தொடர்கள்

சாதி ஆணவ வன்முறைகளுக்கு சட்டம் ஒழுங்கு வண்ணப் பூச்சு… (ஊடக உலகப் பயணம் –17)… அ. குமரேசன்

Udaga ulaga payanam

“கிராமத்தில் இரு பிரிவினர் மோதல்.” –இது போன்ற தலைப்பில் நாளேடுகளிலும் தொலைக்காட்சிகளிலும் அடிக்கடி செய்தி வருவதைப் பார்க்கலாம். தலைப்பைத் தாண்டி உள்ளே சென்று பார்த்தாலும், குறிப்பிட்ட ஊரில் இரண்டு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மோதிக்கொண்டதாகவும், அதில் இரு தரப்பிலுமே மரணம், காயம், உடைமை இழப்பு என ஏற்பட்டதாகவும், அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக முப்பது அல்லது நாற்பது பேர் சம அளவில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் இருக்கும்.

17 சாதியமும் ஊடகமும்

செய்திக்குள் எவ்வளவு ஆழமாக இறங்கிப் பார்த்தாலும், அது அந்த ஊரின் ஒதுக்கப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல் தொடுத்ததையும், அதற்கு எதிர்வினையாக அந்த மக்கள் திருப்பித் தாக்கியதையும் தெரிந்துகொள்ள முடியாது. செய்தியைப் படிக்கிறவர்களுக்கும் பார்க்கிறவர்களுக்கும் ஏதோ சம பலத்தில் இரு சமூகங்கள் அடித்துக்கொண்டது போன்ற எண்ணம் ஏற்படும்.

அந்தப் பிரச்சினையில் சாதியத்திற்கு எதிரான அரசியல் கட்சிகளும், ஒடுக்கப்பட்டோர் இயக்கங்களும், மனித உரிமை அமைப்புகளும் தலையிட்ட பிறகுதான், செய்திகளின் தொனியில் கொஞ்சம் மாற்றம் ஏற்படும். விதிவிலக்காக, சாதி ஒழிப்பைத் தங்களது லட்சியமாகவும் கொண்டிருக்கிற, ஊடக அறத்திலும் ஊறுதியாக நிற்கிற நிறுவனங்கள் மட்டும் தொடக்கத்திலிருந்தே அது சாதி ஆதிக்கத்தால் ஏற்பட்ட வன்முறை என்று சரியான செய்தியைக் கொடுத்து வருவார்கள். மற்றவர்களைப் பொறுத்தவரையில் மேலே பார்த்த அணுகுமுறைதான்.

தாமத உண்மைகள்

தமிழ்நாட்டில், குறிப்பாகத் தென் மாவட்டங்களில் பட்டியல் சாதிகளைச் சேர்ந்தோர் மீது தாக்குதல் நடத்தப்படும்போதெல்லாம், இரு பிரிவினரின் அமைதியின்மை, அல்லது தாக்குதலை நடத்தியவர்களுக்கு நியாயமான கோபம் இருந்தது என்ற கோணங்களிலேயே செய்திகள் தரப்படும். அமைப்புகளும் உண்மையறியும் குழுக்களும் அறிக்கைகளை வெளியிட்ட பிறகுதான் சாதிய வன்மத்தால் ஏற்பட்ட வன்முறை என்ற கோணம் வெளிப்படும். அதுவும் கூட, அந்த ஊடகங்களின் நேரடிச் செய்தியாக இல்லாமல், குறிப்பிட்ட அமைப்புகள் அவ்வாறு சொல்கின்றன என்பதாக வெளியிடுவார்கள். ஆதிக்க சாதியினரின் ஆத்திரத்திலும் கோபத்திலும் நியாயம் இருந்ததென்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்வோரும் உண்டு.

இரண்டு சாதிப் பிரிவுகளுக்கிடையே மோதல் ஏற்பட்டதைச் சொல்லும்போது கூட, அந்த நேரத்தில் ஏற்பட்ட தகராறு, உணர்ச்சிக் கொந்தளிப்பு என்றே சித்தரிப்பார்கள். புரையோடிய புற்று நோயாகிய சாதிக் கட்டமைப்பு பற்றிய ஆழ்ந்த விவாதங்களுக்கு, செய்திகளை வாசிக்கிறவர்கள் மனங்களில் ஒரு சிந்தனைக் கலகத்தை ஏற்படுத்தும் பதிவுகளுக்கு இடமளிப்பதில்லை. பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைப் பூச்சுகளைக் கலைத்துப் பார்த்தால், ‘சாதி வேறுபாடுகள் இப்படியே இருக்கட்டும், ஏற்றத்தாழ்வுகள் மட்டும் வேண்டாம்’ என்ற எண்ணப்போக்கு மறைந்திருப்பதைக் காண முடியும்.

கல்விக்கூட வளாகத்தில்

சாதியத்திற்கு எதிரான சிந்தனைகள் வளர்க்கப்பட வேண்டிய இடங்கள் கல்விக் கூடங்கள். இன்று பள்ளி மாணவர்களே சாதி வன்முறைகளில் ஈடுபடுகிற செய்திகள் வருகின்றன. மாணவர்களின் பொறுப்பற்ற தன்மை, ஆசிரியர்களின் கவனமின்மை என்றுதான் அது பற்றிய செய்திகளில் குறிப்பிடப் படுகிறதேயன்றி, சமுதாயத்தை ஆக்கிரமித்திருக்கும் சாதி ஏற்பாடுகளின் பிரதிபலிப்பே அது என்ற படப்பிடிப்பு இருக்காது.

17 = ரோஹித் வெமுலா

உயர் கல்வி வளாகங்களிலும் சாதியம் தாண்டவமாடுகிறது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில், ஆய்வுப் படிப்பு மாணவரான ரோஹித் வெமுலா 2016இல் தற்கொலை செய்துகொண்டார். தொடக்கத்தில், பாடச் சுமை, நிர்வாக அழுத்தம், ஆழ்ந்த படிப்பினால் ஏற்பட்ட மனச் சோர்வு என்ற மேலோட்டமான காரணங்களையே பல முன்னணி ஊடக நிறுவனங்களும் கூறின. மாணவர் சங்கங்களும், தலித் இயக்கங்களும் உண்மையைக் கண்டறிந்து வெளிப்படுத்திய பிறகுதான், தலித் சமூகத்தைச் சேர்ந்தவரான அவர் தொடர்ச்சியான ஒதுக்கல்களுக்கும் சாதிப் பகைமை உணர்வோடு தரப்பட்ட நெருக்கடிகளுக்கும் இலக்காக்கப்பட்டது பற்றிய செய்திகளும் வந்தன. மாணவர்கள் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தில் அவர் ஒலிவாங்கியைப் பிடித்துப் பேசுகிற படம் குறிப்பிடத்தக்கது. அது, அவர் நியாயங்களுக்காகக் குரல் கொடுப்பவராகவும் இருந்தார், அதற்காகவும் சேர்த்துதான் அவருக்கு நெருக்கடிகள் தரப்பட்டன என்று புரிந்துகொள்ள வைத்தது.

அதே வேளையில், சில பெரிய ஊடகக் குழுமங்கள், அவருடைய சாதிச் சான்றிதளின் உண்மைத்தன்மை பற்றிய கற்பனையான சந்தேகத்தை விற்பனை செய்ய முயன்றன. அதன் நோக்கம், வெமுலாவின் சமூகநீதிப் போராட்டத்தைச் சிறுமைப்படுத்துவதே என்று விளக்க வேண்டியதில்லை. அதன் பின்னணியில் இருந்தது, சாதியக் கட்டமைப்புக்கு ஆதரவான, அதற்கு எதிரான சவால்களை ஏற்க முடியாத மனநிலைதான் என்பது புரிந்துகொள்ள முடியாததில்லை.

செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக

அதே ஆண்டில், குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வு நாட்டின் மனசாட்சியை உலுக்கியது. உனா என்ற நகரத்தையொட்டிய மோட்டா சமதியாலா என்ற கிராமத்தில், பாலு சர்வையா, ரமேஷ் சர்வையா, வசரம் சர்வையா, அசோக் சர்வையா என்ற நான்கு தலித் இளைஞர்கள், “கோ ரக்‘ஷக்” என்ற பெயரில் பசுமாடுகளின் காவலர்களாகத் தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்ட ஒரு கும்பலால் தாக்கப்பட்டார்கள். சட்டைகளைக் கழற்ற வைத்து, முதுகில் அடித்தவாறு தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டார்கள்.

ஒரு பசுமாட்டின் தோலை உரித்து எடுத்தார்கள் என்று கூறியே அந்த அருவருப்பான வன்முறை தெருவேற்றப்பட்டது. அவர்கள் அப்படிச் செய்தது உண்மைதான், ஆனால் அது ஏற்கெனவே வயது முதிர்ந்து இயற்கையாகவே செத்துப்போயிருந்த மாடு. விற்பனை செய்யும் பாரம்பரியமான வழக்கத்தையொட்டியே அவர்கள் அதன் உடலிலிருந்து தோலை உரித்தார்கள். ஆனால், பசுமாட்டைக் கொன்று அவ்வாறு செய்ததாகக் கதை கட்டிவிட்டு, தாக்குதலை நடத்தியது அந்தக் கும்பல்.

17 உனா வன்முறை

“உனா வன்முறை” என்று பின்னாட்களில் அடையாளம் பெற்ற அந்தக் கொடுமை பற்றி, தொடக்கத்தில் பல ஊடகங்கள் அடக்கியே வாசித்தன. வெறும் உள்ளூர்ப் பிரச்சினை என்று சித்தரித்தன. நாடு முழுவதும் கண்டனத்திற்கும், உலக அளவில் கவனத்திற்கும் உள்ளானதைத் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சிறார் சீர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட வேண்டியிருந்த மூன்று சிறுவர்கள் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர். அதற்குப் பிறகுதான் அந்தக் கொடூரத்தையும், கூச்சநாச்சமற்ற சாதி மேலாதிக்க வெறியையும் சுட்டிக்காட்ட அந்த ஊடகங்கள் முன்வந்தன. அப்போது கூட, கும்பலின் அத்துமீறிய செயல் என்றுதான் சித்தரித்தன. அந்த அத்துமீறலுக்குக் காரணம் சாதி போதை என்ற உண்மையை அழுத்திச் சொல்லவோ, பொதுவிவாதத்திற்கு உட்படுத்தவோ, விதிவிலக்கானவற்றைத் தவிர்த்து மற்ற ஊடகங்கள் முன்வரவில்லை. அந்த வழக்கு இன்னமும் முடியாமல் இழுத்தடிக்கப்படுவதையும் ஊடகங்கள் கண்டுகொள்ளாமலே இருக்கின்றன.

வெறியும் வக்கிரமும்

2006இல் மகாராஷ்டிரா மாநிலத்தின் கைர்லாஞ்சி கிராமத்தில் (தற்போது பண்டாரா மாவட்டத்தின் கோசரா கிராமத்தின் ஒரு பகுதி) மஹர் (புத்தம்) சமூகத்தைச் சேர்ந்த பாய்யலால் போட்மாங்கே என்பவரின் குடும்பத்தில் நான்கு பேர் (தாய், மகள், இரண்டு மகன்கள்) ஆதிக்கச் சாதியினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். ஏன் தெரியுமா? அந்தக் குடும்பம் சொந்தமாக நிலம் வாங்கி, பொருளாதார நிலையில் தலை நிமிர்ந்து வாழத் தொடங்கியிருந்தது. அந்த கிராமத்தையே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆதிக்கர்களால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தங்களுடைய பாரம்பரியமான பெருமிதத்திற்கு சவால் விடுக்கப்படுவதாகக் கருதி அதை அனுமதிக்கக்கூடாது என்று நினைத்தனர்.

17 கைர்லாஞ்சி படுகொலை

சிலர் அந்தக் குடும்பத்தின் நிலத்தில் புகுந்து வளைத்துக் கொண்டனர். அதை சட்டப்பூர்வமாக மீட்க முடிவு செய்த குடும்பத்தினர், காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்தனர். சாதி அடிப்படையில் தாங்கள் அவமதிக்கப்படுவதையும் தெரிவித்தனர். இதைத் தங்களது கௌரவத்திற்கு இழுக்கென்று ஆத்திரவசப்பட்டவர்கள், செப்டம்பர 29 அன்று வீட்டுக்குள் புகுந்து மகன்கள் இருவரையும் வெட்டிக் கொன்றனர். தாயையும் மகளையும் வெளியே இழுத்துவந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திக் கொலை செய்தனர். பெண்களை இப்படி பலியாக்குவது சாதியமும் ஆணாதிக்கமும் கலந்த கௌரவக் குறியீடு. போட்மாங்கே மட்டும் தப்பிப் பிழைத்தார்.

இதற்கு நிகரான கொடுமைதான், பெரும்பாலான தேசிய, மாநில ஊடகங்கள் இதை ஒரு வழக்கமான குற்றச் செயல் செய்தி போல சிறிய அளவில் வெளியிட்டு முடித்துக்கொண்டது. தலித் இயக்கங்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் இது எவ்வளவு பெரிய கொடுமை என்று வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார்கள். சமூக ஊடகங்களில் பரவலாகியது. அதன் பிறகுதான் பெரிய ஊடக நிறுவனங்கள் இதை அப்படி சிறியதொரு செய்தியாக ஒதுக்கிவிட முடியாது எனறு புரிந்துகொண்டு விரிவான தகவல்களை வெளியிட்டன.

கீழவெண்மணியின் நெருப்புச் சிலுவை

தமிழ்நாட்டு வரலாற்றின் கொடூர அத்தியாயமான கீழ வெண்மணி படுகொலை பற்றிப் பேசாமல் இந்தக் கட்டுரை நிறைவடைய முடியாது. தஞ்சையின் அந்தக் கிராமத்து விவாசயத் தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூடுதல் கூலியாகக் கேட்டனர். உருவாகியிருந்த செங்கொடி சங்கம், நிலவுடைமையாளர்களின் கடுமைகளுக்குப் பணிந்திராமல் நியாயக் கோரிக்கையை முன்வைக்கும் துணிவை அளித்திருந்தது. அந்த அரைப்படி நெல்லைக் கூடுதலாகக் கொடுப்பதால் உடைமையாளர்களுக்கு இழப்பேதும் இல்லை, கொள்ளை லாபத்தில் கொஞ்சம் குறையும் – அவ்வளவுதான். ஆனால் “மேல்சாதி” என்பதாகச் சொல்லிக்கொள்ளும் பிரிவுகளைச் சேர்ந்த அவர்கள் ஆத்திரமடைந்தனர் – ஏனென்றால் கூடுதல் கூலி கோரியவர்கள், வெறும் தொழிலாளர்கள் மட்டுமல்ல, தாழ்த்தி ஒதுக்கப்பட்ட பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காலங்காலமாகக் கை கட்டி, கொடுத்த கூலியை வாங்கிக்கொண்டு போனவர்கள் இப்போது கையை உயர்த்திக்கொண்டு வருகிறார்கள் என்ற மாற்றத்தை ஆதிக்க சாதிச் செல்வந்தர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அடியாட்களை ஏவி விட்டார்கள்.

Image

1968 டிசம்பர் 25 அன்று உலகம் ஏசு கிறிஸ்து பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டு இருந்தபோது, வெண்மணிப் போராளிகள் அடித்து விரட்டப்பட்டார்கள். ஒரு குடிசையில் நுழைந்து தப்பிக்க முயன்றவர்களை, அதுதான் வாய்ப்பான இடமென்று, குடிசைக்குத் தீ வைத்து நெருப்புச் சிலுவையில் ஏற்றிக் கொன்றது உடைமையாளர்கள்–அடியாட்கள் கும்பல்.

வர்க்கப் போராட்டமும் சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பும் இணைந்த அந்த நிகழ்வு பற்றிய செய்திகளில் அன்றைய முன்னணிப் பத்திரிகைகள் நில உடைமையாளர்களுக்கும் கூலித் தொழிலாளர்களுக்கும் இடையேயான மோதல் என்றே சித்தரித்தன. தொடர்ந்த கொடுமையாக, நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்தது. உயர்குடியினரும் செல்வந்தர்களுமான அவர்கள் இப்படிப் பட்ட குற்றத்தைச் செய்திருக்க மாட்டார்கள் என்று நீதிபதி கூச்சமே இல்லாமல் தன் தீர்ப்பில் கூறினார். கூச்சமே இல்லாமல் அதை அப்படியே வெளியிட்ட பெரும்பாலான பத்திரிகைகள், கோரிக்கையின் நியாயத்தைப் பற்றியோ, சாதிய நெருப்பின் வெப்பம் பற்றியோ வாசகர்களின் சிந்தனைக்குக் கொண்டுவருவதைத் தவிர்த்தன. செங்கொடி இயக்கமும் தலித் அமைப்புகளுமே அயராமல் உண்மைகளை வெளிப்படுத்தின.

நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவியிருக்கிற சாதிய நிலவரத்தில் ஊடக நிறுவனங்கள் இத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கு என்ன காரணம்? சாதி மோதலாகச் சித்தரித்து பகைமையை வளர்க்கக் கூடாது என்ற நல்ல எண்ணம்தான் காரணம் என்று சொல்லப்படுவதுண்டு. உண்மை என்ன?

தொடரும்

முதல் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-1/
இரண்டாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-2/
மூன்றாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-3/
நான்காவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-4/
ஐந்தாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-5/
ஆறாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-6/
ஏழாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-7
எட்டாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-8
ஒன்பதாவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-9/
பத்தாவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-10/
பதினொராவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-11/
பன்னிரண்டாவது கட்டுரை: https://maattru.in/2025/09/udaga-ulaga-payanam-12/
பதிமூன்றாவது கட்டுரை: https://maattru.in/2025/09/udaga-ulaga-payanam-13/
பதிநான்காவது கட்டுரை: https://maattru.in/2025/10/udaga-ulaga-payanam-14/
பதினைந்தாவது கட்டுரை: https://maattru.in/2025/11/udaga-ulaga-payanam-15/
பதினாறாவது கட்டுரை: https://maattru.in/2025/11/udaga-ulaga-payanam-16/