அயோத்தியில் 1992 டிசம்பர் 6 அன்று திட்டமிட்ட ஏற்பாட்டின் கீழ், 464 ஆண்டுப் புகழ் வாய்ந்த பாபர் மசூதி தகர்க்கப்பட்டதை இங்குள்ள ஒரு நடுநிலை நாளேடு அது ஒரு நியாயமான சீற்றத்தின் வெளிப்பாடு என்ற பொருள் தரும் வகையில் என்று தலைப்பிட்டுக் கொண்டாடியது என முந்தைய கட்டுரையில் பதிவாகியிருக்கிறது. அதைப் படித்த ஒரு நண்பர், நெடுங்காலமாக வட மாநிலங்களில் வாழ்ந்து வருகிறவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஒரு தகவலைத் தெரிவித்தார். “அதே நாளில் இங்கே ஒரு முன்னணிப் பத்திரிகை ‘ராம் லாலாவுக்குப் பாதை திறந்தது’ என்று தலைப்புக் கொடுத்திருந்தார்கள். பல இந்திப் பத்திரிகைகள் இதே தொனியில்தான் செய்தியை வெளியிட்டிருந்தன,” என்று அவர் கூறினார்.

சில ஆங்கில ஏடுகளில், “டெம்ப்பிள் ரீகிளைம்டு” என்று கோவில் மீட்கப்பட்டது என்பது போன்ற பொருள்படும் தலைப்புகள் தரப்பட்டிருந்தன என்றும் நண்பர் தெரிவித்தார். இப்படிப்பட்ட தலைப்புகள் மசூதி இடிப்பு ஒரு சட்டவிரோதச் செயல், அது ஒரு குற்றச் செயல் என்ற கருத்து மேலோங்க விடாமல் தடுத்தன.
2002இல் குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்கள் ஈவிரக்கமற்ற தாக்குதல்களுக்கு இலக்காக்கப்பட்ட கொடூரத்தை, அந்த மாநிலத்தின் “நடுநிலை” நாளேடுகள், “கோத்ரா ரயில் எரிப்புக்குப் பதிலடி” என்று சித்தரித்தன. அந்தச் சொல்லாடல், வன்முறையை நியாயப்படுத்தியது. “அவர்களின் தாக்குதலுக்கு இவர்களின் பதிலடி” என்று கூட தலைப்பு தரப்பட்டது. அவர்கள், இவர்கள் என்ற சொற்களின் இடத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட மதங்களின் பெயர்களைக் குறிப்பிட்டுச் செய்தியை வெளியிட்ட நடுநிலையாளர்களும் உண்டு.

சமநிலை மோதலா அது?
2020ஆம் ஆண்டில், ஒன்றிய அரசின் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை (சிஏஏ) எதிர்த்து நாடு முழுவதும் நாடு முழுவதும் இஸ்லாமிய மக்களும், அவர்களுக்கு ஆதரவாக மதச்சார்பற்ற – ஜனநாயக இயங்கங்களும் இடதுசாரிக் கட்சிகளும் போராட்டங்களை நடத்தின. தில்லியில் போராட்டம் நடத்தியவர்களை ஒரு கும்பல் தாக்கியது. பின்னர் அங்கே பல பகுதிகளுக்கும் அந்த வன்முறை பரவியது. அதை சில நாளேடுகள் “சிஏஏ எதிர்ப்பாளர்கள் – ஆதரவாளர்கள் மோதல்” என்று சம நிலையில் நடந்தது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் செய்தியை வெளியிட்டன.
அந்தத் திட்டமிட்ட வன்முறையில் மிகப் பெரும் இழப்புகளுக்கு உள்ளானவர்கள் சிறுபான்மையினரே என்ற உண்மையை நீர்த்துப்போகச் செய்கிற உத்தி அல்லவா இது? “தில்லி தீக்கிரை” என்ற பெரிய தலைப்பின் கீழ், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பற்றிய விவரத்தைப் பெருமளவுக்கு மறைத்து, அது ஏதோ தன்னெழுச்சியாக வெடித்த சமூகடன கலவரம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியும் நடந்தது.

அப்பட்டமாக அந்த வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டவர்களின் தரப்பிற்கு ஆதரவாக நிற்பதன் அடிப்படையிலேயே இத்தகைய சித்தரிப்புகள் செய்யப்பட்டன என்பது வெளிப்படை. மறுபடியும், இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது ஒன்று உண்டு. இவ்வாறு ஒரு பக்கச் சார்பு நிலை எடுத்துச் செய்திகளையோ கருத்துகளையோ வெளியிடும் உரிமை இல்லையா என்றால் நிச்சயமாக இருக்கிறது. ஆனால், நடுநிலை என்ற முத்திரையைக் கழற்றி வைத்துவிட்டு அவ்வாறு செய்யட்டும். மத ஆதிக்க சித்தாந்தத்துக்கென்றே, அந்த அமைப்புகளாலேயே நடத்தப்படும் ஊடகங்களுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
இதே போல, கிறிஸ்துவ சமயத்தினருக்கு எதிரான வன்மங்களையும் ஊடகங்கள் கூச்சமின்றி வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. மாதிரிக்கு ஒன்றை விரிவாகவே பார்க்கலாம்.
கந்தமால் சாட்சியம்
2008ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவ சமூகத்தினர் மீது திட்டமிடப்பட்ட தொடர் தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. அவ்வாண்டு ஆகஸ்ட் 23 அன்று, விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் தலைவர் சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி, அவரது நான்கு சீடர்கள் கொலை செய்யப்பட்டனர். அனைத்துத் தரப்பினரின் கடும் கண்டனத்துக்கு உள்ளான அந்தக் கொலகளில் தீவிரவாத இயக்கத்தின் பங்கு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகக் காவல்துறை அறிவித்தது. ஆனால், இந்துத்துவ அமைப்புகள் உடனடியாக அந்தப் படுகொலைக்கு கிறிஸ்தவர்கள்தான் காரணம் என்று கதை கட்டிவிட்டு, பரவலான தாக்குதல்களைத் தொடங்கின.

இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்த அந்தக் கலவரம், ஒடிசாவின் வரலாற்றிலேயே கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான வன்முறையாகக் கருதப்படுகிறது. அரசாங்க அறிக்கை குறைந்தது 39 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது. பிற அறிக்கைகள் இந்த எண்ணிக்கை 100 வரையில் இருக்கக்கூடும் எனக் கூறின. கிட்டத்தட்ட 75,000 கிறிஸ்துவ மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்நாட்டு அகதிகள் போல் வாழும் நிலை ஏற்பட்டது. சுமார் 4,600 வீடுகளும், 150 தேவாலயங்களும் தீ வைப்புக்கும் அழிப்புக்கும் இலக்காகின. 40க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இந்தக் கலவரம் குறித்து விசாரணை நடத்திய ஆணையம், ஒரு மாவோயிஸ்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் கொலைக்குக் காரணம் என்று அறிவித்தது. அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களும் அதற்குப் பொறுப்பேற்ற செய்தியும் வந்தது. ஆயினும், மதமாற்ற முயற்சி நடந்ததாகக் கூறிக்கொண்டு வன்முறை தொடர்ந்தது.
கொலையில் தொடர்புள்ளவர்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர் 9 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முன்னதாக, ஒடிசா ஊடகங்கள் பலவும், இந்துத்துவ அமைப்புகளின் குரலை “நடுநிலைச் செய்தி” என்பதாக எதிரொலித்தன. மதமாற்ற முயற்சி என்றும் வேறு குற்றச்சாட்டுகளுடனும் விஎச்பி தலைவர்கள் விடுத்த அறிக்கைகளை அப்படியே பிரதிபலித்தன. கொலையைச் செய்தது கிறிஸ்துவர்கள்தான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் தங்கள் சொந்தச் செய்திகளையும் உருவாக்கி வெளியிட்டன. கிறிஸ்துவ மக்கள் தரப்பில் அளிக்கப்ட்ட விளக்கங்களை முக்கியத்துவமற்ற செய்தியாக்கின, அல்லது கண்டுகொள்ளாமலும் இருந்தன. இத்தகைய போக்கு வன்முறை பரவுவதற்கான காரணங்களில் ஒன்றாகவும் இருந்தது என்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற பொறுப்பை ஒடிசா ஊடகங்கள் நிறைவேற்றத் தவறின என்றும் மனித உரிமை அமைப்புகள் விமர்சித்திருக்கின்றன.
இப்போதும் மதமாற்றக் குற்றத்தில் ஈடுபட்டதாகப் பாதிரியார்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்படும்போது பரபரப்பான செய்தியாக்குவதும், குற்றச்சாட்டு நிறுவப்படாத நிலையில் அவர்கள் நீதிமன்றங்களால் விடுவிக்கப்படுவதைச் சிறிதாக வெளியிடுவது அல்லது மறைத்துவிடுவதும் தொடரத்தான் செய்கிறது. இவற்றிலிருந்து விலகி நெறியோடு செயல்படும் ஊடகவியலாளர்கள் நம்பிக்கை அளித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்படி நிறைய இருக்கிறது. இப்போதும் தொடர்கிறது. ஆகவே, நாம் அடுத்த உரைகல்லை எடுத்துக்கொள்வோம்.
தனித்துவ இழுக்கு
ஊடக நிறுவனங்கள் கூறிக்கொள்ளும் நடுநிலைத் தகுதியை உரசிப் பார்ப்பதற்கு வர்க்கம், பாலினம், மதம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் சார்பு நிலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பார்த்தோம். இது பொதுவாக உலக அளவிலேயே பொருத்திக் பார்க்கக்கூடியதுதான். இந்தியச் சூழலில் சாதியத்தையும் முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்தியச் சமுதாயக் கட்டமைப்பு ஒரு ரயில் என்றால், அது ஓடுவதற்கான பாதை உலகின் எந்தவொரு நாட்டையும் போலவே, வர்க்க வேறுபாடு என்ற தரை மேடையின் மீதுதான் அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த மேடையில் போடப்பட்டிருக்கும் நீண்ட இரட்டைத் தண்டவாளங்களில் ஒன்று, மாதர்தமை இழிவு செய்யும் மண்டைக் கொழுப்பு ஆணாதிக்கம். அதை ஏற்கெனவே பார்த்தோம். பார்க்க வேண்டிய மற்றொரு தண்டவாளம், இந்நாட்டின் தனித்துவமான இழிவாகிய சாதியம்.
“செய்திகளை எவ்வித உள்நோக்கமும் இல்லாமல், நிறம் பூசாமல் வழங்குவது; குறிப்பிட்ட பொதுக் கொள்கை தொடர்பாக, சமூகத்திற்கு நன்மை பயக்கும் என்று தான் நம்பிடும் கருத்தை முன்வைப்பது; அநியாயமான அல்லது பயனற்ற வழியைத் தேர்ந்தெடுக்கிறவர்களை, அவர்கள் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருப்பவர்களானாலும், அச்சமின்றி சரிப்படுத்துவது, கண்டிப்பது – இவை இந்திய இதழியல் துறையால் தனது கடமையாகக் கருதப்படவில்லை.”

–இதைக் கூறியவர் டாக்டர் அம்பேத்கர். ‘மூக் நாயக்’ (குரலற்றோர் நாயகம்), ‘பஹிஷ்க்ரூத் பாரத்’ (புறக்கணிக்கப்பட்ட பாரதம்), ‘ஜனதா’ (வெகுமக்கள்) என்ற மராத்திப் பத்திரிகைகளை நடத்தி ஓர் இதழியலாளராகவும் பங்களித்தவரான அவர், “இந்தியாவில் இதழியல் –முன்பு ஒரு செய்நெறி, இப்போது ஒரு வணிகம்” என்ற கட்டுரையில் இவ்வாறு எழுதியிருக்கிறார். பத்திரிகை நிறுவனங்களின் சாதிச் சார்பும் தனி மனித வழிபாடும் கலந்த செயல்பாடுகள் மீதான தன் கோபத்தையே அவர் இவ்வாறு விமர்சனமாக வெளிப்படுத்தினார்.
அம்பேத்கர் காலத்தில் இவ்வாறு விசாரணைக் கூண்டில் நிறுத்தப்படும் நிலையில் இருந்த இந்திய ஊடக நிறுவனங்கள் இப்போது எந்த அளவுக்குத் திருந்தியிருக்கின்றன? சாதியப் பிரச்சினைகளை எவ்வாறு கையாளுகின்றன?
தொடரும்
முதல் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-1/
இரண்டாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-2/
மூன்றாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-3/
நான்காவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-4/
ஐந்தாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-5/
ஆறாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-6/
ஏழாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-7
எட்டாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-8
ஒன்பதாவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-9/
பத்தாவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-10/
பதினொராவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-11/
பன்னிரண்டாவது கட்டுரை: https://maattru.in/2025/09/udaga-ulaga-payanam-12/
பதிமூன்றாவது கட்டுரை: https://maattru.in/2025/09/udaga-ulaga-payanam-13/
பதிநான்காவது கட்டுரை: https://maattru.in/2025/10/udaga-ulaga-payanam-14/
பதினைந்தாவது கட்டுரை: https://maattru.in/2025/11/udaga-ulaga-payanam-15/







