இலக்கியம்புத்தக அறிமுகம்

சவானாவின் வேர்கள் உருவான கதையும், நூல் அறிமுகமும்…

புள்ளி

ஒருநாள் தீபா ஜெயபாலன் அவர்களிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. “ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். வாசித்துப் பார்க்கமுடியுமா?” என்று கேட்டார். அதற்கு முன்னர் அவருடைய எந்தக் கட்டுரையும் வாசித்ததில்லை என்பதால், ஒரு நாவல் வந்திருந்தபடியால், குழப்பம்கலந்த ஆச்சரியத்துடன்தான் அந்த சூழலை எதிர்கொண்டேன். ஒருசில நாட்கள் கழித்து, “வாசிச்சிட்டீங்களா?” என்று கேட்டு மீண்டும் ஒரு அழைப்பு வந்தது. அதன்பிறகு நூலை வாசிக்கத் தொடங்கினேன். முதல் பக்கத்தை வாசித்தபோதே, அது என்னை வேறொரு உலகிற்கு அழைத்துச் சென்றுவிட்டதை என்னால் உணரமுடிந்தது. நாவலை வாசித்து முடிக்கையில், ஒரு பழங்குடி கிராமத்திற்குள் வாழ்ந்துவிட்டு வந்ததைப் போலத்தான் இருந்தது. ஒவ்வொரு பத்தியிலும், ஒவ்வொரு வரியிலும், ஒவ்வொரு வார்த்தையிலும் கலந்திருந்த ஒப்பீடுகளும் உவமைகளும் மனதிற்குள் ஊடுருவி நிரந்தரமாகத் தங்கிவிட்டன. அதன்பிறகு, அந்த நாவல் குறித்த உரையாடல்கள் தொடர்ந்தன. சின்னச்சின்ன மாற்றங்களுடன் அந்த நாவல் வெளியாகும் நாளை எதிர்நோக்கிக் காத்திருந்தோம்.

இந்த இடைப்பட்ட காலத்தில் ‘மாற்று.இன்’ இணையதளம் செயல்படத் தொடங்கியதும், ஒரு தொடர் எழுதுவது குறித்து தீபா ஜெயபாலன் அவர்களிடம் பேசினோம். அதன் தொடர்ச்சியாக, ஆப்பிரிக்கப் பழங்குடிகள் குறித்த ஒரு கட்டுரையை அனுப்பினார். நன்றாக இருந்ததால், வெளியிட்டோம். ஒரு பகுதி, இரண்டு பகுதி என்று எழுதியபடியே பத்து பகுதிகள் எழுதிவிட்டார். நிறைய பேர் வாசித்துவிட்டு, அந்தத் தொடர் நன்றாக இருப்பதாகப் பாராட்டினார்கள். அப்போதுதான் இதனை நூலாக வெளியிடலாமா என்றொரு யோசனை எங்களுக்கு வந்தது. ஆனால், ஒவ்வொரு கட்டுரையையும் இணையதளத்தில் தனித்தனியாக வாசிக்க முடிவதைப் போல, ஒட்டுமொத்த கட்டுரைகளையும் ஒரே நூலில் தொடர்ச்சியாக வாசிக்க முடியுமா என்கிற சந்தேகம் எழுந்தது. அது சுவாரசியமாக இருக்குமா என்கிற சந்தேகமும் எங்களுக்கு வந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே இருந்தபோது, “இப்ப ஒன்னு அனுப்பிருக்கேன். படிச்சிப் பாருங்க” ஒருநாள் அனுப்பியிருந்தார். அதனை வாசித்துப் பார்த்ததும் மீண்டும் ஆச்சரியம் என்னை ஆட்கொண்டது. ஒரு பழங்குடியின் வாழ்க்கையையும், பாரம்பரியத்தையும், வரலாற்றையும், அவர்களது பழக்க வழக்கங்களையும், நிகழ்காலப் பிரச்சனைகளையும், அவற்றை எதிர்கொள்ள அவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களையும் சில புனைவுக் கதாபாத்திரங்களை உருவாக்கி, காட்சிகளை அமைத்து, கதையாக மாற்றியிருந்தார். இணையத்தில் வெளியானபோது தகவல்கள் நிறைந்த ஒரு கட்டுரையாக இருந்த அப்பகுதி, இப்போது ஒரு கதை வடிவத்தை அடைந்திருந்தது. ‘மாற்று.இன்’ தளத்தில் எழுதிய பத்து பழங்குடிகளின் கட்டுரைகளையும் இப்படியாக மாற்ற முடியுமா என்று கேட்டதுதான் தாமதம். அனைத்தையும் மாற்றிவிட்டு அனுப்பினார். பின்னர் அதிரடியாகக் களத்தில் இறங்கினோம். ஒரு குழுவை அமைத்தோம். அதிலுள்ள ஒவ்வொருவரும் நூலை முழுவதுமாக வரிக்கு வரி படித்து, பிழைகள் ஏதும் தென்பட்டாலோ சந்தேகம் இருந்தாலோ குறித்துவைக்கச் சொன்னோம். எல்லோரும் படித்து முடித்தபிறகு, எல்லோரும் கூகிள் மீட் வழியாக இணைந்து, நூலை முதல் வரியில் இருந்தே வாசித்தோம். அதில் எல்லோரும் ஏற்கனவே எல்லோரும் குறிப்பிட்ட கருத்துகளை விவாதித்து, எழுத்தாளர் தீபா ஜெயபாலனுக்கு ஏற்புடையதாக இருந்தால், மாற்றினோம். இப்படியாக சுமார் இரண்டு வாரங்களாக இரவு பகல் பார்க்காமல் அனைவரும் உழைத்து, அதனை நூல் வடிவத்திற்கு தயார் செய்தோம். இப்போது அது அச்சாகி வெளியாகி இருப்பதைப் பார்க்கையில் பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது.

நூலின் உள்ளடகத்தைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றால், அது ஆப்பிரிக்காவைக் களமாகக் கொண்டது. ஆப்பிரிக்காவின் பத்து முக்கியப் பழங்குடிகளின் வாழ்க்கைக்குள் நுழைந்து பார்த்துவிட்டு வருகிறோம் என்றாலும், ஒவ்வொரு பழங்குடிக் கதையின் சூழல்களையும், கதாபாத்திரங்களையும் வெவ்வேறு விதமாக அமைத்திருந்தார். ஆக, ஒரு நூலாக அவை அனைத்தையும் சேர்த்து வாசிக்கையிலும் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் இருந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது. இதனை நூலாக்காமல் விட்டுவிடக்கூடாது என்று முடிவெடுத்து ஒரு குழுவாகச் செயல்படத் தொடங்கினோம். நூலை மெருகேற்றிய நூலாசிரியருக்கு சில சிறிய உதவிகளை மட்டும் செய்தோம். இறுதியாக இன்றைக்கு, ‘சவானாவின் வேர்கள்’ அச்சாகி வெளியே வந்திருக்கிறது.

சவானா என்பது ஆப்பிரிக்காவின் பரந்த புல்வெளிகள் நிறைந்த பூமிப்பரப்பைக் குறிப்பதற்குப் பயன்படுத்தும் ஒரு சொல். அடர்ந்த காடுமில்லாமல், செடிகொடிகள் குறைவான பாலைவனமும் இல்லாமல், சீரான இடைவெளிவிட்டுப் புற்களும் மரங்களும் வளர்ந்து நிற்கும் ஒரு நிலப்பரப்பைத்தான் சவானா என்கிறோம். காற்றுக்கும் புயலுக்கும் அங்கு நிற்கும் மரங்களின் கிளைகள் அசைகிறபோதும், ஆழமாக அந்த மண்ணில் வேரூன்றியிருக்கும் வேர்கள்தான், ஆடிக்கொண்டிருக்கும் மரங்களை வீழ்ந்துவிடாமல் காத்து நிற்கும் தூண்கள். அந்த ஆப்பிரிக்க மண்ணையே காலங்காலமாகக் கட்டிக்காப்பாற்றி வரும் பழங்குடி மக்கள்தான் அந்த நிலத்தின் வேர்கள்.

அந்தச் சவானாக்களில் வீசும் காற்றுக்கு ஒரு தனி இசை உண்டு. அந்த இசையில் மண்ணின் மணமும், பல நூற்றாண்டுகாலக் கதைகளைச் சுமந்த மரங்களின் ரகசியமும், நிலத்தைப் பாதுகாத்து வந்த மக்களுடைய மனதின் அசைவுகளும் கலந்து இருக்கும். அந்த இசையை ‘சவானாவின் வேர்கள்’ மூலமாக ஒரு நூலாகக் கோர்த்துத் தந்திருக்கிறார் எழுத்தாளர்.

இதன் ஒவ்வொரு அத்தியாயமுமே தனித் தனி உலகங்களுக்கான கதவுகளாகத் திறக்கின்றன. இந்த நூலின் மிக வலிமையான அம்சம், இது எல்லா இனங்களையும் ஒரே கோணத்தில் காட்டாமல், ஒவ்வொரு இனத்தின் தனித்தன்மையை எவ்விதக் குழப்பமும் இல்லாமல் தெளிவாக வர்ணிக்கிறது.

நூலை வாசித்து முடித்ததும், அதில் வரும் கதைகளெல்லாம் ஆப்பிரிக்கக் கண்டத்தின் மக்களைப் பற்றியது மட்டுமல்லாமல், உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து நம்மைச் சிந்திக்கத் தூண்டும் விதமாக எழுதப்பட்டிருக்கின்றன. இடப்பெயர்வுகள், அரசின் அழுத்தங்கள், காலனித்துவத்தால் ஏற்பட்ட காயங்கள், பெண்களின் எதிர்ப்பும் வீரமும், இளைய தலைமுறையின் தொடரும் நம்பிக்கை, மண்ணின் மீதான உணர்வு, அடையாளத்தின் தேடல் எனப் பலவும் நமக்குக் கடத்தப்படுகின்றன.

முதல் நூலிலேயே மிகமுக்கியமான ஒரு களத்தைத் தேர்ந்தெடுத்து, அதற்குள் நம்மை அழைத்துச் சென்று இன்றைய காலத்தின் தேவையான கதைகளை நமக்குச் சொல்லியிருக்கும் தீபா ஜெயபாலன் அவர்களை மனதார வாழ்த்துகிறேன். இனிவரும் ஆண்டுகளில் பல புதிய நூல்களை மாற்று.இன் இணையதளத்தில் இருந்து உருவாக்கவேண்டும் என்கிற ஆசையையும் வெளிப்படுத்திக் கொள்கிறேன். இந்நூலை வாய்ப்பிருக்கும் அனைவரையும் வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

– இ.பா.சிந்தன்

Leave a Reply