அரசியல்

மதச்சார்பின்மை, சோசலிசம் எனும் விலைமதிப்பில்லா கற்கள்

Soc sec prea

– களப்பிரன்

இந்தியா விடுதலை பெற்று தனது 78 ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. நம்முடைய அரசியலமைப்பை நாம் ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளோம். உலகின் தலைசிறந்த அரசியல் சட்டங்களுள் ஒன்று இந்திய அரசியலைப்புச் சட்டம். அதன் முகப்புரையின் ஒவ்வொரு சொற்களும் உலகின் பல நாடுகளுக்கு வழிகாட்டும் வண்ணத்தில் எழுதப்பட்டவை. நம் முகப்புரை இந்தியாவை ”இறையாண்மை கொண்ட சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு” என்று விவரிக்கிறது. இதில் உள்ள சோசலிச மற்றும் மதச்சார்பற்ற என்ற இரு சொற்கள் 1949 நவம்பர் 26ல் இறுதி செய்யப்பட்ட முகப்புரையில் இல்லை. இந்த இரண்டு சொற்களும் 1976-ல் இந்திய நாட்டில் நெருக்கடி நிலை அமலில் இருந்த காலத்தில் அரசியலமைப்பின் 42ஆவது திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டவை ஆகும். ஆகவே இந்த இரண்டு சொற்களையும் நீக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் 1976 முதலே தொடந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் இந்தியாவின் பெரும்பான்மையான தலைவர்கள் ”நெருக்கடி நிலை காலத்தில் நடைபெற்ற ஒரே நல்ல செயல் இந்தத் திருத்தம் தான்” என்று வெளிப்படையாக பேசினார்கள். அதோடு இந்திரா காந்தியின் அரசை எதிர்த்து உருவான ஜனதா அரசு (1977-1980) தான் பொறுப்பேற்றவுடன் மேற்கண்ட 42-ஆவது திருத்தத்தில் சில பகுதிகளை மாற்றியது. ஆனால் புதிதாக இணைக்கப்பட்ட “சோசலிச மதச்சார்பற்ற” ஆகிய சொற்களை நீக்கும் முன்மொழிவை கூட நாடாளுமன்றத்தில் வைக்கவில்லை. அதை அப்படியே ஏற்றுக் கொண்டு செயல்பட்டது. ஆனாலும் நீதிமன்றக் கதவுகளை ஆர்.எஸ்.எஸ். கார்ர்கள் தட்டுவதும். அதை உச்சநீதிமன்றம் 2024ல் கூட நிராகரிப்பதும் என்று இந்த இரண்டு சொற்களுக்கு எதிராக நடத்தப் படும் போராட்டக் கதைகள் இன்று வரை தொடரவே செய்கிறது.

இதற்கு இடையில் 1998 முதல் 2004 வரை பிஜேபி அரசாங்கம் ஆட்சியில் இருந்த போதும் இது குறித்து எந்த சலசலப்பும் இல்லை. 2014-ல் மோடி அரசு தனிப் பெரும்பாண்மையுடன் பதவிக்கு வந்தவுடன் 2015-ல் வெளியிட்ட அரசு விளம்பரத்தில் சோசலிச மதச்சார்பற்ற ஆகிய இந்த இரண்டு சொற்களை நீக்கியே ஊடகங்களின் விளம்பரங்களை கொடுத்தது. அப்போது எழுந்த கடும் விமர்சனங்களுக்குப் பிறகு அப்படியான அரசின் விளம்பரங்கள் வரவில்லையே ஒழிய, அவர்களின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை. தங்களின் இந்தக் கருத்தை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தொடந்து பொது வெளியில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாகவே இந்திய வரலாற்றீல் முதல் முறையாக எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் இதே கருத்தை வெளிப்படுத்தினார். கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற ‘Ambedkar’s Messages’ நூல் வெளியீட்டு விழாவில் பேசும் போது, 1976-ல் இணைக்கப்பட்ட ”சோசலிச மதச்சார்பற்ற” ஆகிய இரண்டு சொற்களும் 1949 முகப்புரையில் இல்லை. ஆகவே அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார். அரசியல் சட்டத்தில் திருத்தம் கோர எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்றாலும், குடியரசு துணைத் தலைவர் போன்ற பொறுப்பில் இருக்கும் ஒருவர் இவ்வாறு பேசுவது இந்தியாவின் மாண்பிற்கு அழகல்லவே. நாடாளுமன்றம் இறுதி செய்தவற்றை அவர் பேசலாமே தவிர, அதில் இல்லாதவற்றை பேசக்கூடாது. இதை பொருட்படுத்தாமல் யாரை குளிர்விக்க நம் நாட்டின் அரசியலமைப்பிற்கு நேர்மாறாக அவர் பேசினாரோ, அவர்களே குடியரசுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து அவரை பதவி விலக வைத்தார்கள் என்பது வரலாறு அவருக்கு கொடுத்த பரிசாகும். இரண்டு சொற்களை நீக்க வேண்டும் என்றவர் இறுதியில் தனது பதவிலியிருந்து நீங்கினார்.

இந்த இரண்டு சொற்களும் அவ்வளவு வலிமை வாய்ந்த்தாக இருந்தால் அதை ஏன் அம்பேத்கரும், நேருவும் 1949ல் இறுதிசெய்யப்பட்ட முகப்புரையில் இணைக்காமல் விட்டனர் என்ற கேள்வி இயல்பில் வரும். இந்திய அரசியல் நிர்ணய சபையில் இருந்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் கே.டி.ஷா இந்த சொற்களை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தக்கருத்தை அவையில் இருந்த ஹஸ்ரத் மோஹானி, எச்.வி. காமத் உள்ளிட்ட பல தலைவர்களும் ஆதரித்தனர். இவ்வளவு விரிவாக விவாதங்கள் நடந்து கொண்டிருந்த போது, இந்தியாவில் அனைவருக்கும் வாக்குரிமை உள்ளிட்ட அடிப்படை ஜனநாயக உரிமைகள் கூட இல்லை. அப்போது நம்மை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் பேரரசு கூட ஒரு முடியாட்சியுடன் கூடிய நாடாளுமன்ற ஆட்சி முறையாக மட்டுமே இருந்தது. இந்தச்சூழலில் ஜனநாயகம் மற்றும் குடியரசு ஆகிய சொற்களே பல நாடுகளில் கனவாக இருந்த காலம். அதன் வளர்ந்த அடுத்தக் கட்டங்களான மதச்சார்பின்மை, சோசலிசம் போன்றவைகளை புரிந்துகொள்வது கூட பெரும்பாலான உறுப்பினர்களுக்கே கடினமாக இருந்தது. ஆகவே முதலில் ஜனநாயகம் குடியரசின் விழுமியங்கள் முழுவதும் உள்வாங்கப்பட்ட நாட்டில் தான் அதன் அடுத்தக் கட்டமான சோசலிச, மதச்சார்பற்ற ஆகிய நிலைகளை உணர முடியும். இது குறித்து கே.சி.ஷாவிற்கு பதிலளித்த அண்ணல் அம்பேத்கர், ”மதச்சார்பின்மை குறித்து நமது அரசியலைப்பு ஏற்கனவே அடிப்படை உரிமைகள் மூலம் உறுதி செய்துள்ளது” அதே போல் ”சோசலிசம் நமது அரசியலைப்பில் ஏற்கனவே பொதிந்துள்ளது. ஆகவே தற்போதைய சூழலில் இந்தத் திருத்தங்கள் தேவையற்றது” என்று மட்டுமே பதிலளித்தார். மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகியவை நமது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று எங்குமே அவர் குறிப்பிடவில்லை. மதச்சார்பின்மை, சோசலிசம் குறித்து ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட நேருவின் கருத்து குறித்து தனித்து விலக்கத்தேவையில்லை.

இந்தப் புரிதலோடே 1949-ல் முகப்புரை இறுதி செய்யப்பட்டது. 1976ல் ஜனநாயக குடியரசு இந்தியா 25 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தது. அப்போதைய வளர்ந்த உலகச் சூழலில் ஜனநாயகம், மற்றும் குடியரசின் அடுத்தக் கட்டங்களான மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் சொற்களாக முகப்புரையில் இணைக்கப்பட்டன. அதற்கு முன்னதாக 1973-ல் கேசவானந்த பாரதி மற்றும் கேரள அரசிற்கு இடையிலான வழக்கில் உச்சநீதிமன்றம், “அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு மீறப்படாமல், பிரிவு 368-ன் கீழ் அதன் முகப்புரை திருத்தப்படலாம்” என்று தீர்ப்பளித்துள்ளது. இதன் வழிகாட்டுதலோடே அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புகளில் உள்ள மதச்சார்பற்ற சோசலிச போன்ற சொற்கள் சேர்க்கப்பட்டன. 2024-ல் பல்ராம் சிங் மற்றும் இந்திய அரசிற்கு இடையிலான இது குறிந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சஞ்சய் குமார், “இந்திய மதச்சார்பின்மைக்கு காலம் அதன் சொந்த விளக்கத்தை உருவாக்கியுள்ளது. அதில் அரசு எந்த மத்த்தையும் ஆதரிக்கவோ அல்லது எந்த ஒரு நம்பிக்கையை தண்டிக்கவோ இல்லை. அரசியலைப்பின் பிரிவு 14, 15, 16-ல் இவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது மத அடிப்படையில் குடிமக்களுக்கு இடையிலான பாகுபாட்டை தடை செய்கிறது. அதே போல் நமது சட்டங்கள் சமமான பாதுகாப்பையும் சமத்தும், சகோதரத்துவம் அடிப்படையில் வழங்குகிறது” என்று கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். பாஜகவினரின் நோக்கம் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பின் அதே முகப்புரையை பாதுகாப்பதல்ல. இன்னும் சொல்லப்போனால் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பையே பாதுகாப்பதும் அவர்கள் நோக்கமல்ல. அதற்கு மிகச்சிறந்த சான்று அப்போது அவர்கள் எழுதியவைகளே சாட்சியாக உள்ளது. 1949 நவம்பர் 26-ல் இந்திய அரசியல் சட்டம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐந்தாவது நாள் 1949 நவம்பர் 30-ல் வெளிவந்த ஆர்.எஸ்.எஸ்.சின் ஆர்கனைசர் பத்திரிகை, “பாரதத்தின் புதிய அரசியல் சட்டத்தின் அவலம் என்னவென்றால், அதில் எதுவுமே பாரதத் தன்மையுடன் இல்லை என்பது தான்” என்று கடுமையாக எழுதியது. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த தலைவர் என்று அறியப்பட்ட மாதவ சதாசிவ கோல்வால்கர் தனது சிந்தனை கொத்து நூலில் இன்னும் கோபாத்தோடு, “நம்முடைய அரசியல் சட்டத்தில் நமக்குச் சொந்தமானது என்று சொல்லிக் கொள்ள அதில் எதுவுமே இல்லை. ஐநா சபையின் சாரமற்ற சில கொள்கைகள், அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் அரசியல் சட்டங்களிலிருந்து சிலவற்றை சேர்த்து அவசர அவசரமாக செய்த ஒட்டு வேலை தான் நம்முடைய அரசியல் சட்டம்” என்று சாடினார். அன்றைக்கு இருந்த எல்லா வலதுசாரிகளுக்கு இருந்த இரண்டு எதிரிகள் ஒருவர் நேரு, இன்னொருவர் அம்பேத்கர். காரணம் தங்களின் அடிப்படை சித்தாந்தங்களு சமாதி கட்டும் வகையில் அவர்கள் தயாரித்திருந்த இந்திய அரசியலமைப்புச் சட்டம். தனது ஆர்கனைசர் பத்திரிகையில் தாங்கள் விரும்பும் பாரதத் தன்மை கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்று ஆர்.எஸ்.எஸ். அப்போது கூறிய நூல் ”மனு ஸ்மிருதி”.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எனும் பெரும் கட்டுமானம் இறையாண்மை, ஜனநாயகம், குடியரசு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், என்று பல செங்கற்கல்லைக் கொண்டு கட்டப்பட்டது. அந்தக் கட்டுமானத்தின் உறுதியைப் பாதுகாக்க காலம் சோசலிசம், மதச்சார்பின்மை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விலைமதிப்பில்லா கற்களை சேர்த்துள்ளது. இந்த இரண்டு சொற்களும் இந்திய அரசியலைப்பை மேலும் அழகு படுத்தும், மேலும் வலிமை பெறச் செய்யும். ஆனால் இன்றைய ஆட்சியாளர்களின் நோக்கம் இந்த இரண்டு கற்களையும் நீக்குவது மட்டுமல்ல, இவைகளை நம் அனுமதித்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் எனும் பெரும் கட்டுமானத்தின் எல்லா செங்கற்கல்லையும் உருவி இதை தரைமட்டமாக்குவது தான். ஆகவே இந்தியாவின் 78-ஆவது விடுதலை திருநாளில் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட வலிமை வாய்ந்த, அழகிய கட்டுமானமான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு கல்லைக்கூட உருவ அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி ஏற்போம்.

2 Comments

  • ஆழ்ந்த செறிவுடைய கட்டுரை தோழர். சிறப்பு.

  • அருமையான கட்டுரை.

    வாழ்த்துக்கள் தோழர் களப்பிரன்

Comments are closed.