அழகான வயல்வெளிக்கு அருகில் ஒரு குளம் இருந்தது. எலிக்குட்டி ஒன்று அந்தக் குளத்தின் அருகே குதித்துக் குதித்து விளையாடிக்கொண்டிருந்தது.
அச்சமயம், குளத்தில் இருந்து நீர்க்குமிழிகளின் ‘ப்ளப்… ப்ளப்…’ என்ற சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.
அதைக் கேட்ட எலிக்குட்டி, “பீப்… பீப்…” என்று அதற்குப் பதிலாகக் குரல் எழுப்பியது.
ப்ளப்… ப்ளப்…
பீப்… பீப்…
ப்ளப்… ப்ளப்…
பீப்… பீப்…
ப்ளப்… ப்ளப்…
பீப்… பீப்…
ப்ளப்… ப்ளப்…
பீப்… பீப்…
என்று தொடர்ந்து வயல்வெளி எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது அவர்களின் குரல்.
வயலில் நெற்கதிர்களை கொறித்து கொண்டிருந்த மைனா ஒன்று, இந்த இசையைக் கேட்டு ரசித்தது. பின்னர் அந்த மைனா எலிக்குட்டியிடம், “நீங்கள் இசைக்கும் இந்த இசைக்கு ஏற்ற ஒரு பாடலை நான் பாடலாமா?” என்று ஆர்வமாகக் கேட்டது.
இதை, வயலில் ஊர்ந்து சென்றுகொண்டிருந்த ஆயிரங்கால் பூரான் ஒன்று கேட்டது.
உடனே, அந்த ஆயிரங்கால் பூரான், “ஒரு நிமிடம் மைனா! நானும் உங்களுடன் சேர்ந்து இந்த இசைக்கச்சேரியில் பறை வாசிக்கலாமா?” என்று கேட்டது. மைனாவும் அதற்குச் சம்மதம் தெரிவித்தது.
பின்னர் பூரான் தனது ஆயிரங்கால்களையும் ஒருசேர ஒரே தாளத்தில்,
“டன் டனா டன்… டன் டனா டன்
டன் டனா டன் டன் டனா டன்
டன் டனா டன்… டன் டனா டன்…”
என்று பறை இசை மழையைப் பொழிய ஆரம்பித்தது.
“டன் டனா டன் டன் டனா டன்
டன் டனா டன் டன் டனா டன்
டன் டனா டன்… டன் டனா டன்” என்று பூரான் பறை வாசிக்க
ப்ளப்… ப்ளப்…
பீப்… பீப்…
ப்ளப்… ப்ளப்…
பீப்… பீப்…
ப்ளப்… ப்ளப்…
பீப்… பீப்…
என்று எலிக்குட்டியும், நீர்க்குமிழியும் அதற்கு ஏற்றாற் போல் சந்தங்களை இசைத்தன.
மைனாவும் அவர்களுடன் சேர்ந்து சந்தத்திற்கு ஏற்பப் பாடியது:
“வானுயர்ந்த சோலையிலே,
வளர்ந்து நின்ற நெற்கதிரே!
எலிக்குட்டி தாளமிட,
பூரானும் பறையிசைக்க,
நானிருந்து பாடுகிறேன்!”
அவர்களின் இந்த இசைக்கச்சேரியை, அருகில் இருந்த தோப்பில் மாம்பழம் சாப்பிட்டுக்கொண்டிருந்த குரங்கு ஒன்று கேட்டது.
“ஹே… ஹேய்!” என்று அந்தத் தாளத்திற்கு ஏற்ப மரத்திற்கு மரம் தாவியபடி நடனமாடியது அந்தக் குரங்கு.
பின்னர், “நானும் உங்களோடு இந்த இசைக் கச்சேரியில் சேர்ந்து கொள்ளலாமா?” என்று வயல்வெளி நண்பர்களிடம் கேட்டது குரங்கு.
“அதற்கென்ன குரங்கே, கண்டிப்பாக நீயும் இதில் பங்கேற்கலாம்,” என்றது எலிக்குட்டி.
அதே நேரம், புல்வெளியில் மேய்ந்துகொண்டிருந்த ஒரு கன்றுக்குட்டி தோப்பில் மரத்திற்கு மரம் தாவி நடனமாடிய குரங்கை பார்த்தது.
இசைக்கு ஏற்ற மாதிரி நடனமாடிய குரங்கை பார்த்த கன்றுக்கும் நடனமாட ஆசையாக இருந்தது.
உடனே, பசுங்கன்று தனது கழுத்தில் கட்டப்பட்டு இருந்த சலங்கை மணி ‘ஜல்… ஜல்…’ என ஒலிக்க, நடனமாடியபடியே குளத்திற்கு அருகில் வந்தது .
டன் டனா டன் டன் டனா டன்
டன் டனா டன் டன் டனா டன்
டன் டனா டன் டன் டனா டன்” என்று பூரான் பறை வாசிக்க
ப்ளப்… ப்ளப்…
பீப்… பீப்…
ப்ளப்… ப்ளப்…
பீப்… பீப்…
ப்ளப்… ப்ளப்…
பீப்… பீப்…
என்று எலிக்குட்டியும் நீர்க்குமிழியும் இசை எழுப்ப,
“ஜல்… ஜல்… ஜல்… ஜல்…” எனக் கன்று நடனமாட,
அந்த இடமே ஆட்டம் பாட்டத்தால் களைகட்டியது.
அப்போது, பச்சைப்பசேல் எனக் காட்சியளித்த அந்த வயல்வெளிக்கு அடர் பச்சை நிறத்தில் பருத்த முதலை ஒன்று வந்தது. இந்த இசைக்கச்சேரியைக் கேட்டுச் சற்றே மெய்மறந்து நின்றது அந்த முதலை.
பின்னர் தனது கூரிய பற்களால்,
“கிளாங்… கிளாங்… கிளாங்…”
“கிளாங்… கிளாங்…”
என்று அவர்களின் தாளத்திற்கு ஏற்றவாறு அதுவும் இசைத்தது.
வயல்வெளி முழுக்க அவர்களின் இசையால் நிறைந்தது. எல்லா விலங்குகளும் ஒன்று சேர்ந்து ஆடிப்பாடி மகிழ்ந்தன.
இவை அனைத்தும் நடக்கக் காரணமாக இருந்தது, நீருக்குள் இருந்து வந்த நீர்க்குமிழியின் ‘ப்ளப்… ப்ளப்…’ என்ற சத்தம்தான். அந்தச் சத்தம் யாருடையது என்று தெரிந்துகொள்ள எலிக்குட்டி, மைனா, கன்றுக்குட்டி, முதலை, குரங்கு, பூரான் என அனைத்தும் ஆர்வமாக இருந்தன.
நீருக்குள் சென்று அந்த ‘ப்ளப்… ப்ளப்…’ சத்தத்திற்குச் சொந்தக்காரர் யார் என்று பார்க்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்தனர். உடனே, முதலை மெல்லக் குளத்தில் இறங்கி நீருக்கு அடியில் சென்று பார்த்தது.
முதலையைப் பார்த்ததும் அலறியடித்துக்கொண்டு வெளியே வந்தது, குளத்து நீருக்கு அடியில் இருந்த காண்டாமிருகம் ஒன்று.
“ஓ! நீங்க தான் அந்த ‘ப்ளப் ப்ளப்’ சத்தத்திற்குச் சொந்தக்காரரா?” என்று காண்டாமிருகத்திடம் கேட்டது எலிக்குட்டி.
அவர்கள் சொல்ல வருவது என்னவென்று புரியாமல் திருதிருவென விழித்தது காண்டாமிருகம். உடனே மைனா, வயல்வெளியில் அவர்கள் நடத்திய இசைக்கச்சேரியைப் பற்றிக் காண்டாமிருகத்திடம் விளக்கிக் கூறியது.
“ஓ! என் ‘ப்ளப்… ப்ளப்…’ சத்தத்தைக் கேட்டுத்தான் இவ்வளவு நேரம் நீங்கள் பாட்டுக் கச்சேரி நடத்தினீர்களா?” என்று அவர்களிடம் ஆச்சரியமாகக் கேட்டது காண்டாமிருகம்.
“ஆமா.. ஆமா ..” என்று சொன்னது எலிக்குட்டி.
“சரி, அதை விடுங்கள். நீங்கள் எப்படிச் சரியான தாளத்தோடு தண்ணீருக்குள் இருந்து, ‘ப்ளப்… ப்ளப்…’ என்ற சத்தத்தை உருவாக்கினீர்கள் என்று முதலில் சொல்லுங்கள்” என்று காண்டாமிருகத்திடம் கேட்டது மைனா.
“அது மட்டுமல்ல, தரையில் நாங்கள் இசைக் கச்சேரி செய்வது பெரிதில்லை. தண்ணீரில் நீங்கள் ராகம், தாளம் பிசகாம இசைத்தது தான் பெரிய விஷயம்,” என்றது பூரான்.
‘ப்ளப்… ப்ளப்…’ சத்தம்தான் உங்கள் இசைக் கச்சேரிக்குக் காரணமா?” அதைக் கேட்டதும் அடக்க முடியாமல் சிரித்தது காண்டாமிருகம்.
அது வந்து “நானும் என் தவளை நண்பனும் தினமும் தண்ணீருக்குள் மூழ்கி ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுவதை ஒரு விளையாட்டாக விளையாடுவோம். இன்று என் நண்பன் விளையாட வரவில்லை. அதனால் நான் தனியே நீருக்குள் மூழ்கி ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றது காண்டாமிருகம்.
“நான் தண்ணீருக்குள் மூழ்கி ஒன்று, இரண்டு, மூன்று என்று ஒவ்வொரு எண்ணாகச் சொல்லும்போது, என் வாய் வழியாகக் காற்று வெளியேறும். அந்தக் காற்றுதான் ‘ப்ளப்… ப்ளப்…’ என்ற சத்தத்தோட நீர்க்குமிழியாக மேலே வந்திருக்கும். இப்படி உருவானது தான் அந்த ‘ப்ளப், ப்ளப்’ சத்தம்” என்று அவர்களுக்கு விளக்கமாகச் சொன்னது.
“என்னது? உங்களோட இந்த மூச்சுப்பயிற்சி தான் இந்த இசைக்கச்சேரிக்கு காரணமா?” என்று கேட்டது பூரான்.
“ஆம் நண்பர்களே! என் மூச்சுப் பயிற்சிதான் உங்கள் அருமையான இசைக்கச்சேரிக்குக் காரணம்,” என்றது காண்டாமிருகம்.
“நீங்க மட்டுமில்ல காண்டா அண்ணா, இனிமேல் நீங்க தண்ணிக்குள்ள விளையாடும் போதெல்லாம் நாங்களும் இந்த இசைக்கச்சேரியை தொடர்ந்து நடத்துவோம்” என்றன அனைத்து விலங்குகளும்.
– தீபா சிந்தன்








அடடா எவ்வளவு அருமையான கற்பனை வளம் மிகுந்த கதை. மிக்க நன்றி தீபா சிந்தன் அவர்களே. பள்ளிக் குழந்தைகளுடன் ஆடிப்பாடி கதை சொல்வதற்கு அருமையான தாளத்துடன் கூடிய கதையை கொடுத்திருக்கிறீர்கள். தொடரட்டும் தங்களின் கற்பனை வளம்.