நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவியிருக்கிற சாதிய நிலவரத்தில் பல ஊடக நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் அணுகுமுறைக்கு என்ன காரணம்? சாதி மோதலாகச் சித்தரித்து பகைமையைத் தீவிரப்படுத்திவிடக் கூடாது என்ற அக்கறைதான் காரணம் என்றால் அந்த நோக்கம் பாராட்டுக்குரியதே. ஆனால், உண்மை என்னவென்றால், அந்த நிறுவனங்களுக்கு உள்ளேயே இருக்கிற சாதிச் சூழலும், சாதிய மனநிலையும்தான் காரணம். இதை இந்தியாவில் சமூக நீதிக்காகக் களம் காணும் இயக்கங்கள் சொல்லி வந்திருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, 1990இல் பிரதமர் வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சியின்போது, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தோருக்கு அரசுப் பணிகளிலும் கல்வியிலும் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவதற்கான மண்டல் ஆணையத்தின் அறிக்கையைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அந்த அறிவிப்பு வந்த உடனேயே நாடு முழுவதும், உயர்சாதி எனப்படும் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களிடையே அதற்கு எதிரான கருத்துகள் பரப்பப்பட்டு, அவர்களில் ஒரு பகுதியினர் கலவரங்களில் ஈடுபட்டனர்.
நெருப்பும் எருமையும்
அதனை அன்றைய முன்னணிப் பத்திரிகைகள் அனைத்தும், ஒரு நியாயமான சீற்றம் போலச் சித்தரித்துச் செய்திகளை வெளியிட்டன. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில், இந்த நெருப்பு பரவட்டும் என்ற தலைப்பில் தலையங்கமே வந்தது. அப்போது அதன் ஆசிரியராக இருந்தவர் அருண் சோரி. பின்னாட்களில் ஒன்றிய ஆட்சிக்கு பாஜக வந்தபோது, அவருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டது.
மாணவர்களிடையே இத்தகைய கொந்தளிப்பான சூழல் இருந்த நிலையில், வி.பி. சிங் அரசு, மத்திய அரசுப் பணிகளில் மட்டும் 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான ஆணையைப் பிறப்பித்தது. பின்னர், மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2006இல் அரசமைப்பு சாசனத்தில் 93ஆவது சட்டத் திருத்தத்தைச் செய்து கல்வி நிலையங்களிலும் இந்த இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியது.

அப்போது முன்னணி நாளேடாகிய ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஒரு கார்ட்டூன் வெளியிட்டது. அரையாடைச் சிறுவன் ஒருவன் எருமை மாட்டின் மேல் உட்கார்ந்து அதை மேய்த்துக்கொண்டிருக்கிறான், அவனிடம் ஓர் அதிகாரி, “இந்தாப்பா உனக்கான டாக்டர் பட்டம்” என்று சொல்லி பட்டச் சான்றிதழை நீட்டுவதாக அந்தக் கார்ட்டூன் சித்தரித்தது. மாடு மேய்க்கிற நிலைக்குத் தள்ளப்பட்ட சமூகங்களின் தலைமுறைகள் அதையேதான் செய்துகொண்டிருக்க வேண்டுமா, படித்துப் பட்டம் பெறக்கூடாதா என்று அந்தக் கார்ட்டூன் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
தமிழ்நாட்டுக் காட்சிகள்
தமிழ்நாட்டில். அந்த அளவுக்குக் கொச்சைப்படுத்தும் கார்ட்டூன்கள் வரவில்லை என்றாலும், ஒரு தராசுத் தட்டில் தகுதி என்பதாக ஒரு பொருள் இருக்க, இன்னொரு தட்டில் இட ஒதுக்கீடு என்ற பெரிய பாறாங்கல் வைக்கப்படுவதாகவும், ஓட்ட மைதானத்தில் ஓடுகிற பொதுப்பிரிவு மாணவரின் காலில் இரும்புக் குண்டு கட்டப்பட்டிருப்பதாகவும் சித்தரிக்கும் கார்ட்டூன்கள் வந்தன. ‘தினமணி’ உள்ளிட்ட நாளேடுகளில், இட ஒதுக்கீட்டால், போட்டியாளர்களின் தகுதி பின்னுக்குத் தள்ளப்படுவதமாக எழுதப்பட்டது.
‘தீக்கதிர்’, ‘ஜனசக்தி’, ‘விடுதலை’, ‘முரசொலி’ உள்ளிட்ட இயக்கங்கள் சார்ந்த ஏடுகளில் இட ஒதுக்கீட்டை ஆதரித்து வலுவான கட்டுரைகள் எழுதப்பட்டன. ‘இந்து’ நாளேட்டிலும் சமூகநீதிக்கு ஆதரவான கருத்துகள் பெருவாரியாக இடம்பெற்றது.
‘ஆனந்த விகடன்’, ‘குமுதம்’, ‘கல்கி’ உள்ளிட்ட முன்னணி வாரப் பத்திரிகைகள், நேரடியாக இட ஒதுக்கீட்டை எதிர்க்காவிட்டாலும், எதிர்த்தவர்கள் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்தன.
அதிரவைத்த ஆய்வறிக்கை
இதற்கான பின்புலம் பற்றியே ஓர் ஆய்வறிக்கை வந்தது. வேடிக்கை என்னவென்றால், இந்தியாவின் இந்த நிலவரம் குறித்த அந்த ஆய்வை மேற்கொண்டவர் ஓர் அமெரிக்கர். ஆப்பிரிக்க–அமெரிக்க இனத்தவரான கென்னத் ஜே. கூப்பர் என்ற பத்திரிகையாளர் அந்த ஆய்வை மேற்கொண்டார். அமெரிக்காவில் கறுப்பின மக்களின் வாழ்நிலையை மேம்படுத்தக் கொண்டுவரப்பட்ட சட்டங்கள், அவற்றால் அமெரிக்க ஊடகங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிய விரிவான ஆய்வின் தொடர்ச்சியாக, இந்தியாவில் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் ஊடகப் பிரதிநிதித்துவம் பற்றிய ஆய்வை மேற்கொண்டார்.
அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட 325 முன்னணி ஊடக நிறுவனங்களில், எந்தச் செய்திகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிப்பது என்று முடிவு செய்யும் செய்தி அறைகளில் ஒருவர் கூட தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்ற உண்மை நிலவரத்தை அந்த அறிக்கை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.
செய்தி அறைகளில் 70 முதல் 80 சதவீதத்தினர் வரை, பிராமணர்கள் உள்பட உயர் சாதியினர் எனப்படுவோர் ஆதிக்கம் செலுத்துவதையும், மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ள தலித்துகள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட இதர வகுப்பினரின் குரல் அங்கு ஒலிக்கவில்லை என்பதை அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது
அதே காலக்கட்டத்தில் இந்திய ஊடகங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வான சமூகப் பிரதிநிதித்துவத்தின் அரசியல் விளைவுகள் பற்றி எழுதினார் பிரிட்டிஷ்காரரான பி.என். ஜேம்ஸ் மேனர். இந்த நிலைமையியால் ஏற்படும் ஜனநாயகச் சிதைவுகளையும் அவர் தனது எழுத்துகளில் எடுத்துரைத்தார்.
விவாதக் களங்கள்
கூப்பரின் ஆய்வறிக்கையும், மேனரின் கட்டுரைகளும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. பல்வேறு மட்டங்களில் விவாதங்கள் நடப்பதற்குக் காரணமாகின. ‘எடிட்டர்ஸ் கில்ட்’ (பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பு) மற்றும் பல்வேறு ஊடக அமைப்புகளுக்குள் பன்முகத் தன்மை குறித்த விவாதங்கள் தொடங்கின. அப்போது ஆங்கிலத்தில் மட்டுமே வந்துகொண்டிருந்த ‘இந்து’ நாளேடு, “செய்தியறையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி” என்ற தலையங்கத்தை எழுதியது. அதன் பி. சாய்நாத் உள்ளிட்ட சமூக அக்கறையாளர்கள் பலர் இது பற்றி எழுதினார்கள். இந்திய ஊடகங்கள் கிராமப்புறங்களின் சிக்கல்களையும், விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் போராட்டங்களையும் தவறவிடுவதற்கு இந்தப் பிரதிநிதித்துவமின்மையே காரணம் என்று வாதிட்டார்கள். சொல்லப்போனால், ஒதுக்கப்பட்ட மக்களுக்காகவென்றே குரல் கொடுக்கும் தனி ஏடுகள் உருவாகின.
அந்த ஆய்வுகளும் விவாதங்களும் மாற்றத்திற்கு இட்டுச் சென்றனவா? 2019-ஆம் ஆண்டில் ஆக்ஸ்ஃபாம் இந்தியா, நியூஸ்லாண்ட்ரி ஆகிய அமைப்புகள் இணைந்து இது பற்றிய ஒரு புதிய ஆய்வை நடத்தின. “நம் கதைகளை யார் சொல்கிறார்கள் என்பது முக்கியம் – இந்தியச் செய்தி அறைகளில் ஒதுக்கப்பட்ட சாதிப் பிரிவுகளின் பிரதிநிதித்துவம்” என்ற தலைப்பில் வெளியான அந்த ஆய்வறிக்கை, கூப்பர் வெளிப்படுத்திய நிலவரத்தில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்ற நிலைமையைக் காட்டியது செய்தி அறைகளில் தலித், பழங்குடி மற்றும் ஓபிசி சமூகத்தினரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருப்பது உறுதி செய்யப்பட்டது.
உடைமையாளர்களின் பின்னணி
இந்த ஆய்வுகள் செய்தி அறைகளில் நிலவும் சாதிய நிலைமையை எடுத்துக்காட்டின என்றால், ஒரு கட்டுரை அந்த ஊடக நிறுவனங்களை நடத்துகிற உடைமையாளர்களின் பின்னணி பற்றிப் பேசியது. ஊடகங்களின் அதிகார மையங்களில் நிலவும் சாதிய ஏகபோகத்தை அவர் அந்தக் கட்டுரை கடுமையாகச் சாடியது. விரிவான சந்தை உள்ள அந்த ஊடக நிறுவனங்களின் உடைமையாளர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் யார் என்பதை அந்தக் கட்டுரை காட்டியது.

“உண்மை என்னவென்றால், இந்தியாவின் மையமான ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் உயர்மட்ட மேலாளர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் உயர் சாதியினரைச் சேர்ந்தவர்கள். தகவல் தொடர்பு சாதனங்களின் மீதான இந்தச் சமூக ஏகபோகம், ஆளும் வர்க்கத்தின் சித்தாந்த. வர்க்க நலன்களையே வலுப்படுத்துகிறது.” எனக் கூறும் அந்தக் கட்டுரையை எழுதியவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அந்நாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத். கட்சியின் ‘பீப்பிள்ஸ டெமாக்ரசி’ ஆங்கில வார ஏட்டில் “ஊடகம், சாதி மற்றும் கார்ப்பரேட் அதிகாரம்” என்ற அந்தக் கட்டுரை வெளியானது.
ஆக, ஆகப் பெரும்பாலான பெரிய ஊடகங்கள் சாதிய வன்மங்கள் குறித்து, மிகப் பரபரப்பான நிகழ்வாக வந்தாலன்றி பிற நேரங்களில் அடக்கியே வாசிப்பது ஏனென்றால், மோதல்கள் தீவிரமாகிவிடக்கூடாது என்ற சமூக அக்கறையல்ல, அவைகளே சாதிக் கோபுரத்தின் உச்சித் தளத்தில் நிற்பதுதான். ஊடகங்களின் கார்ப்பரேட்மயத்துடன் சாதியக் கட்டமைப்பும் பிணைந்து நிற்கிறது.
தங்களுடைய நியாயங்கள் உரத்த குரலில் ஒலிக்க வாய்ப்பில்லை என்ற நிலையில்தான், ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு – குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு – ஒரு மேடையாக சமூக ஊடகங்கள் வந்து சேர்ந்தன.
அசைவுகள் ஏற்பட்டாலும்…
இத்தகைய நாடு தழுவிய விவாதங்கள் அசைவை ஏற்படுத்தாமல் போகவில்லை. இந்திய பத்திரிகை மன்றம் (பிரெஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா) இது குறித்து விவாதித்தது. குற்றச் செய்திகளிலோ, பொதுவான செய்திகளிலோ தேவையற்ற சூழலில் ஒருவரின் சாதி அல்லது மத அடையாளத்தைக் குறிப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தியது. ஒதுக்கப்பட்ட மக்கள் குறித்த செய்திகளில், அவர்களைப் பற்றிப் புகுத்தப்பட்டுள்ள முன்முடிவுகளை வலுப்படுத்தும் விதத்திலான சித்தரிப்புகளைத் தவிர்க்கவும் வலியுறுத்தியது. வேறு சில ஊடக அமைப்புகளும் இத்தகைய வழிகாட்டல்களை உருவாக்கின.
சில பெரிய நிறுவனங்கள் தங்களுடைய செய்தியாளர்களும் ஆசிரியர் குழுவினரும், தலித், பழங்குடி மக்களைக் குறிப்பிடும்போது பயன்படுத்த வேண்டிய கண்ணியமான சொற்கள் பற்றிய வழிகாட்டல்களை உருவாக்கின. சாதி, மதம், பாலினம், அரசியல் உள்ளிட்டவை சார்ந்த செய்திகளில் ஒருதலைப்பட்சமான போக்குகள் வெளிப்படுமானால் அவற்றைக் கண்காணித்து, ஆசிரியர் குழு கவனத்திற்குக் கொண்டுவந்து திருத்த நடவடிக்கைகளை அறிவுறுத்துவதற்காக என தனி பொறுப்பாளர்களை நியமித்தன. ‘விகடன்’ ஏட்டிலும் அதன் இணையப் பதிப்புகளிலும் சமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் எழுத்தாக்கங்கள் தொடர்ந்து வருகின்றன. நாடு தழுவிய அளவில் பல ஊடகங்கள் இப்படிப்பட்ட சில மாற்றங்களைச் செய்திருக்கின்றன.
சட்டக் கட்டாயமாக்கப்படாத நிலை
இப்படிப்பட்ட சில நல்ல நகர்வுகள் இருந்தாலும் கூட, இந்த வழிகாட்டல்களும் நன்னெறிக் கொள்கைகளும் பெரும்பாலான நிறுவனங்களுக்குள் ஏட்டளவிலேயே உள்ளன, நடைமுறையில் பெருமளவுக்குப் பழைய போக்குகள் தொடர்கின்றன என்று சமூகக் களச் செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதற்குக் காரணம், இவை சட்டப்பூர்வக் கட்டாயமாக இல்லாமல், சுய கட்டுப்பாட்டு விதிகள் என்ற அளவிலேயே வரையறுக்கப்பட்டிருப்பதுதான் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். தரவுத் தளங்களும் இதையே தெரிவிக்கின்றன.
உலக அளவிலான பிபிசி, நியூயார்க் டைம்ஸ் முதலிய நிறுவனங்களின் செய்தி அறைகளில், அந்தந்த நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினர் இத்தனை சதவீதம் பேர் இடம்பெற்றாக வண்டும் என்ற, பன்மைத்துவக் கொள்கை இருக்கிறது. இந்திய ஊடகங்களின் நன்னெறி விதிகளிலோ சமூக அடிப்படையிலான இட ஒதுக்கீடு அல்லது பிரதிநிதித்துவம் கட்டாயமாக்ப்படவில்லை. கேட்டால் “தகுதி“ என்ற மாயவாதத்திற்குள் போய்விடுவார்கள். வாய்ப்புகளை உறுதிப்படுத்தாமல் எப்படித் தகுதியைத் தீர்மானிக்க முடிகிறது என்பது வியப்புக்குறிதான்.
ஒரு திரையாக
ஆகவேதான், முதலில் குறிப்பிட்ட அந்த எருமை மாடு போன்ற கார்ட்டூன்கள் கருத்துச் சுதந்திரம் என்ற உன்னதமான உரிமையை ஒரு திரையாக்கிக்கொண்டு தப்பித்துவிடுகின்றன என்கிறார், சக மூத்த ஊடகவியலாளர். பிரகாஷ் குறிப்பிட்டிருப்பது போல, குறிப்பிட்ட சமூகப் பின்னணி கொண்ட உரிமையாளர்கள் தருகிற அழுத்தமும் இதில் இருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.
ஊடக உலகப் பயணத்தில், இப்படிப்பட்ட காட்சிகளை விமர்சனத்தோடுதான் கடக்க வேண்டியிருக்கிறது. அதே வேளையில், இந்தப் பயணத்தின் கருத்துச் சுதந்திரம் என்ற உரிமையை மூடிவிடுவதற்கில்லை. ஏனென்றால் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பயணத்திற்கான பாதையாகவும் இருக்கிறது, ஒரு வகையில் அது பயணத்தின் ஓர் இலக்காகவும் இருக்கிறது. அந்தப் பாதையில் சந்தித்த தடைக்கற்களின் கதைகளையும், அவை தகர்க்கப்பட்ட சாதனைகளையும் அடுத்தடுத்துப் பார்க்கலாம்.
தொடரும்
முதல் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-1/
இரண்டாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-2/
மூன்றாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-3/
நான்காவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-4/
ஐந்தாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-5/
ஆறாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-6/
ஏழாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-7
எட்டாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-8
ஒன்பதாவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-9/
பத்தாவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-10/
பதினொராவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-11/
பன்னிரண்டாவது கட்டுரை: https://maattru.in/2025/09/udaga-ulaga-payanam-12/
பதிமூன்றாவது கட்டுரை: https://maattru.in/2025/09/udaga-ulaga-payanam-13/
பதிநான்காவது கட்டுரை: https://maattru.in/2025/10/udaga-ulaga-payanam-14/
பதினைந்தாவது கட்டுரை: https://maattru.in/2025/11/udaga-ulaga-payanam-15/
பதினாறாவது கட்டுரை: https://maattru.in/2025/11/udaga-ulaga-payanam-16/
பதினேழாவது கட்டுரை: https://maattru.in/2025/12/udaga-ulaga-payanam-17/




