலும், அவ்வப்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல் கொந்தளிப்புகளையும் பிரதிபலித்தன.

தமிழ் மண்ணிலும், கிராமப்புறத் தெருக்கூத்துகளில் மன்னர்களையும் மந்திரிகளையும் உள்ளூர்ப் பண்ணையார்களையும் நையாண்டி செய்வது இயல்பாக இருந்தது. குறிப்பாக, அந்தக் கூத்துகளின் கோமாளிக் கலைஞர்கள் சிரிக்கச் சிரிக்க அரசியல் வெடிகளைக் கொளுத்திப் போடுவார்கள்.

இங்கொரு கலகலப்பான சந்திப்பு நினைவுக்கு வருகிறது. திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் பகுத்தறிவுக் கருத்துகளைச் சிரிப்போடு கலந்து கொடுத்த நாட்களில், ‘செம்மலர்’ ஏட்டிற்காக அவரைச் சந்தித்தேன். ஒரு படப்பிடிப்புக்கு நடுவே நடந்த அந்த நேர்காணலில், இதையே ஒரு கேள்வியாக வைத்தேன்.  தெருக்கூத்துகளில் கோமாளி நடிகர்கள் அச்சமின்றி அரசியல் பேசியது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், “உண்மைதான். ஹீரோக்கள் தலைவர்களையோ, பண்ணையார்களையோ விமர்சித்துப் பேசினால் கலவரமே வந்துவிடும். ஆனால் பஃபூன் நடிகர் அதே விமர்சனங்களைக் கூறினால் மக்கள் சிரித்துக்கொண்டே கேட்பார்கள். விதூஷகனுக்கு சமூகம் அளித்த மரியாதை அது,” என்றார்.

Vivek

சமூக வளர்ச்சியில் இத்தகைய கலை–இலக்கிய ஊடகச் செயல்பாடுகள் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கும்! அதையெல்லாம் பின்னோக்கிப் பயணித்துப் பார்ப்பது சுவையான அனுபவம்தான்.

இதற்கிடையே, மரத் துண்டுகளில் தனித்தனியாகச் செதுக்கப்பட்ட பெரிய எழுத்துகளை, மையில் நனைத்துத் துணியில் பதிப்பது போன்ற மடல் முறைகளும் வளர்ந்தன. கி.பி. 105ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு பொருளும், 1450ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு பொருளும் இணைந்து இதில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை நிகழ்த்தின.

(தொடரும்)

முதல் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-1/