உலகின் பிற பகுதிகளைப் போலவே இந்தியாவிலும் அச்சுக் கூடங்கள் அமைக்கப்பட்டதோடு இணைந்தே பத்திரிகை வெளியீடுகள் தொடங்கின. தமிழ்நாட்டில் புன்னக்காயல், தரங்கம்பாடி, சென்னை (வெப்பேரி) ஆகிய இடங்களில் அச்சகங்கள் அமைக்கப்பட்டன.
1785இல் ஆங்கிலத்தில் வெளியான ‘மெட்ராஸ் கூரியர்’ முதன் முதலில் தமிழ்நாட்டில் (அப்போது மதராஸ் மாகாணம்) வந்த பத்திரிகை. அதை வெளியிட்ட ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் அரசாங்க சார்புப் பத்திரிகையாகவே நடத்தினார். 1795இல் ‘மெட்ராஸ் கெஜட்’, ‘இந்தியன் ஹெரால்டு’ என்ற இதழ்களை வில்லியம்ஸ் என்பவர் தொடங்கினார்.
தமிழிலேயே வந்த முதல் பத்திரிகை 1802ஆம் ஆண்டு சிலோன் (இலங்கை) நாட்டிலிருந்து வெளியான ‘சிலோன் கெஜெட்’ என்று “தமிழக நாளிதழ்களின் வரலாறு” என்ற கட்டுரையில் என். கார்த்திக் தெரிவிக்கிறார். ‘தமிழ் ஹிஸ்டாரிக்கல்’ இணையத்தளத்தில் வந்துள்ள அந்தக் கட்டுரை அரிய தகவல்களைத் தருகிறது.
தமிழில் திருநெல்வேலியிலிருந்து ‘தம்பிரான் வாணி’(1831) என்ற கிறிஸ்துவ மிஷனரி பத்திரிகை வந்தது. 1840களில், திருச்சியிலிருந்து இந்து சமயம் சார்ந்த தத்துவப் பரப்பலுக்காக ‘அகிலாண்ட சபை தீபிகை’ என்ற ஒரு பத்திரிகை வந்தது. 1850களில் தமிழறிஞரும் பாதிரியாருமான ஜி.யு. போப் ‘தென் நாடன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார் என்று ஏற்கெனவே பார்த்தோம். இவற்றுக்கு முன்பாக 1831இல் மதராஸ் கிறிஸ்துவ சங்கம் ‘தமிழ் பத்திரிகை’ என்ற பெயரிலேயே மாத இதழ் ஒன்றைத் தொடங்கியது. சென்னையில் துவங்கப்பட்ட முதல் தமிழிதழ் இதுதான். 1833இல் ‘ராஜவிருத்தி போதினி’ என்ற பத்திரிகையும் கிறிஸ்துவ சபையினரால் வெளியிடப்பட்டது. 1836இல் ‘தி ஸ்பெக்டேட்டர்’ என்ற ஆங்கில ஏடு, ஜே. ஆக்டர்லோனி என்பவரால் துவங்கப்பட்டது.
1840இல் நாகர்கோவிலிலிருந்து வந்த ‘சுவிசேஷ பிரபாவ விளக்கம்’, 1841இல் தில்லியிலிருந்து வந்த ‘ஜனசினேகன்’ ஆகியவையும் தமிழ் இதழியலின் தொடக்கப் படிகளாக அமைந்தன. 1844இல் கஜூலு லட்சுமணராசு செட்டி என்பவர், இந்து சமயக் கருத்துகளுக்காக ‘கிரசென்ட்’ என்ற பத்திரிகையை வெளியிட்டார். 1849இல் திருநெல்வேலியிலிருந்து ‘நற்போதம்’, 1855இல் சென்னையிலிருந்து ‘தினவர்த்தமானி’ ஆகிய தமிழ் ஏடுகள் வரத் துவங்கின. 1866இல் சென்னையிலிருந்து வந்த ‘கலாவர்த்தினி’ என்ற ஆங்கில மாத இதழ், இந்து சமயச் சார்புடன் வந்தது. பிரிட்டிஷ் அரசின் வைஸ்ராய், அதிகாரிகள், உச்சநீதிமன்ற நீதிபதி ஆகியோரைத் தாக்கியும் அதில் எழுதப்பட்டது.

சென்னையில் ஜி. சுப்பிரமணிய ஐயர், டி.ஏ. நடராஜ ஐயர், பி.வி. ரங்காச்சாரியார், பி.ஆர். ராமசாமி ஐயங்கார், எம். வீரராகவாச்சாரி, எஸ். கஸ்தூரிரங்க ஐயங்கார் ஆகிய நண்பர்கள் சேர்ந்து 1878இல் ‘தி ஹிண்டு’ ஆங்கில வார இதழைத் தொடங்கினார்கள், விடுதலை இயக்கச் செய்திகளைத் தாங்கிய அந்த இதழ் 1899இல் நாளேடாக மாறியது.
இன்றளவும் அது வந்துகொண்டிருப்பதைச் சென்ற கட்டுரையில் பார்த்தோம். 2013இல் இக்குழுமத்தின் தமிழ் நாளேடாக ‘இந்து தமிழ் திசை’ தொடங்கப்பட்டது.
தமிழ் மக்களிடையே விடுதலை இயக்கத்திற்கான ஆதரவைத் திரட்டுவதற்குத் தமிழில் பத்திரிகை தேவைப்பட்ட நிலையில், இவர்களில் ஒருவரான ஜி. சுப்பிரமணிய ஐயர் 1882இல் ‘சுதேசமித்திரன்’ வார இதழைத் தொடங்கினார்.
1889ஆம் ஆண்டிலேயே நாளிதழாக மாற்றப்பட்ட அந்த ஏடு 1985 வரையில் வந்துகொண்டிருந்தது.
கார்ட்டூனிஸ்ட் கவி
அந்த ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் 1904இல் ஒரு துணையாசிரியராகச் சேர்ந்தவர் நம்ம முண்டாசுக் கவி. அடுத்த இரண்டாவது ஆண்டிலேயே ‘இந்தியா’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மண்டயம் திருமலாச்சாரியார், முரப்பாக்கம் சீனிவாச ஐயங்கார் ஆகியோர் அந்த வார இதழை பாரதிக்காகவே தொடங்கினார்களாம்.

அரசியல் கட்டுரைகளைக் கூர்மையாக எழுதிய பாரதியார், அரசியல் நையாண்டிச் சித்திரங்களையும் (கார்ட்டூன்) தானே வரைந்தார். ஆங்கிலப் பத்திரிகைகளில் வந்தவற்றைக் கவனித்த ரசனையோடு தமிழில் முதன் முறையாக கார்ட்டூன் வெளியிட்ட பெருமையையும், இந்திய ஏடுகளில் கார்ட்டூனை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர் என்ற அடையாளத்தையும் அவர் பெற்றார். துணிச்சலான அரசியல் எழுத்துகளுக்காக பிரிட்டிஷ் அரசால் வேட்டையாடப்பட்டவர், பிரெஞ்சு அரசின் கீழ் இருந்த புதுச்சேரிக்குத் தப்பிச் சென்று, அங்கிருந்தபடியே பத்திரிகையை 1910 வரையில் நடத்தினார். ‘விஜயா’ என்ற பத்திரிகையையும் அவர் நடத்தினார்.

சமூக சீர்திருத்தச் சிந்தனையாளரும் கல்வியாளரும் சித்த மருத்துவருமான அயோத்திதாசர், 1909ஆம் ஆண்டில் தொடங்கிய பத்திரிகை ‘ஒரு பைசாத் தமிழன்’. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவரான அவரது அந்த வார ஏடு, தமிழ் இதழியல் தடத்திலும், சமூக சீர்திருத்த இயக்க வரலாற்றிலும் ஒரு மைல்கல்லாக அடையாளம் பெற்றது.

இந்தியாவின் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கியவரான அன்னி பெசன்ட் 1914 இல் சென்னையிலிருந்து ‘நியூ இந்தியா’ என்ற நாளேட்டையும், ‘காமன்வீல்’ என்ற வார இதழையும் தொடங்கினார். இரண்டும் ஆங்கிலப் பத்திரிகைகள்தான்.
நிறுத்தற்குறிகள் அறிமுகம்
1917இல் திரு.வி.க. தமிழில் ‘தேசபக்தன்’ நாளேட்டைத் தொடங்கினார். அது அரசியல் எழுச்சிச் சிந்தனைகளைப் பரப்பியதோடு, ஆங்கில உரைநடையில் இருந்த காற்புள்ளி, அரைப்புள்ளி உள்ளிட்ட நிறுத்தற்குறிகளைத் தமிழுக்குக் கொண்டுவந்தது. அத்துடன், இதழியலுக்கேற்ற சிறு சிறு வாக்கியங்கள், வாசிப்பதற்கு எளிய மொழிநடை ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியது. தமிழ் இதழியலுக்கு மட்டுமல்ல, தமிழ் எழுத்துலகிற்கும் ஒரு சிறப்பான சேவையாக அமைந்த அந்த முயற்சி பற்றிய நன்றிக்குரிய தகவலை ‘தமிழ் ஹிஸ்டாரிக்கல்’ தெரிவிவிக்கிறது.
இன்றும் வருகிற ‘தினமணி’ நாளேட்டை 1934இல் மூத்த பத்திரிகையாளர் எஸ். சதானந்த் தொடங்கினார். மும்பையில் ‘ஃப்ரீ பிரஸ் ஜர்னல்’ பத்திரிகையை நடத்தியவரும், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்தை வாங்கி நடத்தி வந்தவருமான அவர், பாரதி நினைவுநாளான செப்டம்பர் 11 அன்று இந்தத் தமிழ்ப் பத்திரிகையைத் தொடங்கினார். அதன் முதல் ஆசிரியர் விடுதலைப் போராட்ட வீரரும் பத்திரிகையாளருமான டி.எஸ். சொக்கலிங்கம்.
எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரிந்தவர்களைப் பத்திரிகை படிப்பவர்களாகவும் வளர்த்தது ‘தினத்தந்தி’. எளிய, சுவையான மொழிநடை, கருத்துப்படங்கள், நறுக்கான வாக்கியங்கள், அளவான பத்திகள், வட்டாரச் செய்திகள், கவர்ச்சிகரமான தலைப்புகள் என்ற விதிகளை வகுத்துக்கொண்டு 1942இல் அதைத் தொடங்கியவர் சி.பா. ஆதித்தனார். 1951இல் அவர் அன்றன்று முற்பகல் நடந்தவற்றைப் பிற்பகலில் தெரிந்துகொள்ள விரும்புவோருக்காகத் தொடங்கியது ‘மாலை முரசு’.
திராவிட இயக்கத் திசையில்

தமிழ்நாட்டில் தேசிய விடுதலை இயக்கத்துடன் சமூகநீதி லட்சியங்களை முன்னெடுத்த திராவிட இயக்கமும் இணையாக வளர்ந்தது. நீதிக் கட்சி இக்கொள்கைகளைப் பரப்புவதற்காக ‘திராவிடன்’ என்ற தமிழ்ப் பத்திரிகையையும், ‘ஜஸ்டிஸ்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் தொடங்கியது. திராவிடர் கழகத் தலைவர் பெரியார் சுயமரியாதை, பகுத்தறிவுக் கண்ணோட்டங்களை வளர்த்திட, ஈரோடு நகரிலிருந்து 1925இல் ‘குடிஅரசு’, 1934இல் ‘பகுத்தறிவு’ ஏடுகளைத் தொடங்கினார். 1935இல் தி.க. தலைவர்களில் ஒருவரும் அண்ணா என அழைக்கப்பட்டவருமான அண்ணாத்துரையை ஆசிரியராகக் கொண்ட ‘விடுதலை’ வாரப் பத்திரிகையைத் தொடங்கினார் பெரியார். சமூகநீதி லட்சியங்களுடன் இன்றும் அது நாளேடாக வந்துகொண்டிருக்கிறது.

1942இல் அண்ணா ‘திராவிட நாடு’ என்ற வார இதழைத் தொடங்கினார். 1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் உருவான பிறகு, அக்கட்சியின் பத்திரிகையாக 1953இல் ‘நம்நாடு’ என்ற நாளேட்டைத் தொடங்கினார். 1972 வரையில் அது வந்துகொண்டிருந்தது.
தனக்கே உரிய தமிழறிவு, கொள்கையைக் கூர்மையாக வெளிப்படுத்தும் திறன் ஆகியவற்றைப் பெற்றிருந்த கருணாநிதி 1942இல் ஒரு கையெழுத்துப் பத்திரிகையாகத் தொடங்கியது ‘முரசொலி’. அவர் அரசியல் களத்தில் மும்முரமாகச் செயல்படத் தொடங்கிய நிலையில் அதன் ஆசிரியர் பொறுப்பேற்றவர், திராவிடக் கருத்தியல்களைப் பரப்புவதில் முன்னணிப் பங்களித்தவரான மாறன். முரசொலி மாறன் என்றே அவர் அடையாளம் பெற்றார். தமிழக அரசியல் கட்சிகள் நடத்தும் ஏடுகளில் ‘முரசொலி’ அமைப்பு தொடர்பான செய்திகள், அறிக்கைகளுடன், சமூகநீதி, மொழி உரிமை, மாநில சுயாட்சி, மதநல்லிணக்கம் தொடர்பான கட்டுரைகளையும் தாங்கி வந்துகொண்டிருக்கிறது.

திரைப்பட நடிகரும், திமுக–வை நோக்கி மக்கள் கவனத்தை ஈர்த்தவர்களில் ஒருவருமான எம்.ஜி.ஆர். என்ற எம்.ஜி. ராமச்சந்திரன் அக்கட்சியிலிருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய பிறகு, ‘அண்ணா’ என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்ட ‘அண்ணாவின் வழி’ என்ற பத்திரிகையை 1972இல் தொடங்கினார். அவருக்குப் பின், ஜெயலலிதா தலைமைக்கு வந்த அக்கட்சியின் குரலாக ‘தாஸ்’ என்ற நாளேடு தொடங்கப்பட்டு சிறிது காலம் வெளிவந்தது. 1988இல் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடாக ‘நமது எம்ஜிஆர்’ தொடங்கப்பட்டது. இப்போது அந்தப் பத்திரிகை வி.கே. சசிகலா கட்டுப்பாட்டில் வந்துகொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அஇஅதிமுக–வின் பத்திரிகையாக ‘நமது அம்மா’ 2018 முதல் வந்துகொண்டிருக்கிறது. ஆயினும், இக்கட்சியின் வளாகத்திலிருந்து வரும் இந்த நாளேடுகள் எந்த அளவுக்குக் கொள்கை முழக்கமிடுகின்றன என்பது கேள்விக்குறிதான்.
செங்கொடி உயர்த்தி…
தேசிய இயக்கச் சார்புடன் பல தனியார் நிறுவன ஏடுகளும் திராவிட இயக்கச் சிந்தனைகளோடு இத்தகைய ஏடுகளும் வந்துகொண்டிருந்த நிலையில், செங்கொடி இயக்க ஏடாகத் வரத் தொடங்கியது ‘ஜனசக்தி’. 1937ஆம் ஆண்டில் அதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கியது. ஜீவா என்றழைக்கப்பட்ட பா. ஜீவானந்தம் அதன் ஆசிரியர். தேச விடுதலை, தொழிலாளர் உரிமைகள், விவசாயிகள் நலன்கள், நாட்டின் மதச்சார்பின்மை என்ற லட்சியங்களையும், சமுதாய சமத்துவம் என்ற இலக்கையும் முன்வைத்து அந்த ஏடு கருத்தியல் பரப்புரைகளை மேற்கொண்டது.

ஒரே இயக்கமாக இருந்ததிலிருந்து, அரசின் வர்க்க அடையாளம் உள்ளிட்ட ஆழ்ந்த முரண்களுக்கும் தத்துவ விவாதங்களுக்கும் பிறகு 1964இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானது. அதற்கு முன்பே, கோவை ஆலைத் தொழிலாளர்கள் வழங்கிய நிதியைக் கொண்டு வார ஏடாக ‘தீக்கதிர்’ வரத் தொடங்கியிருந்தது. அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றவர் அப்பு என்ற அற்புதசாமி. கட்சி தொடங்கப்பட்ட பிறகு அது கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக எடுத்துக்கொள்ளப்பட்டு, 1969 முதல் மதுரையிலிருந்து வரலானது. 1971இல் நாளேடாக மாறியது. என். சங்கரய்யா, கே. முத்தையா உள்ளிட்ட தலைவர்கள் ஆசிரியர்களாகப் பொறுப்பேற்றிருந்தார்கள்.
இன்றளவும், ஊடக உலகின் உண்மையின் பேரொளியாக, இடதுசாரிகளின் குரலை வலுவாக ஒலிக்கிற நாளேடாக ‘தீக்கதிர்’ வந்துகொண்டிருக்கிறது. இவையன்றி ‘தாமரை’, ‘செம்மலர்’ ஆகிய இலக்கிய இதழ்களும் இவ்விரு கட்சிகளின் வழங்கல்களாக வருகின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட்)(விடுதலை) நடத்துகிற ‘லிபரேஷன்’, ‘மக்களின் வழி’, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) (புதிய ஜனநாயகம்) நடத்திடும் ‘புதிய ஜனநாயகம்’, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) (மக்கள் விடுதலை) வெளியிடும் ‘மக்கள் புரட்சி’ என்ற ஏடுகளும் தங்களது நிலைப்பாட்டிலிருந்து அரசியல், சமுதாயக் கருத்துகளைக் கூறிவருகின்றன.
இலக்கியத்தோடு அரசியல்
முன்னதாக, விடுதலைப் போராட்டத் தியாகி சுப்பிரமணிய சிவா நடத்திய ‘பிரபஞ்ச மித்திரன்’, ‘இந்திய தேசாந்திரி’, நீலகண்ட பிரம்மசாரி தொடங்கிய ‘சூரியோதயம்’, வவேசு ஐயரின் ‘பாலபாரதி’, வரதராச நாயுடுவின் ‘தமிழ்நாடு’, சங்கு கணேசனின் ‘சுதந்திரச் சங்கு’, ராஜாஜி நடத்திய ‘விமோசனம்‘, ‘சுயராஜ்யம், 1941இல் ரா. கிருஷ்ணமூர்த்தி தொடங்கிய ‘கல்கி’, வெங்கடராயலு நாயுடுவின் ‘உதயசூரியன்’, சீனிவாசன் படரச் செய்த ‘மணிக்கொடி’, 1947இல் பாரதிதாசன் பாட வைத்த ’குயில்’ உள்ளிட்ட இலக்கியமும் அரசியலுமாக வந்த ஏடுகள் தமிழ் மண்ணைப் பதப்படுத்தின.
நாட்டின் விடுதலைக்குப் பிறகு 1951இல் டி.வி. ராமசுப்பையர் ‘தினமலர்’ நாளேட்டைத் தொடங்கினார். தந்தி குழுமத்திலிருந்து விலகிய கே.பி. கந்தசாமி 1977இல் ‘தினகரன்’ நாளேட்டைத் தொடங்கியதுடன் ‘மாலை முரசு’ உரிமையையும் பெற்றதைத் தொடர்ந்து, அதே ஆண்டில் ஆதித்தனார் ‘மாலை மலர்’ ஏட்டைத் தொடங்கினார். 2005இல் கலாநிதி மாறனின் தொலைக்காட்சி நிறுவனமான ‘சன்’ குழுமம் ‘தமிழ் முரசு’ மாலைப் பத்திரிகையைத் தொடங்கியது. இடைக்காலத்தில் வேலூர் நாராயணன் நடத்திய ‘அலை ஓசை’ நாளேடு சில காலம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் வந்தது.

இதனிடையே 1886ஆம் ஆண்டிலேயே ‘மஹா விகட தூதன்’ என்ற பொழுதுபோக்குப் பத்திரிகை வந்ததாகத் தெரிகிறது.விகடகவி புதூர் வைத்தியநாத ஐயர் 1926இல் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையை சில ஆண்டுகள் வெளியிட்டார், 1941இல் அவர் ‘விகட ரத்தினம்’ என்ற இதழையும் நடத்தினார். 1928ஆம் ஆண்டில் அவரிடமிருந்து ‘ஆனந்த விகடன்’ இதழை வாங்கிய எஸ்.எஸ். வாசன் அதன் ஆசிரியராகவும் செயல்பட்டார். இன்றும் விகடன் குழும ஏடுகள் அச்சிலும் இணையத்திலும் வருகின்றன.
1947இல் எஸ்.ஏ.பி. அண்ணாமலை, பி.வி. பார்த்தசாரதி இணைந்து, இப்போதும் வருகிற ‘குமுதம்’ வார இதழைக் கொண்டுவந்தனர். இதுவும் தற்போது அச்சு, இணையம் இரண்டிலும் வருகிறது. 1954இல் கவிஞர் கண்ணதாசன் ‘தென்றல்’ என்ற இலக்கிய ஏட்டைத் தொடங்கி 8 ஆண்டுகள் நடத்தினார். பின்னர் 70களில் ‘கண்ணதாசன்’ என்று தன் பெயரிலேயே மாத இதழ் ஒன்றை சில ஆண்டுகள் நடத்தினார் எழுத்தாளர் சாவி நடத்திய ‘சாவி’, மணியன் நடத்திய ‘இதயம்’ போன்றவையும் சில காலம் வந்தன. சன் குழுமத்தின் ‘குங்குமம்’, திரைக்கலைஞர் கே. பாக்யராஜ் தொடங்கிய ‘பாக்யா’ உள்ளிட்ட ஏடுகளும் பரவலான வாசகத் தளத்தைப் பெற்றுள்ளன.
அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் முன்பு பழ.நெடுமாறன் ‘மதுரை செய்தி’ என்ற நாளேட்டை நடத்தினார். மதிமுக ‘சங்கொலி’ பத்திரிகையை நடத்தி வருகிறது. பாமக ‘தமிழ் ஓசை’ என்ற பத்திரிகையைத் தொடங்கி நிறுத்திவிட்டது. அதன் ‘மக்கள் தொலைக்காட்சி’ யூ–டியூப் தளத்தில் மட்டும் வருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ‘நமது தமிழ் மண்’ பத்திரிகையை நடத்தி வருகிறது.

சமூக நோக்கத்துடன், குறிப்பிட்ட பிரிவு மக்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து வருகிற பல ஏடுகளும் இருக்கின்றன. இலக்கியத்திற்கென்றே தொடங்கப்பட்ட ‘கலைமகள்‘, ‘மஞ்சரி’, ‘கணையாழி’, ‘ஞானரதம்’, ‘சரஸ்வதி’ ‘அமுதசுரபி, நா. பார்த்தசாரதியின் ‘தீபம்’, சி.சு. செல்லப்பாவின் ‘எழுத்து’, 1990களில் கோமல் சுவாமிநாதன் ஆசிரியராகப் பணியாற்ற மீண்டும் வந்த ‘சுபமங்களா’ போன்ற ஏடுகளின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. கவிஞர் மனுஷ்யபுத்திரனின் ‘உயிர்மை’, அத்துடன் ‘புதிய மாதவி’, காலச்சுவடு’, ‘அம்ருதா’, ‘திண்ணை’, ‘உயிர் எழுத்து’, ‘நற்றிணை’, ‘அகழ்’, ‘வார்த்தை’ உள்ளிட்ட இலக்கிய இதழ்களும் பங்களித்துக்கொண்டிருக்கின்ற. நினைவு வலையில் பிடிபடாத வேறு சில முக்கிய ஏடுகளும் இருக்கும். இவையன்றி எண்ணற்ற சிற்றிதழ்கள் பெரும்பணியாற்றின, பல சிற்றிதழ்கள் இன்றைய தொழில்நுட்ப அலைகளை எதிர்த்து நீந்துகின்றன.
தொடக்கத்தில் அரசாங்கம் மட்டுமே ‘தூர்தர்ஷன்’ தொலைக்காட்சியை நடத்தியது. தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்ட பிறகு பல குழுமங்கள் வந்திருக்கின்றன. இன்று இணைய வழியிலும் பல ஊடகங்கள் நம் கணினிகளுக்கும் கைப்பேசிகளுக்கும் வருகின்றன. அவற்றைப் பற்றி அடுத்ததாகத் தெரிந்துகொள்வோம்.
–தொடரும்
முதல் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-1/
இரண்டாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-2/
மூன்றாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-3/
நான்காவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-4/
ஐந்தாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-5/







