இலக்கியம்புத்தக அறிமுகம்

பெரியாரும் அறிவியலும் நூல் அறிமுகம் –  பஞ்சுமிட்டாய் பிரபு

உச்சநீ


வெளிநாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகள் பெரும்பாலும் பட்டிமன்றப் பேச்சாளர்கள், சினிமா பாடகர்கள், ஆன்மீகம், உணவு அல்லது வியாபார ரீதியான கூடல்கள் என்ற அளவிலேயே அதிகம் இயங்கி வருகின்றன. நிறைய அமைப்புகள் அடுத்த தலைமுறைக்கான தமிழ் வகுப்புகளை ஒருங்கிணைத்து வருவதும் காண முடிகிறது. ஆனால், சமூக சீர்திருத்தம் சார்ந்த சிந்தனைகளை விவாதித்தல், பரப்புதல் போன்ற செயற்பாடுகளைச் சிறிய அமைப்புகள் மட்டுமே ஆங்காங்கே ஒருங்கிணைத்து வருகின்றன. ஆனால், அறிவியல் ரீதியான செயல்பாடுகள் என்பது அதிலும் குறைவானவையே.

இப்படியிருக்க, சற்றும் வேறுபட்டு சிங்கப்பூரிலுள்ள “பெரியார் சமூக சேவை மன்றம்” கடந்த 2023ஆம் ஆண்டு “பெரியார் விழா” எனும் நிகழ்வை ஒருங்கிணைத்தது. அந்த நிகழ்வில் மயில்சாமி அண்ணாதுரையை அழைத்தது, புலம்பெயர்ந்த சமூகத்திற்குப் புதிய பாதையைக் காட்டியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

இந்த மாநாட்டில், மயில்சாமி அவர்கள் ஆற்றிய உரையே இந்தப் புத்தகம். இந்த மாநாடு நடந்த காலத்திலேயே அதன் காணொளிகள் பிரபலமடைந்தன. பலரும் அந்த உரையைப் பாராட்டினர். அது தற்போது எழுத்து வடிவம் பெற்றுள்ளது.

விண்வெளி அறிவியல் துறையில் இந்தியாவின் மிகப் பெரிய சாதனை: நிலவுக்கு மிகக் குறைந்த செலவில் ஏவூர்தியை அனுப்பி, நிலவில் நீர் உள்ளது என்பதைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தது.

நிலவிற்குப் பல நாடுகள் – 1950, 1960, 1970களில் என நிறையப் பயணங்கள் மேற்கொண்டன. கிட்டத்தட்ட 99 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன; அவற்றில் ஈடுபட்டவர்கள் அனைவருமே நிலவில் நீர் இல்லை என்று சொல்லிவிட்டனர். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் பலமுறை நிலவிற்குச் சென்று, நீர் இல்லை என்று உலகிற்கு அறிவித்துவிட்டன.

அவர்கள் கூறியது உண்மைதான் என்றாலும், அந்த நாடுகள் செய்த ஆய்வுகள் முழுமையானவையா? அதை நாம் எப்படி உறுதி செய்ய முடியும்? அவர்கள் சொல்லிவிட்டார்கள், அதை அப்படியே நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டுமா? மெய்ப்பொருள் காண வேண்டாமா? என்ற தேடலின் விளைவே இந்த வெற்றி என்கிறார் மயில்சாமி அவர்கள்.

இப்படி பல்வேறு முன்னேறிய நாடுகளே கூறிய பிறகும், இந்தியா துணிச்சலான ஒரு தேடலைச் செய்தது. ஏனென்றால், உலக நாடுகள் அனைத்துமே நிலவில் இறங்கி நீரைத் தேடின. ஆனால் நாமோ (இந்தியா) நீரைத் தேடி நிலவில் இறங்கினோம் என்கிறார் மயில்சாமி அவர்கள்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளைப் போல் நம்மிடம் நிலவுப் பயணத்திற்குத் தேவையான பெரும் பொருளாதாரம் இல்லை. அப்படியிருந்தும், பல்வேறு அறிவியல் ரீதியான பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு நிலவில் நீர் உள்ளது என்பதைக் கண்டடைந்தோம் என்கிறார் மயில்சாமி அவர்கள்.

இந்த முயற்சிக்கெல்லாம் எது துணை நின்றது என்றால்,
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
என்ற வள்ளுவரின் வாக்கும்,

“உன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்த விட, உன் அறிவு பெரிது. அதைச் சிந்தி” என்ற தந்தை பெரியாரின் வாக்கும் என்கிறார்.

மேற்கூறிய பெரியாரின் வாக்கு என்பது பொதுவாகச் சாத்திரங்கள், பழமைவாத, சமத்துவத்திற்கு எதிரான மத நம்பிக்கைகள் சார்ந்தே நாம் மேற்கோள் காட்டுவது வழக்கம். ஆனால், மயில்சாமி அவர்கள் அதை அறிவியல் ரீதியான கூற்றுகளுக்கும் ஒப்பிட்டுக் கூறுகிறார். அதாவது, அறிவியல் ஒரு காலத்தில் கூறிவிட்டது என்பதால், அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதல்ல; அதை காலத்திற்கேற்ப மீளாய்வு செய்ய வேண்டியது அவசியம் என்கிறார்.

1990 வரை சுமார் 90க்கும் மேலான நிலவுப் பயணங்கள் நடந்துள்ளன. ஆனால், நீர் இல்லை என்ற அறிவிப்பிற்குப் பிறகு, (உதாரணமாக) 1990களின் இறுதி முதல் 2000களின் முற்பகுதி வரை நிலவிற்குப் பெரிய அளவில் பயணங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவின் கண்டுபிடிப்பு வெளியான பிறகே தற்போது நிலவுப் பயணம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இது, விண்வெளி ஆய்வின் போக்கையும் விண்வெளி அறிவியலின் பாதையையும் மாற்றியிருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

“ஒரு காலத்தின் முறைகளே எக்காலத்துக்கும் என்றால், மனிதனுக்கு அறிவு வளர்ச்சியில்லை; தேக்கம்தான்/ பிறழ்ச்சிதான் என்பது பொருள்” – பெரியார்

போன்ற பல பெரியாரின் கூற்றுகளை முன்மொழிந்து, நமது நாட்டின் நிலவுப் பயணத்தில் தனக்குத் துணை நின்ற பெரியாரின் சிந்தனைகள் குறித்து மிக விரிவாக உரையாற்றியுள்ளார்.

இதிலுள்ள அறிவியல் விளக்கங்கள் அனைத்தும் வாசகர்கள் அனைவருக்கும் புரியும் வகையில் இடம்பெற்றுள்ளன என்பது மிகவும் முக்கியமானது. அறிவியல் விளக்கத்துடன் நமது நாட்டின் அறிவியல் வளர்ச்சியையும் அறிவியல் சாதனையையும் இந்தப் புத்தகம் விளக்குகிறது. அதில் முக்கியமாகப் பெரியார், திருவள்ளுவர் ஆகிய நம் நிலத்தின் அடையாளங்களாக இருப்போரின் சிந்தனைகளின் பங்களிப்பையும் விளக்குகிறது.

இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானது. அதற்கு அடித்தளமாக இருப்பது நமது தமிழ்ச் சமூகத்தின் சிந்தனை முறை. அது நம் வாழ்வியோடு கலந்துள்ளது. கடந்த நூற்றாண்டில் இதற்கான அடித்தளத்தைப் பல்வேறு ஆளுமைகள் ஏற்படுத்தியுள்ளனர். அதில் பெரியாரின் பங்கு என்பது மிக முக்கியமானது.

“எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறதென்றால், துணிவு ஒன்றுதான்” என்ற பெரியாரின் வாக்கு அறிவியல் சிந்தனையை ஒத்திருக்கிறது. ஏனென்றால், துணிவான வினாக்களின் விடைகளே விஞ்ஞானம் ஆகின்றன என்று மயில்சாமி அவர்கள் குறிப்பிடுகிறார்.

மேலும், மொழி எப்படி காலத்திற்கேற்ப அறிவியல் வளர்ச்சிகளைத் தனக்குள் ஏற்றுக்கொண்டு வளர்ந்து மலர வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு, பெரியாரின் கருத்துகளை மேற்கோள் காட்டி உரையாற்றியுள்ளார்.

சுமார் 60 பக்கங்களில், அறிவியலையும், தனது அறிவியல் பயணத்தில் துணை நின்ற பெரியாரிய சிந்தனைகள், அவற்றுடன் தாய்மொழியின் பங்களிப்பு, எதிர்காலம் ஆகியவை குறித்தும் மிகவும் நேரடியாகவும் அனைவருக்கும் புரியும் வகையிலும் பேசியிருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு.

வாய்ப்புள்ள நண்பர்கள் அவசியம் இந்தப் புத்தகத்தை வாசிக்கவும்.

நூல்: பெரியாரும் அறிவியலும்

ஆசிரியர்: “நிலாத் தமிழர்” (எ) முனைவர் மயில்சாமி அண்ணாதுரை

– பஞ்சுமிட்டாய் பிரபு