தொடர்கள்

பாலின சமத்துவமும் பார்வைக் கோளாறுகளும்… (ஊடக உலகப் பயணம் – 13)… அ. குமரேசன்

Paalina samathuvam

நடுநிலையை உரசிப்பார்ப்பதற்கான உரைகற்களில் ஒன்றாக வர்க்க நிலைப்பாடு குறித்துப் பார்த்தோம். இப்போது இன்னொரு உரைகல்லான  பாலின அணுகுமுறையை விசாரிப்போம். பெரும்பாலான ஊடகங்களில் பெண்களைப் பற்றிய சித்தரிப்புகள் பாலின சமத்துவக் கண்ணோட்டத்தைப் புறக்கணிப்பதாக, சமுதாயத்தில் ஊறிப்போயிருக்கிற பெண் அவமதிப்புக் கலாச்சாரத்தை  வெளிப்படுத்துவதாக இருப்பதைக் கவனித்தால் அதிர்ச்சியே ஏற்படும். 

ஊடகங்கள் சமூகத்தின் கண்ணாடியாகச் செயல்படுகின்றன என்று எடுத்துக்கொள்வதானால், ஆணாதிக்க சமூகத்தின் பார்வைகளையே அவை பிரதிபலிக்கின்றன என்று உரக்கச் சொல்லலாம். பெண்கள் அதிகாரம், பொறுப்பு, தலைமைப் பாங்குகளில் குறைத்தே காட்டப்படுகிறார்கள். திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் போன்றவற்றில் பெண்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள்?

விளம்பரப்பொருள்

13 பாலினப் பாகுபாடுகள் 1

ஆகப் பெரும்பாலான திரைப்படங்களிலும் பொருள்களுக்கான விளம்பரங்ளிலும் பெண்கள்  பல்வேறு பொருள்களோடு பொருளாகவே வைக்கப்படுகிறார்கள். புதிய கடைத் திறப்பு அல்லது பண்டிகை விற்பனை நாட்களில் நுழைவாயிலில் பல வண்ண பலூன்களின் வளையம் வைத்திருப்பார்களே, அது போலக் கண்களை ஈர்க்கும் கவர்ச்சிக் கருவியாகவே பயன்படுத்தப்படுகிறார்கள்.

ஆண் தன் முகத்தின் கன்ன மயிறைச் சிரைத்துக்கொள்ளும் பொருளுக்கான விளம்பரத்தில், வேலை முடிந்ததும் அந்த முகத்தை ஒரு பெண் தன் கைவிரல்களால் வருடிப் பார்த்து அந்த பிளேடின் கூர்மைக்குச் சான்றளிக்க வேண்டியிருக்கிறது. ஆணின் உள்ளாடை விளம்பரத்தில் ஒரு பெண் அவனுடைய மார்பையோ இடுப்பையோ பார்த்து வியக்க வேண்டியிருக்கிறது.

தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் பெரும்பாலும் ஒரு நல்ல மனைவியாக, தாயாக, பணிவும் அடக்கமும் உள்ள மகளாகவே நடமாடுவார்கள், அதன் மூலம் தலைமுறைகளாகப் போதிக்கப்பட்டு வரும் பெண்ணின் பெருமையைப் பாதுகாப்பார்கள். அப்படியெல்லாம் இல்லாத பெண்கள் வில்லிகளாகக் கண்களை உருட்டி ஆணவமாகப் பேசுவார்கள். இரண்டும் இல்லாவிட்டால் தொடர் நெடுகத் துன்பங்களில் மூழ்கி அழுது புலம்புவார்கள். மனிதப் பிறவியாகப் பெண்ணுக்கு இருக்கக்கூடிய தனிப்பட்ட ஆசைகள்,  போராடி வளர்த்துக்கொண்ட திறமைகள், மனதில் ஏந்திய பொது லட்சியங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் கதைகள் மிகக் குறைவு.

மதுக்கடைவாசல்

திரைப்படங்களும் தொலைக்காட்சி நாடகங்களும் வலைத்தொடர்களுமாவது கதையாகப் புனையப்படுபவை. செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் எப்படி நடந்துகொள்கின்றன? எந்த ஊடகத்தின் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை, வாசகர்களே ஊகித்திக்கொள்ள முடியும்.

ஊடகச் சந்தையில் முன்னணியில் இருக்கும் நாளேடு ஒன்றில் வந்த ஒரு செய்தியை நினைவுகூரலாம். ஒரு மார்ச் 8 அன்று அந்த நாளேட்டின் முதல் பக்கத்தில் ஒரு படம் வெளியிடப்பட்டு, “இதற்குத்தான் பெண் விடுதலையா” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. உலக மகளிர் தினத்தில் பல ஏடுகளிலும் கல்லூரிப் பெண்கள், விவசாயம் முதல் விண்வெளிப் பயணம் வரையில் ஈடுபடும் பெண்களின் படங்களும் குறிப்புகளும் வெளியிடப்படுகின்றன. அன்றைக்கு அந்த ஏடு மாறுபட்ட படத்தை வெளியிட்டு அப்படியொரு தலைப்பையும் கொடுத்திருந்தது ஒரு பகுதியினருக்கு ரசனையையும் இன்னொரு பகுதியினருக்குக் கடுமையான கோபத்தையும் ஏற்படுத்தியது.

ஒரு மதுக்கடை முன்பாக நின்றுகொண்டு ஒரு பெண் தலையைப் பின்னால் சாய்த்து பாட்டிலைத் திறந்து வாயில் ஊற்றிக்கொண்டிருக்கிறார். சேலை  கசங்கியிருக்கிறது, சட்டை கிழிந்திருக்கிறது. அவர் பக்கத்தில் மூன்று சக்கர வண்டி நிற்கிறது –மீன் சந்தையிலிருந்து மீன்களைக் கொண்டுசென்று கடைகளில் இறக்கி வைப்பதற்கான வண்டி எனத் தெரிகிறது. ஆக அந்தப் பாட்டாளிப் பெண் என்ன தொழில் செய்கிறார் என்று புரிகிறது.

நாள் முழுக்க அந்த மீன்களின் கவிச்சியோடும் கசகசப்போடும் உழல்கிறவர்களுக்கு மதுவினால் கிடைக்கும் தற்காலிக மாற்றம் தேவைப்படலாம் என்கிற புரிதல் ஏன் இல்லாமல் போனது? குடிப்பது தவறென்றால் ஆணுக்கும் அதைச் சொல்ல வேண்டியதுதானே? விழாக்களும் கொண்டாட்டங்களும் வந்தாலே பாட்டில்களை வாங்கி வைத்துக் கும்மாளமிடுகிற ஆண்களின் படத்தைப் போட்டு, இதற்குத்தான் இந்தப் பண்டிகையா என்று தலைப்புத் தருவார்களா? பெண்ணின் மற்ற சுதந்திரங்களைப் போலவே இதையும் ஏற்க மறுக்கிற,  அல்லது இதைச் சொல்லி பெண் சுதந்திரத்தையே இழிவுபடுத்துகிற கைங்கரியம்தானே இது?

13 பாலினப் பாகுபாடுகள் 2

அதற்குக் கண்டனம் தெரிவித்து மாதர் அமைப்புகளைச் சேர்ந்தோர் அந்த நிறுவன அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நிர்வாகத்தினர் அவர்களை உள்ளே வரவழைத்துப் பேச்சு நடத்தினர். ஆர்ப்பாட்டத்தினர் தங்களுடைய கண்டன அறிக்கையைக் கொடுத்து, அதைச் செய்தியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு திரும்பினார்கள். மறுநாள் அது பற்றிய செய்தி வரவில்லை. அதற்கு மறுநாளும் வரவில்லை. மாதர் இயக்கத்தினர் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்திருக்கிறார்கள்.

அதற்கடுத்த நாள், அரசியல் நையாண்டிப் பகுதியில் இப்படிக் குறிப்பிட்டிருந்தனர். “…இப்படியொரு படம் வெளியிட்டிருந்தோம் அல்லவா? அந்தப் படத்தை வெளியிட்டதில் உள்நோக்கம் ஏதுமில்லை. ஆனால் சிலர் அதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மகளிர் அமைப்புகளைச் சேர்ந்த சிலர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்கள். தங்களின் கண்டனத்தை வெளியிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். ஆகவே நமது  வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால் வாசகர்களே, அவர்களில்  நாம் வெளியிட்டிருந்த படத்தில் உள்ள பெண் இல்லை. அவர்கள் ஜீன்ஸ் அணிந்தவர்களாக, டி சர்ட் போட்டிருந்தவர்களாக, கிராப் வெட்டிக்கொண்டிருந்தவர்களாக, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுகிறவர்களாக இருந்தார்கள்.”

அந்தப் படத்தை வெளியிட்டதை விடவும் மோசமான செயல் இது என்று விளக்க வேண்டியதில்லை. பொதுவாகவே பல நாளேடுகளிலும், பருவ இதழ்களிலும் போதையில் இருக்கும் பெண்கள், குறிப்பாக மாணவிகளின் படங்களைப் போடுவார்கள். அவற்றிற்குக் கீழே,, “எப்படியெல்லாம் இருக்கிறார்கள் பாருங்கள், சமூகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது,” என்று கேட்கும் செய்திகளை ஏதோ சாமிக்கு நேர்ந்துகொண்டது போல அவ்வப்போது வெளியிட்டு வருவதைப் பார்க்கத்தானே செய்கிறோம்.

படப்பிடிப்பில்

மற்றொரு நாளேட்டின் உட்புறத்திலும், அதற்கான விளம்பரச் சுவரொட்டியிலும்,ஜீன்ஸ் பேன்ட், டீ ஷர்ட் அணிந்த, கழுத்திலிருந்து முழங்கால் வரையிலான பெண்  படம்  வெளியிடப்பட்டிருந்தது. அதற்கருகில் பெரிய எழுத்துகளில், “படப்பிடிப்பில் உட்காரும் இடத்தில் ஈரமாக்கிய நடிகை,” என்று போட்டிருந்தார்கள். கணிசமான வாசகர்களின் மனங்களில் அவர் யாராக இருக்கும் யோசனையை ஓடவிடுகிற அருவருப்பான செயல்தானே அது? அந்தத் தகவல் உண்மையென்றே வைத்துக்கொள்வதானாலும், படப்பிடிப்புத் தளத்தில் அவ்வாறு நடந்திருக்கிறது என்றால், உரிய வசதிகள் செய்யப்படாத நிலையில் அவருக்கு உடலளவிலும் வேலையளவிலும் எப்படிப்பட்ட நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்ற பரிவையும் கோபத்தையும் அல்லவா நேர்மையான செய்தி ஏற்படுத்தியிருக்க வேண்டும்?

செய்தியேடு அல்ல என்றாலும், ஒரு முன்னணி வாரப் பத்திரிகை. அதில் ‘ஒரு நடிகையின் கதை’ என்ற தொடர் வெளியிடப்பட்டது. திரையுலகில் வாய்ப்புகளுக்காகவும் புகழ்பெறுவதற்காகவும் பாலியல் சமரசங்களைச் செய்யக் கட்டாயப்படுத்தப்படும் ஒரு நடிகை மற்றிய கற்பனைக் கதை என்று சொல்லிக்கொள்ளப்பட்டது. கற்பனையான கதாபாத்திரங்கள் என்ற அறிவிப்போடு, பெண்ணாக இருக்குமோ என்று நினைக்க வைக்கும் ஒரு புனைப்பெயரில் அந்தத் தொடர் வந்தது. ஆனால், அந்த நடிகையைத்தான், இந்த நடிகனைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று பல உண்மைக் கலைஞர்களைக் கற்பனை செய்துகொள்ளத் தக்க வகையில் “திறமையாக” எழுதி வந்தார்கள். பத்திரிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஒருவர்தான் புனைப்பெயரில் எழுதுகிறார் என்று கூட ஊடக வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது. திரையுலகினர் பலரும் மனம் நொந்தார்கள். சத்யராஜ் உள்ளிட்ட சில கலைஞர்கள் வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்தார்கள். 

அப்போதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் வாசுகி தலைமையில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. உள்ளே அழைக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் ஆசிரியர் பேசினார். வாசகர்கள் விரும்புவதைத்தான் கொடுக்கிறோம் என்ற தொணியில் அவர் பதிலளிக்க, எந்த வாசகர்கள் இப்படியொரு தொடர் வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்கள் என்று தலைவர்கள் கேட்டார்கள். திரைப்படம் மட்டுமல்லாமல் எந்தவொரு துறையிலும் வெற்றிப் படியேறும் பெண்கள் பாலியல் சமரசங்களைச் செய்துதான் அதைச் சாதிக்கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது நியாயமா என்ற கணையும் வீசப்பட்டது.

அதற்கடுத்த வார இதழில், “இந்தத் தொடர் வாசகர்கள் விருப்பப்படி, யாரையும் புண்படுத்துகிற நோக்கமின்றி, ஒரு சுவாரசியத்திற்காகவே வெளியிடப்பட்டது. ஆனாலும் சிலர் அது புண்படுத்துவதாகக் கருதுவதால் நிறுத்தப்படுகிறது,” என்ற இத்தனூண்டு அறிவிப்புடன் தொடர் விலக்கப்பட்டது (மாதர் இயக்கத்தினரோடு நிர்வாகத்தின் சார்பில் பேச்சு நடத்திய ஆசிரியர் பின்னர் இந்த நிலைப்பாட்டுடன் உடன்பட இயலாதவராக அந்த நிறுவனத்திலிருந்து விலகினார்).

ஆணுக்கும்அவமதிப்பு

இத்தகைய பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. ஆண் வக்கிரப் பசியைத் தணிக்கிற, பெண்ணை அந்தப் பசிக்கான தீனியாக்குகிற  இப்படிப்பட்ட வெளியீடுகளைச் செய்துவிட்டு “நடுநிலை” என்ற போட்டுக்கொள்வது, முகத்தைக் கொஞ்சமும் மறைக்காத முகத்திரையன்றி வேறென்ன?

ஒரு நாளேட்டின் கலைப் பகுதியில் (என்ன கலையோ?) கிட்டத்தட்ட பாதிப் பக்கத்தைப் பிடித்துக்கொண்ட நடிகையின் மார்பளவுப் படத்தை வைத்து, “இப்படியா அதைக் காட்டுவது போல டிரஸ் போட்டு காளையர் மனசைக் கலங்கடிப்பது”  என்ற வாசகத்தைச் சேர்த்திருந்தார்கள்.  பெண்களை மட்டுமல்லாமல் காளைகளையும் கொச்சைப்படுத்திவிட்டதால் அதை நடுநிலை என்று சொல்ல முடியுமா?

முகப்பு அட்டைகளில் பெண்ணின் படத்தை மட்டுமே வைப்பதென்று கங்கணம் கட்டிக்கொண்டு தொடர்ந்து செய்கிறார்கள். பெண்ணை முன்னிலைப்படுத்துகிறார்கள் என்று பாராட்ட முடியுமா?

கால்மேல்கால்

“மேடையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த பெண்” என்று கூச்சமே இல்லாமல் போடுகிறார்கள். அந்தப் ‘பெண் தன்னுடைய காலின் மேல்தானே, தன்னுடைய காலைத்தானே போட்டிருந்தார்? அதிலே அவர்களுக்கு என்ன பிரச்சினை வந்தது? அதை விட, உடலுக்கு ஆறுதலும், மனதிற்கு நம்பிக்கையையும் அளிக்கிற வகையில் உட்கார்ந்துகொள்வது ஓர் உரிமை. பெண்ணுக்கு அந்த  உரிமையை மறுக்கிற பழமைவாதத்திலிருந்தே இப்படிப்பட்ட குறிப்புகள் வருகின்றன.

தலைப்புகளும் குறிப்புகளும் இப்படித் தொடர்வதோடு, பெண்ணை இழிவுபடுத்தும் சொல்லாடல்களும் இருக்கின்றன. வலுக்கட்டாய உடலுறவைக் குறிப்பிடுவதற்கு வன்புணர்வு, வல்லுறவு, பாலியல் வன்கொடுமை என்ற  சொற்கள், மாதர் அமைப்புகளின் தொடர்ச்சியான முழக்கங்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வந்துவிட்டன. ஆனால் இப்போதும் “கற்பழிப்பு” என்ற சொல்லை விடாமல்பயன்படுத்துகிறவர்கள் இருக்கிறார்கள், அதுதான் வாசகர்களுக்குப் புரியும் என்று நியாயப்படுத்தி, வாசகர்களின்புரிதல் திறனையும் கொச்சைப்படுத்துகிறார்கள்.

திருமண உறவைத் தாண்டிய தொடர்புகள் சமுதாயத்தில் அங்கும் ஏற்படுகின்றன. சில நேரங்களில் அது கொலை வரையில் கூடப் போகிறது. அப்படிப்பட்ட உறவைக் “கள்ளக் காதல்” என்று தயக்கமே இல்லாமல் குறிப்பிடுவார்கள். கள்ளக் காதலனோடு ஓடிப்போன மனைவி, கள்ளக் காதலனுக்க்காகக் கணவனைத் தாக்கிய பெண்… இப்படியான செய்திகள் வருகின்றன. சட்டப்பூர்வமான சொல் மண வாழ்வைத் தாண்டிய உறவு என்பது மட்டுமே. அதை ஏன் இவ்வகை ஊடகங்கள் பயன்படுத்துவதில்லை? ஆண் எத்தனை தொடர்புகள் வைத்திருந்தாலும் அது ஆண்மையின் அடையாளம், பெண்ணுக்கு அப்படி அமைந்தால் அது கள்ள உறவென்பது கடைந்தெடுத்த பெண் சிறுமையே.

வாத நியாயப்படியே பார்த்தாலும், ஒரு பெண் மண வாழ்விலும் கணவன் மீதும் பல்வேறு சூழல்களில் வெறுப்பு ஏற்பட்டு, தன்னை நேசிக்கிற ஒருவனைத் தேர்ந்தெடுக்கிறாள் என்றால், அது எப்படி கள்ள உறவாகும்? அதுதானே நல்ல உறவு? மன ஈடுபாடின்றி மற்றவர்களுக்குப் பயந்து மண வாழ்வைத் தொடர்வாள் என்றால், அதுதானே கட்டாயக் கள்ள உறவு?

தற்பாலினஉறவு

 இரண்டு பெண்கள் ஒருவரையொருவர் நேசிப்பது இயற்கையான உறவு நாட்டம். இந்த அறிவியல் உண்மையைப் புரிந்துகொள்ளாமல், அப்படி இணைந்து வாழ்கிறவர்களைப் பற்றிக் கூறும்போது, “ஓரினச்  சேர்க்கை” என்ற சொல்லாடலைத்தான் பயன்படுத்துகிறார்கள். அந்தச் சொல்லாடல், அந்த இருவருக்குமான உறவு  படுக்கையறை சார்ந்ததுதான் என்ற எண்ணத்தை உடனடியாக ஏற்படுத்துகிறது. உண்மையில், அதில் சம்பந்தப்பட்ட இருவரது காதல், புரிதல், பாதுகாப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு கூறுகள் இருக்கின்றன. தன்பாலின ஈர்ப்பாளர்கள், ஓர் பாலினஉறவாளர்கள் என்ற சொற்களை எடுத்துக்கொள்ள மறுப்பது பெண்ணின் உணர்வுகளை மதிக்க மறுப்பதன் தொடர்ச்சியே.

வரதட்சனைச் சித்திரவதை, ஆணவக்கொலை பற்றிய செய்திகள் வருவது உண்மையே.  அந்தச் செய்திகள் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் மீதும் பரிவை ஏற்படுத்துவதும் உண்மையே. அந்த அளவில் பாராட்டத்தக்கதுதான். ஆனால், அந்த அளவோடு நிற்பதை எப்படி ஏற்பது? வரதட்சனைக் கொடுமைகள் தொடர்வதன் சமூகக் காரணிகள் மீது கோபத்தை ஏற்படுத்தும் ஆழமான சிந்தனைகளுக்குள் போகாமல், பரிவு மட்டும் காட்டுவதால் என்ன பயன்?

இரவு நேரத்தில் வெளியே வந்த, அல்லது ஒரு தனியிடத்திற்கு வந்த ஒரு பெண் பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டார் என்ற செய்தி பல ஊடகங்களில் எப்படி வருகிறது? அவள் ஏன் அந்த நேரத்தில் அங்கே போனாள் என்ற நேரடியாகக் கேட்காமலே, செய்தியைப் படிக்கிறவர்கள், கேட்கிறவர்கள் மனங்களில் அந்தக் கேள்வியைப் பதித்துவிடுகிறார்கள்.

தொழில், கலை உள்ளிட்ட  களங்களில் வெற்றிபெறும் பெண்களின் நேர்காணல்கள் வருகின்றன. மற்ற பெண்களையும் நம்பிக்கையோடு முயற்சிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கும் அத்தகைய பதிவுகள் வரவேற்கக்கப்பட வேண்டியவை. ஆனால், அதிலேயும் சில ஊடகங்கள், ஒரு வெற்றிப் பெண் கூறியிருக்கக்கூடிய இதர முக்கியமான தகவல்கள், சந்தித்த சவால்கள் போன்றவற்றை உள்ளே தள்ளிவிடுவார்கள்.  “என்னதான் பெரிய ….. ஆக வளர்ந்துவிட்டாலும், ஒரு நல்ல மனைவியாக, தாயாகக் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில்தான் மனநிறைவடைகிறேன்,” என்று அவர் சொல்லியிருப்பாரானால் அதை  முன்னிலைப்படுத்துவார்கள். சுற்றி வளைத்து இப்படி இருப்பதுதான் பெண்ணுக்குப் பெருமை என்ற பழைய போதனைகளைப் புதிய வடிவில் செய்கிற சித்தரிப்புகளில் என்ன நடுநிலை நெறி இருக்கிறது?

பெண்பிரதிநிதித்துவம்

இதற்கான காரணங்களை அலசினால், பல ஊடக நிறுவனங்களின், பல ஊடகவியலாளர்களின் ஆணாதிக்க மனநிலை முதலாவதாக வந்து நிற்கும். நடைமுறை சார்ந்த மற்றொரு காரணம், ஊடகங்களில் செய்தியாளர்களாகவும் ஆசிரியர் குழுவினராகவும் பல பெண்கள் இணைந்திருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் சிறப்பாகப் பங்களிக்கிறார்கள் என்றாலும, கண்ணோட்டங்களை இறுதிப்படுத்தும் இடங்களில் அவர்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே இருக்கிறது.

13 பாலினப் பாகுபாடுகள் 3

அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வறிக்கையின்படி இந்தியாவின் ஒட்டுமொத்த மையநீரோட்ட ஊடகங்களில், செய்திகளையும் கண்ணோட்டங்களையும் இறுதிப்படுத்துகிற தலைமைப் பொறுப்புகளில் இருப்போரில் 15 சதவீதத்தினர் மட்டுமே பெண்கள். 2022இல் இது 12 சதவீதமாக இருந்தது. அதிலிருந்து ஒரு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றாலும், விரிவான பிரதிநிதித்துவம் இன்னும் பெரியதொரு சவாலாகவே தொடர்கிறது. 

உலக அளவில், மையமான ஊடகங்களில் தலைமை ஆசிரியர் பொறுப்புகளில் 4 பேருக்கு ஒருவர் பெண். செய்தியாளர்களில் 3 பேருக்கு ஒருவர் பெண். தலைவர்களையும் வல்லுநர்களையும் நேர்காணல் செய்பவர்களில் 4 பேருக்கு ஒருவர் பெண். இந்தியா இன்னும் இதில் பின்தங்கியே வைக்கப்பட்டிருக்கிறது. ஊடக நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்புகளில் பெண்களுக்கான இடம் 27 சதவீதம்தான்.

ஆகவேதான் கல்லூரிகளிலும் இதர பல மேடைகளிலும் ஊடகங்களில் பெண் சித்தரிப்பு பற்றிய கலந்துரையாடல்களில், அதிகமான பெண்கள் ஊடகத்துறைக்கு வாருங்கள் என்று, அக்கறையாளர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலைமைகளில் மாற்றமே ஏற்படவில்லையா? நிச்சயம் ஏற்பட்டிருக்கிறது. அது இன்னும் இன்னும் விரிவடையவேண்டும், மேலும் மேலும் முழுமையடைய வேண்டும். அத்தகைய ஊடக நெறியை உயர்த்திப் பிடிக்கவே இந்தப் பதிவு.

பயணம் தொடரும்

முதல் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-1/
இரண்டாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-2/
மூன்றாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-3/
நான்காவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-4/
ஐந்தாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-5/
ஆறாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-6/
ஏழாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-7
எட்டாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-8
ஒன்பதாவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-9/
பத்தாவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-10/
பதினொராவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-11/
பன்னிரண்டாவது கட்டுரை: https://maattru.in/2025/09/udaga-ulaga-payanam-12/