சமநிலைப் பாசாங்குகளில் சிக்காமல் உண்மைகளை வெளிப்படுத்திய உலக அளவிலான ஊடகங்கள் பற்றிப் பார்த்தோம். இந்தியாவிலும் அவ்வாறு முத்திரை பதிக்கப்பட்ட வரலாறுகள் உண்டு. முக்கியமான செய்திகள் வருவதைத் தடுக்க அரசியல் மேலிட அழுத்தம் கொடுப்பது, நிறுவனம் என்ற முறையில் இருக்கக்கூடிய வணிகச் சட்டங்கள் சார்ந்த பிரச்சினைகளைக் காட்டி அச்சுறுத்துவது, உரிமம் முடக்கப்படுவது, வழக்குகள் போடப்படுவது, கைது நடவடிக்கைகள் போன்ற மோசமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன, தொடுக்கப்படுகின்றன
இந்த நிலைமையிலும், அவற்றை எதிர்கொண்டு பல முக்கியமான உண்மைகளைப் பல முன்னணி ஏடுகள் மக்கள் மன்றத்திற்குக் கொண்டுவந்திருக்கின்றன.
போஃபோர்ஸ்
மாதிரிக்காகச் சிலவற்றை எடுக்கிறபோது முதலில் வந்து நிற்பவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று – போஃபோர்ஸ் பீரங்கி விவகாரம். சுவீடன் நாட்டின் போஃபோர்ஸ் நிறுவனத்திடமிருந்து 1986ஆம் ஆண்டில் இந்திய அரசு 400 பீரங்கிகளை வாங்கியது. அதற்கான 140 கோடி டாலர் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் இடைத்தரகர்கள் மூலம் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் 4 கோடி டாலர் லஞ்சம் கொடுத்தது.. இதை முதலில் 1987இல் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ‘ஸ்வெரிஜெஸ் ரேடியோ’ என்ற வானொலிதான் வெளிப்படுத்தியது. அதைத் தொடர்ந்து இங்கிருந்து பத்திரிகையாளர்கள் குழு ஒன்று சுவீடன் சென்றது. ‘தி ஹிண்டு’ பத்திரிகையின் ஜெனீவா செய்தியாளர் சித்ரா சுப்பிரமணியன், சுவீடன் காவல்துறை அதிகாரியிடமிருந்து ரகசிய ஆவணங்களைப் பெற்றார். அவற்றை அடிப்படையாக வைத்து, அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருந்த என். ராம் போஃபோர்ஸ் ஊழல் செய்திகளை எழுதத் தொடங்கினார்.

வெளிநாட்டு வணிக ஒப்பந்தங்களில் இடைத்தரகர்களே கிடையாது என்று அரசு கூறிவந்த நிலையில், ‘தி ஹிண்டு’ செய்திகள் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. விசாரணைகள் என்று தொடங்கப்பட்டாலும் இது வரையிலும் யார் மீதும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, 1989இல் நடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
முன்னதாக ஊடக நெறியும், அதிகாரக் கெடுபிடியும் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வும் நடந்தது. ‘தி ஹிண்டு’ நிர்வாகத்திற்கு மேலேயிருந்து அழுத்தங்கள் தரப்பட்டன. அதைத் தொடர்ந்து அந்த அம்பலச் செய்தித் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. என். ராம் தனது பொறுப்பில் நடத்தி வந்த ‘ஃபிரண்ட்லைன்’ ஏட்டில் தொடர்ந்து எழுதினார். அதுவும் ’தி ஹிண்டு’ குழுமத்தைச் சேர்ந்த மாதமிருமுறை ஏடுதான். அரசியல், சமூக முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளையும் கருத்துகளையும் வெளியிடுவதில் இந்தக் குழுமத்தின் ஏடுகள் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
சுவீடன் நாட்டு வானொலி முதன் முதலில் போஃபோர்ஸ் செய்தி வந்தது என்று பார்த்தோம் அல்லவா? அது தொடர்பாக இன்னொரு தகவல் – இந்தியாவில் இன்று வரையில் வானொலி நிறுவனங்கள் முழுநேர செய்தி ஒலிபரப்பைத் தொடங்க அனுமதிக்கப்படுவதில்லை. அரசு நிறுவனமாக உள்ள வானொலிகளில் மட்டுமே குறிப்பிட்ட நேரங்களில் செய்தித் தொகுப்பு இடம் பெறும். தனியார் பண்பலை வானொலிகள் உள்ளூர் நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்களைச் சொல்லலாம், பாடல்களுக்கு இடையே கிரிக்கெட் ஸ்கோர் சொல்லலாம், வானிலை அறிவிப்புகளைத் தெரிவிக்கலாம் –அவ்வளவுதான். வானொலிகளுக்கு முழு நேர செய்தி ஒலிபரப்பு உரிமம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏனோ ஒன்றிய ஆட்சியாளர்கள் இன்று வரையில் ஏற்கவில்லை.
சுவிஸ் ஆவணங்கள்
உலகின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்று ஹெச்எஸ்பிசி வங்கி. அதன் சுவிஸ் கிளையின் முன்னாள் ஊழியர் ஹெர்வ் ஃபால்சியானி என்பவர் 2008ஆம் ஆண்டில் பல வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்களைத் தெரியப்படுத்தினார். அந்தத் தகவல்களில், அரசியல் தலைவர்கள், வணிகத் துறையினர், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் உட்படப் பலரது கணக்கு விவரங்கள் இருந்தன. அந்தத் தரவுகளைப் பெற்ற பிரெஞ்சு நாட்டு அரசாங்கம், அவற்றை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் அளித்தது.

அந்தத் தரவுகளை முதலில் பன்னாட்டு புலனாய்வு இதழியலாளர் கூட்டமைப்பு (ஐசிஐஜே)உலகெங்கிலும் உள்ள 140க்கும் மேற்பட்ட பத்திரிகை நிறுவனங்களுடன் இணைந்து ஆய்வு செய்தது. ‘சுவிஸ் ஆவணங்கள்’ எனப்பட்ட அந்தத் தகவல்களை இந்தியாவில் இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்டது. சுவிஸ் வங்கிகளில் ரகசியக் கணக்கு வைத்திருந்த பல இந்தியர்களின் பெயர்களும் அவர்களின் கணக்கு விவரங்களும் வெளிவந்தன.
பின்னர், பனாமா ஆவணங்கள், பாரடைஸ் ஆவணங்கள் ஆகிய பன்னாட்டுப் புலனாய்வு அறிக்கைகளும், வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணம் பற்றிய தகவல்களைக் கொண்டிருந்தன. அந்தச் செய்திகளை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடும் பிற இந்திய ஊடகங்களும் விரிவாக வெளியிட்டன.
கேள்விக்குக் காசு
நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு சில உறுப்பினர்களுக்குப் பணம் தரப்பட்டது என்ற பிரச்சினை வெடித்தது. 2005இல் அந்த ஊழலை ‘தெஹல்கா.காம்’ என்ற புலனாய்வு இணையதளம், தனது ‘ஆபரேஷன் துர்யோதன்’ என்ற ரகசியத் நடவடிக்கை மூலம் அம்பலப்படுத்தியது. அதன் செய்தியாளர்கள் தங்களை வேறு விதமாக அறிமுகப்படுத்திக்கொண்டு, சிலரை அணுகி, குறிப்பிட்ட பிரச்சினை பற்றி கேள்வி எழுப்பினால் லட்சக்கணக்கில் பணம் தருவதாகப் பேசினர். ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட காட்சிகளுடன் அந்தச் செய்திகள் வெளியிடப்பட்டன.

பாஜக உறுப்பினர்கள் 6 பேர், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 3 பேர், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளிலிருந்து ஒவ்வொருவர் என 11 எம்.பி.க்கள் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு அந்தச் செய்தி இட்டுச் சென்றது. இது இந்தியப் புலனாய்வுப் பத்திரிகைக் களத்தில் மற்றுமொரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. செய்தியாளர்களை மாறுவேடத்தில் அனுப்பி அந்தச் செய்தியைத் திரட்டியது தண்டனைக்குரியது என்று ஒருவர் புகார் செய்ய, தில்லி காவல்துறை டெஹல்கா குழுவின் இரண்டு செய்தியாளர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தில்லி உயர்நீதிமன்றம் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.
தமிழக அளவில் முக்கியத்துவம் பெற்ற துணிச்சலான புலனாய்வுச் செய்திகள் பல உண்டு. சிலவற்றை மட்டும் இப்போது பார்த்துவிட்டு வருவோம்.
லட்சுமிகாந்தன் கொலை
தமிழில் வந்துகொண்டிருந்த பல ஏடுகளில் புலனாய்வு சார்ந்த செய்திக் கட்டுரைகள் அவ்வப்போது வெளியானதுண்டு. ‘இந்து நேசன்’ என்ற பத்திரிகை, சிலரது பாலியல் விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. கடைசியில் அது, 1944இல் அதன் ஆசிரியர் சி.என். லட்சுமிகாந்தன் கொலை செய்யப்படுகிற அளவுக்குப் போனது.
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு என்று இப்போதும் குறிப்பிடப்படும அந்த வழக்கில், அந்நாளைய முன்னணித் திரை நட்சத்திரங்கள் எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் இருவரும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களின் திரை வாழ்க்கையில் அதனால் இருள் சூழ்ந்தது. 1947 ஏப்ரலில் இருவருமே விடுதலை செய்யப்பட்டார்கள். கலைவாணர் மறுபடி திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்தார்.
புலனாய்வு இதழியல்
தமிழுக்கு ஒரு புதிய அனுபவமாக, முழுக்க முழுக்கப் புலனாய்வு சார்ந்த ஏடாக 1982இல் ‘ஜூனியர் விகடன்’ வந்தது. ‘ஆனந்த விகடன்’ குழுமத்தைச் சேர்ந்த அந்த ஏடு தமிழகத்தில் புலனாய்வுப் பத்திரிகைக் களத்தில் ஒரு முன்னணி இடத்தைப் பிடித்திருக்கிறது. அரசியல் உலக ரகசியங்கள், அரசுத் திட்ட முறைகேடுகள், ஊழல்கள், சாதியப் படுகொலை உள்ளிட்ட சமூக நிலவரங்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியதில் முக்கிய அடையாளத்தைப் பெற்றது. கிரானைட் ஊழல், மணல் கொள்ளை, சொத்துக் குவிப்பு, அதிகாரிகளின் அத்துமீறல்கள் பற்றிய செய்திகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

பரபரப்பான, வட்டார அளவிலான பிரச்சினைகளையும் முன்னுக்குக் கொண்டுவரும் ஏடு ‘நக்கீரன்’. 1988 முதல், பல பரபரப்பான புலனாய்வுச் செய்திகளை வெளியிட்டது. சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் நேரடிப் பேட்டி கண்டு பல உண்மைகளை மக்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தது இந்த ஏட்டின் மகுடச் செயல்களில் ஒன்று. கைது, வழக்குகள், வளாகத்திற்குள் சோதனை, தனிப்பட்ட அவதூறுகள் ஆகியவற்றை எதிர்கொண்டாலும் தமிழகத்தின் மற்றொரு முக்கியமான புலனாய்வு ஏடாகத் திகழ்கிறது.
வேறு சில புலனாய்வு ஏடுகளும் தொடங்கப்பட்டன. இவை அனைத்திற்குமே சவாலாக இருப்பது இன்றைய நவீன தொழில்நுட்ப வருகைதான். அதையும் வசப்படுத்தி இணையத்தளத்திலும் முனைப்போடு இயங்கி வருகின்றன. ‘இந்தியா டுடே’ குழுமம் இந்திய மொழிகளில் பதிப்புகளைக் கொண்டுவந்தது. அரசியல், பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள் குறித்த புலனாய்வுக் கட்டுரைகள் வெளியாகின. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பதிப்புகள் சந்தை நிலவரம் காரணமாக 2015இல் நிறுத்தப்பட்டுவிட்டன.
அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்துத் தீர்வு காண வேண்டிய நிலவரங்களை, தமிழ்த் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பி வருகின்றன. திமுக ஆட்சி மீதான வீராணம் குழாய்கள் குற்றச்சாட்டு, கிரானைட் மோசடி, அதிமுக ஆட்சி மீதான பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமன முறைகேடு புகார், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு, தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணைய முறைகேடு உள்ளிட்ட பல விவகாரங்களைப் புலனாய்வு ஊடகங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கின்றன.
இந்தியாவின் பிற மொழிகளிலும் குறிப்பிடத்தக்க புலனாய்வு இதழ்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் உள்ளன. அவை அந்தந்தப் பகுதி அரசியல், சமூகப் பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன.
வர்க்க நிலை
இவையெல்லாமே ஊடகத் துறையினருக்குப் பெருமிதம் சேர்ப்பவையே. ஆயினும், ஏற்கெனவே கூறியது போல, “நடுநிலை” என்பதன் மெய்நிலை என்ன என்பதை, வர்க்கம், சமூகம், மதம், பாலினம் ஆகியவை தொடர்பான வெளிப்பாடுகளை வைத்தே மதிப்பிட இயலும். வர்க்க நிலைபாட்டைப் பொறுத்தவரையில், நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் குறித்த செய்திகள் வெளியிடப்பட்ட விதத்தில் பார்த்தோம்.
பல ஆண்டுகளுக்கு முன் வாரப் பத்திரிகை ஒன்றில் படித்த ஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது.

ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் மேற்கொள்கிறார்கள். பேச்சுவார்த்தைகளில் நிர்வாகம் குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் உயர்த்துவதற்கு மறுக்கிறது. போராட்டம் தொடர்கிறது. பல நாட்களாக நீடிக்கும் போராட்டத்தால் தொழிலாளர்களின் வீடுகளில் உணவு, படிப்பு போன்ற தேவைகளுக்கும் பணம் இல்லாத சூழல்.
அன்று, புதிய பேச்சுவார்த்தை நடக்கிறது. தொழிற்சங்கத் தலைவர் வந்து சேர்கிறார். சிறிது நேரத்தில் நிறுவன உரிமையாளர் ஒரு குட்டிப்பையனுடன் வருகிறார். அவன் அவருடைய மகன்தான். அவரும் தலைவரும் உள்ளே செல்கிறார்கள்.
நேரடியாகப் பேசும் உரிமையாளர், “உங்கள் குடும்ப நிலவரம் எல்லாம் அறிவேன். உங்களுக்கும் கெட்ட பெயர் வராமல், எனக்கும் இழப்பு வராமல் ஒரு யோசனை சொல்கிறேன். நீங்கள் 20 பெர்சன்ட் கேட்கிறீர்கள். நான் 10 பெர்சன்ட் சொல்கிறேன். இப்போது, 12 பெர்சன்ட்டுக்கு வருவோம். நீங்கள் ஒர்க்கர்ஸை கன்வின்ஸ் பண்ணுங்க. உங்க அக்கவுன்ட்டில் ஐம்பது லட்சம் கிரெடிட் ஆகிவிடும்,” என்கிறார்.
இருவருமாக வெளியே வருகிறார்கள். குட்டிப் பையன் அங்கும் இங்கும் ஓடுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடிக்க முயல்கிறான். தொழிலாளர்களைப் பார்த்து சங்கத் தலைவர், “தோழர்களே, நம் உறுதியான போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது. 10 சதவீதத்திற்கு மேல் தர முடியாது என்று பிடிவாதமாகச் சொல்லிவந்த நிர்வாகம் இப்போது 12 சதவீதத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டது,” என்று அறிவிக்கிறார். வயிறு காய்ந்திருக்கும் தொழிலாளர்கள் கை தட்டுகிறார்கள். ஆட்டுக்குட்டி தலைவர் காலருகில் நிற்கிறது. பின்னாலேயே ஓடிவந்த பையனும் நிற்கிறான். கீழே குனிந்து அதைப் பிடிக்கிற தலைவர், அவனிடம் நீட்டுகிறார், அவன் முகம் மலர்ந்து வாங்கிக்கொள்கிறான்.
இந்தக் கதை எத்தனை அழகியலோடு, ஒரு தொழிற்சங்கத் தலைவர் தொழிலாளர்களை முதலாளியின் பிடியில் ஒப்படைக்கிறார் என்று காட்டுகிறது பாருங்கள். அப்போது பல பத்திரிகைகளிலும் இது போலத தொழிலாளர் இயக்கங்களைக் கொச்சைப்படுத்துகிற சித்தரிப்புகள் ஏதோ சுழற்சிமுறை வைத்துக்கொண்டது போல வந்துகொண்டிருந்தன. இன்று அதே அளவுக்கு இல்லை என்றாலும், அந்தக் கண்ணோட்டம் பெருமளவுக்கு மாறிவிட்டதாகச் சொல்ல இயலவில்லை. தொழிலாளர் சங்கத் தலைவர்களை ஏமாற்றுக்காரர்களாக அல்லது தோல்வியடைந்தவர்களாகக் காட்டுகிற திருவிளையாட்டு அது. அவ்வப்போது தொழிலாளர் நியாயங்களைப் பேசுகிற கதைகளும் வரும், ஆனால் அதில் சமநிலை இருக்காது. இயக்கங்கள் நடத்தும் இதழ்களிலும், ஆழ்ந்த இலக்கிய வாசிப்பு ஏடுகளிலும், சிற்றிதழ்களிலும் தொழிலாளர் இயக்கத்தை உயர்த்திப் பிடிக்கும் படைப்புகள் வருகின்றன – அவற்றின் வாசகப் பரப்போ குறைவு.
நடுநிலையை மதிப்பிடுவதற்கான மற்ற அளவீடுகளை அடுத்தடுத்துப் பார்ப்போம்.
தொடரும்
முதல் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-1/
இரண்டாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-2/
மூன்றாம் கட்டுரை: https://maattru.in/2025/06/udaga-ulaga-payanam-3/
நான்காவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-4/
ஐந்தாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-5/
ஆறாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-6/
ஏழாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-7
எட்டாவது கட்டுரை: https://maattru.in/2025/07/udaga-ulaga-payanam-8
ஒன்பதாவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-9/
பத்தாவது கட்டுரை: https://maattru.in/2025/08/udaga-ulaga-payanam-10/





மிகவும் முக்கியமான பதிவு தோழர்.
பேரன்பு வாழ்த்துக்கள் தோழர் ❤️⭐