தொடர்கள்

அட்டூழியமும் ஆவேசமும் – சொல்லாடல்கள் காட்டும் “நடுநிலை”… (ஊடக உலகப் பயணம் –15)… அ. குமரேசன்

udaga-ulaga-payanam-15

“நாம்,” “அவர்கள்” என்று வேறுபட்டு நிற்கிற உணர்வை வளர்ப்பதில் ஆகப் பல ஊடகங்கள் குறிப்பிட்ட சில வழிமுறைகளோடு ஒரு வேண்டுதலை நிறைவேற்றுவது போலச் செய்து வருகின்றன. தீவிரவாதிகள் யாரெனில் வேறு மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்ற பிம்பத்தைக் கட்டமைக்கின்றன.

சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் சவால்களும் சோதனைகளும் உரிய முக்கியத்துவத்துடன் வெளியிடப்பாடுவதில்லை. ஒரு வட்டாரத்தில் பெரும்பான்மை மதத்தையும், சிறுபான்மை மதத்தையும் சேர்ந்த சிலருக்கிடையே மோதல் ஏற்படுகிறதென்றால் அதைப் பற்றிய செய்தியிலேயே இந்தப் பாகுபாட்டைக் கவனிக்க முடியும்.

சிறுபான்மையினர் நடத்திய ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள், செல்லும் வழியில் உள்ள, பெரும்பான்மையினரின் வழிபாட்டுத் தலத்தின் முன்பாகக் குப்பைகளைப் போடுவது, அங்கிருப்பவர்களை கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக வைத்துக்கொள்வோம். என்ன ஊர்வலம்,யார் நடத்தியது என்று நேரடியாகவே குறிப்பிட்டு, அதில் கலந்து கொண்டவர்கள் விஷமத்தனம் என்று கூறியிருப்பார்கள். அந்த வழிபாட்டுத் தலக்தின் பெயரையும் நேரடியாகக் குறிப்பிட்டிருப்பார்கள்.

மதவாத நடுநிலை

இதுவே, அந்த ஊர்வலம் பெரும்பான்மை மதத்தினர் சார்ந்ததாக இருந்து, அதில் கலந்துகொண்ட சிலர் இதே போன்ற செயல்களில் இறங்கியிருந்தால்? சுய கட்டுப்பாட்டை இழந்தவர்களின் அத்துமீறிய செயல் என்று சித்தரித்திருப்பார்கள். இதன் மூலம் அது ஏதோ உணர்ச்சிவசப்பட்டு நடந்துவிட்டது, அதன் பின்னணியில் திட்டமிட்ட நோக்கமோ, தூண்டுதலோ இல்லை என்ற எண்ணம் வாசிப்போருக்கு ஏற்படுத்தப்படும்.

பயங்கரவாதிகளுக்கு உதவியவர்கள்

பல ஆண்டுகளுக்கு முன்னால் வந்த ஒரு செய்தி: “பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 17 இளைஞர்கள் கைது.” செய்திக்கு உள்ளே அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள், கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்ட ஆவணங்கள், காவல்துறை அதிகாரியின் விளக்கங்கள் ஆகியவை விரிவாகவும், அவர்களுடைய வழக்குரைஞர்கள் கூறிய கருத்துகள் சுருக்கமாகவும் இருந்தன. இது அன்றைய ஒரு முக்கியச் செய்தியாக இடம் பெறாத ஏடுகளே இல்லை.

தொடக்கப் பரபரப்புக்குப் பிறகு, அடுத்தடுத்த செய்திகளின் படையெடுப்பால், இந்த நிகழ்வு மறந்து போக, அவர்கள் அந்தத் தேதியில் நாடு முழுக்க விசாரணைக் கைதிகளாகவே சிறையில் இருந்த சுமார் 4 லட்சம் பேர்களுடன் சேர்த்து அடைக்கப்பட்டுவிட்டார்கள். 2023ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சீஆர்பீ) வெளியிட்ட அறிக்கையின்படி, அனைத்துச் சிறைகளிலும் உள்ள 5,30,333 பேரில், 73.5 சதவீதத்தினர், கிட்டத்தட்ட 3,89,894 பேர் விசாரணைக் கைதிகள்தான். முறையான குற்றச்சாட்டுப் பதிவு கூட இல்லாததால், குற்றம் சாட்டப்படாத கைதிகளாகவே பலர் அடைபட்டிருக்கிறார்கள்.

மதவாத நடுநிலை

இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், இந்த எண்ணிக்கையைக் குறைக்க ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் ஒன்றியப் பகுதி அரசுகளும் முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையிட்டது. சிறையிடப்பட்ட ஒருவர் பினை (ஜாமீன்) அனுமதி கோருகிறார் என்றால், நீதிமன்றங்கள் அதற்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தியது. “பினை ஒரு விதி, சிறை ஒரு விதிவிலக்கு,” என்ற ஒரு சிறப்பான கொள்கையையே உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அதிலிருந்து இந்தப் பிரச்சினையின் தீவிரத்தையும் உச்சநீதிமன்ற வழிகாட்டலின் முக்கியத்துவத்தையும் உணரலாம். ஒன்றிய அரசு தனது புதிய குற்றவியல் சட்டங்களில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வழி செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. சட்டங்கள் நடைமுறைக்கு வந்து 15 மாதங்கள்தான் ஆகின்றன என்பதால், நிலைமையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது எனப் போகப்போகத்தான் தெரியும். –

விசாரணையில்லாமலே கைதிகள்

சிறைகளில் விசாரணைக் கைதிகளாக இருப்போரில் 18 சதவீதத்தினர் முஸ்லிம்கள் என்றும் என்சிஆர்பீ தெரிவிக்கிறது. அதாவது நாட்டில் முஸ்லிம் மக்கள்தொகை சதவீதத்தை விட அதிகம். இந்தப் புள்ளிவிவரங்களுக்கு வெளியே வந்து, குறிப்பிட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அந்த 17 பேர் என்ன ஆனார்கள் என்று தேடுவோம். வேறொரு கட்டுரைக்காகத் தேடியபோது கிடைத்த தகவல், பல ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பிறகு அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாக நிறுவப்படவில்லை எனக்கூறி, 17 பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தது. இதுவே ஒருசில ஏடுகளில்தான் வெளியாகியிருந்தது.

அவர்கள் கைது செய்யப்பட்டபோது, ஏதோ அந்த ஊரின், அந்தச் சமூகத்தின் இளைஞர்கள் எல்லோரும் பயங்கரவாதிகளின் முகவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் முதல்பக்க முக்கியத்துவத்துடன் செய்தியாக்கியவர்கள், குற்றவாளிகள் அல்ல என்று விடுவிக்கப்பட்டதை ஏன் கண்டுகொள்ளாமல் விட்டார்கள்? செய்திகளின் குவியலால் ஏற்பட்ட பணிச்சுமையின் கவனக்குறைவுதானா அது? விசாரணைக் காலத்தில் அவர்கள் இழந்துவிட்ட இளமையையும் மனத்தெம்பையும் பொருட்படுத்தத் தவறியதன் பின்னணியில், முதலில் நாம் பார்த்த பிம்பக் கட்டுமான அரசியல் இல்லையா?

வார்த்தை முக்கியம் அமைச்சரே

செய்திகளில் கையாளப்படும் சொல்லாடல்களிலேயே நடுநிலை வேடம் கலைந்துவிடுவதைக் காணலாம். 1992 டிசம்பர் 6 நினைவிருக்கிறதா? இந்திய அரசமைப்பின் மதச்சார்பின்மைக்காக வாதாடி, சாதிய ஒழிப்புக்காகக் களமிறங்கிய டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் நினைவேந்தல் நாளை நினைவிலிருந்து நீக்குவது போல, அயோத்தியில் குவிந்த கடப்பாரை சேவகர்களால் பாபர் மசூதியின் கோபுரக் கூண்டுகள் தகர்க்கப்பட்ட நாள். மறுநாள் அனைத்துப் பத்திரிகைகளும் அதை முகப்புத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன.

பல ஏடுகளிலும், மசூதிக் கோபுரம் தகர்ப்பு, அயோத்தியில் பதற்றம் என்று பொதுவாகத் தலைப்பிட்டிருந்தார்கள். செய்திக்கு உள்ளே, தலைமையோ வழிகாட்டலோ இல்லாதவர்களாகக் கட்டுப்பாடற்ற முறையில் அவர்கள் அந்தச் சேவையில் ஈடுபட்டார்கள் என்று சித்தரித்திருந்தார்கள். சில முக்கியமான பத்திரிகைகள், ஓர் அநீதி அரங்கேறியிருக்கிறது என்ற பொருள்பட, தகவல்கள் வர வர மனம் பதைத்துப்போனவர்களின் துடிப்பை எதிரொலிக்கும் தலைப்புகளைத் தந்திருந்தன – அதை மறுப்பதற்கில்லை. ‘தீக்கதிர்’ நாளேட்டில், “பாபர் மசூதி தகர்ப்பு, மதவெறியர்கள் அட்டூழியம்,” என்ற கோணத்தில் செய்தி வெளியிடப்பட்டது. அதிக வாசகப்பரப்பைக் கொண்டிருக்கிற ஒரு குறிப்பிட்ட நடுநிலை நாளேடு, “அயோத்தியில் பாபர் மசூதி தகர்ப்பு – ராம பக்தர்கள் ஆவேசம்,” என்று தலைப்போடு செய்தியைச் சொன்னது.

மதவாத நடுநிலை

இங்கே ஒன்றை நினைவில் கொள்ளலாம். இந்தத் தொடரின் தொடக்கப் பகுதிகளிலேயே, நடுநிலை என ஒன்று இல்லை என்று பேசினோம். எந்தவொரு நிகழ்வையும் செய்தியாக்குகிற உரிமையைப் போலவே, அதை எந்தக் கண்ணோட்டத்தில் வெளியிடுவது என்ற உரிமையும் இருக்கிறது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் வெளியிடும் உரிமை, கண்ணோட்ட உரிமை இரண்டுமே பிரித்துப் பார்க்க முடியாதவை.

ஆகவே, அந்தச் செயல் ஒரு நியாயமான கோபத்தின் வெளிப்பாடு என்ற உணர்வைத் தருகிற வகையில் ஆவேசம் என்ற வார்த்தையை அந்தச் செய்தியில் பயன்படுத்தியது அவர்களின் கண்ணோட்ட உரிமைதான். அதில் மறுப்பேதுமில்லை. ஆனால் ஏன் நடுநிலை என்று சொல்லிக்கொள்ள வேண்டும் என்பதே நம் கேள்வி.

அதை ஏதோ பதற்றமான சம்பவம் என்று மட்டுமே சித்தரித்து, ஆழமான மத ஆதிக்கவாத அரசியலை மறைக்க முயன்ற ஏடுகளுக்கும் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் பொறுப்பு இருக்கிறது. அந்தப் பரபரப்பையும் முரண்பாட்டையு செய்திச் சந்தைக்கான மூலச் சரக்குகளாக மட்டுமே பார்த்தார்கள். நாட்டின் மக்கள் நல்லிணக்கத்துக்காகக் குரல் கொடுத்தவர்களோடு இணைந்துகொள்ள விரும்பவில்லை ஊடக உலகப் பயணத்தில் அதுவோர் இருண்ட அத்தியாயம்தான்.

ஒரு தெளிவு பற்றிய உரையாடல்

இந்த இடத்தில், இத்தகைய செய்திகளோடு நேரடித் தொடர்பு இல்லாத, ஆனால் இந்தக் கருத்துகளோடு தொடர்புள்ள ஒரு நிகழ்வைப் பகிர்ந்திட விரும்புகிறேன். அண்மையில் நடைபெற்ற இணையவழி இலக்கியக் கலந்துரையாடல் அது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றவர் சிறுகதை எழுத்தாளர். பல தொகுப்புகளையும், ஒரு நாவலையும் வெளியிட்டிருக்கிறார். அவர், வளரும் படைப்பாளிகளுக்கான நெறிகளாக, தான் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் எனப் பின்வரும் அறிவுரைகளைக் கூறினார்.

“பகுத்தறிவாளராகக் கிடைக்கிற தெளிவு நிலையற்றது, ஆன்மீக நம்பிக்கையாளராக மாறுகிறபோது கிடைக்கிற தெளிவே நிலையானது, படைப்பாற்றலுக்கு அந்தத் தெளிவு முக்கியமானது. பாட்டு ஒலிபரப்பப்படும் பேருந்தில் நான் பயணிப்பதில்லை. இரைச்சலோ சந்தடியோ இல்லாத பயணத்தையே நாடுகிறேன். அதுதான் என் எழுத்து சீராக அமைவதற்குக் காரணம். இறுதியாக, ஒரு படைப்பாள எந்தவொரு சித்தாந்தத்திலும் சிக்கிக்கொள்ளக் கூடாது, எந்தவிதமான அரசியலிலும் தன்னைச் செருகிக்கொள்ளக்கூடாது. பரிபூரண நடுநிலையில் இருப்பதுதான் படைப்புக்கு அழகு, படைப்பாளிக்கு வெற்றி.”

வட்டார வழக்கைக் கையாள்வதன் சுகம், இளையோரிடையே இலக்கிய வாசிப்பு பரவிடச் செய்ய மூத்தோர் மேற்கொள்ள வேண்டிய வழிகள் ஆகியவை பற்றி அவர் கூறிய கருத்துகளுக்கு வரவேற்புத் தெரிவித்துவிட்டு, பின்னர் இந்த மூன்று நெறிகள் பற்றிய விவாதங்கள் எழுந்தன. பகுத்தறிவாளராக இருந்தபோது கிடைக்காத தெளிவு ஆன்மீகராக மாறிய பின் கிடைத்ததென்றால், எந்த அளவுக்குப் பகுத்தறிவாளராக இருந்தீர்கள், பகுத்தறிவு என்றால் என்னவெனக் கருதுகிறீர்கள், தெளிவு என்றால் என்னவென நினைக்கிறீர்கள்,” என்றெல்லாம் கேட்கத் துடித்த நாவை அடக்கிக்கொண்டேன். பின்வரும் கேள்விகளை மட்டும் முன்வைத்தேன்.

“இரைச்சலான இடத்தில் இருப்பது மக்களோடு, அதிலும் எளிய மக்களோடு, உழைப்பாளிகளோடு இருக்கிற உணர்வைத் தருவதாகவே நினைக்கிறேன். என் எழுத்துக்கு அது தடையாக இல்லை, உயிரூட்டமாகவே அமைகிறது. சித்தாந்தத்தில் சிக்காதே என்பதே ஒரு சித்தாந்தம்தான். அரசியலில் அகப்பட்டுக்கொள்ளாதே என்பதே ஓர் அரசியல்தான். எதுவும் மாறாது, எதையும் மாற்ற முயல்வது மனிதர்கள் படைக்கப்பட்டதன் நோக்கத்திற்கு எதிரானது என்கிற சித்தாந்தமாகவும் அரசியலாகவும் அவை போதிக்கப்பட்டு வருகின்றன. மனிதர்கள் அதையெல்லாம் நம்பிக் கடைப்பிடித்திருந்தால் நாம் எழுதிக்கொண்டிருக்கிறோமே அது உள்பட உலகில் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்காதே?”

இந்தக் கேள்விகளுக்கு அவர் ஏதோ விளக்கங்கள் அளித்தார், “இந்த இறுதிக்கட்ட நேரத்தில் சபையை விவாத மேடையாக்க விரும்பவில்லை, உங்கள் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறோம்,” என்று நான் சொல்ல, அந்த ஜூம் சந்திப்பு அத்துடன் நிறைவடைந்தது. இவ்வாறு ஆன்மீகம், தெளிவு என்று பேசுவதிலேயே ஒரு நுட்பமான மதவாதம் கலந்திருப்பது தற்செயலானதுதானா?

நுட்பமான மதவாதம்

அந்த எழுத்தாளர் சமூக மாற்றங்களுக்காக இயங்குவோருடன் தன்னை இணைத்துக்கொள்ளாத நடுநிலைவாதியாக இருப்பது போலவே, பல ஊடகங்களும் பாசாங்கு நடுநிலையோடு, குறிப்பாக மதவாத அரசியல் சார்ந்த செய்திகளிலும் கருத்துகளிலும் செயல்படுகின்றன.

பாபர் மசூதி இடிப்புக் கொடுமை நிகழ்ந்து 33 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. அதற்குப் பிறகும் பல நிகழ்வுகளை நாடு கடந்து வந்திருக்கிறது. 2019ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), 2020இல் தொடங்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அந்தச் செய்தியைப் பல ஊடகங்கள் தீவிரவாத செயல் என்பது போலவே சித்தரித்தன என்று எடுத்துக்காட்டுகிறார் நண்பரான மூத்த பத்திரிகையாளர்.

உங்கள் நினைவு வாகனத்தை முடுக்கிவிட்டீர்களானால், நீங்கள் படித்த, நண்பர்களோடு விவாதித்த இப்படிப்பட்ட பல செய்திகளைப் பார்த்துவிட்டுத் திரும்பலாம்.

– தொடரும்

முதல் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-1/
இரண்டாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-2/
மூன்றாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-3/
நான்காவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-4/
ஐந்தாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-5/
ஆறாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-6/
ஏழாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-7
எட்டாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-8
ஒன்பதாவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-9/
பத்தாவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-10/
பதினொராவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-11/
பன்னிரண்டாவது கட்டுரை: https://maattru.in/2025/09/udaga-ulaga-payanam-12/
பதிமூன்றாவது கட்டுரை: https://maattru.in/2025/09/udaga-ulaga-payanam-13/
பதிநான்காவது கட்டுரை: https://maattru.in/2025/10/udaga-ulaga-payanam-14/