தொடர்கள்

மதவாத நடுநிலையும் “மற்றவர்கள்” என்ற புகுத்தலும்… (ஊடக உலகப் பயணம் –14)… அ. குமரேசன்

Udaga ulaga payanam 14

ஊடக நிறுவனங்களின் நடுநிலையை அவர்கள் எல்லாத் தரப்புச் செய்திகளையும் தருகிறார்களா என்பதைக் கொண்டல்ல, எந்தத் தரப்புக்குச் சாதகமான கோணத்தில் வெளியீடுகிறார்கள் என்பதைக் கொண்டே மதிப்பிட வேண்டும். இதில், பல குழுமங்களின் வர்க்க நிலைப்பாட்டையும், பாலினக் கண்ணோட்டத்தையும் ஏற்கெனவே பார்த்தோம். இப்போது மதச் சார்பு குறித்துக் கவனிப்போம்

பொதுவாக உலகம் முழுவதுமே அந்தந்த நாடுகளின் பெரும்பான்மை மதத்தினரை மையப்படுத்திய வெளிப்பாடுகளையே பெரும்பாலான ஊடகங்களில் செய்திகளும் கருத்துகளும் இடம்பெறுகின்றன. குறிப்பிட்ட நாட்டில் பெரிய மதம் எதுவோ அதன் சித்தாந்தங்கள், சடங்கு முறைகள், திருவிழாக்கள், குருமார்களின் போதனைகள் பல மடங்கு கூடுதல் முக்கியத்துவத்துடன் சித்தரிக்கப்படும். சிறுபான்மை மதத்தினரின் பண்டிகைகள் வரும்போது மட்டும், அவர்களும் வாசகச் சந்தையில் இருக்கிறார்கள் என்ற விழிப்போடு, அதற்கான சிறப்புக் கட்டுரைகள், ஒளிபரப்புகள், ஒலிபரப்புகள் என தொகுக்கப்படும்.

மெய்ஞானக் கங்கணம்

பல முன்னணி ஊடகங்களில் இதைக் காணலாம். நாளேடுகள் என்றால் நாள்தோறும், வார ஏடுகள் என்றால் வாரந்தோறும், மாத ஏடுகள் என்றால் மாதந்தோறும் குறிப்பிட்ட பெரிய மதத்தின் பெரியவர்களுடைய அருள் வாக்குகள் நிலையான பகுதியாகத் தொடர்ந்து வழங்கப்படும். இந்தியாவிலும் தமிழ்நாட்டிலேயே இதைக் காண முடியும். தெய்வத்தின் குரல், ஞான ஒளி, திருவாக்கு… இன்ன பிற தலைப்புகளில் வாசகர்களை அஞ்ஞான இருளிலிருந்து மீட்டே தீர்வது, ஆன்மீக வெளிச்சத்தில் நிறுத்தியே தீர்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவற்றைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

முக்கியப் பண்டிகைகள் வருகிறதென்றால் சிறப்பு மலர்கள், கூடுதல் பக்கங்கள், “நட்சத்திர” பேட்டிகள் என்று வண்ணமயமாக இருக்கும். சிறுபான்மை மதங்களின் பண்டிகைகள் வரும்போது மட்டும், அவற்றைச் சார்ந்த ஒரு கதை, கட்டுரை என்று சிறப்பிதழாக (சிறப்பு மலர் அல்ல) வெளியாகும். தொலைக்காட்சிகள், பண்பலை வானொலிகளிலும் இதே போன்ற நிலைமைதான்.

பெரும்பகுதி மக்கள், அதிலும் பெரும்பான்மை மதம் சார்ந்த பெரும்பகுதி மக்கள், மதம் கூறும் கடவுள்களை ஆழமாக நம்புவது போலவே, சூரியர், சந்திரர், கோளர்கள் “இருப்பிடம்” எது என்ற அடிப்படையில் தங்களின் எதிர்காலம் பற்றிய சோதிடங்களிலும் மிகுந்த நம்பிக்கை கொணடிருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை நிறைவேற்றுவதாக – அதாவது அந்த நம்பிக்கையை விற்பனைக்குப் பயன்படுத்திக்கொள்வதாக – ஜாதகக் கணிப்புகள், கிரக விளைவுகள் என்று தவறாமல் பரிமாறப்படுகின்றன. தலைப்புச் செய்தியே கூட இல்லாமல் போகலாம் ராசி பலன் இடம்பெறாமல் போகாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு இது தொடர்கிறது.

ராசி பலன்களில்…

கைப்பேசியில் இறக்கி வைத்துள்ள சிலவரிச் செய்திச் செயலியில், “நீங்கள் இந்த ராசியா, இன்றைக்குக் கவனமாக இருங்கள்” என்று தலைப்புப் போட்டு சிலவரிச் சோதிடத்தை இறக்கி வைக்கிறார்கள். மற்ற ராசிக்காரர்கள் கவனக்குறைவாக இருக்கலாம் போல! இதில் நடைபெறும் மோசடியான வேடிக்கை அல்லது வேடிக்கையான மோசடி ஒன்று உண்டு, அதைப் பற்றிப் பின்னர், நடுநிலையின் வேறு பிரிவில் பார்ப்போம்.

இந்தியாவைப் போலவே உலகின் பல நாடுகளிலும் ஊடகங்களில் ஜோதிடப் பலன்கள் வெளியிடப்படுகின்றன. பாரம்பரியமான ஊடகங்கள் மட்டுமல்லாமல், நவீன இணையத் தளங்களிலும் மக்களுக்குப் பலன் சொல்கிறார்கள். “வாழ்க்கைமுறை” (லைஃப்ஸ்டைல்) என்ற வகைப்பாட்டில் இவ்வாறு நடைபெறுகிறது. இதற்கென்றே பல செயலிகளும் கைப்பேசியில் நிறுவிக்கொண்டு பலன் பார்ப்பதற்குத் தோதாக இணையத்தில் உலாவுகின்றன.

இதில் குறிப்பிடத்தக்கப சில வேறுபாடுகளும் இருக்கின்றன என்கிறார் நமது ஊடகத் துறை நண்பர். ஊடகவியலாளர்களின் அன்றாடச் சந்திப்பு ஒன்றில் இது பற்றிய பேச்சு வந்தபோது அவர், “மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும் ஊடகங்களில் ஜோதிடப் பலன்கள் முக்கியமாக இடம் பெறுகின்றன. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளில், பிறந்த தேதியை வைத்து கணக்குப் போட்டு, 12 ராசிகளுக்கான பலன்களை வெளியிடுகிறார்கள். பல ஆசிய நாடுகளில் இது சர்வசாதாரணமாக இருக்கிறது,” என்றார்.

“உங்களுக்குத் தெரியுமா, சீனாவிலும் இது இருக்கிறது. அங்கே பிறந்த ஆண்டை அடிப்படையாக்கி, 12 விலங்குச் சின்னங்களை அடையாளப்படுத்தி அவை எவ்வாறு வினையாற்றும் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி பலன்களைக் கணித்திருப்பதாகக் கூறி ஊடகங்களில் வெளியிடுகிறார்கள். அதே வழியைத்தான் கொரியாவிலும் வியட்நாமிலும் கடைப்பிடிக்கிறார்கள்,” எனக் கூறினார் எங்களிடையே அடிக்கடி உலகம் சுற்றும் நடுவயதுக்காரர் அவர்.

“அந்த நாடுகளின் அரசுகள், இது மக்களின் பண்பாட்டுடன் கலந்திருக்கிறது என்ற அடிப்படையில் தடை செய்யாமல் இதை அனுமதிக்கின்றன. அதேவேளையில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான சட்டப்பூர்வ முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்றும் அவர் கூறினார்.

அடிப்படை வேறுபாடு

மேற்கொண்டு இதை விளக்கினார்: “இதில் அடிப்படையான அணுகுமுறை வேறுபாடு இருக்கிறது. நம் நாட்டில் ஜோதிடத்தை ஆழமான மத நம்பிக்கையோடும் இணைத்திருக்கிறார்கள் அல்லவா? குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி என்று கிரகங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து முடிவுகளை எடுக்கிறார்கள் இல்லையா? மேற்கத்திய நாடுகளில் இதைப் பெரும்பாலும் ஒரு சுவாரசியமான வேடிக்கையாகப் பார்க்கிறார்கள். ஒரு பகுதியினர் தங்களுக்கு உதவியாக இருக்கிற பொழுதுபோக்காக எடுத்துக்கொள்கிறார்கள். இதை அப்படியே நம்பிச் செயல்படுகிறவர்கள் குறைவு. அந்த நாடுகளிலும், திருமணத்திற்கு ஜாதகம், சூரிய ராசிப் பொருத்தம் பார்க்கப்படுவது உண்டு. ஆனால் மணமக்களைத் தேர்வுசெய்த பிறகு, திருமணத் தேதியை முடிவு செய்வதற்கான ஒரு வழிகாட்டியாகத்தான் பயன்படுத்துகிறார்கள். மணமக்களையே முடிவு முடிவு செய்வதற்காக ஜாதகத்தைப் பயன்படுத்துகிறவர்களும் குறைவுதான்.”

ஊடக உலகத்திற்கு வருவோம். இந்தியாவில் பெரும்பான்மை மதம் சார்ந்த மக்களின் ஜோதிட, ஜாதக, ராசி நம்பிக்கைகளைப் பயன்படுத்துகிற வகையிலேயே பல ஊடகங்கள் செயல்படுகின்றன. அதன் மூலம் அந்த நம்பிக்கைகளை மேலும் மேலும் வளர்க்கின்றன. அத்துடன், இந்தியக் கலாச்சாரம் என்றால் இந்துக் கலாச்சாரமே என்ற எண்ணத்தை மற்ற நாடுகளின் மக்களுக்கு ஏற்படுத்துகின்றன. வெளிநாடுகளில் இந்தியாவின் அடையாளங்களாக ஜாதகத்தையும் கர்நாடக சங்கீதத்தையும் பரதநாட்டியத்தையும் அக்கினியைச் சுற்றி வருவது உள்ளிட்ட திருமணச் சடங்குகளையும் பார்க்கிறார்கள். இவை எல்லாமே இந்து மதத்தோடு தொடர்புள்ளவையாகவே இருக்கின்றன.

இரண்டு பிம்பங்கள்

அரசாங்க ஏற்பாடுகளிலும் சபாக்கள்அந்த மேல்தட்டுச் சமூகங்களின் நிகழ்வுகள் மட்டுமே மையப்படுத்தப்பட்டது இதற்கொரு முக்கியக் காரணம் என்று கூற முடியும். முன்னொரு நாளில், அகில இந்திய வானொலியில் திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்பட்ட கர்நாடக சங்கீதப் பாடல்களையும் வீணை உள்ளிட்ட கருவியிசைத் தொகுப்புகளையும் ஒலிவட்டுகளாக (சி.டீ.) வெளியிட்டார்கள். உயரதிகாரிகள் அதைச் செய்தியாளர்களிடம் அறிவித்த நிகழ்வில் கலந்துகொண்ட நான், “பாரம்பரியமான, எந்த மத அடையாளமும் இல்லாத நாட்டுப்புறப் பாடல்களும் கிராமிய இசையும் எப்போது இதே போலத் தொகுத்து வெளியிடப்படும்,” என்று கேட்டேன். அதற்கு சுற்றிவளைத்து ஏதோ சொல்லி சமாளித்தார்கள்.

பெரும்பான்மை மதவாதத்தோடு கலந்த ஒரு வகையான பிம்பக் கட்டுமானமே இது. இந்தப் பிம்பத்தைக் கட்டியதில் செல்வாக்குள்ள பத்திரிகைகளுக்கும் இதர ஊடகங்களுக்கும் ஒரு மையமான பங்கிருக்கிறது. வேறு வகையான பிம்பக் கட்டுமானம் ஒன்றும் இருக்கிறது. சிறுபான்மை மதங்களுக்கு எதிரான பிம்பம் அது.

சென்னை லயோலா கல்லூரியில் இயங்கிவந்த ஊடகக் கலைகள் முதுகலைத் துறையில், மாணவர்களுக்கு சிறப்பு ஊடகப் பாடங்கள் நடத்தியிருக்கிறேன். அந்த மாணவர்கள் ‘தீக்கதிர்’ அலுவலகத்திற்கு விடுமுறைக் காலப் பயிற்சிக்காக வருவார்கள். ஒரு நாள் சில மாணவர்கள் கவலை தோய்ந்த முகத்தோடு வந்தார்கள். என்னிடம் கோப்பினைக் கொடுத்தார்கள். அதில், சுமார் 100 ஓவியங்கள் இருந்தன. அவை அனைத்தும் பல்வேறு வகுப்புகளில் பயின்ற பள்ளி மாணவர்கள் வரைந்தவை. மாநகராட்சிப் பள்ளிகள் முதல் தனியார் பள்ளிகள் வரையிலான மாணவர்கள் அவர்கள்.

கல்லூரி மாணவர்கள் அந்தப் பள்ளிகளுக்குச் சென்று, குழந்தைகளைச் சந்தித்து, “தீவிரவாதியின் படம் வரைந்து காட்டுங்கள் பார்க்கலாம்,” என்றுகூறி, தாள்களும் வண்ணங்களும் தூரிகைகளும் கொடுத்தார்கள்.

“அந்தப் பசங்களோட பெயின்ட்டிங்ஸ்தான் இதெல்லாம்,” என்று என்னிடம் சொன்னார்கள். கோப்பில் இருந்த அத்தனை ஓவியங்களிலும், ஜிப்பாவை விடவும் நீண்ட அங்கி, மீசை மழிக்கப்பட்டு முகத்திலிருந்து மார்பு வரையில் தொங்கும் தாடி, தலையில் குல்லாய், கையில் துப்பாக்கி என்ற அடையாளங்களுடன் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். தீவிரவாதி என்றால் குழந்தைகள் மனதில் இந்தச் சித்திரம் தோன்றியிருக்கிறது என்றால் அந்தப் பிம்பத்தைப் புகுத்தியது “நடுநிலை” ஊடகங்களே என்று சொல்ல வேண்டியதில்லை. வரைந்தளித்த குழந்தைகளில் 15 பேர் அந்த ஓவியங்கள் சித்தரித்த மனிதரின் சமயத்தைச் சேர்ந்தவர்கள்.

தாங்கள்தான் நாட்டின் குடிமக்கள். அவர்களெல்லாம் “மற்றவர்கள்” என்ற எண்ணம் மன ஆழத்தில் ஊன்றப்படுகிற நீண்ட கால நடைமுறையின் ஒரு பகுதியல்லவா இது?

பிம்பங்கள் தொடர்ந்து பிரதிபலிக்கும்

முதல் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-1/
இரண்டாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-2/
மூன்றாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-3/
நான்காவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-4/
ஐந்தாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-5/
ஆறாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-6/
ஏழாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-7
எட்டாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-8
ஒன்பதாவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-9/
பத்தாவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-10/
பதினொராவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-11/
பன்னிரண்டாவது கட்டுரை: https://maattru.in/2025/09/udaga-ulaga-payanam-12/
பதிமூன்றாவது கட்டுரை: https://maattru.in/2025/09/udaga-ulaga-payanam-13/